Oct 28, 2005

சென்னை மழை நிலவரம் - வெயில் அடிக்கிறது : )

நேற்று இரவு நான் பதிந்ததற்கு பிறகு மழை இல்லை. வானம் தெளிவாக இருக்கிறது. வெயில் அடிக்கிறது. எங்கள் தெருவில் இருக்கும் தண்ணீர் வடிந்து வழமையான சாலை நிறத்திற்கு வந்துவிட்டது. ஆனாலும், இன்றும் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மழை நீர் அதிகமாக தேங்கியுள்ள பகுதிகளில் நீர் வடிய இரண்டு நாட்களாகலாம். செய்திதாள்களில் கடந்த 30 வருடங்களில் ஒரே நாளில் இப்படி மழை பெய்ததில்லை என்று புள்ளிவிவரங்கள் காட்டுகிறார்கள். இந்த முறற ஒரளவிற்கு சென்னை மழையினை சமாளித்திருக்கிறது என்று சொல்லலாம். அருள் இதை அழகாக பதிந்திருக்கிறார். இதைப் பற்றிய பத்ரியின் பதிவு.

Now Chennei is back to work :)

சென்னை மழை நிலவரம் - 4 படங்கள்/தகவல்கள்

இதுவரை சென்னையில் மட்டும் குறைந்தது 50,000 -100000 பேர்கள் சென்னை மாநகராட்சியால் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று தங்க வைத்திருக்கிறார்கள். இன்னமும் வடசென்னையில் நிறைய இடங்களில் தீவு போல் சூழ்ந்த இடங்களில் மக்கள் உதவிக்கு காத்திருக்கிறார்கள். ராணுவம் வரவழைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஸ்ரீரங்கத்தில் பெருக்கெடுத்தோடும் காவிரி உள்ளே புகாமல் இருக்க ராணுவத்தினரின் உதவி கோரப்பட்டிருந்தது.

The State Electricity Board, as a precautionary step to avoid deaths due to electrocution, disconnected power supply wherever heavy flooding had taken place, Jayalalithaa said adding she had directed the EB to restore supply after ensuring safety.

About 50,000 people had been evacuated from low-lying areas and accommodated in relief centres opened by Chennai Corporation and food packets would be distributed in these centres, she said.
- மேலும் அறிய

மேலும் சில படங்கள்நன்றி: பிபிசி தளம், பிரஸ் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா

மேலும் தகவல்களுக்கு கூகிள் செய்தி தொகுப்பினை பாருங்கள்

சென்னை மழை நிலவரம் - 4 தகவலுக்கு

இப்போது மணி 12.30 இந்திய நேரம். மழை இல்லை. காற்று 60 கீ.மீ வேகத்தில் வீசும் என்று வானிலை அறிக்கையில் சொல்லியிருந்தார்கள். மிதமான காற்று வீசுகிறது. இன்னமும் நகரம் இருளில் முழ்கிக் கிடக்கிறது. பத்ரி சொன்னதுப் போல வதந்தீகளை நம்பாதீர்கள். யாரும் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து இறந்ததாக இதுவரை தகவலில்லை. பெரும்பாலான இடங்களில் பாதுகாப்புக்காக மின்சாரத்தினை துண்டித்து வைத்திருக்கிறார்கள். மழை இல்லை. ஆனாலும், வேர்ல்ட் வெதரில் இன்னமும் இரண்டு நாட்களுக்கு மித/பலமான மழை உண்டு என்று ஆரூடம் சொல்லியிருக்கிறார்கள். இப்போதைக்கு நகரம் மழையில்லாமல் (அல்லது கே.கே. நகர் சுற்றியுள்ள பகுதிகளிலாவது மட்டும்) இருக்கிறது. நாளை காலை நிலைமை சீராகும்.

