Nov 6, 2005

கொத்து பரோட்டா

அது ஒரு கனாக் காலம்

முதலில் தீபாவளி படம். மஜா, சிவகாசி, பெருசு, பம்பரக் கண்ணாலே எதுவும் நல்ல பையனாய் பார்க்காமல், பாலுமகேந்திராவினை நம்பி, இளையராஜாவின் பலத்தினை நம்பி போனது "அது ஒரு கனாக்காலம்". யாராவது தயவு செய்து பாலுமகேந்திராவுக்கு சொல்லுங்களேன் நாம் 2005-இல் இருக்கிறோம் என்று இன்னமும் 70களில் இருந்து வெளியில் வராமல் இருக்கிறார். இந்த படத்தின் மூன்றே மூன்று ப்ளஸ் பாயிண்ட், தனுஷ், ப்ரியாமணி & இளையராஜா. கதை மககககககா சொதப்பல். திரைக்கதை ஆவ்வ்வ்வ்வ்வ்வ். இப்போதுதானே தெரிகிறது மருமகன் மானத்தினைக் காபாற்ற உச்ச நட்சத்திரம் சொந்த காசில் இந்த படத்தினை ஏன் வெளியிட்டிருக்கிறார் என்று. கதை சீனு (தனுஷ்) [மூன்றாம் பிறையை மறங்க சார் நல்ல வேளை நாயகி பேரு விஜி இல்லை] சிறையிலிருந்து தப்பி ஒரு லாரியில் ஏறி ஊட்டி புறப்படுவதில் ஆரம்பிக்கிறது. ப்ளாஷ்பேகில் சீனு தன் கதையை ஆரம்ம்ம்ம்ம்ம்ம்ம்பிக்கிறார் லாரி டிரைவரிடம். முதல் 30 நிமிஷம் இது பாலு மகேந்திரா படமா அவ்வளவு அமெச்சூர்தனம். ப்ரியாமணி வருவதில் ஆரம்பிகிறது. தனியாய் வீட்டில் இருக்கும் சீனுவிற்கு சமைத்து போட வரும் வேலைக்காரி மகள் பரியா மணியில் ஆரம்பிக்கிறது கதை. ப்ரியாமணிக்கும், தனுஷுக்கும் காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்கி, அப்பா டெல்லிகணேஷ் ஜாதி, குலம், கோத்ரம் பேசி, வெறுப்பில் தனுஷ் தண்ணியடித்து நண்பர் வண்டியோடு போலீஸ் ஜீப்பில் இடித்து, லாக்-அப்பில் இருக்கும் போது கூட இருக்கும் ஒரு கைதி தப்பான முறையில் நடக்க முற்பட்டு, அவனை அடித்துக் கொன்று, ஜெயிலுக்குப் போய், பரோலில் வந்து அம்மாவுக்கு கொள்ளி வைத்து விட்டு [அந்த சாவு பாட்டு, அக்மார்க் இளையராஜா அம்மா பாட்டு ;-)] உள்ளேப் போய், தப்பித்து வந்து லாரி டிரைவருக்கு கதை சொல்லி, ப்ரியாமணி இருக்கும் ஊட்டிக்கு வந்து, போலிஸ் கையில் மீண்டும் மாட்டி, சண்முகராஜ [விருமாண்டி இன்ஸ்பெக்டர்] இன்ஸ்பெக்டர் ஒரே பீல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாகி, அவரை விடுவித்து, ஒடி வந்து தடுக்கி விழுந்து "விட்டுப் போகாதே சீனு" என்று பொம்பளை கமலாய் சேற்றில் சறுக்கி விழுந்து, தாங்கி நடக்கும் ப்ரியாமணியோடு சேர்ந்து தனுஷ் நடக்க, தனுஷும், பரியாமணியும் இப்போது கேரளாவில் மூன்று குழந்தைகளோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று டைட்டில் கார்டு போடுகிறார்கள். "அந்த நாள் ஞாபகம்" பாட்டில் ராஜாவும், பாலுமகேந்திராவும், கொஞ்சமாய் பிரதாப் சாயலடிக்கும் தனுஷும் தெரிகிறார்கள். இதை 12 குறுஞ்செய்திகள், 8 போன்கால்கள், 3 சாரி சார் என்று கால் மிதித்தவர்களோடு சேர்ந்து, அபிராமியில் வை-ஃபை வேலை செய்கிறதா என்று கவலையுடன் பார்த்து முடித்தேன். தனுஷ் நிரம்ப தேறியிருக்கிறார். பல காட்சிகள் பரம யதார்த்தம். "ஆ சொல்லு, ஆ சொல்லு" என்று தனுஷ் பரியாமணிக்கு ஐஸ்க்ரீம் ஊட்டியதை டெல்லி கணேஷ் தன் மனைவிக்கு சொல்லும் போது அரங்கமே அதிருகிறது. shocking surprise ப்ரியாமணி. கண்கள் விளையாடுகின்றன. பிண்ணணி குரல் இன்னமும் விநோதினியை நினைவுப் படுத்துகிறது. வேலைக்காரியின் மகளாக பின்னியெடுக்கிறார். இனி நல்ல கேரக்டர்கள் இருப்பின் தமிழ் சினிமாவில் ப்ரியாமணியை கவலையில்லாமல் சிபாரிக்கலாம். கலக்கியிருக்கிறார். மேக்கப் இல்லாமல், எண்ணெய் வடியும் முகத்துடன் குளோசப் காட்சிகள், அர்ச்சனாவை ஞாபகப்படுத்துகிறது. ரொம்ப நாள் கழித்து தமிழ் பேச தெரிந்த நடிகை, நடிக்கவும் செய்திருக்கிறார். வழக்கமான பாலு மகேந்திரா நாயகியாக பாடலில் ஒரு காட்சியில் சட்டை மட்டும் போட்டுக் கொண்டு வருகிறார் [நண்பர்: அந்த ஸ்ட்ரைப் சர்ட் சூப்பர்ல ] ராஜாவின் "அந்த நாள் ஞாபகம்" கலெக்டர்'ஸ் எடிஷன். பார்க்க வேண்டியவர்கள் இன்னும் ஒரு வாரத்தில் பார்த்து விடுங்கள். அதற்கு பிறகு வேண்டுமானால் சன்னில் பொங்கல் ரிலிசாகலாம். பாலு மகேந்திரா better luck next time.

