Nov 29, 2005

குறும்படங்களும், புதுக்கவிதையும்

சமீபத்தில் சில நண்பர்களின் புண்ணியத்தில் சில தமிழ் குறும்படங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. போன வாரக் கடைசியில் மட்டும் 8 குறும்படங்கள் பார்த்தேன். வெள்ளிக்கிழமை புக்லேண்ட்ஸில் போய் பொறுக்கியதில், சில குறும்/திரைப்படங்கள் பற்றிய இதழ்கள் கிடைத்தன. ஏற்கனவே என்னுடைய பதிவில் "செவ்வகம்" என்கிற புதிய மாற்று சினிமா பற்றிய இதழினைக் குறிப்பிட்டிருந்தேன்.இப்போது, குறும்பட இயக்குநர் லீனா மணிமேகலையை ஆசிரியராகக் கொண்டு "திரை" என்கிற புதிய சினிமா / மாற்று சினிமா / குறும்படம் பற்றிய இதழ் ஒன்று வந்திருக்கிறது. இதழ் முழுக்க சினிமா மயம். பாலுமகேந்திரா, சேரன், லோகிததாஸ் என்று சினிமா கும்பல். மாற்று சினிமா இதழ் என்றால் முதலில் என்ன சென்டிமெண்டோ தெரியவில்லை, பாலுமகேந்திராவும், சத்ய ஜித் ரேவும் வந்துவிடுகிறார்கள். மாற்று சினிமா இதழ்களைப் பற்றி அப்புறம் பேசலாம், இன்றைக்கு தமிழ் குறும்படங்கள்.

முதலிலேயே ஒரு டிஸ்கெள்ய்மர். நான் பார்த்தது, பார்த்துக் கொண்டிருப்பது தமிழகத்திலும், சென்னையிலும் கொண்டு வரப்படும் குறும்படங்கள் மட்டுமே. கனடிய, ஐரோப்பிய, அமெரிக்க தமிழ் குறும்படங்கள் பார்க்கவில்லை. ஆகையால், எழுதப்படும் கருத்து அவர்களையும் சேர்த்து/சேராமல் இருக்கலாம். அங்கேயிருந்து அத்தகைய படங்களைப் பார்ப்பவர்கள், இதைப் பற்றி எழுதலாம். தமிழில் குறும்படங்கள் / மாற்றுசினிமா பற்றி தொடர்ச்சியாக எழுதுபவன் [சுட்டி 1, சுட்டி 2] என்கிற முறையில், சமீபத்தில் நான் பார்த்த படங்கள் என்னை பயமுறுத்துகின்றன.

