Aug 28, 2005

ஒற்றை தராசும், ஒரிரு வார்த்தைகளும்

தராசுகள் பற்றிய என்னுடைய கருத்தினை நீங்கள் அறிந்துக் கொள்ள பெயரிலியின் பதிவினைப் பாருங்கள். என் பிரச்சனை தராசுகள் எப்போதும் ஒரே மாதிரியாய் இருக்க முடியாது என்பதுதான். இரும்பு தராசுகள், தண்டவாளங்களைப் போல வெயில் காலங்களில் விரியக் கூடியது என்று ஆறாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் படித்திருக்கிறேன். காலமாற்றத்தில் எல்லாம் மாறக்கூடியது. மாற்றம் என்பது மட்டுமே நிரந்தரமானது என்றொரு நிரந்தரமான மாறுதல் பற்றிய கிழமொழி இருக்கிறது. திண்ணையில் மதிவண்ணனின் நெரிந்துப் பற்றி லதா கிருஷ்ணன் எழுதியதைப் பற்றியதற்கு ஒரு காட்டமான கடிந்துரையினை ஜெயபாரதன் எழுதியிருக்கிறார். நாகூர் ரூமி, சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதையினைப் பற்றிய விமர்சனத்தினை அவருடைய பதிவில் எழுதியிருக்கிறார். இவையிரண்டின் ஆதார சுருதியும் ஒரளவுக்கு ஒன்றுதான். ஒருவர் மதக் கோட்பாடுகளைப் பற்றிய பார்வையுடனும், இன்னொருவர் pesudo பெண்களுக்கான மரியாதையும் கொண்டு பேசியிருக்கிறார்.

நல்லது. படைப்பாளிகளின் படைப்பினைப் பற்றிய கேள்விகளையும், விமர்சனங்களையும் இன்னொரு நாள் வைத்துக் கொள்வோம். நெரிந்தையும், இரண்டாம் ஜாமங்களின் கதையையும் நான் படிக்கவில்லை. உங்களின் சுய கருத்துக்களை பின்புலமாக வைத்துக் கொண்டு நீங்கள் அடுத்தவர்களின் கருத்தாக்கத்தினைக் கேள்விக்குறியாக்கும் போது தான் என் பிரச்சனை ஆரம்பமாகிறது. நிர்ணயிக்கப்பட்ட சட்டகங்களில் (மதக் கோட்பாடுகளிலும் மட்டுமல்ல, மனக் கோட்பாடுகளிலும் கூட) நீங்கள் எல்லா படைப்புகளையும் பார்க்கிறீர்கள். சட்டகங்களிலிருந்துக் கொண்டு பார்த்தால், ராப் பாடல்கள் தவறு. அபார்ஷன் தவறு. புகைப்பது தவறு. குடிப்பது தவறு. பட்டியல் அமெரிக்கா ஆக்ரமித்த நாடுகளைப் போல நீண்டுக் கொண்டேப் போகும் ;-) ஆனால், சட்டகங்களும், மதக் கோட்பாடுகளும், ஒழுக்க விதிகளும் அவரவர் பார்வையில் தான் இருக்கிறது. பாம்புக்கு பால் பிடிக்குமா, முட்டை பிடிக்குமா, ஆஃப் பாயில் பிடிக்குமா என்று தெரியாமல், நாகாத்தமாள் கோயில் பாலூற்றும் பெண்களுக்கு, சீனாவில் பாம்புகள் புடலங்காய் போல சூப் வைக்கவும் உதவுகின்றன என்றால் அவ்வளவுதான். ஆனால், நிதர்சனம் அவ்வளவுதான். உங்களுக்கான ரியர் வியு கண்ணாடியில் நீங்கள் பார்க்கும் வரையில் தான் சாலைகள் நீண்டிருக்கின்றன என்றுப் பார்த்தால், கார்களை கேரேஜிலே மட்டும்தான் ஒட்ட முடியும். ஒரு படைப்பாளியின் படைப்பினை விமர்சிப்பது அவரவர் உரிமை. ஆனால், அப்படி எழுதக் கூடாது என்று நிர்பந்திப்பது பாஸிஸ மனப்பான்மை.

