Aug 7, 2005

கே கிளப்பும், புத்தக வெளியீடும்

சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள் 3 புத்தக வெளீட்டு விழா நியு உட்லண்ட்லில் நடந்தது(5.8.05) நானும், அரவிந்தனும் கிளம்பும்போதே சொன்னேன், இது ஒரு சொதப்பல் இடம், உணவு நன்றாக இருக்காது என்று. இதைப் பற்றி விழாவிற்கு முந்திய நாளே சாருவிடமும் சொன்னேன். ஆனாலும் இது தான் இடமென்று நிச்சயிக்கப்பட்டுவிட்டு, அப்ளிகேஷன்கள் (சாருவின் பாஷையில் அழைப்பிதழ்கள்) கொடுக்கப்பட்டு விட்டதால் வேறு வழியில்லை. போவதற்கு முன்தான் பத்ரியின் திருப்பூர் புத்தக விருது வழங்கும் விழாவினைப் பற்றிய பதிவினை பத்ரியின் அலுவலகத்தில் படித்திருந்தேன். ஏற்கனவே நல்லி செட்டியார், ஏ.நடராஜன் காம்போ மீது எனக்கு பெரிதாய் ஈடுபாடில்லை. அதுவும் நல்லியார் பரவாயில்லை, காலச்சுவட்டிலும், உயிர்மையிலும் ஒரு முழுப்பக்க விளம்பரம் கொடுத்து கொஞ்சம் தொகையும் கொடுத்து, சிறு பத்திரிக்கை எழுத்தாளனின் ஜாக் டேனியல், 8பிஎம், ஸ்மின்ராப் தாகத்தினை ஒரளவுக்கு தீர்த்து வைப்பவர். பத்ரியின் பதிவில் படித்த மிக முக்கியமான காமெடி, நடராஜன் டி.டி தவிர வேறெதையும் பார்ப்பதில்லை என்பது. இதில் தெரிய வருவது இரண்டு விஷயங்கள், ஒன்று. நடராஜன் தனியாக இருக்க வேண்டும், குடும்பத்தினரை விட்டு (செல்வி பார்க்காத தமிழ் சமுதாயம் என்ன பெரிய வெங்காய சமுதாயம். அதுவும் ராதிகாவினை மணக்கோலத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள், என்ன நடக்குமோ, அதற்குள் வெள்ளிக் கிழமை வந்துவிட்டது சேச்சே ) அல்லது அவருக்கான தனியறையில் போன தலைமுறை கிரெளன் டிவியில் டிடி பார்த்துக் கொண்டிருக்கலாம்.

சரி, இது நீளமாக போய்விடும். மேடையில் இருந்த்வர்கள், ஏ.நடராஜன், நாஞ்சில் நாடன், நல்லி செட்டியார், சாரு நிவேதிதா, பிரபஞ்சன், மனுஷ்யபுத்திரன். முதலில் நடராஜன் வரவேற்புரை + வாழ்த்துரை நிகழ்த்தினார். 1957-இல் நடராஜன் கில்லி விளையாடும் போது எப்படி நல்லியார் தாண்டு எடுத்துக் கொடுத்தார், 1973-இல் எப்படி நல்லியாருக்கு சேலை கட்ட நடராஜன் கற்றுக் கொடுத்தார் என்று ஆரம்பித்து நல்லி புராணம் ஒட ஆரம்பித்தது. என் பக்கத்திலிருந்த பத்ரியும் நானும், மற்றும் சுரேஷ் கண்ணனும் கொட்டாவி விடுவதை தவிர மற்ற எல்லாவற்றையும் செய்தோம். ஒருவழியாக நல்லி புராணம் பாடி முடித்து, ஊறுகாயாய் சாருவினைத் தொட்டு முடித்து நடராஜன் அமர்ந்தார். இதற்குள் மேடையிலிருந்த பிரபஞ்சன் சில முறை தன் கொட்டாவியை அடக்க முயற்சித்தார்.

