Aug 11, 2005

அமீர்கான் என்றொரு நடிகன்

ஹிந்தி சினிமா இந்தியாவின் அடையாளம். உலகமெங்கும் இந்திய சினிமா என்று சொன்னால், முதலில் ஹிந்தி சினிமா தான் நினைவுக்கு வரும். விட்டு விட்டு ஹிந்திப்படம் பார்ப்பவன் நான். சமீபகாலங்களில் வந்த சதைப்படங்கள் தவிர்த்து பிற ஹிந்திப் படங்களை அவ்வப்போது பார்த்திருக்கிறேன். பெரிதாய் ஹிந்தி சினிமா என்னில் பெரிதாய் தாக்கம் ஏற்படுத்தாமல் இருப்பினும், சில குறிப்பிட்ட ஆளுமைகள் சலனப்படுத்தும். அது கான்களின் தேசம். சிவசேனா வலுவாய் இந்துத்துவம் பேசும் மும்பையின் முதன்மை நாயகர்கள் இஸ்லாமியர்களாக இருக்கும் விசித்திரம் ஹிந்தி சினிமாவில் தான் நடக்கும். ஹிந்தி சினிமாவில் மூன்று ஹீரோக்கள், நான்கு ஹீரோயின்கள் என்பது சர்வ சாதாரணம். தென்னிந்திய சினிமாக்களில் இருக்கும் ஹீரோ ஈகோ, ஹிந்தி சினிமாவில் கிடையாது. இதனால், பெரிதாக ஹிந்தி சினிமாவின் கதைக்களன் பற்றிய மரியாதை கிடையாது. ஏறக்குறைய ஒரே மாதிரியான படங்கள்.

விதிவிலக்காக சில படங்கள். சில மனிதர்கள். அந்த சில மனிதர்களில் மிக முக்கியமான மனிதன் ஒரு நடிகன். அமீர் கான். நவீன ஹிந்தி சினிமாவின் மிக முக்கியமான அங்கம். லகான் போன்ற ஒரு படத்தினை நீங்கள் தந்திருந்தால், உங்களின் ரேட் உச்சத்திற்கு போய், உடனே உங்களை தெய்வமாய் பார்க்கும் கூட்டத்தில், லகானுக்கு பிறகு ஒரே படத்திற்காக நான்கு வருடங்கள் உழைத்திருக்கிறார். அமீர் கானின் ஆரம்பகால சாக்லேட் பாய் படங்களை தவிர்த்து, என்னளவில் அவரின் திருப்புமுனையாக ரங்கீலாவினை சொல்லலாம். ரங்கீலா அமீர்கான், ராம் கோபால் வர்மா, ஊர்மிளா மடோன்கர் என்கிற இன்றைய ஹிந்தி சினிமாவின் தவிர்க்க முடியாத அம்சங்களை உருவாக்கிய படம். ஏ.ஆர். ரஹ்மானை இந்திய அளவில் பேசவைத்து, அங்கிருந்து உலக அரங்கிற்கு செல்ல அடியெடுத்து வைத்த படம். ரங்கீலா பற்றி தனியாக உட்லாண்ட்ஸ் டிரைவ்-இன்னில் பேசலாம். நான் சொல்ல வந்தது அமீர்கான் என்கிற நடிகனைப் பற்றி.