எல்லா மதங்களும் உடல் பற்றிய பயத்தினைத் தொடர்ச்சியாக நினைவுறுத்தி, மக்களை suspended fear லியே வைத்திருக்கின்றன. இது ஒரு மனோதத்துவரீதியான அணுகுமுறை. பொய் சொன்னால் சாமி கண்ணை குத்திரும் என்கிற மனப்பாவம். ஆனால், உண்மை வேறாக இருக்கிறது. உலகம் உய்ய உங்கள் சந்ததிகளைப் பெருக்கி, நீங்கள் சம்பாதிக்கும் டாலர்களையும், லோனில் வாங்கிய வீட்டையும் எடுத்துக் கொடுக்க உங்களுக்கு உடல் தேவைப்படுகிறது. உடலிச்சை என்பது ஒன்றுக்கு போவது போல. வந்தால் போங்கள், தொடர்ச்சியாக வராவிட்டால் டாக்டரினைப் பாருங்கள். உடலினைப் பற்றிய கற்பிதங்களையும், ரொமான்டிசைஸ் செய்யப்பட்ட காதல் கதைகளை எழுதும் உரிமையினை கத்துக் குட்டி எழுத்தாளர்களிடம் கொடுத்துவிடுங்கள். தெய்வீக காதல், ஆன்மீக காதல் என்றெல்லாம் ஜல்லியடிக்கலாம். உடல் பற்றி பெண் படைப்பாளிகள் எழுதுவதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதிர்ச்சி மதீப்பீடாக இருக்கலாம். ஆனாலும் தொடர்ச்சியாக, ஊடகங்களும், அரசும் உடலினைப் பற்றிய phobia-விலேயே மக்களை இருக்க செய்கிறார்கள், காரணம், ஒழுக்கவிதிகளைக் காட்டி மக்களை அடக்குவது. ஒழுக்கமாய் இருப்பதால் பத்தினி தெய்வமாக்கி ஒரமாய் உட்கார வைத்து விட்டு ஊர் மேய்வது. பாலியல் இச்சைகள், பாலியல் தேவைகள், தேடல்கள் என்பது கிழிந்த ஜட்டி போல, கைரேகை போல அவரவர்களின் அந்தரங்கம். உடல் தவறாக இருக்கும் "பரமபிதாகள்" குறிகளற்ற மனிதர்களை படைக்கலாம். எச்சிலின் மூலம் சில நீர்வாழ் உயிரிகள் இனப்பெருக்கம் செய்யும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுப்போல மனிதர்கள் இருந்துவிடலாம். [ஆதாம் ஏவாள் கதையினை ஒப்புக் கொண்டால், அவர்களுக்கு பிறந்த மகன் யாரோடு உறவு கொண்டிருக்க முடியும்.. இது incest - ல் வந்து முடியும், இன்செஸ்டினை பைபிள் ஒத்துக் கொள்கிறதா என்று தெரியாது, ஆனால் கண்டிப்பாக அடிப்படை கிறிஸ்துவவாதிகள் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. இதையே இஸ்லாமிற்கு மாற்றி எழுத முடியுமானால் என் மீது ஃபத்வா போடமுடியும். ஹிந்து அடிப்படைவாதிகள் சூலத்தினால் "சுளுக்கு" எடுப்பார்கள்)

உடலை பற்றி எழுதுதல் வக்கிரமாகவும், புனைவாகவும், நிறைவேறாத பாலியல் இச்சையாகவும் இருக்குமானால், ஒழுக்கம் என்பதும் புனைவு என்று தர்க்க ரீதியாக வாதிடமுடியும். உடலை பற்றிய இடையறாத பயம் எல்லாரிடத்திலும் இருக்கிறது. ஆண்கள் டாய்லெட்டில் ஒன்றுக்கடிக்கும்போது, அடுத்தவர்களை எட்டிப் பார்க்காத ஆண்கள் யாருமில்லை. ஆக இங்கே பிரச்சனை உங்கள் மனதிலிருக்கிறது. Sex not lies in the organ. It lies in the mind. பெண்களுக்கான உலகத்தினை பாலகுமாரன் தான் லேடிஸ் கம்பார்ட்மெண்டிலிருந்து எழுத வேண்டும் என்று நினைப்பவர்கள் பாக்கெட் நாவல் படிக்கலாம். கொஞ்சம் நிதானமாய் தேடிப் பார்த்தால், அவரவர் தராசுகளின் சாய்மானங்களில் மனசாட்சி ஒளிந்துக் கொண்டிருக்கும்.

