Sep 27, 2005

ஊரோடு ஒத்து வாழ் (அ) நாலு பேர்

உலகம் இயங்குவது நாலு பேரால். நாலு பேர் தான் நேரங்கழித்து வரும் பெண் கெட்டு போகும் வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள். நாலு பேர் தான் ஒரு தெருவில் யார் யார்க்கு யாரோடு தொடர்பிருக்கும் என்கிற யூகங்களோடு சுற்றுகிறார்கள். நாலு பேர் தான் மஞ்சள் விளக்கு எரியும் போதே ஹாரன் அடித்து உங்களை விதிகளை மீறச் சொல்லுவார்கள். நாலு பேர் தான் நாலு பேர் தான் குடிப்பது உலக மகா கெட்ட பழக்கமாக ஆக்கியிருக்கிறார்கள். நாலு பேருக்காக சிலர் தன் பெண் பருவமெய்தியதை ஊருக்கு சொல்ல மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சுற்றத்தினை அழைக்கிறார்கள். நாலு பேருக்காக கடனை வாங்கி சீர் செய்கிறான் பெண்ணைப் பெற்றவன். நாலு பேருக்காக கோயம்பேட்டிலுள்ள ஒரு மண்டபத்தில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அந்த நாலு பேர் 51 ரூபாய் மொய் எழுதிவிட்டு ரசத்துல உப்பில்லை என்று எழுந்து போவார்கள். இல்லை மாப்பிள்ளை வீட்டு முறை சரியில்லை என்று முரண்டு பிடிப்பார்கள். நாலு பேர் தான் எந்த நடிகை எந்த நடிகரோடு, தயாரிப்பாளாரோடு படுத்தாள் என்று புறம் பேசுவார்கள். நாலு பேர் தங்களின் ஆளுமைகளையும், சுகத்தினையும் கணக்கிலெடுத்து கலாச்சார அரசியல் பேசுவார்கள். நாலு பேர் தான் யாராவது புதிதாக தொழில் தொடங்கினால், நஷ்டமாகும் என்று பயமுறுத்துகிறார்கள்.

நாலு பேர் உங்களை காரில் வர உசுப்பிவிட்டு, கடன் கட்ட முடியாமல் போனால், இகழுவார்கள். நாலு பேருக்காக ஜி ஆர் டியில் தங்க பரிசு திட்டத்தில் நீங்கள் சீட்டு கட்டுவீர்கள். பெண்களுக்கான கலாச்சார ஆடை புடவைதான் என்று சொல்லும் நாலு பேரின் கண்கள் வஞ்சகத்தோடு இடுப்பிலும், புட்டத்திலும், மார்பிலும் தங்கும். நாலு பேர் தான் ஒருத்தனும் சரியில்லை என்று சொல்லிக் கொண்டே தன் அலுவலக A4 தாள்களை வீட்டுக்கு தள்ளிக் கொண்டு வந்து கணக்கெழுதுவார்கள். நாலு பேர் தான் வாழும்போது ஒன்றும் செய்யாமல் செத்த பின் அவரை மாதிரி ஒரு தங்கமான மனுஷனைப் பார்க்க முடியாது என்று விவாதிப்பார்கள். நாலு பேர் தான் புதிதாக எதை செய்தாலும் அது சரி வராது என்று முதலில் ததாஸ்து-வாக ஆசிர்வதிப்பார்கள். நாலு பேர் தான் மனிதனை நினை என்று சொல்பவர்களை நாத்திகர்களாக ஒதுக்கி வைத்து விட்டு, கடவுளோடு கமிஷன் பேரத்தில் இறங்குவார்கள். நாலு பேருக்கு தான் ஒரு பெண் ஆண்குறி எழுதிவிட்டால் கலாச்சார பேதி வந்துவிடும். இந்த நாலு பேரின் சாயங்களை பொது கழிப்பிடங்களில் நீங்கள் என்றைக்காவது காண நேரிடும். நாலு பேர்கள் தான் மனிதர்களை அவரவரகளின் மத,இன,பாலியல், மொழி, ஜாதி சான்றிதழ்களோடு பார்த்து பேசுவார்கள்.

