Dec 30, 2005

புதுப்பேட்டை: நிழலுகம் - 102 - ரிபீட்டு :)

பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றிகள். வடசென்னையில் நான் எழுதியது தினசரி நடக்கும் ஒரு சர்வசாதாரணமான விஷயம். இதனாலேயே, நீங்கள் வடசென்னையை இத்தாலி மாபியாக்களும், ஸ்பானிய தாதாக்களும் உலாவும் இடமாக உருவகிக்காதீர்கள். பிரகாஷ் , அருள் , சன்னாசி மற்றும் மற்றவர்கள் சொன்னதுப் போல, இதை ஆவணப்படுத்தாதது மிகப் பெரிய குறை. ஆசாத் சொன்ன "சுத்துப் போடறது" போன்றவை 80களில் மிகப் பிரபலம். இன்றைக்கு நிழலாளிகளும் மாறிவிட்டார்கள். ரிலையன்ஸ் இன்ஃபோகாம் பாலன்ஸ் ஷீட்டில் கர்ச்சீப் விழுந்ததற்கான காரணத்தினை கொடுங்கையூர், ஐஓசி நகர், சுதந்திர நகர், காலடிப்பேட்டை, திருவொற்றியூர், காசிமேடு, அஜாக்ஸ் போன்ற இடங்களில் பார்க்கலாம் ;) ஒரு காலத்தில் ரிலையன்ஸின் எல்ஜி போன்கள் குப்பைத்தொட்டியில் கிடந்தன. use and throw மாதிரி இவற்றினை நிழலாளிகள் உபயோகப்படுத்தினார்கள்.

வடசென்னை வாழ்வியல் என்பது மிகமுக்கியமான விஷயம். சென்னை என்றொரு பெருநகரத்தின் தோற்றிடம் வடசென்னை தான். இன்றைக்கு வேண்டுமானால் மயிலாப்பூரும், தி.நகரும், அடையாரும், தரமணியும் சென்னையாக அடையாளம் காணப்படலாம். ஆனால் உண்மையான சென்னையின் ஆணிவேர் வடசென்னையில், சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு அந்த பக்கத்தில் கருவாடு நாற்றத்தோடு அழுக்காய் இருக்கிறது.

//வாழ்க்கையின் இருண்ட பக்கத்தை பதிவு செய்வது அவசியம் தான். அந்த இருளிருந்து தோன்றும் ஓரிரு ஒளிக்கீற்றுகளையாவது பதிவு செய்வது அதைவிட முக்கியம்.//

சுந்தரமூர்த்தியின் கருத்துக்களோடு ஒத்துப் போவேன். ஆனால், இது ஒரு கேட்க, பார்க்க, திரில்லிங்காக இருக்கும் ஆனால், படுமோசமான வாழ்க்கை. இவற்றினை ஆவணப்படுத்துதலில் ஒரு பகுதியாக இருக்க வைக்கலாம். ஆனால் யதார்த்தம் என்னவெனில் ஒரு முறை நீங்கள் மாட்டினீர்களேயானால், போலீஸும், சமூகமுமே உங்களை மீண்டும், மீண்டும் அந்த புதைகுழியில் தள்ளத் தொடங்கும்.


சசி எழுதியிருந்த உளவு நிறுவனங்கள் போல, நிழலாளிகளிடமும் 'இன்பார்மர்கள்' என்றொரு பிரிவு உண்டு. ஆனால், இன்பார்மர்கள் நிழலாளிகளை விட பரிதாபமிக்கவர்கள். நிழலாளியோ, அல்லது போலிஸில் இருக்கும் "போலிஸ் இன்பார்மர்களோ" நெருங்கிய நிழலாளிகளிடத்தில் 'போட்டுக் குடுத்தால்' இன்பார்மரின் கதை கந்தல். வாழ்வின் மிக மோசமான மரணத்தினையும், சித்ரவதைகளையும் இன்பார்மர்கள் சந்திக்க வேண்டியதிருக்கும். இதில் சில சமயங்களில் போலிஸே கூட உங்களைப் போட்டு தள்ளிவிடும். அவர்களுக்கு தேவை 'அழுத்தம்' வந்தால் கணக்குக் காட்ட ஒரு ரவுடி, தாதா அல்லது பொறுக்கி. இன்பார்மரின் பெயர் ஏற்கனவே போலிஸ் ஏடுகளில் இருக்கும். அதனால் 'கணக்கு தீர்ப்பது' மிக சுலபம். ஆனாலும், இன்பார்மர்கள் இருப்பார்கள். அது இங்கேயும், அங்கேயும் செல்ல முடியாத வாழ்நிலை. மிடில் கிளாஸ் குடும்பங்கள் மாதிரி மிடில் கிளாஸ் நிழலாளிகள். பெரிதாய் வாழ்ந்திட முடியாது, ஆனால் ஒரளவிற்கு பாதுகாப்பாய் இருக்கலாம். "தமத்த" பயலுகள் இன்பார்மர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பார்கள்.