செல்பேசிகளில் யாரையும் அழைக்காதீர்கள். நகரம் மின்சாரம் துண்டித்த நிலையில் இருப்பதால், நிறைய பேர்கள் ரீ-சார்ஜ் செய்திருக்க வாய்ப்பில்லை. தரை தொலைப்பேசியில் அழையுங்கள். அல்லது உங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லையெனில் உங்கள் நண்பர்/உறவினர் எண்களை narain at gmail dot com - கிற்கு பெயர், உறவு முறைகளோடு அனுப்பி வையுங்கள். என்னால் முடிந்த வரையில் காலையில் எல்லோருடனும் தொலைபேசி விட்டு, தனிமடல் வரைகிறேன்.

இப்போதைக்கு பெரிதாய் பயங்களில்லை. சாலைகளில் காலையில் தண்ணீர் வடிந்து விடும் என்ற நம்பிக்கையுடன் தூங்கப் போகிறேன்.

Oct 27, 2005

சென்னை மழை நிலவரம் - 3 படங்கள்நன்றி: ரிடிப்.காம், தமிழ்முரசு,

சென்னை மழை நிலவரம் - 2

சென்னை செனட்ரலிருந்து காலையிலிருந்து எந்த ரயிலும் வரவில்லை. தென்னக ரயில்வே பொது மேலாளரின் சன் டிவி நேர்காணலில் நாளை காலை 12மணி வரை எவ்விதமான ரயிலும் சென்ட்ரலிலிருந்து புறப்படாது என்று தெரிவித்தார். எழும்பூரிலிருந்து தேர்ந்தெடுத்த சில வண்டிகள் செல்லும் என்று தெரிகிறது. சென்னை விமானநிலையத்தின் ஒடுபாதை தண்ணீரில் இருப்பதால், சில உள்நாட்டு வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன அல்லது தாமதமாக தரையிறக்கப்படுகின்றன. கோயம்பேட்டிலிருந்து எவ்வித வெளியூர் வண்டிகளும் எனக்கு கிடைத்த தகவல்களின் படி செல்லவில்லை. தமிழக அரசு மீட்புப் பணிக்கு ராணுவ உதவி கோரியிருக்கிறது.

மாநகர பேருந்துகள் பெரும்பாலான இடங்களில் இல்லை. நான் வரும்போது ஆங்காங்கே பஸ் ஸ்டாண்ட்களில் மக்கள் காத்திருப்பதைப் பார்த்தேன். பெரும்பாலான பேருந்துகள், ஆட்டோக்கள் ஒடவில்லை.

சென்னை மழை நிலவரம்

"செம காட்டு" என்பார்களே அதுதான் நடக்கிறது சென்னையில். எல்லா இடங்களும் மிதக்கின்றன. சென்னையில் நிறைய இடங்களில் மின்சாரமில்லை. மின்சாரமில்லாததால், இருந்த நேரத்தினை செல்பேசியே கொன்ற நிறைய நபர்கள் மீண்டும் ரீ-சார்ஜ் செய்ய வசதியில்லாமல், செல்பேசிகளை ஆஃப் செய்திருக்கிறார்கள். நேற்று இரவு ஆரம்பித்த மழை இன்னமும் விட்ட பாடில்லை. என்னுடைய அலுவலகத்திற்கு ஆட்டோவில் நீந்திப் போய் பார்த்தால், முக்கால்வாசி தி.நகரில் மின்சாரம் நிறுத்தப்பட்டிருக்கிறது. எனக்கு தெரிந்த அளவில் வளசரவாக்கம், விருகம்பாக்கம், சாலிகிராமம், 90% வடசென்னை, கோடம்பாக்கத்தில் மின்சாரமில்லை. காலை 11 மணிக்கு மேலேயே சென்ட்ரல் சுற்றியிருக்கும் பகுதிகளில் பேருந்துகள் நகரவில்லை. இன்னமும் மழை பெய்துக் கொண்டிருக்கிறது. நாளை மதியம் வரை மழை பெய்துக் கொண்டிருக்கும் என்கிறார்கள். பள்ளி,கல்லூரி,அரசு அலுவலகங்கள் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும். அரசு விடுமுறை விட்டிருக்கிறார்கள். எல்லா இணைய இணைப்புகளும் வேலை செய்கின்றன. கிண்டி, அரங்கநாதன் சுரங்கப்பாதை, நந்தனம் பகுதிகளில் நீர் அதிகமாய் இருக்கிறது. திருவெல்லிக்கேணியில் ஜாம்பஜாரில் தண்ணீர் அதிகமாக முழங்கால் அளவு இருப்பதாக சொல்கிறார்கள். நங்கநல்லூர், பம்மல்,பல்லாவரம், குரோம்பேட்டை, முடிச்சூர் சாலை நிலவரங்கள் தெரியவில்லை. விருகம்பாக்கத்திலிருந்து கோயம்பேடு செல்லும் சாலையெங்கும் நீர் இருக்கிறது. ஐகாரஸ் பிரகாஷிடம் பேசிய போது, சின்மயா நகரின் குறுக்கேயோடும் கூவமும், சாலையும் ஒரு சேர இருப்பதாக சொன்னார். ஆக அங்கேயும் நிலவரம் சரியில்லை.

