Dec 31, 2005

ஆளப் போவது யார்?

2006 தமிழகத்தினைப் பொறுத்தவரை மிக முக்கியமான வருடம். தமிழக சட்டசபை தேர்தல்கள் இந்த வருடம் நடைபெற இருக்கிறது. இரண்டு காரணங்களினால் இந்த தேர்தல் மிக முக்கியமானதாகிறது.

ஒன்று ஜெயிக்கப் போகும் கட்சி / தலைவர்கள் தான் தமிழகத்தினை 2010 வரை ஆளுவார்கள். 2010 என்பது மானுட வாழ்வியலிலும், உலக அமைப்பிலும் ஒரு முக்கியமான மைல்கல்லாய் அமைந்துவிடும். இப்போதே நிறைய சமூக மாற்றங்கள், அறிவியல் தொழில்நுட்பம் என ஆரூடங்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ஆக, தமிழகத்தினை 2010 வரை ஆளப்போவது யாராயிருந்தாலும், அவர்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி தமிழகத்தினை முன்னெடுத்து செல்லவேண்டும் என்பது பில்லியன் டாலர் கேள்வி.21-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் நிலையென்ன? எப்படி வளர்ச்சியடைய போகிறோம்? மாறி வரும் உலக பொருளாதார சூழலையும், அரசியல் கோட்பாடுகளையும் தமிழகம் (முக்கியமாக சென்னை, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை) எப்படி எதிர்கொள்ளப் போகிறது ? தமிழகம் இந்தியாவிலேயே முதலீட்டுக்கு சாதகமான மாநிலங்களில் முதல் இடத்தில் இருக்கிறது. இதைப் எப்படி ஆள வரப்போகிறவர்கள் தக்கவைத்துக் கொள்ளப் போகிறார்கள்?

இரண்டாவதாக, தமிழகத்தின் மூத்தக் கட்சியான தி.மு.க.வின் தலைவரான கருணாநிதிக்கு வயதாகிக் கொண்டேப் போகிறது. அ.தி.மு.கவிலோ ஜெயலலிதாவிற்கு பின் இரண்டாம் கட்டத்தலைவர்கள் கிடையாது. திராவிட அரசியலின் கடைசி தேர்தலாக இது இருக்குமா ? இந்த இரண்டு திராவிட பாரம்பரிய கட்சிகளைத் தாண்டி, பா. ம.க, விடுதலை சிறுத்தைகள், கொஞ்சமாய் ம.தி.மு.க, விஜயகாந்தின் தே.தி.மு.க போன்றவைகளும், தேசிய கட்சிகளான காங்கிரஸும் பா.ஜ.க வும் கம்யூனிஸ்டுகளும் தமிழகத்தின் தலையெழுத்தினை மாற்றி எழுதும் சக்தியினை பங்குப் போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த தேர்தலில் நடக்காமல் போனாலும், அடுத்த தேர்தலுக்கு போகும் போது தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் சாத்தியங்கள் இருக்கிறதா? இது தாண்டி, இந்தியாவெங்குமே பொருளாதாரம், அடிப்படை கட்டமைப்பு, அரசியல்வாதிகளை பின்னி பெடலடெக்கும் ஊடகங்கள், தகவல் பெற்றறியும் மசோதா, தகவல் தொழில்நுட்ப,அதிநவீன தொழில்களின் முன்னேற்றம் என்று ஹை-வோல்டேஜில் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதற்கு சமமான குரல்கள் தமிழகத்திலும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. யார் வந்தாலும், இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். வலைப்பதிவுகள் சமீபத்தில் நடந்த பிரிட்டிஷ் தேர்தலில் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றன.

இந்த முக்கியமான தேர்தலை சமூக மாற்றத்தினை உள்ளடக்குவதில் ஒரு சிறு முயற்சியாக "தேர்தல்2006" என்கிற கூட்டு வலைப்பதிவினை தொடங்கி இருக்கிறேன். ஜனவரி தொடங்கி பேச ஆரம்பிக்கலாம். எப்போது தேர்தல் அறிவிப்பு வரும் என்று தெரியாமல் இருந்தாலும், அடிப்படை கேள்விகளையும், அரசியல் விளளயாட்டுகளையும் அலச அரம்பிக்கலாம். 234 தொகுதிகளை தொகுதிவாரியாக அலச முடியும். தமிழகமெங்கும் விரவியிருக்கும் வலைப்பதிவாளர்கள் அவரவர்கள் இடத்தின் நிலவரத்தினை பதியலாம். சாதாரணமாய் தினமும் சந்திக்கும் பல்வேறு மக்களிடம் சில கேள்விகள் கேட்டு பதில் பெறலாம். தமிழகம் யார் தலைமையில் ஆள வேண்டுமென்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ரோட்டில் சர்வசாதாரணமாக பார்க்கும் மக்கள் தான் எஜமான்கள். அவர்கள் நினைத்தாலேயொழிய மாற்றங்கள் வாராது. இந்த வலைப்பதிவு தேறும் பட்சத்தில், இதனை கல்லூரிகளுக்கு எடுத்து செல்லலாம். என்னளவில் ஊடகங்களில் இருக்கும் தொடர்புகளைக் கொண்டு நிருபர்களிடமிருந்து சேதிகள் சேகரிக்க முனைகிறேன். நாளைய தலைமுறைக்கு ஒரு ஆரோக்கியமான வெளியை உருவாக்கி விவாதிக்க சொல்லலாம். அவரவர் இடங்களிலிருந்து நிலவரங்களை பதியலாம். சென்ற தேர்தலை நான், அரவிந்தன் மற்றும் சில நண்பர்கள் இணையத்தில் முழுமையாக தொகுத்திருந்தோம். tamil.net இல் பங்கு பெற்றிருந்தவர்களுக்கு தெரிந்திருக்கலாம். இந்த முறை அந்தப்படை பெருகட்டும். உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் / தமிழகத்தின் அரசியலில் ஆர்வமிருக்கும் எவரும் இதில் பங்கு பெறலாம். தமிழகத்தில் என்னென்ன இருக்கவேண்டும், என்ன மாறுதல்கள் வேண்டும் என்று தொடர்ச்சியாக கருத்தினை வற்புறுத்துங்கள். இதில் யார் வேண்டுமெனாலும் சேர்ந்து கருத்துக்களை பகிரலாம். நீங்கள் எந்த சார்பு நிலை வேண்டுமானால் இருக்கலாம்.(கலைஞர் தான் உலகின் உன்னதமான தலைவர், புரட்சி தலைவி போன்ற தலைவி சூரிய குடும்பத்திலேயே இல்லை, திருமா/ தலித் அரசியல் இல்லாமல் தமிழகமில்லை, மருத்துவர்.இராமதாஸ் இருக்குமிடம்தான் தமிழகத்தின் அசைக்கமுடியாத சக்தி ) எவ்விதமான கருத்தாங்களையும் முன்வைக்கலாம். தி.மு.க/அ.தி.மு.க, தலித், தமிழ் தேசியம், நக்சல்பாரி, உலகப்பொருளாதாரம், விடுதலைப்புலிகள் ஆதரவு / எதிர்ப்பு, ஈழத்தமிழர் வாழ்க்கையும் தமிழக அரசியலும், வாக்கு போடவேண்டுமா / வேண்டாமா, தேர்தல் முறைகளில் வேண்டிய மாற்றங்கள் என்ன, நேர் /எதிர் / குறுக்கு / உள்குத்து அரசியல், மூன்றாம்/நான்காம்/பத்தாம் அணி என்று எந்த தலைப்பிலும் எழுதலாம். மிகவும் சீரியஸாக எழுத வேண்டும் என்கிற கட்டாயங்கள் இல்லை. பகடி, நையாண்டி, நகைச்சுவை என பல்வேறு முகங்களில் தமிழக அரசியலை ஆராயலாம். நானே ஒரு "கொள்கை / தேர்தல் அறிக்கை generator" தயார் செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கையினை எழுத சிரமபடும்போது நாம் உதவலாம் என்ற நல்லெண்ணம் தான் ;) மற்றபடி இதை ஒரு மிக முக்கியமான மாற்று ஊடகமாகவும் மக்களின் குரலாகவும் மாற்றுவதென்பது மக்களின், நண்பர்களின், வலைப்பதிவர்களின் கையில் (அல்லது கீபோர்டில்) இருக்கிறது.

கூட்டு வலைப்பதிவில் பதிய விரும்பும் நண்பர்கள், பின்னூட்டத்தில் தங்களின் மின்னஞ்சல் முகவரியினை கொடுங்கள், இணைத்து விடுகிறேன். ஒரு புதிய களத்தில் தமிழகத்தின் எதிர்காலத்தினை மாற்றும் காரணிகளை அலசி, ஆராய்ந்து, செப்பனிடுவோம். மற்றபடி, mandatory New year wishes : )

"மாற்றம் வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போறாது. மாற்றமாக நீ மாறாவிடில் மாற்றங்கள் வாராது"

Dec 30, 2005

புதுப்பேட்டை: நிழலுகம் - 102 - ரிபீட்டு :)

பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றிகள். வடசென்னையில் நான் எழுதியது தினசரி நடக்கும் ஒரு சர்வசாதாரணமான விஷயம். இதனாலேயே, நீங்கள் வடசென்னையை இத்தாலி மாபியாக்களும், ஸ்பானிய தாதாக்களும் உலாவும் இடமாக உருவகிக்காதீர்கள். பிரகாஷ் , அருள் , சன்னாசி மற்றும் மற்றவர்கள் சொன்னதுப் போல, இதை ஆவணப்படுத்தாதது மிகப் பெரிய குறை. ஆசாத் சொன்ன "சுத்துப் போடறது" போன்றவை 80களில் மிகப் பிரபலம். இன்றைக்கு நிழலாளிகளும் மாறிவிட்டார்கள். ரிலையன்ஸ் இன்ஃபோகாம் பாலன்ஸ் ஷீட்டில் கர்ச்சீப் விழுந்ததற்கான காரணத்தினை கொடுங்கையூர், ஐஓசி நகர், சுதந்திர நகர், காலடிப்பேட்டை, திருவொற்றியூர், காசிமேடு, அஜாக்ஸ் போன்ற இடங்களில் பார்க்கலாம் ;) ஒரு காலத்தில் ரிலையன்ஸின் எல்ஜி போன்கள் குப்பைத்தொட்டியில் கிடந்தன. use and throw மாதிரி இவற்றினை நிழலாளிகள் உபயோகப்படுத்தினார்கள்.

வடசென்னை வாழ்வியல் என்பது மிகமுக்கியமான விஷயம். சென்னை என்றொரு பெருநகரத்தின் தோற்றிடம் வடசென்னை தான். இன்றைக்கு வேண்டுமானால் மயிலாப்பூரும், தி.நகரும், அடையாரும், தரமணியும் சென்னையாக அடையாளம் காணப்படலாம். ஆனால் உண்மையான சென்னையின் ஆணிவேர் வடசென்னையில், சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு அந்த பக்கத்தில் கருவாடு நாற்றத்தோடு அழுக்காய் இருக்கிறது.

//வாழ்க்கையின் இருண்ட பக்கத்தை பதிவு செய்வது அவசியம் தான். அந்த இருளிருந்து தோன்றும் ஓரிரு ஒளிக்கீற்றுகளையாவது பதிவு செய்வது அதைவிட முக்கியம்.//

சுந்தரமூர்த்தியின் கருத்துக்களோடு ஒத்துப் போவேன். ஆனால், இது ஒரு கேட்க, பார்க்க, திரில்லிங்காக இருக்கும் ஆனால், படுமோசமான வாழ்க்கை. இவற்றினை ஆவணப்படுத்துதலில் ஒரு பகுதியாக இருக்க வைக்கலாம். ஆனால் யதார்த்தம் என்னவெனில் ஒரு முறை நீங்கள் மாட்டினீர்களேயானால், போலீஸும், சமூகமுமே உங்களை மீண்டும், மீண்டும் அந்த புதைகுழியில் தள்ளத் தொடங்கும்.


சசி எழுதியிருந்த உளவு நிறுவனங்கள் போல, நிழலாளிகளிடமும் 'இன்பார்மர்கள்' என்றொரு பிரிவு உண்டு. ஆனால், இன்பார்மர்கள் நிழலாளிகளை விட பரிதாபமிக்கவர்கள். நிழலாளியோ, அல்லது போலிஸில் இருக்கும் "போலிஸ் இன்பார்மர்களோ" நெருங்கிய நிழலாளிகளிடத்தில் 'போட்டுக் குடுத்தால்' இன்பார்மரின் கதை கந்தல். வாழ்வின் மிக மோசமான மரணத்தினையும், சித்ரவதைகளையும் இன்பார்மர்கள் சந்திக்க வேண்டியதிருக்கும். இதில் சில சமயங்களில் போலிஸே கூட உங்களைப் போட்டு தள்ளிவிடும். அவர்களுக்கு தேவை 'அழுத்தம்' வந்தால் கணக்குக் காட்ட ஒரு ரவுடி, தாதா அல்லது பொறுக்கி. இன்பார்மரின் பெயர் ஏற்கனவே போலிஸ் ஏடுகளில் இருக்கும். அதனால் 'கணக்கு தீர்ப்பது' மிக சுலபம். ஆனாலும், இன்பார்மர்கள் இருப்பார்கள். அது இங்கேயும், அங்கேயும் செல்ல முடியாத வாழ்நிலை. மிடில் கிளாஸ் குடும்பங்கள் மாதிரி மிடில் கிளாஸ் நிழலாளிகள். பெரிதாய் வாழ்ந்திட முடியாது, ஆனால் ஒரளவிற்கு பாதுகாப்பாய் இருக்கலாம். "தமத்த" பயலுகள் இன்பார்மர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பார்கள்.

ஆனால், தென்னமரிக்க களியாட்ட வாழ்க்கைக்கு சற்றும் குறையாத, களியாட்டங்களும், ஆட்டமும், குதூகலமும் நிறைந்த குறுகிய வாழ்க்கை. அம்மன் கோயிலுக்கு ஆடிமாதம் கூழ் ஊற்றுவதில் தொடங்கி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கள், கிறிஸ்துமஸ் என்று அமர்க்களப் படுத்துவார்கள். ஆட்டமும், தேய்ந்து போன டேப் ரிக்கார்டரில் "திருவிளளயாடல்" வசனமும், "குங்குமப் பொட்டில் மங்கலம்" என்று பாடிக் கொண்டிருக்கும்போதே, திடீரென ஒரு கூட்டம் "வடுமாங்கா ஊறுதுங்கோ, தயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ' என்று ஆரம்பித்து ஒரே களேபாரமாய் மாறும் தருணங்கள், எவர் செத்தாலும், "..த்தா மூடுறா கடைய" என எல்லா கடையையும் மூடிவிட்டு, இடுகாட்டிலேயே, ஒரு ஒரமாய் உட்கார்ந்துக் கொண்டு, 'அண்ணே போய்டிய்னே, போய்டியினே, மயிரு ஊத்துறா" என அவர்களிடத்திலேயே காசு வாங்கி தண்ணி அடித்து ரகளை பண்ணுவது, சிறுவண்டி, பெருவண்டி, நைஸ் மாஞ்சா என ரெடி பண்ணி, தீபாவளியன்று பாணா காத்தாடி பறக்க விடுவது ( காத்தாடியில் இருக்கும் வகைகளைப் பற்றியே தனியாக எழுத முடியும். புல் ஷீட், அரை ஷீட், பாணா, ஒத்தகண், ரெட்டை கண் என பல வகைகள் உண்டு) என கொஞ்சமாய் இருக்கும் அவர்களின் கோரமான வாழ்வின் சந்தோஷ தருணங்கள். இதுவே கூட சண்டையை ஆரம்பிக்கும். மாஞ்சா போடுதல் பற்றி எனக்கு முழு விவரங்கள் தெரியாது. ஆனால் மாஞ்சா போடுவது என்பதே ஒரு புத்தகத்திற்கான விஷயம். 80களில் மாஞ்சா கலவையிலிருந்து நூலினை தோய்த்து வெளியேற்றி ஒரு புல்ஷீட்டினை "பெரள்" போட்டு கொண்டிருந்தப் போது தான், ஸ்பேனரின் மற்ற உபயோகங்கள் புரிய ஆரம்பித்தது ;) களியாட்டமும், கவிழ்ப்புமாக நிறைந்த வாழ்க்கையது. இதில் 'ப்ராக்கெட் விடறது' என்பது பரவலான வழி. அதாவது நீங்களும் சக கூட்டாளிகளும் தண்ணியடிக்கப் போனால், மற்றவர்கள் உங்களை 'ஏத்தி' விடுவார்கள். நீங்களும் 'மெதப்பில்' அவர்களுக்குத் தேவையானதை வாங்கி தருவீர்கள். உங்கள் காசில் நன்றாக மங்களம் பாடிவிட்டு, "எஸ்"-ஆகிவிடுவார்கள். எஸ்ஸாவுதல் என்பது escape ஆகுதலின் ஷார்ட் பார்ம். இப்படியாக உங்களை 'ப்ராக்கெட் விட்டு' அடுத்தவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். ஆனால் நிழலாளிகள் வாரிக் கொடுப்பதில் மன்னர்கள். சொந்தமாக எதுவும் சேர்த்து வைத்துக் கொள்ளத் தெரியாதவர்கள். கொஞ்சம் உஷாரான ஆட்கள் தான், நிலம் வாங்கிப் போடுவார்கள். பெரும்பாலானவர்களுக்கு தனிமையில் தான் வாழ்க்கையோடும். கண்டிப்பாக வீட்டை விட்டு துரத்தி விடுவார்கள். கல்யாணம் செய்துக் கொள்ளலாம். ஆனால், நிம்மதியாக வாழ முடியாது.

