Sep 2, 2005

செவிக்கு உணவில்லாத போது.......

வெந்நீர் வைப்பதில் முனைவர் பட்டம் வாங்கலாம் என்கிற அரிய சிந்தனையில் இருந்தபோது, இந்த மாத காலச்சுவடு மாட்டியது. தமிழர் உணவு சிறப்பிதழ். [இரா.முருகனுக்கு, தமிழ்நாட்டின் தேசிய உணவான பரோட்டா பற்றி "பரோட்டாவின் அமைப்பியல் என்கிற தலைப்பில் சுவாரசியமாக நெய்தல் கிருஷ்ணன் எழுதியிருக்கிறார்] தமிழர்களின் உணவுப் பற்றிய சிந்தனைகளில் "சால்னா" இருக்குமா என்று தெரியவில்லை. ஆனாலும், சென்னையினை சுற்றிக் கொண்டிருப்பவன் என்கிற முறையில் சில பல உணவகங்களையும், என்னால் சொல்லமுடியும்.

எங்கிருந்து தொடங்குவது ? சரி, அமெரிக்காவின் தேசிய உணவான இட்லியிலிருந்து தொடங்கலாம் [அமெரிக்காவின் தேசிய உணவாக இட்லி எப்போது மாறியது என்பவர்கள் சரவண பவன் போகாதவர்கள் அல்லது என் நண்பர் சீனிவாசனோடு பேசாதவர்கள்] தி.நகரில் மட்டும் இரண்டு கடைகள், திருவல்லிக்கேணியில் ஒன்று என்று கடை பரப்பி வரும் முருகன் இட்லிக் கடையின் இட்லிகள் நிறைய சூட்டோடும், மாவின் ஒட்டுதலோடும் கிடைக்கும். தவறாமல் புதினா சட்னி கேட்டு சாப்பிடுங்கள். ஹாட்சிப்ஸில் அருமையான கிடைக்கும், முருங்கைக்காய் சாம்பாரோடு தக்காளி சட்னியும் சேர்த்து டிகிரி காப்பியோடு சாப்பிட்டால், அந்த நாள் இனிய நாள். சரவணபவன் இட்லிகள் என்பவை இட்லி என்கிற வார்த்தையில் ட-ணாவுக்கு மேல் வைக்கப்பட்டிருக்கும் புள்ளியை விட சற்றே பெரியதாய் ஐந்து இட்லிகள் ஒரு பிளேட் வீதம் கிடைக்கும். எனக்கென்னவோ சரவணபவனின் தட்டுக்களைத் தவிர எல்லா விஷயங்களும் சின்னதாக தான் இருக்குமென்று தோன்றுகிறது. சத்தியமாய் பொங்கல் சாப்பிடாதீர்கள், உண்டால் மந்த கூடாராமாய் போய்விடுவீர்கள். நீங்கள் இப்போது நின்றுக் கொண்டிருப்பது ராதாகிருஷ்ணன் சாலை சரவணபவன் என்றால், அப்படியே கொஞ்சம் முன்னால் போங்கள். ரெபாக் ஷோரூமின் மேல்மாடியில் அருமையான அஞ்சப்பர் செட்டி நாடு உணவகமிருக்கிறது. முதல் சென்னை வலைப்பதிவர் கூட்டத்தினை முடித்து நானும் பிரகாஷும் இங்குதான் சிலோன் பரோட்டா சாப்பிட்டோம். [பிரகாஷ் வாழ்க!] அஞ்சப்பரில் சூப் குடிக்காதீர்கள், அது ரசத்தினை விட கேவலமாக இருக்கும். ஆனால் நல்ல பிரியாணியும் சிக்கன் துண்டுகளும் கிடைக்கும். அதிலும் அங்கு கிடைக்கும் கொத்துப் பரோட்டா போதும். அருமையான சிக்கன் கிரேவியோடு சாதாரணமாகவும், சரக்கு அடித்துவிட்டும் போய் சாப்பிடலாம்.