ஆனால், தென்னமரிக்க களியாட்ட வாழ்க்கைக்கு சற்றும் குறையாத, களியாட்டங்களும், ஆட்டமும், குதூகலமும் நிறைந்த குறுகிய வாழ்க்கை. அம்மன் கோயிலுக்கு ஆடிமாதம் கூழ் ஊற்றுவதில் தொடங்கி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கள், கிறிஸ்துமஸ் என்று அமர்க்களப் படுத்துவார்கள். ஆட்டமும், தேய்ந்து போன டேப் ரிக்கார்டரில் "திருவிளளயாடல்" வசனமும், "குங்குமப் பொட்டில் மங்கலம்" என்று பாடிக் கொண்டிருக்கும்போதே, திடீரென ஒரு கூட்டம் "வடுமாங்கா ஊறுதுங்கோ, தயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ' என்று ஆரம்பித்து ஒரே களேபாரமாய் மாறும் தருணங்கள், எவர் செத்தாலும், "..த்தா மூடுறா கடைய" என எல்லா கடையையும் மூடிவிட்டு, இடுகாட்டிலேயே, ஒரு ஒரமாய் உட்கார்ந்துக் கொண்டு, 'அண்ணே போய்டிய்னே, போய்டியினே, மயிரு ஊத்துறா" என அவர்களிடத்திலேயே காசு வாங்கி தண்ணி அடித்து ரகளை பண்ணுவது, சிறுவண்டி, பெருவண்டி, நைஸ் மாஞ்சா என ரெடி பண்ணி, தீபாவளியன்று பாணா காத்தாடி பறக்க விடுவது ( காத்தாடியில் இருக்கும் வகைகளைப் பற்றியே தனியாக எழுத முடியும். புல் ஷீட், அரை ஷீட், பாணா, ஒத்தகண், ரெட்டை கண் என பல வகைகள் உண்டு) என கொஞ்சமாய் இருக்கும் அவர்களின் கோரமான வாழ்வின் சந்தோஷ தருணங்கள். இதுவே கூட சண்டையை ஆரம்பிக்கும். மாஞ்சா போடுதல் பற்றி எனக்கு முழு விவரங்கள் தெரியாது. ஆனால் மாஞ்சா போடுவது என்பதே ஒரு புத்தகத்திற்கான விஷயம். 80களில் மாஞ்சா கலவையிலிருந்து நூலினை தோய்த்து வெளியேற்றி ஒரு புல்ஷீட்டினை "பெரள்" போட்டு கொண்டிருந்தப் போது தான், ஸ்பேனரின் மற்ற உபயோகங்கள் புரிய ஆரம்பித்தது ;) களியாட்டமும், கவிழ்ப்புமாக நிறைந்த வாழ்க்கையது. இதில் 'ப்ராக்கெட் விடறது' என்பது பரவலான வழி. அதாவது நீங்களும் சக கூட்டாளிகளும் தண்ணியடிக்கப் போனால், மற்றவர்கள் உங்களை 'ஏத்தி' விடுவார்கள். நீங்களும் 'மெதப்பில்' அவர்களுக்குத் தேவையானதை வாங்கி தருவீர்கள். உங்கள் காசில் நன்றாக மங்களம் பாடிவிட்டு, "எஸ்"-ஆகிவிடுவார்கள். எஸ்ஸாவுதல் என்பது escape ஆகுதலின் ஷார்ட் பார்ம். இப்படியாக உங்களை 'ப்ராக்கெட் விட்டு' அடுத்தவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். ஆனால் நிழலாளிகள் வாரிக் கொடுப்பதில் மன்னர்கள். சொந்தமாக எதுவும் சேர்த்து வைத்துக் கொள்ளத் தெரியாதவர்கள். கொஞ்சம் உஷாரான ஆட்கள் தான், நிலம் வாங்கிப் போடுவார்கள். பெரும்பாலானவர்களுக்கு தனிமையில் தான் வாழ்க்கையோடும். கண்டிப்பாக வீட்டை விட்டு துரத்தி விடுவார்கள். கல்யாணம் செய்துக் கொள்ளலாம். ஆனால், நிம்மதியாக வாழ முடியாது.

