Oct 27, 2005

சென்னை மழை நிலவரம்

"செம காட்டு" என்பார்களே அதுதான் நடக்கிறது சென்னையில். எல்லா இடங்களும் மிதக்கின்றன. சென்னையில் நிறைய இடங்களில் மின்சாரமில்லை. மின்சாரமில்லாததால், இருந்த நேரத்தினை செல்பேசியே கொன்ற நிறைய நபர்கள் மீண்டும் ரீ-சார்ஜ் செய்ய வசதியில்லாமல், செல்பேசிகளை ஆஃப் செய்திருக்கிறார்கள். நேற்று இரவு ஆரம்பித்த மழை இன்னமும் விட்ட பாடில்லை. என்னுடைய அலுவலகத்திற்கு ஆட்டோவில் நீந்திப் போய் பார்த்தால், முக்கால்வாசி தி.நகரில் மின்சாரம் நிறுத்தப்பட்டிருக்கிறது. எனக்கு தெரிந்த அளவில் வளசரவாக்கம், விருகம்பாக்கம், சாலிகிராமம், 90% வடசென்னை, கோடம்பாக்கத்தில் மின்சாரமில்லை. காலை 11 மணிக்கு மேலேயே சென்ட்ரல் சுற்றியிருக்கும் பகுதிகளில் பேருந்துகள் நகரவில்லை. இன்னமும் மழை பெய்துக் கொண்டிருக்கிறது. நாளை மதியம் வரை மழை பெய்துக் கொண்டிருக்கும் என்கிறார்கள். பள்ளி,கல்லூரி,அரசு அலுவலகங்கள் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும். அரசு விடுமுறை விட்டிருக்கிறார்கள். எல்லா இணைய இணைப்புகளும் வேலை செய்கின்றன. கிண்டி, அரங்கநாதன் சுரங்கப்பாதை, நந்தனம் பகுதிகளில் நீர் அதிகமாய் இருக்கிறது. திருவெல்லிக்கேணியில் ஜாம்பஜாரில் தண்ணீர் அதிகமாக முழங்கால் அளவு இருப்பதாக சொல்கிறார்கள். நங்கநல்லூர், பம்மல்,பல்லாவரம், குரோம்பேட்டை, முடிச்சூர் சாலை நிலவரங்கள் தெரியவில்லை. விருகம்பாக்கத்திலிருந்து கோயம்பேடு செல்லும் சாலையெங்கும் நீர் இருக்கிறது. ஐகாரஸ் பிரகாஷிடம் பேசிய போது, சின்மயா நகரின் குறுக்கேயோடும் கூவமும், சாலையும் ஒரு சேர இருப்பதாக சொன்னார். ஆக அங்கேயும் நிலவரம் சரியில்லை.

தி.நகரின் இரண்டு பாலங்களும் முழ்கி கிடக்கின்றன. எல் ஐ சி அருகே முழங்கால் அளவிற்கு தண்ணீர் இருக்கிறது. ஜி.என்.செட்டி சாலையில் தண்ணீர் விரவி இருக்கிறது. அசோக் நகரின் பல அவென்யூகளில் தண்ணீர் இருக்கிறது. வடசென்னை தான் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் மூவர் வடசென்னையிலிருந்து கொடுத்த தகவல்களைக் கேட்டால், மிக அதிகமான அளவு தண்ணீர் நீக்கமற நிறைந்திருக்கிறது. எங்கும் மின்சாரமில்லை. யானைகவுனி, ராயபுரம், காசிமேடு, தண்டையார் பேட்டை, காலடிப்பேட்டை, திருவொற்றியூர், அஜாக்ஸ், சுதந்திர நகர், வியாசர்பாடி, மகாகவி பாரதி நகர், பெரம்பூர் என எல்லா இடங்களிலும் இடுப்பளவு தண்ணீர் இருக்கிறது. எங்கும் பாதுகாப்பாக மின்சாரத்தினை துண்டித்து வைத்திருக்கிறார்கள்.