தி.நகரின் இரண்டு பாலங்களும் முழ்கி கிடக்கின்றன. எல் ஐ சி அருகே முழங்கால் அளவிற்கு தண்ணீர் இருக்கிறது. ஜி.என்.செட்டி சாலையில் தண்ணீர் விரவி இருக்கிறது. அசோக் நகரின் பல அவென்யூகளில் தண்ணீர் இருக்கிறது. வடசென்னை தான் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் மூவர் வடசென்னையிலிருந்து கொடுத்த தகவல்களைக் கேட்டால், மிக அதிகமான அளவு தண்ணீர் நீக்கமற நிறைந்திருக்கிறது. எங்கும் மின்சாரமில்லை. யானைகவுனி, ராயபுரம், காசிமேடு, தண்டையார் பேட்டை, காலடிப்பேட்டை, திருவொற்றியூர், அஜாக்ஸ், சுதந்திர நகர், வியாசர்பாடி, மகாகவி பாரதி நகர், பெரம்பூர் என எல்லா இடங்களிலும் இடுப்பளவு தண்ணீர் இருக்கிறது. எங்கும் பாதுகாப்பாக மின்சாரத்தினை துண்டித்து வைத்திருக்கிறார்கள்.

வடசென்னையில், மத்திய சென்னையில் உறவினர்கள், நண்பர்கள் இருப்பவர்கள், லேண்ட் லைனுக்கு முயற்சி செய்யுங்கள். ரீசார்ஜ் செய்யும் வசதிகள் இன்மையால், செல்பேசி இணைப்புகள் பாதிக்கப்படலாம்.

சென்னையின் ட்ராபிக் நிலவரத்தினை தெரிந்துக் கொள்ள 2345 2359/360/361/362/324/325 தொலைபேசுங்கள். ஏர் டெல் நிறுவனத்தினரிடமிருந்து எனக்கு வந்த குறுஞ்செய்தியில் இருந்த எண்கள் இவை. தாம்பரம், காஞ்சிபுரம், பூந்தமல்லி பகுதிகளும் தீவிரமான பாதிப்பிற்கு உள்ளாயிருக்கின்றன. தொலைக்காட்சியில் பார்த்தவரை வஞ்சனையில்லாமல் எல்லா இடங்களும் நீருக்குள் இருக்கின்றன. சென்னை தாண்டி மழையில் நனையாமல், மின்சாரம், இணையம் வேலை செய்யும் நண்பர்கள், அந்த அந்த பகுதிகளில் நிலவரத்தினை பதிந்தால் நன்றாக இருக்கும். எல்லோருக்கும் இன்றைக்கு ரேடியோ தான் கடவுள். எந்த கவலையும் இல்லாமல் எல்லா சானல்களிலும், மாமியார்கள் மருமகள்களை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இருட்டில், சன் மியுசிக்கிற்கு தொலைபேசி "அழகான இள மாலை நேரம்" பாடலை நேயர் விருப்பமாக கேட்கிறார்கள். ஆட்டோக்காரர்கள் பக்கத்து தெருவிற்கு போக 100ரூபாய் கேட்கிறார்கள். நூடுல்ஸும், இன்ஸ்டெண்ட் மாவும் அதிக அளவில் விற்கின்றன. அடுப்பெரியும் வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது.