நிழலாளி சமூகத்தில் மிக முக்கியமான விஷயம் இங்கே பேதங்கள் கிடையாது. பெண் நிழலாளிகள் சிலர் (பெரும்பாலும் சாராயம் கடத்துபவர்கள், காய்ச்சுபவர்கள், கஞ்சா விற்பவர்கள், பெண்களைக் கொண்டு பாலியல் தொழில் நடத்துவர்கள், கொஞ்சம் அரசியல் மகளிரணி ஆட்கள்) ஆண் நிழலாளிகளை விட மோசமானவர்கள். ஜமுனாக்கா என்ற பெண் நிழலாளி நான் பள்ளி படிக்கும்போது ஒரளவுக்கு பிரபலம். சைக்கிள் ரிக்சாவில் தான் வருவார். முழு வெற்றிலைப் பாக்கு வாயும் நல்ல அகண்ட உடல்வாகும் கொண்டவர். ஆனால் வாயை திறந்தால், எல்லோரும் காதை மூடிக் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு வண்டை வண்டையாக (சாம்பிள் பார்க்க (கெட்ட வார்த்தைகளின் அரசியல் ) என்ன பேசினார் என்று எழுத முடியாது. எழுதினால் வலைப்பதியும் பெண்கள் கண்டிப்பாக எனக்கு 'பத்வா' கொடுத்து விடுவார்கள் ;)) வரும். ஆண்,பெண் பேதம் பார்க்காது கிழிபடுவீர்கள். ஆனால் ஜமுனாக்காவிற்கு குழந்தைகள் மீது பாசமதிகம். சமூகத்தின் சட்டதிட்டங்கள் எல்லாம், நிழலுலகத்தில் பெரும்பாலும் செல்லாது. தன் கணவனை வெட்டிக் கொன்றவனையே திருமணஞ்செய்துக் கொண்டு, மூன்றாம் மனைவியாக வாழ்வர்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். அப்படியில்லையெனில் ஜமுனாக்கா மாதிரி 'வேறு' தொழில்கள் செய்து வாழ வேண்டியதுதான். ஆனால், ஆண்களுக்கு சற்றும் குறைவில்லாத செயல்களை பெண்களும் செய்வார்கள். கூலிக்கு கை, கால் எடுக்கும் பெண் தாதாக்களையெல்லாம் நீங்கள் கொடுங்கையூர், பாரதி நகர், ஐ ஓ சி சுதந்திர நகரில் பார்க்க முடியும். தற்போது அமைச்சரவையில் இருக்கும் ஒரு 'அமைச்சர்' போன தலைமுறை பெண் நிழலாளி.

பெரும்பாலான நிழலாளிகளுக்கு பார்க்கும்படியான தொழில் தண்டல் விடுதல் அல்லது கொஞ்சம் டிசன்டாக "பைனான்ஸ் பிஸினஸ்" தான். மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி என்றெல்லாம் பேசுபவர்கள் முழுநேர தண்டல்காரர்கள். நிழலாளிகள் நிறைய பேருக்கு பைனான்ஸ் கையாளத் தெரியாது என்பதுதான் உண்மை. அடிக்கத் தெரியும். நடுரோட்டில் சவுண்டு விடத் தெரியும். கொஞ்சம் 'ஞானமுள்ளவர்கள்' தான் 'ஸ்கெட்சு' போடுவார்கள். மற்றபடி நாளிதழ்கள் படிப்பார்கள். அவ்வளவே. சென்னை நிலவரபடி ஒவ்வொரு செயலுக்கும் ஒரு 'ரேட் கார்டு' இருக்கிறது. இங்கே அதை நான் பிரசூரித்தால், என்னைத் தூக்கி உள்ளே உட்கார வைத்து விடுவார்கள். அதற்கு பின் லாக்-கப்பில் இருக்கும் 12 கம்பிகளை திருப்பி, திருப்பி எண்ணி காலத்தினை கழிக்க வேண்டியதுதான். நிழலாளிகளின் இன்னொரு முக்கியமான குணாதிசயம் - நம்பகத்தன்மை. உயிரே போனாலும், காட்டிக் கொடுக்க மாட்டார்கள். காட்டிக் கொடுக்கும், உள்ளே இருந்துக் கொண்டே குழிபறிக்கும் நிழலாளிகளின் மரணம், இன்பார்மர்களையொத்தது. ஒரு வேலை செய்ய தலைப்பட்டார்களேயானால், ஒரு நாளும் செய்யச் சொன்னவரின் பெயர் வெளியே வராது. அவ்வளவு உத்தரவாதம் கிடைக்கும். அதே சமயத்தில், நீங்கள் 'பசை'யுள்ள ஆள் என்றால், அதைச் சொல்லியே காசு வாங்கும் கூட்டமும் இருக்கிறது.

ஒவ்வொரு நிழல் குழுக்கும் ஒரு எல்லையுண்டு. காசிமேட்டினில் பிரச்சனை நடந்தால் அது காலடிப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், மணலி, எண்ணூர் போன்ற ஏரியாக்களில் இருக்கும் நிழலாளிகள் தான் பார்க்கவேண்டும். சைதாப்பேட்டை நிழலாளிகள் உள்ளேப் புக முடியாது. அப்படி மீறி போய் ஏதாவது நடந்தால், முதலில் காம்ப்ரமெய்ஸ் நடக்கும். அதுவும் சரிவரவில்லையெனில் 'ஸ்கெட்சு' போட்டு விடுவார்கள். உயிருக்கு உத்தரவாதம் வேண்டுமெனில் மாதுங்கா, தாராவி, முலாந்த் போய் டீக்கடை வைத்து பிழைத்துக் கொள்ள வேண்டியதுதான். தமிழ்நாட்டில் எங்கேயிருந்தாலும், தேடி வந்து 'போட்டுத் தள்ளு'வார்கள். கடந்த பத்து வருடங்களாக தான் 'கூட்டியார்ரது' பிரபலமாக இருக்கிறது. "கூட்டியாரது' அல்லது 'கூலிப்படை' என்பது ஒரு மாவட்டத்திலிருந்து, இன்னொரு மாவட்டத்திற்கு வந்து 'காரியங்களை' செய்துவிட்டு போய்விடுதல். Offshoring மாதிரியான விஷயம் ;) உங்களுக்கான வேலையே உங்களுக்கு சம்பந்தமேயில்லாத ஒருவன் வந்து செய்துக் கொடுத்துவிட்டு கூலி வாங்கிக் கொண்டு போவான். 'அபீட்டாவுதல்' என்பதற்கு ஏறக்குறைய இதைப் பொருள் பொருந்தும்.

இவ்வளவு மோசமாக தெரிந்தாலும், அவரவர்கள் ஏரியாவில் அவர்கள் சாதாரணமாக இருப்பார்கள். வரிசையில் நின்று தண்ணீர் பிடிக்கும் நிழலாளிகளைப் பார்த்திருக்கிறேன். எல்லா நிழலாளிக்கும் தங்களின் நிலை தெளிவாக தெரியும். வெளியே யாராவது சிறுசண்டை போட்டால் கூட கோவம் வருவதை கவனித்திருக்கிறேன். சண்டையும், ஆயுதங்களையும் தொடர்ச்சியாக வெறுப்பவர்கள் நிழலாளிகளே. ஆனாலும், அது இல்லாமல் அவர்களால் வாழமுடியாது. சேரா, வொயிட் ரவி போன்றவர்களிடத்தில் நேரடியாக வேலை செய்யும் நிறைய நபர்களிடத்தில் பரிச்சயமுண்டு. உடனே உஷா சொன்னதுப் போல பிரச்சனை என்றால் எனக்கு போன் அடிக்காதீர்கள் : ). நிழலாளிகளிடத்தில் மிக ஜாக்கிரத்தையாக பழக வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் நீங்கள் வாழ்நாள் முழுக்க அதன் பலனை அனுபவிக்க வேண்டியதிருக்கும். நெருக்கமான நிறைய நபர்கள் நிழலாளிகளாய் இருந்தும், அழைத்தால் வரமாட்டார்கள். காரணங்கள் இருக்கிறது. ஒரு முறை ஒரு நிழலாளியினை ஒரு assignment க்கு அனுப்பினீர்களேயானால், ஏதாவதொரு இன்பார்மர் மூலமாக போலிஸுக்கு தகவல் போய்விடும். அப்புறம் நீங்கள் இரண்டு தரப்பிலேயும் 'மாமூல்' அழவேண்டியதிருக்கும்.

நேரம் மிக முக்கியம். எல்லாருடைய கண்களிலும் மூன்று நாட்கள் மிச்சமிருக்கும். ஆனாலும் தூங்க முடியாது. ஒரு நிழலாளியினை ஸ்கெட்சு போட்டு, போட்டு தள்ள வேண்டுமானால், அதற்கான நேரம் விடியற்காலை மூன்று மணியிலிருந்து - நான்கரை மணிக்குள் தான். அப்போது தான் கொஞ்சம் கண் அசருவார்கள் அல்லது கண் மூடுவார்கள். நிறைய நிழலாளிகள் இதிலிருந்து தப்பிக்க உபயோகிக்கும் தந்திரம் 'லுங்கிப்போர்வை' தான். லுங்கிக் கட்டிக் கொண்டு, பன்னிரண்டு மணிக்கு மேல் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி கன்டெய்னர்கள் லோடு இறக்கும் கடைகளின் ஷட்டர்களுக்கு கீழே, அல்லது குப்பைத்தொட்டிக்கு சற்று தள்ளி, முழு லுங்கியினை தலைமுதல் கால் வரை போர்த்தி படுத்துக் கொண்டு தூங்கிவிடுவார்கள். பெரும்பாலும் பிச்சைக்காரர்கள், அங்கஹீனம் உள்ளவர்களோடு படுப்பதால் பெரியதாய் சந்தேகம் வராது. ஆனால் உள்ளுக்குள் இருக்கும் பயோ-அலாரம் சரியாக ஐந்து, ஆறு மணிக்கு எழுப்பிவிட்டுவிடும். லுங்கிப் போர்வையில் படுப்பவர்கள் பெரும்பாலும் சின்ன நிழலாளிகளாய் தான் இருப்பார்கள். தங்களை போட்டு தள்ள, ஸ்கெட்சு போடுகிறார்கள் என்று தெரிந்தாலே, பெரும் நிழலாளிகள் எஸ்ஸாகிவிடுவார்கள்.

வடசென்னை முழுக்கவே நிழலாளிகளின் சாம்ராஜ்யம் என்று நினைத்து விடாதீர்கள். சென்னையில் நடந்த தொடர்ச்சியான என்கவுண்டர்களுக்குப் பிறகு நிழலாளிகளின் போக்கு வெகு ஜன ரீதியில் குறைந்துவிட்டது. இல்லவே இல்லை என்று சொல்லமுடியாவிட்டாலும், 80கள், 90களின் முற்பகுதிப் போல நடுத்தெருவில் இப்போதெல்லாம் நீங்கள் பார்க்க முடியாது. ஆனாலும், உள்ளடங்கிய ஏரியாக்களிலும், நடுநிசி பரோட்டா கடைகளிலும், டாஸ்மாக்குகளிலும் முகங்கள் தென்படலாம். தமிழ்சினிமா காண்பிக்கும் நிழலாளிகளைப் பார்க்கவேண்டுமெனில் துறைமுகத்தில் கன்டெய்னர் சாமான்களை ஏற்றி இறக்கும் பகுதிகளில் கண்கூடாக பார்க்க முடியும். வடசென்னை என்பது ஒரு வாழ்வியல் அனுபவம். எவ்வளவுதான் எழுதினாலும், படித்தாலும், அங்கே வாழாமல் அது முற்றுப்பெறாது.

Dec 29, 2005

புதுப்பேட்டை: நிழலுகம் - 101நண்பர் ரவிசங்கர் "படிச்ச நாயே கிட்ட வராத" என்ற புதுப்பேட்டை பாடலுக்கு தன் கண்டனத்தையும் கருத்துக்களையும் தெரிவித்தார். இதில் ஒன்றும் பெரியதாக தவறு இருப்பதாக தெரியவில்லை. படித்தவர்கள் என்பதால் கொம்பாக முளைத்திருக்கிறது. வேண்டாம் கொம்பு என்றால் இங்கே சுஹாசினி போல வேறு வழக்குகளை சந்திக்கும் அவநிலைக்கு உள்ளாவேன் ;) நாம் கூடதான் ரோட்டில் போகும்போது குறுக்கே வரும் நபர்களை "நாயே" என்று சொல்வதுண்டு. அதுப் போல தான் இதுவும். வன்முறையின் கிளர்ச்சியில் இருப்பவர்களுக்கு படித்தவர்கள் நாய்களாக தான் தெரிவார்கள். இளரத்தம். ஆயத பலம். வன்முறையின் மீதுள்ள காதல். அது அப்படிதான் வெளிப்படும்.

புதுப்பேட்டை சென்னையின் நிழலுக இடங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம். செல்வராகவன் - யுவன் - நா.முத்துக் குமார் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள். இது நான் நினைப்பதுப் போல எடுத்திருந்தால், எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இது ஒரு cult படமாகும் வாய்ப்புகளதிகம். தமிழ் சினிமாவில் நிழலுகம் பற்றிய படங்களும், விவரணைகளும் குறைவு. செல்வராகவன் மீது எனக்கிருக்கும் நம்பிக்கையில் எனக்குத் தெரிந்த நிழலுகம் பற்றிய ஒரு சின்ன ப்ரைமர். படம் வந்து பார்க்கும் போது உபயோகமாக இருக்கும். இது தாண்டி, இந்த பதிவினை எழுத தூண்டியது கமல் அட்டகாசமாக பாடியிருக்கும் "நெருப்பு வாயினில் ஒரமாய் எரியும்" என்கிற பாடல், நிழலுகம் பற்றிய அற்புதமான ஆவணம்.

நான் வாழ்ந்த இடம் கொண்டித்தோப்பு, வடசென்னை. தாதாகள், ரவுடிகள், வன்முறையின் மீதுள்ள கிளர்ச்சியும், கவர்ச்சியும் கொண்ட மனிதர்கள் என City of God இல் வரும் ரியோடி ஜெனிரோ குப்பம் போல இல்லையென்றாலும், மக்கள் திராவிட அரசியல் பேசிக் கொண்டு, லுங்கியினை மடித்துக் கட்டிக் கொண்டு, நாற்றமும், பூக்காரிகளின் அழைப்பும் (இன்னா, பூ வாங்கினு போயேன் கண்ணூ ) கெட்ட வார்த்தைகளின் சகிதம் (நிறைய பேருக்கு '...த்தா' இல்லாமல் பேச வராது) வாழ பழகிய இடம். உண்மையான ரியோ டி ஜெனிரோ காண, பேசின் பிரிட்ஜ் தாண்டி இடப்புறம் திரும்பி வியாசர்பாடி பாலத்தில் இறங்கி கொஞ்சமாய் பாலத்திற்கு முன்பே வலப்புறம் திரும்பி போனீர்களேயானால் மகாகவி பாரதி நகரின் (என்ன அருமையான பெயர்!) ஹவுஸிங் போர்ட்டினையொட்டி குடிசைகளும், சாக்கடைகளும் நிரம்பி இருக்கும். எனக்கு தெரிந்த அச்சு அசல் ரியோ அதுதான். தெரு நடுவில் சர்வசாதாரணமாக உயரமான ஸ்டூல்களில் கேரம் போர்டு ஆடிக் கொண்டிருப்பார்கள். தூக்கி மடித்துக் கட்டிய லுங்கியுடன் அவர்களின் விரல்கள் விளையாடும். எனக்கு தெரிந்த நிழலாளிகள் ஒரே ஷாட்டில் மூன்று காய்கள் வரை போடுமளவிற்கு திறன் வாய்ந்தவர்கள். கேரம் போர்டு தரையென்றால், காற்றாடி மிக முக்கியமான பொழுது போக்கு. காற்றாடி அறுந்து விழுந்தால், எதிராளி அறுத்தால் அரிவாள் வெட்டு வரை போவது எல்லாம் சகஜம். காற்றாடிக்காக இரண்டு குப்பங்கள் அடித்துக் கொள்வதெல்லாம், கடலோர சென்னை குப்பங்களில் மிக சகஜம். அடியென்றால், ஆட்களை கொல்வது வரை போகும். கடவுள் பக்தி அதிகம். எல்லா இடங்களிலும், அம்மன் கோவில்களோ, மேரி மாதா சிறுகோயில்களோ பார்க்க முடியும். 'டாஸ்மாக்குகள்' வருவதற்கு முன்பு சென்னையில் ஒயின் ஷாப்புகள் தான். மூன்று மானிட்டர் உள்ளே போனவுடன், பியர் சாப்பிட வந்திருக்கும் எங்களுக்கு அறிவுரை சொல்லும் நடுத்தர வயது தாதாக்கள் (" இன்னாடா, இந்த வயசுல தண்ணியா, போய் படிங்கடா, நாதாரிகளா") , "ரா"வாக அடிக்கிறேன் பேர்வழி என்று குடித்து ஆண்மையை நிருபிக்கும் இளம் (budding) நிழலாளிகள் ஒரு புறம், "மச்சான், சீதாக்காவோட புருசன் ஒடிட்டானேமே, மசியுமா மாமே" என வாழ்வியல் கவலைகளோடு சாமான்களை டேபிளில் பரப்பி வைத்து குடிக்கும் நிழலாளிகள் என்று கலவையாக வாழ்க்கை மறுவாசிப்பு செய்யப்படுவதை கண்ணார பார்த்திருக்கிறேன்.