வெப்வேர்

போன வாரம் நடந்தேறிய மைக்ரோசாப்ட் டெவலபர்களில் கூட்டத்தில் எம்.எஸ் சில விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள். பில் கேட்ஸ் கூகிளில் விட்டதை பிடிக்கும் பிரயத்தனம் அப்பட்டமாக தெரிகிறது. கேட்ஸூம், ஸ்டீவ் பால்மரும் போட்டிப் போட்டுக் கொண்டு எம்.எஸ்ஸின் திட்டங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். உலகில் பல இடங்களில் அகலப்பாட்டை இணைப்பு வெகுஜனங்களுக்கு வர ஆரம்பித்து விட்டது. எல்லா இடங்களில் இணையத்தில் இணையும் வசதிகள் பெருகி வருகின்றன. நமது செல்பேசிகள் தளங்களைப் பார்க்க முடிகிறது. டெஸ்க்டாப் என்றழைக்கப்படும் ஒரிடத்தில் அமர்ந்து வேலை செய்யும் கதை கொஞ்சம் கொஞ்சமாய் கந்தலாகிக் கொண்டு வருகிறது. ஏற்கனவே உலகெங்கும் Web 2.0 பற்றிய குரல்கள் பலமாய் கேட்கத் தொடங்கியிருக்கிறது. இனி செயலிகளை உங்களின் கணியில் நிறுவ வேண்டிய அவசியங்களில்லை. எல்லாம் தளங்களிலோ அல்லது அஜாக்ஸ் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி ஒரே ஒரு இணைய பக்கத்திலோ பார்க்க முடியும். எடுத்துக்காட்டாக நெட்வெப்ஸ் என்கிற தளத்தில் பல்வேறுவிதமான செய்தியோடைகள், குறிப்புகள். நியுஸ்பேப்பர்களை ஒரே பக்கத்தில் நமக்கேற்றவாறு மாற்றிக் கொண்டு பார்க்க முடியும். மீபூ என்கிற தளத்தில் யாஹூ, எம்.எஸ்.என், ஏஓஎல், ஜிடாக், ஐசிக்யு என எல்லா தூதுவர்களையும் ஒரு சேர பயன்படுத்த முடியும். நாங்கள் எங்களுடைய நிறுவனத்தில் இதே ரீதியில் சில செயலிகளை செய்துக் கொண்டிருக்கிறோம். இவை கண்டபின் எல்லோரும் இணையத்தில் அலுவலக செயலிகளை கொடுக்க ஆரம்பித்தார்கள் [ரைட்லி, ரைட்போர்டு பாருங்கள்] இது எம்.எஸ்ஸின் ஆபிஸ் மென்பொருட்களுக்கு பலமான போட்டியாக விளங்கும். ஏனெனில் இவ்வகையான செயலிகளை நாம் எங்கும் நிறுவத் தேவையில்லை. இணையத்தொடர்பு இருந்தால் போதும். எல்லாவற்றையும் ஒரே இணையப் பக்கத்தில்/தளத்தில் செய்துவிட்டு போய்விடலாம். இவ்வகையான போட்டிகளைக் கண்டு லேசாக பேதியெடுத்த மைக்ரோசாப்ட் இப்போது தீவிரமாய் இவ்வகையான வெப்வேர் செயலிகளில் இறங்கியிருக்கிறது. அதன் முன்னோடி தான் ஸ்டார்ட்.காம். அதே ரீதியில் போன வாரம் அறிமுகப் படுத்தியது மைக்ரோசாப்ட் லைவ் அதில் முக்கியமாய் அலுவலக செயலிகளுக்கான ஆபிஸ் லைவ். ஆக இனி மென்பொருள் பைரசி என்பது முடிவுக்கு வரும் சாத்தியங்கள் தெரிகின்றன. ஏனெனில் இனி வரப்போகும் எல்லாமே இணையத்தளத்திலிருந்து செயல்படப் போகும் செயலிகள். எப்படி மின்னஞ்சல் பைரசி என்பது நகைப்புகுரிய வார்த்தையோ, அதேப் போல மென்பொருள் பைரசி என்பதும் வழக்கொழிந்துப்போகும் சாத்தியங்கள் தெரிகின்றன. பார்ப்போம் இந்த பபிள் எப்படி இருக்குமென்று

