Nov 30, 2005

பெல்ஹாம் என்றொரு குண்டு

பெல்ஹாம், கர்நாடக / மஹாராஷ்டிர எல்லையில் இருக்கும் மாவட்டம். பெல்ஹாம் புடவைகள் என்று எப்போதாவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இரண்டு வாரங்களாக, பெல்ஹாமில் ஊரடங்கு உத்தரவு இருக்கிறது. பெல்ஹாமின் மாநகராட்சி கலைக்கப்பட்டு, கர்நாடக அரசு அங்கே தங்கள் காவலர்களை நிறுத்தி வைத்திருக்கிறது. மாநகராட்சியின் மேயராக இருந்த கிரன் மோரே பதவியிறக்கப்பட்டுள்ளார். பிரச்சனை பெரிது. மராட்டியர்கள் நிரம்ப இருக்கும் (80% க்கும் மேல்) பெல்ஹாமினை கர்நாடாகாவிலிருந்து மஹாராஷ்ட்ரத்தோடு இணைக்கும் ஒரு தீர்மானத்தினை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றியது தான். முதலில் அரசியலமைப்பு படி, ஒரு மாநகராட்சிக்கு இத்தகைய சக்திகள் உண்டா என்ற கேள்வி எழுந்தாலும், மஹாராஷ்டிரா - கர்நாடக எல்லை, இன்றைக்கு காஷ்மீர் எல்லை போல ஆகிவிட்டது. ஊரடங்கு உத்தரவு சில நாட்களுக்கு முன்பு அமலாகியிருந்தது.

பிரச்சனை இன்று நேற்றல்ல, கிட்டத்திட்ட ஐம்பதாண்டு கால பிரச்சனை. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் போது, சோலாப்பூர், பெல்ஹாம், நிபாணா போன்ற மாவட்டங்கள் அப்போது கர்நாடாகாவுடன் சேர்க்கப்பட்டன. அப்பொழுதே பிரச்சனை ஆரம்பித்து விட்டது. பின் நடந்த "பஞ்சாயத்தில்" சோலாப்பூர், நிபாணா இரண்டும் மஹாராஷ்டிராவுடன் இணைக்கப்பட்டது. ஆனால், இன்றளவும் பெல்ஹாம் ஒரு தீராத எல்லை பிரச்சனையாக தான் இரண்டு மாநிலங்களுக்கும் இடையில் நிலவி வருகிறது. 1967-ல் உச்சநீதி மன்ற நீதிபதி திரு. மகாஜன், மஹாராஷ்டிராவின் கோரிக்கையினை நிராகரித்து விட்டார். அன்றிலிருந்து அந்த கமிஷனின் அறிக்கையினை பிடித்துக் கொண்டு கர்நாடக அரசு தொங்கிக் கொண்டிருக்கிறது.

இன்னும் பிரச்சனையினை ஆழமாகப் பார்த்தால், வட கர்நாடகாவிலிருக்கும் சுமார் 814 கிராமங்கள், கர்வார் சிறுநகரம் உட்பட கொங்கனி மொழியினை (மராத்தி மொழியின் கிளை மொழி. கோவாவில் பெரும்பான்மையானவர்கள் பேசுகின்ற மொழியாக அறியப்படுவது) தாய்மொழியாகக் கொண்டவர்கள். இதை ஒரு காரணமாக மஹாராஷ்டிர அரசு முன்வைத்தது. ஆனாலும், அதை கமிஷன் நிராகரித்துவிட்டது. ஆனால், அதற்கு ஈடாக மைசூரினை சுற்றியிருக்கும் சுமார் 656.3 சதுர கி.மீ பரப்பளவு உடைய சுமார் 264 கிராமங்களை மஹாராஷ்டிராவிற்கு மாற்றிக் கொடுத்தது. இன்றைக்கு இது ஒரு பிரச்சனையாக மாறி விட்டது.

சமீபத்தில் ஒகேனக்கல்லை சுற்றியுள்ள சில கிராமங்கள் தங்களுக்கு சொந்தம் என்று கர்நாடக அரசு சொன்னதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடாகாவிற்கும், கேரளாவிற்கும் இடையே இன்றும் நிலவி வரும் கஸ்ரக்கோடு எல்லை பிரச்சனை கனப் பிரசித்தம்.

மொழிவாரியாக இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இங்கே மைலாப்பூரில் ஆந்திர மாநிலம் உருவாவதற்கு காரணமான பொட்டி ஸ்ரீராமுலுவின் சிலையிருக்கிறது. திருப்பதியா, திருத்தணியா என்று வந்த போது, ம.போ.சிவஞானம் போன்றவர்கள் போராடி, தமிழகத்திற்கு திருத்தணியினைப் பெற்று தந்திருக்கிறார்கள். அடிப்படையில் அதிகமாக மொழி பேசும், கலாச்சாரத்தினை பின்பற்றும் மக்களின் அடிப்படையில் தான் இத்தகைய எல்லை பிரிவுகள் நடந்திருக்கின்றன. இத்தகைய நிலையில் கர்நாடக அரசின் கமிஷன் தொங்கலும், மஹாராஷ்டிரா அரசின் கேள்விகளும், பெல்ஹாமில் வாழும் 80% மராட்டியர்களின் மனநிலையும் வைத்துக் கொண்டு பார்த்தால், பெல்ஹாம் எந்த மாநிலத்திற்கு சொந்தம்?

