Dec 3, 2005

நீராலானது உலகு

இரவிலிருந்து இனி குறைந்தது ஒரு நாளைக்காவது வீட்டுச் சிறை. என்னுடைய அடுக்கக்கத்தின் எதிரே ஒரு ஏரி இருக்கிறது. கே.கே.நகரில் ஏரி பெரிய குளம் இருக்கிறதா என்று யாஹூ ஸ்மைலி அளவிற்கு ஆச்சர்யப்படாதீர்கள். இருக்கிறது. பால்கனியிலிருந்துப் பார்த்தால், ஏரியும் அங்கு வரும் பறவைகளும்,குளிர் காற்றும் கிடைக்கும் என்று தெரிந்தே வாங்கிய வீடு. கொஞ்ச நாட்களாகவே மெதப்பில் சுற்றிக் கொண்டிருந்தோம். சென்னை முழுக்க மழை பெய்தாலும் வெள்ளமே வந்தாலும் கே.கே.நகர் வேம்புலி அம்மன் தெருவில் தண்ணீர் தேங்காது என்கிற கர்வமது. மொத்தத்தில் வருண பகவான் மொத்தமாய் சேர்த்து வைத்தார் ஆப்பு.

நேற்றிரவு ஏரியில் இருக்கும் தண்ணீரின் அளவு அதிகமாகி, கரை உடைந்து, நேராக என்னுடைய அடுக்ககத்தில் இரும்பு கேட்டுகளுக்கு கீழே வர ஆரம்பித்தது. நான் எழுந்து பார்க்கும்போது இந்திய நேரம் 8.00 மணி காலை. முக்கால் வாசி தெருவில் கீழ்ப்பகுதியில் முழங்கால் அளவிற்கு தண்ணீர். வானிலை அறிக்கை சொல்வதுப் போல ஒரே சீராக என்னுடைய அடுக்க்கத்திற்கு ஏரியிலிருந்து தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. மின்சாரம் இரவு முழுவதும் இல்லை. இன்னும் எவ்வளவு நேரமிருக்கும் என்று தெரியவில்லை.

முழங்காலுக்கு சற்று கீழ் வரைக்கும் தண்ணீர் இருக்கிறது. இரண்டாம் மாடியில் இருப்பதால் பிரச்சனைகளில்லை. ஆனால் தெருவில் தாழ்வாக கார் வருவதற்காக தரையோடு தரையாக கட்டிய வீடுகளில் நிலை மோசம். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் மின்சார வாரியம் ஒரு பெருருருருரும் பள்ளத்தினைத் தோண்டி மூடியிருந்தார்கள்.

மண் நெகிழ்ந்து கண்டிப்பாக விபத்துக்கள் நேரிடும். ஆங்காங்கே மரக்கட்டைகளையும், டயர்களையும் போட்டு தற்காலிக சிக்னல்களாக மாற்றி வைத்திருக்கிறார்கள். தீயணைப்பு படையோ, வெள்ள நிவாரண குழுவோ வரும் வரை தண்ணீரைப் பார்த்துக் கொண்டு நிற்பேன். வேறேதும் செய்ய முடியாது. மின்சாரம் இருந்தால் மாலை போல நிலவரத்தினை பதிகிறேன். இன்றைக்கும் மழை இருக்கிறது என்று நாளிதழ்கள் சொல்லுகின்றன. இருந்தால் நிலை கொஞ்சம் கஷ்டம் தான். நீரால் சூழ்ந்தது உலகு.

Comments:
கவலைதரும் செய்தியாய் வந்தவண்ணமிருக்கிறது...

இத்தனையும் மீறி சாலை எங்கிருக்கிறது, பள்ளம் எங்கிருக்கிறது, மின்சாரம் எங்கிருக்கிறது என்பதை கடவுள் மீது பாரத்தைப்போட்டு மக்கள் வாழ்வைத்தேடி சென்றுகொண்டேயிருக்கின்றனர். அவர்களுக்காகவாது விடிவுகாலம் விரைவில் வரட்டும்...
 
உங்க வேம்புலியம்மன் கோவில் தெரு படமெல்லாம் தமிழ் முரசில் வந்திருக்கு. மணல் மூட்டை அடுக்கியிருக்கிற அந்த அடுக்ககம் உங்களோடதா..
 
சூப்பர் தல. அதே அடுக்ககம் தான் ;) பாருங்க என்னை மாதிரி ஒரு ஆளைப் பேட்டி எடுக்கும்போதுதான் என் அடுக்ககம் வரும்ன்னு நினைச்சேன் ;) இப்ப வேற விஷயத்துக்கெல்லாம் வருது
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]