Oct 13, 2005

ஒழுங்காயிரு இல்லை ஒடிப்போ

ஒரு டீக்கடையில் இருந்து நாங்கள் மூவரும் (யார் அந்த மூவர்.. keep guessing) பேசிய பேச்சில் சத்தியமாய் தமிழ்நாட்டில் கலவரம் வெடித்திருக்கும் வாய்ப்புகளிருந்தது. இளையராஜா, குஷ்பு, பாரதிராஜா, பெரியார், நாஞ்சில் நாட்டு தமிழ், பெண் கவிஞர்கள், பொய்க்கால் குதிரை, சைமன் கமிஷன், ரஜினி, எம்.ஜி.ஆர் (வாத்தியார் தல), ஜெயமோகன் என்று நாங்கள் பேசிய பேச்சினை முழுமையாக யாராவது கேட்டு இருந்தால், கண்டிப்பாக கட்டையாலேயே அடி வாங்கியிருக்கும் வாய்ப்புகள் இருந்திருந்தது. ஆனால் அது வேறொரு நாளைக்கு.

குஷ்பு விஷயத்தினை விட தீவிரமான சில விஷயங்கள் தமிழ்நாட்டில் நடந்துக் கொண்டு வருகின்றது. இதனால், குஷ்புவின் அறீவிலி எதிர்ப்பலையையும், குஷ்பு சொன்னதற்கு ஆதரவாய் நின்றவர்களையும் அலட்சியப்படுத்தும் நோக்கங்களில்லை. ஆனால், அதைவிட தனிமனித சுதந்திரம் என்பது எவ்வளவு கேலிக் கூத்தாக போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு, சமீபத்தில் நடந்த இரண்டு விதயங்கள் சான்றாக இருக்கும்.

பார்க் ஹோட்டலில் நுழைந்து போலீஸ் அத்துமீறியது. அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் மாணவர்கள் மீது போட்டிருக்கும் கலாச்சார கட்டளைகள். துணைவேந்தரின் செயல்கள் நியாயமா, அநியாயமா, மாணவர்களுக்கு தேவையா, இல்லையா என்பது வேறொரு விவாதம். இங்கே கேள்வி தனிமனித சுதந்திரத்தின் எல்லை என்று எதை நிர்ணயிக்கிறோம். ஏற்கனவே, திருமண பந்தத்தினைக் கூட தானே நிர்ணயம் செய்யாமல், பெற்றோர் காட்டிய பெண்/ஆணை மணந்துக் கொண்டு அதை தான் மிகப் பெரிய சமூக நீதியாக (நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் சேப்!) இன்னமும் இந்தியாவில் கட்டிக் காப்பாற்றிக் கொண்டு வருகிறோம். இப்படியிருக்கையில் பதின்மவயதில் ஒரு ஆண்/பெண் இனி தானே தீர்மானித்துக் கொள்ள வேண்டிய விஷயமாய் ஆடையிருக்கிறது. ஆடையென்பது தனிமனித சுதந்திரம். ஆடையினைக் கூட "பெரியவர்கள்" "மேன்மக்கள்" "அரசாங்கம்" தான் தீர்மானிக்க வேண்டுமென்றால், பேசாமல், ஸ்டாலினையும், லெனினையையும் கொண்டு வந்து விடலாம். அரசாங்கம் ஏற்கனவே உங்கள் வீட்டினைத் தவிர வேறெங்கு உடலுறவு கொண்டாலும், அதை பாலியல் வன்முறையாக, அத்துமீறலாக பார்க்கிறது. இனி பள்ளி, கல்லூரிகளில், பேருந்துகளில், கழிப்பிடங்களில் என எல்லா இடங்களிலும் மக்கள் "சீரான" ஆடைகளை அணிந்து போகலாம். துணைவேந்தர்கள் இனி மாணவர்கள், என்ன உள்ளாடைகள் அணிய வேண்டும் என்பதையும் நிர்ணயித்துவிட்டால், எல்லாம் ஒரே சீராக இருக்கும். இனி மாணவர்கள் எல்லோரும் யூனிபார்ம் உள்ளாடைகளையும், துணிகளையும் அணிந்து இந்திய கலாச்சார தூதுவர்களாக வலம் வரலாம்.