கலாச்சார காவலர்களுக்கு இன்னொரு அவல் ;)குஷ்பு, சுஹாசினி, பிராமணர்-பிராமணல்லாதார், தமிழ் பெண்களின் கற்பு, கலாச்சாரம் இத்யாதி இத்யாதி செய்தி: சென்னை மாநகராட்சியின் எய்ட்ஸ் பாதுகாப்பு பிரிவு 500 ஆணுறை வெண்டிங் இயந்தியரங்களை நகரமெங்கும் அமைக்க உள்ளது. தமிழக கலாச்சார காவலர்கள், இனி வெண்டிங் மெஷினுக்கு முன் தர்ணா செய்யலாம். இனி தமிழ் பெண்களின் கற்பு ATM மெஷினில் இருப்பதாக பெருமையாக அறிக்கை விடலாம். என்னவொன்று வெண்டிங் மெஷின்கள் குமுதம், ஆனந்தவிகடனில் அறிக்கை தராது.

Nov 29, 2005

"நச்" ன்னு ஒரு வீடியோ

நண்பரிடத்திலிருந்து வந்த ஒரு வீடியோ துணுக்கு. தமிழில் திரைப்படம் எடுப்பவர்கள், குறும்படம் எடுப்பவர்கள் பார்க்கவேண்டிய விளம்பர படம். அட்டகாசம். இதைத் தவிர வேறு வார்த்தைகளில்லை.
வீடியோ பார்க்க :)

குறும்படங்களும், புதுக்கவிதையும்

சமீபத்தில் சில நண்பர்களின் புண்ணியத்தில் சில தமிழ் குறும்படங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. போன வாரக் கடைசியில் மட்டும் 8 குறும்படங்கள் பார்த்தேன். வெள்ளிக்கிழமை புக்லேண்ட்ஸில் போய் பொறுக்கியதில், சில குறும்/திரைப்படங்கள் பற்றிய இதழ்கள் கிடைத்தன. ஏற்கனவே என்னுடைய பதிவில் "செவ்வகம்" என்கிற புதிய மாற்று சினிமா பற்றிய இதழினைக் குறிப்பிட்டிருந்தேன்.இப்போது, குறும்பட இயக்குநர் லீனா மணிமேகலையை ஆசிரியராகக் கொண்டு "திரை" என்கிற புதிய சினிமா / மாற்று சினிமா / குறும்படம் பற்றிய இதழ் ஒன்று வந்திருக்கிறது. இதழ் முழுக்க சினிமா மயம். பாலுமகேந்திரா, சேரன், லோகிததாஸ் என்று சினிமா கும்பல். மாற்று சினிமா இதழ் என்றால் முதலில் என்ன சென்டிமெண்டோ தெரியவில்லை, பாலுமகேந்திராவும், சத்ய ஜித் ரேவும் வந்துவிடுகிறார்கள். மாற்று சினிமா இதழ்களைப் பற்றி அப்புறம் பேசலாம், இன்றைக்கு தமிழ் குறும்படங்கள்.

முதலிலேயே ஒரு டிஸ்கெள்ய்மர். நான் பார்த்தது, பார்த்துக் கொண்டிருப்பது தமிழகத்திலும், சென்னையிலும் கொண்டு வரப்படும் குறும்படங்கள் மட்டுமே. கனடிய, ஐரோப்பிய, அமெரிக்க தமிழ் குறும்படங்கள் பார்க்கவில்லை. ஆகையால், எழுதப்படும் கருத்து அவர்களையும் சேர்த்து/சேராமல் இருக்கலாம். அங்கேயிருந்து அத்தகைய படங்களைப் பார்ப்பவர்கள், இதைப் பற்றி எழுதலாம். தமிழில் குறும்படங்கள் / மாற்றுசினிமா பற்றி தொடர்ச்சியாக எழுதுபவன் [சுட்டி 1, சுட்டி 2] என்கிற முறையில், சமீபத்தில் நான் பார்த்த படங்கள் என்னை பயமுறுத்துகின்றன.

ஜீன்ஸ், ஜெர்கினோடு கிங்ஸ் ஆறாவது விரலாய் இருக்கும் இளைஞர்கள், பிலிம் சேம்பர் வளாகத்தினை சுற்றி இருக்கிறார்கள். அருகில் போய் கொஞ்சம் அறிமுகப்படுத்திக் கொண்டால், தான் ஒரு இயக்குநன் என்று அடையாளம் சொல்லுகிறார்கள். சமீபத்தில் பார்த்த எட்டு படங்கள் (இரண்டு கவிதைகளை விஷுவலாய் சொல்லும் முயற்சி, அதில் ஒன்று ஆத்மநாம் கவிதைகள். சத்தியமாய் ஆத்மநாம் ஆவி அவர்களை கதறடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்) ஒன்றை தெளிவாக உணர்த்துகின்றன. தமிழகத்தில் அல்லது சென்னையில் டிஜிட்டல் கேமராக்களும், எடிட் சூட்டுகளும் நிறையவே இருக்கின்றன. நிறைய டிஜிட்டல் டேப்புகள் சல்லிசாக ரிச்சி தெருவில் கிடைக்கின்றன. ஜீன்ஸ் போட்டவர்கள் எல்லாரும் இயக்குநர்களாக இருக்கிறார்கள். நல்ல குறும்படங்கள் வெகுவாக வர வேண்டும், மக்கள் மத்தியில் அதனை கொண்டு செல்லவேண்டும் என்கிற எண்ணங்கள் கொண்டிருந்த நான், பார்த்த படங்களை மனதில் கொண்டு, "மஜா", "சிவகாசி" பார்க்க போய்விடலாம் என்று தீவிரமாக பரிசீலித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனந்த விகடனின் "ஓ" பக்கத்தில் ஞாநி எழுதியிருந்ததுப் போல தமிழில் குறும்படம் எடுப்பவர்கள் அதிகமாகி இருக்கிறார்கள். ஆனால், எதை எடுக்கிறார்கள், என்ன படம் காட்டுகிறார்கள் என்று அருகில் சென்று பார்த்தால், பயமாக இருக்கிறது. முன்பெல்லாம் திரையரங்குகளில் படம் போடுவதற்கு முன் அரசின் பிலிம் டிவிஷனின் ஏதேனும் ஒரு ரீலை போடுவார்கள். "பீகாரில் வெள்ளம்" என்று தொடங்கும் பிலிம் ரீல்கள் பெரும்பாலும் கொட்டாவி விடுவதற்காகவே தயாரிக்கப்பட்டிருக்கும் அல்லது திரை முழுதும் பிரச்சார நெடியடிக்கும். தமிழ் குறும்படங்கள் பெரும்பாலானவை இதே ரகம்.