நிழலாளி சமூகத்தில் மிக முக்கியமான விஷயம் இங்கே பேதங்கள் கிடையாது. பெண் நிழலாளிகள் சிலர் (பெரும்பாலும் சாராயம் கடத்துபவர்கள், காய்ச்சுபவர்கள், கஞ்சா விற்பவர்கள், பெண்களைக் கொண்டு பாலியல் தொழில் நடத்துவர்கள், கொஞ்சம் அரசியல் மகளிரணி ஆட்கள்) ஆண் நிழலாளிகளை விட மோசமானவர்கள். ஜமுனாக்கா என்ற பெண் நிழலாளி நான் பள்ளி படிக்கும்போது ஒரளவுக்கு பிரபலம். சைக்கிள் ரிக்சாவில் தான் வருவார். முழு வெற்றிலைப் பாக்கு வாயும் நல்ல அகண்ட உடல்வாகும் கொண்டவர். ஆனால் வாயை திறந்தால், எல்லோரும் காதை மூடிக் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு வண்டை வண்டையாக (சாம்பிள் பார்க்க (கெட்ட வார்த்தைகளின் அரசியல் ) என்ன பேசினார் என்று எழுத முடியாது. எழுதினால் வலைப்பதியும் பெண்கள் கண்டிப்பாக எனக்கு 'பத்வா' கொடுத்து விடுவார்கள் ;)) வரும். ஆண்,பெண் பேதம் பார்க்காது கிழிபடுவீர்கள். ஆனால் ஜமுனாக்காவிற்கு குழந்தைகள் மீது பாசமதிகம். சமூகத்தின் சட்டதிட்டங்கள் எல்லாம், நிழலுலகத்தில் பெரும்பாலும் செல்லாது. தன் கணவனை வெட்டிக் கொன்றவனையே திருமணஞ்செய்துக் கொண்டு, மூன்றாம் மனைவியாக வாழ்வர்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். அப்படியில்லையெனில் ஜமுனாக்கா மாதிரி 'வேறு' தொழில்கள் செய்து வாழ வேண்டியதுதான். ஆனால், ஆண்களுக்கு சற்றும் குறைவில்லாத செயல்களை பெண்களும் செய்வார்கள். கூலிக்கு கை, கால் எடுக்கும் பெண் தாதாக்களையெல்லாம் நீங்கள் கொடுங்கையூர், பாரதி நகர், ஐ ஓ சி சுதந்திர நகரில் பார்க்க முடியும். தற்போது அமைச்சரவையில் இருக்கும் ஒரு 'அமைச்சர்' போன தலைமுறை பெண் நிழலாளி.

பெரும்பாலான நிழலாளிகளுக்கு பார்க்கும்படியான தொழில் தண்டல் விடுதல் அல்லது கொஞ்சம் டிசன்டாக "பைனான்ஸ் பிஸினஸ்" தான். மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி என்றெல்லாம் பேசுபவர்கள் முழுநேர தண்டல்காரர்கள். நிழலாளிகள் நிறைய பேருக்கு பைனான்ஸ் கையாளத் தெரியாது என்பதுதான் உண்மை. அடிக்கத் தெரியும். நடுரோட்டில் சவுண்டு விடத் தெரியும். கொஞ்சம் 'ஞானமுள்ளவர்கள்' தான் 'ஸ்கெட்சு' போடுவார்கள். மற்றபடி நாளிதழ்கள் படிப்பார்கள். அவ்வளவே. சென்னை நிலவரபடி ஒவ்வொரு செயலுக்கும் ஒரு 'ரேட் கார்டு' இருக்கிறது. இங்கே அதை நான் பிரசூரித்தால், என்னைத் தூக்கி உள்ளே உட்கார வைத்து விடுவார்கள். அதற்கு பின் லாக்-கப்பில் இருக்கும் 12 கம்பிகளை திருப்பி, திருப்பி எண்ணி காலத்தினை கழிக்க வேண்டியதுதான். நிழலாளிகளின் இன்னொரு முக்கியமான குணாதிசயம் - நம்பகத்தன்மை. உயிரே போனாலும், காட்டிக் கொடுக்க மாட்டார்கள். காட்டிக் கொடுக்கும், உள்ளே இருந்துக் கொண்டே குழிபறிக்கும் நிழலாளிகளின் மரணம், இன்பார்மர்களையொத்தது. ஒரு வேலை செய்ய தலைப்பட்டார்களேயானால், ஒரு நாளும் செய்யச் சொன்னவரின் பெயர் வெளியே வராது. அவ்வளவு உத்தரவாதம் கிடைக்கும். அதே சமயத்தில், நீங்கள் 'பசை'யுள்ள ஆள் என்றால், அதைச் சொல்லியே காசு வாங்கும் கூட்டமும் இருக்கிறது.

