Aug 31, 2005

தமிழ்நாட்டின் மக்கள்தொகை 25 கோடி

யாழிசையில் விவேக் சொல்லியதாக சொன்னதைப் பார்த்தவுடன் சில விதயங்கள் தோன்றியது.
"தமிழ்நாட்டில் மொத்த ஜனத்தொகை ஆறரை கோடி. அதில் மூன்றரை கோடி நமது தேவர்
இனம்தான்."
என்று விவேக் சொன்னதாக சொல்லியிருக்கிறார். பா.ம.க தலைவர் எப்போதோ தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் நாங்கள் பெரும்பான்மையினர் (சரி ஒரு ஒன்றரை கோடி என்று வைத்துக் கொள்ளலாம்) என்று கேட்டதாக நினைவு. நாடார் பேரவையும் தமிழ்நாட்டில் 50 இலட்சம் பேர்களுக்கு மேற்பட்டு இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். ஆதாரங்கள் இப்போது கைவசமில்லை. திருமாவளவன் + கிருஷ்ணசாமி + தமிழகமெங்குமிருக்கும் தலித் பேரவைகளைச் சேர்த்துப் பார்த்தால் அது ஒரு 25 இலட்சம் இருப்பதாக சொல்லலாம். [அரசு 12.35 இலட்சம் என்று கணக்கு சொல்கிறது]. நாயக்கர்கள், வேளாளர்கள், செட்டியார்கள், யாதவர்கள், பூந்தமல்லி முதலியார்கள், வேலூர் முதலியார்கள், சத்திரிய குல வெள்ளார்கள், இடும்பர்கள், பிள்ளைகள், வண்ணார்கள் பற்றிய குறிப்புகள் இல்லை. குறிப்புகள் இல்லையென்றாலென்ன, அவர்களும் மொத்தமாய் ஒரு 90 இலட்சம் பேர்கள் தமிழ்நாட்டில் தங்கள் சாதி சார்ந்து இருப்பதாக சொல்லிக் கொள்ளலாம்.

இதுதாண்டி, தமிழ்நாட்டில் விஜயகாந்திற்கு பின் ஒரு கோடியும், ரஜினிகாந்திற்கு பின் ஒரு கோடியும், தி.மு.க, அ.தி.மு.க விற்கு பின் சில கோடிகளும், கம்யுனிஸ்ட், காங்கிரஸ், திராவிட தெலுங்கு முன்னேற்ற கழகம், வன்னியர் குலப்பேரவை, நாயுடு சங்கம் இவையீடாக ஒரு 30-40 இலட்சம் மக்களும் இருக்கலாம். இதுதாண்டி, தமிழ்நாட்டில் கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள். இவர்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் 70 இலட்சம் பேர் இருக்கலாம். ஆக மொத்தமாய் கூட்டிப் பார்த்தால் தமிழ்நாட்டின் மக்கள்தொகை, சற்றேறக்குறைய கனடாவின் பிரேசில் மக்கள்தொகைக்கு ஈடாக இருக்கலாம். ராதாரவி அண்ணாமலையில் சொல்வதுப் போல கூட்டிக் கழித்துப் பார்த்தால், கணக்கு சரியாகத்தான் வரும் போல இருக்கிறது. நல்லாதான்யா கணக்கு பண்றாங்க. கேக்கறவன் கேணப்பயலா இருந்தா ........................................

தகவலுக்கு: தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை 62405679.[மக்கள்தொகை கணக்கெடுப்பு 2001] இதில் இந்துக்கள் என்று அறியப்படுபவர்களின் மொத்த மக்கள்தொகை 54985079 [ஆண்கள் 27732367 + பெண்கள் 27252712 ] கிறிஸ்துவர்களின் மக்கள்தொகை 3785060, இஸ்லாமியர்களின் மக்கள்தொகை 3470647. இதுதாண்டி, மிகவும் குறைவான எண்ணிக்கையில் சீக்கியர்களும், புத்தக் கொள்கையினை ஆதரிப்பவர்களும், சமணர்களும் இருக்கிறார்கள். என் அலுவகத்துக்கு பக்கத்தில் பஹாய் என்றொரு மதத்தின் தலைமை அலுவலகமிருக்கிறது.

Aug 28, 2005

ஒற்றை தராசும், ஒரிரு வார்த்தைகளும்

தராசுகள் பற்றிய என்னுடைய கருத்தினை நீங்கள் அறிந்துக் கொள்ள பெயரிலியின் பதிவினைப் பாருங்கள். என் பிரச்சனை தராசுகள் எப்போதும் ஒரே மாதிரியாய் இருக்க முடியாது என்பதுதான். இரும்பு தராசுகள், தண்டவாளங்களைப் போல வெயில் காலங்களில் விரியக் கூடியது என்று ஆறாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் படித்திருக்கிறேன். காலமாற்றத்தில் எல்லாம் மாறக்கூடியது. மாற்றம் என்பது மட்டுமே நிரந்தரமானது என்றொரு நிரந்தரமான மாறுதல் பற்றிய கிழமொழி இருக்கிறது. திண்ணையில் மதிவண்ணனின் நெரிந்துப் பற்றி லதா கிருஷ்ணன் எழுதியதைப் பற்றியதற்கு ஒரு காட்டமான கடிந்துரையினை ஜெயபாரதன் எழுதியிருக்கிறார். நாகூர் ரூமி, சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதையினைப் பற்றிய விமர்சனத்தினை அவருடைய பதிவில் எழுதியிருக்கிறார். இவையிரண்டின் ஆதார சுருதியும் ஒரளவுக்கு ஒன்றுதான். ஒருவர் மதக் கோட்பாடுகளைப் பற்றிய பார்வையுடனும், இன்னொருவர் pesudo பெண்களுக்கான மரியாதையும் கொண்டு பேசியிருக்கிறார்.

நல்லது. படைப்பாளிகளின் படைப்பினைப் பற்றிய கேள்விகளையும், விமர்சனங்களையும் இன்னொரு நாள் வைத்துக் கொள்வோம். நெரிந்தையும், இரண்டாம் ஜாமங்களின் கதையையும் நான் படிக்கவில்லை. உங்களின் சுய கருத்துக்களை பின்புலமாக வைத்துக் கொண்டு நீங்கள் அடுத்தவர்களின் கருத்தாக்கத்தினைக் கேள்விக்குறியாக்கும் போது தான் என் பிரச்சனை ஆரம்பமாகிறது. நிர்ணயிக்கப்பட்ட சட்டகங்களில் (மதக் கோட்பாடுகளிலும் மட்டுமல்ல, மனக் கோட்பாடுகளிலும் கூட) நீங்கள் எல்லா படைப்புகளையும் பார்க்கிறீர்கள். சட்டகங்களிலிருந்துக் கொண்டு பார்த்தால், ராப் பாடல்கள் தவறு. அபார்ஷன் தவறு. புகைப்பது தவறு. குடிப்பது தவறு. பட்டியல் அமெரிக்கா ஆக்ரமித்த நாடுகளைப் போல நீண்டுக் கொண்டேப் போகும் ;-) ஆனால், சட்டகங்களும், மதக் கோட்பாடுகளும், ஒழுக்க விதிகளும் அவரவர் பார்வையில் தான் இருக்கிறது. பாம்புக்கு பால் பிடிக்குமா, முட்டை பிடிக்குமா, ஆஃப் பாயில் பிடிக்குமா என்று தெரியாமல், நாகாத்தமாள் கோயில் பாலூற்றும் பெண்களுக்கு, சீனாவில் பாம்புகள் புடலங்காய் போல சூப் வைக்கவும் உதவுகின்றன என்றால் அவ்வளவுதான். ஆனால், நிதர்சனம் அவ்வளவுதான். உங்களுக்கான ரியர் வியு கண்ணாடியில் நீங்கள் பார்க்கும் வரையில் தான் சாலைகள் நீண்டிருக்கின்றன என்றுப் பார்த்தால், கார்களை கேரேஜிலே மட்டும்தான் ஒட்ட முடியும். ஒரு படைப்பாளியின் படைப்பினை விமர்சிப்பது அவரவர் உரிமை. ஆனால், அப்படி எழுதக் கூடாது என்று நிர்பந்திப்பது பாஸிஸ மனப்பான்மை.