ஜீன்ஸ், ஜெர்கினோடு கிங்ஸ் ஆறாவது விரலாய் இருக்கும் இளைஞர்கள், பிலிம் சேம்பர் வளாகத்தினை சுற்றி இருக்கிறார்கள். அருகில் போய் கொஞ்சம் அறிமுகப்படுத்திக் கொண்டால், தான் ஒரு இயக்குநன் என்று அடையாளம் சொல்லுகிறார்கள். சமீபத்தில் பார்த்த எட்டு படங்கள் (இரண்டு கவிதைகளை விஷுவலாய் சொல்லும் முயற்சி, அதில் ஒன்று ஆத்மநாம் கவிதைகள். சத்தியமாய் ஆத்மநாம் ஆவி அவர்களை கதறடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்) ஒன்றை தெளிவாக உணர்த்துகின்றன. தமிழகத்தில் அல்லது சென்னையில் டிஜிட்டல் கேமராக்களும், எடிட் சூட்டுகளும் நிறையவே இருக்கின்றன. நிறைய டிஜிட்டல் டேப்புகள் சல்லிசாக ரிச்சி தெருவில் கிடைக்கின்றன. ஜீன்ஸ் போட்டவர்கள் எல்லாரும் இயக்குநர்களாக இருக்கிறார்கள். நல்ல குறும்படங்கள் வெகுவாக வர வேண்டும், மக்கள் மத்தியில் அதனை கொண்டு செல்லவேண்டும் என்கிற எண்ணங்கள் கொண்டிருந்த நான், பார்த்த படங்களை மனதில் கொண்டு, "மஜா", "சிவகாசி" பார்க்க போய்விடலாம் என்று தீவிரமாக பரிசீலித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனந்த விகடனின் "ஓ" பக்கத்தில் ஞாநி எழுதியிருந்ததுப் போல தமிழில் குறும்படம் எடுப்பவர்கள் அதிகமாகி இருக்கிறார்கள். ஆனால், எதை எடுக்கிறார்கள், என்ன படம் காட்டுகிறார்கள் என்று அருகில் சென்று பார்த்தால், பயமாக இருக்கிறது. முன்பெல்லாம் திரையரங்குகளில் படம் போடுவதற்கு முன் அரசின் பிலிம் டிவிஷனின் ஏதேனும் ஒரு ரீலை போடுவார்கள். "பீகாரில் வெள்ளம்" என்று தொடங்கும் பிலிம் ரீல்கள் பெரும்பாலும் கொட்டாவி விடுவதற்காகவே தயாரிக்கப்பட்டிருக்கும் அல்லது திரை முழுதும் பிரச்சார நெடியடிக்கும். தமிழ் குறும்படங்கள் பெரும்பாலானவை இதே ரகம்.

இங்கே பிலிம் இன்ஸ்ட்டியுட்டிலும், தனியார் திரைக் கல்லூரிகளிலும் படித்துவிட்டு, அல்லது யாராவது இயக்குநருக்கு துணையாக இருந்துவிட்டு குறும்படம் எடுக்கிறேன் பேர்வழி என்று கிளம்பும் ஒரு பட்டாளமிருக்கிறது. இவர்களுக்கு ஒரு ஷாட் எப்படி வைப்பது என்று கூட தெரியாமல் கிளம்பி தானும் ஒரு இயக்குநன் என்று போட்டுக் கொள்ளும் ஆசை மட்டுமிருக்கிறது. நான் பார்த்த எல்லா படங்களின் இறுதியிலும் குறைந்தது ஒரு 10 -15 நபர்களின் பெயர்கள் வந்தது. 5 நிமிட குறும்படத்துக்கு எதற்கு 20 பேர்கள் என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவின் அப்பட்டமான பாதிப்பு குறும்பட கனவுகளில் டீ குடித்து, தம் அடிக்கும் தோழர்களின் கண்களில் தெரிகிறது. அவர்களுக்கு, இது ஒரு விசிட்டிங் கார்டு. நானும் இரண்டொரு குறும்படங்கள் செய்தேன் என்று சொல்லிக் கொள்வதற்காக செய்வது. இதில் இன்னொரு வகை பாதிரிமார்கள் வகை. இவர்களின் உபதேசங்களும், பிரசங்கங்களும், பிரச்சாரங்களும் பார்த்தால், எடுத்தவர்களை உடனே கொன்றாக வேண்டும் என்ற துடிப்பு வரும். கார்ப்பரேஷன் கொசு மருந்து அடிக்கும் வாகனம் வந்தால் தெருவெங்கும் புகை பரவுமே அதைவிட இவர்களின் படங்களில் சமூக அக்கறை ஒழுகி, வழியும். ஷாட் வைக்க தெரியாதவனைக் கூட மன்னித்து விடலாம், இரண்டொரு படங்களில் கற்றுக் கொள்ளும் சாத்தியங்கள் உண்டு, ஆனால், இவர்கள் இன்னமும் தமிழ்சினிமாவை விட மோசமான "கிளிஷே"க்களிலும், அரைத்த மாவினை மழுக்க அரைப்பதிலும் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். மரங்களை வெட்டக் கூடாது என்கிற அடித்தளத்துடன் 10 நிமிட குறும்படங்கள் பார்த்தேன், ஐயோ இதற்கு சகித்துக் கொண்டாவது இரண்டு பாடல்களுக்காக "திருப்பாச்சி" பார்க்கலாம். 1980 வருட செவ்வாய் கிழமை ஒளிபரப்பப்படும் நாடகங்களை ஒத்த அமெச்சூர்த்தனம். இவர்கள் கையிலெல்லாம் கேமரா அகப்பட்டுக் கொண்டது, கேமராவுக்கு பிடித்த ஏழரை நாட்டு சனி.