ஸ்டான்லி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் கல்லூரியில் படிக்கும் போது சேவை செய்து கொண்டிருந்தேன். இடக்கையினை வலக்கையில் தூக்கிக் கொண்டு ஒடிவந்த ஒருவன் "சிலிப்பாயிருச்சி. தவறி வூந்துட்டேன் சீட்டு கொடுரா" என்று கேட்டது இன்றும் நினைவிருக்கிறது. அது காற்றாடியால் வந்த சண்டையில் வாங்கிய வெட்டு. ஒரு கையினன வெட்டி விட்டார்கள். காத்தாடி, மாஞ்சா, பாட்லோடு, பிரியாணி, பீடி, கால்வாய், கேரம் போர்டு, டீ, கஞ்சா, டப்பா சோறு, தண்டல், சாராயம், வாந்தி, பீ நாற்றம், 'அத்து விடுதல்', தகராறு, கானா பாடல்கள், டாடா சுமோ என்று அவர்களின் உலகம் தனியுலகம். அவர்களின் அகராதியில் இருக்கும் சொற்கள் பொது வழக்கில் நீங்கள் கேள்விப்படாத சொற்களாக இருக்கும். ஐஸ் பிரியாணி என்றால் என்ன தெரியுமா? பழைய சோற்றில் கஞ்சி ஊற்றி வெங்காயமோ, ஊறுகாயோ வைத்து கொடுத்தால் அதுதான் ஐஸ் பிரியாணி. இதில் லேட்டஸ்டாக, செல்போன், ஏதேனும் ஒரு ஜாதி கட்சியின் / நட்சத்திர கும்பலின் செயலாளர் பதவி (தலித் / யாதவ / அம்பேத்கார் இளைஞர் பேரணி / பரமசிவன் அஜீத் ரசிகர் மன்றம் / சீயான் விக்ரம் ], கொஞ்சம் ரத்ததானம், முப்பத்து ஏழாவது பிறந்தநாளுகான சுவரொட்டி [கொள்கை வேந்தர், ஏழைகளின் ஏர்முனை, தொழிலாளிகளின் தோழன் ] போன்றவற்றினை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் போல் நண்பர்களுக்கு உதவும் ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்று சொன்னால் அது கிளிஷேவாகிவிடும். ஆனால் உண்மை. ஒரு குழந்தைக்கு ரத்தம் தேவை என்று சொன்னபோது ஒரு பெரும்தலைவரின் பிறந்தநாள் அதுவுமாய் குடிக்காமல் இருந்து, மறுநாள் வரை காத்திருந்து 7 பேர்கள் ரத்தம் கொடுத்து, பின் குடிக்க போனது தனிக்கதை. பார்க்க முரடாய் இருக்கும் நபர்கள், அருகில் நெருங்கி பார்த்தால் உள்ளே அமைதியை விரும்பும் நபர்கள். இன்றும் எம்.ஜி.ஆரினை நினைவு வைத்துக் கொண்டு, பிறந்த நாள், இறந்த நாள், ரிக்சா வழங்கிய நாள் என்று ஒவ்வொன்றையும் கொண்டாடுபவர்கள் அவர்கள் தான். இன்னமும் நிறைய இடங்களில் 'டெல்லி செட்' டேப் ரிகார்ட்டர்களில், டி.எம்.எஸினையும், சிதம்பரம் ஜெயராமனையும் அங்கே தான் கேட்க முடியும். எப்.எம்களில் அல்ல. வெற்றிலை பாக்கு கூட போடாமல் இருக்கும் நிழல் நபர்களை எனக்கு தெரியும். அவர்களை பேருந்திலோ, வேறு நிகழ்விலோ பார்த்தால் அவர்கள் நிழல் நபர்கள் என்று சொல்ல தோன்றாது.

உண்மையில் ஒரு ரவுடியாக இருப்பதற்கு நிறைய 'தில்'லும், நெஞ்சழுத்தமும் வேண்டும். நான் பார்த்த முக்கால் வாசி நிழலாளிகள் லேசாக தாங்கி தாங்கி அல்லது ஒரு பக்கம் சாய்ந்து தான் நடப்பார்கள். போலிஸ் ஸ்டேஷனில் 'லாடம்' கட்டியதின் விளைவது. லாடம் கட்டுதல் என்பது சாதாரண விஷயமில்லை. ஆனாலும்,நிழலாளிகள் அசாதாரணமான தாங்கு சக்தி உடையவர்கள். லாக்கப்பில் மூன்று காவலர்கள் மரண அடி அடிக்க, நான் திருடவில்லை, அடிக்கவில்லை என்று சத்தியம் செய்யாத குறையாக சொல்லிவிட்டு, வெளியே வந்து டிஞ்சர் போட்டுக் கொண்டு, சரக்கு அடித்துவிட்டு, பிரியாணி சாப்பிட்டுக் கொண்டே "த்தா, நான் தான் போட்டேன் மச்சான். ஒவரா துள்ளினான், சொருவிட்டென்" என சர்வசாதாரணமாக சொல்லும் மனிதர்களை கண்ணருகில் பார்த்திருக்கிறேன்.ஆயுதங்களுக்கு நிழல் மொழியில் "சாமான்", "பொருள்", "மேட்டர்" என்று பல பெயர்கள். 'சாமானோட கிளம்பு மாமே' என்றால், ஆயுதம் எடுத்து ஒரு சண்டைக்கு தயாராகு என்று பொருள். தென்தமிழகத்தில் தான் அரிவாளை சட்டைக்கு பின்புறம் வைப்பார்கள். அப்புறம் பொறுமையாய் பின்னாடியில் இருந்து தமிழ் சினிமா ஹீரோக்கள் நெஞ்சுக்கு நேரே பிடிப்பார்கள். இங்கே, வடசென்னையில், லுங்கியின் வலப்பக்கத்தில் வைப்பார்கள். லுங்கியின் இடுப்புக்கு மேலே கைப்பிடியும், கூரான பகுதி தொடைக்கு வெளியே இட/வலப்புறத்திலோ இருக்கும். சண்டை என்று வந்துவிட்டால், லுங்கியினை இறக்கி கட்டினால், கையில் அரிவாளோ, கத்தியோ வந்துவிடும். ஒரே போடு, ஆள் காலி. இரு குழுக்களுக்கு இடையே சில சமயங்களில் சமரச பேச்சுக்கள் நடக்கும். 'காம்பரமெய்ஸ்' அல்லது 'பேசி முடிச்சிக்கலாம்' என்று பொருள். இந்த காம்பரமெய்ஸ் பேசும் போதெல்லாம், முதலில் இரு அணியினரும் அணைத்துக் கொள்வார்கள். இது பரஸ்பர மரியாதை இல்லை. லுங்கியின் இடையில் ஆயுதம் இருக்கிறதா என்று கேட்காமல் அறிந்துக் கொள்வது. [என்ன பண்பாடுய்யா இது! ஒரு பயலும் நிழலுலக பண்பாட்டில் முனைவர் பட்டம் செய்ய மாட்டேன்கிறார்கள்!]தமிழ் சினிமாவில் வருவது போல அடியாட்கள் தெளிவாக பின்னாலெல்லாம் வந்து நிற்க மாட்டார்கள். ஒரு நிழல் நபர் ஒரு தெருவில் இருந்தால், தெரு முனையிலுள்ள டீக்கடையில் அவனுடைய ஆட்கள் மூன்று பேர்கள் இருப்பார்கள். தெருவிலிருக்கும் சைக்கிள் கடையில் ஒருவன் பஞ்சர் பார்த்துக் கொண்டிருப்பான். யாராவது இரண்டு பேர்கள் தெருவில் உலாவிக் கொண்டிருப்பார்கள். முட்டு சந்தாயிருந்தால், குட்டி சுவற்றில் இருவர் சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பார்கள். நிழலாளியிடம் ஆயுதம் இருக்காது, மற்றவர்களிடத்தில் இருக்கும். ஒரு தெருவில் நுழையும் போதே, பரிச்சயம் உள்ளவர்களால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

ஒரு தனி நபரையோ, கூட்டத்தையோ 'போட்டுத் தள்ளு'வதற்கு பெயர் 'ஸ்கெட்சு'. ஸ்கெட்சு போட்டாச்சு என்றால், வளைத்தாகிவிட்டது என்று பொருள். நிழல் உலகம் என்பது சும்மா கத்தி தூக்கவதற்கு மட்டுமல்ல. கூர்மையான அறிவு வேண்டும். ஒரு கூட்டத்திலோ, கடைத்தெருவிலோ எதிராளியை அடையாளம் காணும் திறன் வேண்டும். ஒரு assignment செய்ய வேண்டுமென்றால் தூங்காமல் அந்த நபரை பின்தொடர வேண்டும். நபரின் எல்லா உறவுகளையும், பழக்கவழக்கங்களையும் நுண்ணியமாக கண்காணிக்க வேண்டும். கத்தியோ, அரிவாளோ தூக்குபவரெல்லாம் நிழலாளியாக முடியாது. ஸ்கெட்சு போட்டாகிவிட்டால், அதனை நடைமுறைப்படுத்த பல்வேறு மக்களை இணைக்கவேண்டியிருக்கும். நம்மவரில் கமல் ஒரு ப்ளேடு வாங்கி, விரலிடுக்கில் வைத்திருப்பார். இங்கே அதேயே இன்னும் கொஞ்சம் உள்ளேப் போய், ப்ளேடினை துகளாக்கி, பான் பராக், பீடா சகிதம் வாயில் அடக்கிக் கொண்டிருப்பார்கள். சில இடங்களில் இதற்கு 'மாஷ்' என்று பெயர். மாஷா இருக்கேன் என்றால் பேசாதே என்று பொருள். அதாவது, உமிழ்நீரை தேக்கி, எதுவும் முடியாத பட்சத்தில், வாயிலிருக்கும் துகள்களையும் பான்பராக்கையும் ஒருசேர எதிராளியின் மீது துப்பினீர்களேயானால், முகமெங்கும் கிழித்து விடும். படு அபாயகரமான விஷயம், வாயில் துகள்கள் இருப்பது. ஆனாலும், அதையும் செய்யும் நிழலாளிகள் இருக்கிறார்கள். ஒரு ஸ்கெட்சு முடிந்தால் அந்த கூட்டத்தினையே ஆறு மாதம் பார்க்க முடியாது. எங்கேனும் போய்விடுவார்கள். ஆனாலும், அந்த வலைப்பின்னலும் தொடர்புகளும் தொடர்ச்சியாக இருக்கும். படிக்க சுவாரஸ்யமாகவும், திரிலிங்காகவும் இருக்கும் அவர்களின் வாழ்க்கை நடைமுறையில் படு மோசமாக இருக்கும்.

வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ முடியாது. ஒரே தெருவில் உங்களால் பாதிக்கப்பட்டவனும் நீங்களும் இருப்பீர்கள். அவன் உங்களை பழிவாங்க காத்துக் கொண்டிருப்பான். தூக்கம் வராது. தூங்க முடியாது. மிதமிஞ்சி குடித்தால் தான் நிதானமாக இருக்க முடியும். 'பாங்' இல்லாமலோ, 'கிராஸ்' இல்லாமலோ வாழ பழகுதல் கடினம். சாதாரணமாக இருந்தால், நினைவுகளும், கற்பனைகளுமே உங்களை பைத்தியம் பிடிக்க வைத்து விடும். எங்கேயும், பாத்ரூம் போனால் கூட தனியே போகமுடியாது. காதலிக்க முடியாது. எதிராளி பார்த்தால், உங்கள் காதலி நாசமடைவாள் அல்லது அவளை மிரட்டி, உங்களை அழைக்க வைத்துப் போட்டு தள்ளி விடுவார்கள். பொண்டாட்டியோடு படுக்கும் போது கூட கதவுக்கு வெளியே இரண்டு பேர்கள் உங்கள் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டோ, டிவி பார்த்துக் கொண்டோ இருப்பார்கள் என்று சொன்னால், அது தான் உண்மை. போலீஸுக்கு மேலிடத்திலிருந்து 'அழுத்தம்' வந்தால் எந்நேரமும் உங்களை என்கவுண்டரில் போட்டு தள்ளி விடுவார்கள். அரசியல்வாதிகள் உங்களோடு பிரியமாய் இருப்பதுப் போல நடிப்பார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் நேராக பார்க்க மாட்டார்கள். நள்ளிரவு சந்திப்புகள் மட்டுமே நடக்கும். கூட இருக்கும் ஆட்களை கட்சி மாறி, குரூப் மாறி காட்டிக் கொடுப்பார்கள். போட்டு தள்ளுவார்கள். ராயபுரத்தில் ஒரு பெரும் மதிமுக பிரமுகர் *(முன்னாளைய நிழலாளி) காலையில் வாக்கிங் போகும் போது நடுரோட்டில் கழுத்து திருகப்பட்டு கொல்லப்பட்டார். உயிர் எப்போது எடுக்கப்படும், போகும் என்று தெரியாது. யாரையும் நிரம்ப நெருக்கமாகவோ, நிரம்ப தொலைவிலோ வைக்கக்கூடாது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை செல்போனோ, தொடர்புகளேயோ மாற்ற வேண்டியதிருக்கும். மக்களோடு மக்களாய் உலவ முடியாது. அடிதடியோடு இருக்கும்வரை தான் மரியாதை. மீண்டும் மீண்டும் அங்கிருந்து வெளியே வராமல் தவிக்கும் நிறைய நபர்களுக்கான காரணங்கள் தான் இவை. அபூர்வமாக வெகு சில நபர்கள் அங்கிருந்து வெளியே வந்து பெரிய வணிக நிறுவனங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். [சென்னையில் ஒடும் கால் டாக்சிகள், துறைமுகத்தில் பொருட்களை ஏற்றி, இறக்கும் ஒப்பந்தம், எண்ணூர் நாராயணணுக்கு சொந்தம். போரூர் ராமசந்திரா மருத்துவமனை, ஹாட் சிப்ஸ் உணவகங்கள், நிறைய கல்யாண மண்டபங்கள் உடையாருக்கு சொந்தம் [உடையார் சென்னையில் 1980களின் பிற்பகுதியில் மிகப் பெரிய தாதா]. ஜி.என்.செட்டி சாலையில் இருக்கும் டிரேடர்ஸ் ஜந்து நட்சத்திர ஹோட்டல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தம் (எம்.ஜி.ஆர் காலத்தில் மிகப் பெரிய கட்டப்பஞ்சாயத்து நபர்)]ஆனால் இவை அபூர்வம். பெரும்பாலும், வாழ்க்கை எங்கே தொடங்கினீர்களோ அங்கேயோ முடிந்து போகும். வடசென்னையில் இருக்கும் போது பார்த்த ஒரு மரணம் மறக்க முடியாதது. வெறும் 20 பேர்கள் மட்டுமே, என் தந்தை உள்பட போன அந்த சவ ஊர்வலம், 1950-60களில் வடசென்னையினை தன் கையில் வைத்திருந்த ஒரு முன்னோடி தாதாவின் சவ ஊர்வலம். தன் பின்னாட்களில் ஒன்றுமில்லாமல், மோசமான நிலையில், மனநிலை பாதிப்படைந்து இறந்து போனார். வாழ்க்கை அவ்வளவுதான். கூட்டமாய் இருக்கும் போது உரத்து பேசினாலும், தனியே இருக்கும்போது ஒண்ணுக்குப் போக கூட பயந்து சாக வேண்டியதிருக்கும். நிழலாளியாய் துடிப்பாய் இருக்கும் போது இருக்கும் கவர்ச்சியும், கிளர்ச்சியும், கத்தி பிடிக்கும் போது இருக்கும் தைரியமும் வாழ்நாள் முழுக்க வாராது. நாற்பது வயதிற்கு மேல் நீங்கள் ஒரு குழுவுக்கு தலைவராக இருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் ஐம்பதாவது வயதினை பார்க்க மாட்டீர்கள். யாராவது உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களை கொன்று விடுவார்கள். அடையாளம் தெரியாத பிணம் கூவத்தில் கரை ஒதுங்கியது என்று தினசரியில் ஒரு பெட்டிச்செய்தியில் வாழ்க்கை முடிந்துவிடும். ஒரு முறை கத்தி தொட்டிர்களேயானால் முடிந்தது கதை. வேறு எதாவது மாநிலமோ, நாடோ போனாலேயொழிய தப்பிக்க முடியாது. அதுவும் உத்தரவாதமில்லை (உ.தா. சோட்டா ஷகில், அபு சலீம் )

ஹிந்தியில் சத்யா, கம்பெனி, சமீபத்தில் வந்த சர்கார், அபஹாரன் போன்ற நிழலுகத்தினை மையமாக கொண்ட படங்கள் அதிகம். தமிழில் மிகக் குறைவு. தொட்டி ஜெயா போல அடியாட்கள் படங்கள் வந்ததுண்டு. முழுமையான நிழல் உலகப்படங்கள் மிகக்குறைவு. 'ஆறு' படம் அந்த மாதிரி பின்புலம் தான் என்றாலும், த்ரிஷா போன்ற பெண்கள் ஒரு ரவுடியினை காதலிப்பது என்பது 'புதியபாதை' காலத்திய சரக்கு. புதுப்பேட்டை பட ஸ்டில்களைப் பார்த்தால், கொஞ்சம் விஷய ஞானத்துடனும், யதார்த்துடனும் வெளிபடும் என்று தெரிகிறது. ஆ.வி. பேட்டியில் செல்வராகவன் இதை சொல்லியிருக்கிறார். தென்சென்னை, அமெரிக்க, ஐரோப்பிய, வளைகுடா நாடுகளில் இருக்கும் மக்களுக்கான பிரைமர் இது. இதன்மூலம் படம் பார்க்கும்போது தேவையில்லாமல் சில விஷயங்கள் நடக்காது, சாத்தியமில்லை என்று ஒதுக்கி தள்ளாதீர்கள். இதில் நான் சொன்ன விஷயங்கள் வரவில்லையென்றாலும், ஒரு வரலாற்று ஆவணமாக இதை படித்து உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள் அல்லது எதிர்கால சந்ததிகளுக்கு வடசென்னை நிழலுலகம் எப்படி இருந்தது என்பதை விளக்கவாவது பாதுகாப்பாய் ஒரு குறுந்தகட்டில் எழுதி, புதைத்து விடுங்கள். நமக்கு பின் வரும் சந்ததிகள் படித்து தேர்ச்சி அடையட்டும் : )))))))))

முக்கிய பின்குறிப்பு: இதை எழுதுவதால் செல்வராகவன் எதுவும் எனக்கு பணம் தரவில்லை என்பதை சத்யம் திரையரங்கு பார்க்கிங் டிக்கேட்டின் மீது அடித்து சத்தியம் செய்கிறேன்.

