Sep 27, 2005

ஊரோடு ஒத்து வாழ் (அ) நாலு பேர்

உலகம் இயங்குவது நாலு பேரால். நாலு பேர் தான் நேரங்கழித்து வரும் பெண் கெட்டு போகும் வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள். நாலு பேர் தான் ஒரு தெருவில் யார் யார்க்கு யாரோடு தொடர்பிருக்கும் என்கிற யூகங்களோடு சுற்றுகிறார்கள். நாலு பேர் தான் மஞ்சள் விளக்கு எரியும் போதே ஹாரன் அடித்து உங்களை விதிகளை மீறச் சொல்லுவார்கள். நாலு பேர் தான் நாலு பேர் தான் குடிப்பது உலக மகா கெட்ட பழக்கமாக ஆக்கியிருக்கிறார்கள். நாலு பேருக்காக சிலர் தன் பெண் பருவமெய்தியதை ஊருக்கு சொல்ல மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சுற்றத்தினை அழைக்கிறார்கள். நாலு பேருக்காக கடனை வாங்கி சீர் செய்கிறான் பெண்ணைப் பெற்றவன். நாலு பேருக்காக கோயம்பேட்டிலுள்ள ஒரு மண்டபத்தில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அந்த நாலு பேர் 51 ரூபாய் மொய் எழுதிவிட்டு ரசத்துல உப்பில்லை என்று எழுந்து போவார்கள். இல்லை மாப்பிள்ளை வீட்டு முறை சரியில்லை என்று முரண்டு பிடிப்பார்கள். நாலு பேர் தான் எந்த நடிகை எந்த நடிகரோடு, தயாரிப்பாளாரோடு படுத்தாள் என்று புறம் பேசுவார்கள். நாலு பேர் தங்களின் ஆளுமைகளையும், சுகத்தினையும் கணக்கிலெடுத்து கலாச்சார அரசியல் பேசுவார்கள். நாலு பேர் தான் யாராவது புதிதாக தொழில் தொடங்கினால், நஷ்டமாகும் என்று பயமுறுத்துகிறார்கள்.

நாலு பேர் உங்களை காரில் வர உசுப்பிவிட்டு, கடன் கட்ட முடியாமல் போனால், இகழுவார்கள். நாலு பேருக்காக ஜி ஆர் டியில் தங்க பரிசு திட்டத்தில் நீங்கள் சீட்டு கட்டுவீர்கள். பெண்களுக்கான கலாச்சார ஆடை புடவைதான் என்று சொல்லும் நாலு பேரின் கண்கள் வஞ்சகத்தோடு இடுப்பிலும், புட்டத்திலும், மார்பிலும் தங்கும். நாலு பேர் தான் ஒருத்தனும் சரியில்லை என்று சொல்லிக் கொண்டே தன் அலுவலக A4 தாள்களை வீட்டுக்கு தள்ளிக் கொண்டு வந்து கணக்கெழுதுவார்கள். நாலு பேர் தான் வாழும்போது ஒன்றும் செய்யாமல் செத்த பின் அவரை மாதிரி ஒரு தங்கமான மனுஷனைப் பார்க்க முடியாது என்று விவாதிப்பார்கள். நாலு பேர் தான் புதிதாக எதை செய்தாலும் அது சரி வராது என்று முதலில் ததாஸ்து-வாக ஆசிர்வதிப்பார்கள். நாலு பேர் தான் மனிதனை நினை என்று சொல்பவர்களை நாத்திகர்களாக ஒதுக்கி வைத்து விட்டு, கடவுளோடு கமிஷன் பேரத்தில் இறங்குவார்கள். நாலு பேருக்கு தான் ஒரு பெண் ஆண்குறி எழுதிவிட்டால் கலாச்சார பேதி வந்துவிடும். இந்த நாலு பேரின் சாயங்களை பொது கழிப்பிடங்களில் நீங்கள் என்றைக்காவது காண நேரிடும். நாலு பேர்கள் தான் மனிதர்களை அவரவரகளின் மத,இன,பாலியல், மொழி, ஜாதி சான்றிதழ்களோடு பார்த்து பேசுவார்கள்.

ஊரோடு ஒத்து வாழ நீங்களும் நாலு பேரில் ஒருவர் ஆகுங்கள். மெஜாரிட்டி எது சொன்னாலும் அது தானே சரி. பூமி உருண்டை என்று சொன்ன கலிலீயோ ஒரு முட்டாள். அவன் நாலு பேரின் கருத்துக்களுக்கு எதிராக இருக்கிறான். தாமஸ் ப்ரீட்மேனே world is flat என்று சொன்ன பிறகு உலகத்தினை தட்டையாக்கும் டெண்டரினை யாருக்காவது விடலாம். மொத்தத்தில் கண்ணகியால் கெட்டது இந்த ஊர். அது சரி, தயாராகுங்கள். நீங்களும் அந்த நாலு பேரில் ஒருவராக?