சாதாரணமாகவே நடிக,நடிகைகள் இந்தியாவில் முழுமையான அரைவேக்காடுகள். ஆனாலும், பத்திரிகைகள் அவர்களில்லாம்ல் ஜீவித்தல் இயலாது. இதில் அறிவு ஜீவி, சமூகப் பொறுப்புள்ள, அக்கறையுள்ள, தொழில் பக்தியுள்ள கலைஞர்கள் மிகக் குறைவு. தமிழில் கமல், நாசர், பிரகாஷ்ராஜ் என்று ஒரு பட்டியல் தரலாம். அதுப் போல ஒரு புத்திசாலியான, தொழிலை வெறித்தனமாக பர்பெக்சனோடு பார்க்கிற நடிகன். நான்கு வருடங்கள் ஒரே படத்திற்காக தன்னை மாற்றிக் கொண்டு, படத்தோடு வாழ்ந்து, ஒரு படத்தயாரிப்பின் சகல கூறுகளிலும் பங்குப் பெற்று அந்தக் கதையோடு வாழ்ந்து, சாப்பிட்டு, தூங்கி ஒரு யோகியின் தவம் போல் அதனை பார்ப்பவர். சொன்னால் ஆச்சர்யமாயிருக்கும், லகானுக்கு பிறகு அமீர்கான் நடித்த ஒரே படம் தில் சாக்தா ஹேய் மட்டுமே. அதிலிருந்து நான்கு வருடங்கள் ஒரே படத்தோடு உண்டு, உறங்கிக் கொண்டிருக்கிறார். கோடிகள் சங்கமிக்கும் ஹிந்தி சினிமாவில் எப்போது காசு சம்பாதிக்கலாம், பேஜ் 3யில் இடம் பெறலாம், எந்நேரமும் சமூக வெளியில், ஊடகங்களில் இருக்கலாம் என்று நினைப்பவர்களின் மத்தியில், தான் செய்யும் வேலையின் ஒவ்வொரு சிறு கூறுகளும் துல்லியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவனை சில சமயங்களில் பைத்தியக்காரன் என்றும் சொல்லலாம். லகான் பிரிட்டிஷ் காலத்திய கிரிக்கெட் என்றால், இந்தப்படமும் பிரிட்டிஷ் காலத்திய படம்.

மங்கள் பாண்டே - தி ரெய்ஸிங். கேத்தன் மேதாவின் தயாரிப்பில் நான்கு வருடங்கள் மங்களாக வாழ்ந்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் விளையாடியிருக்கிறார். சிப்பாய்களின் கலகம் என்று பிரிட்டிஷ்காரர்களாலும், முதலாம் இந்திய போர் (1857) என்று இந்திய வரலாற்று ஆசிரியர்களாலும் சொல்லப்படும் நிகழ்வின் முக்கியமான காரணகர்த்தாவான மங்கள் பாண்டே என்கிற சிப்பாயினைப் பற்றிய கதை. தோட்டாக்களில் பசு மற்றும் பன்றியின் இறைச்சியினை தடவி பிரிட்டிஷ் அரசாங்கம், இந்தியாவினை துண்டாட முனைந்ததின் தீவிரத்தில் பொங்கியெழுந்து செத்து மடிந்த மனிதர்களின் பின்னாலுள்ள சரித்திரம்.

நாளை உலகமெங்கும் ரிலிஸாகிறது. ஒரு நடிகன் ஒரு கதாபாத்திரத்திற்காக நான்கு வருடங்கள் வாழ்ந்திருக்கிறான். ஹிந்தி சினிமாவின் புத்திஜீவி நடிகர்களில் அமீர்கானும் ஒருவர். முந்தாநாள் வந்த Maximum City வரை படித்து அதைப் பற்றி விவாதிக்கும் திறனுள்ள சொற்ப கலைஞர்களுள் ஒருவர். தெஹல்காவின் பேட்டியில் அமீர்கானின் சமூகம் பற்றிய பார்வைகளும், கோடிகளில் சம்பாதித்தும் இன்னமும் சொந்தமாய் ஒரு ஜிகினா செல்போன் கூட இல்லாமல் இருக்கும் விந்தையை என்னவென்று சொல்வது. இந்த படம் ஒடுமா, ஒடாதா என்கிற பிரச்சனையை கொஞ்சம் ஒத்திப் போட்டுவிட்டு, நான்கு ஆண்டுகள் உழைத்து எடுத்திருக்கிறார்கள் என்பதற்காகவாவது ஒரு முறை பார்க்க வேண்டும்.

பார்க்க - அமீர்கான் தெஹல்கா பேட்டி | மங்கள் பாண்டே - தி ரைசிங்

Comments:
Narain, இந்த மாதிரி ஓவரா ·பிலிம் காட்டுற படங்க எல்லாம் என்ன ஆகும்னு உங்களுக்குத் தெரியும் தானே? :-)... பாப்போம்...என்ன ஆகுதுன்னு....:-)

//பார்க்க - அமீர்கான் தெஹல்கா பேட்டி | //......

This story is available to subscribers only. Please Subscribe now.

தனிமடல்ல அனுப்புங்க...
 
Narain,
Actually i rate Dil Chahthaa hai as his best movie so far. Well, Laggan has good production stuffs. But DCH has a touch of core truth.
Esp the portrayal of young and old relationship.
 