* அந்த பிரமுகர் ஏழுமலை நாயக்கர். சென்னையின் அத்தனை தாதாகளுக்கும் அண்ணன். என்கவுண்டரில் போட்டுத் தள்ளப்பட்ட வீரமணி இவரின் சிஷ்யன்

Dec 28, 2005

IISc-யில் தீவிரவாத தாக்குதல்

இன்று மாலை ஐந்து மணிக்கு அடையாளம் தெரியாத சில நபர்கள் ஒரு அம்பாசிடர் காரில் வந்து IISc பெங்களூரில் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். இதில் ஒரு பேராசிரியர் மரணமடைந்து விட்டார். உள்ளே இருக்கும் ஜே.என். டாடா ஆடிட்டோரியத்தில் ஒரு கருத்தரங்கு நடந்து கொண்டிருந்தப் போது இது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. நான்கு/ஆறு பேராசிரியர்கள் தீவிரமான காயத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் முழுவதும் தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. IISc தீவிரவாதிகளின் பட்டியலில் இருந்து வந்திருக்கிறது. இந்தியாவிற்கு டிசம்பர் மாதம் சனி. நான்கு வருடங்களுக்கு முன் இதே நாளில் ஆப்கானுக்கு ஒரு விமானம் கடத்தப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன் நவம்பரில் பாராளுமன்றத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. போன வருடம் ட்சுனாமி. இந்த வருடம் இந்த வெறி தாக்குதல். இந்தியாவின் புகழ்வாய்ந்த கல்வி நிறுவனங்களும், பெங்களூரின் முன்னோடி மென்பொருள் நிறுவனங்களும் குறி வைக்கப்பட்டிருக்கின்றன. இது பெங்களூரின் முதலீட்டு நிலையினை சீர் குலைக்கும் நடவடிக்கையாக தெரிகிறது. மேல் விவரங்கள் தெரிந்தாலேயொழிய இதைப் பற்றி விரிவாக பேச முடியாது.


செய்தி - ஐபிஎன் | ரிடிப் | இந்தியன் எக்ஸ்பிரஸ்

Dec 27, 2005

வியாக்கியான இலக்கியம்

திண்ணையில் இப்போது அமெரிக்காவில் இருக்கும் இந்திரா பார்த்தசாரதி, வியாக்கியானங்கள், ஆழ்வார்கள், ராமானுஜர், தமிழ், சம்ஸ்கிருதம் என்று உள்ளே புகுந்து விளையாடி, வியாக்கியானக்காரர்கள் பற்றி எழுதியிருக்கிறார். நான் படித்த வரை சுஜாதா "ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம்" என்று ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆண்டாள் மொழியில் வரும் பாலியல் விழைவும், ஆழ்வார்கள் வலியுறுத்தும் நாயக-நாயகி-பகவத் காமமும் இந்த மண்ணிலிருந்து தான் வந்திருக்கின்றன என்று யோசித்தால் (தற்போதைய தமிழ் நிலவரத்தினைப் பொறுத்திப் பார்த்துக் கொள்ளவும்) ஆச்சர்யமாகவும், அவமானமாகவும் இருக்கிறது. பாலியல் சுதந்திரம், தத்துவ சர்ச்சைகள், மாற்று மொழியின் மீது வைத்திருந்த மரியாதை, தமிழினை ஆழமாகவும், அகலமாகவும் அறிந்து அதை நிறுவ முயற்சித்திருக்கும் பாங்கு என்று இந்திரா பார்த்தசாரதி காட்டும் வியாக்கியானகாரர்கள் கண்டிப்பாக உரையாசிரியர்களுக்கு இணையாக பொருத்திப் பார்க்கக் கூடியவர்கள். சில மாதங்களுக்கு முன்பு அருள்செல்வனோடு பேசிக் கொண்டிருந்தப் போது, தமிழில் நாத்திக வரலாறு பெரியாருக்கு முன்பு எப்படி இருந்திருக்கிறது, எத்தனை பேர்கள் நாத்திகத்தையும், கடவுள் மறுப்பையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்கள் என்று விரிவாக பேசினார். கேட்கவே ஆவலாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது. நவீன தமிழ் இலக்கியமும், பின் நவீனத்துவமும், மார்க்ச்சியமும் சில முக்கியமான தமிழ் வரலாற்றின் பக்கங்களை ஒதுக்கி விட்டு பார்க்கிறார்களோ என்கிற ஐயமும் எழுகிறது. தமிழ் இலக்கியத்தினைத் தொடர்ச்சியாக படித்து வரும் வலைப்பதிவர்கள் இதையொட்டி விரிவாக எழுதலாம்.

கடவுள் மறுப்பு, திராவிட பிண்ணணிகளின் பின் நாம் நம் நீண்ட நெடிய சமய வரலாற்றினையும் அதன் ஆழமான தமிழையும் விட்டு விட்டோமோ என்று தோன்றுகிறது. இங்கே சென்னையில் நீங்கள் பத்து மணி இரவுக்கு வீட்டிற்கு போனால், மக்கள் கோலம் போட்டு காலையில் மெதுவாக எழுந்திருப்பார்கள். கிழக்கத்திய தத்துவ வரலாறு, சாங்கியங்களின் வரலாற்றினை ஒட்டு மொத்தமாக மேற்கத்திய வரலாற்றுக்கு அடகு வைத்து விட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. திருப்பாவையின் பொருள் புரிந்து கேட்டப் போது, எத்தகைய புரட்சிகரமான கருத்துக்களைப் போகிற போக்கில் சொல்லி விட்டு போயிருக்கிறார்கள் என்று புரிகிறது. கொஞ்சம் பழந்தமிழ் இலக்கியங்களை அடுத்த வருடம் தேடி படிக்கலாம் என்கிற தீர்மாணத்தினை என் மேலிருக்கும் பொதுக்குழுவினைக் கூட்டி தீர்மாணிக்கிறேன்.

கல்லறை கிராமம்

குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்திலுள்ள லூனாவாடா கிராமத்தில் ஒரு பெரும் கல்லறை தரைக்கடியில் கண்டறியப்பட்டுள்ளது. எட்டு எலும்புக்கூடுகள் இதுவரை தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் கோத்ரா ரயிலெறிப்புக்கு பின் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் என்று அஞ்சப்படுகிறது. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் 21 பேருக்கு மேலும் இருப்பார்கள் என்று கூறுகிறார்கள். குஜராத் போலிஸார் ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

சிபிஐ இதை பில்கிஸ் பனோவின் வன்புணர்வு வழக்கின் பின்புலத்தில் பார்க்கிறது. 2002-இல் குஜராத் கலவரத்தில் பில்கிஸ் என்கிற ஆறுமாத கர்ப்பிணி வன்புணரப்பட்டார். அவரின் குடும்பத்தில் 17 பேர் வண்புணரப்பட்டதற்கும், கொல்லப்பட்டதற்கும் இருந்த ஒரே சாட்சி. பிஜேபி அரசு இதை ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக மட்டுமே பார்க்கிறது.

அங்கிருக்கும் தன்னார்வலர்கள் நீதிமன்றத்துக்கு இவ்விஷயத்தினை எடுத்துப் போவார்கள் என்று தெரிகிறது. தமிழில் ஒரு தினசரியும் இதைப் பற்றி எழுதவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

பார்க்க - Mass grave discoverd at Gujarat riot site

Dec 23, 2005

ட்சுனாமிகா - நம்பிக்கையின் ஒளிஆயிற்று இன்னும் இரண்டு நாட்கள் போனால், ஒரு வருடம் ஆகப் போகிறது. ட்சுனாமி என்கிற சொல்லும், அதன் கோரமும் இன்று எல்லார் மனதிலும் ஆழமாக பதிந்து ஒரு வருடமாகிறது. எல்லா தரப்பு மக்களையும், உலகினையும் உலுக்கிய விஷயம் இன்றைக்கு "காதல் ட்சுனாமி" என்கிற அளவில் திரைப்பாடல்களில் இடப் பெற தொடங்கிவிட்டது.

ட்சுனாமி நிவாரண நிதி, பொருளுதவி எல்லாம் முடிந்து எவ்வாறு கணவனை இழந்த சொந்தங்களை இழந்த பெண்கள் தங்கள் கால்களில் நிற்கிறார்கள் என்பது பற்றிய ஒரு செய்தி விளக்கத்தினைக் கேட்டப்போது பிரமிப்பாக இருந்தது. ட்சுனாமிகா என்பது ஒரு பொம்மை. ட்சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்களும், உபாசானா ஃபவுண்டேஷனும் (ஆரோவில்) , தேசிய (சென்னை) டிசைன் கவுன்சிலும் இணைந்து உருவாக்கிய ஒரு படைப்பு. ட்சுனாமிகா என்பது எளிதில் செய்யக்கூடிய பல்வேறு கூறுகளை அடக்கிய ஒரு அழகான பொம்மை. இதை தலைமுடி செருகக்கூடிய கிளிப், கீ செயின், ஸேப்டி பின் என பல்வேறு அவதாரங்களில் பார்க்க முடியும்.

ஒரு நாளைக்கு நாகப்பட்டினத்தில் மட்டும் பெண்கள் 15,000 ட்சுனாமிகாக்களை உருவாக்குகிறார்கள். சாண்டா கிளாஸினை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நமக்கு, ஒரு புதிய மாற்று வழி ட்சுனாமிகா ப்ரோஜக்ட்டினை ஆதரிப்பது. புதிய வருடத்துக்கான அன்பளிப்புகளோ, அல்லது வேறு ஏதாவது விதத்திலோ ட்சுனாமிகாவினை வாங்குங்கள். நிறைய வலைப்பதிவாளர்கள் நிறைய செய்திருக்கிறீர்கள். ஆனாலும், ட்சுனாமிகாவினை ஆதரிப்பதன் மூலம், தொடர்ச்சியான ஒரு நிதி ஆதாரத்தினையும், வாழ்வும் உத்வேகத்தையும் அம்மக்களுக்கு அளிக்க முடியும்.

ட்சுனாமிகா தளம்| அமெரிக்காவில் தொடர்பு கொள்ள | படங்கள்

Dec 22, 2005

காந்தி பார்க்கும், கலாச்சார 'காவலர்களும்'கலாச்சார காவலர்கள் இந்தியாவெங்கும் இருக்கிறார்கள் என்பது தெரிந்ததே. வேலைண்டன் நாளில் இது மும்பையில் சிவசேனாவாகவும், பாலுறவில் இது தமிழகத்தில் விடுதலைசிறுத்தைகள்-பா.ம.க+தமிழ் கலாச்சாரக் காவலர்களாகவும் இருப்பது அறிந்ததே. இந்த லிஸ்டில் இன்னொரு புதிய அறிமுகம் உத்தரப்பிரதேசத்தில் மீரட் நகர் காவல்துறை. 'ஆபரேஷன் மஞ்சு' என்கிற பெயரில் பூங்காவில் அமர்ந்திருந்த கணவன் - மனைவி, காதல் ஜோடிகளை காட்டுமிராண்டித்தனமாய் அடித்து, உதைத்து வெளியேற்றி இருக்கிறார்கள். என்.டி.டி.வியில் கண்ட காட்சிகளில் பெண்காவலர்கள், பெண்களின் முகத்தில் அறைகிறார்கள். தலைமுடியினை பிடித்து இழுத்து வெளியேற்றுகின்றார்கள். உலகம் ஒரினச் சேர்க்கை முறையில் திருமணங்களை ஒத்துக் கொள்ளும் காலக்கட்டத்தில், இன்னமும் கணவன் மனைவி ஜோடியாக ஒரு பூங்காவில் இருக்க இந்தியாவில் பயப்பட வேண்டியதாகிறது. காந்தி மகான் வாழ்க! ஹிம்சையின் மூலம் அஹிம்சை போதிக்கும் இந்திய காவலர்கள் வாழ்க. வாழ்க கலாச்சாரம். பாராளுமன்றத்தில் சுஸ்மா சுவராஜ், அம்பிகா சோனி போன்ற பெண் 'தலைகள்' இதை கடுமையாக கண்டித்திருக்கின்றார்கள். சமுக அமைப்பின் மாற்றங்களை உள்ளடக்காமல் இன்னமும் 1960களில் போடப்பட்ட சட்டங்களை வைத்துக் கொண்டு காவலர்கள் பார்ப்பார்களேயானால், இது ஒரு பெரிய விஷயத்தில் கொண்டு போய்விடும். ஆங்காங்கே எச்சரிக்கை மணிகள் இவ்வாறாக ஒலித்தாலும், யாராவது செத்தாலோ, அல்லது கூட்டமாய் தற்கொலை செய்துக் கொண்டாலேயொழிய இதனைப் பற்றிய விழிப்புணர்வும், அறிமுகமும் வெளியே வராது. அது வரை நாமும் நம் சமுகமும் சாண்டாகிளாஸ் இலவசமாக வேட்டி சட்டை ரேஷன் கார்டு காட்டாமல் தருவதற்கு பிரார்த்திக்கலாம்.