எல்லா மதங்களும் உடல் பற்றிய பயத்தினைத் தொடர்ச்சியாக நினைவுறுத்தி, மக்களை suspended fear லியே வைத்திருக்கின்றன. இது ஒரு மனோதத்துவரீதியான அணுகுமுறை. பொய் சொன்னால் சாமி கண்ணை குத்திரும் என்கிற மனப்பாவம். ஆனால், உண்மை வேறாக இருக்கிறது. உலகம் உய்ய உங்கள் சந்ததிகளைப் பெருக்கி, நீங்கள் சம்பாதிக்கும் டாலர்களையும், லோனில் வாங்கிய வீட்டையும் எடுத்துக் கொடுக்க உங்களுக்கு உடல் தேவைப்படுகிறது. உடலிச்சை என்பது ஒன்றுக்கு போவது போல. வந்தால் போங்கள், தொடர்ச்சியாக வராவிட்டால் டாக்டரினைப் பாருங்கள். உடலினைப் பற்றிய கற்பிதங்களையும், ரொமான்டிசைஸ் செய்யப்பட்ட காதல் கதைகளை எழுதும் உரிமையினை கத்துக் குட்டி எழுத்தாளர்களிடம் கொடுத்துவிடுங்கள். தெய்வீக காதல், ஆன்மீக காதல் என்றெல்லாம் ஜல்லியடிக்கலாம். உடல் பற்றி பெண் படைப்பாளிகள் எழுதுவதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதிர்ச்சி மதீப்பீடாக இருக்கலாம். ஆனாலும் தொடர்ச்சியாக, ஊடகங்களும், அரசும் உடலினைப் பற்றிய phobia-விலேயே மக்களை இருக்க செய்கிறார்கள், காரணம், ஒழுக்கவிதிகளைக் காட்டி மக்களை அடக்குவது. ஒழுக்கமாய் இருப்பதால் பத்தினி தெய்வமாக்கி ஒரமாய் உட்கார வைத்து விட்டு ஊர் மேய்வது. பாலியல் இச்சைகள், பாலியல் தேவைகள், தேடல்கள் என்பது கிழிந்த ஜட்டி போல, கைரேகை போல அவரவர்களின் அந்தரங்கம். உடல் தவறாக இருக்கும் "பரமபிதாகள்" குறிகளற்ற மனிதர்களை படைக்கலாம். எச்சிலின் மூலம் சில நீர்வாழ் உயிரிகள் இனப்பெருக்கம் செய்யும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுப்போல மனிதர்கள் இருந்துவிடலாம். [ஆதாம் ஏவாள் கதையினை ஒப்புக் கொண்டால், அவர்களுக்கு பிறந்த மகன் யாரோடு உறவு கொண்டிருக்க முடியும்.. இது incest - ல் வந்து முடியும், இன்செஸ்டினை பைபிள் ஒத்துக் கொள்கிறதா என்று தெரியாது, ஆனால் கண்டிப்பாக அடிப்படை கிறிஸ்துவவாதிகள் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. இதையே இஸ்லாமிற்கு மாற்றி எழுத முடியுமானால் என் மீது ஃபத்வா போடமுடியும். ஹிந்து அடிப்படைவாதிகள் சூலத்தினால் "சுளுக்கு" எடுப்பார்கள்)

உடலை பற்றி எழுதுதல் வக்கிரமாகவும், புனைவாகவும், நிறைவேறாத பாலியல் இச்சையாகவும் இருக்குமானால், ஒழுக்கம் என்பதும் புனைவு என்று தர்க்க ரீதியாக வாதிடமுடியும். உடலை பற்றிய இடையறாத பயம் எல்லாரிடத்திலும் இருக்கிறது. ஆண்கள் டாய்லெட்டில் ஒன்றுக்கடிக்கும்போது, அடுத்தவர்களை எட்டிப் பார்க்காத ஆண்கள் யாருமில்லை. ஆக இங்கே பிரச்சனை உங்கள் மனதிலிருக்கிறது. Sex not lies in the organ. It lies in the mind. பெண்களுக்கான உலகத்தினை பாலகுமாரன் தான் லேடிஸ் கம்பார்ட்மெண்டிலிருந்து எழுத வேண்டும் என்று நினைப்பவர்கள் பாக்கெட் நாவல் படிக்கலாம். கொஞ்சம் நிதானமாய் தேடிப் பார்த்தால், அவரவர் தராசுகளின் சாய்மானங்களில் மனசாட்சி ஒளிந்துக் கொண்டிருக்கும்.

இதற்கு சற்று சம்பந்தமான/சம்பந்த்மில்லாத இரண்டு செய்திகள்.

1. திண்ணையில் சுகுமாரன் ஓரு விசாரணையின் நூற்றாண்டு என்கிற தலைப்பில் கேரளாவில் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு விதமாக புரிந்துக் கொள்ளப்பட்ட குறியேடத்து தாத்ரி என்கிற பெண்ணைப் பற்றி எழுதியிருக்கிறார்.

2. FUCK என்பது ஒரு அக்ரானிம். இதன் முழு வார்த்தை Fornication under the consent of King. அதாவது தங்களுக்குள் திருமணம் செய்துக் கொள்ளாத இருவர் அரசின் அனுமதிப் பெற்று உடலுறவு கொள்ளலாம். லோக்கலா, என் வொய்பும், உங்க ஹஸ்பெண்டும் ஊருக்கு போயிருக்காங்க, அதனால .............. என்பது மாதிரியான மேட்டர். என்ன கொடுமை நவீன உலகில் அரசர்கள் இல்லை. ஒரு விளம்பர நிறுவனத்தின் காப்பிரைட்டர் பெண் வெட்டியாயிருக்கும் உபதேசித்தருளிய ஞானோபதேசம்.

Aug 24, 2005

அக்கம்பக்கம் பாருடா சின்ன ராசா!

இரண்டு நாளைக்கு முன் அம்மா அமிர்த்தானந்தமாயினை கொலை செய்யும் நோக்குடன் அருளாசி வழங்குமிடத்திற்கு வந்த ஒருவரை பிடித்து போலிஸிடம் ஒப்படைத்துள்ளார்கள். அம்மா கொஞ்சம் பதட்டப்பட்டு, பின் சகஜமாகி, இப்போது அருளாசி வழங்க தயாராகிவிட்டார். தன்னை கொலை செய்ய வரும் ஒருவனிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தெரியாத அம்மா, ஊரிலிருக்கும் அனைவரின் குறைகளையும் போக்கி, செளந்தர்யங்களை வாரி இறைக்கிறார். நம்மாட்கள், தன்னை தானே பாதுகாத்துக் கொள்ளாமல், பயந்து கலவரப்படும் அம்மாவிடம் தன் குறைகளைச் சொல்லி தன்னை பாதுகாக்குமாறு கெஞ்சுகிறார்கள். உங்களுக்கெல்லாம், ஒன்றல்ல, நூறு பெரியார் வந்தாலும், பேச்சினைக் கேட்டுவிட்டு, பெருமாள் கோவில் தொத்தியோனம் வாங்கி சாப்பிட்டு, கீரி-பாம்பு சண்டை பார்த்துவிட்டு, லேகியம் வாங்கி சாப்பிட்டுவிட்டு, இரவில் மூச்சிறைக்க ************ விட்டு, மறுநாள் காலை தன்னை பாதுகாக்க யாருமில்லையே என்று அம்மாவிடம் ஓடுவீர்கள். நீங்களும் உங்க பக்தியும்?

வலையுலகில் இருக்கும் "ஜனநாயகவாதிகளின்" கண்களில் புலி என்று ஒரு வார்த்தை பட்டுவிட்டால் போதும். உடனடியாக துள்ளிக் குதித்து, களத்திலிறங்கி, கொட்டை எடுத்ததா, எடுக்காததா என்றெல்லாம் பார்க்காமல், தங்களின் நடுநிலை வழுவாமல் பார்த்துக் கொண்டு, முதுகெலும்பு செங்கோல் வளையாமல் நீதி சொன்ன காரணத்தினால், பில்டர் காபி சாப்பிட்டு, ஹிண்டு படித்து, மாம்பலம் சுரங்கப்பாதையில் யாரும் யோக்கியமில்லை என்று அம்பி கதைகள் பேசிக் கொண்டு போவார்கள். போன வார தெஹல்காவில் ராஜீவ் உதிர்த்துவிட்டுப் போன அருமையான(?!) வார்த்தையினை, சீக்கிய சமூகத்தினர் அக்கு வேறு ஆணிவேறாக கிழித்துவிட்டார்கள். "ஒரு மரம் பெயரும் போது சில சலசலப்புகள் இருக்கத்தான் செய்யும்." ஆனால், ஒரு மனிதன் ஒரு மரணத்தினை (சரி கொலையை, உங்களின் ஆசையினை ஏன் கெடுப்பானேன்) துன்பியல் சம்பவம் என்று சொன்னப்பின்னும் அக்கூட்டத்தின் மீது வசைபாடாமல் போனால் நிறைய பேருக்கு அன்றைய உணவு ஜீரணமாகாது. இந்த வார ஆ.விகடனில் ஞாநி நான் சொல்ல வரும் கோணத்தினை முன்வைத்திருக்கிறார். கதிர்காமரின் மரணத்தினால், இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் என்ன லாபம் கிடைத்திருக்கிறது? ஆனால், போர் மேகங்கள் சூழ்வதினால், ஆயுத வியாபாரிகளுக்கு கொண்டாட்டம். ஆக இந்த கொலை நிகழ்த்தப்பட்டதற்கான மாற்றுக் காரணங்களை யோசிக்காமல், வெறுமனே புலிகளின் மீது மட்டுமே சந்தேக கண் கொண்டு பார்க்காமல், கொஞ்சம் அகலமாகவும் பார்க்கலாம்.