இங்கே பிலிம் இன்ஸ்ட்டியுட்டிலும், தனியார் திரைக் கல்லூரிகளிலும் படித்துவிட்டு, அல்லது யாராவது இயக்குநருக்கு துணையாக இருந்துவிட்டு குறும்படம் எடுக்கிறேன் பேர்வழி என்று கிளம்பும் ஒரு பட்டாளமிருக்கிறது. இவர்களுக்கு ஒரு ஷாட் எப்படி வைப்பது என்று கூட தெரியாமல் கிளம்பி தானும் ஒரு இயக்குநன் என்று போட்டுக் கொள்ளும் ஆசை மட்டுமிருக்கிறது. நான் பார்த்த எல்லா படங்களின் இறுதியிலும் குறைந்தது ஒரு 10 -15 நபர்களின் பெயர்கள் வந்தது. 5 நிமிட குறும்படத்துக்கு எதற்கு 20 பேர்கள் என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவின் அப்பட்டமான பாதிப்பு குறும்பட கனவுகளில் டீ குடித்து, தம் அடிக்கும் தோழர்களின் கண்களில் தெரிகிறது. அவர்களுக்கு, இது ஒரு விசிட்டிங் கார்டு. நானும் இரண்டொரு குறும்படங்கள் செய்தேன் என்று சொல்லிக் கொள்வதற்காக செய்வது. இதில் இன்னொரு வகை பாதிரிமார்கள் வகை. இவர்களின் உபதேசங்களும், பிரசங்கங்களும், பிரச்சாரங்களும் பார்த்தால், எடுத்தவர்களை உடனே கொன்றாக வேண்டும் என்ற துடிப்பு வரும். கார்ப்பரேஷன் கொசு மருந்து அடிக்கும் வாகனம் வந்தால் தெருவெங்கும் புகை பரவுமே அதைவிட இவர்களின் படங்களில் சமூக அக்கறை ஒழுகி, வழியும். ஷாட் வைக்க தெரியாதவனைக் கூட மன்னித்து விடலாம், இரண்டொரு படங்களில் கற்றுக் கொள்ளும் சாத்தியங்கள் உண்டு, ஆனால், இவர்கள் இன்னமும் தமிழ்சினிமாவை விட மோசமான "கிளிஷே"க்களிலும், அரைத்த மாவினை மழுக்க அரைப்பதிலும் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். மரங்களை வெட்டக் கூடாது என்கிற அடித்தளத்துடன் 10 நிமிட குறும்படங்கள் பார்த்தேன், ஐயோ இதற்கு சகித்துக் கொண்டாவது இரண்டு பாடல்களுக்காக "திருப்பாச்சி" பார்க்கலாம். 1980 வருட செவ்வாய் கிழமை ஒளிபரப்பப்படும் நாடகங்களை ஒத்த அமெச்சூர்த்தனம். இவர்கள் கையிலெல்லாம் கேமரா அகப்பட்டுக் கொண்டது, கேமராவுக்கு பிடித்த ஏழரை நாட்டு சனி.

பத்ரி குறிப்பிட்டிருந்த இரண்டு தமிழ் குறும்படங்களும் மறுநாள் பார்த்த ஒரு ஆறு குறும்படங்களும் தமிழில் குறும்படங்கள், புதுக்கவிதையின் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது. வானம்பாடி இயக்கம் ஆரம்பித்து வைத்த புதுக்கவிதை (அல்லது அதற்கு முன்பேவா?!) எவ்வாறு அலங்கோலப்படுத்தப்பட்டது என்பதை தினத்தந்தி ஞாயிறுமலரில் வரும் கவிதைகள் சொல்லும். தமிழ்நாட்டில் புதுக்கவிதை எழுதியவர்கள், கவிதைக்கு ஒரு ரூபாய் கொடுத்திருந்தால் கூட, அரசின் வெள்ள நிவாரண நிதியில் சில பல கோடி ரூபாய்கள் சேர்ந்திருக்கும் வாய்ப்புகளிருந்திருக்கும். அந்த அளவிற்கு இன்றைக்கு குறும்படங்கள் பெருகவில்லையென்றாலும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எல்லாம் சாத்தியம். இதன் சாத்தியங்கள் என்னை சந்தோஷப்படுத்துவதை விட பயமுறுத்துகிறது. தமிழ்நாட்டில் கல்யாண வீடியோ கேசட் எடுப்பவர்கள் கூட இன்றைக்கு மூன்று டிவி, ஒரு கணினி, மிக்சர் என்று முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்னமும், குறும்படவாதிகள் அமோனியா நாற்றமடிக்கும் மூத்திர சந்துகளில் பொருத்திய கேமரா கோணங்களை எடுக்காமல் சித்ரவதை செய்கிறார்கள். பத்ரி சொல்லியிருக்கும் அதே குறும்பட விழாவிற்கு போய், நானும் பிரகாஷும் ஒரு டீக்கடையில் கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்தோம். ஆனாலும் உமட்டல் போகாததால் இந்த பதிவு. இன்னமும் கலைப்படங்கள், மாற்று சினிமா என்றால் டீ குடிக்கும் நபரை முழுவதுமாக டீ குடிக்க வைத்து பின் அவரெழுந்து காசு கொடுக்கும் வரையில், கேமராவினை ஆன் செய்து விட்டு கேமராமெனும், இயக்குநரும் டீ குடிக்க போய்விடுவார்கள் போன்ற நிலையில் தான் உள்ளது. விஷுவல் மீடியத்தின் வலிமை என்ன என்று தெரியாமல், ஜெர்கின் ஜீன்ஸோடு நின்ற்பவர்கள் தான் இன்றைய குறும்பட, நாளைய சினிமா இயக்குநர்கள் எனில் என்ன பெரியதாய் மாற்றம் வந்துவிடும் தமிழ் சினிமாவிற்கு. டீக்கு பதில் அங்கே தயாரிப்பாளரின் காசில் 50 கார்களை பொறுமையாய் காட்டி "ரிச்"சா படம் வந்திருக்கு என்று "பீல்"லாகுபவர்கள்.