சரக்கு என்று சொன்னதும் நினைவுக்கு வருவது எழும்பூர் அல்சாமாலில் கிடைக்கும் சாண்ட்விச்சுகள். வெஜிடேரியன், சிக்கன், முட்டை, டோஸ்டட் என்று பலவகைகளில் கிடைக்கும் சாண்ட்விச்சுகள் தான் பெரும்பாலும் எங்களுக்கு உணவாகியிருக்கும், அதே ரோட்டிலுள்ள வெஸ்ட் இன் பாரில் தண்ணியடித்தால். குடிப்பதினைப் பற்றிய பதிவு இதுவில்லை. குடிப்பதினைப் பற்றியும், குடிக்கும் இடங்களைப் பற்றியும் நீங்கள் "லெதர் பாரில்" குடிக்கும் என் நண்பரின் பதிவில் பார்த்துக் கொள்ளுங்கள் அல்லது சிறு பத்திரிக்கையாளர்களோடு கூட்டு சேருங்கள். அதே எழும்பூரில், கல்லூரி சாலையின் ஆரம்பத்தில் இருக்கிறது என்னுடைய தற்போதைய சின்னவீடு. ஹைதராபாத் பிரியாணி என்றழைக்கப்படும் பிரியாணி ஸ்பெஷாலிட்டி இடத்தில் பெரும்பாலும் 9 -10 மணி இரவு நேரங்களில் பார்க்கலாம். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தந்தூரி சிக்கன் ஒரு புல் வாங்கி மூன்று பேர் சாப்பிடலாம். மறந்தும் வைக்கப்படும் புதினா சட்னியினைத் தொட்டுவிடாதீர்கள். பின் சிக்கன் கண்டிப்பாக கசக்கும். நீங்கள் வெஜிடேரியனாக (இதை சைவம் என்று சொன்னால் வைணவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. வைணவர்களுக்கு சிபாரிப்பது "காம்போ 2" இதைச் சொல்லும் போது பிஷ் பிரை கேளுங்கள். ஏனெனில், அதில் சிக்கன் பிரியாணியும், பெரிரிரிய சிக்கன் துண்டமும் இருக்கும். மறுபடியும் சிக்கன் கபாப் வைப்பார்கள் அது நமக்குத் தேவையில்லை) இருக்கும் பட்சத்தில் "காம்போ 6" அல்லது "காம்போ 8"-னை உங்களுக்கு சிபாரிக்கிறேன். கல்லூரி சாலையிலிருந்து நேராக போனால் கீரீம்ஸ் சாலை வரும். அங்கே "ப்ரான்கீஸில்" நல்ல சிக்கன் ஹாட் டாக் கிடைக்கும். கொஞ்சம் பர்ஸ் கனமாக இருந்தால் அப்படியே அப்போலோவுக்கு போவதற்கு முந்திய சாலையில் ஒரு யூ அடித்து நேராகப் போனால் "மூவ் அன் பிக்" வரும். கடலை போடுவர்கள், காசு அதிகமாய் உள்ளவர்கள், மென்பொருள் நிறுவனத்தில் சம்பாதிப்பதை எவ்வாறு செலவழிப்பது என்று தெரியாதவர்கள் இங்கே வரலாம். அங்கிருந்து காதர் நவாஸ் கான் சாலை சந்திப்பில் உள்ளேப் போனால், நிறைய இடங்கள் இருக்கின்றன.

சாலையின் ஆரம்பத்தில் பாரிஸ்தா காபி ஷாப் உள்ளது. இரவு 8 மணிக்கு மேல் போனால் இயக்குநர் கதிரைப் பார்க்கலாம். பெரும்பாலும் வெட்டியாக தான் இருப்பார். அல்லது வெளியே வாசலில் கையில் கிடாரோடு கிழிந்துப் போன ஜீன்ஸூம், நான்கு நாள் மழிக்காத தாடியுமாக ஒரு கூட்டம் அமர்ந்துக் கொண்டு ஆங்கிலப் பாடல்கள் என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்க ப்ரோக்கன் இங்கிலிஷில் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களை மன்னித்துவிட்டு, முன்னால் போங்கள். நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை வருமுன் உங்களின் வலதுபுறம் திரும்பினால், தரைக்கு கீழே "தி கேஸ்கெட்" என்றழைக்கப்படும் அருமையான சீன உணவகம் இருக்கிறது. ஆனால் மதியம் மூன்று மணிக்கு மேல் போகாதீர்கள். போனால் திருப்பி அனுப்பிவிடுவார்கள். "சொடக்சோ" கூப்பன்களின் புண்ணியத்தில் முந்தாநாள் நல்ல வெஜிடபுள் ப்ரைட் ரைஸ் சாப்பிட்டேன். கவனம், சூப் வேண்டுமென்றால் ஒரு சூப் கேளுங்கள். அதுவே ஒரு அண்டா வரும். அப்படியே தாஜினைச் சுற்றிக் கொண்டு நுங்கம்பாக்கம் சாலைவழியே வந்து வள்ளுவர் கோட்டம் போகுமுன் "சிக் கிங்" இருக்கும். இடமிருந்தால் உள்ளேப் போய் ஒரு சிக்கன் பர்கரினைக் கடித்துக் கொண்டு வாருங்கள். கண்டிப்பாக டபுள் சீஸ் போடச் சொல்லுங்கள், பக்கத்து இருக்கையில் யூ கட் டீ சர்ட் போட்டிருக்கும் பெண்ணைப் பார்த்துக் கொண்டு மூக்கில் தேய்த்துக் கொள்ளாதீர்கள்.