ஒவ்வொரு நிழல் குழுக்கும் ஒரு எல்லையுண்டு. காசிமேட்டினில் பிரச்சனை நடந்தால் அது காலடிப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், மணலி, எண்ணூர் போன்ற ஏரியாக்களில் இருக்கும் நிழலாளிகள் தான் பார்க்கவேண்டும். சைதாப்பேட்டை நிழலாளிகள் உள்ளேப் புக முடியாது. அப்படி மீறி போய் ஏதாவது நடந்தால், முதலில் காம்ப்ரமெய்ஸ் நடக்கும். அதுவும் சரிவரவில்லையெனில் 'ஸ்கெட்சு' போட்டு விடுவார்கள். உயிருக்கு உத்தரவாதம் வேண்டுமெனில் மாதுங்கா, தாராவி, முலாந்த் போய் டீக்கடை வைத்து பிழைத்துக் கொள்ள வேண்டியதுதான். தமிழ்நாட்டில் எங்கேயிருந்தாலும், தேடி வந்து 'போட்டுத் தள்ளு'வார்கள். கடந்த பத்து வருடங்களாக தான் 'கூட்டியார்ரது' பிரபலமாக இருக்கிறது. "கூட்டியாரது' அல்லது 'கூலிப்படை' என்பது ஒரு மாவட்டத்திலிருந்து, இன்னொரு மாவட்டத்திற்கு வந்து 'காரியங்களை' செய்துவிட்டு போய்விடுதல். Offshoring மாதிரியான விஷயம் ;) உங்களுக்கான வேலையே உங்களுக்கு சம்பந்தமேயில்லாத ஒருவன் வந்து செய்துக் கொடுத்துவிட்டு கூலி வாங்கிக் கொண்டு போவான். 'அபீட்டாவுதல்' என்பதற்கு ஏறக்குறைய இதைப் பொருள் பொருந்தும்.

இவ்வளவு மோசமாக தெரிந்தாலும், அவரவர்கள் ஏரியாவில் அவர்கள் சாதாரணமாக இருப்பார்கள். வரிசையில் நின்று தண்ணீர் பிடிக்கும் நிழலாளிகளைப் பார்த்திருக்கிறேன். எல்லா நிழலாளிக்கும் தங்களின் நிலை தெளிவாக தெரியும். வெளியே யாராவது சிறுசண்டை போட்டால் கூட கோவம் வருவதை கவனித்திருக்கிறேன். சண்டையும், ஆயுதங்களையும் தொடர்ச்சியாக வெறுப்பவர்கள் நிழலாளிகளே. ஆனாலும், அது இல்லாமல் அவர்களால் வாழமுடியாது. சேரா, வொயிட் ரவி போன்றவர்களிடத்தில் நேரடியாக வேலை செய்யும் நிறைய நபர்களிடத்தில் பரிச்சயமுண்டு. உடனே உஷா சொன்னதுப் போல பிரச்சனை என்றால் எனக்கு போன் அடிக்காதீர்கள் : ). நிழலாளிகளிடத்தில் மிக ஜாக்கிரத்தையாக பழக வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் நீங்கள் வாழ்நாள் முழுக்க அதன் பலனை அனுபவிக்க வேண்டியதிருக்கும். நெருக்கமான நிறைய நபர்கள் நிழலாளிகளாய் இருந்தும், அழைத்தால் வரமாட்டார்கள். காரணங்கள் இருக்கிறது. ஒரு முறை ஒரு நிழலாளியினை ஒரு assignment க்கு அனுப்பினீர்களேயானால், ஏதாவதொரு இன்பார்மர் மூலமாக போலிஸுக்கு தகவல் போய்விடும். அப்புறம் நீங்கள் இரண்டு தரப்பிலேயும் 'மாமூல்' அழவேண்டியதிருக்கும்.