உண்மையான மாற்றுசினிமா, குறும்படம், ஆவணப்படம், கலைப்படங்கள் பற்றிய சிந்தனை கொஞ்சமும் இல்லாமல், யதார்த்தவாதத்தினை தவறாக புரிந்துக் கொண்டு, சொல்லவந்ததை சொல்ல தெரியாமல், டிஜிட்டல் டேப்புகளை வீண்டித்துக் கொண்டிருப்பவர்கள் தான் இன்றைக்கு பெரும்பாலும் தமிழின் குறும்பட இயக்குநர்கள். "நதியின் மரணம்" "மாத்தம்மா" போன்ற குறும்படங்கள் தான் என்னளவில் குறும்படங்களின் அளவுகோல். மற்றபடி நான் பார்ப்பதெல்லாம் குப்பைகள். எந்த ஒரு கலைவடிவமும் தொடக்கத்தில் மக்களை ஈர்த்தாலேயொழிய சென்றடைய முடியாது. இன்றைக்கு நான் பார்க்கும் தமிழ் குறும்படங்கள் பெரிதான சமூக மாற்றத்தையோ, மாற்று சினிமா பார்வையையோ முன்வைக்கவில்லை. தோன்றியதை செய்கிறார்களோ என்று நினைக்குமளவிற்கு தான் தமிழ் குறும்படங்கள் இருக்கின்றன. தமிழ் சினிமாவின் இலக்கணத்தினை மீறி, சமூக உணர்வுகளையும், மாற்று கருத்துகளையும், நகர/கிராம வர்க்க பேத உறவுமுறைகளையும், contemporary வாழ்வியலையையும் முன்வைக்க குறும்படங்களால் மட்டுமே முடியும், ஆனால் தமிழ் குறும்படங்கள் அதை செய்கின்றனவா ? இதற்கு எதிர்மறையான பதில் வரும்படசத்தில், புதுக்கவிதைக்கு நேர்ந்த அதே ஆபத்து, குறும்படங்களுக்கு நேரிடும் காலம் வெகுதொலைவில் இல்லை.

நண்பர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்கி நட்சத்திர குறியீட்டினை மீண்டும் உட்புகுத்தியிருக்கிறேன். நன்றி

Nov 17, 2005

இந்தியா everywhere

இன்றைய பிபிசி செய்தி ஒன்று. இந்திய சிறைச்சாலைகளில் இருக்கும் பெண்களுக்கு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருப்பின் அவர்கள் தங்கள் தாயாரோடு சிறையில் இருக்கலாம். ஹைதராபாத் சிறைச்சாலையில் ஒரு குழந்தைகள் காப்பகமும், இலவச கல்வியும் இவ்வாறாக தாயோடு இருக்கும் குழந்தைகளுக்கு தரப்படுகிறது. இதே செய்தியில் சில தன்னார்வ நிறுவங்கள், சிறைக்குள் தன் முதல் ஐந்து வருடங்களைக் கழிக்கும் குழந்தைகளின் மன/உளநிலை மாறுபாடுகளைப் பற்றிய கவலைகளைத் தெரிவிக்கின்றனர். ஐந்து வயதுக்குட்பட்ட ஏழைக் குழந்தைகள் தங்கள் உறவினர்களோடு சிறைக்கு வெளியே இருந்தால் எல்லாவிதமான வன்முறைக்கும் உள்ளாகும் வாய்ப்புகள் உள்ளது, ஏனெனில் சிறையிலிருக்கும் பெரும்பாலான பெண்கள், மிகவும் ஏழ்மையான சூழலிருந்து வந்தவர்கள். எது எப்படியோ, பெண்களின் நிலை, குழந்தைகளின் வாழ்சூழ்நிலை, கல்வி, உளவியல் பார்வை என நிறைய விவாதங்களை இது உள்ளடக்கியிருக்கிறது.


பொதுவாக ஜீவானம்ச வழக்குகளின் சாராம்சம் சம்பாதிக்கும் கணவர்கள், வருமானமில்லாத அல்லது வருவாய் இல்லாத மனைவி /ex-மனைவிக்கு ஒரு குறிப்பிட்டத் தொகையினை மாதாமாதம் அளிக்கவேண்டும். சமீபத்தில் அலஹாபாத் நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பினை அளித்திருக்கிறது. இதன்படி, சம்பாத்தியம் இல்லாத / சம்பாதிக்க துப்பில்லாத / வருமானம் குறைவான கணவன்மார்கள், பொருள் ஈட்டுகின்ற மனைவியை மனமுறிவு செய்யும் பட்சத்தில் அவர்களுக்கும் இப்போது மனைவியின் வருமானதிலிருந்து ஜீவானாம்சம் வழங்க வேண்டும் என்று இந்திய நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. இதன் சாதகபாதகங்களை அலசலாம். ஆனால், இன்னமும் நகரங்களில் ஏற்றுமதி ஆடையகத்துக்கு மனைவியை அனுப்பி பொருளீட்டச் சொல்லி, குடித்து சீரழியும் கணவர்கள் இருக்கும் இடத்தில் இது ஒரு முன்னுதாரணமா தீர்ப்பா?