இதற்கு சற்று சம்பந்தமான/சம்பந்த்மில்லாத இரண்டு செய்திகள்.

1. திண்ணையில் சுகுமாரன் ஓரு விசாரணையின் நூற்றாண்டு என்கிற தலைப்பில் கேரளாவில் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு விதமாக புரிந்துக் கொள்ளப்பட்ட குறியேடத்து தாத்ரி என்கிற பெண்ணைப் பற்றி எழுதியிருக்கிறார்.

2. FUCK என்பது ஒரு அக்ரானிம். இதன் முழு வார்த்தை Fornication under the consent of King. அதாவது தங்களுக்குள் திருமணம் செய்துக் கொள்ளாத இருவர் அரசின் அனுமதிப் பெற்று உடலுறவு கொள்ளலாம். லோக்கலா, என் வொய்பும், உங்க ஹஸ்பெண்டும் ஊருக்கு போயிருக்காங்க, அதனால .............. என்பது மாதிரியான மேட்டர். என்ன கொடுமை நவீன உலகில் அரசர்கள் இல்லை. ஒரு விளம்பர நிறுவனத்தின் காப்பிரைட்டர் பெண் வெட்டியாயிருக்கும் உபதேசித்தருளிய ஞானோபதேசம்.

Comments:
திண்ணை கட்டுரை 1940களில் எழுதப்பட்டதென்று நினைக்கிறேன்.
 
விசாரணையின் நூற்றாண்டு சுட்டிக்கு நன்றி நாராயனன்.
 
நாராயணன்,
இப்படியொரு விரிவாக்கமிருப்பது இப்போதுதான் தெரிகிறது. God Save the Queen and The President.

மாண்ட்ரீஸர் திண்ணையின் எந்தக்கட்டுரையைக் கூறுகின்றீர்கள்?
 
பெயரிலி, மாண்ட் ஜெயபாரதனின் கட்டுரையைத்தான் சொல்கிறார். (ஆனால் கிண்டலாக).

நாரயணன், நான் எழுத நினைத்திருந்ததை உங்கள் வார்த்தைகளில் எழுதி என் நேரத்தை மிச்சப் படுத்தியதற்கு நன்றி.
 
வசந்த் புரிந்தேயிருந்தது; சும்மா வம்புக்குத்தான் கேட்டேன். (அது அதுக்கும் முந்தியகாலக்கட்டுரைபோலத் தோன்றியதால்)
 
ஓகே, எனக்குத்தான் புரியவில்லை.
 
// திண்ணை கட்டுரை 1940களில் எழுதப்பட்டதென்று நினைக்கிறேன்.//

1827?
 