அமீர்... ஆமிர்.... (மிகுந்த எதிர்பார்ப்புகளுடன்) நாளைக்குப் படம் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

குமுதத்தில் இருந்து (இம்மடிசெட்டி கோடீஸ்வரராவ்) :

"கிட்டத்தட்ட 100 கோடி செலவுடன் ‘மங்கள் பாண்டே_தி ரைசிங்’ இந்தியிலும் ஆங்கிலத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளது. கேதன் மேத்தா இயக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ராணிமுகர்ஜி, அமிஷா பட்டேல், டோபி ஸ்டீஃபென்ஸ் என்று திறமையான நடிகர், நடிகைகளின் பட்டாளம்.

17 வருடங்களாக மங்கள் பாண்டே கதையை உருவாக்கிக் கொண்டிருந்த கேதன் மேத்தா, முதலில் அமிதாப்பச்சனை வைத்துத்தான் எடுக்க நினைத்தாராம். கடைசியில் லகானைப் பார்த்தபின் மனம் மாறி அமீர்கான் பக்கம் சாய்ந்துவிட்டார்.

கலைஞர்களின் அர்ப்பணிப்பு, இசை, செட்டிங் என்று எல்லாமே பிரமாதமாக இருந்தாலும் சினிமா பண்டிதர்கள், பெரும்பாலான இந்தி சரித்திரப் படங்கள் வெற்றி பெறவில்லை என்று புள்ளி விபரங்களை சொல்கின்றனர். (உதாரணம் ஷாருக்கான் நடித்த அசோகா)

அதேநேரத்தில், ‘‘மங்கள் பாண்டே அப்படி ஒன்றும் பெரிய சுதந்திர போர் வீரன் அல்ல. போதைப்பொருளான அபினுக்கு அடிமையானவன். 1857 மார்ச் மாதம் 29_ம் தேதி போதையில் இருந்தபோதுதான் வெள்ளைய அதிகாரிகளைச் சுட்டான். இதை அவனே விசாரணையின்போது தெரிவித்திருக்கிறான்’’ என்கிறார்கள் ஒரு சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்.

ஆனால், மும்பை சினிமாவின் மூட நம்பிக்கைகள், வரலாற்று ஆசிரியர்களின் எதிர்ப்பு எல்லாவற்றையும் கடந்து தன் படம் ஜெயிக்கும். ‘லகான்’ தவறவிட்ட பரிசை, ‘மங்கள் பாண்டே’ வாங்குவான் என நம்புகிறார் அமீர்கான். அவரது நம்பிக்கை ஜெயித்தால் நமக்கும் சந்தோஷம்தான். "
 
நல்ல பதிவு நராயணன்,
படம் வெற்றி அடைந்தால மற்ற இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுக்கு இதுப் போல
படம் பண்ண வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். பார்க்கலாம் என்னவென்று?
நன்றி
மயிலாடுதுறை சிவா...
 
//இந்த மாதிரி ஓவரா ·பிலிம் காட்டுற படங்க எல்லாம் என்ன ஆகும்னு உங்களுக்குத் தெரியும் தானே//

பிரகாஷ் இந்த படம் பிலிமா, ஜிகினாவா இல்லை நல்ல படமா என்பது நாளைக்கு தெரியும். ஆனால், 4 வருடங்கள் ஒரு நடிகன் ஒரு படத்திற்காக தன் மற்ற வேலைகளை புறந்தள்ளிவிட்டு காத்திருக்கிறான் என்பது இந்திய சினிமாவில் நடக்காதா விஷயம். தலைவா, போன வார தெஹல்கா வாங்கிப் படிங்க ;-) அது சந்தாதாரரா ஆகறதை விட விலை கம்மி ;-)))))

இங்கே நாம் பார்க்க வேண்டியது, அமீர்கானின் அர்ப்பணிப்பும், தொழில் மீதான அசாதாரணமான வெறியும். கமலுக்கு மருத நாயகத்தின் மீதிருந்த வெறிப் போல. இதைதாண்டி, அமீரின் மற்றொரு அறிவுஜீவி உலகம், பேஜ் 3க்கு அலையும் மும்பை ஹீரோ, ஹீரோயின்களிடமிருந்து அவரை தனிமைப்படுத்தி காட்டுகிறது.