ட்சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக எண்ணூரில் ஒரிடத்தினை அரசு ஒதுக்கியிருந்தது. நிலவரம் என்னவென்று தெரியவில்லை. வடசென்னையிலிருந்து பேசிய நண்பர் மொத்த வடசென்னையிலும் மின்சாரமில்லை என்றார். முழுமையான சேதம், வீட்டற்றோர் நிலவரம் தெரியவில்லை. அண்ணா நகர் கிழக்கில் கூவம் நிரம்பி வழிகிறது. என்னுடைய அடுக்ககம், அலுவலகத்திலிருக்கும் கிணறுகள் நிரம்பி விட்டன. கிட்டத்திட்ட பத்து வருடங்களாகின்றன கிணறுகள் நிரம்பிப் பார்த்து. கேமரா தொலைபேசி இன்மையால் எவற்றையும் "பிடித்து" பதிய முடியவில்லை.

மின்சாரமும், இணையத் தொடர்பும் இருந்தால் நள்ளிரவு மீண்டும் புதிய தகவல்களோடு பதிய முயல்கிறேன்.

Oct 14, 2005

கீரி-பாம்பு சண்டை

பிதாமகனில் சூர்யாவின் பாத்திர அமைப்பு ஒரு அட்டகாசம். டூபாக்கூர் பேர்வழி. இதுப் போல இந்தியாவில் நிறைய காண்பிக்கலாம். முன்பெல்லாம், வட சென்னை மின்ட் தெருவில் கிரெளன் திரையரங்கு அருகில் லேகியம் விற்பார்கள். உலகின் சர்வ லோக நிவாரணியாக அதை விற்பவன் நான்கு முறை இருமிக் கொண்டே கூவி, கூவி விற்பான். கீரி பாம்பு சண்டை காட்டுகிறேன் பேர்வழி என்று ஒரு இத்துப் போன கூடையையும், ஐசியுவிலிருந்து கொண்டு வரப்பட்ட கீரியையும் கொண்டு கூட்டம் சேர்ப்பார்கள், கடைசி வரை பாம்பு கூடையை விட்டு வெளிவராது. கீரி சும்மா இரண்டு தடவை சவுண்ட் விட்டு போய்விடும். இந்த மாதிரி மோடி மஸ்தான் ஆசாமிகள் தொழில்நுட்பம் ஆரம்பித்த பிறகு குறைந்தால் போல் தெரிந்தது. ஆனாலும் ஐஐபிஎம் அந்த குறையினை தீர்த்து வைத்து விட்டது.

ஒரு வாரமாக இந்திய வலைப்பதிவுகள் பற்றி எரிகின்றன. ஐஐபிஎம் என்கிற மேலாண்மை நிறுவனத்தினை நடத்துகிற அரிந்தம் செளத்திரி மீது தான் இவ்வளவு பாய்ச்சலும். ஐஐபிஎம் ஒரு டுபாக்கூர் பல்கலைக்கழகம். எனக்கு வாரத்துக்கு மூன்று பல்கலைக்கழகங்கள் ஹாட்மெயிலில் டாக்டர் பட்டம் தர காத்திருக்கின்றன. அந்த மாதிரி வகையறாதான் ஐஐபிஎம். எல்லா தேசிய நாளிதழ்களிலும் அரைப்பக்க, முழுப்பக்க விளம்பரம் தந்து நீங்கள் சேர்ந்தால், உடனே பில் கேட்ஸ் தன் நாற்காலியினை விட்டு இறங்கி உங்களைத் தான் தலைமை தாங்க சொல்லுவார் என்கிற பில்டப் வேறு. அரிந்தம் செளத்திரி தன்னை மேலாண்மையினைக் காக்க வந்த அவதார புருஷனாய் நினைத்தன் விளைவு தான் இது. மொத்தத்தில் இது ஒரு ஒயிட் காலர் டூபாக்கூர் நிறுவனம்.