அப்படியே வள்ளூவர் கோட்டம் தொட்டு, திருமலைப் பிள்ளை சாலை தொடும் முன் இடதுபுறம் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் பயணித்தால் "குமரகம்" வரும், சேச்சி, சேட்டன்களோடு சம்சாரித்துக் கொண்டே, வெட்கமாய் புன்னகையை வழியவிட்டுக் கொண்டு "ஊனு கழிஞ்சோ" என்று கேட்கும் கேரள மென்பொருள் பெண்களைப் பார்க்கலாம். பெரும்பாலும் திறக்கப்படுபவை அங்கே ஆண்கள் பர்ஸூகளே. ஐ ஸாப்ட், லேசன் டெக் வாழ்க. சேரநாட்டுப் பெண்களோடு கொஞ்சி குலாவிவிட்டு, ஒரு ஜூட் விட்டு, திருமலைப்பிள்ளை ரோட்டுக்கு நுழைந்தால் "கபாப்"-ற்கு என்றே ஒரு கடையிருக்கிறது. நல்ல சூடான முகமதிய கலாச்சார மிச்சமான கபாபினை நவாப் இல்லாமல் ஒரு கடி கடிக்கலாம். அப்படியே நேராகப் போய், பென்ஸ் பார்க்கிற்கு முன் பசூல்லா சாலையில் திரும்பினால், டை லாப்டாபோடு நிறைய பேர்களைப் பார்க்கலாம். ராம்ஸ் என்கிற ஒரு விற்பனைபிரதிநிகளுக்கான கடையொன்று இருக்கிறது. மதிய உணவு நேரத்தில் அந்த சாலையில் ட்ராபிக் ஜாமாகாத குறை. நல்ல குறை சொல்லமுடியாத உணவு, எல்லாம் பத்து ரூபாய் [சாம்பார் சாதம் கேட்காதீர்கள், எண்ணெய் அதிகமாக இருக்கும்]

கொஞ்சம் நேராய் போய் ஜி.என் செட்டி சாலையில் திரும்பினால் இருக்கவே இருக்கிறது விருதுநகர் செட்டிநாடு. அதற்கு நேரெதிர் சாலையில் போய் இடதுபுறம் திரும்பினால் [கோபால கிருஷ்ணன் தெரு?] நல்ல, சூடான சுவையான ஆந்திர சாப்பாடு கிடைக்கும். பருப்புப் பொடி, கோங்கரா துவையல், கட்டி தயிர் என்று ஒரு புல் கட்டு கட்டிவிட்டு, அலுவலகத்திற்கு வந்து நிதானமாய் தூங்கலாம். தி.நகர் தாண்டி, உள்ளே போய் மேற்கு மாம்பலம் பிடித்தால், நிறைய் மெஸ்கள் உண்டு, அப்படியே பயணித்து, அசோக் நகர் தொட்டு எங்கள் ஏரியா கே.கே. நகருக்கு வாருங்கள். அஞ்சுகம் என்கிற அருமையான அசைவ விடுதிக்கு என் சொந்த செலவில் கூட்டிச் செல்கிறேன். அமிர்தம் போன்ற சிக்கன் போன்லெஸ் இங்குதான் கிடைக்கும். பொன்னுசாமியிலும், சேலம் ஆர்.ஆரில் கூட அப்படிப்பட்ட போன்லெஸ் கிடைக்காது. சென்னை வளர்ந்துக் கொண்டே போவதைப் போலவே உணவகங்களும் நீண்டுக் கொண்டே போகும்.