என்.டி.டி.வி செய்தி | ஐபிஎன் செய்தி & படங்கள் | ஐபிஎன் வீடியோ

Dec 21, 2005

கொத்து பரோட்டா

போன வாரம் முழுக்க மும்பை வாசம். இந்தியாவின் வணிக தலைநகரம். பேருதான் பெத்த பேரு. ஆனால், நிலை படுமோசம். எல்லா சாலைகளையும் தோண்டி வைத்திருக்கிறார்கள். பீஹார் தொழிலாளிகள், அவர்களின் மொழியில் ஏலேலோ ஐலேசா, தூக்கிப் பிடி ஐலேசா என்று பாடி ரிலையன்ஸ் கேபிள்களை தூக்கிக் கொண்டு போகிறார்கள். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போகும் போது வாழ்நாளில் சில நாட்கள் கண்டிப்பாக குறையும் வாய்ப்புகளதிகம். வானுயர்ந்து நிற்கும் வணிக கட்டிடங்களின் சிக்னல்களில் சின்ன குழந்தைகள் பிச்சை எடுக்கிறார்கள். சென்செக்ஸ் 9300 தாண்டினாலும், ட்ராபிக் குறைவது போல தெரியவில்லை. எல்லா நேரத்திலும் ஹாரன் சத்தம். இரவு 12.15 மணிக்கு அந்தேரி-குர்லா சாலையில் சிக்னல் வேலை செய்கிறது, எல்லோரும் வண்டியினை நிறுத்தி அடுத்த சிக்னலுக்காக காத்திருக்கிறார்கள். விமான நிலையம் செல்லும் சாலை மிக மோசம். கழிவு கால்வாய்கள் சர்வசாதாரணமாக தென்படுகின்றன. இட்லிக்கு தரும் சாம்பார் உடுப்பி ஸ்டைலில் கொஞ்சமாய் தித்திக்கிறது. எல்லா இடங்களிலும் "மாலோற்சவம்" (Shopping Malls). பேம் ஆட் லேப்ஸில் இரவு டிக்கெட் 'அபஹாரன்' 250 ரூபாய். போங்கடா என்று வெளியே வந்து விட்டேன். மால்கள் மிக பிரமாண்டமாக இருக்கின்றன. நான் பார்த்த இனார்பிட் மாலின் கார்கள் நிறுத்துமிடத்தில் ஸ்பென்சர்ஸின் இரண்டு கட்டிடங்களை நிறுவி விடலாம். எல்லா ஒட்டுநர்களும் மராட்டி பேசுகிறார்கள். டிராபிக் போலிஸ்காரர்கள் என்கிற வகையறா இருக்கிறார்களா? நான் பார்க்கவில்லை. நகரெங்கும் ரிலையன்ஸின் விளம்பரங்கள். மும்பை மாநகராட்சி 'இன்பர்மேஷன் கியாஸ்க்' என்ற ஒன்றை பெரும் சாலைகளில் வைத்திருக்கிறார்கள். நான்கு பக்கமும் மூடியிருக்கும் கியாஸிக்கில் இணைய இணைப்பு, மும்பை சாலைகள் பற்றிய தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால், கியாஸ்க்கின் உள்ளே எப்படிப் போவது என்று யாராவது எழுதினால் நன்றாக இருக்கும். இந்தியாவில் நகர புணரமைப்புக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் செலவு செய்யப் போகிறார்கள் என்று அரசு அறிவிப்பு ஒன்று சொல்கிறது. ஆனால், 30% இந்தியர்கள் இன்னும் பத்து வருடங்களில் நகரங்களில் இருப்பார்கள் என்கிற புள்ளிவிவரத்தினை வைத்துக் கொண்டுப் பார்த்தால், நிறையவே மந்தமாக இருக்கிறோமா என்கிற சந்தேகம் எழுகிறது. இது போக, எல்லா சேனல்களிலும் பாப் பாடல்கள். எல்லா ஹிந்திப் பாடல்களிலும் குறைந்தது 30 பேர் ஆடுகிறார்கள். நாயகியின் உடைகளில் இந்தியாவின் 25% வறுமைக் கோட்டு மக்களின் உடை நிலவரம் தெரிகிறது. கூட்டம் கூட்டமாக ஆடுகிறார்கள். மும்பையில் டான்ஸ் பார்கள் கிடையாதாமே ? ஆனால் எல்லா படங்களிலும், நாயகனை வசிகரிக்க, சந்தோஷப்படுத்த என்று ஏதேனும் ஒரு காரணத்தினைச் சொல்லிக் கொண்டு ஆடிக் கொண்டே இருக்கிறார்கள். என்னத்த சொல்ல. சென்னையினை நினைத்தால் வயிறெரிகிறது. இன்னமும் குப்பையான அதே சானல்கள். சானல் உலகம் மாறி விட்டது. ம்ஹூம் எப்ப டிடிஎச் வந்து.........

ஒரினச்சேர்க்கையாளர்களின் 52 வருட போராட்டம் இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் போன வருடம் நவம்பர் மாதம் இயற்றப்பட்ட Civil Partnership Act இப்போது தான் அமுலுக்கு வந்திருக்கிறது. ஒரின திருமணங்கள் இதன் மூலம் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளன. 52 வருட போராட்டத்தினை பிபிசி தளத்தில் டைம்லைன் வழியாக சொல்லியிருக்கிறார்கள். எல்டன் ஜான் இனிமேல் தனியாளாய் இருக்க வேண்டியதில்லை. இந்திய நிலை எப்படி என்பது கீழே எழுதியிருக்கிறேன்.
படிக்க - பிபிசி செய்தி

ராஜ்தீப் சர்தேஸாய் நினைவிருக்கிறதா ? என்.டி.டி.வியின் தீப்பொறி பறக்கும் நிருபர், பேட்டியாளர். என்.டி.டி.வியினை விட்டு வெளியேறி சொந்தமாக ஒரு சேனலினை ஆரம்பிக்கிறார் என்று சொல்லியிருந்தேன். புலி வருது, புலி வருது கதையாக அப்படியும் இப்படியுமாக இழுத்து ஒரு வழியாக சி.என்.பி.சி டிவி 18, டைம் வார்னர் இணைந்து சி.என்.என் ஐபிஎன் (CNN Indian Broadcasting News) என்று நாமகரணம் சூட்டி வந்து விட்டது. அமெரிக்க ஜெயா டிவியாக தான் இன்றைக்கும் சி.என்.என் தெரிகிறது. போனவாரம் இராக் தேர்தலை அவர்கள் காண்பித்த முறையிலேயே, அமெரிக்க பாசம் பொங்கி வழிகிறது. அமெரிக்க-இந்திய முகமாய் இருந்தாலும், அதிகமாய் இந்தியா தெரியுமென்றும், அமெரிக்க வர்ணம் பூசிப் பார்க்க தேவையில்லை என்றும் ஏதோ ஒரு பேட்டியில் படிக்க நேரிட்டது. பார்க்கலாம். Question Everything என்று ராஜ்தீப் கர்ஜிக்கிறார். அவ்வபோது இந்தியாவின் ஒரே உண்மையான இன் ட்ராக்டிவ் தொலைக்காட்சி என்று அவர்களின் இணையதளத்தையும் citizen journalism என்று சொல்லக்கூடிய பார்வையாளர்களின் பங்கீட்டினையும் சொல்கிறார்கள். கொஞ்சம் சுவாரசியமாக தான் இருக்கிறது. என்.டி.டி.வியில் பார்த்த பல முகங்கள் இதிலேயும் பார்க்க முடிகிறது. group resignation போலும். என்.டி.டி.வி சாயல் லேசாக அடிக்கிறது. பழைய என்.டி.டி.வியின் X Factor , இங்கே Face the Nation என்று மாறியிருக்கிறது. நேற்று பிரிட்டன் ஒரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தினை ஒப்புக் கொண்டதை வழிமொழிந்து, இந்தியாவில் என்ன நிலை என்று ஒரு பாதிரியார், ஒரு எழுத்தாளர், வழக்கறிஞர் சகிதம் விவாதித்தார்கள். பாதிரியார்கள் எந்த காலக்கட்டத்திலும் மாறமாட்டார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது : ) எங்கள் கே.கே.நகர் கேபிள் புண்ணியவானின் ஆசீர்வாதத்தில் பார்க்க முடிகிறது. ஒரு மாதம் கழித்து தான் சொல்ல முடியும். சென்னை நிருபரான ரோஷினி(ஹினி!?) மோகன் நன்றாக இருக்கிறார் ;) மோகன் அப்பா பெயராக இருக்க இன்னும் ஒரு வாரம் கழித்து பிறந்த நாள் கொண்டாடும் கர்த்தர் ரட்சிப்பாராக. பார்க்க - சி.என்.என் - ஐ.பி.என் தளம்

சிலேட்டின் நான்காவது இதழினை இப்போதுதான் படித்தேன். லக்ஷ்மி மணிவண்ணனை ஆசிரியராக கொண்டு வெளிவந்துக் கொண்டிருக்கும் பெரிய சைஸ் இதழ். லக்ஷ்மி மணிவண்ணனோடு பெரியதான அறிமுகங்கள் இல்லை. பாலா பிள்ளையின் tamil.com அலுவலகம் சென்னையிலிருக்கும் போது அதில் பணியாற்றினார். அப்போது அறிமுகம். எள்ளல், நக்கல், கட்டமைப்புகளின் மீதான கூக்குரல் என்று ரகளையான மனிதர். அடுத்த பதிவில் அவரது தலையங்கத்தில் ஜெயமோகன், எஸ்.ரா, மனுஷ்யபுத்திரன் பற்றி எழுதியவைகளை பதிகிறேன். முழுமையாக ஒப்புமை இல்லாவிட்டாலும் நச்சென்று எழுதியிருப்பதாக எனக்குப் படுகிறது.
படிக்க: சிலேட்

Dec 19, 2005

மூன்றாம் சென்னை உலக திரைப்பட விழா -

சென்னையில் இந்தோ சினி அப்ரிசியேஷன் போரத்தின் மூன்றாம் சென்னை உலக திரைப்பட விழா சனிக்கிழமையன்று தொடங்கியுள்ளது. ஆனந்த் மற்றும் லிட்டில் ஆனந்த் திரையரங்குகளில் 17 முதல் 25 வரை நடைபெறும் விழாவில் நிறைய படங்களைப் பார்க்கலாம். பிரிட்டிஷ் கவுன்சில் இதன் சார்ப்பாக உலகப் புகழ்பெற்ற இயக்குநர் இஸ்மாயில் மெர்சென்ட்டின் 8 படங்களை திரையிடுகிறது. இதில் பாம்பே டாக்கீ, ஹூட் அண்ட் டஸ்ட், இன் கஸ்டடி, ஹோவர்ட்ஸ் எண்ட் போன்ற கிளாஸிக் படங்களும் அடங்கும். கொஞ்சம் வேலை அழுத்தங்கள் காரணத்தினால் நான் வர இயலாது என்பது உங்களுக்கு சந்தோஷமான செய்தி ;) சென்னையிலிருப்பவர்கள் தவற விடாதீர்கள்.

தகவல்களுக்கு: இந்தோ சினி அப்ரிசியேஷன் போரம் - 5516 3866 / 98401 51956

Dec 6, 2005

புதிய தமிழ் ஒருங்குறி முறை

தமிழக அரசின் இணையத் தளத்தில் புதிய தமிழ் யூனிகோடு குறிமுறைக்கான கருத்து வேண்டல் இருக்கிறது. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தான் இதை செய்திருக்கிறது. முக்கியமாக 16-பிட் குறிமுறை என்பதைப் பற்றி விஸ்தாரமாக சொல்லியிருக்கிறார்கள். பல நடைமுறை சிக்கல்களையும் (உதாரணத்திற்கு, அடோப் இன் டிசைன், போட்டோஷாபில் யூனிகோட் உட்கார முடியாதது, மற்றும் பெரும்பான்மையான டிடிபி காரர்கள் அவரவர்களுக்குத் தேவையான எழுத்துருக்களை பயன்படுத்துதல்) தமிழ் குறிமுறைகளில் நான் நிபுணனில்லை. பத்ரி, முகுந்த், காசி போன்றவர்கள் இதை பார்த்து முன்னெடுத்து செல்லலாம்.

Dec 5, 2005

நவரசா - அரவாணிகளின் உலகம்

'டெரரிஸ்ட்', 'மல்லி' போன்ற குறும்படங்களுக்கு பின் மீண்டும் சந்தோஷ் சிவன். இந்த முறை 'நவரசா'. மிகவும் கவித்துவமான தலைப்பு. அரவாணிகளின் வாழ்க்கையையும், கூவாகம் அரவாணிகள் திருவிழாவும் தான் மையக் கரு. ஒரு 13 வயது பெண்ணின் பார்வையில் அவளின் சித்தப்பா ஒரு அரவாணி என்கிற முடிச்சினை வைத்துக் கொண்டு நகர்கின்ற கதை. பல உலக திரைப்பட விழாக்களில் பாரட்டினைப் பெற்றிருக்கும் படம். 3rd gender என்று அழைக்கப்படும் இவர்களைப் பற்றி தமிழில் எத்தனை படங்கள் வந்திருக்கின்றன என்கிற தகவல் என்னிடத்தில் இல்லை. ஆனால் உலகளவில் transgender பற்றிய படங்கள் நிறைய வந்திருக்கிறது. நான் கூட மேதமே சாத்தா என்கிற ட்ரான்ஸ்ஜென்டர் கலைஞனைப் பற்றிய ஒரு படத்தின் பதிவினை எழுதியிருக்கிறேன்.

மல்லியில் பார்த்த அதே குட்டிப் பெண் சுவேதா தான் இதில் முக்கியமான கதாபாத்திரம். நகரத்தில் வசிக்கும் படு சுட்டியான பெண் சுவேதா. தன் வழுக்கை தலை அப்பா, லேடீஸ் கிளப் அம்மா, ஒரு "மார்க்கமான" சித்தப்பா", மீல்ஸ் & பூன்ஸ் படித்து கேள்வி கேட்கும் சிறுவன் இவர்களோடு சென்னையில் இருக்கிறாள். கொஞ்சம் வழக்கமான சங்கதிகள் முடிந்தபிறகு, பாட்டு பாடி, டான்ஸ் ஆடி, ரத்தம் வெளிப்பட்டு பூப்படைகிறாள். வழக்கமான மஞ்சள் நீராட்டு விழா சடங்குகளுக்கு பிறகு மூதாதையர்களின் நகைகளை அணிவிக்கிறார்கள். அந்த நகைகளை எடுத்துக் கொண்டு சித்தப்பா கெளதம் வீட்டை விட்டு வெளியேறுவதில் கதை ஆரம்பிக்கிறது. சித்தப்பாவினை பின் தொடரும் சுவேதாவிற்கு காத்திருக்கிறது பெரும் அதிர்ச்சி. அரவாணிகளின் வீட்டில் சேலை, நகைகளுடன் மீசை இல்லாத சித்தப்பாவினைப் பார்த்து அதிர்கிறாள். இதற்கிடையில் சுவேதாவின் பெற்றோர்கள் கும்பகோணத்திற்கு ஒரு கல்யாணத்திற்கு செல்கிறார்கள். இப்போது வீட்டில் ஆணாகவும், மனதில் பெண்ணாகவும் இருக்கும் சித்தப்பாவும், அது தெரிந்த குட்டிப் பெண்ணும். கேள்வி கேட்கும் சுவேதாவிடம், கெளதம்(மி) அரவானின் கதையை சொல்லத் தொடங்குகிறாள்.

மஹாபாரத போரில் வெற்றி பெற ஒரு உயரிய ஆண்மகனை பலி கொடுக்க வேண்டும். அந்த உயரிய ஆண்மகன் லிஸ்டில் வருபவர்கள், பகவான் கிருஷ்ணர், அர்ஜூனன் மற்றும் அர்ஜூனனுக்கும் (அல்லது கிருஷ்ணனுக்கும்) நாககன்னிக்கும் மகனாக பிறந்த அரவான். கிருஷ்ணரும் அர்ஜுனனும் போரினை நடத்த வேண்டுமென்பதால், பலியாக சம்மதிக்கிறார் அரவான். ஆனால், பிரம்மசாரியான அவர் இல்லற சுகத்தினை அனுபவித்து இறக்க ஆசைப்படுகிறார். கட்டியவுடனே விதவையாக எந்த பெண்ணும் சம்மதிக்க மாட்டார் என்பதால், கிருஷ்ணரே மோகினி உருவமாக அவதாரமெடுத்து அரவானை மணக்கிறார். முதல் இரவு முடிகிறது. அரவான் பலி கொடுக்கப்படுகிறார். மோகினி விதவையாகி, தன் வளையல்களை உடைத்து அழுகிறாள். அரவாணிகள் தங்களை மோகினியாக உருவகிக்கிறார்கள். கூவாக திருவிழாவில் முதல் நாள் அரவானை எண்ணிக் கொண்டு தாலி கட்டிக் கொள்கிறார்கள். மறுநாள், தாலி அறுத்து விதவையாகிறார்கள். மோகினியான கிருஷ்ணன் ஆணிலிருந்து பெண்ணாகி வாழ்வினை தொலைத்தவன்(ள்), அரவாணிகளின் இன்றைய வாழ்வியல் குறீயிடு இது.

இவையெல்லாம் அந்த குட்டிப் பெண்ணுக்கு புரியவில்லை. பெண்ணாய் எப்படி ஒரு ஆண் உணர முடியும் என்று எதிர்க்கேள்வி கேட்கிறாள். மறுநாள் காலை கெளதமி அவளை விட்டு விட்டு கூவாகத்திற்கு கிளம்புகிறாள். தன் சித்தப்பாவினை தேடி தன்னந்தனியாக சுவேதா கூவாகத்திற்கு பயணப்படுகிறாள். வழியில் பாபி டார்லிங் என்றொரு வடக்கத்திய அரவாணியின் துணை கிடைக்கிறது. கூவாகத்திற்கு முன் நடக்கும் விழுப்புரம் அரவாணிகள் அழகிப் போட்டியையும், கூவாகத் திருவிழாவையும் முழு முச்சாக காட்டி, கடைசியில் தன் சித்தப்பாவினை கண்டு பிடிக்கிறாள். இருவரும் சென்னை வருகிறார்கள். வீட்டில் குழப்பம் வெடிக்கிறது. படம் கெளதமி வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், சுவேதாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல தொலைபேசியில் அழைப்பதாகவும் முடிகிறது. ஒரு குடும்பத்தில் அரவாணிகள் இருந்தால், அந்த குடும்பம் எப்படி அதனை அணுகுகிறது என்பதையும், அரவாணிகள் எப்படி சமூகத்தால் பார்க்கப்படுகிறார்கள் என்பதையும் படு யதார்த்தமாய் ஆங்காங்கே கொஞ்சம் பிரச்சார நெடியுடன் சொல்லியிருக்கிறார்கள்.