ஊரோடு ஒத்து வாழ நீங்களும் நாலு பேரில் ஒருவர் ஆகுங்கள். மெஜாரிட்டி எது சொன்னாலும் அது தானே சரி. பூமி உருண்டை என்று சொன்ன கலிலீயோ ஒரு முட்டாள். அவன் நாலு பேரின் கருத்துக்களுக்கு எதிராக இருக்கிறான். தாமஸ் ப்ரீட்மேனே world is flat என்று சொன்ன பிறகு உலகத்தினை தட்டையாக்கும் டெண்டரினை யாருக்காவது விடலாம். மொத்தத்தில் கண்ணகியால் கெட்டது இந்த ஊர். அது சரி, தயாராகுங்கள். நீங்களும் அந்த நாலு பேரில் ஒருவராக?

Sep 26, 2005

கற்பெனப்படுவது யாதெனின்......

தஸ்லீமா நஸ்ரின் + சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை + குஷ்புவின் இந்தியா டுடே பேட்டி X "கலாச்சார தமிழ் காவலர்களின்" கடமையுணர்வு + ஊடகங்கள் + தமிழ் குடி தாங்கிகள் - அடிப்படை நேர்மை + புரிந்துணர்வு % மொத்த தமிழ் சமூகம்

ஒரு தாடி கிழவன் பாவம், வேலையில்லாமல், பெண் ஏன் அடிமையானாள் என்று எழுதிவிட்டு போனான்.

கற்பெனப்படுவது யாதெனின், கறுப்புக் கலர் பிளாஸ்டிக் பைகளில் பார்மசிகளில் விஸ்பர் வாங்குவதே.

Sep 2, 2005

அஞ்சலி - ஹெக்கோடு சுப்பண்ணா (1932 - 2005)

ஹெக்கோடு சுப்பண்ணா


ஹெக்கோடு சுப்பண்ணா பற்றி பெரியதாக ஒன்றும் எனக்குத் தெரியாது. இன்னமும் சொல்லப்போனால், அவரின் இறப்பிலிருந்து தான் எனக்கு அவரை தெரியும் என்று சொன்னால் அது ஒரு irony. ஹெக்கோடு சுப்பண்ணாவின் மறைவுப் பற்றி தீம்தரிகிடவிலும் பின்பு திண்ணையிலும் படித்தேன். எப்பேர்ப்பட்ட மனிதராய் வாழ்ந்திருக்கிறார் என்று படிக்கும் போதுதான் தெரியவருகிறது. இன்றைக்கு உலக சினிமாக்கள் பேசும், அல்லது பாவலா காட்டும் மனிதர்களுக்கு மத்தியில் 1972-ல் பேட்டில்ஷிப் பொட்டெம்கின் பற்றி 250 பக்கம் கன்னடத்தில் ஒரு மனிதன் புத்தகம் எழுதியிருக்கிறான். உலக சினிமாக்களையும், நாம் ஒரங்கட்டிய ரே, ரித்விக் கட்டக் படங்களையும் பார்த்து அலசியிருக்கிறான் என ஒரு பட்டியலே நீளுகிறது.

1949-இல் சுப்பண்ணாவிற்கு 17 வயதாக இருக்கும் போது தன் நண்பர்களோடு இணைந்து தொடங்கிய நீலகண்டேஸ்வர நாட்டிய சேவா சங்கம் (நிநாசம்) தற்போது நாடகப்பள்ளி, திரைப்படக்கழகம், நூல் வெளீயிட்டு நிறுவனம் என்று பல கிளைகளாக உருவெடுத்திருக்கிறது.கர்நாடாகாவில் பெங்களூருக்கு 350 கீமீ தொலைவில் ஷிமோகா மாவட்டத்திலிருக்கும் தன் சொந்த கிராமமான ஹெக்கோடில் தான் இந்த புரட்சி நடந்திருக்கிறது. நிநாசத்திலிருந்து தான், 1973-இல் பிலிம் சொசையிட்டியினை ஆரம்பித்திருக்கிறார், அதுவும் ஒரு அசல் குக்கிராமத்தில். தான் கொண்ட கொள்கைகளில் பிடிவாதமாக இருந்திருக்கிறார் என்பதும், விருதுகள் அவரின் தாகத்தையும், ஆர்வத்தையும் மங்கடிக்கவில்லை என்பதும் ஆச்சர்யமாக இருக்கிறது. திண்ணையில் வெங்கட்சாமிநாதன் ஒரு அருமையான இரங்கல் கட்டுரை எழுதியிருக்கிறார்.