வடசென்னையில், மத்திய சென்னையில் உறவினர்கள், நண்பர்கள் இருப்பவர்கள், லேண்ட் லைனுக்கு முயற்சி செய்யுங்கள். ரீசார்ஜ் செய்யும் வசதிகள் இன்மையால், செல்பேசி இணைப்புகள் பாதிக்கப்படலாம்.

சென்னையின் ட்ராபிக் நிலவரத்தினை தெரிந்துக் கொள்ள 2345 2359/360/361/362/324/325 தொலைபேசுங்கள். ஏர் டெல் நிறுவனத்தினரிடமிருந்து எனக்கு வந்த குறுஞ்செய்தியில் இருந்த எண்கள் இவை. தாம்பரம், காஞ்சிபுரம், பூந்தமல்லி பகுதிகளும் தீவிரமான பாதிப்பிற்கு உள்ளாயிருக்கின்றன. தொலைக்காட்சியில் பார்த்தவரை வஞ்சனையில்லாமல் எல்லா இடங்களும் நீருக்குள் இருக்கின்றன. சென்னை தாண்டி மழையில் நனையாமல், மின்சாரம், இணையம் வேலை செய்யும் நண்பர்கள், அந்த அந்த பகுதிகளில் நிலவரத்தினை பதிந்தால் நன்றாக இருக்கும். எல்லோருக்கும் இன்றைக்கு ரேடியோ தான் கடவுள். எந்த கவலையும் இல்லாமல் எல்லா சானல்களிலும், மாமியார்கள் மருமகள்களை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இருட்டில், சன் மியுசிக்கிற்கு தொலைபேசி "அழகான இள மாலை நேரம்" பாடலை நேயர் விருப்பமாக கேட்கிறார்கள். ஆட்டோக்காரர்கள் பக்கத்து தெருவிற்கு போக 100ரூபாய் கேட்கிறார்கள். நூடுல்ஸும், இன்ஸ்டெண்ட் மாவும் அதிக அளவில் விற்கின்றன. அடுப்பெரியும் வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது.

ட்சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக எண்ணூரில் ஒரிடத்தினை அரசு ஒதுக்கியிருந்தது. நிலவரம் என்னவென்று தெரியவில்லை. வடசென்னையிலிருந்து பேசிய நண்பர் மொத்த வடசென்னையிலும் மின்சாரமில்லை என்றார். முழுமையான சேதம், வீட்டற்றோர் நிலவரம் தெரியவில்லை. அண்ணா நகர் கிழக்கில் கூவம் நிரம்பி வழிகிறது. என்னுடைய அடுக்ககம், அலுவலகத்திலிருக்கும் கிணறுகள் நிரம்பி விட்டன. கிட்டத்திட்ட பத்து வருடங்களாகின்றன கிணறுகள் நிரம்பிப் பார்த்து. கேமரா தொலைபேசி இன்மையால் எவற்றையும் "பிடித்து" பதிய முடியவில்லை.

மின்சாரமும், இணையத் தொடர்பும் இருந்தால் நள்ளிரவு மீண்டும் புதிய தகவல்களோடு பதிய முயல்கிறேன்.

Comments:
தெரிந்து கொள்ள மிகவும் உதவியான பதிவு. பத்ரி க்கு மட்டும் மின்சாரம் உள்ளதா? எல்லோரும் அங்க போக வேண்டியதுதான்.
 
ஒரு ரிப்போர்ட்டர் ரேஞ்சுக்கு நிலவரத்தை சொல்லியிருக்கீங்க. உங்களுக்கு மின்சாரம் நிற்காமல் இருக்க வாழ்த்துக்கள். (எதெதுக்கெல்லாம் வாழ்த்து சொல்றதுன்னு ஒரு அளவில்லையான்னு அடிக்க வராதீங்க)
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]