பெரியவங்க சொல்றதெல்லாம் நம்ம நன்மைக்காக என்று பொதுவாக ஜல்லியடிக்காமல், கொஞ்சம் நிதானமாய் யோசித்தால் எந்த பெரியவர்கள் எந்த சமூக நீதியினை கட்டிக் காபாற்றுவதற்காக இதையெல்லாம் செய்கிறார்கள் என்று ஆராய்ந்தால், ஒரு மிகப்பெரிய கலாச்சார பாஸிச குழியில் தமிழகத்தினை தள்ளுவதற்கான அறிகுறிகள் இதில் தெரியக் கூடும். எந்த சமூக நிலையினை தூக்கிப் பிடிக்க இவை முன்னிறுத்தப் படுகின்றன என்பது பற்றிய விரிவான விவாதங்கள் அவசியம். வசந்த் திருமாவினை பா.ஜ.கவினை விட மோசமான கலாச்சார கும்பல் என்று சொன்னால், அதைவிட மிக மோசமான பாஸிச கும்பல் தற்போது தமிழகத்தின் உயர்கல்வி துறைகளில் இருக்கிறது என்று அறுதியிட்டு சொல்லலாம். அண்ணா பல்கலைக் கழகத்தில் எத்தனை இன்குபேட்டர்கள் இருக்கின்றன ? பல்கலைக்கழக பாடத்திட்டம் இப்போதைய தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியிருக்கிறதா ? மென்பொருள் தாண்டிய மற்ற துறைகளின் தற்போதைய வளர்ச்சியினை பாடத்திட்டங்கள் உள்ளடக்கியிருக்கிறதா ? அண்ணா பல்கலைக்கழகம் எத்தனை பெரிய நிறுவனங்களோடு துணை சேர்ந்து மாணவர்களுக்கான புதிய வாய்ப்புகளை உண்டாக்க முயன்றுக் கொண்டிருக்கிறது ? இப்படி வளர்ச்சிக்கான கேள்விகளை அடுக்கிக் கொண்டு போகலாம். இதுவெல்லாம் துணைவேந்தர்களுக்கு தேவையில்லாத விதயம். வெளிர் நிற சட்டைகளிலும், புடவையிலும் தான் இந்திய கலாச்சாரம் வாடகை, அட்வான்ஸ் தராமல் குடியிருக்கிறது, அதைக் காக்க வேண்டாமா ?

ஒரு புறம் பன்னாட்டு நிறுவனங்களை வெத்தலைப் பாக்கு வைத்து அழைக்கும் மாநில அரசுகள் இன்னொரு புறம் ஒரு நடன அரங்கத்தினுள் புகுந்து மக்களை அடித்து விரட்டும் அவலம் இங்கு தான் நடக்கும். இத்தனைக்கும் அங்கே நடனமாடிய யாரும் காவல்துறையில் புகார் செய்யவில்லை. சில வருடங்களுக்கு முன்பு இதைப் போல அண்ணா நகர் டவரில் அமர்ந்திருந்த காதலர்களை (?!) போட்டோ பிடித்து பத்திரிக்கையில் காவல்துறை தந்தது. யார் காவல்துறைக்கு இந்த அதிகாரத்தினை தந்தது ? இதையெல்லாம் பார்க்கும் போது எழும் முக்கியமான கேள்வி, இந்தியாவில் தனி மனித சுதந்திரம் என்றால் என்ன என்பதை இன்னமும் தெளிவாக வரையறை செய்யாமல் இருப்பது. ஒரு அரசியல்வாதியையோ, நடிகனையோ அவர்களின் அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுத்தால், அவர்கள் அடிக்கிற வரைக்கும், ஏன் கேமரா ரோல்களை பிடுக்கி எடுத்துக் கொள்ளும் வரைக்கும் அனுமதிக்கும் நாட்டில் தான் ஒரு சாதாரண பிரஜை அவன்/அவளுக்கு பிடித்தவரோடு பேசினாலோ, நடனமாடினாலோ அவர்களை புகைப்படம் பிடித்து பத்திரிக்கையில் வெளியிட்டு, அவமானப்படுத்தி, மானத்தினை வாங்குவது இங்கு தான் நடக்கும்.

துணைவேந்தரோ, காவல்துறையோ, ஏதேனும் ஒரு பத்திரிக்கையோ நினைத்தால் உங்களின் தனி மனித விருப்பு வெறுப்புகளில் அவர்களின் சார்புகளை வலுக்கட்டாயமாக திணிக்கலாம். நாமும், "பெரியவா" சொல்வதை கேட்டுக் கொண்டு "ஓழுக்கமாக" இருந்துவிடலாம். நாடு "ஒழுக்கத்தால்" முன்னேறிவிடும். எவை முக்கியமானவைகளோ, அவை கண்டிப்பாக கண்டுக் கொள்ளப் பட போவதில்லை. இன்றைக்கு என்னுடைய வாகனத்தினை எடுக்காமல், ஆட்டோவில் கே.கே. நகரிலிருந்து, தி.நகர் வர இரண்டு மணி நேரமானது. வழியெங்கும், அடைசல்கள், தண்ணீர் ஆறாக ஒடுகிறது. இவையெல்லாம் முக்கியமில்லை. ஆனால், கட்டணம் கட்டி, தன்னுடைய சுய நிம்மதிக்காக ஒருவன் நடனமாடினால், காவல்துறைக்கும், அரசுக்கும் கடமையுணர்வு பெருக்கெடுத்து ஒடுகிறது. பல்கலைக் கழகங்களுக்கு தங்களை உலகளவில் பாடத்திட்டத்தினையும், மாணவர்களையும் முன்னேறவேண்டிய கடமைகள் இருக்கின்றன. ஆனால் அது முக்கியமல்ல, மாணவர்கள் என்ன அணிந்து வருகிறார்கள் என்பது தான் முக்கியம்.