"ஆக, இது வெறும் பொழுது போக்காக, இலவச சினிமா காட்டும் விவகாரமாக ஆகிவிடாது, மக்களின் ரசனையில் மாற்றங்கள் நிகழ்வதை அறியும் சாத்தியங்களையும் கொண்டுள்ளது. யாத்ரா 84-ல் பிரசுரித்த சுப்பண்ணா சிறப்பிதழ் பேசிய 1977- வருட திரைப்பட விழாவில் பெர்க்மனின் Wild Strawberries, சார்லி சாப்ளினின் Gold Rush, ராபர்ட் ஃப்ளாஹர்ட்டியின், Nanook of the North, டி சிகாவின் பைஸைக்கிள் திருடன், ரேயின் பாதேர் பஞ்சலி, ஐஸ்ன்ஸ்டைனின் Battleship Potempkin, அகிரா குரஸாவாவின் ரோஷோமோன், Incident at Owl Creek, Wages of Fear, Wedding, Happy anniversary என்று ஹெக்கோடு கிராமத்து ஜனங்கள் பார்க்கக் கிடைத்த படங்களின் பட்டியல் நீள்கிறது." (திண்ணையிலிருந்து மறுபிரசுரிப்பு)
எத்தனை விதமான படங்கள், அதுவும் 77-இல், மகசேசே விருது பெற்றிருந்தாலும், மீண்டும் மீண்டும் நல்ல படங்களையும் நல்ல கலைகளையும் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்த்தவராக இருந்திருக்கிறார் சுப்பண்ணா. இத்தகைய மனிதர்கள் நாம் வாழும் காலகட்டத்தில் வாழ்ந்து இருக்கிறார்கள், வாழ்ந்து வருகிறார்கள் என்கிற நினைப்பே பிற மொழி இலக்கியங்களின் மீதும், மனிதர்களின் மீதுமான பிணைப்பையும், நெகிழ்வையும் அதிகரிக்கிறது. என்னைப் போல உலகசினிமாக்களின் மீது காதலும், தேடலும் மிக்கவர்களுக்கு ஆசானாய் விளங்கியிருக்கிறார் என்று தெரியும் போது நெக்குருக்கிறது.

இத்தகைய மனிதர்களைப் பற்றி பேசும்போது, நாம் ஒரு தனி இயக்குநர் சொன்ன வார்த்தையையும், அதன் உள்,வெளி, புற குத்துகளையும் ஆராய்ந்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தால்..............

நன்றி: தீம்தரிகிட, திண்ணை.
பார்க்க: வெங்கட் சாமிநாதனின் இரங்கல் உரை

செவிக்கு உணவில்லாத போது.......

வெந்நீர் வைப்பதில் முனைவர் பட்டம் வாங்கலாம் என்கிற அரிய சிந்தனையில் இருந்தபோது, இந்த மாத காலச்சுவடு மாட்டியது. தமிழர் உணவு சிறப்பிதழ். [இரா.முருகனுக்கு, தமிழ்நாட்டின் தேசிய உணவான பரோட்டா பற்றி "பரோட்டாவின் அமைப்பியல் என்கிற தலைப்பில் சுவாரசியமாக நெய்தல் கிருஷ்ணன் எழுதியிருக்கிறார்] தமிழர்களின் உணவுப் பற்றிய சிந்தனைகளில் "சால்னா" இருக்குமா என்று தெரியவில்லை. ஆனாலும், சென்னையினை சுற்றிக் கொண்டிருப்பவன் என்கிற முறையில் சில பல உணவகங்களையும், என்னால் சொல்லமுடியும்.