கொஞ்ச நேரம் பார்த்த பதிவுகளையெல்லாம் படித்த பின்னர், இது அச்சு அசல் அக்மார்க் டூபாக்கூர். சரி என் பங்குக்கு சும்மா இருப்பானே என்று எனக்கு தெரிந்த தென்னிந்தியாவை முக்கியமாய் சென்னை மற்றும் தமிழகத்தினை பற்றி தெஹல்காவில்தொடர்ந்து எழுதும் வினோஜ் குமாருக்கு தொலைபேசி, இதற்கான சுட்டிகளை அனுப்பி வைத்திருக்கிறேன். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று

இங்கே தொடங்கியது. இவர் எழுதப் போக, இங்கெல்லாம் பற்றி, எரியத் தொடங்கி, தமிழ் வலைப்பதிவுகளில் பிரகாஷ் ஆரம்பித்து வைத்து, சந்தோஷ் தொடர நானும் எழுதியிருக்கிறேன். இவற்றில் பிடித்தது நண்பர் கிருபா ஷங்கர் போட்ட ஒரு பனியன் வாசகம், உங்களுக்காக கீழே:


Oct 13, 2005

ஒழுங்காயிரு இல்லை ஒடிப்போ

ஒரு டீக்கடையில் இருந்து நாங்கள் மூவரும் (யார் அந்த மூவர்.. keep guessing) பேசிய பேச்சில் சத்தியமாய் தமிழ்நாட்டில் கலவரம் வெடித்திருக்கும் வாய்ப்புகளிருந்தது. இளையராஜா, குஷ்பு, பாரதிராஜா, பெரியார், நாஞ்சில் நாட்டு தமிழ், பெண் கவிஞர்கள், பொய்க்கால் குதிரை, சைமன் கமிஷன், ரஜினி, எம்.ஜி.ஆர் (வாத்தியார் தல), ஜெயமோகன் என்று நாங்கள் பேசிய பேச்சினை முழுமையாக யாராவது கேட்டு இருந்தால், கண்டிப்பாக கட்டையாலேயே அடி வாங்கியிருக்கும் வாய்ப்புகள் இருந்திருந்தது. ஆனால் அது வேறொரு நாளைக்கு.

குஷ்பு விஷயத்தினை விட தீவிரமான சில விஷயங்கள் தமிழ்நாட்டில் நடந்துக் கொண்டு வருகின்றது. இதனால், குஷ்புவின் அறீவிலி எதிர்ப்பலையையும், குஷ்பு சொன்னதற்கு ஆதரவாய் நின்றவர்களையும் அலட்சியப்படுத்தும் நோக்கங்களில்லை. ஆனால், அதைவிட தனிமனித சுதந்திரம் என்பது எவ்வளவு கேலிக் கூத்தாக போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு, சமீபத்தில் நடந்த இரண்டு விதயங்கள் சான்றாக இருக்கும்.