பார்க்க - ஆபிஸ் லைவ் | மீபூ| நெட்வெப்ஸ் | அஜாக்ஸ் | வெப் 2.0 | ரைட்லி | ரைட்போர்டு | ஸ்டார்ட்.காம்

கொ ழி க் கு ன் சி

நல்ல மழை இங்கே இப்போது. என் தங்கை மகளுக்கு [ஒன்றாவது படிக்கிறாள்] தமிழில் சொற்கள் எழுதும் வீட்டு வேலை. ஆசிரியை கோழிக்குஞ்சு என்று எழுதாமல் வெறுமனே சொல்லியிருக்கிறார். என் தங்கை மகள் எழுதியது கொ ழி க் கு ன் சி. வீட்டில் அதை நான் அமர்ந்து பொறுமையாய் கோழிக்குஞ்சு, சு என்று முடிக்க வேண்டும் சி அல்ல என்று சொல்லி, கொஞ்ச நேரம் கழித்து நோட்டினை வாங்கிப் பார்த்தால் எழுதியிருந்தது கொ ழி க் கு ன் சி உ [சி + உ = சு!!?] மறுபடியும் வாங்கி எழுதாமல் கோழி என்று சொல்ல சொல்லி எழுத சொல்லிப் பார்த்தால் கோ ழ் இ க் கு ன் சு என்றிருந்தது. அதற்கு மேல் சொல்லித் தர பொறுமையில்லாமல் ஒழுங்காய் நானே வாங்கி எழுதி 10 தடவை கோழிக்குஞ்சினை எழுதச் சொல்லி கிளம்பி வந்தேன். மொழி என்பது ஒரு குழந்தைக்கு எவ்வளவு அப்ஸ்ட்ராக்டான விஷயம். இவ்வாறு எழுத நினைத்தாலும் நம்மால் எழுத முடியாது. குழந்தைகளின் உலகம், அவர்களின் மொழி, சிந்தனை இவற்றை கண்டறிந்து நடப்பது என்பது ஒரு கடினமான காரியம். சுஜாதா க.பெ.மில் சொன்னதுப் போல இன்னமும் தமிழில் குழந்தைகளுக்கான புத்தகங்களும், மொழியும், கையேடுகளும் வரவேயில்லை என்றுதான் தோன்றுகிறது. இது ஏனோ அசோக மித்திரனின் ரிக்(ஷ்)காவினை நினைவு படுத்தியது. என்னதான் அசோக மித்திரனின் சில கருத்துகளில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழின் மிகச் சிறந்த கதை சொல்லி என்ற பட்டத்தினை கி.ராவுடன் சேர்த்து தரலாம்.