அழகி தந்த தங்கர் பச்சானை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் கூட்டமொன்று இருக்கிறது. தங்கர் பச்சானிடத்தில் எனக்கு பெரிதான எதிர்பார்ப்புகள் இல்லை. நாஞ்சில் நாடன் கதையாய் போனதால் இரண்டாம் படம் பிழைத்தது. ஜெயகாந்த மேதாவிலாசத்தினை அடிப்படையாகக் கொண்டு வந்த தென்றல் அண்ணா தியேட்டரில் கோன் ஐஸ்கீரிம் காலியாகும்முன் தியேட்டரை விட்டே ஒடிபோனது. ஆனாலும், தங்கருக்கு நாக்கில் சனி. இரண்டு வாரத்திற்கு முன்பு 600 ரூபாய் கதை நாயகியின் சிகையலங்கார பெண்ணுக்கு தராமல் போய், அவர் வராமல் நின்று, உடனே இவர் யாருக்கும் பொறுப்பில்லை. 600 ரூபாய்க்காக லட்சம் பணம்பொட்டு படம் தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு தானே நஷ்டம் என்றெல்லாம் பத்திரிக்கைகளில் சீறிப் பாய்ந்து ரிப்போர்டர்களின் கன்னத்தில் கீறாமல் போனதுதான் மிச்சம். ஐயா, தங்கர், லட்சக் கணக்கில் பணம்போட்டு படமெடுக்கும் நீங்கள் ஏன் வெறும் 600 ரூபாய் அப்பெண்ணிற்கு பாக்கி வைக்கவேண்டும். உங்களுக்கும் எனக்கும் ஏன் இதை படிக்கும் பெரும்பாலானவர்களுக்கும் 600 ரூபாய் ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால், அந்த பெண்ணிற்கு அது பெரிய விதயம். கதைகளிலும், படங்களிலும் பாட்டாளி உயர வேண்டும் என்று சொல்லும் போதே அப்பாட்டாளியின் கூலி என்னவென்று தெரிந்திருக்க வேண்டும். அது தெரியாமல் 600 ருபாய்காக நீங்கள் போடும் சீனை என்ன சொல்வது. வில்லாதிவில்லன் என்றொரு சத்யராஜ் படத்தில் கவுண்டமணி சொல்லுவார் "உழைக்கும் கரங்களேன்னு எல்லா ஹீரோவும், கைய உயர்த்தி, மாருல தட்டி, ஏழையின் வாழ்வு உயரவேண்டும். பாட்டாளிக்கு சம்பளம் கிடைக்கவேண்டும்ன்னு பாடுவானுங்க. இதுல காமெடி என்னன்ன இவனுங்க யாரும் ஏழை கிடையாது". தங்கர் நீங்களும் ஹீரோவாகிவிட்டீர்கள் அல்லவா?

Aug 23, 2005

கூகிள் டெஸ்க்டாப் 2 (beta)

கூகிள் டெஸ்க்டாப் 2 பீட்டாவினை நேற்று வெளியிட்டிருக்கிறது. டெஸ்க்டாப் 2வில் நிறைய மாற்றங்களை கூகிள் செய்திருக்கிறது. முக்கியமான விதயமாய் தெரிவது, சைடு பார் என்றழைக்கப்படும் உங்களின் கணினியில் இட,வல புறங்களை ஆக்கிரமித்துக் கொள்ளும் ஒரு சிறிய ஆனால் செம்மையான நிரலி. கூகிள் டெஸ்க்டாப் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இது. கூ.டெ ஒரு சிறிய நிரலி. உங்களின் கணினியில் உள்ள எல்லா கோப்புகளையும் உடனடியாக இதைக் கொண்டு தேட முடியும். அதற்குதான் விண்டோஸ் தேடல் இருக்கிறதே என்று சொல்லாதீர்கள். அது ஒரு மகா சொதப்பலான தேடல் பொறி. அது தேடி முடிப்பதற்குள் நமக்கு ஆயுசு முடிந்துவிடும். கூ.டெ எப்படி கூகிள் தளம் இயங்குகிறதோ, அதேப் போல வேகமாக வடிவமைக்கப்பட்ட நிரலி. கேட்ட கோப்பு, உடனடியாக, நிரலிக்குள் காணக் கிடைக்கும். கூ.டெ.2வில் செய்துள்ள மிக முக்கியமான மாற்றம் சைடு பார். சைடு பாரில் உங்களின் மின்னஞ்சலை சேர்த்துவிட்டால் ஒவ்வொரு முறையும் உங்கள் மின்னஞ்சல் பொட்டியை திறக்க வேண்டிய அவசியமில்லை. செய்திகள் வாசிக்க, பதிவுகள் படிக்க, சும்மா கிறுக்க, சமீபத்தில் பார்த்த தளங்களை பார்வையிட, அறிவியல் செய்திகள் அறிந்துக் கொள்ள, வானிலை ஆராய, பங்கு சந்தை பரிமாற, உங்கள் கணினியில் கோப்புகளைத் தேட என எல்லாவற்றுக்கும் வழி இருக்கிறது. இந்த ஜிகினாக்கள் வேண்டாமென்றால், சைடு பாரினை மூடிவிட்டால், உங்கள் டாஸ்க் பாரில் "தேமே"னென்று உட்கார்ந்துவிடும். உங்கள் கோப்புகளை மட்டும் தேடிக் கொள்ள பயன்படுத்தலாம். வெறும் 1.32 எம்.பியில் உங்களின் சகலவிதமான விதயங்களையும் உங்களின் வசதிக்கேற்ப மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

பார்க்க - கூகிள் டெஸ்க்டாப் 2 தரவிறக்க

கூகிள், நேரு, அஸின், சையது மற்றும் 33%

அது ஒரு காலம். கண்களில் கிராபிக்ஸூம், நெஞ்சில் ஹாலிவுட்டும் கிளர்ந்து வெறித்தனமாய் எல்லா வீடியோ தொழில்நுட்பங்களையும் மேய்ந்து கொண்டிருந்த போது முதலில் காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்காத பெயர் - சிலிகன் கிராபிக்ஸ் சுருக்கமாய் எஸ்ஜிஐ. 3D கிராபிக்ஸ் என்றால் எஸ்ஜிஐ என்று உதாரணம் சொன்ன காலம். ஐந்து வருடங்களில் எல்லாம் தலைகீழாய் போனது. எஸ்ஜிஐ செய்த வேலைகளை இப்போது அடித்துக் கொண்டிருக்கும் மடிக்கணினி செய்துவிடும். ஆனால், சில வருடங்களுக்கு முன்பு கணினி கிராபிக்ஸ் என்றால் எஸ்ஜிஐ தான். இன்றைக்கு முகவரி இல்லாமல் போன துரதிர்ஷ்டசாலி. பாஸ்ட் கம்பெனி தளத்தில் கூகிளின் எதிர்காலம் பற்றிய கேள்வியோடு ஒரு செய்தி வந்திருந்தது. நேற்று எஸ்ஜிஐ இருந்த அதே இடத்தில் தான் இன்றைக்கு கூகிள் குடிபெயர்ந்திருக்கிறது. எஸ்ஜிஐ வேறெங்கோ சிறிய இடத்தில் குடிபெயர்ந்து இன்னமும் தாங்கள் தான் நுட்ப கண்டுபிடிப்புகளின் ஆதிகுடிகள் என்று காலி பெருங்காய டப்பாவாக இருக்கிறார்கள். இன்னும் பத்து வருடத்தில் கூகிளுக்கு இந்த நிலைமை வருமா? விரிவாக விவாதிக்கிறது இந்த செய்தி. அடுத்த 10 வருடங்களில் நுடபங்களில் எவ்விதமான மாற்றம் நிகழும் என்று யூகிக்க முடியாதபோது, ஒரு காமெடி இந்தியாவில் நடந்திருக்கிறது. இன்போசிஸ் நாராயணமூர்த்தி, இன்போசிஸின் அடுத்த 25 வருடங்களுக்கான நிர்வாக திட்ட பாதையினை (roadmap) வெளியிட்டு இருக்கிறார். அடுத்த ஐந்து வருடங்களில் நுட்பத்தில் எவ்விதமான மாறுதல்கள் வருமென்று தெரியாத நிலையில் மென்பொருள் சேவையினையும், மென்பொருளையும் மட்டுமே நம்பியிருக்கும் ஒரு நிறுவனம் 25 வருடங்களுக்கான பாதையை வகுக்கிறது என்பது என்னளவில் ஒப்புமையாகாத, நகைப்புக்குரிய விஷயம். நடத்துங்க ராசா நடத்துங்க, பில்லிங் $20 தானே இப்போ?