எங்கிருந்து தொடங்குவது ? சரி, அமெரிக்காவின் தேசிய உணவான இட்லியிலிருந்து தொடங்கலாம் [அமெரிக்காவின் தேசிய உணவாக இட்லி எப்போது மாறியது என்பவர்கள் சரவண பவன் போகாதவர்கள் அல்லது என் நண்பர் சீனிவாசனோடு பேசாதவர்கள்] தி.நகரில் மட்டும் இரண்டு கடைகள், திருவல்லிக்கேணியில் ஒன்று என்று கடை பரப்பி வரும் முருகன் இட்லிக் கடையின் இட்லிகள் நிறைய சூட்டோடும், மாவின் ஒட்டுதலோடும் கிடைக்கும். தவறாமல் புதினா சட்னி கேட்டு சாப்பிடுங்கள். ஹாட்சிப்ஸில் அருமையான கிடைக்கும், முருங்கைக்காய் சாம்பாரோடு தக்காளி சட்னியும் சேர்த்து டிகிரி காப்பியோடு சாப்பிட்டால், அந்த நாள் இனிய நாள். சரவணபவன் இட்லிகள் என்பவை இட்லி என்கிற வார்த்தையில் ட-ணாவுக்கு மேல் வைக்கப்பட்டிருக்கும் புள்ளியை விட சற்றே பெரியதாய் ஐந்து இட்லிகள் ஒரு பிளேட் வீதம் கிடைக்கும். எனக்கென்னவோ சரவணபவனின் தட்டுக்களைத் தவிர எல்லா விஷயங்களும் சின்னதாக தான் இருக்குமென்று தோன்றுகிறது. சத்தியமாய் பொங்கல் சாப்பிடாதீர்கள், உண்டால் மந்த கூடாராமாய் போய்விடுவீர்கள். நீங்கள் இப்போது நின்றுக் கொண்டிருப்பது ராதாகிருஷ்ணன் சாலை சரவணபவன் என்றால், அப்படியே கொஞ்சம் முன்னால் போங்கள். ரெபாக் ஷோரூமின் மேல்மாடியில் அருமையான அஞ்சப்பர் செட்டி நாடு உணவகமிருக்கிறது. முதல் சென்னை வலைப்பதிவர் கூட்டத்தினை முடித்து நானும் பிரகாஷும் இங்குதான் சிலோன் பரோட்டா சாப்பிட்டோம். [பிரகாஷ் வாழ்க!] அஞ்சப்பரில் சூப் குடிக்காதீர்கள், அது ரசத்தினை விட கேவலமாக இருக்கும். ஆனால் நல்ல பிரியாணியும் சிக்கன் துண்டுகளும் கிடைக்கும். அதிலும் அங்கு கிடைக்கும் கொத்துப் பரோட்டா போதும். அருமையான சிக்கன் கிரேவியோடு சாதாரணமாகவும், சரக்கு அடித்துவிட்டும் போய் சாப்பிடலாம்.