நேரம் மிக முக்கியம். எல்லாருடைய கண்களிலும் மூன்று நாட்கள் மிச்சமிருக்கும். ஆனாலும் தூங்க முடியாது. ஒரு நிழலாளியினை ஸ்கெட்சு போட்டு, போட்டு தள்ள வேண்டுமானால், அதற்கான நேரம் விடியற்காலை மூன்று மணியிலிருந்து - நான்கரை மணிக்குள் தான். அப்போது தான் கொஞ்சம் கண் அசருவார்கள் அல்லது கண் மூடுவார்கள். நிறைய நிழலாளிகள் இதிலிருந்து தப்பிக்க உபயோகிக்கும் தந்திரம் 'லுங்கிப்போர்வை' தான். லுங்கிக் கட்டிக் கொண்டு, பன்னிரண்டு மணிக்கு மேல் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி கன்டெய்னர்கள் லோடு இறக்கும் கடைகளின் ஷட்டர்களுக்கு கீழே, அல்லது குப்பைத்தொட்டிக்கு சற்று தள்ளி, முழு லுங்கியினை தலைமுதல் கால் வரை போர்த்தி படுத்துக் கொண்டு தூங்கிவிடுவார்கள். பெரும்பாலும் பிச்சைக்காரர்கள், அங்கஹீனம் உள்ளவர்களோடு படுப்பதால் பெரியதாய் சந்தேகம் வராது. ஆனால் உள்ளுக்குள் இருக்கும் பயோ-அலாரம் சரியாக ஐந்து, ஆறு மணிக்கு எழுப்பிவிட்டுவிடும். லுங்கிப் போர்வையில் படுப்பவர்கள் பெரும்பாலும் சின்ன நிழலாளிகளாய் தான் இருப்பார்கள். தங்களை போட்டு தள்ள, ஸ்கெட்சு போடுகிறார்கள் என்று தெரிந்தாலே, பெரும் நிழலாளிகள் எஸ்ஸாகிவிடுவார்கள்.

வடசென்னை முழுக்கவே நிழலாளிகளின் சாம்ராஜ்யம் என்று நினைத்து விடாதீர்கள். சென்னையில் நடந்த தொடர்ச்சியான என்கவுண்டர்களுக்குப் பிறகு நிழலாளிகளின் போக்கு வெகு ஜன ரீதியில் குறைந்துவிட்டது. இல்லவே இல்லை என்று சொல்லமுடியாவிட்டாலும், 80கள், 90களின் முற்பகுதிப் போல நடுத்தெருவில் இப்போதெல்லாம் நீங்கள் பார்க்க முடியாது. ஆனாலும், உள்ளடங்கிய ஏரியாக்களிலும், நடுநிசி பரோட்டா கடைகளிலும், டாஸ்மாக்குகளிலும் முகங்கள் தென்படலாம். தமிழ்சினிமா காண்பிக்கும் நிழலாளிகளைப் பார்க்கவேண்டுமெனில் துறைமுகத்தில் கன்டெய்னர் சாமான்களை ஏற்றி இறக்கும் பகுதிகளில் கண்கூடாக பார்க்க முடியும். வடசென்னை என்பது ஒரு வாழ்வியல் அனுபவம். எவ்வளவுதான் எழுதினாலும், படித்தாலும், அங்கே வாழாமல் அது முற்றுப்பெறாது.

Comments:
மீண்டும் போன பதிவின் எல்லா பின்னூட்டங்களையும் எழுத வேண்டும்.

இப்படி மேலோட்டமாக சில பதிவுகள் போட்டுவிட்டு, ஒரு சில வறலாறுகளையாவது இன்னும் ஆழமான தளத்தில் முன்வைப்பது மிகவும் அவசியமானது. வாழ்துக்கள்!
 
இன்னமும் தமிழ்மணத்தில் வரவில்லையே?!!
 
நீங்கள் சொல்வதைப் போல, சென்னையில் எல்லா இடமும் அத்துப்படி என்ற பெருமை இருந்தாலும், செண்ட்ரலுக்கு அந்தாண்டை
போனதில்லை. வட சென்னை என்பது காதில் விழுந்த செய்திதான்.

//பெண் நிழலாளிகள் சிலர் (பெரும்பாலும் சாராயம் கடத்துபவர்கள், காய்ச்சுபவர்கள், கஞ்சா விற்பவர்கள், பெண்களைக் கொண்டு பாலியல் தொழில் நடத்துவர்கள், கொஞ்சம் அரசியல் மகளிரணி ஆட்கள்) ஆண் நிழலாளிகளை விட மோசமானவர்கள்.//

நாராயணா! பெண்ணீயத்தை காப்பாற்றி விட்டீர்கள் :-)
 
நாராயண்,

நீண்ட, சுவையான-அழுத்தமான பதிவு
 
/மாஞ்சா போடுதல் பற்றி எனக்கு முழு விவரங்கள் தெரியாது./ அய்யோ அய்யோ சின்னபுள்ளத் தனமா இல்ல இருக்கு :-)

நாராயணன், நல்ல பதிவு.
 
