Dec 4, 2005

தவமாய் தவமிருந்து - படப் பார்வை

'கண்ட நாள் முதல்' கிடைக்குமா என்று நண்பனின் பேச்சினைக் கேட்டு ஆல்பர்டில் இறங்கினால், 'தவமாய் தவமிருந்து'. ஆட்டோஃகிராபின் வெற்றிக்குப் பிறகு இரண்டு வருடங்களுக்குப் பிறகு மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் வந்திருக்கும் படம்.

முதலில் சேரனுக்கு ஒரு ஷொட்டு. தமிழில் முதல் உருப்படியான ஹை டெபனிஷனினில் எடுக்கப்பட்ட படம். இதற்கு முன் 'வானம் வசப்படும்' (P.C.ஸ்ரீராம்) எடுத்து திருப்தியில்லாமல் போன படம். ஹை டெபனிஷனில் எடுத்த படம் மிக திருப்தியாக இருக்கிறது. வெகு சில தொழில்நுட்ப குறைகள் தெரிகின்றன. ஆனாலும், சாதாரண ரசிகனுக்கு தெரியாத விஷயங்கள் அவை. நீலம் கொஞ்சம் bleed ஆகிறது, கொஞ்சம் blur ஆன விஷயங்கள் லேசாக pixelate ஆகின்றன. மற்றபடி, அருமையாக பிலிமில் தெரிகிறது. அகன்ற திரையில் வித்தியாசங்கள் கண்டு பிடிக்க முடியவில்லை.

மிகவும் எதிர்ப்பார்ப்புடன் வந்திருக்கும் படம். தந்தை பாசத்தினையும், ஒரு நடுத்தர குடும்பத்தில் குடும்ப தலைவன் படும் பாடுகளையும், கஷ்டங்களையும், சின்ன சின்ன சந்தோஷங்களையும், உணர்வு புறமாக சொல்லியிருக்கும் படம். கதை ராமலிங்கம் (சேரன்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தந்தையினைப் பார்க்க புறப்படுவதிலிருந்து ஆரம்பிக்கிறது. கார் முன்னே செல்ல, ராமலிங்கத்திற்கு நினைவுகள் பின்நோக்கி செல்கின்றன.

உணர்வுபூர்வமாக, சென்டிமெண்டினையும், பாசத்தினையும், உறவு சிக்கலையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் ஒரு சேர சொல்லியிருக்கும் படம். ஒரு சராசரி தமிழனால் தன்னை சர்வ சாதாரணமாக பொருத்திக் கொள்ளும்படியான கதைக்களம். ராமைய்யா (ராஜ்கிரண்), சாரதா (சரண்யா) தம்பதிகளுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். அவர்களை எப்படி வளர்ந்து, பெரியவர்களாகி, சேர்ந்து வாழ்ந்து, பிரிந்து, சிக்கல்களை சந்தித்து, பின் தந்தையின் இறப்புக்கு ஒன்றாக இணைகிறார்கள் என்பது தான் கதை. சேரனின் மிகப்பெரிய பலம் காட்சியமைப்புகள். இயக்குநர் சேரன் ஜெயிக்கிறார். ஆனால், நடிகர் சேரன் ஒவர் சென்டியாக இருக்கிறார். காதலை சொன்னால் அழுகிறார். நண்பர் உதவினால் அழுகிறார். காதலியோடு அழுகிறார். தந்தையினைப் பார்த்து அழுகிறார். அழுத மாதிரியே படம் முழுக்க பேசுகிறார் சேரன். உணர்வுப் பூர்வமாக நடிக்க வேண்டியதிற்கு படமுழுக்க அழவேண்டியதில்லை.