நேற்று பெங்களூர் வாசம். இந்தியாவின் தொழில்நுட்ப நகரம் எந்நேரமும் ஆடிக் கொண்டேயிருக்கிறது, அவ்வளவு மோசமான சாலைகள். பன்னர்கட்டா சாலையில் நான் செல்ல வேண்டிய வாடிகையாளரின் அலுவலகமிருந்தது. கோரமங்களாவிலிருந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி, சீரழிந்து, சின்னாபின்னாமாகி, என் வாழ்நாளில் ஒரு இரண்டுவாரங்களை கார்பன் மோனாக்சைடினை சுவாசித்து குறைத்துக் கொண்டு, போய் சேர 50 நிமிடங்கள் ஆயிற்று. இத்தனைக்கும் அசென்சர், ஐஐஎம் பெங்களூர், ஆரக்கிள் என பெருநிறுவனங்கள் இருக்கும் சாலையது. மகா கேவலமாக இருக்கிறது. இன்னமும் ஆச்சர்யமாக இருப்பது, எப்படி அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் இதனை பொருட்படுத்தாமல் பெங்களூரில் புதிது புதிதாய் நிறுவனங்களை ஆரம்பிக்கிறார்கள், பயணிக்கிறார்கள், வேலை செய்கிறார்கள். ஒரு வேளை பாம்பு, சாமியார், பொம்மலாட்டம் ஆடும் "நிஜ இந்தியாவினை" தரிசிக்கிறார்களோ, குண்டும் குழியுமான சாலையில். அட தேவுடா, கொஞ்சம் சென்னை வந்து பாருங்கள் சாமி, பெருமைக்கு சொல்லவில்லை, பெங்களூரை விட 100 மடங்கு பரவாயில்லை. இந்தியாவின் தொழில்அனுக்கமான சூழ்நிலையில் முதல் நிலையில் இருந்தாலும், இன்னமும் ஏன் பெருநிறுவனங்கள் பெங்களூரை கட்டிக் கொண்டு மாரடிக்கின்றன?

Nov 14, 2005

பொம்பள!!

தமிழ் முரசின் தலைப்பு செய்தி [சுஹாசினி மீது கிரிமினல் வழக்கு] இது. நேற்று நானும் ரோசாவசந்தும், நண்பர் கார்த்திக் ராமசாமியும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தப் போது அலசிய விஷயம். எல்லோர்க்கும் தெரிந்த விஷயம்தானிது, குஷ்புவினை ஆதரித்து சுஹாசினி இப்போது களத்தில் குதித்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் விவாத மேடைகள் நடத்தும் ரேவதி, சுஹாசினி, லட்சுமி மீது பெரிதான அபிப்ராயங்கள் எனக்கில்லை. ஆனாலும், இன்றைக்கு சுஹாசினி மீது இரண்டு கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக செய்திகள் சொல்கின்றன.

இன்றைக்கு அ.தி.மு.கவில் இருக்கும் தீப்பொறி ஆறுமுகம் ஒரு காலத்தில் தெருவோர கூட்டங்களில் ஜெயலலிதாவினைப் பற்றி பேசியதை எழுத முடியாது. கேட்கவும் முடியாது. நாராசத்தின் உச்சம் என்ன என்பதை அங்கு தெரிந்துக் கொள்ளலாம். மைக்கினை மூடிக் கொண்டு, சட்ட சபையில் கருணாநிதி அன்றைக்கு ஜெயலலிதாவினை என்ன சொல்லி ஏசினார் (வாயை மூடுறீ ********* முண்ட) என்பது உலகறியும்.

சமீபத்தில் தீபாவளிக்கு வந்த விஜய் படத்தில், மிகக் கேவலமாக நாயகியின் ஆடையினை ப்ரா, ஜட்டி லெவலுக்கு பேசியிருப்பார். தமிழ்க் கலாச்சார காவலர்கள் விசிலடித்து கைதட்டி படத்தினை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கியிருக்கிறார்கள். உச்ச நட்சத்திரம் ஒரு படத்தில் அதிகமாக கோவப்படும் பெண்ணும்..... என்று டயலாக் பேசியிருப்பார். சூப்ப்ர் ஆச்சே விட்டுவிடுமோ நாம். படத்தினை கைத்தட்டி பார்த்து ரசித்து இருக்கிறோம்.

இவையனைத்துக்கும் அடிப்படையான காரணம் இதில் எல்லாவற்றிலும் சமூகத்தின் கருத்தினைத் தாண்டி சொன்னவர்கள் பெண்கள். ஒரு ஆணாதிக்க சமூகத்தில் ஒரு தைரியமான பெண் சந்திக்க வேண்டிய சோதனைகள் நிறைய. கலைஞரையோ, திருமாவினையோ மிக கேவலமாக, அநாகரீகமாக பல பேர் பேசியிருக்கிறார்கள். ஆனால் பிரச்சனை ஒரு பெண் பேசும் போது தான் ரோஷம் பொத்துக்கொண்டு வருகிறது. உள்ளே சும்மா குவார்ட்டர் அடிந்து குந்தியிருக்கும், கலாச்சார காவலன், தலைக்கு குளித்து, கையில் அரிவாளோடு சாமியாட புறப்பட்டு விடுகிறார். ஆணாதிக்க, தந்தை வழி சமூக சிந்தனையினால் வரும் பிரச்சனையிது. இன்றைக்கு தமிழகத்தில் நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்வுகள், எத்தகைய பிற்போக்கு, புறம்போக்கு தனம் என்பதைப் பற்றிய சிந்தனை ஊடகங்களுக்குக் கொஞ்சமும் இல்லை. ஊடகங்களுக்கு தேவை செய்திகள். இச்செய்திகளின் வழியே ஊட்டப்படும் சிந்தனைகள் அபாயகரமானவை. சில பல வழக்குகளைப் போட்டு எல்லோரையும் வாய் மூடச் செய்துவிடும், வாயடைக்கச் செய்துவிடும் புல்லுறுவிகள் தமிழகத்தில் ஏராளம். ஒரு கருத்தினைச் சொல்லக் கூட ஒரு சுதந்திர நாட்டில் உரிமையில்லை என்பதை யோசித்தால், எத்தகைய அழுகிய ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உண்மை புலனாகும்.