மனித உரிமை கமிஷன் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்றாக இருக்கும்போது, தனி மனிதன் மீது கட்டாயமாக சுமத்தப்படும் இதுப் போன்ற வன்முறைகளை ஏன் இன்னமும் கணக்கிலெடுக்காமல் இருக்கிறார்கள் என்று புரியவில்லை. இது தனி மனித உரிமையில்லையா? இது தனி மனித சுதந்திரத்தின் குறுக்கீடு இல்லையா? சாதாரண மனிதர்களுக்கும், செலிபிரிடிகளுக்கும் வெவ்வேறான சட்டங்களா ? இன்னமும் நகரமெங்கும் கழிப்பிடங்கள் இல்லாத ஊரில் [அரசாங்கம் உங்களை அடக்கு அடக்கு என்று சொல்லுகிறது] வேறெதைப் பற்றி பேச முடியும்.

Comments:
நச்!
 
//இங்கே கேள்வி தனிமனித சுதந்திரத்தின் எல்லை என்று எதை நிர்ணயிக்கிறோம்//

//இந்தியாவில் தனி மனித சுதந்திரம் என்றால் என்ன என்பதை இன்னமும் தெளிவாக வரையறை செய்யாமல் இருப்பது.//

//மனித உரிமை கமிஷன் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்றாக இருக்கும்போது, தனி மனிதன் மீது கட்டாயமாக சுமத்தப்படும் இதுப் போன்ற வன்முறைகளை ஏன் இன்னமும் கணக்கிலெடுக்காமல் இருக்கிறார்கள் என்று புரியவில்லை. இது தனி மனித உரிமையில்லையா? இது தனி மனித சுதந்திரத்தின் குறுக்கீடு இல்லையா? //


ஏன் யாரும் இதனை மனித உரிமை மீறலாக இன்னும் வழக்குத் தொடுக்கவில்லை?

மாணவர் சங்கங்களும் இதனை கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.


நமது சட்டங்களில் என்ன இருக்கிறது எந்தை ஏதேனும் வழக்கு வந்தால்தான் வெளிவரும்.
சாதாரண மக்கள் எல்லாருக்கும் அடிப்படி உரிமை பற்றி சட்ட அறிவு இல்லை.
அடிப்படை சட்டக் கல்வியும்,தனிமனித உரிமை வரம்புகளும் தெளிவாக்கப்பட்டு உயர்/மேல் நிலை வகுப்புகளில் கட்டாயப் பாடமாக்கப் படவேண்டும். அதற்காக அதன் மீது தேர்வு வைக்கத் தேவை இல்லை.

(ஏதாவது ஒரு வழியில் மக்களுக்கு போதிக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலை)


//ஆனால், கட்டணம் கட்டி, தன்னுடைய சுய நிம்மதிக்காக ஒருவன் நடனமாடினால், காவல்துறைக்கும், அரசுக்கும் கடமையுணர்வு பெருக்கெடுத்து ஒடுகிறது//


எது குற்றம் என்று தெளிவாக வரையறுக்கப்படாதவரை...

தான் செய்வது சட்டப்படி குற்றமா என்று தெரியாதவரை...

பாதிக்கப்பட்டவர்கள் அதனை எதிர்த்து கேள்வி கேட்காதவரை....

(போலீஸிடம் சாமன்ய மனிதன் எதிர்த்துப் பேசுவதாவது...)

வரதட்சணைக்கு இதுவரை போலீஸ் வழக்குப் போட்டது போல் எல்லாவற்றுக்கும் வழக்குப் போடத்தான் செய்வார்கள்.

(சட்டப்படி வரதட்சணை வழக்குகளை போலீஸ் விசாரிக்கக்கூடாது என்று சமீபத்தில் ஒரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடித்தியுள்ளதாகக் கேள்வி)
 
சூப்பர் + கலக்கல் நாராயணன்!!!
மயிலாடுதுறை சிவா...
 