"உ" போடு

கொஞ்ச நாள் கழித்து கீற்றில் மேய்ந்ததில் நம்மாள் நக்கல் திலகம் பாமரன் புகுந்து விளையாடியிருக்கிறார். படிக்க சுவாரசியமாகவும், எள்ளலும், நக்கலும் தெறிக்கும் எழுத்துக்கள் பாமரனுடையது. அதுவும், அவரின் கடிதங்கள் குமுதத்தில் வந்து போது தொடர்ச்சியாக படித்தவன் நான். சமீபத்தில் பாமரனின் அஹிம்சாமூர்த்தி அமெரிக்காவினைப் படித்தப் போது ஒரு எள்ளலைக் கொண்டு எவ்வாறு சில அதிமுக்கியமான விஷயங்களை விவாதிக்க முடியும் என்று ஆச்சர்யப்படுத்தினார். நம்பிக்கைகள் என்கிற தளத்தினைக் கொண்டு அவர் எழுதியிருக்கும் "உ" போடு ஒரு சுவாரசியமான வாசிப்பு

பார்க்க: "உ" போடு | கீற்று

Comments:
பார்க்க வேண்டியவர்கள் இன்னும் ஒரு வாரத்தில் பார்த்து விடுங்கள். அதற்கு பிறகு வேண்டுமானால் சன்னில் பொங்கல் ரிலிசாகலாம். பாலு மகேந்திரா better luck next time.


do you really think that someone will offer him a tamil film when his health is not that OK and after
this film. i am not so hopeful.
-:)
 
பாலு மகேந்திராவின் படங்களும் அது ஒரு கனாக் காலமா? டிவியிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்கிறீர்களா? அதுவும் சரி தான்.

பாரதிராஜா, பாலுமகேந்திரா... ஏன் அவர்களின் அந்த காலத்தை விட்டு வெளிவராமல் outdate ஆகி விடுகிறார்கள்?
 
தன்னைவிட அந்தஸ்திலும், சமூகரீதியிலும் குறைந்த பெண்ணை காதலித்து கல்யாணம் பண்ண ஒரு ஆணுக்கு நிஜமாகவே உண்மையான காதல் இருக்க வேண்டும். " உன்னை வளைப்பதற்காக அந்த வேலைக்காரி இப்படி செய்கிறாள். வீணாப்போவாதே" என்று சொந்தமெல்லாம் சொல்லும். சொன்னார்களா..??

வேலைக்காரியை (பெண்ணை) கல்யாணம் பண்ணும் ஹீரோ தமிழுக்கு புதுசு என்று நினைக்கிறேன் வேண்டுமானால் "வச்சுக்" கொள்வார்கள்

விமரிசனத்திற்கு நன்றி. ப்ரியாமணி ஸ்நேகாவின் மலிவுப் பதிப்பு போல இருக்கிறார். அவர் படத்தைப் பற்றி, சன் டீவியில் கொடுத்த பேட்டியை பார்த்து தொலைத்து விட்டேன். இனி படம் பார்க்கும்போது அது வேறு ஞாபகம் வந்து தொலையும் :-)
 
//தன்னைவிட அந்தஸ்திலும், சமூகரீதியிலும் குறைந்த பெண்ணை காதலித்து கல்யாணம் பண்ண ஒரு ஆணுக்கு நிஜமாகவே உண்மையான காதல் இருக்க வேண்டும். " உன்னை வளைப்பதற்காக அந்த வேலைக்காரி இப்படி செய்கிறாள். வீணாப்போவாதே" என்று சொந்தமெல்லாம் சொல்லும். சொன்னார்களா..??//

தனுஷின் அப்பா சொல்லுவார். "உம் பொண்ணை விட்டு வசியம் பண்ற வேலையெல்லாம் இங்க வாணாம்". சுந்தர், உங்களுக்கு நன்றாக தமிழ்சினிமாவுக்காக யோசிக்க தெரிகிறது. பேசாமல் இயக்குநராகிவிடுங்கள் ;-)
 
நீண்டநாட்களுக்குப் பின்னர் சுவையான கொத்துப் பரோட்டா.

அடப்பாவிகளா நான் வேறு நீண்ண்ண்ட நாட்களுக்குப் பின்னர் நியூட்டனின் விதிகளையெல்லாம் மதித்து எடுக்கப்பட்ட அழகான தமிழ்ப்படம் பார்த்தேன் என்று சந்தோசப்பட அடச்சீ குப்பை என்கிறீர்களே அடுக்குமா?ஒரு வேளை நான் தான் கொஞ்சம் பழசாகிவிட்டேனோ?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]