சரக்கு என்று சொன்னதும் நினைவுக்கு வருவது எழும்பூர் அல்சாமாலில் கிடைக்கும் சாண்ட்விச்சுகள். வெஜிடேரியன், சிக்கன், முட்டை, டோஸ்டட் என்று பலவகைகளில் கிடைக்கும் சாண்ட்விச்சுகள் தான் பெரும்பாலும் எங்களுக்கு உணவாகியிருக்கும், அதே ரோட்டிலுள்ள வெஸ்ட் இன் பாரில் தண்ணியடித்தால். குடிப்பதினைப் பற்றிய பதிவு இதுவில்லை. குடிப்பதினைப் பற்றியும், குடிக்கும் இடங்களைப் பற்றியும் நீங்கள் "லெதர் பாரில்" குடிக்கும் என் நண்பரின் பதிவில் பார்த்துக் கொள்ளுங்கள் அல்லது சிறு பத்திரிக்கையாளர்களோடு கூட்டு சேருங்கள். அதே எழும்பூரில், கல்லூரி சாலையின் ஆரம்பத்தில் இருக்கிறது என்னுடைய தற்போதைய சின்னவீடு. ஹைதராபாத் பிரியாணி என்றழைக்கப்படும் பிரியாணி ஸ்பெஷாலிட்டி இடத்தில் பெரும்பாலும் 9 -10 மணி இரவு நேரங்களில் பார்க்கலாம். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தந்தூரி சிக்கன் ஒரு புல் வாங்கி மூன்று பேர் சாப்பிடலாம். மறந்தும் வைக்கப்படும் புதினா சட்னியினைத் தொட்டுவிடாதீர்கள். பின் சிக்கன் கண்டிப்பாக கசக்கும். நீங்கள் வெஜிடேரியனாக (இதை சைவம் என்று சொன்னால் வைணவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. வைணவர்களுக்கு சிபாரிப்பது "காம்போ 2" இதைச் சொல்லும் போது பிஷ் பிரை கேளுங்கள். ஏனெனில், அதில் சிக்கன் பிரியாணியும், பெரிரிரிய சிக்கன் துண்டமும் இருக்கும். மறுபடியும் சிக்கன் கபாப் வைப்பார்கள் அது நமக்குத் தேவையில்லை) இருக்கும் பட்சத்தில் "காம்போ 6" அல்லது "காம்போ 8"-னை உங்களுக்கு சிபாரிக்கிறேன். கல்லூரி சாலையிலிருந்து நேராக போனால் கீரீம்ஸ் சாலை வரும். அங்கே "ப்ரான்கீஸில்" நல்ல சிக்கன் ஹாட் டாக் கிடைக்கும். கொஞ்சம் பர்ஸ் கனமாக இருந்தால் அப்படியே அப்போலோவுக்கு போவதற்கு முந்திய சாலையில் ஒரு யூ அடித்து நேராகப் போனால் "மூவ் அன் பிக்" வரும். கடலை போடுவர்கள், காசு அதிகமாய் உள்ளவர்கள், மென்பொருள் நிறுவனத்தில் சம்பாதிப்பதை எவ்வாறு செலவழிப்பது என்று தெரியாதவர்கள் இங்கே வரலாம். அங்கிருந்து காதர் நவாஸ் கான் சாலை சந்திப்பில் உள்ளேப் போனால், நிறைய இடங்கள் இருக்கின்றன.

சாலையின் ஆரம்பத்தில் பாரிஸ்தா காபி ஷாப் உள்ளது. இரவு 8 மணிக்கு மேல் போனால் இயக்குநர் கதிரைப் பார்க்கலாம். பெரும்பாலும் வெட்டியாக தான் இருப்பார். அல்லது வெளியே வாசலில் கையில் கிடாரோடு கிழிந்துப் போன ஜீன்ஸூம், நான்கு நாள் மழிக்காத தாடியுமாக ஒரு கூட்டம் அமர்ந்துக் கொண்டு ஆங்கிலப் பாடல்கள் என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்க ப்ரோக்கன் இங்கிலிஷில் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களை மன்னித்துவிட்டு, முன்னால் போங்கள். நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை வருமுன் உங்களின் வலதுபுறம் திரும்பினால், தரைக்கு கீழே "தி கேஸ்கெட்" என்றழைக்கப்படும் அருமையான சீன உணவகம் இருக்கிறது. ஆனால் மதியம் மூன்று மணிக்கு மேல் போகாதீர்கள். போனால் திருப்பி அனுப்பிவிடுவார்கள். "சொடக்சோ" கூப்பன்களின் புண்ணியத்தில் முந்தாநாள் நல்ல வெஜிடபுள் ப்ரைட் ரைஸ் சாப்பிட்டேன். கவனம், சூப் வேண்டுமென்றால் ஒரு சூப் கேளுங்கள். அதுவே ஒரு அண்டா வரும். அப்படியே தாஜினைச் சுற்றிக் கொண்டு நுங்கம்பாக்கம் சாலைவழியே வந்து வள்ளுவர் கோட்டம் போகுமுன் "சிக் கிங்" இருக்கும். இடமிருந்தால் உள்ளேப் போய் ஒரு சிக்கன் பர்கரினைக் கடித்துக் கொண்டு வாருங்கள். கண்டிப்பாக டபுள் சீஸ் போடச் சொல்லுங்கள், பக்கத்து இருக்கையில் யூ கட் டீ சர்ட் போட்டிருக்கும் பெண்ணைப் பார்த்துக் கொண்டு மூக்கில் தேய்த்துக் கொள்ளாதீர்கள்.