பார்க்க - எஸ்ஜிஐ | பாஸ்ட் கம்பெனி செய்தி | இன்போஸிஸஸ் அறிவிப்பு

58 வருடங்களாக சுதந்திரம் கிடைத்தும் இன்னமும் சுதந்திர காற்றினை நிம்மதியாக சுவாசிக்காமல் இருப்பவர்கள் இந்தியாவில் இருக்கும் காஷ்மீரிகள். சமீபத்தில் ஒரு எழுத்தாளரோடு பேசிக் கொண்டிருந்தேன். நண்பர் அ-புனைவுகளில் ஜித்தர். நிகழ்காலம், சரித்திரம், நுட்பம் என்று எழுதுபவர். அவர் இப்போது எழுதி வரும் ஒரு புத்தகத்திற்கு சேகரித்த விதயங்களில் எனக்கு சொன்ன உறுத்திய விதயமிது. 1947 இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபின், இந்தியாவில் இருந்த பல்வேறு சம்ஸ்தானங்கள் இந்தியாவோடும், சிந்து நதிக்கு அருகிலிருந்த இடங்கள் பாகிஸ்தானோடும் இணைந்தன. அவ்வாறு இணையாமல் முரண்டு பிடித்த இடங்கள் ஹைதராபாத், ஜுனோகர் (இப்போதைய குஜராதில் இருக்கிறது), காஷ்மீர், . இதில் வல்லபாய் படேல் இந்தியாவோடு மற்ற இரண்டையும் இணைத்துவிட்டு, இணைக்க முடியாது என்கிற மனப்பினக்கோடு இருந்த இடம் - காஷ்மீர். காஷ்மீரின் பிரச்சனைகளைக் கணக்கில் கொண்டு, படேல் காஷ்மீரினை பாகிஸ்தானுக்கு கொடுத்துவிடலாம் என்ற எண்ணத்தோடு இருந்தபோது, அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர் - நேரு. அதற்கான மிக அற்ப காரணம், நேருவின் தந்தை மோதிலால் நேரு காஷ்மீரில் பிறந்தவர். நேரு குடும்பம் ஒரு காஷ்மீரி பண்டிட் குடும்பம். அதனால், அவர் பிறந்த மண்ணின் காதல் அவருக்கு. ஆனால் ஒரு தனிமனிதனின் ஆசையினால், இன்னமும் ஸல்பர் வாசனையும், குண்டடிப்பட்ட மரங்களுமாய் காஷ்மீர் செத்து செத்து பிழைத்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் குடும்பத்தின் சுகதுக்கங்களோடு தான் இந்த நாடும் மக்களும் ஒன்ற வேண்டும் போல இருக்கிறது. வீரப்பா ஒரு படத்தில் சொல்வார் "இந்த நாடும் மக்களும் நாசமாய் போகட்டும்" என்று, ஒரு விதத்தில் அதுதான் நடக்குமோ என்னவோ?

சிம்ரனுக்கு குட்பை சொல்லிவிட்டு இடத்தினை காலியாக வைத்திருந்தேன். அந்த இடத்திற்கு நிறைய பேரினை பரிசீலனை செய்து முடிவாக அஸினுக்கு கொடுத்துவிடுவது என்று தீர்மானித்து வைத்திருக்கும் போதுதான் அது நடந்தது. வீணாய் போன 1960களில் எடுத்துத் திரையிட வேண்டிய "தாஸ்"ஸினைப் பற்றி ஏதோ சானலில் பார்த்தப்போது பற்றிக் கொண்டது ரேணுகா மேனன் (தங்கர் பச்சான் நவ்யா நாயரினை தன் படத்துக்கு நாயகியாக போட்டு, நாயர் என்கிற அடையாளத்தினை போட முடியாது என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். ஆகையால் மேனன் ஸ்ட்ரைக் அவுட்) என்கிற நெருப்பு. பின் ரேணுகாவிற்காக பிப்ரவரி 14-ம் பார்க்கும் முடிவில் இருக்கிறேன். எனக்கு தெரிந்தவரையில் சுருள்முடி சாயலோடு உள்ள இந்திய நடிகைகள் குறைவு. இதனாலோ என்னவோ பெனொலப் குருஸ் நிரம்ப பிடிக்கும். பின் டாம் குரூஸோடு போனபின் ஹாலிவுட் நடிகைகளின் மீது பற்று போய்விட்டது. ஆனாலும், பியான்ஸின் மீது ஒரு கண் இருக்கிறது. நேற்றுப் பார்த்த பென்டாஸ்டிக் போரி்ன் நாயகி ஜெஸிக்கா ஆல்பா கூட பரவாயில்லை ;-) இதுதான் பிரச்சனை எங்கோ ஆரம்பித்து எங்கோ போய்விட்டது. ரேணுகா பிடித்ததற்கு சுருள் முடி கூட காரணமாக இருக்கலாம். கேரளா பெண் என்பதால், இயல்பாக இருக்கும் குழந்தைத்தனமாக இருக்கலாம். அழகான சிரிப்பாக இருக்கலாம். சாலையில் பார்க்கும் பெண்ணுக்கான லட்சணங்களோடு திரும்பி பார்க்க வைக்கும் முகமாக இருக்கலாம். கொஞ்சம் பப்ளியாக இருக்கும் குணமாக இருக்கலாம். எதுவேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனாலும் ரசிக்க முடிகிறது. ஆனாலும், அஸினின் இடம் பறிக்கப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அட அஸினும் மல்லுதான். மல்லுக்களோடு மல்லுக்கு நிற்கமுடியாது போல. சினிமா பேசும் போது மாண்டீ, பெயரிலி, அருண், விஜய் மாதிரியான ஆட்களுக்கான இன்னொரு வேண்டுகோள்.சிட்டி ஆஃப் காட் படத்தினைப் போலவே சிட்டி ஆஃப் மென்(Cidade dos Homens) என்கிற ஒரு படம் வந்திருக்கிறது. இரண்டு படங்களும் ஒரே குழுவினரால் ரியோவில் இருக்கும் ஒரு மோசமான இடத்தினைப் பற்றிய கதைதான். யாராவது இருந்தால் தகடு அனுப்புங்கள் அல்லது பார்த்துவிட்டு பதியுங்கள்.

ப்ளிக்கர் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். தெரியாதவர்களுக்கு, ப்ளிக்கர் இணையத்தில் புகைப்படங்களை சேகரித்து, பத்திரப்படுத்தி, பகிர்ந்துக் கொள்ளும் ஒரு தளம். ப்ளிக்கரினை யாஹூ! கையகப்படுத்தி விட்டது பழைய கதை. மேட்டர் அதுவல்ல. ப்ளிக்கர் போல் நிறைய தளங்கள் பின் வந்து, தங்கி சுற்றிக் கொண்டிருக்கின்றன. ப்ளிக்கர் புகைப்படங்கள் என்றால் அதை தூக்கிச் சாப்பிடுவது போல இன்னொரு தளம் வந்திருக்கிறது. யூட்யூப் என்ற பெயருடைய தளத்தில் வீடியோ கிளிப்பிங்களை ப்ளிக்கர் போல சேகரித்து, பிறர்க்கு காண்பித்து, பத்திரப்படுத்தி, பகிர்ந்துக் கொள்ள முடியும். வெப் 2.0 என்று சொல்லப்படும் அடுத்த தலைமுறைக்கான இணையத்தில் இவ்வகையான விதயங்களின் சாத்தியக்கூறுகள் அதிகம். எதிர்கால நுட்பங்களை தொடர்ந்து ஆராயும் டெக்க்ரன்ஞ்சில் வெப் 2.0வின் அடுத்த தலைமுறை தளங்களையும், மென்பொருட்களையும் பற்றிய நேர்காணலில் இந்நிறுவனமும் இடம்பெற்றிருக்கிறது. உங்கள் விருப்பத்திற்காக யூட்யூபில் நான் பார்த்த கியுபிகல் அத்லெடிக்ஸ் என்கிற ஒரு குறுவீடியோ (caution: Dont' try at your office)

பார்க்க - டெக் க்ரன்ஞ்ச் | யூட்யூப்

இந்தியாவின் ஹை-ஜாக் பாலிஸி கொஞ்சநாளைக்கு முன்னாடி அறிவிக்கப்பட்டது. இதன்படி கடத்தப்படும் ஒரு விமானத்தினை சுட்டு தள்ளலாம் என்று சொல்கிறார்கள். ஐயா, கடத்தப்படும் விமானத்தில் முக்கிய பிரமுகர்கள் இருப்பின் இது நடக்குமா ? ஏனெனில், ஐ.ஒ.சி.யின் முதனிலை அதிகாரி காஷ்மீர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டப்போது பணிந்து போகாத அரசு, இன்றைக்கு அங்கே முதல்வராய் இருக்கும் முப்தி முகமது சைதின் மகள் கடத்தப்பட்டப் போது முந்திக் கொண்டு போய் தீவிரவாதிகளை விடுவித்து அமைச்சரின் மகளை மீட்டது. ஆக சட்டம் அமைச்சருக்கொன்று, மற்றவர்களுக்கு வேறு. இதற்கு நடுவே இன்று ஆரம்பித்துவிட்டது பாராளுமன்றத்தில் 33% இடஒதுக்கீடு கலாட்டா. அடப் போங்கடா, எல்லா தாய்குலங்களும் கொஞ்ச நாளில் துடைப்பத்தோடு டெல்லியில் அமர்ந்தாலேயொழிய இந்த இட ஒதுக்கீடு அமுலாகப் போவதில்லை. அர்த்தநாரீஸ்வரர் கொஞ்சம் பின்னாடி யோசித்திருந்தால் 33% கொடுத்திருப்பாரோ 50% கொடுக்காமல். முதலில் ஒரு ஜனநாயக நாட்டில் பெண்கள் 33% கேட்டு பிச்சை எடுக்கும் அவலத்தினை நினைத்தாலே கேவலமாக இருக்கிறது. அதையும் தாண்டி அவர்களும் ரொம்ப நாட்களாய் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், நாமும் நன்றாக டபாய்த்துக் கொண்டிருக்கிறோம். "இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே"?