பத்ரி குறிப்பிட்டிருந்த இரண்டு தமிழ் குறும்படங்களும் மறுநாள் பார்த்த ஒரு ஆறு குறும்படங்களும் தமிழில் குறும்படங்கள், புதுக்கவிதையின் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது. வானம்பாடி இயக்கம் ஆரம்பித்து வைத்த புதுக்கவிதை (அல்லது அதற்கு முன்பேவா?!) எவ்வாறு அலங்கோலப்படுத்தப்பட்டது என்பதை தினத்தந்தி ஞாயிறுமலரில் வரும் கவிதைகள் சொல்லும். தமிழ்நாட்டில் புதுக்கவிதை எழுதியவர்கள், கவிதைக்கு ஒரு ரூபாய் கொடுத்திருந்தால் கூட, அரசின் வெள்ள நிவாரண நிதியில் சில பல கோடி ரூபாய்கள் சேர்ந்திருக்கும் வாய்ப்புகளிருந்திருக்கும். அந்த அளவிற்கு இன்றைக்கு குறும்படங்கள் பெருகவில்லையென்றாலும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எல்லாம் சாத்தியம். இதன் சாத்தியங்கள் என்னை சந்தோஷப்படுத்துவதை விட பயமுறுத்துகிறது. தமிழ்நாட்டில் கல்யாண வீடியோ கேசட் எடுப்பவர்கள் கூட இன்றைக்கு மூன்று டிவி, ஒரு கணினி, மிக்சர் என்று முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்னமும், குறும்படவாதிகள் அமோனியா நாற்றமடிக்கும் மூத்திர சந்துகளில் பொருத்திய கேமரா கோணங்களை எடுக்காமல் சித்ரவதை செய்கிறார்கள். பத்ரி சொல்லியிருக்கும் அதே குறும்பட விழாவிற்கு போய், நானும் பிரகாஷும் ஒரு டீக்கடையில் கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்தோம். ஆனாலும் உமட்டல் போகாததால் இந்த பதிவு. இன்னமும் கலைப்படங்கள், மாற்று சினிமா என்றால் டீ குடிக்கும் நபரை முழுவதுமாக டீ குடிக்க வைத்து பின் அவரெழுந்து காசு கொடுக்கும் வரையில், கேமராவினை ஆன் செய்து விட்டு கேமராமெனும், இயக்குநரும் டீ குடிக்க போய்விடுவார்கள் போன்ற நிலையில் தான் உள்ளது. விஷுவல் மீடியத்தின் வலிமை என்ன என்று தெரியாமல், ஜெர்கின் ஜீன்ஸோடு நின்ற்பவர்கள் தான் இன்றைய குறும்பட, நாளைய சினிமா இயக்குநர்கள் எனில் என்ன பெரியதாய் மாற்றம் வந்துவிடும் தமிழ் சினிமாவிற்கு. டீக்கு பதில் அங்கே தயாரிப்பாளரின் காசில் 50 கார்களை பொறுமையாய் காட்டி "ரிச்"சா படம் வந்திருக்கு என்று "பீல்"லாகுபவர்கள்.