அன்புள்ள நாராயணன்,

உங்கள் கட்டுரை முன் வைக்கிற சிந்தனைகளில், பாலுணர்வு என்பது அவரவர் அந்தரங்கம், மதங்கள் உடலைப் பற்றிய ஓர் மிகை அச்சத்தில் மக்களை வைத்திருக்க முற்படுகின்றன, இலக்கியத்தில் out of box சிந்தனைகள் தேவை என்பவற்றில் எல்லாம் எனக்கு உடன்பாடு.
ஆனால் சில கேள்விகளும் இருக்கின்றன:
1. அவரவர் அவரவருக்குப் பிடித்ததை எழுதலாம், பிடித்ததைப் படிக்கலாம் என்றால் (ம்தியும் கூட தனது பதிவில் இந்த ரீதியில் எழுதியிருந்தார்) இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் உறவேதும் கிடையாதா? எண்ணங்கள்தான் ஒரு சமூகத்தை உருவாக்குகின்றன, எண்ணங்களை வாசிப்பும், வாசிப்பிற்கு ஆதாரமாக அமைந்த எழுத்தும் பாதிக்கின்றன என்பதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?
2.ஆணுக்கும் பெண்ணிற்குமிடையே ஒரே ஒரு வித்தியாசம்தான் உண்டு. அது அவர்களது பாலுறுப்புக்கள். மற்றபடி சிந்தனை, ஆற்றல், செயல்திறம், கடமைகள், அதிகாரங்கள் எல்லாம் ஒன்றுதான். ஆனால் அதிகார அமைப்புக்கள் (மதம்,அரசியல், ஊடகங்கள்) இந்த இயல்பான வித்தியாசத்தைத் தங்கள் நலன்களின் பொருட்டு மிகைப்படுத்திக் காலங்காலமாகப் பெண்களை ஒருவித பிணைநிலையில் வைத்திருக்கின்றன. பெண் சமநிலை பெற வேண்டுமானால் சமூகத்தின் கவனம் அவளது பாலுறுப்புகளின் மீதிருந்து திருப்பப்பட வேண்டும். ஆனால் சில அண்மைக்காலப் படைப்புக்கள் அந்த உறுப்புகளை நோக்கியே கவனத்தை ஈர்க்கும் விதமாக உருவாக்கப்படுவது பெண் சமநிலை பெற வேண்டும் என்ற இலட்சியத்திற்கு எதிரானது அல்லவா?
3.ஒழுக்கம் என்பது ஓர் புனைவுதான். ஆனால் social order என்ற ஒர் நோக்கின் பொருட்டு உருவாக்கப்பட்ட புனைவு. (நம்முடைய அரசமைப்புச் சட்டங்கள் போல என்று நான் கிண்டலாக சொல்வதுண்டு) இரண்டு தனிநபர்கள் தங்கள் முதிர்ச்சியின் காரணமாக, பரஸ்பர ஒப்புதலின் பேரில், தங்களுக்கிடையே இந்தப் புனைவை நிராக்ரித்துவிடுவது குற்றமாகது (அது ஒரு பிறழ்வு என்ற் போதிலும்).ஆனால் அதை ஒரு norm ஆக ஆக்கினால் social order என்னவாகும்? அது என்னவானாலும் பரவாயில்லை, தனிமனிதன்தான் முக்கியம் என்று கருதுகிறீர்களா?

அன்புடன்
மாலன்
 
நாராயணன்
நான் நேற்றே உங்கள் பதிவை படித்த போதிலும் சற்றே சிந்தித்திருந்தேன். பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனாலுமொரு எழுத்தாளனுக்கு சில கடமைகள் இருப்பதாக நான் கருதுகிறேன். அதேபோல் ஒரு சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் எவராயினும் ஒரு சில ந்யதிகளுக்கு உட்பட்டே வாழ வேண்டியிருக்கும். இது படித்தவருக்காக அல்ல. படிக்காமல் மூடநம்பிக்கையோடு தன்னை தொடரும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்காக.
மாலன் சொன்னதுபோல திருப்பட வேண்டிய அவசியம் இல்லை, அதேசமயம் அதைப்பற்றியே எழுதிக்கொண்டிருக்கவேண்டியதும் இல்லை.
 
:-)

வர வர தமிழ் வலைப்பதிவுகளையும் இணைய உலா மையங்களில் பார்க்கறதுக்குத் தடை வந்துடும் போல இருக்கு.
 
//சட்டகங்களிலிருந்துக் கொண்டு பார்த்தால், ராப் பாடல்கள் தவறு. அபார்ஷன் தவறு. புகைப்பது தவறு. குடிப்பது தவறு. பட்டியல் அமெரிக்கா ஆக்ரமித்த நாடுகளைப் போல நீண்டுக் கொண்டேப் போகும்.//
:-)). புதிதாய் வந்த பரிசுத்த போப்பாண்டவராவது வத்திகான் sin listலிருந்து Rock பாடல்கள் கேட்பதற்கு 'விடுதலை' கொடுப்பார் என்றால், மனுஷன் முடியாது என்று ஒற்றைகாலில் நிற்கிறார் :-))).
 