Aug 12, 2005

கடவுளின் கையெழுத்து

லண்டன் பஸ்ஸில் வெடிகுண்டு வெடித்த தீவிரவாதிகளுக்கு பின்னும், பள்ளிக் கூடங்களில் பரிணாம வளர்ச்சி கற்றுக் கொடுக்கக்கூடாது என்று போராடும் சிலுவைகளின் பின்னும், மசூதிகள் எல்லாவற்றையும் இடித்து கோயில் கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களின் பின்னும் ஒரே காரணம் தான் இருக்கிறது. அந்த ஒரு காரணம் அவரவர்களின் கடவுளர்கள் அவர்களுக்கு விட்டுச்சென்றதாக சொல்லப்படும் சாசனங்கள். தாத்தாவின் சொத்து பேரனுக்கு எவ்வளவு பாத்தியதை உள்ளதோ, அதைவிட தீவிரமாக, கடவுளின் சொற்களும், கடவுளால் கொடுக்கப்பட்ட உரைகளும் இவர்களுக்கு.

இன்னமும் கிறிஸ்துவத்தில் புவியியல், இஸ்லாத்தில் வேதியல், பகவத் கீதையில் உயிரியல் என்று விரிவுபடுத்திக் கொண்டு ஒவ்வொரு சொல்லுக்கும் அவரவர்க்கு தோதான அர்த்தங்களைக் கற்பித்துக் கொண்டு, கடவுளின் கையெழுத்துப் போட்டு கொடுத்து விட்டுப் போன power of attorney தனக்கு தான் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். உண்மையான கிறிஸ்துவர்கள், அடிப்பதற்காக மறு கன்னம் காட்டாமல், அடிப்பதற்கு முன்பே வட கொரியாவினை அழிக்க முனைந்துக் கொண்டிருக்கிறார்கள். வட்டிக்கு காசு வாங்காத இஸ்லாமியர்கள், எரிபொருளின் விலையினை ஏற்றி விட்டு மே-பாக்கில் வலம் வருகிறார்கள். கடமையை செய்வதற்கு முன்பே லஞ்சம் வாங்கும் அலுவலர்களின் அறையில் கட்டாயமாக பகவத் கீதை கேலண்டர் காற்றிலாடுகிறது. அவரவர் கடவுளர்களின் வார்த்தைகளை உண்மையாக்க சக மனிதர்களையும், தன் கடவுளை மதிக்காதவர்களையும் கொன்றழிப்பதையும், சீர் குலைப்பதையும் தான் கடவுளிட்ட ஆணையாக கருத்தில் கொண்டு செயல்படுகிறார்கள். பாவம் கடவுள்கள். உலகினை படைக்கும் போதே, ஆப்ரிக்காவினை படைக்காமல் இருந்திருக்கலாம். லண்டன் பஸ் போனதும் இஸ்லாமிய-கிறிஸ்துவ அறிவுஜீவிகள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். நைஜரில் எஞ்சியிருக்கும் எலும்பும் தோலுமான கடவுளின் மாற்றாந்தாய் பெற்ற பிள்ளைகள் இரண்டு ஸ்லைஸ் ரொட்டித்துண்டுக்காக கியுவில் நிற்கிறார்கள். அதுவா முக்கியம், பைபிளின் வாக்கினையும், குரானின் வாக்கினையும் உண்மையாக்காத கிறிஸ்துவனோ, இஸ்லாமியனோ அவரவர் மதங்களின் அடிப்படை தெரியாதவர்கள். ஆடிமாதம் அம்மனுக்கு கூழ் ஊற்ற நன்கொடை வசூலிப்பதால், பொறுத்துப் பொறுத்துப் பார்த்த விநாயகர் தாங்க மாட்டாமல் திருவல்லிக்கேணி மேன்ஷனில் குடியேறிவிட்டதாக கேள்வி. பாகிஸ்தானில் பிச்சையெடுக்கும் இந்து கடவுள்களுக்காக புண்ருத்ராணம் பண்ணலாம் என்று பேசியவுடன், ஆப்கன் அடிப்படைவாதிகள் பொங்கி எழுந்துவிட்டார்கள். பாவம், அயோத்தியில் அல்லாவினை தரைமட்டமாகியதன் பலனை சிவனும், பார்வதியும் பாகிஸ்தானில் அனுபவிக்கிறார்கள்.

மனிதர்களைப் பற்றி கவலைப் படும் உண்மையான கடவுள், பாவம், கையெழுத்திட்ட பாவத்திற்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். கெரன் ஆர்ம்ஸ்ட்ராங் கார்டியனில் எழுதிய நேற்றைய பத்தி கடவுளுக்காக மனிதர்கள் போடும் சண்டையை மையமாகக் கொண்டிருக்கிறது. [இன்றைய ஹிந்துவில் மறுபதிப்பு]. கெரன் ஆர்ம்ஸ்ட்ராங்கின் புத்தகம் Battle of God இதனை விரிவாக அலசுகிறது.

இன்னும் கொஞ்ச நாளில் ஹிந்துவின் ஆப்சுவரி காலத்திலேயோ, என்.பி.சியின் காணாமல் போனவர்களின் பட்டியலிலோ் "கடவுளும்" வருவார். அதை பார்த்து விட்டு நாம் நம் வேலையை மறுபடியும் துவங்கி அடித்துக் கொள்வோம்.

Aug 11, 2005

அமீர்கான் என்றொரு நடிகன்

ஹிந்தி சினிமா இந்தியாவின் அடையாளம். உலகமெங்கும் இந்திய சினிமா என்று சொன்னால், முதலில் ஹிந்தி சினிமா தான் நினைவுக்கு வரும். விட்டு விட்டு ஹிந்திப்படம் பார்ப்பவன் நான். சமீபகாலங்களில் வந்த சதைப்படங்கள் தவிர்த்து பிற ஹிந்திப் படங்களை அவ்வப்போது பார்த்திருக்கிறேன். பெரிதாய் ஹிந்தி சினிமா என்னில் பெரிதாய் தாக்கம் ஏற்படுத்தாமல் இருப்பினும், சில குறிப்பிட்ட ஆளுமைகள் சலனப்படுத்தும். அது கான்களின் தேசம். சிவசேனா வலுவாய் இந்துத்துவம் பேசும் மும்பையின் முதன்மை நாயகர்கள் இஸ்லாமியர்களாக இருக்கும் விசித்திரம் ஹிந்தி சினிமாவில் தான் நடக்கும். ஹிந்தி சினிமாவில் மூன்று ஹீரோக்கள், நான்கு ஹீரோயின்கள் என்பது சர்வ சாதாரணம். தென்னிந்திய சினிமாக்களில் இருக்கும் ஹீரோ ஈகோ, ஹிந்தி சினிமாவில் கிடையாது. இதனால், பெரிதாக ஹிந்தி சினிமாவின் கதைக்களன் பற்றிய மரியாதை கிடையாது. ஏறக்குறைய ஒரே மாதிரியான படங்கள்.

விதிவிலக்காக சில படங்கள். சில மனிதர்கள். அந்த சில மனிதர்களில் மிக முக்கியமான மனிதன் ஒரு நடிகன். அமீர் கான். நவீன ஹிந்தி சினிமாவின் மிக முக்கியமான அங்கம். லகான் போன்ற ஒரு படத்தினை நீங்கள் தந்திருந்தால், உங்களின் ரேட் உச்சத்திற்கு போய், உடனே உங்களை தெய்வமாய் பார்க்கும் கூட்டத்தில், லகானுக்கு பிறகு ஒரே படத்திற்காக நான்கு வருடங்கள் உழைத்திருக்கிறார். அமீர் கானின் ஆரம்பகால சாக்லேட் பாய் படங்களை தவிர்த்து, என்னளவில் அவரின் திருப்புமுனையாக ரங்கீலாவினை சொல்லலாம். ரங்கீலா அமீர்கான், ராம் கோபால் வர்மா, ஊர்மிளா மடோன்கர் என்கிற இன்றைய ஹிந்தி சினிமாவின் தவிர்க்க முடியாத அம்சங்களை உருவாக்கிய படம். ஏ.ஆர். ரஹ்மானை இந்திய அளவில் பேசவைத்து, அங்கிருந்து உலக அரங்கிற்கு செல்ல அடியெடுத்து வைத்த படம். ரங்கீலா பற்றி தனியாக உட்லாண்ட்ஸ் டிரைவ்-இன்னில் பேசலாம். நான் சொல்ல வந்தது அமீர்கான் என்கிற நடிகனைப் பற்றி.