அப்படியே வள்ளூவர் கோட்டம் தொட்டு, திருமலைப் பிள்ளை சாலை தொடும் முன் இடதுபுறம் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் பயணித்தால் "குமரகம்" வரும், சேச்சி, சேட்டன்களோடு சம்சாரித்துக் கொண்டே, வெட்கமாய் புன்னகையை வழியவிட்டுக் கொண்டு "ஊனு கழிஞ்சோ" என்று கேட்கும் கேரள மென்பொருள் பெண்களைப் பார்க்கலாம். பெரும்பாலும் திறக்கப்படுபவை அங்கே ஆண்கள் பர்ஸூகளே. ஐ ஸாப்ட், லேசன் டெக் வாழ்க. சேரநாட்டுப் பெண்களோடு கொஞ்சி குலாவிவிட்டு, ஒரு ஜூட் விட்டு, திருமலைப்பிள்ளை ரோட்டுக்கு நுழைந்தால் "கபாப்"-ற்கு என்றே ஒரு கடையிருக்கிறது. நல்ல சூடான முகமதிய கலாச்சார மிச்சமான கபாபினை நவாப் இல்லாமல் ஒரு கடி கடிக்கலாம். அப்படியே நேராகப் போய், பென்ஸ் பார்க்கிற்கு முன் பசூல்லா சாலையில் திரும்பினால், டை லாப்டாபோடு நிறைய பேர்களைப் பார்க்கலாம். ராம்ஸ் என்கிற ஒரு விற்பனைபிரதிநிகளுக்கான கடையொன்று இருக்கிறது. மதிய உணவு நேரத்தில் அந்த சாலையில் ட்ராபிக் ஜாமாகாத குறை. நல்ல குறை சொல்லமுடியாத உணவு, எல்லாம் பத்து ரூபாய் [சாம்பார் சாதம் கேட்காதீர்கள், எண்ணெய் அதிகமாக இருக்கும்]

கொஞ்சம் நேராய் போய் ஜி.என் செட்டி சாலையில் திரும்பினால் இருக்கவே இருக்கிறது விருதுநகர் செட்டிநாடு. அதற்கு நேரெதிர் சாலையில் போய் இடதுபுறம் திரும்பினால் [கோபால கிருஷ்ணன் தெரு?] நல்ல, சூடான சுவையான ஆந்திர சாப்பாடு கிடைக்கும். பருப்புப் பொடி, கோங்கரா துவையல், கட்டி தயிர் என்று ஒரு புல் கட்டு கட்டிவிட்டு, அலுவலகத்திற்கு வந்து நிதானமாய் தூங்கலாம். தி.நகர் தாண்டி, உள்ளே போய் மேற்கு மாம்பலம் பிடித்தால், நிறைய் மெஸ்கள் உண்டு, அப்படியே பயணித்து, அசோக் நகர் தொட்டு எங்கள் ஏரியா கே.கே. நகருக்கு வாருங்கள். அஞ்சுகம் என்கிற அருமையான அசைவ விடுதிக்கு என் சொந்த செலவில் கூட்டிச் செல்கிறேன். அமிர்தம் போன்ற சிக்கன் போன்லெஸ் இங்குதான் கிடைக்கும். பொன்னுசாமியிலும், சேலம் ஆர்.ஆரில் கூட அப்படிப்பட்ட போன்லெஸ் கிடைக்காது. சென்னை வளர்ந்துக் கொண்டே போவதைப் போலவே உணவகங்களும் நீண்டுக் கொண்டே போகும்.

பின்குறிப்பு: நீங்கள் குடிப்பவராக இருந்தால், நூறடி சாலையிலுள்ள விஜய் பார்க் இன் பாருக்கு [7வது மாடி, உள்ளே நுழையும் முன் மீசை வைத்த காவலாளி ஒரு சல்யூட் அடிப்பார் பாருங்கள், சத்தியமாய் 6,5 மாடிகளில் அது இடியாய் விழும்] போங்கள். நல்ல, துண்டங்களாக வெட்டப்பட்ட சிறு இட்லித்துண்டுகள் கிடைக்கும். ஏழு மணிக்கு போனீர்களேயானால் கிடைக்கும், நேரமாகமாக துண்டுகளின் எண்ணிக்கை குறையும். அதன் கடினத்தன்மை அதிகரிக்கும். கவலையை விடுங்கள். மூன்றாவது ரவுண்டு வோட்காவில் அது தெரியாது.

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]