பார்க் ஹோட்டலில் நுழைந்து போலீஸ் அத்துமீறியது. அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் மாணவர்கள் மீது போட்டிருக்கும் கலாச்சார கட்டளைகள். துணைவேந்தரின் செயல்கள் நியாயமா, அநியாயமா, மாணவர்களுக்கு தேவையா, இல்லையா என்பது வேறொரு விவாதம். இங்கே கேள்வி தனிமனித சுதந்திரத்தின் எல்லை என்று எதை நிர்ணயிக்கிறோம். ஏற்கனவே, திருமண பந்தத்தினைக் கூட தானே நிர்ணயம் செய்யாமல், பெற்றோர் காட்டிய பெண்/ஆணை மணந்துக் கொண்டு அதை தான் மிகப் பெரிய சமூக நீதியாக (நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் சேப்!) இன்னமும் இந்தியாவில் கட்டிக் காப்பாற்றிக் கொண்டு வருகிறோம். இப்படியிருக்கையில் பதின்மவயதில் ஒரு ஆண்/பெண் இனி தானே தீர்மானித்துக் கொள்ள வேண்டிய விஷயமாய் ஆடையிருக்கிறது. ஆடையென்பது தனிமனித சுதந்திரம். ஆடையினைக் கூட "பெரியவர்கள்" "மேன்மக்கள்" "அரசாங்கம்" தான் தீர்மானிக்க வேண்டுமென்றால், பேசாமல், ஸ்டாலினையும், லெனினையையும் கொண்டு வந்து விடலாம். அரசாங்கம் ஏற்கனவே உங்கள் வீட்டினைத் தவிர வேறெங்கு உடலுறவு கொண்டாலும், அதை பாலியல் வன்முறையாக, அத்துமீறலாக பார்க்கிறது. இனி பள்ளி, கல்லூரிகளில், பேருந்துகளில், கழிப்பிடங்களில் என எல்லா இடங்களிலும் மக்கள் "சீரான" ஆடைகளை அணிந்து போகலாம். துணைவேந்தர்கள் இனி மாணவர்கள், என்ன உள்ளாடைகள் அணிய வேண்டும் என்பதையும் நிர்ணயித்துவிட்டால், எல்லாம் ஒரே சீராக இருக்கும். இனி மாணவர்கள் எல்லோரும் யூனிபார்ம் உள்ளாடைகளையும், துணிகளையும் அணிந்து இந்திய கலாச்சார தூதுவர்களாக வலம் வரலாம்.

பெரியவங்க சொல்றதெல்லாம் நம்ம நன்மைக்காக என்று பொதுவாக ஜல்லியடிக்காமல், கொஞ்சம் நிதானமாய் யோசித்தால் எந்த பெரியவர்கள் எந்த சமூக நீதியினை கட்டிக் காபாற்றுவதற்காக இதையெல்லாம் செய்கிறார்கள் என்று ஆராய்ந்தால், ஒரு மிகப்பெரிய கலாச்சார பாஸிச குழியில் தமிழகத்தினை தள்ளுவதற்கான அறிகுறிகள் இதில் தெரியக் கூடும். எந்த சமூக நிலையினை தூக்கிப் பிடிக்க இவை முன்னிறுத்தப் படுகின்றன என்பது பற்றிய விரிவான விவாதங்கள் அவசியம். வசந்த் திருமாவினை பா.ஜ.கவினை விட மோசமான கலாச்சார கும்பல் என்று சொன்னால், அதைவிட மிக மோசமான பாஸிச கும்பல் தற்போது தமிழகத்தின் உயர்கல்வி துறைகளில் இருக்கிறது என்று அறுதியிட்டு சொல்லலாம். அண்ணா பல்கலைக் கழகத்தில் எத்தனை இன்குபேட்டர்கள் இருக்கின்றன ? பல்கலைக்கழக பாடத்திட்டம் இப்போதைய தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியிருக்கிறதா ? மென்பொருள் தாண்டிய மற்ற துறைகளின் தற்போதைய வளர்ச்சியினை பாடத்திட்டங்கள் உள்ளடக்கியிருக்கிறதா ? அண்ணா பல்கலைக்கழகம் எத்தனை பெரிய நிறுவனங்களோடு துணை சேர்ந்து மாணவர்களுக்கான புதிய வாய்ப்புகளை உண்டாக்க முயன்றுக் கொண்டிருக்கிறது ? இப்படி வளர்ச்சிக்கான கேள்விகளை அடுக்கிக் கொண்டு போகலாம். இதுவெல்லாம் துணைவேந்தர்களுக்கு தேவையில்லாத விதயம். வெளிர் நிற சட்டைகளிலும், புடவையிலும் தான் இந்திய கலாச்சாரம் வாடகை, அட்வான்ஸ் தராமல் குடியிருக்கிறது, அதைக் காக்க வேண்டாமா ?