படத்தில் அத்தனை பேரையும் அசரடிப்பவர் ராஜ்கிரண். ஒரு நடுத்தர அச்சக முதலாளியாய் அச்சு அசலாய் கண்முன்னே நடமாடுகிறார். hats off ராஜ்கிரண். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அவரின் மேக்கப் கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறது. பிள்ளைகளை கொஞ்சுவதிலாகட்டும், தண்டல்காரரிடம் கெஞ்சுவதிலாகட்டும், மூத்த மகன் வீட்டில் பங்கு கேட்கும் போது பதறுவதாகட்டும், சேரன் குழந்தையினை தன் மனைவி தூக்குவாளா என்கிற எதிர்ப்பார்ப்பும், பதைபதைப்பும் கொண்ட பார்வையாகட்டும், மனிதர் வாழ்ந்திருக்கிறார். தமிழில் குணச்சித்திர நடிகர்கள் வெகு குறைவு. எஸ்.வி.ரங்கராவ், நாகையா அளவிற்கு இன்று யாருமில்லை. எஸ்.வி.ஆர் அளவிற்கு இல்லாமல் போனாலும், ராஜ்கிரணின் அடையாளம் மண்ணின் அடையாளம். நாக்கும், வாக்கும் செத்துப் போகாத, வெள்ளை மனசு கிராமத்து மண்ணின் முகம். இந்த படத்தின் மூலம் நிறைய படங்கள் தேடிவரும் வாய்ப்புகளதிகம்.

சாரதாவாக சரண்யா. பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு பதினைந்து ரூபாய்க்கு நடித்திருக்கிறார். தமிழில் அம்மா கதாபாத்திரங்களைப் பொருத்தமாக பண்ணுவதற்கு சில பேர்கள் தான் இருக்கிறார்கள். பணக்கார அம்மா அம்பிகா, வாஞ்சையுடன் கொஞ்ச கலைராணி, கொஞ்சம் இளைமையான நடிகர்களுக்கு ரேவதி,ராதிகா என்ற வரிசையில் அச்சு அசலான கிராமத்து அம்மாவினை கண் முன் நிறுத்துகிறார் சரண்யா. பற்களில் கொஞ்சம் காவியடித்திருக்கலாம். மண்ணிற மேக்கப்பில் வெண்ணிற பற்கள் கொஞ்சம் அன்னியமாய் இருக்கின்றன, அதுவும் வயதான காலத்தில். எண்ணெய் தேய்த்து விடும் பாசமான அம்மா. தன் மகன்கள் ராஜ்கிரணை எதிர்த்து பேசும் போது அவர்களை அடிக்கும் ஆவேசம், தனக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு குழந்தையுடன் வரும் சேரனை பார்க்காத வைராக்கியம், தன் பேத்திகளோடு கொஞ்சம் போது இருக்கும் பாசம் என பஞ்சம் வைக்காமல், சும்மா வந்து போகாமல் நிலைத்திருக்கிறார். அதுவும், வயதாக, வயதாக தளர்வான ரவிக்கைகள், ரவிக்கைக்கும் புடவைக்கும் சம்பந்தமில்லாத நிறங்கள் என இயக்குநர் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். ஒரு காட்சியில் மருத்துவமனையிலிருந்து நடந்து வருவார், அதில் காலை அகட்டி மெதுவாக ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து நடப்பார். ஒரு அசாதாரணமான நடிகையின் அடையாளமது. obeservation to the core.

ஆச்சர்யமுட்டும் இன்னொருவர் ஒரு புதுமுகம். சேரனின் அண்ணியாக வந்து கலக்கியிருக்கிறார். அசலான மதுரை பெண்ணின் முகம். மாமியாரின் பேச்சுக்கு எதிரே பேசாமல்,அதை சமயம் குமைந்துக் கொண்டே கணவரிடம் புகார் சொல்லி தனிக் குடித்தனத்திற்கு அடித்தளம் போடும் போதும், வருடங்கள் கழித்து ராஜ்கிரண் குடும்பத்தோடு அவர்களின் வீட்டுக்கு வரும்போது தண்ணீரைக் கொண்டு வந்து சட்டென்று வைத்து விட்டு சமையலறையில் புகுந்துக் கொள்ளும் போதும், எனக்கு தெரிந்த நிறைய பெண்கள் நினைவில் வந்து விட்டுப் போனார்கள்.

சேரனின் காதலி / மனைவியாக புதுமுகம் பத்மப்பிரியா. அடுத்த படத்தில் பேசலாம். கொஞ்சம் புஷ்டியாய் அந்த கால ப்ரியா ராமன் alias ப்ரியா ரஞ்சித் போல தெரிகிறார். கொஞ்சம் பெரிதான கண்களில் பேச முயன்றிருக்கிறார். better luck next time. கொஞ்சமாய் வந்தாலும், அச்சகத்தில் வேலை செய்யும் இளவரசு நெஞ்சில் நிற்கிறார்.