உண்மையான மாற்றுசினிமா, குறும்படம், ஆவணப்படம், கலைப்படங்கள் பற்றிய சிந்தனை கொஞ்சமும் இல்லாமல், யதார்த்தவாதத்தினை தவறாக புரிந்துக் கொண்டு, சொல்லவந்ததை சொல்ல தெரியாமல், டிஜிட்டல் டேப்புகளை வீண்டித்துக் கொண்டிருப்பவர்கள் தான் இன்றைக்கு பெரும்பாலும் தமிழின் குறும்பட இயக்குநர்கள். "நதியின் மரணம்" "மாத்தம்மா" போன்ற குறும்படங்கள் தான் என்னளவில் குறும்படங்களின் அளவுகோல். மற்றபடி நான் பார்ப்பதெல்லாம் குப்பைகள். எந்த ஒரு கலைவடிவமும் தொடக்கத்தில் மக்களை ஈர்த்தாலேயொழிய சென்றடைய முடியாது. இன்றைக்கு நான் பார்க்கும் தமிழ் குறும்படங்கள் பெரிதான சமூக மாற்றத்தையோ, மாற்று சினிமா பார்வையையோ முன்வைக்கவில்லை. தோன்றியதை செய்கிறார்களோ என்று நினைக்குமளவிற்கு தான் தமிழ் குறும்படங்கள் இருக்கின்றன. தமிழ் சினிமாவின் இலக்கணத்தினை மீறி, சமூக உணர்வுகளையும், மாற்று கருத்துகளையும், நகர/கிராம வர்க்க பேத உறவுமுறைகளையும், contemporary வாழ்வியலையையும் முன்வைக்க குறும்படங்களால் மட்டுமே முடியும், ஆனால் தமிழ் குறும்படங்கள் அதை செய்கின்றனவா ? இதற்கு எதிர்மறையான பதில் வரும்படசத்தில், புதுக்கவிதைக்கு நேர்ந்த அதே ஆபத்து, குறும்படங்களுக்கு நேரிடும் காலம் வெகுதொலைவில் இல்லை.

நண்பர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்கி நட்சத்திர குறியீட்டினை மீண்டும் உட்புகுத்தியிருக்கிறேன். நன்றி

Comments:
நாராயண், புதுக்கவிதை மாதிரி புற்றீசல் கிளம்பறதும் நல்லதோன்னு நினைக்கிறேன். நூறு பேர் சேந்து குட்டையைக் கிளப்பினா, எதிர்பாக்காத மாதிரி ஒர்த்தன் ரெண்டு பேர் வருவான்..இப்ப , வலைப்பதிவுகளையே எடுத்துக்கங்களேன்... முன்னால, எல்லாப் பதிவையும், ஒண்ணு விடாம படிச்சோம்...இப்ப தேர்ந்தெடுப்பு வந்துட்டுது இல்லையா.. இந்த தேர்ந்தெடுப்புக்கு, சாம்பிள் சைஸ் கொஞ்சம் பெரிசா இருக்கணும்.. குறும்படம் எடுக்கறதுக்கான செலவு கம்மிங்கறதுதான் முக்கியமான பாய்ண்ட். அமெரிக்காவில் இருந்து வர எல்லா கசின்களும், கையோட ஒரு டிஜிகாமை கொண்டு வந்துடறாங்க..வடபழனிலே கோடம்பாக்கத்துல மூலைக்கு மூலைக்கு எடிட்டிங் சூட் இருக்கு... லேசா தொட்டுப் பார்த்தா என்னன்னு தோணத்தான் செய்யும்... நிஜமாவே திறமையும் ஆர்வமும் இருக்கிறவங்க மட்டும் தான் நிலைப்பாங்க.

சமீபகாலமா நான் பார்த்த சில படங்களை வெச்சு மட்டும் சொன்னால், தமிழ்நாட்டில் எடுக்கப்படற குறும்படங்களின் தரம் ரொம்ப சுமாராத்தான் இருக்கு.. அதை விடவும் கடுப்பு என்னன்னா, படத்துக்கான கருவா அவங்க தேர்ந்தெடுக்கிற விஷயங்கள், அம்மில அரைச்சதை எடுத்து, ஆட்டுக்கல்லிலே போட்டு, அதை எடுத்து மிக்ஸிலே அரைச்சதுக்கு அப்பறம் கிரைண்டல்ல போட்டு அரைக்கிறாங்க..
 