பின்குறிப்பு: நீங்கள் குடிப்பவராக இருந்தால், நூறடி சாலையிலுள்ள விஜய் பார்க் இன் பாருக்கு [7வது மாடி, உள்ளே நுழையும் முன் மீசை வைத்த காவலாளி ஒரு சல்யூட் அடிப்பார் பாருங்கள், சத்தியமாய் 6,5 மாடிகளில் அது இடியாய் விழும்] போங்கள். நல்ல, துண்டங்களாக வெட்டப்பட்ட சிறு இட்லித்துண்டுகள் கிடைக்கும். ஏழு மணிக்கு போனீர்களேயானால் கிடைக்கும், நேரமாகமாக துண்டுகளின் எண்ணிக்கை குறையும். அதன் கடினத்தன்மை அதிகரிக்கும். கவலையை விடுங்கள். மூன்றாவது ரவுண்டு வோட்காவில் அது தெரியாது.

Comments:
அடடா அடடா, வாயூறவைக்கும் அருமையான பதிவு. யூ கட் பெண்களும் மலையாளச் சேச்சிகளும் சாப்பிடும் அழகைப் பார்ப்பதற்காகவேனும் விரைவில் தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் :-).
 
O
 
உமிழ்நீர் ஊறுதுங்கோ...
 
உப்பு சப்பில்லாத உணவளிக்கும் நாட்டுல இருக்கவங்க வயித்தெரிச்சல
கொட்டிக்காதீங்க.
 
நாராயண நாராயண!! ஒரு 350 பவுண்டு எடை இருப்பீர்களா? ;-) நல்ல பதிவு - பொதுவாகவே உங்களது சென்னை சம்பந்தப்பட்ட பதிவுகள் சுவாரஸ்யமானவை - nostalgic!!
 
yummy :=P~
 
// நாராயண நாராயண!! ஒரு 350 பவுண்டு எடை இருப்பீர்களா? ;-) //

தலீவா நான் கொஞ்சம் லீன்னா ஆளு. ஆனா எல்லா இடமும் பரிச்சயமுண்டு. சடால்ன்னு 350 பவுண்டுன்னு சொல்லி என் இமேஜே டேமேஜ் பண்ணீட்டிங்களே.

டிசே, யாரந்த பெண்?
 
நல்லா இருங்க!
 
//பருப்புப் பொடி, கோங்கரா துவையல், கட்டி தயிர் என்று ஒரு புல் கட்டு கட்டிவிட்டு, அலுவலகத்திற்கு வந்து நிதானமாய் தூங்கலாம்.//

:-)

கடைசியிலே ஜெலுஸில் ஒரு லிட்டர் எங்கே நல்லா கிடைகும் என்று சொல்ல மறந்துவிட்டீர்களே? :-)

இருந்தாலும் உங்கள் டீக்கடை ரேஞ்சுக்கு இது வரலே.
 
ஆஹா... அருமையான விவரங்கள். சென்னைக்கு வந்ததுமே ஒரு பிடி பிடிக்கணும். நேத்துத்தான் மேற்கு மாம்பலம் தஞ்சாவூர் மெஸ்க்குப் போனேன்( எல்லாம் தினமணிக்கதிர் உபயம்!)
 
அடேங்கப்பா!

என்ன... இந்த பதிவை ஒரு வாரம் முன்னால போட்டிருக்கலாம்! ஒன்றிரண்டையாச்சும் ட்ரை பண்ணியிருப்போம்.

நிர்மலா.
 
அட நாராயணா.. இத்தனை சாப்பாடும் ஒரு நாளுக்கா அல்லது ஒரு வேளைக்கா..?
;-)
 
தல!!!...

நாம ஆரம்ப காலத்தில சாப்பிட்டுருந்த "பொன்னுசாமி"பத்தி நீங்க ஒரு வார்த்தை சொல்லாததை நான் வண்மையாக கண்டனம் செய்கிறேன்....