முதலில் இந்த கதைக்களனை எடுத்து, இத்தனை நிஜ அரவாணிகளை வைத்து, நிஜ கூவாகத்தினை படம்பிடித்ததற்கு சந்தோஷ் சிவனைப் பாராட்டலாம். யாரும் தொடாத, தொட்டாலும், ஆழமாக சிந்திக்காத களமிது. ஆனால், நிறைய நவீன நாடகங்களை பார்த்திருப்பார் போல இருக்கிறது. ஒவ்வொரு முறையும் கெளதமி "நான் யார்? யார் நான்?" என்றெல்லாம் வெறித்த பார்வை பார்த்தபடி சுவரினைப் பார்த்து கேள்வி கேட்பது சப்-டைட்டில் படித்து படம் பார்க்கும் நிறைய பேருக்கு புரியவில்லை. ஆனால் படமுழுக்க நடைமுறை சிக்கல்கள் மிக லாவகமாக கையாளப்பட்டிருக்கின்றன. தன் சித்தப்பாவினைத் தேடி, விழுப்புரம் சாலையில் நடக்கும்போது, பின்னால் இரண்டு அரவாணிகள், அதில் ஒருத்தி அழுதுக் கொண்டே போவாள். பிண்ணனியில் இன்னொரு அரவாணியின் குரல் "இது என்னடி புதுசா! இதுக்குப் போய் இவ்வளவு அழறே" என்று கேட்கும். இந்த ஒரு வசனத்தில் அரவாணிகளின் சமூக நிலை வெளிப்படும். 90% அரவாணிகள் தமிழ்நாட்டில் பாலியல் தொழிலாளிகளாய் தான் பிழைப்பை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதில் சமூகத்தின் சீண்டல் வேறு. கொஞ்சம் நீளம் அதிகமாக இருந்தாலும், விழுப்புரம் அரவாணிகள் அழகிப் போட்டியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒரு அரவாணி சொல்லும் பதில் படு யதார்த்தம்.

நடைமுறை வாழ்க்கையில் ஒவ்வொரு அரவாணியும் சந்திக்கும் எல்லா சிக்கல்களையும் திணிக்காமல் போகிற போக்கில் சொல்லியிருப்பார். ஒரு காட்சியில் இரண்டு பேர்கள், ஒரு அரவாணியை "நீ தான் மிஸ்.கூவாகமாச்சே, இங்கே ஆடூறீ!" என்று மிரட்டுவதையும், தங்கள் வாழ்வியல் சங்கடங்களைத் தாண்டி, கூட்டமாய் இருக்கும்போது ஒவ்வொரு அரவாணியும் அவரவர்களை செல்லமாய் சீண்டுதலும் என்று லேசாக ஆங்காங்கே பிரச்சார தொனி இருந்தாலும், தெளிவாக சொல்லியிருக்கிறார். தமிழ்நாடு அரவாணிகள் சங்க தலைவி திருமதி. ஆஷா பாரதி, ஆஷா பாரதியாகவே படத்திலும் வந்திருப்பார். பீகாரில் ஒரு அரவாணி இறந்தால், அந்த பிணத்தினை செருப்பாலேயே அடித்து சொல்வார்களாம் "அடுத்த ஜென்மத்தில் இப்படி பிறப்பாயா! பிறப்பாயா!" என்று நன்றாக அடித்து எரிப்பார்களாம். ஆஷா பாரதி இதை சொல்லும் போது பகீரென்றது. எந்த மாதிரி சமூகத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை முகத்தில் அறைந்தால்போல் சொல்லும் காட்சியது.

பலவிதமான ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தாலும், சுவேதா என்கிற அந்த குட்டிப்பெண்ணின் பாத்திரத்தில் நிறைய காட்சியியல் ரீதியான பிழைகள். சென்னையில் படிக்கும், மீல்ஸ் & பூன்ஸிற்கு பதில் சொல்லும் பெண், எப்படி ஆங்கிலத்தில் பேசாமல் பாபி டார்லிங்கோடு தமிழில் மட்டும் பேசுவாள் ? மாட்ரிமோனியலில் விளம்பரம் தருவேன் என்று ஜோக்கடிக்கும் அப்பாவிற்கும், லேடிஸ் கிளப் செல்லும் அம்மாவிற்கும் எப்படி பெண் பாவாடை தாவணியில் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்தது ? இப்படி படமுழுக்க நிறைய இடங்களில் சுவேதாவின் பாத்திர அமைப்பு இடர வைக்கிறது. ஆனாலும், துறுதுறுவென இருக்கும் ஆரம்பக்காட்சிகளில் சுவேதா சபாஷ் பெறுகிறாள்.

இந்த படத்தில் நடித்தவர்கள் எல்லோருமே நிஜ அரவாணிகள். சுவேதாவின் சித்தப்பாவாக வருபவர் குஷ்பு என்கிற அரவாணி. படம் முடிந்துப் போடும் டைட்டில் கார்டில் படத்தில் நடித்த அரவாணிகள் இப்போது என்ன செய்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். குஷ்பு மும்பையில் ஒரு தன்னார்வ நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். பாபி டார்லிங் ஒரு டான்ஸ் பாரில் நடனமாடுகிறாள். ஆஷா பாரதி சென்னையில் அரவாணிகள் சங்க தலைவராக அவர்களின் உரிமைக்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

யாரும் கையிலெடுக்காத பிரச்சனையினை துணிந்து எடுத்து குறும்படத்திற்கும், கமர்ஷியல் சினிமாவிற்கும் இடையில் யோசித்து சொதப்பியிருந்தாலும், படம் மனதினை கனக்க வைக்கிறது. சென்னையிலிருப்பவர்களுக்கு - சத்யம் காம்பெக்ளசில் ஸ்டுடியோ-5-இல 7 மணி காட்சியாக நடைபெறுகிறது. தவறாமல் இந்த வார வெள்ளிக்கிழமைக்குள் பார்த்து விடுங்கள். அப்புறம் படத்தினை தூக்கிவிடுவார்கள். நேற்று என்னோடு இயக்குநர் சந்தான பாரதியும் படம் பார்த்தார். "அடுத்து எப்ப சார், குணா மாதிரி ஒரு கமல் படம் பண்ண போறிங்க" என்று கேட்கலாம் என்று நினைத்து அப்பாவாக நடித்துக் கொண்டிருக்கும் அவர் பிழைப்பில் மண் அள்ளிப் போடுவானேன் என்று கேட்காமல் விட்டேன் ;)

படம்: நவரசா
நடிகர்கள்: சுவேதா, குஷ்பு, ஆஷா பாரதி
இயக்குநர்: சந்தோஷ் சிவன்
தயாரிப்பு: சந்தோஷ் சிவன் பிலிம்ஸ் & ஹாண்ட்மேஃட் பிக்சர்ஸ்

சென்னை வெள்ள நிலவரம் - updates 4 / திங். 9.45AM

இன்னமும் இங்கே தண்ணீர் தேங்கியிருக்கிறது. குளத்திலிருந்து வரும் நீரினை அதிகாலையில் அடைத்திருக்கிறார்கள். ஆனால் தேங்கிய தண்ணீரில் கழிவுநீர் கலந்து நாற்றமடிக்க ஆரம்பித்துவிட்டது. நாங்கள் பரவாயில்லை. பெரும்பாலான முக்கிய சாலைகளில் தண்ணீர் இல்லை. நேற்று துரைசாமி பாலம் (தி.நகர்) வழியாக வந்தேன். துடைத்து விட்டாற்ப் போல பளிச்சென்று இருக்கிறது. ஆனாலும், அரசாங்கத்தின் அறிவிக்கை படி அடையாறில் அதீத நீர்வரத்து நாளை மாலை நிற்கலாம் என்று சொல்கிறார்கள், அதுவும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்யாமல் இருந்தால். அடையாறு ஒடும் நிறைய இடங்கள் பெரும்பான்மையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. கோட்டூர்புரத்தில் ராணுவ படகுகளின் மூலம் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். ஆங்காங்கே தாற்காலிக நிவாரண முகாம்கள் நிறுவப்பட்டு, உணவும் இருப்பிடமும் அளிக்கப்படுகிறது. சென்னையில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான இடங்கள்: கோட்டூர்புரம், சைதாப்பேட்டை தரைப்பாலத்தினை ஒட்டிய பகுதிகள், மடிப்பாக்கம், முகலிவாக்கம், கோவிலம்பாக்கம், தாம்பரம், சேலையூர், சின்மயா நகர், செனாய் நகர், வளசரவாக்கத்தின் ஒரு சில பகுதிகள், மேத்தா நகர், நெசப்பாக்கம் கான் நகர், வேளச்சேரி ராம் நகர், ராமாவரம். நேற்று மாலை ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய பிச்சாடூர் ஏரியின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு பொன்னேரி வழியே நீர் வரத்து அதிகமாகியிருப்பதாக தகவல். சரியான தகவல்கள் வந்தபின் பாதிப்பினை பதிகிறேன். நகரின் முக்கிய பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது. அரசாங்கமும், மாநகராட்சியும், காவலர்களும் இரவு பகல் பாராமல் பணியாற்றுகின்றார்கள். சன் டிவியினை நம்பாதீர்கள். நகரமே தண்ணீரிலும் கடுமையான குழப்பத்திலும் இருக்கும் போது ஒரு சில இடங்களில் நிவாரண பணிகள் தாமதமாகலாம். அரசாங்கத்தினை குற்றம் சொல்லி எந்த பயனும் இல்லை. அவர்களும் தண்ணீரை எங்கே கொண்டு கொட்டுவார்கள் ? செய்தித் தாள்களில் நகர கட்டமைப்புக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் அளவிற்கு மத்திய அரசு செலவு செய்யும் என்று படித்தேன். இந்த தண்ணீர் பிரச்சனைகள் அடங்கிய பிறகு இந்த வார இறுதியில் urban planning பற்றிய என்னுடைய கருத்துக்களை எழுதுகிறேன். ஒரு லட்சம் கோடி பத்தாது. மும்பையினை சீரமைக்கவே 50,000 கோடி ரூபாய்கள் தேவைப்படும் என்று இந்தியாவின் முன்னோடி கட்டிடக் கலை நிபுணர் ஹபீஸ் காண்ட்ராக்டர் என்.டி.டி.வியின் வாக் தி டாக் கில் சொன்னது நினைவுக்கு வருகிறது. இன்று இதுவரை மழையில்லை. ஆனாலும், வானிலை அறிக்கைகள் 24 மணி நேரத்தில் மழை இருக்கிறது என்று சொல்கின்றன.

Dec 4, 2005

சென்னை வெள்ள நிலவரம் - update 3

இன்னமும் என் அடுக்ககத்தின் முன் தண்ணீர் வடிந்த பாடில்லை இங்கே. மாநகராட்சி ஆட்கள் மூன்று நாட்கள் கெடு கொடுத்திருக்கிறார்கள், அதுவரை எனக்கு நீராலானது உலகு. அந்தமான் நிகோபார் பக்கத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் stagnant ஆக இருப்பதாக செய்தியில் படித்தேன். அதுவும் இந்த பக்கம் வந்தால், சென்னை ஆசியாவின் வெனிஸாக மாறக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இரண்டு நாட்களாய் மழை இல்லை. இன்று காலையில் தான் பெரும்பாலான ஏரிகளில் நிரம்பி வழியும் தண்ணீர் ஒரு நிலைக்கு வந்திருப்பதாக கேள்வி. காஞ்சிபுரத்தில் குறைந்தது 10க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வழிந்து / கரை உடைந்து காஞ்சி தீவினை உண்டாக்கி இருக்கின்றன என்பது செய்தி. சிதம்பரத்தில் நேற்றும், இன்றும் மழை பெய்திருக்கிறது. மற்ற ஊர்கள் பற்றி தகவல்கள் இல்லை. இன்றைய எல்லா நாளிதழ்களிலும், கமிஷ்னர் சைலேந்திரபாபு ப்டகில் ஒலிபெருக்கியுடன் கத்திக் கொண்டிருக்கிறார். மழை வரும் சாத்தியங்கள் இது வரை இல்லை. மற்றபடி பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் காய்ந்து கிடக்கின்றன. இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை.

தவமாய் தவமிருந்து - படப் பார்வை

'கண்ட நாள் முதல்' கிடைக்குமா என்று நண்பனின் பேச்சினைக் கேட்டு ஆல்பர்டில் இறங்கினால், 'தவமாய் தவமிருந்து'. ஆட்டோஃகிராபின் வெற்றிக்குப் பிறகு இரண்டு வருடங்களுக்குப் பிறகு மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் வந்திருக்கும் படம்.

முதலில் சேரனுக்கு ஒரு ஷொட்டு. தமிழில் முதல் உருப்படியான ஹை டெபனிஷனினில் எடுக்கப்பட்ட படம். இதற்கு முன் 'வானம் வசப்படும்' (P.C.ஸ்ரீராம்) எடுத்து திருப்தியில்லாமல் போன படம். ஹை டெபனிஷனில் எடுத்த படம் மிக திருப்தியாக இருக்கிறது. வெகு சில தொழில்நுட்ப குறைகள் தெரிகின்றன. ஆனாலும், சாதாரண ரசிகனுக்கு தெரியாத விஷயங்கள் அவை. நீலம் கொஞ்சம் bleed ஆகிறது, கொஞ்சம் blur ஆன விஷயங்கள் லேசாக pixelate ஆகின்றன. மற்றபடி, அருமையாக பிலிமில் தெரிகிறது. அகன்ற திரையில் வித்தியாசங்கள் கண்டு பிடிக்க முடியவில்லை.

மிகவும் எதிர்ப்பார்ப்புடன் வந்திருக்கும் படம். தந்தை பாசத்தினையும், ஒரு நடுத்தர குடும்பத்தில் குடும்ப தலைவன் படும் பாடுகளையும், கஷ்டங்களையும், சின்ன சின்ன சந்தோஷங்களையும், உணர்வு புறமாக சொல்லியிருக்கும் படம். கதை ராமலிங்கம் (சேரன்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தந்தையினைப் பார்க்க புறப்படுவதிலிருந்து ஆரம்பிக்கிறது. கார் முன்னே செல்ல, ராமலிங்கத்திற்கு நினைவுகள் பின்நோக்கி செல்கின்றன.

உணர்வுபூர்வமாக, சென்டிமெண்டினையும், பாசத்தினையும், உறவு சிக்கலையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் ஒரு சேர சொல்லியிருக்கும் படம். ஒரு சராசரி தமிழனால் தன்னை சர்வ சாதாரணமாக பொருத்திக் கொள்ளும்படியான கதைக்களம். ராமைய்யா (ராஜ்கிரண்), சாரதா (சரண்யா) தம்பதிகளுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். அவர்களை எப்படி வளர்ந்து, பெரியவர்களாகி, சேர்ந்து வாழ்ந்து, பிரிந்து, சிக்கல்களை சந்தித்து, பின் தந்தையின் இறப்புக்கு ஒன்றாக இணைகிறார்கள் என்பது தான் கதை. சேரனின் மிகப்பெரிய பலம் காட்சியமைப்புகள். இயக்குநர் சேரன் ஜெயிக்கிறார். ஆனால், நடிகர் சேரன் ஒவர் சென்டியாக இருக்கிறார். காதலை சொன்னால் அழுகிறார். நண்பர் உதவினால் அழுகிறார். காதலியோடு அழுகிறார். தந்தையினைப் பார்த்து அழுகிறார். அழுத மாதிரியே படம் முழுக்க பேசுகிறார் சேரன். உணர்வுப் பூர்வமாக நடிக்க வேண்டியதிற்கு படமுழுக்க அழவேண்டியதில்லை.

படத்தில் அத்தனை பேரையும் அசரடிப்பவர் ராஜ்கிரண். ஒரு நடுத்தர அச்சக முதலாளியாய் அச்சு அசலாய் கண்முன்னே நடமாடுகிறார். hats off ராஜ்கிரண். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அவரின் மேக்கப் கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறது. பிள்ளைகளை கொஞ்சுவதிலாகட்டும், தண்டல்காரரிடம் கெஞ்சுவதிலாகட்டும், மூத்த மகன் வீட்டில் பங்கு கேட்கும் போது பதறுவதாகட்டும், சேரன் குழந்தையினை தன் மனைவி தூக்குவாளா என்கிற எதிர்ப்பார்ப்பும், பதைபதைப்பும் கொண்ட பார்வையாகட்டும், மனிதர் வாழ்ந்திருக்கிறார். தமிழில் குணச்சித்திர நடிகர்கள் வெகு குறைவு. எஸ்.வி.ரங்கராவ், நாகையா அளவிற்கு இன்று யாருமில்லை. எஸ்.வி.ஆர் அளவிற்கு இல்லாமல் போனாலும், ராஜ்கிரணின் அடையாளம் மண்ணின் அடையாளம். நாக்கும், வாக்கும் செத்துப் போகாத, வெள்ளை மனசு கிராமத்து மண்ணின் முகம். இந்த படத்தின் மூலம் நிறைய படங்கள் தேடிவரும் வாய்ப்புகளதிகம்.

சாரதாவாக சரண்யா. பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு பதினைந்து ரூபாய்க்கு நடித்திருக்கிறார். தமிழில் அம்மா கதாபாத்திரங்களைப் பொருத்தமாக பண்ணுவதற்கு சில பேர்கள் தான் இருக்கிறார்கள். பணக்கார அம்மா அம்பிகா, வாஞ்சையுடன் கொஞ்ச கலைராணி, கொஞ்சம் இளைமையான நடிகர்களுக்கு ரேவதி,ராதிகா என்ற வரிசையில் அச்சு அசலான கிராமத்து அம்மாவினை கண் முன் நிறுத்துகிறார் சரண்யா. பற்களில் கொஞ்சம் காவியடித்திருக்கலாம். மண்ணிற மேக்கப்பில் வெண்ணிற பற்கள் கொஞ்சம் அன்னியமாய் இருக்கின்றன, அதுவும் வயதான காலத்தில். எண்ணெய் தேய்த்து விடும் பாசமான அம்மா. தன் மகன்கள் ராஜ்கிரணை எதிர்த்து பேசும் போது அவர்களை அடிக்கும் ஆவேசம், தனக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு குழந்தையுடன் வரும் சேரனை பார்க்காத வைராக்கியம், தன் பேத்திகளோடு கொஞ்சம் போது இருக்கும் பாசம் என பஞ்சம் வைக்காமல், சும்மா வந்து போகாமல் நிலைத்திருக்கிறார். அதுவும், வயதாக, வயதாக தளர்வான ரவிக்கைகள், ரவிக்கைக்கும் புடவைக்கும் சம்பந்தமில்லாத நிறங்கள் என இயக்குநர் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். ஒரு காட்சியில் மருத்துவமனையிலிருந்து நடந்து வருவார், அதில் காலை அகட்டி மெதுவாக ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து நடப்பார். ஒரு அசாதாரணமான நடிகையின் அடையாளமது. obeservation to the core.