அடுத்து பேச வந்தவர் நல்லியார். பேச ஆரம்பித்தவுடன் பிராமணவாடை. தன்னை வலிந்து மேல் ஜாதி மக்களுடன் இணைத்துக் கொள்ளும் தந்திரமான பேச்சு. தன் புத்தக பழக்கத்தினைப் பற்றியும் தான் சேகரித்து வைத்துள்ள புத்தகத்தினை படித்து முடிப்பதற்கு இறைவனிடம் பெடிஷனையும் போட்டுவிட்டு, கொஞ்சம் ஊறுகாய் சாதம் சாப்பிட்டு விட்டு போனார். தற்புகழ்ச்சி என்பது எல்லாரிடத்திலும் உண்டு. அதுவும் நல்லியார் போன்றவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய சேவைகளைப் பார்த்தால் தமிழ் சிற்றிதழ்கள், இடைநிலை இதழ்கள் அனைவரும் 100/100 நல்லி வாசலில்தான் நிற்கிறார்களோ என்கிற அளவில் தன் தமிழார்வத்தினை எல்லா மேடைகளிலும் வெளிப்படுத்தி தானொரு தமிழ் இலக்கியத்தின் புரவலர் என்கிற தாக்கீதினை தொடர்ந்து கடை பரப்பிக் கொண்டிருப்பதை கண்கூடாக காண முடிகிறது. இன்னமும் தமிழ் புலவர்கள், கலைஞர்கள் இம்மாதிரியான ஆஃப் பாயில் புரவலர்களை அரசன் போல பாவித்து அவர்களுக்கு சால்வைப் போர்த்தி, வாழ்த்துரைகள் வாங்கி, அவர்களின் செக்குக்காக எதிர்ப்பார்த்து நிற்பதின் காரணத்தினை தீவிரமாக ஆராயலாம். வாசகனின் ஆதரவு என்பது வெகுஜன இதழ்களிலிருந்து 10 விழுக்காடு இடைநிலை, சிற்றிதழ்களில் இருந்தால் இம்மாதிரியான நேரவிரயப் பேச்சுக்களை மொத்தமாக தவிர்க்கலாம்.

இப்போது தான் உண்மையான இலக்கிய விழாவாக ஆரம்பித்தது. நாஞ்சில் நாடன் பேசினார். வெளியே அருள் செல்வனிடம் சொல்லியிருந்தேன், நாஞ்சில் நாடன் கொஞ்சம் மென்மையான மனிதர், சாருவோ நேரெதிர், இதில் பெரிதாய் ஒன்றுமிருக்காது, கொஞ்சம் வெண்ணெய் தடவிய கத்தியாய் இருக்குமென்று. ஆழமாக் ஆனால் அனாவசியமாக எதையும் பேசாமல் நறுக்கென பேசினார் நாடன். தன் வாழ்நாளின் பிந்தைய காலத்தில் படிப்பதற்காக சேமித்திருக்கும் புத்த்கங்களின் வரிசையில் கோ.ப.வும் இருக்கும் என்றும், சாருவின் பத்திகளில் இழையோடும் சமூக அக்கறையும், அங்கதமும், சாரு தான், தான் கட்டுரை எழுத தைரியம் கொடுத்தார் என்றும், புனைவுகள் ஒரு safe bet எனவும், புனைவுகளற்ற வெளியில் தான் ஒரு எழுத்தாளனின் உண்மையான முகம் தெரியுமென்றும் எழுத்தாளன் சமூகத்தினை எப்படிப் பார்க்கிறான் என்பதையும் புத்தகத்திலிருந்து சில உதாரணங்களைக் காட்டி விளக்கினார். ஆனாலும், சடாலென ஏர் பிரேக் அடித்தாற்போல், திடுப்பென முடிந்து போனது பேச்சு. நேரமாயிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

