Nov 30, 2005

பெல்ஹாம் என்றொரு குண்டு

பெல்ஹாம், கர்நாடக / மஹாராஷ்டிர எல்லையில் இருக்கும் மாவட்டம். பெல்ஹாம் புடவைகள் என்று எப்போதாவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இரண்டு வாரங்களாக, பெல்ஹாமில் ஊரடங்கு உத்தரவு இருக்கிறது. பெல்ஹாமின் மாநகராட்சி கலைக்கப்பட்டு, கர்நாடக அரசு அங்கே தங்கள் காவலர்களை நிறுத்தி வைத்திருக்கிறது. மாநகராட்சியின் மேயராக இருந்த கிரன் மோரே பதவியிறக்கப்பட்டுள்ளார். பிரச்சனை பெரிது. மராட்டியர்கள் நிரம்ப இருக்கும் (80% க்கும் மேல்) பெல்ஹாமினை கர்நாடாகாவிலிருந்து மஹாராஷ்ட்ரத்தோடு இணைக்கும் ஒரு தீர்மானத்தினை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றியது தான். முதலில் அரசியலமைப்பு படி, ஒரு மாநகராட்சிக்கு இத்தகைய சக்திகள் உண்டா என்ற கேள்வி எழுந்தாலும், மஹாராஷ்டிரா - கர்நாடக எல்லை, இன்றைக்கு காஷ்மீர் எல்லை போல ஆகிவிட்டது. ஊரடங்கு உத்தரவு சில நாட்களுக்கு முன்பு அமலாகியிருந்தது.

பிரச்சனை இன்று நேற்றல்ல, கிட்டத்திட்ட ஐம்பதாண்டு கால பிரச்சனை. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் போது, சோலாப்பூர், பெல்ஹாம், நிபாணா போன்ற மாவட்டங்கள் அப்போது கர்நாடாகாவுடன் சேர்க்கப்பட்டன. அப்பொழுதே பிரச்சனை ஆரம்பித்து விட்டது. பின் நடந்த "பஞ்சாயத்தில்" சோலாப்பூர், நிபாணா இரண்டும் மஹாராஷ்டிராவுடன் இணைக்கப்பட்டது. ஆனால், இன்றளவும் பெல்ஹாம் ஒரு தீராத எல்லை பிரச்சனையாக தான் இரண்டு மாநிலங்களுக்கும் இடையில் நிலவி வருகிறது. 1967-ல் உச்சநீதி மன்ற நீதிபதி திரு. மகாஜன், மஹாராஷ்டிராவின் கோரிக்கையினை நிராகரித்து விட்டார். அன்றிலிருந்து அந்த கமிஷனின் அறிக்கையினை பிடித்துக் கொண்டு கர்நாடக அரசு தொங்கிக் கொண்டிருக்கிறது.

இன்னும் பிரச்சனையினை ஆழமாகப் பார்த்தால், வட கர்நாடகாவிலிருக்கும் சுமார் 814 கிராமங்கள், கர்வார் சிறுநகரம் உட்பட கொங்கனி மொழியினை (மராத்தி மொழியின் கிளை மொழி. கோவாவில் பெரும்பான்மையானவர்கள் பேசுகின்ற மொழியாக அறியப்படுவது) தாய்மொழியாகக் கொண்டவர்கள். இதை ஒரு காரணமாக மஹாராஷ்டிர அரசு முன்வைத்தது. ஆனாலும், அதை கமிஷன் நிராகரித்துவிட்டது. ஆனால், அதற்கு ஈடாக மைசூரினை சுற்றியிருக்கும் சுமார் 656.3 சதுர கி.மீ பரப்பளவு உடைய சுமார் 264 கிராமங்களை மஹாராஷ்டிராவிற்கு மாற்றிக் கொடுத்தது. இன்றைக்கு இது ஒரு பிரச்சனையாக மாறி விட்டது.

சமீபத்தில் ஒகேனக்கல்லை சுற்றியுள்ள சில கிராமங்கள் தங்களுக்கு சொந்தம் என்று கர்நாடக அரசு சொன்னதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடாகாவிற்கும், கேரளாவிற்கும் இடையே இன்றும் நிலவி வரும் கஸ்ரக்கோடு எல்லை பிரச்சனை கனப் பிரசித்தம்.

மொழிவாரியாக இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இங்கே மைலாப்பூரில் ஆந்திர மாநிலம் உருவாவதற்கு காரணமான பொட்டி ஸ்ரீராமுலுவின் சிலையிருக்கிறது. திருப்பதியா, திருத்தணியா என்று வந்த போது, ம.போ.சிவஞானம் போன்றவர்கள் போராடி, தமிழகத்திற்கு திருத்தணியினைப் பெற்று தந்திருக்கிறார்கள். அடிப்படையில் அதிகமாக மொழி பேசும், கலாச்சாரத்தினை பின்பற்றும் மக்களின் அடிப்படையில் தான் இத்தகைய எல்லை பிரிவுகள் நடந்திருக்கின்றன. இத்தகைய நிலையில் கர்நாடக அரசின் கமிஷன் தொங்கலும், மஹாராஷ்டிரா அரசின் கேள்விகளும், பெல்ஹாமில் வாழும் 80% மராட்டியர்களின் மனநிலையும் வைத்துக் கொண்டு பார்த்தால், பெல்ஹாம் எந்த மாநிலத்திற்கு சொந்தம்?