ஒரு புறம் பன்னாட்டு நிறுவனங்களை வெத்தலைப் பாக்கு வைத்து அழைக்கும் மாநில அரசுகள் இன்னொரு புறம் ஒரு நடன அரங்கத்தினுள் புகுந்து மக்களை அடித்து விரட்டும் அவலம் இங்கு தான் நடக்கும். இத்தனைக்கும் அங்கே நடனமாடிய யாரும் காவல்துறையில் புகார் செய்யவில்லை. சில வருடங்களுக்கு முன்பு இதைப் போல அண்ணா நகர் டவரில் அமர்ந்திருந்த காதலர்களை (?!) போட்டோ பிடித்து பத்திரிக்கையில் காவல்துறை தந்தது. யார் காவல்துறைக்கு இந்த அதிகாரத்தினை தந்தது ? இதையெல்லாம் பார்க்கும் போது எழும் முக்கியமான கேள்வி, இந்தியாவில் தனி மனித சுதந்திரம் என்றால் என்ன என்பதை இன்னமும் தெளிவாக வரையறை செய்யாமல் இருப்பது. ஒரு அரசியல்வாதியையோ, நடிகனையோ அவர்களின் அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுத்தால், அவர்கள் அடிக்கிற வரைக்கும், ஏன் கேமரா ரோல்களை பிடுக்கி எடுத்துக் கொள்ளும் வரைக்கும் அனுமதிக்கும் நாட்டில் தான் ஒரு சாதாரண பிரஜை அவன்/அவளுக்கு பிடித்தவரோடு பேசினாலோ, நடனமாடினாலோ அவர்களை புகைப்படம் பிடித்து பத்திரிக்கையில் வெளியிட்டு, அவமானப்படுத்தி, மானத்தினை வாங்குவது இங்கு தான் நடக்கும்.

துணைவேந்தரோ, காவல்துறையோ, ஏதேனும் ஒரு பத்திரிக்கையோ நினைத்தால் உங்களின் தனி மனித விருப்பு வெறுப்புகளில் அவர்களின் சார்புகளை வலுக்கட்டாயமாக திணிக்கலாம். நாமும், "பெரியவா" சொல்வதை கேட்டுக் கொண்டு "ஓழுக்கமாக" இருந்துவிடலாம். நாடு "ஒழுக்கத்தால்" முன்னேறிவிடும். எவை முக்கியமானவைகளோ, அவை கண்டிப்பாக கண்டுக் கொள்ளப் பட போவதில்லை. இன்றைக்கு என்னுடைய வாகனத்தினை எடுக்காமல், ஆட்டோவில் கே.கே. நகரிலிருந்து, தி.நகர் வர இரண்டு மணி நேரமானது. வழியெங்கும், அடைசல்கள், தண்ணீர் ஆறாக ஒடுகிறது. இவையெல்லாம் முக்கியமில்லை. ஆனால், கட்டணம் கட்டி, தன்னுடைய சுய நிம்மதிக்காக ஒருவன் நடனமாடினால், காவல்துறைக்கும், அரசுக்கும் கடமையுணர்வு பெருக்கெடுத்து ஒடுகிறது. பல்கலைக் கழகங்களுக்கு தங்களை உலகளவில் பாடத்திட்டத்தினையும், மாணவர்களையும் முன்னேறவேண்டிய கடமைகள் இருக்கின்றன. ஆனால் அது முக்கியமல்ல, மாணவர்கள் என்ன அணிந்து வருகிறார்கள் என்பது தான் முக்கியம்.

மனித உரிமை கமிஷன் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்றாக இருக்கும்போது, தனி மனிதன் மீது கட்டாயமாக சுமத்தப்படும் இதுப் போன்ற வன்முறைகளை ஏன் இன்னமும் கணக்கிலெடுக்காமல் இருக்கிறார்கள் என்று புரியவில்லை. இது தனி மனித உரிமையில்லையா? இது தனி மனித சுதந்திரத்தின் குறுக்கீடு இல்லையா? சாதாரண மனிதர்களுக்கும், செலிபிரிடிகளுக்கும் வெவ்வேறான சட்டங்களா ? இன்னமும் நகரமெங்கும் கழிப்பிடங்கள் இல்லாத ஊரில் [அரசாங்கம் உங்களை அடக்கு அடக்கு என்று சொல்லுகிறது] வேறெதைப் பற்றி பேச முடியும்.

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]