"அவ பொம்பள! அவளுக்கென்ன அவ்வளவு வாயி" என்று என் அடுக்கக்கத்திலேயே பெண்கள் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். மாற்றமும், மாற்று சிந்தனைங்களும் தான் சுதந்திரத்தினை நிர்ணயிக்கின்றன. மாற்றமில்லாத சமுகமும், மொழியும், மக்களும் காலவெள்ளத்தில் அடித்து செல்லப்படுவார்கள். பெண்ணின் கருத்து சுதந்திரத்தினை காண சகிக்காதவர்கள் தான் இன்றைய கலாச்சாரக் காவலர்கள். "ஒரு பொம்பள போயி நம்மள விட ஜாஸ்தியா யோசிக்கிறாயா" என்று உறுமும் அடிப்பட்ட ஆண் புலிகள் தான் கொடும்பாவி எரிக்கிறார்கள். இதில் இன்னொரு கொடுமை, சில கட்சிகளில் மகளிரணி என்ன பேசியிருக்கிறார் என்று தெரியாமலேயே நடுரோட்டில் மறியல் செய்வதை தமிழகத்தினைத் தவிர வேறெங்கும் காண இயலாது. பெண்ணடிமையினை ஒட்டு மொத்தமாக முச்சந்தியில் போட்ட பெரியாரின் வாரிசுகள் தான் இன்றைக்கு பேண்டிஸ்களில் கற்பினை காபந்து பண்ணத் தொடங்கியிருக்கிறார்கள்.

பெண்களுக்கு சொத்தில் பங்குக் கொடுத்த தலைவனின் பேரர்கள் தான் பெண்ணடிமையின் அங்கீகரிக்கப்படாத ஹோல்சேல் ஏஜெண்டாக இருப்பதை விட வேறென்ன சொல்ல முடியும். அந்த கொடுமையினையும், வன்முறையினையும் ஒரே பத்திரிக்கையில் பார்க்க முடியும் - முதல் பக்கம்| கடைசி பக்கம்.

கூவத்தின் கரையிலிருக்கும் குடிசை வாசிகளுக்கு நாற்றமென்றால் என்னவென்று தெரியாது. நாம் தான் அந்த பக்கம் போனால் மூக்கினைப் பொத்திக் கொள்வோம். ஒரு வேளை தமிழகமெங்கும், "கலாச்சார கூவம்" ஒட ஆரம்பித்துவிட்டதோ!