"நீ பொறக்கும்போது காசுக்கு நான் அலைஞ்சது ஞாபகமிருக்கிறது. நீயும் அப்படிதானே அலைஞ்சிருப்பே. அதனால தான் பார்த்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்" என சொல்லாமல் ஒடி வந்த மகனுக்கு குழந்தை பிறந்ததையொட்டி பார்க்கும் போது சொல்லும் வசனத்திலும், "என்னடா இது, அடுப்பு மேல உட்கார்ந்துட்டு போற மாதிரி இருக்கு" என்று சரண்யா, நகர வெஸ்டர்ன் டாய்லெட்டினை சொல்லும்போதும் வசனகர்த்தா சேரன் பாராட்டுக்குரியவராகிறார். கொடுக்கப்பட்ட வேலையினை கனக் கச்சிதமாக செய்திருக்கிறார்கள் பிற கதாபாத்திரங்கள். தண்டல்காராராக வருபவர், சேரனின் அச்சகத்தின் முதலாளி, சேரனின் சென்னை நண்பர், சேரனின் அண்ணனாக வருவபர், பத்மபரியாவின் பாட்டி, தந்தை என எல்லாரும் அருமையான தேர்வுகள். சாதாரணமாக இவ்விதமான micro details எல்லாம், கமல், மணிரத்னம், சங்கர் படங்களில் பார்க்க முடியும். சமீபத்தில் இதனை அமீரின் படத்திலும் (ராம்), இந்த படத்திலும் பார்க்கும்போது தமிழ் சினிமா இயக்குநர்கள் மாறி வருகிறார்கள் என்பதன் அடையாளம். இயக்குநர் சேரன் நிறையவே மாறியிருக்கிறார். பிரச்சாரங்களும், கருத்து சொல்லுதலும் மாறி, உணர்வுப்பூர்வமான ஒரு இயக்குநனனாக தன்னை மாற்றிக் கொண்டு இருக்கிறார். கதை 1970களில் ஆரம்பிக்கிறது. அதற்கேற்றாற்ப்போல் ஒவ்வொரு காலக்கட்டங்களில் அதற்கு ஏற்றாற்ப் போல சினிமா போஸ்டர்கள், ரேடியோக்களில் ஒலிக்கும் பாடல்கள், உடை தேர்வுகள் என்று ஒவ்வொரு சின்ன details எல்லாம் மிக கவனத்துடன் சிரத்தையுடன் செய்திருக்கிறார்.

உணர்வுகள் பலம். கதை ஒரு தகப்பனின் வாழ்க்கைப் பயணம். ஆனாலும், நிறைய படங்களில்,கதைகளில் கேட்ட கிளிஷேகள் படத்திலுண்டு. தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு சில குறைபாடுகளுடன், நிறைவாக பார்க்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.

இந்த படத்திற்கு ஆரம்பிக்கும் போது "டூரிங் டாக்கீஸ்" என்று பெயரிருந்தது. அப்போது நான் கேட்ட செய்தி Cinema Paradiso வின் தமிழாக்கம் போல இருக்குமென்று இருந்தது. நல்லவேளை சேரன் தப்பிவிட்டார் ;)

படம்: தவமாய் தவமிருந்து
நடிகர்கள்: ராஜ்கிரண், சரண்யா, சேரன், பத்ம பரியா, இளவரசு
இசை: சபேஷ்-முரளி
கதை, திரைக்கதை, இயக்கம்,வசனங்கள்: சேரன்

Comments:
தங்களுடைய அலசலுக்கு நன்றி. படம் பார்த்த உணர்வு.கட்டாயம் பார்க்கக்கூடியத் திரைப்படமாக தான் இருக்கும்.

"சேரன்" இயக்கிய (அ) நடித்த அனைத்துப் படங்களுமே உணர்வு பூர்வமான திரைப்படங்கள் தான். "அழுகை" யில் உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையும் உள்ளது.அதாவது காதலில் தோல்வியுற்றல், நண்பனின் பிரிவு, தந்தையுடனான மனக்கசப்பு என்று பல வகை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான உணர்வு. ஆனாலும் நாம் மேற்கத்தியர் அல்லவே அனைத்தையும் "பாவங்களால்" மட்டுமே காட்டுவதற்கு!