ஆச்சர்யமுட்டும் இன்னொருவர் ஒரு புதுமுகம். சேரனின் அண்ணியாக வந்து கலக்கியிருக்கிறார். அசலான மதுரை பெண்ணின் முகம். மாமியாரின் பேச்சுக்கு எதிரே பேசாமல்,அதை சமயம் குமைந்துக் கொண்டே கணவரிடம் புகார் சொல்லி தனிக் குடித்தனத்திற்கு அடித்தளம் போடும் போதும், வருடங்கள் கழித்து ராஜ்கிரண் குடும்பத்தோடு அவர்களின் வீட்டுக்கு வரும்போது தண்ணீரைக் கொண்டு வந்து சட்டென்று வைத்து விட்டு சமையலறையில் புகுந்துக் கொள்ளும் போதும், எனக்கு தெரிந்த நிறைய பெண்கள் நினைவில் வந்து விட்டுப் போனார்கள்.

சேரனின் காதலி / மனைவியாக புதுமுகம் பத்மப்பிரியா. அடுத்த படத்தில் பேசலாம். கொஞ்சம் புஷ்டியாய் அந்த கால ப்ரியா ராமன் alias ப்ரியா ரஞ்சித் போல தெரிகிறார். கொஞ்சம் பெரிதான கண்களில் பேச முயன்றிருக்கிறார். better luck next time. கொஞ்சமாய் வந்தாலும், அச்சகத்தில் வேலை செய்யும் இளவரசு நெஞ்சில் நிற்கிறார்.

"நீ பொறக்கும்போது காசுக்கு நான் அலைஞ்சது ஞாபகமிருக்கிறது. நீயும் அப்படிதானே அலைஞ்சிருப்பே. அதனால தான் பார்த்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்" என சொல்லாமல் ஒடி வந்த மகனுக்கு குழந்தை பிறந்ததையொட்டி பார்க்கும் போது சொல்லும் வசனத்திலும், "என்னடா இது, அடுப்பு மேல உட்கார்ந்துட்டு போற மாதிரி இருக்கு" என்று சரண்யா, நகர வெஸ்டர்ன் டாய்லெட்டினை சொல்லும்போதும் வசனகர்த்தா சேரன் பாராட்டுக்குரியவராகிறார். கொடுக்கப்பட்ட வேலையினை கனக் கச்சிதமாக செய்திருக்கிறார்கள் பிற கதாபாத்திரங்கள். தண்டல்காராராக வருபவர், சேரனின் அச்சகத்தின் முதலாளி, சேரனின் சென்னை நண்பர், சேரனின் அண்ணனாக வருவபர், பத்மபரியாவின் பாட்டி, தந்தை என எல்லாரும் அருமையான தேர்வுகள். சாதாரணமாக இவ்விதமான micro details எல்லாம், கமல், மணிரத்னம், சங்கர் படங்களில் பார்க்க முடியும். சமீபத்தில் இதனை அமீரின் படத்திலும் (ராம்), இந்த படத்திலும் பார்க்கும்போது தமிழ் சினிமா இயக்குநர்கள் மாறி வருகிறார்கள் என்பதன் அடையாளம். இயக்குநர் சேரன் நிறையவே மாறியிருக்கிறார். பிரச்சாரங்களும், கருத்து சொல்லுதலும் மாறி, உணர்வுப்பூர்வமான ஒரு இயக்குநனனாக தன்னை மாற்றிக் கொண்டு இருக்கிறார். கதை 1970களில் ஆரம்பிக்கிறது. அதற்கேற்றாற்ப்போல் ஒவ்வொரு காலக்கட்டங்களில் அதற்கு ஏற்றாற்ப் போல சினிமா போஸ்டர்கள், ரேடியோக்களில் ஒலிக்கும் பாடல்கள், உடை தேர்வுகள் என்று ஒவ்வொரு சின்ன details எல்லாம் மிக கவனத்துடன் சிரத்தையுடன் செய்திருக்கிறார்.

உணர்வுகள் பலம். கதை ஒரு தகப்பனின் வாழ்க்கைப் பயணம். ஆனாலும், நிறைய படங்களில்,கதைகளில் கேட்ட கிளிஷேகள் படத்திலுண்டு. தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு சில குறைபாடுகளுடன், நிறைவாக பார்க்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.

இந்த படத்திற்கு ஆரம்பிக்கும் போது "டூரிங் டாக்கீஸ்" என்று பெயரிருந்தது. அப்போது நான் கேட்ட செய்தி Cinema Paradiso வின் தமிழாக்கம் போல இருக்குமென்று இருந்தது. நல்லவேளை சேரன் தப்பிவிட்டார் ;)

படம்: தவமாய் தவமிருந்து
நடிகர்கள்: ராஜ்கிரண், சரண்யா, சேரன், பத்ம பரியா, இளவரசு
இசை: சபேஷ்-முரளி
கதை, திரைக்கதை, இயக்கம்,வசனங்கள்: சேரன்

Dec 3, 2005

சென்னை வெள்ளம் - updates 2

இப்போது வெளியே மழை பெய்துக் கொண்டிருக்கிறது. என் அடுக்ககத்தின் புகைப்படம் தான் இன்றைக்கு தமிழ்முரசிற்கு தீனி [பார்க்க] பிரகாஷ் போன் செய்து சொன்ன போது "நவரசா" பார்த்துக் கொண்டிருந்தேன். பயமுறுத்தியதால் பாதியிலேயே எழுந்து வந்து, பின் சில நண்பர்களுக்கு தொலைபேசினேன். சாருவோடு பேசியபோது கட்டில் வரை தண்ணீர் இருப்பதாக சொன்னார். இன்னமும் என் தெருவில் முழங்கால் அளவிற்கு தெரு முழுக்க தண்ணீர் இருக்கிறது. எதிரேயிருந்த பெரும்குளத்தின் உடைப்பு இன்னமும் சரி செய்யப்படவில்லை. வளசரவாக்கத்திலும் இதே நிலை.

தமிழ்முரசில் சொல்லியதுப் போல என்னுடைய அடுக்ககத்தின் வீட்டிற்குள் தண்ணீர் வரவில்லை. அது ஒட்டு மொத்த புரூடா. ஆனால், என்னுடைய தெருவிற்கு நேர் எதிர் தெருவான ஏ.வி.எம் அவென்யுவில் வீட்டின் சமையறை வரை தண்ணீர் வந்திருக்கிறது. மக்கள் கட்டிலின் மீது அமர்ந்தபடி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சின்மயாநகரும் நூறடி சாலையும் தான் worst affected zone. பல இடங்களில் water world கதைதான். என்னுடைய புளூ டூத் சொதப்பியதால் எடுத்த படங்களை இணைத்துப் போட முடியவில்லை. இப்போது மிதமாக மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. இன்னமும் எவ்வளவு நேரம் மழை பெய்யும் என்று சொல்ல முடியாது. ஆனால் இன்னும் இரண்டு நாட்கள் அடித்தால், சென்னை வெனிஸ் ஆகிவிடும். ஏற்கனவே ஏரிகள் நிரம்பி வழிந்து அல்லது திறந்து விடுவதால் ஏரியினை சுற்றியுள்ள பகுதிகள், தாழ்வான பகுதிகள் என்று அனைத்தும் நீரில் முழ்கியுள்ளன. வழக்கம் போல சன் தொலைக் காட்சியும், ஜெயா தொலைக் காட்சியும் உளவியல் வன்முறையையும், அவதூறினையும் பரப்பத் தொடங்கிவிட்டார்கள்.

மின்சாரம் தொடர்ந்து இருந்தால் தொடர்ச்சியாக update செய்கிறேன்.

பிரகாஷின் பதிவு

நீராலானது உலகு

இரவிலிருந்து இனி குறைந்தது ஒரு நாளைக்காவது வீட்டுச் சிறை. என்னுடைய அடுக்கக்கத்தின் எதிரே ஒரு ஏரி இருக்கிறது. கே.கே.நகரில் ஏரி பெரிய குளம் இருக்கிறதா என்று யாஹூ ஸ்மைலி அளவிற்கு ஆச்சர்யப்படாதீர்கள். இருக்கிறது. பால்கனியிலிருந்துப் பார்த்தால், ஏரியும் அங்கு வரும் பறவைகளும்,குளிர் காற்றும் கிடைக்கும் என்று தெரிந்தே வாங்கிய வீடு. கொஞ்ச நாட்களாகவே மெதப்பில் சுற்றிக் கொண்டிருந்தோம். சென்னை முழுக்க மழை பெய்தாலும் வெள்ளமே வந்தாலும் கே.கே.நகர் வேம்புலி அம்மன் தெருவில் தண்ணீர் தேங்காது என்கிற கர்வமது. மொத்தத்தில் வருண பகவான் மொத்தமாய் சேர்த்து வைத்தார் ஆப்பு.

நேற்றிரவு ஏரியில் இருக்கும் தண்ணீரின் அளவு அதிகமாகி, கரை உடைந்து, நேராக என்னுடைய அடுக்ககத்தில் இரும்பு கேட்டுகளுக்கு கீழே வர ஆரம்பித்தது. நான் எழுந்து பார்க்கும்போது இந்திய நேரம் 8.00 மணி காலை. முக்கால் வாசி தெருவில் கீழ்ப்பகுதியில் முழங்கால் அளவிற்கு தண்ணீர். வானிலை அறிக்கை சொல்வதுப் போல ஒரே சீராக என்னுடைய அடுக்க்கத்திற்கு ஏரியிலிருந்து தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. மின்சாரம் இரவு முழுவதும் இல்லை. இன்னும் எவ்வளவு நேரமிருக்கும் என்று தெரியவில்லை.

முழங்காலுக்கு சற்று கீழ் வரைக்கும் தண்ணீர் இருக்கிறது. இரண்டாம் மாடியில் இருப்பதால் பிரச்சனைகளில்லை. ஆனால் தெருவில் தாழ்வாக கார் வருவதற்காக தரையோடு தரையாக கட்டிய வீடுகளில் நிலை மோசம். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் மின்சார வாரியம் ஒரு பெருருருருரும் பள்ளத்தினைத் தோண்டி மூடியிருந்தார்கள்.

மண் நெகிழ்ந்து கண்டிப்பாக விபத்துக்கள் நேரிடும். ஆங்காங்கே மரக்கட்டைகளையும், டயர்களையும் போட்டு தற்காலிக சிக்னல்களாக மாற்றி வைத்திருக்கிறார்கள். தீயணைப்பு படையோ, வெள்ள நிவாரண குழுவோ வரும் வரை தண்ணீரைப் பார்த்துக் கொண்டு நிற்பேன். வேறேதும் செய்ய முடியாது. மின்சாரம் இருந்தால் மாலை போல நிலவரத்தினை பதிகிறேன். இன்றைக்கும் மழை இருக்கிறது என்று நாளிதழ்கள் சொல்லுகின்றன. இருந்தால் நிலை கொஞ்சம் கஷ்டம் தான். நீரால் சூழ்ந்தது உலகு.

Dec 2, 2005

உலகின் தலைசிறந்த தேநீர்

சென்னையில் மழை பெய்துக் கொண்டிருக்கிறது. பெய்துக் கொண்டிருக்கிறது என்பது மிக சாதாரணமான வாக்கியம். ஒரே சீராக, தான் பெய்யாமல் இருந்த காலக்கட்டங்களுக்கும் சேர்த்து வைத்து வட்டியும் முதலுமாய் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. காலையில் மழை அதிகமாக இருந்ததால் என்னுடைய வண்டியை ஒரம் ஒதுக்கிவிட்டு மக்களோடு மழைக்கு ஒதுங்கினேன். மழை தண்ணீர் வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது. வாகனங்கள் வெள்ளத்தை கிழித்துக் கொண்டு முன்னேறிச் செல்கின்றன.

கட்டிட வேலைகள் பெரும்பாலானவை இங்கே அப்படியே நிற்கின்றன. தினக் கூலிகள் பலருக்கும் வேலையில்லை. எல்லோரும் பிளாஸ்டிக் பைகளை தலைக் கவசமாக்கி ஒரமாய் நின்றுக் கொண்டிருந்தார்கள். இங்கே மழை பெய்தால் நிறைய பேருடைய வேலை நின்றுவிடும். அவர்களின் வாழ்க்கை என்பது மிகப் பெரிய கேள்விக் குறி. என்னோடு மூன்று துப்புரவுத் தொழிலாளர்கள் நின்று கொண்டிருந்தார்கள். இரண்டு ஆண்கள். ஒரு பெண். அந்த பெண் ஒரு தொழிலாளியின் மனைவி. எல்லோரும் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள். வேலை செய்தால் தான் சம்பளம். வேலை செய்யாவிட்டால், வேலை இல்லாவிட்டால் அன்றைக்கான கூலி கிடையாது.

அவர்களில் ஒருவர் தன் முதலாளியோ, சூப்பர்வைசருக்கோ போன் செய்தார். அவரால் தானியங்கி ஒரு ரூபாய் போட்டு இயக்கப்படும் தொலைப்பேசியில் பேசத் தெரியவில்லை. அருகே சென்று அவருக்குத் தேவையான எண்ணினைப் போட்டு பேசக் கொடுத்தேன். பேசியவுடன் முகத்தில் இருள் சூழ்ந்தது. திங்கள் வரை அவர்கள் மூவருக்கும் வேலை கிடையாது. அந்த பெண்மணியின் கண்கள் கலங்கியதை அருகிலிருந்துப் பார்க்க முடிந்தது. அவர்களின் பேச்சிலிருந்து அவர்களிடத்தில் இருக்கும் பணம் நாளை வரை தான் தாங்குமென்று தெரிந்தது. காலை உணவுக் கூட இன்னமும் அவர்கள் உட்கொள்ளவில்லை. அவர்களில் கொஞ்சம் இளையவராக தெரிந்தவரோடு பேச்சுக் கொடுத்தேன். என் கேமரா செல்லில் கொஞ்சம் புகைப்படங்கள் எடுத்து அவர்களுக்கு காட்டி கொஞ்சமாய் மகிழ்வித்தேன். அருகிலிருக்கும் டீக்கடைக்கு சென்றோம். என்னுடைய மடிக்கணினி நனையக்கூடாது என்பதற்காக ஒருவர் தன்னுடைய பாலீதின் கவரினை அதன்மீது வைத்து பிடித்துக் கொண்டார். நெகிழ்வில் வார்த்தைகள் வரவில்லை.

சூடாக, புகையோடும் டீயினோடு அவர்களின் முகங்களைப் பார்த்தேன். அந்த கண்களில் தெரிந்த நன்றியுணர்வும், நெகிழ்வும் உலகின் தலைசிறந்த இயக்குநர்களின் படங்களில் கூடப் பார்த்ததில்லை. நால்வரும் டீ குடித்தோம். என் வாழ்நாளில் நான் குடித்த மிக சிறந்த தேநீர் அதுவாக தான் இருக்கும்.பெரும்பாலான நாட்களில் அவர்களின் காலை உணவு டீ தான் என்று தெரிந்தது. ஆண்கள் இருவரும் பீடி பிடிக்க ஆரம்பித்தார்கள். எனக்கு புகை குமட்டியது என்று தெரிந்தவுடன் அந்த பெண் அவர்களை அதட்டினாள். அவர்கள் பீடியினை தரையில் தேய்த்து அணைத்து காதுகளில் செருகிக் கொண்டார்கள். நான் என்ன செய்கிறேன், கல்யாணமாகிவிட்டதா, வீடு எங்கிருக்கிறது போன்ற லோகதாய விஷயங்களைக் கேட்டுக் கொண்டார்கள். ஆனாலும், அவர்களின் வாழ்வினைப் பற்றிய கேள்விகள் தான் அதிகமாகக் கேட்டேன்.

அவர்கள் தாங்கள் தங்களின் பொருளாதார சூழல் பற்றி பெரியதாய் புலம்பவில்லை. எல்லாம் விதி விட்ட வழி என்றும், கடவுள் கண் திறப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்கள். ஏழ்மை என்பது சாபக்கேடு என்றும் அடுத்த முறை கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் நல்லது நடக்குமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்கள். குழந்தைகள் பிறந்தால் படிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணமிருக்கிறது. சொந்த ஊரின் மலரும் நினைவுகள் தான் பெரும்பாலானவை. இதனூடே என்னுடைய அலுவலகத்திலிருந்து தொடர்ச்சியாக தொலைபேசிகள். என்னுடைய வண்டியினை அங்கேயே விட்டுவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து அலுவலகம் சென்றேன்.