கவிதையின் சாயலோடு தொடங்கியது மனுஷ்யபுத்திரனின் பேச்சு. மனிதரிடம் அருமையான தமிழ் சொற்களை கற்றுக் கொள்ளலாம். அவ்வளவு துல்லியம். கவிஞராயிற்றே. சாருவின் எழுத்துகள் அவரின் ஒவ்வாமையை வெளிப்படுத்துகின்றன. இந்த ஒவ்வாமை என்கிற விதயமே சாருவின் எழுத்துகளில் அடிநாதமாக இருக்கின்றன, பல வெளிகளில் சாரு சமூகம், சினிமா, இசை, இலக்கியம், வாழ்க்கையைப் பற்றிய தொடர் ஒவ்வாமையை அவரின் எழுத்துக்கள் வெளிப்படுத்துகின்றன, இணைய உறவுகளின் நிச்சயமின்மைகளும், அபத்தங்களும் பற்றி சாரு தான் தமிழில் முதலில் பதிவு செய்திருக்கிறார் என்று கூறி முடித்தார். மனுஷ்யபுத்திரனை அழைக்கும்போது, அவரை நாவலாசிரியர் என்று சொன்னதாக நினைவு. என்ன நாவலை மனுஷ்யபுத்திரன் எழுதியிருக்கிறார், தெரிந்தவர்கள், தெளிவிக்கலாம்.

"நாம் குடிக்கிறோம், இதில் உங்களுக்கு ஏதேனும் சங்கடங்கள் இருப்பின் நான் குடிக்கிறேன்" என்கிற தொனியில் அட்டகாசமாக ஆரம்பித்தது பிரபஞ்சனின் உரை. மனிதர் பிய்த்து உதறிவிட்டார். ரொம்ப நாட்களுக்கு பிறகு சுவாரசியமான உரை. மனிதர் புல் ஃபார்மில் டோனியின் 148 போல எதிர்பாராமல் இறங்கி கலக்கிவிட்டார். வழக்கமாய் பிரபஞ்சனிடம் எதிர்பார்க்கும் மெல்லியதான வழவழா கொழகொழா இன்றில்லை. இன்றைய சமூகத்தின் நுண்வன்முறையையும் அது சாருவின் எழுத்துக்களில் தெறிக்கும் வன்மையையும் விரிவாக, சங்க இலக்கிய, புத்தக எடுத்துக் காட்டுக்களுடன் விளக்கினார். அவர் உரையில் குழந்தைகள் மீது சூழல் திணிக்கும் வன்முறையினை சொன்ன வாக்கியத்திற்கு அரங்கம் கரவொலித்தது. "வீட்டுப்பாடம் கொடுக்கும் ஆசிரியன் ஒரு நாளும் சொர்க்கத்திற்கு போக மாட்டான்"

பின் வந்தது சாருவின் நன்றியுரை. வழமையாக எனக்கு பேச வராது என்று ஆரம்பித்து, தான் ஏன் யாசிக்கிறேன் என்பதற்கான விளக்கவுரைகள் தந்து எல்லோருக்கும் நன்றி சொன்னார். சாருவின் உரையும் நக்கலும், எள்ளலும் நிறைந்திருந்தது (குடி, சரக்கு, சாராயம் போன்றவைகளைப் பேசக்கூடாது என்று சொன்ன ஏ.நடராஜனுக்காக, ஒவ்வொரு முறையும் பார்க் ஷெராடனை டீக்கடையென்றும், குடியினை டீ என்றும் சொல்லி விழாவினை குடியின் கொண்டாட்டமாக மாற்றிவிட்டார் ) மிக முக்கியமாக சாருவின் உரையில் உறுத்தியது, சாரு சொன்ன இரண்டு விதயங்கள். சமீபத்தில் கம்யுனிஸ்ட் தோழர் நல்லகண்ணுவிற்கு காலச்சுவடு தன் ஆயிரமாவது இதழினை தந்தது (தமிழ் இடைநிலை இதழ்களின் இன்றைய நிலை), உலக மெங்கும் தமிழர்கள் போகுமிடமெங்கும் கோயில் கட்டுகிறார்கள், காவடி எடுக்கிறார்கள் ஆனால் ஒரு புத்தகம் என்று வரும்போது ஒருவரும் கண்டுக் கொள்வதில்லை என்கிற ஆதார புலம்பல். இவையிரண்டையும், தமிழ்ச்சமூகத்தின் மீதான குற்றச்சாட்டாக சாரு பதிவு செய்தார். விழா முடிந்தது.