நன்றி
சத்யா
 
நாராயணன்,வணக்கம்!சேரனின் படத்தை ஒன்றும் விடாமல் பார்ப்பது என் விருப்பம்.முன்னைய மணிரத்தினத்தின் படத்தையும் அப்படியே.இப்போது இப்படம் குறித்த தங்களின் இந்த விமர்சனமானது நிச்சியம் சேரன் இன்னொரு வெற்றிப்படம் தந்துள்ளாரென நிரூபிக்கிறது.சேரன் வென்றாகவேண்டும்.தமிழ்ச் சினிமாவை-மாற்றுச்சினிமாவை இவரைப்போன்றவர்களே செழுமைப்படுத்த முடியும்.அந்தவகையில் சேரன் வெற்றிபெறுவது எனக்கு மகிழ்ச்சியானது.நன்றி உங்கள் பதிவுக்கு.

அன்புடன்

ஸ்ரீரங்கன்
 
சூப்பர்
சீக்கரம் படம் பார்க்க தூண்டறீங்க தோழர்...நன்றிகள் விமர்சனத்திற்கு
ஸ்ரீஷிவ்...:)
 
//ஆனால், நடிகர் சேரன் ஒவர் சென்டியாக இருக்கிறார். காதலை சொன்னால் அழுகிறார். நண்பர் உதவினால் அழுகிறார். காதலியோடு அழுகிறார். தந்தையினைப் பார்த்து அழுகிறார். அழுத மாதிரியே படம் முழுக்க பேசுகிறார் சேரன். உணர்வுப் பூர்வமாக நடிக்க வேண்டியதிற்கு படமுழுக்க அழவேண்டியதில்லை.//

ஆமாங்க. ஆமாம். எனக்கு சேரன் படத்தில் பிடிக்காத விஷயம் இது. ஓவராக "செண்டியை" போட்டு தாக்கு தாக்கு என்று தாக்குகிறார். இந்தப் எல்லா ஸ்டில்லையும் பாருங்கள்..எல்லாவற்றிலும் ரொம்..ம்..ம்ப ஃபீலாகி, கண்ணை மூடிக்கொண்டு. கவிழ்ந்த U போல வாயை வைத்துக் கொண்டு..ச்..ச்..ச்..எனக்கென்னமோ தொட்டதற்கெல்லாம் செண்டியாகும்/ அழுகிற ஆண்களைக் கண்டால் எரிச்சலாக இருக்கிறது. இன்றைக்கு இளைஞர்கள் இப்படியா இருக்கிறார்கள்..??
 
பதிவுக்கு நன்றி நண்பரே. முதல் பத்தியைப் படித்து... சற்றே கதையைப் பற்றி பேச ஆரம்பித்ததால் - அப்படியே விட்டு வைத்திருக்கிறேன். இங்கு திரையரங்கு செல்ல காத்திருக்கிறோம். ABCD , ஆணை என்ற சொதப்பல்களையெல்லாம் வெளியிட்டு - தவமாய் தவமிருந்து இன்னும் வரலை.

7 மணி நேரம் எடுத்து, கஷ்டப்பட்டு 4 மணி நேரத்துக்கு குறைத்து இரண்டு இடைவேளை என்றெல்லம் எழுதியிருந்தார்கள்!!?
 
Dear Narayanan,
Very Glad to see the hot review.
Looking forward to see the movie.
Cheran really deserves the success as he is trying to dish out something different.

Regards,Arun

P.S:- I saw your post on Short films, Will go thru it again and either try to post a feedback or will write a separate post.
 
அப்ப படம் பெங்களூர் வந்தா கண்டிப்பா பாக்கனும்.
 
அடேங்கப்பா! நம்மைப் போல சேரன் ரசிகர்கள் நிறைய இருக்கிறார்கள் போல.

அன்பு,
இந்த வாரம் கடைசியில போட்டா நல்லது..நானும் வந்து பாத்துடுவேன்.
 
உலக தரத்துக்கு படம் எடுப்பாரு சேரன் என்பதை
இதன் மூலம் மறுபடி நிரூபிச்சிட்டாருன்னு நினைக்கிறேன்.