ரூமி சார் எழுதியதில், மதத்தை சக முஸ்லிம் அசிங்கப்படுத்துகிறாரே என்கிற கோபம் அதிகம் தெரிந்தும், அதை போஸ்ட் மாடர்னிசm மீதான விமரிசனமாக தெரியும்படி அவர் மறைத்த மறைப்பு செல்லுபடியாகவில்லை. ஆனால் ரூமியைப் போலத்தான் நம் சமூகத்தில் பெரும்பாலான ஆண்களின் சிந்தனை என்பதை நாம் மறுக்க இயலாது - சில வார்த்தைகளில், நக்கலாக சொல்கிறோம் என்று நினைத்துக் கொண்டு அவர் எல்லை மீறி இருந்தாலும் - நிஜம் இதுதான். பெண்களின் உலகம் இப்படி விவரணையாக சொல்லப்படும்போது எழும் அதிர்ச்சி அலைகளில் மதமும் கலந்து விட்டதுதான் இங்கே ரூமியின் எழுத்துகளில் வெளி வந்து விட்டது.

ஆனால் ரூமியைப் போட்டு "சாத்தும்" அன்பர்கள் மாலன் எழுப்பிய சில கேள்விகளை கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை.
என் பதிலகள்

1. வாசிப்பு எண்ணங்களை பாதிக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் வாசிப்பு என்பது இந்தப் புத்த்கமும்/புத்தகங்களும் தாண்டியது. எழுதப்பட்டத்தை வைத்துக் கொண்டு இவர்கள் வாழ்க்கை இப்படியும் இருக்கலாம் என்றுதான் நினைக்கலாமே தவிர இப்படித்தான் இருக்கிறது என்று மட்டையடியாக சிந்திக்காத வாசகர்கள்தான் இதை படிக்கத் தகுந்த ஆடியன்ஸ். மற்றவர்களுக்கு இது கணநேர கிளுகிளுப்புக்கான இலக்கியம் என்று நினைக்கத் தோணலாம்.

2. ஆணுக்கும் பெண்ணுக்குமான வித்தியாசமான பாலுறுப்பின் விளைவாகவே பரஸ்பர ஈர்ப்பு மற்றும் பெண் என்பவள் ஆணாதிக்க வாதிகளால் போகப் பொருளாகத்தான் பார்க்கப்படுகிறாள் என்பதில் சிந்திக்கத் தெரிந்த பெண்களுக்கு ஒரு எதிர்ப்பு நிலை தோன்றி இருக்கலாம். " அட இதைப் பத்திதானே காலகாலமா கிளூகிளுத்துக் கிடக்கிறே..இந்தா ..நான் எழுதறேன் பாரு " என்று எழுதக் கிளம்பி இருக்கலாம். எட்டி எட்டி முந்தானை விலகலை பார்க்க விழைகிற ஒரு சராசரி ஆண், வேண்டுமென்றே ஒரு பெண் முந்தானையை சற்றே நெகிழ்த்தினால், "வேறு மாதிரியாக" நினைத்துக் கொண்டு வெருண்டு ஓடுவதில்லையா...அது மாதிரியான ட்ரீட்மெண்டுதான். அதன் விளைவாக அந்த நடவடிக்கை எடூக்க்த் துணிகிற பெண்கள் லோலாயி என்று சொல்லப்படலாம். ஆனால் பின்னால் வரப் போகிற பெண் சிந்தனையாளர்களுக்கு அவர்கள் அமைத்துக் கொடுக்கிற தளம் அது ( அதுவே கட்டிடமல்ல) என்றளவில் பெண்கள் தங்கள் உடலுறுப்புகளை பற்றி எழுதுவதி நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

அனேகமாக இதற்கும் பொடிச்சியின் ஹிப்பாக்கரசி பதிவிற்கு பலத்த சிபாரிசு கிடைக்குமென நம்புகிறேன் ;-).
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]