நரேன், கிட்டத்தட்ட உங்கள் நிலைமாதிரித்தான், இங்கும் சில படஙகளை குறும்பட திரைவிழாவில் பார்த்தபோது ஏற்பட்டது. அந்தக்கடுப்பில், அடுத்த வருடத்துக்குள், நானும் ஒரு குறும்படம் எடுக்கிறதென்று தீர்மானித்திருந்தேன். கடைசியாய் வாங்கிய நோக்கியா போனில் 20 நிமிடம் record செய்யலாம் என்கின்றபோது, ரோட்டில் போற ஒரு பெண்ணை எடுத்தாலே இவர்கள் கொல்வதைவிட நல்லதொரு சுவாரசியமான குறும்படம் கிடைக்கும் என்பது எனது அபிப்பிராயம்.
நிற்க,
லீனா மணிமேகலையின் குறும்படங்கள் எவ்வளவு நல்லதொரு ஊடகம் குறும்படங்கள் என்பதை சென்ற வாரயிறுதியில் நிரூபித்துக்காட்டின. அவை குறித்து எழுதிய ஒரு பதிவு அரைகுறையில் நிற்கிறது என்பது வேறு விடயம் :-).
 
கடைசியாய் வாங்கிய நோக்கியா போனில் 20 நிமிடம் record செய்யலாம் என்கின்றபோது, ரோட்டில் போற ஒரு பெண்ணை எடுத்தாலே இவர்கள் கொல்வதைவிட நல்லதொரு சுவாரசியமான குறும்படம் கிடைக்கும் என்பது எனது அபிப்பிராயம்

DJ are you sure that this is legal in canada and you will not be accused of being a stalker, and,
are you planning to join any tamil magazine as a reporter or
become an international paparazi
put the smiley here
 
நாராயண், உங்களுக்கு விருப்பமிருந்தாலும் இல்லாவிடினும் நட்சத்திரக் குறியீட்டை இணைப்பது குறித்துப் பரிசீலிக்கவும். +/- பற்றி இல்லை எனினும், புதுப் பின்னூட்டங்கள் வந்தாலாவது தமிழ்மணத்தில் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
 
சன்னாசி, நீங்கள் சொன்னதை தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். தனிச்சையாக விருப்பமில்லாவிட்டாலும் ஒரு பதிவு கவனத்தினை பெறவாவது குறீயிடு வேண்டும் என்று சொல்லுவது ஒப்புமைக்கானது.

பிரகாஷ், நிறைய நபர்கள் கிளம்புகிறார்கள் என்பதனால் மட்டும் மாற்றம் வராது. குட்டை குழப்பிகள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். ஆனால், குறும்படம் பார்க்க நான் புதிதாக ஒருவரை கூட்டி வந்தால் என் நிலையினை யோசியுங்கள். குறுந்தாடி இயக்குநர்களுக்காக நான் கட்டையால் அடிவாங்கும் தியாகியாக முடியாது ;))

டிசே, என்ன மாடல், நான் சமீபத்தில் வாங்கியது 6600 ;) கொஞ்ச நாளில் பேப்பரசியாக வாய்ப்புகளதிகம்.
 
//உங்களுக்கு விருப்பமிருந்தாலும் இல்லாவிடினும் நட்சத்திரக் குறியீட்டை இணைப்பது குறித்துப் பரிசீலிக்கவும். +/- பற்றி இல்லை எனினும், புதுப் பின்னூட்டங்கள் வந்தாலாவது தமிழ்மணத்தில் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும். //

adhEy adhEy!
 
// இரண்டு கவிதைகளை விஷுவலாய் சொல்லும் முயற்சி //
கடவுளே!