Comments:
கர்நாடகா பாவங்க. எல்லாப்பக்கமும் எல்லைப்பிரச்சனை. அப்புறம் தமிழ்நாட்டுடன் தண்ணீர்ப் பிரச்சனை வேறு. ரொம்பப் பாவம். யாரு செஞ்ச புண்ணியமோ நமக்கு இரண்டு பக்கம் கடலாப் போச்சு.

இல்லாங்காட்டி நம்ம ஊர் அரசியல்வாதிகள் சுத்திச் சுத்திச் சண்டை போடுறதுக்கே சரியாப் போயிருக்கும்.

சரி இந்த பெல்ஹாம் பிரச்சனை ஒண்ணும் காவிரிப் பிரச்சனைபோல சிக்கலானது கிடையாது. காவிரி/ஒகனேகல் தண்ணீர் சம்பந்தப்பட்டது. ஒருவருக்கு கொடுத்தால் அடுத்தவர் வருத்தப்படுவார். அதுபோல இது காஷ்மீர் போலவும் கிடையாது. காஷ்மீரை விட்டுக்கொடுத்தால் அது வேறு நாட்டுக்குப் போய்விடும்.

பெல்ஹாம் அப்படி இல்லையே.இதோ பிடியுங்கள் சில யோசனைகள்.

1.எங்கு இருந்தாலும் இந்தியாவோடதான் இருக்கப் போகுது. மத்திய அரசாங்கம் ஒரு ஓட்டெடுப்பு நடத்தி ஏதாவது ஒரு பக்கம் சேர்த்துட வேண்டியதுதானே.

(யாருப்பா அது தெலுங்கானா/வட தமிழ்நாடு அப்படீன்னு தனி மாநிலம் வேணுமுன்னு ஒட்டெடுப்பு நடத்தச் சொல்றது? ஒத்துப்பா நீ. இது இந்தியாவிற்குள்ளேயெ ஒரு பகுதிய எங்கே சேர்க்கிறது என்பது பற்றித்தான். சும்ம என்னைய வம்புல மாட்டிவிடாதீங்க.)

2.கர்நாடகா, மஹாராஷ்டிரா இதில் யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களுக்கு கொடுத்துட வேண்டியதுதான். அந்தச் காச வச்சு அந்தப் பகுதி மக்களுக்கு நல்லது ஏதானும் செய்யலாம்.

யாரும் ரொம்ப சீரியசா எடுத்துக்கிட்டு என்னத் திட்டாதீங்க :-))

பாகிஸ்தான் பிரச்சனை தீர்ந்தாலும் உள்ளூர் வரப்புத் தகராறு தீராது.
 
கர்நாடகம் அதைச் சூழ்ந்த எல்லா மாநிலங்களுடனும் ஒரு சுமூகமற்ற உறவினையே கொண்டிருக்கிறது. ஆனால் இந்தப்பிரச்சனைகள் பொய்யானவையும் அல்ல. தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையிலும் இப்படியான பிரச்சைனைகள் உண்டு. தென்தமிழ்நாட்டை வளப்படுத்தும் மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றும் ஆறுகளின் நீர்ப்பிடிப்புப்பிரதேசங்களை கேரளா கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளது. ஆங்காங்கே சிறு தடுப்பு அணைகளை கட்டி தண்ணீரை திசைமாற்றுவது, மரங்களை, யானைகளை கடத்துவது இப்படியான செயல்கள் கேரள வனத்துறையின் சம்மதத்தின் பெயரிலேயே நடக்கின்றன. இப்படியான மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகளை கவனிக்கவும், விசாரிக்கவும் ஒரு தனி அமைப்பு இருத்தல் அவசியம். இது இந்தியா ஒரு கூட்டரசு என்ற உணர்வும், உண்மையும் புலனாகும் போதே உருவாகும். அதுவரை ஏமாந்த மாநிலத்தை சுரண்டுவதே பொது தேசியத்தின் பெயரில் நடைபெறும்.
 
கொஞ்ச வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருக்கும் மாமா ஒருவரிடம் தொ.பேசிக் கொண்டிருந்த போது, தமிழ்நாட்டில் மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டதை சொன்னார்.

வலங்கைமான் (சிறு)நகரம், தஞ்சை மாவட்டத்தில் வைத்துக் கொள்ளப்படாமல், புதிய திருவாரூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து மக்கள் போராடி சிலர் உயிர் விட்டதாகவும், அவர் சொன்னதாக ஞாபகம்.

வாசன்
 
நாராயண்,

நல்ல பதிவு. இது பற்றி நானும் ஒரு பதிவு போடவேண்டுமென்று எண்ணி.. எண்ணி....................

விடுங்க.. கூடிய சீக்கிரம் ஒண்ணு போட்டுடுவோம்.

- அலெக்ஸ்
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]