புத்தக வெளீட்டிற்கு முன்பே முதல் பிரதியினை படித்து விட்டேன். அதனால் புத்தகத்தினை வாங்கவில்லை. கருத்து வேறுபாடுகள் இருப்பினும் சுவாரசியமான நடைக்கும், சமூகம், உலகம், கலகம் என்பது பற்றிய கேள்விகளுக்கும், கொஞ்சம் சுய தேற்றுதல்களும் பிற வழக்கமான சாருவின் எள்ளல் நடைக்கும் இப்புத்தகத்தினை படிக்கலாம். நிகழ்ச்சிக்கு நான், அரவிந்தன், பத்ரி, அருள் செல்வன், சுரேஷ் கண்ணன், ஹரன் பிரசன்னா, முத்துராமன், முகிலன் போயிருந்தோம்.

விழாவினையொட்டிய என் கேள்விகள்

கலகமும், எதிர்வினையாகவும் வலம் வரும் சாரு ஏன் இன்னமும் வழமையான ஒரு இலக்கிய விழாவினை நடத்தினார். மரபுகளை கேள்விக் குறிகளாக்கும், சமூகத்தின் அவலத்தினை கிழிக்கும் சாரு ஏன் வெண்ணையாக உட்லாண்ட்ஸில் விழா நடத்த வேண்டும் ?

சமூக கட்டுப்பாடுகளையும், இளையராஜா தன் சமூகத்திற்கான பங்களிப்பினை தராமல் இருப்பதாக கேள்விக்குள்ளாக்கும் சாரு ஏன் நல்லியாரை 'செட்டியார்' என்று சாதிப்பெயரினால் மட்டும் தொடர்ந்து அழைக்கவேண்டும்.

ஏன் நல்லியாரும், ஏ.நடராஜனும் அவர்களை தவிர எந்த விழாவிற்குப் போனாலும், வேறு எவரையும் பற்றிப் பேசுவதில்லை.

நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய திவ்யகஸ்தூரி (சன் தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சி தொகுப்பாளர்) இன்னமும் பிறர் தவிர அரங்கமெங்கும் வெறும் ஆண் கூட்டம். சாருவே கோ.ப 2-இல் சொன்னதுப் போல, இந்த இலக்கிய கூட்டமும் கே கிளப் போலானது. யூ டூ சாரு!

சாருவின் இணையத்தளம் | புத்தகம் வாங்க

Comments:
// வாசகனின் ஆதரவு என்பது வெகுஜன இதழ்களிலிருந்து 10 விழுக்காடு இடைநிலை, சிற்றிதழ்களில் இருந்தால் இம்மாதிரியான நேரவிரயப் பேச்சுக்களை மொத்தமாக தவிர்க்கலாம். //

இதற்கு காரணம் வாசகன் மட்டுமா என்பதை சிற்றிதழ்வாதிகள் யோசிக்க வேண்டும்...
 
நல்ல பதிவு நாரயணன்
உங்களது கேள்விகளும் அருமை.
சாரு உங்கள் நண்பர்தானே, ஏன் அவரிடமே கேட்டு இருக்கலாமே?
நன்றி
மயிலாடுதுறை சிவா...
 
//சாருவின் பத்திகளில் இழையோடும் சமூக அக்கறையும்

இதுக்கு கொஞ்சமாய் சிரிச்சுட்டேன்... தப்போ?!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]