Comments:
Superb! romba nalla ezuthi irukkenga.

naalu perukku nanRi?????????????????????
 
நன்றாக , எளிமையாக சொல்லியிருக்கிறீர்கள், நன்றி.
 
super!
 
நான்கு பேருக்கு நடுவில் நானொரு பொம்மை :-).. நன்றாக இருக்கிறது நரேன்.
 
படிச்சு முடிச்ச உடனே அவனவன் கன்னத்தைத் தடவிப் பார்க்கற மாதிரி சும்மா "நச்"னு இருக்கு! காப்பி ரைட் பிரச்னை ஒண்ணும் வந்துடாதே?
 
அந்த நாலுபேரையும் திருப்திப்படுத்தவே நமது நாளும் ஜீவிதமும் கழிந்துகொண்டே இருக்கிறது. அவர்களைத் தவிர்த்த வாழ்வு தனி மனிதர்களுக்கு சாத்தியமாகலாம், குடும்பம் சார்ந்த அமைப்பில் இயலாதது. குடும்பத்தைத் தவிர்த்த சூழல் நம்மால் வாழ முடியாதது. முரண்பாடுகள்தான் வாழ்க்கை.
 
Well said...

இப்படியாப்பட்ட இந்த நாலு பேருக்கு நல்லது செஞ்சா எதுவுமே தப்பில்ல, வேலு...
 
இதற்குத்தான் நீங்கள் வரவேண்டும் நச்சென்று சொல்ல
 
நாராயணன்,

நல்லா 'நச்'ன்னு இருக்கு.
என் பொண்ணு எப்பவும் சொல்ரது இதேதான்.
who cares about these 4 people?
you Indians.
 
//அவர்களைத் தவிர்த்த வாழ்வு தனி மனிதர்களுக்கு சாத்தியமாகலாம், குடும்பம் சார்ந்த அமைப்பில் இயலாதது.//

தாணு, குடும்பம் என்கிற அமைப்பு உருவாக காரணமென்ன ? சுற்றங்கள், சூழல்கள் சார்ந்த பிணைப்பினை ஏற்படுத்தி அதன் மூலம் மனிதர்களின் வாழ்வினை உன்னதமாக்குவதுதானே குறிக்கோள். அவ்வாறு செய்ய முடியாமல், குடும்பமே சமூக மாற்றத்திற்கும், தனி மனித மாறுதலுக்கும் தடையாக இருக்கும் பட்சத்தில் எவ்வளவு வன்முறையான, கொடுமையான சமூகநீதியாக குடும்பம் என்கிற அமைப்பு இருக்கும் ? மாறுதல் ஒன்றே நிரந்தரமானது என்பதில் உங்களுக்கு சந்தேகமிருக்காது என்று நினைக்கிறேன். எல்லோருமே, குடும்ப அமைப்பினை சாக்காக வைத்துக் கொண்டு, குடும்ப சூழலில் இது சாத்தியப்படாது என்று போனால், மாற்றங்கள் நடப்பதற்கான அறிகுறிகள் தோன்றவே தோன்றாது.

"இவன்" என்கிற ஒடாத பார்த்திபன் படத்தில் ஒரு வசனம் வரும். "கஷ்டம் வரும்போதெல்லாம், வானத்திலிருந்து எம்.ஜி.ஆரும், ரஜினிகாந்தும் குதிச்சு சண்டை போட வரமாட்டாங்க. அவங்கவங்க பிரச்சனையை அவங்கவங்க தான் தீர்க்கணும்". அதே போல தான் இதுவும். குடும்ப அமைப்பிலிருந்து வெளியே இருக்கும் பெருந்தலைவர்களும், புத்திஜீவிகளும், பிரம்மசாரிகளும் தான் இவற்றை பேச முடியும் நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அந்த மனவிலங்கிலிருந்து வெளியே வாருங்கள்.

இகழும் சூழல் தான் நீங்கள் நாளை சமூகம் மதிக்கும் மனிதரானால், "எனக்கு அப்பவே தெரியும், அவரு பெரிய ஆளா வருவாருன்னு" என்று ஜால்ரா அடிக்கும்.
 
உங்களுடைய இந்த பதிவைத் தான் தேடிக்கொண்டிருந்தேன், நீங்கள் குறிப்பிட்ட அந்த நாலு பேரில் நீங்களும் உண்டு, நானும் உண்டு,

"மாற்றம் வேண்டும். மாற்றம் வேண்டும் என்று கேட்காதே. மாற்றம் வேண்டுமெனில்,மாற்றமாக நீ மாறி விடு"

அருமையான விடயம்

கொஞ்சம் இதையும் பாருங்களேன்
ஆணாதிக்கமும் பெண்ணியமும் சொந்த வாழ்க்கையும்

 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]