/அரசாங்கம் உங்களை அடக்கு அடக்கு என்று சொல்லுகிறது/

;-)
 
athavathu ella university-layum professional students(engg,medical)
students has to follow some dress code.athavathu,araikurai adai allath mudi vetta punk styla pona american born prof. kooda thituvar
enbatharku en cousin oru utharanam..america caren sudithar enge kidaikum,pudavai eppadi katta vendum entu class pathu alaya appadi oru nalla azhakiya culture udaya naam en culture illama poga vendum..athan..vetula adichi valakalana oorula than udai kidaikum
 
நல்லவேளை, அந்த மூணு பேரு யாருன்னு ரகசியமா என்கிட்ட சொல்லிட்டீங்க. இல்லாட்டி கம்பி எண்ண வெச்ச விகடன் அட்டை ஜோக் கதையாயிருக்கும்!
 
nan velai paarkum america companyilumdhan decent a udai anindhu vara solgirargal.
idhu parava illai. idharku munbu velai partha idathil vegatha veyililum 3 piece suit.
velai vendamnu solla mudiyuma. ?

college levelle katupadugal konjam overdhan. adhilum eng kalluriyil pudavayum, churidharum
padhugapanathillai. vibathu yerpadutha kudiyadhu. endha adipadayil mudivu seidharo.
pudavayumdhan sexya kattalam. adhukum edhadhu rule irukaa anna univle.?

naama oorleyum vazaku potta oru 1 million dolar thethalamnu nilamai varum podhu..
summa vazhaku pottu thalluvargal.

idhil yetra thazvu vera iruku.

thevai illamal veerapan magalai photo pudithu potta podhu oru sila amaipu idha ithavirka
vendum endru solliyadhu. idhe pathirikaikal sila periya ida vivagaram endral, moodi maraithu
ezudhuvadhai kandadhundu.
 
சுற்றுப்புறத்தைப் பார்த்து எந்தச் சூழ்நிலையில் எப்படி இருக்கவேண்டும், எந்த உடை அணியவேண்டுமென்று தீர்மானிக்கவேண்டியது மாணவர்கள் - அந்த மனமுதிர்ச்சிக்கான சூழலை உருவாக்கிக்கொடுப்பதுதான் நிர்வாகத்தின் வேலையாக இருக்கவேண்டும். அதைச் செய்யத் துப்பில்லை, இவர்களெல்லாம் வந்துவிட்டார்கள். முன்பு பணிபுரிந்த இடத்தில், சந்தேகக் கேஸில் பிடித்துவரப்படும் ஒரு கிராமத்தானுக்கு எவ்வளவு தூரம் 'தனிமனித உரிமை' போலீஸால் அளிக்கப்படுகிறதென்று நேரடியாகப் பார்த்ததுண்டு. அதேசமயம் நான் அங்கு இருக்கநேர்ந்தது, வேலைசெய்யாது தண்டச்சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த, சோம்பேறி என்று வேலையைவிட்டுத் தூக்கியெறிந்த ஒரு subordinate, தூக்கிய என்னைப் பழிவாங்குவதற்காக சுவற்றில் தன் முகத்தை மோதிக்கொண்டும், பிளேடால் கன்னத்தைக் கீறிக்கொண்டும், அதையெல்லாம் செய்தது நான்தான் என்று போலீஸில் கொடுத்த பொய் கேஸுக்காகப் போயிருந்தபோது ;-). Fish rots from the head downwards என்பார்கள். இந்தமாதிரி அழுகல் கல்வி நிறுவனங்களில் நடைபெறுவதுதான் வருத்தமளிக்கும் விஷயம்.
 
// வசந்த் திருமாவினை பா.ஜ.கவினை விட மோசமான கலாச்சார கும்பல் என்று சொன்னால், ..//

நாரயணன், உங்கள் பதிவுடன் முழுமையாய் ஒத்து போகிறேன்.

ஆனால் நான் திருமாவை 'பாஜகவை விட மோசமான கலாச்சார கும்பல் 'என்று சொல்லவில்லை. அப்படி ஒரு கருத்தும் எனக்கு கிடையாது. இன்னமும் திருமாவிடம் வெளிப்படும் பாசிசத்திற்கும் இந்துத்வ பாசிசத்திற்கும் மிக பெரிய வித்தியாசம் இருப்பதாகவே நினைக்கிறேன். ஆனால் பாஜக/ சிவசேனாவுடன் வேறுபடாத வகையில் திருமா ஆட்டம் ஆடும் போது இந்த வித்தியாசத்தை பேசுவதும் அதை முன்வைத்து திருமாவிற்கு பரிந்து பேசிவதோ நியாயமான செயல்பாடாக இந்த சந்தர்ப்பத்தில் தெரியவில்லை.
 
உருப்படாதது துணைவேந்தர் ஆணை!
உருப்படாதது கமிஷனர் ஆக்ஷன்!
உருப்படாதது திருமா போராட்டம்!
இவர்களோடு லெனினும் ஸ்டாலினுமா?
நாராயணன், இது உருப்படாதது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]