Nov 6, 2005

கொத்து பரோட்டா

அது ஒரு கனாக் காலம்

முதலில் தீபாவளி படம். மஜா, சிவகாசி, பெருசு, பம்பரக் கண்ணாலே எதுவும் நல்ல பையனாய் பார்க்காமல், பாலுமகேந்திராவினை நம்பி, இளையராஜாவின் பலத்தினை நம்பி போனது "அது ஒரு கனாக்காலம்". யாராவது தயவு செய்து பாலுமகேந்திராவுக்கு சொல்லுங்களேன் நாம் 2005-இல் இருக்கிறோம் என்று இன்னமும் 70களில் இருந்து வெளியில் வராமல் இருக்கிறார். இந்த படத்தின் மூன்றே மூன்று ப்ளஸ் பாயிண்ட், தனுஷ், ப்ரியாமணி & இளையராஜா. கதை மககககககா சொதப்பல். திரைக்கதை ஆவ்வ்வ்வ்வ்வ்வ். இப்போதுதானே தெரிகிறது மருமகன் மானத்தினைக் காபாற்ற உச்ச நட்சத்திரம் சொந்த காசில் இந்த படத்தினை ஏன் வெளியிட்டிருக்கிறார் என்று. கதை சீனு (தனுஷ்) [மூன்றாம் பிறையை மறங்க சார் நல்ல வேளை நாயகி பேரு விஜி இல்லை] சிறையிலிருந்து தப்பி ஒரு லாரியில் ஏறி ஊட்டி புறப்படுவதில் ஆரம்பிக்கிறது. ப்ளாஷ்பேகில் சீனு தன் கதையை ஆரம்ம்ம்ம்ம்ம்ம்ம்பிக்கிறார் லாரி டிரைவரிடம். முதல் 30 நிமிஷம் இது பாலு மகேந்திரா படமா அவ்வளவு அமெச்சூர்தனம். ப்ரியாமணி வருவதில் ஆரம்பிகிறது. தனியாய் வீட்டில் இருக்கும் சீனுவிற்கு சமைத்து போட வரும் வேலைக்காரி மகள் பரியா மணியில் ஆரம்பிக்கிறது கதை. ப்ரியாமணிக்கும், தனுஷுக்கும் காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்கி, அப்பா டெல்லிகணேஷ் ஜாதி, குலம், கோத்ரம் பேசி, வெறுப்பில் தனுஷ் தண்ணியடித்து நண்பர் வண்டியோடு போலீஸ் ஜீப்பில் இடித்து, லாக்-அப்பில் இருக்கும் போது கூட இருக்கும் ஒரு கைதி தப்பான முறையில் நடக்க முற்பட்டு, அவனை அடித்துக் கொன்று, ஜெயிலுக்குப் போய், பரோலில் வந்து அம்மாவுக்கு கொள்ளி வைத்து விட்டு [அந்த சாவு பாட்டு, அக்மார்க் இளையராஜா அம்மா பாட்டு ;-)] உள்ளேப் போய், தப்பித்து வந்து லாரி டிரைவருக்கு கதை சொல்லி, ப்ரியாமணி இருக்கும் ஊட்டிக்கு வந்து, போலிஸ் கையில் மீண்டும் மாட்டி, சண்முகராஜ [விருமாண்டி இன்ஸ்பெக்டர்] இன்ஸ்பெக்டர் ஒரே பீல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாகி, அவரை விடுவித்து, ஒடி வந்து தடுக்கி விழுந்து "விட்டுப் போகாதே சீனு" என்று பொம்பளை கமலாய் சேற்றில் சறுக்கி விழுந்து, தாங்கி நடக்கும் ப்ரியாமணியோடு சேர்ந்து தனுஷ் நடக்க, தனுஷும், பரியாமணியும் இப்போது கேரளாவில் மூன்று குழந்தைகளோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று டைட்டில் கார்டு போடுகிறார்கள். "அந்த நாள் ஞாபகம்" பாட்டில் ராஜாவும், பாலுமகேந்திராவும், கொஞ்சமாய் பிரதாப் சாயலடிக்கும் தனுஷும் தெரிகிறார்கள். இதை 12 குறுஞ்செய்திகள், 8 போன்கால்கள், 3 சாரி சார் என்று கால் மிதித்தவர்களோடு சேர்ந்து, அபிராமியில் வை-ஃபை வேலை செய்கிறதா என்று கவலையுடன் பார்த்து முடித்தேன். தனுஷ் நிரம்ப தேறியிருக்கிறார். பல காட்சிகள் பரம யதார்த்தம். "ஆ சொல்லு, ஆ சொல்லு" என்று தனுஷ் பரியாமணிக்கு ஐஸ்க்ரீம் ஊட்டியதை டெல்லி கணேஷ் தன் மனைவிக்கு சொல்லும் போது அரங்கமே அதிருகிறது. shocking surprise ப்ரியாமணி. கண்கள் விளையாடுகின்றன. பிண்ணணி குரல் இன்னமும் விநோதினியை நினைவுப் படுத்துகிறது. வேலைக்காரியின் மகளாக பின்னியெடுக்கிறார். இனி நல்ல கேரக்டர்கள் இருப்பின் தமிழ் சினிமாவில் ப்ரியாமணியை கவலையில்லாமல் சிபாரிக்கலாம். கலக்கியிருக்கிறார். மேக்கப் இல்லாமல், எண்ணெய் வடியும் முகத்துடன் குளோசப் காட்சிகள், அர்ச்சனாவை ஞாபகப்படுத்துகிறது. ரொம்ப நாள் கழித்து தமிழ் பேச தெரிந்த நடிகை, நடிக்கவும் செய்திருக்கிறார். வழக்கமான பாலு மகேந்திரா நாயகியாக பாடலில் ஒரு காட்சியில் சட்டை மட்டும் போட்டுக் கொண்டு வருகிறார் [நண்பர்: அந்த ஸ்ட்ரைப் சர்ட் சூப்பர்ல ] ராஜாவின் "அந்த நாள் ஞாபகம்" கலெக்டர்'ஸ் எடிஷன். பார்க்க வேண்டியவர்கள் இன்னும் ஒரு வாரத்தில் பார்த்து விடுங்கள். அதற்கு பிறகு வேண்டுமானால் சன்னில் பொங்கல் ரிலிசாகலாம். பாலு மகேந்திரா better luck next time.

வெப்வேர்

போன வாரம் நடந்தேறிய மைக்ரோசாப்ட் டெவலபர்களில் கூட்டத்தில் எம்.எஸ் சில விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள். பில் கேட்ஸ் கூகிளில் விட்டதை பிடிக்கும் பிரயத்தனம் அப்பட்டமாக தெரிகிறது. கேட்ஸூம், ஸ்டீவ் பால்மரும் போட்டிப் போட்டுக் கொண்டு எம்.எஸ்ஸின் திட்டங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். உலகில் பல இடங்களில் அகலப்பாட்டை இணைப்பு வெகுஜனங்களுக்கு வர ஆரம்பித்து விட்டது. எல்லா இடங்களில் இணையத்தில் இணையும் வசதிகள் பெருகி வருகின்றன. நமது செல்பேசிகள் தளங்களைப் பார்க்க முடிகிறது. டெஸ்க்டாப் என்றழைக்கப்படும் ஒரிடத்தில் அமர்ந்து வேலை செய்யும் கதை கொஞ்சம் கொஞ்சமாய் கந்தலாகிக் கொண்டு வருகிறது. ஏற்கனவே உலகெங்கும் Web 2.0 பற்றிய குரல்கள் பலமாய் கேட்கத் தொடங்கியிருக்கிறது. இனி செயலிகளை உங்களின் கணியில் நிறுவ வேண்டிய அவசியங்களில்லை. எல்லாம் தளங்களிலோ அல்லது அஜாக்ஸ் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி ஒரே ஒரு இணைய பக்கத்திலோ பார்க்க முடியும். எடுத்துக்காட்டாக நெட்வெப்ஸ் என்கிற தளத்தில் பல்வேறுவிதமான செய்தியோடைகள், குறிப்புகள். நியுஸ்பேப்பர்களை ஒரே பக்கத்தில் நமக்கேற்றவாறு மாற்றிக் கொண்டு பார்க்க முடியும். மீபூ என்கிற தளத்தில் யாஹூ, எம்.எஸ்.என், ஏஓஎல், ஜிடாக், ஐசிக்யு என எல்லா தூதுவர்களையும் ஒரு சேர பயன்படுத்த முடியும். நாங்கள் எங்களுடைய நிறுவனத்தில் இதே ரீதியில் சில செயலிகளை செய்துக் கொண்டிருக்கிறோம். இவை கண்டபின் எல்லோரும் இணையத்தில் அலுவலக செயலிகளை கொடுக்க ஆரம்பித்தார்கள் [ரைட்லி, ரைட்போர்டு பாருங்கள்] இது எம்.எஸ்ஸின் ஆபிஸ் மென்பொருட்களுக்கு பலமான போட்டியாக விளங்கும். ஏனெனில் இவ்வகையான செயலிகளை நாம் எங்கும் நிறுவத் தேவையில்லை. இணையத்தொடர்பு இருந்தால் போதும். எல்லாவற்றையும் ஒரே இணையப் பக்கத்தில்/தளத்தில் செய்துவிட்டு போய்விடலாம். இவ்வகையான போட்டிகளைக் கண்டு லேசாக பேதியெடுத்த மைக்ரோசாப்ட் இப்போது தீவிரமாய் இவ்வகையான வெப்வேர் செயலிகளில் இறங்கியிருக்கிறது. அதன் முன்னோடி தான் ஸ்டார்ட்.காம். அதே ரீதியில் போன வாரம் அறிமுகப் படுத்தியது மைக்ரோசாப்ட் லைவ் அதில் முக்கியமாய் அலுவலக செயலிகளுக்கான ஆபிஸ் லைவ். ஆக இனி மென்பொருள் பைரசி என்பது முடிவுக்கு வரும் சாத்தியங்கள் தெரிகின்றன. ஏனெனில் இனி வரப்போகும் எல்லாமே இணையத்தளத்திலிருந்து செயல்படப் போகும் செயலிகள். எப்படி மின்னஞ்சல் பைரசி என்பது நகைப்புகுரிய வார்த்தையோ, அதேப் போல மென்பொருள் பைரசி என்பதும் வழக்கொழிந்துப்போகும் சாத்தியங்கள் தெரிகின்றன. பார்ப்போம் இந்த பபிள் எப்படி இருக்குமென்று