நன்றி நாராயணன்

ஆமா பாடல்கள் யாருன்னு எழுதலியே
 
நாரயணன்
சேரன் ஜெயிக்க வேண்டுமே என்று பயந்து கொண்டு இருந்தேன்.
தமிழ் திரை உலகில் பாரதிராஜாவிற்கு பிறகு சேரன் பேசபட வேண்டும்.
பாரதி கண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப் பிறகு இந்த படமும் வெற்றி
பெற்றதில் அளவில்லா மகிழ்ச்சியே. அமெரிக்காவில் அடுத்தவாரம் இந்த படம்
அதுவரை என் மனம் பொறுக்கவில்லேயே? உங்களுடைய உடன் மிக தெளிவான
விமர்சனத்திற்கு என் நன்றிகள் பல.
மயிலாடுதுறை சிவா...
 
பார்த்துட்டுச் சொல்றேன் நாரயணன்.
 
நல்லா ரசிச்சு படம் பார்த்திட்டு நல்லதொரு விமர்சனம் எழுதியிருக்கீங்க... நானும் simple-a எழுதிருக்கேன்... படிச்சுட்டு சொல்லுங்க

http://kaka-priyan.blogspot.com/
 
ரசித்த விமர்சனம். நன்றி நாராயண்
 
இந்தப்பதிவுக்கும், உங்களுக்கும் சம்பந்தமில்லாத ஒரு உருப்படாத சேதி:)

சிங்கை இலக்க ஊடகத்துறையில் அடுத்த பத்தாண்டுகளுக்கு ஒரு பில்லியன் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. (ஆனால் அதிலிருந்து 10 பில்லியன் வருமானத்தை எதிர்பார்க்கிறது). உலக இணையவிளையாட்டு விழாவை வெற்றிகரமாக இங்கு நடத்தி முடித்த கையோடு இது ஒரு அடுத்த முயற்சி. வீடியோ விளையாட்டு The Sims அல்லது The Shrek போன்ற முழுமையான திரைப்படத்தை 2018க்குள் 'Made in Singapore" என்று வெளியிடவேண்டுமென்பது குறிக்கோள். இதற்கு வெளிநாட்டிலிருந்து இந்த துறையில் உள்ள பள்ளிகளையும் (இங்கு பயிற்றுவிக்க), இங்கு வந்து தயாரித்து 'Made in Singapore" வெளியிடும் நிறுவங்களையும் வரவேற்கிறது. அமைச்சரின் முழு உரை... . இந்த நிதியை நிறுவகிக்கப்போகும் சிங்கையின் பொருளாதர மேம்பாட்டு மையத்தின் இணையத்தளம்
 
தங்கள் விமர்சனத்துக்கு நன்றி.

HDV யில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட திரைப்படம் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.
தகவலுக்கு நன்றி.

அன்புடன்
அஜீவன்
சுவிற்சர்லாந்து
 
//இயக்குநர் சேரன் ஜெயிக்கிறார். ஆனால், நடிகர் சேரன் ஒவர் சென்டியாக இருக்கிறார்.//
//ஒரு அசாதாரணமான நடிகையின் அடையாளமது.//

மிகவும் சரி.

//obeservation to the core.//

உங்கள் அவதானிப்பும் பாராட்டத்தகுந்தது.
 
Always I prefer to see Cheran's flim because of quality and different from other masala movies.
So went on first day for first show and enjoyed each and every frame..Movie is really impressed and like you said, the B,C,D filmgoers doesn't see very small technical faults..
I prayed a lot for a success and it did the same in box-office also

One suggestion/correction
Name of rajkiran in movie is Muthiah..not Ramaiyah..
 
Good review Narain!!
 
//"அழுகை" யில் உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையும் உள்ளது.அதாவது காதலில் தோல்வியுற்றல், நண்பனின் பிரிவு, தந்தையுடனான மனக்கசப்பு என்று பல வகை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான உணர்வு. ஆனாலும் நாம் மேற்கத்தியர் அல்லவே அனைத்தையும் "பாவங்களால்" மட்டுமே காட்டுவதற்கு!//

பாணியை உருவாக்க வேண்டியது இயக்குனர்களின் கடமை. சேரனிடம் அதை எதிர்பார்ப்பதில் தவறில்லையே...ஆண்கள் அழுவது போல(அதுவும் குலுங்கி குலுங்கி)இருப்பது கஷ்டமாகத்தாங்க இருக்கிறது...
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]