Dec 2, 2005

முதல் பார்வை - நாணயம் விகடன்

தமிழில் ரொம்ப நாட்களாய் வளர் தொழில், தொழில் உலகம் போன்ற வணிக பத்திரிக்கைகள் வந்துக் கொண்டிருக்கின்றன. அதில் சொல்லப்படும் கருத்துகள், பத்திகள் பற்றி பெரிதாய் அபிப்ராயங்கள் கிடையாது. கவுண்டமணி ஒரு படத்தில் சொல்லுவார் "குண்டூசி விக்கறவன் எல்லாம் தொழிலதிபர்" என்று. அந்த கதை தான் இப்பத்திரிக்கைகளில். விளம்பரம் கொடுத்தால் நீங்கள் தான் சென்னையிலேயே மிகப் பெரிய தொழிலதிபர் என்றும், ஐஸ்வர்யா ராய் உங்களை திருமணம் செய்துக் கொள்ள போன் மேல் போன் போடுகிறார் என்கிற அளவுக்கு பில்-டப் இருக்கும்.

இந்த நிலையில், தமிழுக்கு புது வரவு - விகடன் குழுமத்தினரிடமிருந்து வரும் நாணயம் விகடன். ஏற்கனவே ஒரு டீசர் பத்திரிக்கையினை விகடனில் விளம்பரப்படுத்தி எழுதிக் கேட்டவர்களுக்கு கொடுத்திருந்தார்கள். இப்போது முழுமுதல் பத்திரிக்கை கையில்.

நடிகர் சூர்யா சிரிக்கிறார். திரிஷா டாடா இண்டிகாம் கார்டினை காட்டுகிறார். எம்.எஸ்.பாஸ்கர் அண்ணாச்சி கெட்டப்பில் மளிகைக் கடையில் இருக்கிறார். ஒரு சமயத்தில் இது வணிகம், வியாபாரம் சம்பந்தமான பத்திரிக்கை தானா என்கிற சந்தேகம் எழுந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. பக்கத்துக்கு பக்கம் வண்ணம், வண்ணமயமாய் இருக்கிறது. எதை எழுதுவது என்று தெரியாமல் படங்களைப் போட்டு நிரப்பியிருக்கிறார்கள். மாஃபாய் பாண்டியராஜனை ஏதோ சினிமா பாண்டியராஜன் என்று நினைத்து ஒரம் கட்டி, நடிகையிடம் கேட்கப்படும் முட்டாள் கேள்விக்களுக்கான பதிலைப் போல் மனிதவள மேலாண்மை பற்றிய சில முக்கியமான விஷயங்களை தாராளமாக சொதப்பியிருக்கிறார்கள். எல்லா பக்கங்களிலும் ஏதேதோ வண்ணங்களில் தலைப்புகள். படங்கள். வித்தியாசமான லே-அவுட்களில் எழுத்துக்கள். Consistency சுத்தமாக இல்லை.

ஒரு வணிக பத்திரிக்கை என்பது வியாபாரம், வணிகம், பணம் போன்ற சீரியஸான விஷயங்களைப் பற்றி எழுதுவது என்பது என் எண்ணம். எகானாமிஸ்ட், ஹார்வேர்டு ரிவியு போல கூட தேவையில்லை. ஆனால், குறைந்த பட்சம் பிஸினஸ் டுடே, பிஸினஸ் வேர்ல்டு அளவிற்காவது ப்ரொப்ஷனலிசம் இருக்க வேண்டும். ஒரு ஜனரஞ்சகப் பத்திரிக்கைப் போல மாற்றியிருப்பது நிறைய இடங்களில் நெருடுகிறது.

பாராமவுண்ட் தியாகராஜன் அவர்களின் விமான சேவையினைப் பற்றி ஒரு நான்கு பக்கம். நடிகர் சூர்யா வைத்திருக்கும் காற்றாலைகள் பற்றி ஒரு நான்கு பக்கம். மளிகைக் கடைகள், தொழில்மயமாக்கப்பட்ட கடைகளின் (organised retail) பின்புலத்தில் எவ்வாறு இருக்கும் என எழுதப்பட்ட ஒரு ஆய்வு (வாய்வு ..... ;)) கட்டுரை. ஆங்காங்கே பிஸினஸ் துணுக்கு கதைகள். பங்கு சந்தைப் பற்றி கொஞ்சம். (NSE, BSE யை இதை விட மோசமாக யாரும் கிண்டலடிக்க முடியாது) சிமெண்ட், கட்டிட தொழில்துறைகள் பற்றி கொஞ்சம் என கலந்துக் கட்டி அடித்திருக்கிறார்கள்.

லே அவுட் படு மட்டமாக இருக்கிறது. அட்டையை கிழித்துவிட்டு, செய்தியை வாசிக்காமல் பார்த்தால் அப்படியே "தமிழன் எக்ஸ்பிரஸின்" சாயல். வணிகம் இன்றைக்கு தொழில்நுட்பத்தின் துணைக் கொண்டு தான் வளர்ந்து வருகிறது. அப்படியிருக்கையில் தொழில்நுட்பம் பற்றி ஒரு வார்த்தையும் இல்லாமல் ஒரு வணிக சம்பந்தமான பத்திரிக்கை வருவது ஆச்சர்யமளிக்கிறது. முதல் இதழிலேயே பெரியதாக கணித்துவிட முடியாது. நாள்பட, பட மாறலாம். ஆனாலும், இப்படியே போனால் தாங்குமா என்பது சந்தேகம். மொத்தத்தில் செளகார்பேட்டையில் கிடைக்கும் அசட்டு தித்திப்பு தித்திக்கின்ற, காரமில்லாத பேல்பூரி. இன்னொரு முறை சாப்பிடலாம், அதற்கு மேல் ம்ஹும்ம்ம்ம்ம்.

பார்வைக்கு - நாணயம் விகடன்

Comments:
எங்கள் நிறுவனத்துக்கு விளம்பரம் வேண்டி அமிதாப் பச்சன் சிரித்துக் கொண்டிருந்த 'மாதிரி' இதழை அனுப்பியிருந்தார்கள். அப்போதே 'ஒரு மாதிரி' தான் இருந்தது. எல்லாத்தையும் ரொம்ப 'சில்பான்சி'யாக ட்ரீட் செய்கிறார்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம்.
 
நாராயணன்,

அவசரப்படாதீர்கள். நம்ம மக்களுக்கு எதையும் சினிமா கலந்து கொடுத்தால்தான் சாப்பிடுவார்கள். ரொம்ப சீரியஸா, ப்ரொபஷனலா, சரக்கு மட்டும் அடர்த்தியா வெச்சி குடுத்தா எனிமா குடுத்தா மாதிரி புடுங்கிக்கும். எனக்கென்னமோ, அவர்களின் இலக்கு உங்களைப் போன்ற ஆங்கில பிஸினஸ் பத்திரிகைகளை வாசிக்கக்கூடிய வாசகர்கள் இலக்கு அல்ல என்று தோன்றுகிறது. அதனால்தான் இந்த சீரியஸ் விஷயம் "சில்பான்ஸி" யாய் அணுகப்பட்டிருக்கிறது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]