சாதாரணமாகவே நடிக,நடிகைகள் இந்தியாவில் முழுமையான அரைவேக்காடுகள். ஆனாலும், பத்திரிகைகள் அவர்களில்லாம்ல் ஜீவித்தல் இயலாது. இதில் அறிவு ஜீவி, சமூகப் பொறுப்புள்ள, அக்கறையுள்ள, தொழில் பக்தியுள்ள கலைஞர்கள் மிகக் குறைவு. தமிழில் கமல், நாசர், பிரகாஷ்ராஜ் என்று ஒரு பட்டியல் தரலாம். அதுப் போல ஒரு புத்திசாலியான, தொழிலை வெறித்தனமாக பர்பெக்சனோடு பார்க்கிற நடிகன். நான்கு வருடங்கள் ஒரே படத்திற்காக தன்னை மாற்றிக் கொண்டு, படத்தோடு வாழ்ந்து, ஒரு படத்தயாரிப்பின் சகல கூறுகளிலும் பங்குப் பெற்று அந்தக் கதையோடு வாழ்ந்து, சாப்பிட்டு, தூங்கி ஒரு யோகியின் தவம் போல் அதனை பார்ப்பவர். சொன்னால் ஆச்சர்யமாயிருக்கும், லகானுக்கு பிறகு அமீர்கான் நடித்த ஒரே படம் தில் சாக்தா ஹேய் மட்டுமே. அதிலிருந்து நான்கு வருடங்கள் ஒரே படத்தோடு உண்டு, உறங்கிக் கொண்டிருக்கிறார். கோடிகள் சங்கமிக்கும் ஹிந்தி சினிமாவில் எப்போது காசு சம்பாதிக்கலாம், பேஜ் 3யில் இடம் பெறலாம், எந்நேரமும் சமூக வெளியில், ஊடகங்களில் இருக்கலாம் என்று நினைப்பவர்களின் மத்தியில், தான் செய்யும் வேலையின் ஒவ்வொரு சிறு கூறுகளும் துல்லியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவனை சில சமயங்களில் பைத்தியக்காரன் என்றும் சொல்லலாம். லகான் பிரிட்டிஷ் காலத்திய கிரிக்கெட் என்றால், இந்தப்படமும் பிரிட்டிஷ் காலத்திய படம்.

மங்கள் பாண்டே - தி ரெய்ஸிங். கேத்தன் மேதாவின் தயாரிப்பில் நான்கு வருடங்கள் மங்களாக வாழ்ந்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் விளையாடியிருக்கிறார். சிப்பாய்களின் கலகம் என்று பிரிட்டிஷ்காரர்களாலும், முதலாம் இந்திய போர் (1857) என்று இந்திய வரலாற்று ஆசிரியர்களாலும் சொல்லப்படும் நிகழ்வின் முக்கியமான காரணகர்த்தாவான மங்கள் பாண்டே என்கிற சிப்பாயினைப் பற்றிய கதை. தோட்டாக்களில் பசு மற்றும் பன்றியின் இறைச்சியினை தடவி பிரிட்டிஷ் அரசாங்கம், இந்தியாவினை துண்டாட முனைந்ததின் தீவிரத்தில் பொங்கியெழுந்து செத்து மடிந்த மனிதர்களின் பின்னாலுள்ள சரித்திரம்.

நாளை உலகமெங்கும் ரிலிஸாகிறது. ஒரு நடிகன் ஒரு கதாபாத்திரத்திற்காக நான்கு வருடங்கள் வாழ்ந்திருக்கிறான். ஹிந்தி சினிமாவின் புத்திஜீவி நடிகர்களில் அமீர்கானும் ஒருவர். முந்தாநாள் வந்த Maximum City வரை படித்து அதைப் பற்றி விவாதிக்கும் திறனுள்ள சொற்ப கலைஞர்களுள் ஒருவர். தெஹல்காவின் பேட்டியில் அமீர்கானின் சமூகம் பற்றிய பார்வைகளும், கோடிகளில் சம்பாதித்தும் இன்னமும் சொந்தமாய் ஒரு ஜிகினா செல்போன் கூட இல்லாமல் இருக்கும் விந்தையை என்னவென்று சொல்வது. இந்த படம் ஒடுமா, ஒடாதா என்கிற பிரச்சனையை கொஞ்சம் ஒத்திப் போட்டுவிட்டு, நான்கு ஆண்டுகள் உழைத்து எடுத்திருக்கிறார்கள் என்பதற்காகவாவது ஒரு முறை பார்க்க வேண்டும்.

பார்க்க - அமீர்கான் தெஹல்கா பேட்டி | மங்கள் பாண்டே - தி ரைசிங்

சத்தமில்லாமல் ஒரு மாற்றம்

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய சட்டங்கள் குறைவு. தமிழகத்திலிருக்கும் முக்கால்வாசி மகளிர் காவல் நிலையங்களிலும் மிரட்டல்களும், உருட்டல்களும் தான் நடக்கின்றன என்று சொன்னால் அது பொய்யாகாது. பெண்களுக்கு எதிராக குடும்ப அமைப்புக்குள் நடைபெறும் வன்முறைகள் ஏராள, தாராளமாய் இருந்தபோதிலும், இதுவரை இந்தியாவில் 1983-இல் இயற்றப்பட்ட குடும்ப வன்முறைக்கு எதிரான மகளிர் பாதுகாப்பு சட்டம் (376-A) தான் ஒரளவுக்கு வ்ரதட்சணை கொடுமை, ஸ்டவ் வெடித்தல் போன்ற விதயங்களை வெளிக் கொணார்ந்து தண்டனையளித்தது. ஆயினும், இது ஒரு முழுமையான சட்டமாக இல்லாமல், நிறைய ஒட்டைகள் இருந்ததால் குடும்ப அமைப்பிலிருந்துக் கொண்டு சர்வசாதாரணமாக குற்றங்களைச் செய்ய ஏதுவாக இருந்தது. இப்போது இந்திய அரசு ஒட்டைகள் குறைவான ஒரு சட்ட முன்வ்ரைவினை (Bill) முறைப்படுத்தியுள்ளது.

கிட்டத்திட்ட 22 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜுன் 13,2005-தினை இந்திய பெண்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாக குறிப்பிடலாம். குடும்ப வன்முறைக்கெதிரான மகளிர் பாதுகாப்பு சட்ட முன்வரவமைவு 2005 -தினை (Protection of Women from Domestic Violence Bill, 2005) பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த யூனியன் காபினெட் கையெழுத்திட்டிருக்கிறது. புதிய மொந்தையில் பழைய கள்ளுப் போல அல்லாமல், இத் திட்ட அறிமுகத்தில் நிறைய விதயங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

முக்கியமான அம்சங்கள்
  1. குடும்ப வன்முறை என்பதன் வ்ரையறை

  2. இந்திய குடும்பங்களின் வழமையான கணவன் - மனைவி உறவினைத் தாண்டி, மொத்த கூட்டுக் குடும்பமும், குடும்ப அங்கத்தினர்களும், முக்கியமாக பெண் அங்கத்தினர்களும் (மாமியார், நாத்தனார், பெரிய மருமகள், சின்ன மருமகள்) இதில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்

  3. இந்திய ஆணின் ஆளுமைத்தன்மையின் கூறுகளை துண்டு துண்டாக உடைத்துக் காட்டிருக்கிறார்கள்

  4. "Abuse" என்பதற்கான வரையறைகள் விரிவாக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணை உடல், மனம், பாலுறவு, சொல், எமோஷனல், சென்டிமெண்டல் என எல்லா வகைகளிலும் செய்யப்படும் abuse (நல்ல தமிழ் வார்த்தை என்ன?) இப்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது

  5. மிக முக்கியமாக, முக்கால்வாசி பெண்கள் வீட்டில் நடக்கும் வன்முறைகளை சொல்லாமலிருப்பதற்கு காரணம், சொன்னால், வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்கிற பயம்தான். இதை கணக்கில் எடுத்துக் கொண்டு secure housing என்கிற கட்டளையை வைக்கிறது. இதன் மூலம், பெண் தன் புகுந்த வீட்டினைப் பற்றி வழக்கு தொடர்ந்தாலும், தொடர்ந்து அவ்வீட்டிலேயே இருக்கின்ற உரிமையை இதன் மூலம் பெற முடியும்
மேலும் பயமுறுத்தும் கணவன் அல்லது கணவனின் குடும்பத்தினரின் தொல்லைகளிடமிருந்து தப்ப பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரத்தினை நீதிபதிக்கு அளிக்கிறது.

1979 ஐக்கிய நாடுகளின் கூட்டமைவில், எல்லாவிதமான பெண்களுக்கு எதிரான கொடுமைகள் "Elimination of All Forms of Discrimination against Women (CEDAW) பற்றிய விவாதத்தில் இந்தியா கையெழுத்திட்டிருந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணிய அமைப்புகளின் தொடர் போராட்டங்களாலும், தன்னார்வ குழுக்களின் விடாமுயற்சியாலும் இப்போதுதான் சட்டமாக மாறும் சாத்தியத்தினை உள்ளடக்கியுள்ளது.