பார்க்க - ஆபிஸ் லைவ் | மீபூ| நெட்வெப்ஸ் | அஜாக்ஸ் | வெப் 2.0 | ரைட்லி | ரைட்போர்டு | ஸ்டார்ட்.காம்

கொ ழி க் கு ன் சி

நல்ல மழை இங்கே இப்போது. என் தங்கை மகளுக்கு [ஒன்றாவது படிக்கிறாள்] தமிழில் சொற்கள் எழுதும் வீட்டு வேலை. ஆசிரியை கோழிக்குஞ்சு என்று எழுதாமல் வெறுமனே சொல்லியிருக்கிறார். என் தங்கை மகள் எழுதியது கொ ழி க் கு ன் சி. வீட்டில் அதை நான் அமர்ந்து பொறுமையாய் கோழிக்குஞ்சு, சு என்று முடிக்க வேண்டும் சி அல்ல என்று சொல்லி, கொஞ்ச நேரம் கழித்து நோட்டினை வாங்கிப் பார்த்தால் எழுதியிருந்தது கொ ழி க் கு ன் சி உ [சி + உ = சு!!?] மறுபடியும் வாங்கி எழுதாமல் கோழி என்று சொல்ல சொல்லி எழுத சொல்லிப் பார்த்தால் கோ ழ் இ க் கு ன் சு என்றிருந்தது. அதற்கு மேல் சொல்லித் தர பொறுமையில்லாமல் ஒழுங்காய் நானே வாங்கி எழுதி 10 தடவை கோழிக்குஞ்சினை எழுதச் சொல்லி கிளம்பி வந்தேன். மொழி என்பது ஒரு குழந்தைக்கு எவ்வளவு அப்ஸ்ட்ராக்டான விஷயம். இவ்வாறு எழுத நினைத்தாலும் நம்மால் எழுத முடியாது. குழந்தைகளின் உலகம், அவர்களின் மொழி, சிந்தனை இவற்றை கண்டறிந்து நடப்பது என்பது ஒரு கடினமான காரியம். சுஜாதா க.பெ.மில் சொன்னதுப் போல இன்னமும் தமிழில் குழந்தைகளுக்கான புத்தகங்களும், மொழியும், கையேடுகளும் வரவேயில்லை என்றுதான் தோன்றுகிறது. இது ஏனோ அசோக மித்திரனின் ரிக்(ஷ்)காவினை நினைவு படுத்தியது. என்னதான் அசோக மித்திரனின் சில கருத்துகளில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழின் மிகச் சிறந்த கதை சொல்லி என்ற பட்டத்தினை கி.ராவுடன் சேர்த்து தரலாம்.


"உ" போடு

கொஞ்ச நாள் கழித்து கீற்றில் மேய்ந்ததில் நம்மாள் நக்கல் திலகம் பாமரன் புகுந்து விளையாடியிருக்கிறார். படிக்க சுவாரசியமாகவும், எள்ளலும், நக்கலும் தெறிக்கும் எழுத்துக்கள் பாமரனுடையது. அதுவும், அவரின் கடிதங்கள் குமுதத்தில் வந்து போது தொடர்ச்சியாக படித்தவன் நான். சமீபத்தில் பாமரனின் அஹிம்சாமூர்த்தி அமெரிக்காவினைப் படித்தப் போது ஒரு எள்ளலைக் கொண்டு எவ்வாறு சில அதிமுக்கியமான விஷயங்களை விவாதிக்க முடியும் என்று ஆச்சர்யப்படுத்தினார். நம்பிக்கைகள் என்கிற தளத்தினைக் கொண்டு அவர் எழுதியிருக்கும் "உ" போடு ஒரு சுவாரசியமான வாசிப்பு

பார்க்க: "உ" போடு | கீற்று

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]