// இன்னமும் கலைப்படங்கள், மாற்று சினிமா என்றால் டீ குடிக்கும் நபரை முழுவதுமாக டீ குடிக்க வைத்து பின் அவரெழுந்து காசு கொடுக்கும் வரையில், கேமராவினை ஆன் செய்து விட்டு கேமராமெனும், இயக்குநரும் டீ குடிக்க போய்விடுவார்கள் போன்ற நிலையில் தான் உள்ளது. //

பூ! இவ்வளவுதானா? நான் பார்த்ததில் மதியம் சாப்பிட்டு சிரம பரிகாரம் செய்து வரும் வரையில் நீண்டு தொடரும் சாலையில் தூஊஊரே ஒருவர் சைக்கிளில் வருவதைக் காட்டினார்கள். சைக்கிள் காரர் கேமராவைத் தாண்டிச் சென்றும் ஒன்றுமே ஆகாதபோது தான் சாயரட்சை வரையில் வரமாட்டார்கள் என்று தெரிந்தது.

அப்புறம் டிசே பெங்களூருக்கு ஃபோனும் கையுமாய் வந்தால் பிரிகேட் ரோட்டில் முதன்முறை அரைத்த மாவில் செய்த ஹாம்பர்கராய் ஒரு குறும்படத்தை (குறுந்தாடியுடன்) இணை-இயக்கத் தயார்.
 
நாராயண் ,
குறும்படம் எப்படி இருக்கவேண்டும் என விதிமுறைகள் விதிக்க முடியாது என்றாலும் எப்படிவேணுமானாலும் எடுப்பது என்ற விதியைப் பல இயக்குநர்களும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். புதுக்கவிதை நிலைதான் இதுக்கும்.
வலைப்பதிவுகள் போலவே, பட வலைப்பதிவுகள் பிரபலமாகும்போது இந்த அலட்டல்கள் நீர்த்துப்போகும் என எண்ணுகிறேன். மரம்வெட்டுவது பற்றி பலரும் படம் எடுத்தது குறித்து எழுதியிருந்தீர்கள். ஒரே மாதிரி படமெடுப்பது என்பது வறண்ட கற்பனைவளம் என்பதைவிட என்ன சொல்வது?
இரானிய குறும்படங்கள் சில பார்த்திருக்கிறேன். ஒரே மாதிரி எடுப்பதில்லை அவர்கள். நம் இயக்குநர்கள் படமெடுக்குமுன் சில படங்களைப் பார்ப்பது நல்லது.
அன்புடன்
க.சுதாகர்
 
ஆஹா, குறும்படம் என்று எல்லாம் பேசுகிறார்களே, நாமும் ஞானம் அடையலாம் என்று ஜெயா டீவில் மாலை ஏழு மணிக்கு
(இந்தியாவில் எட்டரை மணிக்கு) ஞாபகமா பார்த்தா??? போதாதற்கு என்னிடம் உள்ள ஹாண்டிகாமில் நாமும் படம் எடுக்கலாம்
என்று தோன்ற ஆரம்பித்த எண்ணம் வேண்டாம் விபரீதம் என்று இந்த குறும்படம் பார்க்கும் வேலையை ஏறக்கட்டிவிட்டேன்.
ஆனால் எனக்குத்தான் ஞானம் போதாது என்று பயந்திருந்தவளுக்கு தைரியம் வந்தது நாராயணா!
நான் பார்த்தவரையில் அறிவுஜீவிதனம் என்று சமூகத்தை சாடல், கண்ணீர் வரவழைக்கும் செண்டிமெண்டல் என்று மெலோ
டிராமா/அமெச்சூர்தனமோ?
 
//கனடிய, ஐரோப்பிய, அமெரிக்க தமிழ் குறும்படங்கள் பார்க்கவில்லை. ஆகையால், எழுதப்படும் கருத்து அவர்களையும் சேர்த்து/சேராமல் இருக்கலாம். //
அவர்களையும் சேரும்.
 