இந்திய சட்ட தளத்தில் இன்னமும் இது பதியப்படவில்லை. ஆனாலும் ப்ரண்ட்லைன் இதனை விரிவாக எழுதியிருக்கிறது. நான் படித்து தெரிந்துக் கொண்டு மனுபத்ராவிலிருந்து. இது சட்டமாகுமா என்கிற கேள்விக்குறிகள் இருந்தாலும், இதைப் பற்றிய விரிவான விவாதங்கள் அவசியம்.

Aug 7, 2005

கே கிளப்பும், புத்தக வெளியீடும்

சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள் 3 புத்தக வெளீட்டு விழா நியு உட்லண்ட்லில் நடந்தது(5.8.05) நானும், அரவிந்தனும் கிளம்பும்போதே சொன்னேன், இது ஒரு சொதப்பல் இடம், உணவு நன்றாக இருக்காது என்று. இதைப் பற்றி விழாவிற்கு முந்திய நாளே சாருவிடமும் சொன்னேன். ஆனாலும் இது தான் இடமென்று நிச்சயிக்கப்பட்டுவிட்டு, அப்ளிகேஷன்கள் (சாருவின் பாஷையில் அழைப்பிதழ்கள்) கொடுக்கப்பட்டு விட்டதால் வேறு வழியில்லை. போவதற்கு முன்தான் பத்ரியின் திருப்பூர் புத்தக விருது வழங்கும் விழாவினைப் பற்றிய பதிவினை பத்ரியின் அலுவலகத்தில் படித்திருந்தேன். ஏற்கனவே நல்லி செட்டியார், ஏ.நடராஜன் காம்போ மீது எனக்கு பெரிதாய் ஈடுபாடில்லை. அதுவும் நல்லியார் பரவாயில்லை, காலச்சுவட்டிலும், உயிர்மையிலும் ஒரு முழுப்பக்க விளம்பரம் கொடுத்து கொஞ்சம் தொகையும் கொடுத்து, சிறு பத்திரிக்கை எழுத்தாளனின் ஜாக் டேனியல், 8பிஎம், ஸ்மின்ராப் தாகத்தினை ஒரளவுக்கு தீர்த்து வைப்பவர். பத்ரியின் பதிவில் படித்த மிக முக்கியமான காமெடி, நடராஜன் டி.டி தவிர வேறெதையும் பார்ப்பதில்லை என்பது. இதில் தெரிய வருவது இரண்டு விஷயங்கள், ஒன்று. நடராஜன் தனியாக இருக்க வேண்டும், குடும்பத்தினரை விட்டு (செல்வி பார்க்காத தமிழ் சமுதாயம் என்ன பெரிய வெங்காய சமுதாயம். அதுவும் ராதிகாவினை மணக்கோலத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள், என்ன நடக்குமோ, அதற்குள் வெள்ளிக் கிழமை வந்துவிட்டது சேச்சே ) அல்லது அவருக்கான தனியறையில் போன தலைமுறை கிரெளன் டிவியில் டிடி பார்த்துக் கொண்டிருக்கலாம்.

சரி, இது நீளமாக போய்விடும். மேடையில் இருந்த்வர்கள், ஏ.நடராஜன், நாஞ்சில் நாடன், நல்லி செட்டியார், சாரு நிவேதிதா, பிரபஞ்சன், மனுஷ்யபுத்திரன். முதலில் நடராஜன் வரவேற்புரை + வாழ்த்துரை நிகழ்த்தினார். 1957-இல் நடராஜன் கில்லி விளையாடும் போது எப்படி நல்லியார் தாண்டு எடுத்துக் கொடுத்தார், 1973-இல் எப்படி நல்லியாருக்கு சேலை கட்ட நடராஜன் கற்றுக் கொடுத்தார் என்று ஆரம்பித்து நல்லி புராணம் ஒட ஆரம்பித்தது. என் பக்கத்திலிருந்த பத்ரியும் நானும், மற்றும் சுரேஷ் கண்ணனும் கொட்டாவி விடுவதை தவிர மற்ற எல்லாவற்றையும் செய்தோம். ஒருவழியாக நல்லி புராணம் பாடி முடித்து, ஊறுகாயாய் சாருவினைத் தொட்டு முடித்து நடராஜன் அமர்ந்தார். இதற்குள் மேடையிலிருந்த பிரபஞ்சன் சில முறை தன் கொட்டாவியை அடக்க முயற்சித்தார்.

அடுத்து பேச வந்தவர் நல்லியார். பேச ஆரம்பித்தவுடன் பிராமணவாடை. தன்னை வலிந்து மேல் ஜாதி மக்களுடன் இணைத்துக் கொள்ளும் தந்திரமான பேச்சு. தன் புத்தக பழக்கத்தினைப் பற்றியும் தான் சேகரித்து வைத்துள்ள புத்தகத்தினை படித்து முடிப்பதற்கு இறைவனிடம் பெடிஷனையும் போட்டுவிட்டு, கொஞ்சம் ஊறுகாய் சாதம் சாப்பிட்டு விட்டு போனார். தற்புகழ்ச்சி என்பது எல்லாரிடத்திலும் உண்டு. அதுவும் நல்லியார் போன்றவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய சேவைகளைப் பார்த்தால் தமிழ் சிற்றிதழ்கள், இடைநிலை இதழ்கள் அனைவரும் 100/100 நல்லி வாசலில்தான் நிற்கிறார்களோ என்கிற அளவில் தன் தமிழார்வத்தினை எல்லா மேடைகளிலும் வெளிப்படுத்தி தானொரு தமிழ் இலக்கியத்தின் புரவலர் என்கிற தாக்கீதினை தொடர்ந்து கடை பரப்பிக் கொண்டிருப்பதை கண்கூடாக காண முடிகிறது. இன்னமும் தமிழ் புலவர்கள், கலைஞர்கள் இம்மாதிரியான ஆஃப் பாயில் புரவலர்களை அரசன் போல பாவித்து அவர்களுக்கு சால்வைப் போர்த்தி, வாழ்த்துரைகள் வாங்கி, அவர்களின் செக்குக்காக எதிர்ப்பார்த்து நிற்பதின் காரணத்தினை தீவிரமாக ஆராயலாம். வாசகனின் ஆதரவு என்பது வெகுஜன இதழ்களிலிருந்து 10 விழுக்காடு இடைநிலை, சிற்றிதழ்களில் இருந்தால் இம்மாதிரியான நேரவிரயப் பேச்சுக்களை மொத்தமாக தவிர்க்கலாம்.

இப்போது தான் உண்மையான இலக்கிய விழாவாக ஆரம்பித்தது. நாஞ்சில் நாடன் பேசினார். வெளியே அருள் செல்வனிடம் சொல்லியிருந்தேன், நாஞ்சில் நாடன் கொஞ்சம் மென்மையான மனிதர், சாருவோ நேரெதிர், இதில் பெரிதாய் ஒன்றுமிருக்காது, கொஞ்சம் வெண்ணெய் தடவிய கத்தியாய் இருக்குமென்று. ஆழமாக் ஆனால் அனாவசியமாக எதையும் பேசாமல் நறுக்கென பேசினார் நாடன். தன் வாழ்நாளின் பிந்தைய காலத்தில் படிப்பதற்காக சேமித்திருக்கும் புத்த்கங்களின் வரிசையில் கோ.ப.வும் இருக்கும் என்றும், சாருவின் பத்திகளில் இழையோடும் சமூக அக்கறையும், அங்கதமும், சாரு தான், தான் கட்டுரை எழுத தைரியம் கொடுத்தார் என்றும், புனைவுகள் ஒரு safe bet எனவும், புனைவுகளற்ற வெளியில் தான் ஒரு எழுத்தாளனின் உண்மையான முகம் தெரியுமென்றும் எழுத்தாளன் சமூகத்தினை எப்படிப் பார்க்கிறான் என்பதையும் புத்தகத்திலிருந்து சில உதாரணங்களைக் காட்டி விளக்கினார். ஆனாலும், சடாலென ஏர் பிரேக் அடித்தாற்போல், திடுப்பென முடிந்து போனது பேச்சு. நேரமாயிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

கவிதையின் சாயலோடு தொடங்கியது மனுஷ்யபுத்திரனின் பேச்சு. மனிதரிடம் அருமையான தமிழ் சொற்களை கற்றுக் கொள்ளலாம். அவ்வளவு துல்லியம். கவிஞராயிற்றே. சாருவின் எழுத்துகள் அவரின் ஒவ்வாமையை வெளிப்படுத்துகின்றன. இந்த ஒவ்வாமை என்கிற விதயமே சாருவின் எழுத்துகளில் அடிநாதமாக இருக்கின்றன, பல வெளிகளில் சாரு சமூகம், சினிமா, இசை, இலக்கியம், வாழ்க்கையைப் பற்றிய தொடர் ஒவ்வாமையை அவரின் எழுத்துக்கள் வெளிப்படுத்துகின்றன, இணைய உறவுகளின் நிச்சயமின்மைகளும், அபத்தங்களும் பற்றி சாரு தான் தமிழில் முதலில் பதிவு செய்திருக்கிறார் என்று கூறி முடித்தார். மனுஷ்யபுத்திரனை அழைக்கும்போது, அவரை நாவலாசிரியர் என்று சொன்னதாக நினைவு. என்ன நாவலை மனுஷ்யபுத்திரன் எழுதியிருக்கிறார், தெரிந்தவர்கள், தெளிவிக்கலாம்.