போகும் வழியில் ஆட்டோ ஒட்டுநர் சொன்னது "த்தா, சனியன் புடிச்ச மழை சார். ஒன் டே மேட்சு தான் காலினா, டெஸ்ட் மேட்சும் நடக்காதுன்னு நினைக்கிறேன் சார்." நின்றுக் கொண்டிருக்கும் போது அருகிலிருக்கும் ஒருவர் செல்லில் தன் நண்பரை அழைத்து எம்.ஜி.எம் வோட்காவும், வி.எஸ்.ஓ.பியும் அறையில் வாங்கி வைக்கச் சொன்னார். சிக்னலில் இருக்கும் கார்காரர்கள், சைக்கிள்காரர்களின் மீது தண்ணீரை அள்ளி தெளித்து தடுமாற வைக்கிறார்கள், ஹாரன் அடிக்கிறார்கள். சாலையில் வெள்ளமாய் ஒடுகிறது தண்ணீர். வாகனங்கள் வெள்ளத்தை கிழித்துக் கொண்டு முன்னேறிச் செல்கின்றன. கிழிந்துப் போய் கிடக்கிறது நிறைய பேரின் மனங்கள்.

முதல் பார்வை - நாணயம் விகடன்

தமிழில் ரொம்ப நாட்களாய் வளர் தொழில், தொழில் உலகம் போன்ற வணிக பத்திரிக்கைகள் வந்துக் கொண்டிருக்கின்றன. அதில் சொல்லப்படும் கருத்துகள், பத்திகள் பற்றி பெரிதாய் அபிப்ராயங்கள் கிடையாது. கவுண்டமணி ஒரு படத்தில் சொல்லுவார் "குண்டூசி விக்கறவன் எல்லாம் தொழிலதிபர்" என்று. அந்த கதை தான் இப்பத்திரிக்கைகளில். விளம்பரம் கொடுத்தால் நீங்கள் தான் சென்னையிலேயே மிகப் பெரிய தொழிலதிபர் என்றும், ஐஸ்வர்யா ராய் உங்களை திருமணம் செய்துக் கொள்ள போன் மேல் போன் போடுகிறார் என்கிற அளவுக்கு பில்-டப் இருக்கும்.

இந்த நிலையில், தமிழுக்கு புது வரவு - விகடன் குழுமத்தினரிடமிருந்து வரும் நாணயம் விகடன். ஏற்கனவே ஒரு டீசர் பத்திரிக்கையினை விகடனில் விளம்பரப்படுத்தி எழுதிக் கேட்டவர்களுக்கு கொடுத்திருந்தார்கள். இப்போது முழுமுதல் பத்திரிக்கை கையில்.

நடிகர் சூர்யா சிரிக்கிறார். திரிஷா டாடா இண்டிகாம் கார்டினை காட்டுகிறார். எம்.எஸ்.பாஸ்கர் அண்ணாச்சி கெட்டப்பில் மளிகைக் கடையில் இருக்கிறார். ஒரு சமயத்தில் இது வணிகம், வியாபாரம் சம்பந்தமான பத்திரிக்கை தானா என்கிற சந்தேகம் எழுந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. பக்கத்துக்கு பக்கம் வண்ணம், வண்ணமயமாய் இருக்கிறது. எதை எழுதுவது என்று தெரியாமல் படங்களைப் போட்டு நிரப்பியிருக்கிறார்கள். மாஃபாய் பாண்டியராஜனை ஏதோ சினிமா பாண்டியராஜன் என்று நினைத்து ஒரம் கட்டி, நடிகையிடம் கேட்கப்படும் முட்டாள் கேள்விக்களுக்கான பதிலைப் போல் மனிதவள மேலாண்மை பற்றிய சில முக்கியமான விஷயங்களை தாராளமாக சொதப்பியிருக்கிறார்கள். எல்லா பக்கங்களிலும் ஏதேதோ வண்ணங்களில் தலைப்புகள். படங்கள். வித்தியாசமான லே-அவுட்களில் எழுத்துக்கள். Consistency சுத்தமாக இல்லை.

ஒரு வணிக பத்திரிக்கை என்பது வியாபாரம், வணிகம், பணம் போன்ற சீரியஸான விஷயங்களைப் பற்றி எழுதுவது என்பது என் எண்ணம். எகானாமிஸ்ட், ஹார்வேர்டு ரிவியு போல கூட தேவையில்லை. ஆனால், குறைந்த பட்சம் பிஸினஸ் டுடே, பிஸினஸ் வேர்ல்டு அளவிற்காவது ப்ரொப்ஷனலிசம் இருக்க வேண்டும். ஒரு ஜனரஞ்சகப் பத்திரிக்கைப் போல மாற்றியிருப்பது நிறைய இடங்களில் நெருடுகிறது.

பாராமவுண்ட் தியாகராஜன் அவர்களின் விமான சேவையினைப் பற்றி ஒரு நான்கு பக்கம். நடிகர் சூர்யா வைத்திருக்கும் காற்றாலைகள் பற்றி ஒரு நான்கு பக்கம். மளிகைக் கடைகள், தொழில்மயமாக்கப்பட்ட கடைகளின் (organised retail) பின்புலத்தில் எவ்வாறு இருக்கும் என எழுதப்பட்ட ஒரு ஆய்வு (வாய்வு ..... ;)) கட்டுரை. ஆங்காங்கே பிஸினஸ் துணுக்கு கதைகள். பங்கு சந்தைப் பற்றி கொஞ்சம். (NSE, BSE யை இதை விட மோசமாக யாரும் கிண்டலடிக்க முடியாது) சிமெண்ட், கட்டிட தொழில்துறைகள் பற்றி கொஞ்சம் என கலந்துக் கட்டி அடித்திருக்கிறார்கள்.

லே அவுட் படு மட்டமாக இருக்கிறது. அட்டையை கிழித்துவிட்டு, செய்தியை வாசிக்காமல் பார்த்தால் அப்படியே "தமிழன் எக்ஸ்பிரஸின்" சாயல். வணிகம் இன்றைக்கு தொழில்நுட்பத்தின் துணைக் கொண்டு தான் வளர்ந்து வருகிறது. அப்படியிருக்கையில் தொழில்நுட்பம் பற்றி ஒரு வார்த்தையும் இல்லாமல் ஒரு வணிக சம்பந்தமான பத்திரிக்கை வருவது ஆச்சர்யமளிக்கிறது. முதல் இதழிலேயே பெரியதாக கணித்துவிட முடியாது. நாள்பட, பட மாறலாம். ஆனாலும், இப்படியே போனால் தாங்குமா என்பது சந்தேகம். மொத்தத்தில் செளகார்பேட்டையில் கிடைக்கும் அசட்டு தித்திப்பு தித்திக்கின்ற, காரமில்லாத பேல்பூரி. இன்னொரு முறை சாப்பிடலாம், அதற்கு மேல் ம்ஹும்ம்ம்ம்ம்.

பார்வைக்கு - நாணயம் விகடன்

Dec 1, 2005

நானிலு

தெலுங்கு கவிதைத் தளத்தின் அதி நவீன கவிதை வடிவம் "நானிலு". நான்கைந்தாண்டுகளுக்கு முன் "தெலுங்கு பல்கலைக்கழகத்தின்" முன்னாள் துணை வேந்தரும் மத்திய சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான முனைவர். என். கோபி அவர்களால முதன் முதலாய் வடிவமைக்கப்பட்ட "நானிலு" வெகு எளிதாய் புரிந்து கொள்ளப்படும் தன்மையிலேயே தெலுங்கு இலக்கிய உலகின் இன்னொரு பரிமாணமாய் தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த நாலடிக் கவிதைகள் இலக்கிய இலக்கண வரையறைகளூக்கப்பாற்பட்டவை. ஹைகூக் கவிதைகள் போல இறக்குமதி செய்யப்பட்டதல்ல என்பது (?!!) இக்கவிதைகளின் தனித்தன்மையென பேசப்படுகிறது. ஆனாலும், ஹைகூ போல் நானிலு வகைக்கும் வரிசையாய் பல கவிஞர்கள்........... பல்லாயிரம் கவிஞர்கள்...... பல நூல்கள் என வரவுகள். நானிலு கவிதைகளின் சில அடையாளங்கள்... நான்கு வரிகள். சுமார் பத்து முதல் இருபது வார்த்தைகள். முதல் இரு வரிகளில் ஒரு செய்தி....தகவல் அல்லது குறீயிடாக அமைத்து அடுத்த இருவரிகள் அதைச் சார்ந்தோ எதிர்த்தோ தொடர்புபடுத்தியோ அமைவது இதன் பிரதான அடையாளம். மரபு, புது, ஹைகூ என எல்லாவகைக் கவிதை வடிவங்களுமே மேற்சொன்ன அடையாளம் கொண்டதாகவே அமைகிறதென்றாலும் "நானிலு" கவிதைகளில் பொருள் சார்பு சற்று அழுத்தமாய் விழுகிறது. அணுகுமுறை அதாவது வெளிப்பாடு அதி எளிமையாயினும் பொருட்செறிவு வீரியமானது.

தெலுங்கு கவிதைக்களத்தில் ஒரு நவீன கவிதை முயற்சியை துணிவுடன் மேற்கொண்டு ஒரு "ட்ரெண்ட் செட்டர்" ஆன திரு. கோபி அவர்களின் முதல் சீடர் திரு. எஸ்.ஆர்.பல்லம். கவிஞர் பல்லத்தின் தொகுப்பிலிருந்து தன் குருவுக்கு காணிக்கையாய் படைத்த நானிலுக்களில் சில

விளக்குடன்
ஒப்பிடத்தேவையில்லை
மண்ணெண்ணெய்க்கு
தாரைவார்க்காமாலிருந்தால் போதும்

சொல்வது
புரியாததற்கு
மொழி மட்டுமல்ல
மனமும் காரணம்தான்

யாத்திரை என்றால்
பயணமல்ல
உன்னுள்ளேயே
நீ செல்லும் பிரவாகம்

அரிசிமணி மீது
சித்திரம் அழகுதான்
அது சோற்றுப்பருக்கையாகும்போது
இன்னும் அழகு

நன்றி: திசைஎட்டும் அக்-டிசம்பர் 2005 இதழ்

தெலுங்கு தெரிந்த நம் கவிஞர் / வலைப்பதிவாளர் மதுமிதா இந்த கவிதைப்போக்கினைப் பற்றி மேலதிக தகவல்கள் தந்தால் நன்றாக இருக்கும்

இயல்பாய் கொஞ்சம் தண்ணீர்

மூன்று நாட்களுக்கு முன் குளிக்கலாம் என்று குழாயினை திறந்தால் தண்ணீர் கொட்டியது. எப்போதும் கொட்டும் இதிலென்ன அதிசயம்! ஆனால் கொட்டிய தண்ணீர் தெள்ளத் தெளிவாக இருந்தது. பளிங்கு மாதிரி என்று சொல்லுவார்களே அந்த மாதிரி. கொஞ்ச நேரம் தண்ணீரையேப் பார்த்துக் கொண்டு நின்றேன்.

கொஞ்சம் வியப்பாயிருக்கலாம், பளிங்கு மாதிரி தண்ணீருக்கு எதற்கு தேட வேண்டுமென்று. நகரவாசியய்யா நான். 150% சென்னைவாசி. மற்றவர்களுக்காகவாவது சொந்த ஊர் என்ற ஏதாவது ஒன்று இருக்கும். அவ்வப்போது வெளியே போகலாம். எனக்கு அந்த கொடுப்பனையில்லை. சென்னை தான் எனக்கு எல்லாம். சென்னையில் தொடர்ந்து வசித்து வந்தால், தண்ணீரின் அருமை உங்களுக்கு தெரியும். எத்தனை விதமான தண்ணீரைப் பார்த்து இருப்பீர்கள். நான் பார்த்து இருக்கிறேன். கலங்கலான தண்ணீர், ஃபோர் மோட்டார் போட்டு உறிஞ்சப்பட்டு சவட்டுத்தன்மையோடு இருக்கும் தண்ணீர், கார்ப்பரேஷன் பைப்பும், கழிவு நீர் பைப்பும் அருகருகே போவதால் வரும் கருப்பு தண்ணீர், மஞ்சள் நிற தண்ணீர், குளோரின் நிரப்பப்பட்ட நாற்றமடிக்கும் லாரி தண்ணீர், பாய்ச்சலாய் அடிக்கும் போது நல்லதாய் தெரிந்து வீட்டுக்கு வந்து பார்த்தால் கசடு கீழிறங்கும் தண்ணீர், பிளாஸ்டிக் குடுவைகளில் மினரல் வாட்டர் என்று சொல்லி தலையில் கொட்டப்படும் தண்ணீரின் சுவை சிறிதுமில்லாத செத்துப் போன தண்ணீர், அடிப்பம்பில் மார் வலிக்க அடித்து ரொப்பினால் பொங்கும் நுரையுடன் கசப்பு சுவையுடன் அசடாய் பல்லிளிக்கும் தண்ணீர் என எல்லா வகையான தண்ணீரையும் பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் வணிக ரீதியாய் வெளி மாநிலங்கள் போகும் போதும் செய்யும் முதல் காரியம், தண்ணீர் எப்படி இருக்கிறதென்று பார்ப்பது தான். எத்தனையோ முறை பெங்களூரில் ஹோட்டல் அறையில் வெறுமனே தண்ணீரை திறந்து வைத்துப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறேன். இந்தியாவோ, வெளிநாடோ எல்லா இடங்களிலும் என் முதல் கவனம் தண்ணீர் தான். அழகாய் நுரையில்லாமல், எவ்விதமான ஆர்ப்பாட்டமுமில்லாமல், பளிங்கு போல கொட்டும் தண்ணீர். கையிலெடுத்துப் பார்த்தால், ஒழுங்காய் ரேகைகள் காட்டும் தண்ணீர். மாங்கு மாங்கென்று ஷாம்பூ போட்டு நுரை வர தேய்க்கவைக்காத தண்ணீர். அழகாய் கண்ணாடி கிண்ணங்களில் இருந்தும் இல்லாமலிருக்கும் தண்ணீர். ஷவரிலிருந்து துளிகளின் பிரவாகமாய் கொட்டும் ஜில்லென்ற தண்ணீர். குடித்தால் மெதுவாய் தொண்டையின் சுவர்களைத் தொட்டு ஒடும் தண்ணீர். மென்மையாய் கையினை அரிக்காத தண்ணீர்.

மூன்று, நான்கு வருடங்களாகவே, மோட்டாரில் தான் ஒடிக் கொண்டிருக்கிறது என்னுடைய அடுக்ககம். அதனால், மண்ணோடு அதன் மஞ்சள் தன்மையோடு தான் தண்ணீரைப் பார்க்க முடியும். அந்த தண்ணீரில் தோய்த்தால், மூன்று தோய்ப்பில் மஞ்சளுக்கு மாறிவிடும் ஆடைகள். வெந்நீராய் இருந்தாலும், வடிக்கட்டி குடிக்கும் நிலை, அடித் தண்ணீரில் கசடுகள் தேங்கியிருக்கும்.ஆக, இப்படி இருந்தவனுக்கு பளிங்கு போல தண்ணீர் வந்தால் என்ன செய்வான்? அன்றைக்கு நான் குளிக்கவில்லை. வீட்டில் இருக்கும் எல்லா பக்கெட்டுகளையும் சீராய் கழுவி, மஞ்சள் கறைகளை நீக்கிவிட்டு, மீண்டும் மீண்டும் தண்ணீர் பிடித்தேன். பளிங்கு போல உள்ளதை உள்ளபடி காட்டும் தண்ணீர், மென்மையாய் கரங்களை வருடும் தண்ணீர். எல்லா பக்கெட்டுகளிலும் சீரான தண்ணீர். என் அடுக்கக கிணறுகள் நிரம்பி விட்டன.

ஆனால், இதைப் பெற 3000 கோடி வெள்ள நிவாரண நிதியும், 200 உயிர்களுக்கு மேலும் காவு கொடுக்க வேண்டியிருக்கிறது. 3000 கிராமங்கள் தீவாக இருக்கின்றன. 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்கள். இப்போதும் குளிர் காற்று வெளியே அடிக்கிறது. தண்ணீர் பளிங்காய் இருக்கிறது. ஆனால் இதற்காக தவித்த தவிப்பு போய், இன்றைக்கு வெறுமை மட்டுமே மிஞ்சி இருக்கிறது. எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல், குழாயினை திறந்தால் பளிங்கு போல தண்ணீர். ஆனால் இந்த தண்ணீர் நிறைய பேருக்கு எமன். இந்த தண்ணீருக்காக எவ்வளவு இழந்திருக்கிறோம். எவ்வளவு உயிர்கள் போயிருக்கின்றன. எவ்வளவு மனிதர்கள் தங்கள் உடைமைகளையும், உறவுகளையும் இழந்திருக்கிறார்கள். ஏனோ நிறைய சலித்துக் கொண்டாலும், அயர்ச்சியுற்றாலும் கொஞ்சம் மஞ்சள் நிற தண்ணீர் அழகாய் தெரிகின்றது இப்போது. ஆனால், என்றைக்கும் அழகாய், அமைதியாய், மென்மையாய் இருக்கும் எல்லாமும் சந்தோஷம் அளிப்பதில்லை, சில சமயங்களில் பளிங்காய் மின்னும் தண்ணீர் போல.

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]