ஆனா இவ்வளவோ எழுதறிங்க எல்லாம் சரி ஆனா "ஆப்" தாங்க மாட்டேங்கறிங்க அது ஏன்.....நான் ஆப் பிரியாணியை சொன்னேன்....நம்ம மிண்ட் பாபு உங்களை பத்தி அடிக்கடி சொன்ன ஒரு விஷயம் இப்ப ஞாபகம் வருது...நாராயண் ஒரு சதைபிரியன் அதாவது போன்லெஸ் சிக்கன் தான் விரும்பி சாப்பிடுவார்....பாவம் மாமி பையன் உழைச்சு கலைச்சு வீட்டுக்க வரானேன்னு மோர் சதம் வடுமாங்காய எடுத்து வைச்சா நீ ஐதாராபாத் பிரியாணி சென்டர் ல சிக்கன் பிரியாணி சாப்பிட்டு,மாமி கேட்டா பாலாஜி ஆத்துல சாப்பிட்டு வந்துட்டேன்னு கதை அளக்கறே...நடத்து ராசா நடத்து...
அன்புடன்
கி.அரவிந்தன்
 
நாராயண்,

செப் மாத காலச்சுவடை பாத்துட்டு, என்னடா இது காலச்சுவடு 'மங்கையர்மலர்' ரேஞ்சுக்கும் நம்ம இலக்கிய எழுத்தாளர்கள் எல்லாம் 'அறுசுவை நடராஜனுக்கு' போட்டியா வர்ற அளவுக்கு மெனு சொல்றாங்களேன்னு கவலைப்பட்டுட்டு உக்கார்ந்திருந்தா இப்ப உங்க பதிவு.

வாழறதுக்கோசரம் சாப்பிடுங்கய்யா, சாப்பிடறக்கோசரம் வாழாதீங்க. :-))

நாஞ்சில் நாடன் எழுதின கட்டுரையில சாப்பாட்ட கொறிக்கறவங்கள பத்தி ஒரு கமெண்ட் எழுதியிருக்காரே. படிச்சீங்களா?
 
அனைவருக்கும் செவிக்கு உணவில்லாத போதின் இரண்டு, மூன்று, நான்கு பகுதிகளும் எனக்கு நேரமிருக்கும் போது வரும்.

//வாழறதுக்கோசரம் சாப்பிடுங்கய்யா, சாப்பிடறக்கோசரம் வாழாதீங்க. :-))//

எல்லாம் அப்படியே இருந்துட்டா, சாப்பாட்டுக் கடைகளை யார் கவனிக்கிறது. சிங்கமுல நாங்க ;-)

அரவிந்தன், பொன்னுசாமி பற்றி தனியாக எழுதுகிறேன்.
 
அடப்பாவியளா...:-) இந்தப் பதிவை நான் எப்படி கவனிக்காமப் போனேன்..?

நாராயண், ஒண்ணு கவனீச்சிருக்கீங்களா? பாரம்பரியம், பழம் பெருமைகளைப் பத்திப் பேசறவங்க எல்லாரும் சென்னையை மட்டும் நைசா கவனிக்காம விட்டுடுவாங்க...[அப்படியே சென்னையைப் பத்தி எழுதினாலும், மெயிலாப்பூர், மாம்பலம், தான் வரும்...ராயபுரம், காசிமேடு, திருவொற்றியூர், வண்ணார்பேட்டையை எல்லாம் கண்டுக்கிடவே மாட்டாங்க..அது வேற விஷயம்]. இந்த மாதக் காலச்சுவடும் அதே கதைதான்... ஈழத்து உணவு பற்றியும், நாஞ்சில், கொங்கு, தஞ்சாவூர் உணவு வகைகளைப் பற்றியும் எழுதினவங்க...மெட்ராஸ் பரோட்டா சால்னாவையும், சென்னையின் அடையாளமான உடுப்பி உணவு வகைகளைப் பத்தியும், ராயர் கிளப்பையும், நடைபாதையோர சுண்டல் பஜ்ஜி வகையறாக்களையும், இரானி டீக்கடைகளையும், தில்லகேணி பிரியாணியையும், சென்னைக் கடலோர குப்பத்து மீன் உணவுகளையும் கண்டுக்கவே இல்லை... அதை உங்க பதிவு ஈடு செஞ்சிட்டது...
 
அட்டகாசம் நாராயண்
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]