/*//கனடிய, ஐரோப்பிய, அமெரிக்க தமிழ் குறும்படங்கள் பார்க்கவில்லை. ஆகையால், எழுதப்படும் கருத்து அவர்களையும் சேர்த்து/சேராமல் இருக்கலாம். //
அவர்களையும் சேரும்.*/

: )))))))))))))))))) அங்கேயுமா!
 
எச்சூஸ்மி, / குட்டையைக் கிளப்பினா/ அது குட்டைய குழப்பினா இல்லையா?

நாராயணன்,
இதை ஒரு சமரசமற்ற விமர்சனமாக பார்க்கிறேன். அது அவசியம்தான். ஆனால் அப்படி எழுதும்போது அமெச்சூர் படங்களை தவிர்த்து எழுதவேண்டும். நிறைய வருவது வரட்டும். உங்கள்
நேரம் விரயமாகாமல் இருக்கவேண்டும் என்றால் இனி ஏதாவது ரிவியூ படித்துவிட்டு நன்றாக சொல்லியிருந்தால் மட்டும் பாருங்கள். அல்லது, முதலில் பத்ரியை பார்க்கசொல்லிவிட்டு , "நல்லா இருக்கு"ன்னு சொன்னார்னா நீங்கள் பார்க்கலாம். :-)
 
//இதை ஒரு சமரசமற்ற விமர்சனமாக பார்க்கிறேன்.//

ஏன் சமரசம் அடையவேண்டும் என்பதுதான் கேள்வி. மாற்றுசினிமா என்கிற ஊடகம் தமிழ் சினிமாவின் அளவிற்கு இல்லாமல் போனாலும், ஒரு இடைநிலை ஊடகம். அங்கேயும் நாம் தமிழ்சினிமா தான் பார்க்கவேண்டும் என்றிருந்தால், அதற்கு சிவகாசி பார்த்து விடலாமே. இப்பதிவின் நோக்கமே இடித்துரைத்தல்தான். நல்ல குறும்படங்களை என்றைக்குமே ஆதரிப்பவன் நான். ஆனால், குறும்படம் எடுப்பவர்கள் எல்லாம் தாங்கள் அறிவுஜீவிகள் என்ற நினைப்பில் எடுப்பதால் வரும் குழப்பமிது.
 