"நாம் குடிக்கிறோம், இதில் உங்களுக்கு ஏதேனும் சங்கடங்கள் இருப்பின் நான் குடிக்கிறேன்" என்கிற தொனியில் அட்டகாசமாக ஆரம்பித்தது பிரபஞ்சனின் உரை. மனிதர் பிய்த்து உதறிவிட்டார். ரொம்ப நாட்களுக்கு பிறகு சுவாரசியமான உரை. மனிதர் புல் ஃபார்மில் டோனியின் 148 போல எதிர்பாராமல் இறங்கி கலக்கிவிட்டார். வழக்கமாய் பிரபஞ்சனிடம் எதிர்பார்க்கும் மெல்லியதான வழவழா கொழகொழா இன்றில்லை. இன்றைய சமூகத்தின் நுண்வன்முறையையும் அது சாருவின் எழுத்துக்களில் தெறிக்கும் வன்மையையும் விரிவாக, சங்க இலக்கிய, புத்தக எடுத்துக் காட்டுக்களுடன் விளக்கினார். அவர் உரையில் குழந்தைகள் மீது சூழல் திணிக்கும் வன்முறையினை சொன்ன வாக்கியத்திற்கு அரங்கம் கரவொலித்தது. "வீட்டுப்பாடம் கொடுக்கும் ஆசிரியன் ஒரு நாளும் சொர்க்கத்திற்கு போக மாட்டான்"

பின் வந்தது சாருவின் நன்றியுரை. வழமையாக எனக்கு பேச வராது என்று ஆரம்பித்து, தான் ஏன் யாசிக்கிறேன் என்பதற்கான விளக்கவுரைகள் தந்து எல்லோருக்கும் நன்றி சொன்னார். சாருவின் உரையும் நக்கலும், எள்ளலும் நிறைந்திருந்தது (குடி, சரக்கு, சாராயம் போன்றவைகளைப் பேசக்கூடாது என்று சொன்ன ஏ.நடராஜனுக்காக, ஒவ்வொரு முறையும் பார்க் ஷெராடனை டீக்கடையென்றும், குடியினை டீ என்றும் சொல்லி விழாவினை குடியின் கொண்டாட்டமாக மாற்றிவிட்டார் ) மிக முக்கியமாக சாருவின் உரையில் உறுத்தியது, சாரு சொன்ன இரண்டு விதயங்கள். சமீபத்தில் கம்யுனிஸ்ட் தோழர் நல்லகண்ணுவிற்கு காலச்சுவடு தன் ஆயிரமாவது இதழினை தந்தது (தமிழ் இடைநிலை இதழ்களின் இன்றைய நிலை), உலக மெங்கும் தமிழர்கள் போகுமிடமெங்கும் கோயில் கட்டுகிறார்கள், காவடி எடுக்கிறார்கள் ஆனால் ஒரு புத்தகம் என்று வரும்போது ஒருவரும் கண்டுக் கொள்வதில்லை என்கிற ஆதார புலம்பல். இவையிரண்டையும், தமிழ்ச்சமூகத்தின் மீதான குற்றச்சாட்டாக சாரு பதிவு செய்தார். விழா முடிந்தது.

புத்தக வெளீட்டிற்கு முன்பே முதல் பிரதியினை படித்து விட்டேன். அதனால் புத்தகத்தினை வாங்கவில்லை. கருத்து வேறுபாடுகள் இருப்பினும் சுவாரசியமான நடைக்கும், சமூகம், உலகம், கலகம் என்பது பற்றிய கேள்விகளுக்கும், கொஞ்சம் சுய தேற்றுதல்களும் பிற வழக்கமான சாருவின் எள்ளல் நடைக்கும் இப்புத்தகத்தினை படிக்கலாம். நிகழ்ச்சிக்கு நான், அரவிந்தன், பத்ரி, அருள் செல்வன், சுரேஷ் கண்ணன், ஹரன் பிரசன்னா, முத்துராமன், முகிலன் போயிருந்தோம்.

விழாவினையொட்டிய என் கேள்விகள்

கலகமும், எதிர்வினையாகவும் வலம் வரும் சாரு ஏன் இன்னமும் வழமையான ஒரு இலக்கிய விழாவினை நடத்தினார். மரபுகளை கேள்விக் குறிகளாக்கும், சமூகத்தின் அவலத்தினை கிழிக்கும் சாரு ஏன் வெண்ணையாக உட்லாண்ட்ஸில் விழா நடத்த வேண்டும் ?

சமூக கட்டுப்பாடுகளையும், இளையராஜா தன் சமூகத்திற்கான பங்களிப்பினை தராமல் இருப்பதாக கேள்விக்குள்ளாக்கும் சாரு ஏன் நல்லியாரை 'செட்டியார்' என்று சாதிப்பெயரினால் மட்டும் தொடர்ந்து அழைக்கவேண்டும்.

ஏன் நல்லியாரும், ஏ.நடராஜனும் அவர்களை தவிர எந்த விழாவிற்குப் போனாலும், வேறு எவரையும் பற்றிப் பேசுவதில்லை.

நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய திவ்யகஸ்தூரி (சன் தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சி தொகுப்பாளர்) இன்னமும் பிறர் தவிர அரங்கமெங்கும் வெறும் ஆண் கூட்டம். சாருவே கோ.ப 2-இல் சொன்னதுப் போல, இந்த இலக்கிய கூட்டமும் கே கிளப் போலானது. யூ டூ சாரு!

சாருவின் இணையத்தளம் | புத்தகம் வாங்க

Aug 3, 2005

தூக்கியாச்சு!!

இனி என் பதிவுகளில் நட்சத்திர பதிவுக்கான குறிகள் இருக்காது. எனவே என்னை தெரிந்தவர்களுக்கும், என்னோடு வலைப்பதிவிலும், தனிப்பட்ட வாழ்விலும் நெருங்கி பழகுபவர்களுக்கும் விடுதலை. இனி நீங்கள் பழகிய பாவத்துக்காகவும், நான் எழுதிய குற்றத்துக்காகவும், மனதுக்குள் வைதுக் கொண்டே நட்சத்திரத்தினை சொடுக்கத் தேவையில்லை. கொஞ்ச நாளாகவே யோசித்துக் கொண்டிருந்தேன். இது தேவையில்லாத ஈகோ கிளர்ச்சியை உண்டு செய்கிறதோ என்கிற சந்தேகமிருந்தது. சமீபத்தில் 2-3 வாரங்களாக பார்த்த வாசகர் பரிந்துரையின் மூலம் முன்னுக்கு வந்த நட்சத்திரப் பதிவுகள் இதை உறுதி செய்தன. எனவே, சுத்தமாக வழித்துவிடலாம் என்று எண்ணி மொத்தமாக தூக்கியாச்சு. இதனால், நான் பதிவதில், எழுதுவதில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை. "நான்" எழுதினேன், இவ்வளவு பேர் படிக்கிறார்கள் என்கிற கர்வத்தின் சாயல் என்மேல் விழுமுன் இதனை எடுப்பது நல்லதாக தெரிகிறது. மிகை நாடகத்தனமையும், அபத்தமும் சூழ்ந்த வெற்று வெளியில் அரசனாய் இருப்பதைப் போலிருக்கிறது என்று இலக்கியத்தரமாகவும் ஜல்லியடிக்கலாம். மொத்தத்தில் இப்படி குத்து குத்தென்று குத்தி தேர்ந்தெடுக்கும் விதத்தில் என் நம்பிக்கைப் போய்விட்டது.ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் ஜனநாயகத்தின் இலட்சணங்கள் பற்றி நம்மை விட யாருக்கு நன்றாக தெரியும்?

பிரைவசி பற்றிய பிரச்சனையில் ரவி சீனிவாஸூம், மாண்டீயும் மாற்றுப் பார்வைப் பார்த்ததுப் போல, நட்சத்திர குறீயிடுகளையும், அதன் விளைவுகளையும் கொஞ்சம் மறுபரீசிலனை செய்ததின் விளைவு தானிது. இதுப் போக, என் பதிவில் இன்னமும் நெட்ஸ்டாட் கவுண்டர் இருப்பதாலோ என்னமோ மாண்டீயினை மற்ற பதிவுகளில் பார்ப்பதுப் போல இங்கேப் பார்க்க முடிவதில்லை ;-) இன்னும் கொஞ்ச நாளில் அதுவும் போரடித்தால் தூக்கப்படும். மற்றபடி சால்னா தூக்கலாக பதிவுகள் வரும். இது நாள் வரை என் மீதுள்ள அன்பினாலும், கோவத்தினாலும் குத்தோ குத்தென்று குத்திய உள்ளங்களுக்கு நன்றிகள்.

தமிழ்மணம் குழுவினரின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். எவருடைய முயற்சியையும், உழைப்பினையும் இதன் மூலம் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனாலும் இது என் எண்ணம். இனி back to basics. நட்சத்திர குறீயிடுகள், தலையீடுகள் இல்லாத அக்மார்க் ரகளை மட்டுமே.

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]