//80கள், 90களின் முற்பகுதிப் போல நடுத்தெருவில் இப்போதெல்லாம் நீங்கள் பார்க்க முடியாது. ஆனாலும், உள்ளடங்கிய ஏரியாக்களிலும்,..//

நாராயண்ஜி,

சரியாகச் சொன்னீர்கள். இப்பொழுதெல்லாம் அவ்வளவாகப் பார்க்கமுடிவதில்லை.

"..தா இந்த ___ வூட்ல ரெய்டு வந்தப்ப சுமோவுல பணத்த வெச்சுக்கினு சிட்டி பூரா சுத்துனம்பா. __டு மறண்டான்"

"சொம்மா நாப்பது பசங்கள யூனிஃபார்ம் மாட்டி இட்டாந்து மாநாட்ல காம்சா போறும்...ஒன்றியம் வாங்கிரலாம். கட்டிங் பாட்டுக்கு வரும்..."

மேற்சொன்னவை அங்கே இங்கே கேட்ட சில வசனங்கள்.

நல்ல எழுத்து இன்னொருவரை எழுதத்தூண்டுமாமே. நானும் நான்றிந்தவரையில் பதிவு ஒன்றைத் தரலாமா என யோசிக்கிறேன் :)

அன்புடன்
ஆசாத்
 
This comment has been removed by a blog administrator.
 
This comment has been removed by a blog administrator.
 
நாராயண் - Show your tongue புத்தகத்தைப் பார்க்க முயலவும். மாக்ஸ் ம்யூலர் பவனில் கிடைக்கும்.
 
சன்னாசி கேட்டுப் பார்க்கிறேன். கொஞ்சம் அவுட்லைன் கொடுத்தால் தன்யனாவேன்.

ஆசாத், எழுதுங்க வடசென்னை பத்தின நிறைய விஷயங்களை எழுத ஆட்கள் கிடையாது.
 
//நானும் நான்றிந்தவரையில் பதிவு ஒன்றைத் தரலாமா என யோசிக்கிறேன் :)//

Azad, Pl. do it. I believe you can bring out more details.

- Suresh Kannan
 
///ஒவ்வொரு நிழல் குழுக்கும் ஒரு எல்லையுண்டு///

ஆமாம் உலகளாவிய எல்லை தான்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு
தென் ஆப்பிரிக்காவில்(இடம் சரியாக நினைவிலில்லை) ஒரு ஹோட்டலில் புதுமணத் தம்பதியினர் தங்கியிருந்தனர்.
கணவன் போன் செய்திட வெளியே சென்று திரும்புகையில் மனைவி கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள்.போலீஸ் கணவனை கைது செய்து சிறையிலடைத்தது.
சிறை ஒரு ஆள் நின்று கொண்டுமட்டுமே இருக்க முடியும்.கொலைக்கும் கணவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இறந்த பெண்ணின் தந்தை அச்சமயம் கல்ப்-பில் பணி புரிந்தவர்.
கடைசியில் ஒரு மாபியா கேங் தலைவியின் தலையீட்டால் அந்த கணவன் விடுதலை செய்யப்பட்டான்.
உண்மையில் நடந்தது விஷயமிது.
மனைவியை இழந்த துயரம்,சிறைவாழ்க்கை என சித்திரவதை அவனுக்கு மனதாலும்,உடலாலும்.காப்பாற்றப்பட்டதோ நிழலுலக பெண்மணியால்.
என்ன விசித்திரமான உலக வாழ்க்கையிது
 
//நிழலாளி?! veerappanai veerapparnu ezhuthi respect kodukkura mathiri keethe?! :-)
 
Amazing piece! I see a bit of 'Sujatha' in the writing...

Like many, I wish the movie captures a significant portion of your description.

Apologise for not commenting in Thamizh...
 
must have missed this post during the christmas vacation.

wonderful post as usual narain.

royapuram friends ninaivukku varraanga unga post rendaiyum padikkumpothu.

niraiya pEr solli irukkiramaathiri virivaaha ezuthunga.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]