எல்லாத்துறைகளுக்கும் இருக்கும் குப்பைகளைப்போலவே குறும்படங்களுக்கும் இருக்கிறது என்று நினைக்கின்றேன். நான் பார்த்த/கேள்விப்பட்டதைக்கொண்டு, அருந்ததி இயக்கி கலைச்செல்வன் நடித்த 'முகம்', ரூபன், சுமதி ரூபன் இயக்கிய சில குறும்படங்கள் (You 2, இனி), 'துரோகம்' போன்ற இளைஞர் வன்முறையை கருவாகக்கொண்ட சில படங்கள், சிவகுமாரின் 'வெள்ளைப்பூனை', 'செல்லம்மா', 'ஆயீசா', லீனா மணிமேகலியின் 'பறை', 'மாத்தம்மா', 'விட்டு விடுதலையாகி', 'பலிபீடம்', 'கசந்து போயிருந்தது காதல்' (லீனாவின் சில படங்கள் குறும்படங்களா, ஆவணப்படங்களா என்ற குழப்பம் உண்டு) போன்றவை தரமான படங்கள் என்பது எனது பார்த்தல்/கேட்டல்/வாசித்தல் அனுபவத்தின்படி வந்த முடிவு.
.....
//நேரம் விரயமாகாமல் இருக்கவேண்டும் என்றால் இனி ஏதாவது ரிவியூ படித்துவிட்டு நன்றாக சொல்லியிருந்தால் மட்டும் பாருங்கள். அல்லது, முதலில் பத்ரியை பார்க்கசொல்லிவிட்டு , "நல்லா இருக்கு"ன்னு சொன்னார்னா நீங்கள் பார்க்கலாம். :-)//
கார்த்திக், நீங்கள் சொல்வதும் நல்லாய்த்தானிக்கிறது. ஆனால் ஒருமுறை மட்டுமே பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் படங்களுக்கு என்ன செய்வது? எனது எளிதான ஆலோசனை என்னவென்றால் (நான் அதைத்தான் செய்கின்றனான்) படம் அலுப்பூட்டுமபோது அரங்கில் இருக்கும் மயில்களை அவதானிக்கலாம். இல்லாவிட்டால் விருப்பமான பச்சைக்கிளிகளை (எனக்கு அஸின் போல)நினைத்துக்கொண்டு கனவு காணலாம் :-).
...
இரவி பேப்பரசியாக மாறவிட்டாலும், இந்தசாட்டில் பேரரசி கிடைத்தால் போதுமென்ற மனமெ பொன் செய்யும் மனம் என்று ஆறுதல் அடைந்துவிடுவேன் :-).
.....
//டிசே, என்ன மாடல், நான் சமீபத்தில் வாங்கியது 6600 ;) //
நரேன் அதே series ல் வருகின்ற 6620 model.
...
//அப்புறம் டிசே பெங்களூருக்கு ஃபோனும் கையுமாய் வந்தால் பிரிகேட் ரோட்டில் முதன்முறை அரைத்த மாவில் செய்த ஹாம்பர்கராய் ஒரு குறும்படத்தை (குறுந்தாடியுடன்) இணை-இயக்கத் தயார்.//
கண்ணன், கதாநாயகி தேடிக்கொண்டிருக்கின்றேன். கிடைத்தவுடன் சூட்டிங் ஆரம்பம். தயாராக இருங்கள் :-).
 
கனடாவில் இடம்பெற்ற அனேகமான (கடந்த சில ஆண்டுகளில்தான் பிரபலமாகத் தொடங்கின) 'குறும்பட விழாக்கள்' எனப்படுகிறவையைப் போய்ப் பார்த்த அனுபவத்தில் கிட்டத்தட்ட நீங்கள் எழுதியிருக்கிற (தமிழ்சினிமா மோகம்/சினிமா மோகம், இயக்குநர்/நடிகர் கனவு) என்கிற முடிவிற்குத்தான் வந்திருந்தேன். குறும்படம் எடுப்பது இப்போதைய ஒரு மோஸ்தர் என்றே நினைக்கிறேன். 'வித்தியாசமான' முயற்சிகளில் ஆர்வப்பட்டு, இவற்றை போய்ப் பார்த்து அன்றைய நாளை உளைச்சல்ப்படுத்துவது என்பது உண்மைதான்; மற்றப்படி குறும்படங்கள் வருவதால் நஸ்டமுமில்லை! ஒன்று ரெண்டு தேறலாமும்தான். அதுகுறித்து 'தேறாதா' என எதிர்பார்ப்பும் இல்லை! அதனால irrirate ஆகாமல் போகிறது. அடிக்கடி ஏதாவது மோஸ்தர்கள் வேண்டித்தானே இருக்கிறது!
இப் பதிவைப் படித்ததும் கனடிய அமெரிக்க சூழல் குறித்து ஏதோ'இங்க மட்டும் என்ன வாழுது'
என்று எழுதத் தோன்றியது.
//மாற்றுசினிமா என்கிற ஊடகம் தமிழ் சினிமாவின் அளவிற்கு இல்லாமல் போனாலும், ஒரு இடைநிலை ஊடகம். அங்கேயும் நாம் தமிழ்சினிமா தான் பார்க்கவேண்டும் என்றிருந்தால், அதற்கு சிவகாசி பார்த்து விடலாமே.//
அதேதான்.
இந்தக் 'கலை'யை ஊக்குவிக்கிற நேரம், அந்தக் கலையை ஊக்குவித்திரலாம் என்பதே.உளைச்சலுமில்லை.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]