இந்த படம் தேறுமா/றாதா என்பது இன்னொரு விவாதம். அது வேறு. ஆனால், ஒரு நடிகனாய் அமீர்கான் சிரமமெடுத்து உழைத்திருப்பதை முக்கியமாய் அதுவும் ஹிந்தி சினிமாவினை முன்வைத்து பார்த்தல் வேண்டும்.
 
பிரகாஷ்: வாராவாரம் தெஹல்கா வாங்கிப் படிச்சுட்டு ஆஃபீஸ்ல வச்சிருக்கேன். அந்தப்பக்கம் வந்தா கேட்டு வாங்கிப் பாருங்க....
 
I agree with ur views on Aamir. But I dont think Rising was in making for four years. Agreed Last Aamir's film released 4 years back. But he spent a whole year in lobbying Lagaan for oscar. After that he waited for a good story, Rising came only later point of time. Totally he might have spent maximum of 2 years while making Rising. your stressing too much on 4 years(7 times - yes i counted it) which is not true.
 
நாலு வருஷம், ரெண்டு வருஷம், ஏழுதடவைன்னு எல்லாம் படிச்சுட்டு இந்த ஆமிர்கான் படம் பாக்கற ஆசையை உண்டாக்கிட்டீங்க. கட்டாயம் பாத்துறணும்.

துளசி.
 
// நாலு வருஷம், ரெண்டு வருஷம், ஏழுதடவைன்னு எல்லாம் படிச்சுட்டு இந்த ஆமிர்கான் படம் பாக்கற ஆசையை உண்டாக்கிட்டீங்க //

இல்லைன்னா மட்டும் பாக்காம இருக்கற மாதிரி... ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் குசும்பு துளசியக்கோவ்...
 
http://www.indiafm.com/movies/review/7350/index.html

>>>>>>>.
On the whole, MANGAL PANDEY is a film of epic proportions. A genuine attempt at bringing alive a great hero on celluloid, the film will only bring pride and prestige in the domestic market as well as on the international platform. At the box-office, with the distributors flooding the market with extensive prints and multiplexes performing 12-15-18 shows a day, the first 4-day weekend [Monday, 15th August is also a holiday] will witness historic collections, with the distributors recovering a major part of their investment from the proceeds of the first week itself. Overall, the merits coupled with its business will undoubtedly make MANGAL PANDEY a big grosser.

The film deserves to be tax-exempted in every state of India, so that the heroic fight of a great freedom fighter has an extensive, wider reach.


>>>>>>>>
 
மங்கள் பாண்டேயின் தற்போதைய வாரிசுகளைக் கண்டு பேட்டி எடுக்கும் எண்ணம் யாருக்குமே வரவில்லையா?
அவர்களைக் கண்டு பிடிப்பது அவ்வளவு கஷ்டமா? இப்போதுதானே சமீபத்தில் 1857-ல் சிப்பாய் கலகம் நடந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 
நாராயண்:

இன்னொரு விஷயம். சமீப காலங்களில், ஒவ்வொரு இந்திப் படத்திற்கும் அதீதமாக ஹைப் செய்கிறார்கள். ஒவ்வொரு வியாழனும் அல்லது வெள்ளியும், எல்லா இந்தி டிவி சானல்களிலும், இந்தப் படங்கள் பற்றிய செய்திகள், நடிக/நடிகையரின், டைரக்டரின் பேட்டி, தற்போது இணையத்திலும் தனி போர்டல் ( ) என ஒரே விளம்பர மயம் என்பதால் - கல்லூரி மற்றும் அலுவலக வட்டாரங்களில், நீங்கள் இந்தப் படத்தை முதல் 2 அல்லது 3 தினங்களில் பார்க்கவில்லையென்றால் ஏதோ ஒரு ஜந்துவைப் போல் பார்ப்பார்கள். பெரும்பாலும் இப்படங்கள் - வெளிநாட்டு வாழ் இந்தியர்களையும் மல்டிப்ளெக்ஸ் வருவோரையும் குறிவைத்தே விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.

தமிழிலும் ரஜினி, கமல், ஷங்கர், மணிரத்னம் போன்றோர் படங்கள் இதே மாதிரி ஹைப் செய்யப்படுகிறது. ஆனால் இந்தியில் மிக அதிகமாகத் தோன்றுகிறது.

- அலெக்ஸ்
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]