Dec 5, 2005

நவரசா - அரவாணிகளின் உலகம்

'டெரரிஸ்ட்', 'மல்லி' போன்ற குறும்படங்களுக்கு பின் மீண்டும் சந்தோஷ் சிவன். இந்த முறை 'நவரசா'. மிகவும் கவித்துவமான தலைப்பு. அரவாணிகளின் வாழ்க்கையையும், கூவாகம் அரவாணிகள் திருவிழாவும் தான் மையக் கரு. ஒரு 13 வயது பெண்ணின் பார்வையில் அவளின் சித்தப்பா ஒரு அரவாணி என்கிற முடிச்சினை வைத்துக் கொண்டு நகர்கின்ற கதை. பல உலக திரைப்பட விழாக்களில் பாரட்டினைப் பெற்றிருக்கும் படம். 3rd gender என்று அழைக்கப்படும் இவர்களைப் பற்றி தமிழில் எத்தனை படங்கள் வந்திருக்கின்றன என்கிற தகவல் என்னிடத்தில் இல்லை. ஆனால் உலகளவில் transgender பற்றிய படங்கள் நிறைய வந்திருக்கிறது. நான் கூட மேதமே சாத்தா என்கிற ட்ரான்ஸ்ஜென்டர் கலைஞனைப் பற்றிய ஒரு படத்தின் பதிவினை எழுதியிருக்கிறேன்.

மல்லியில் பார்த்த அதே குட்டிப் பெண் சுவேதா தான் இதில் முக்கியமான கதாபாத்திரம். நகரத்தில் வசிக்கும் படு சுட்டியான பெண் சுவேதா. தன் வழுக்கை தலை அப்பா, லேடீஸ் கிளப் அம்மா, ஒரு "மார்க்கமான" சித்தப்பா", மீல்ஸ் & பூன்ஸ் படித்து கேள்வி கேட்கும் சிறுவன் இவர்களோடு சென்னையில் இருக்கிறாள். கொஞ்சம் வழக்கமான சங்கதிகள் முடிந்தபிறகு, பாட்டு பாடி, டான்ஸ் ஆடி, ரத்தம் வெளிப்பட்டு பூப்படைகிறாள். வழக்கமான மஞ்சள் நீராட்டு விழா சடங்குகளுக்கு பிறகு மூதாதையர்களின் நகைகளை அணிவிக்கிறார்கள். அந்த நகைகளை எடுத்துக் கொண்டு சித்தப்பா கெளதம் வீட்டை விட்டு வெளியேறுவதில் கதை ஆரம்பிக்கிறது. சித்தப்பாவினை பின் தொடரும் சுவேதாவிற்கு காத்திருக்கிறது பெரும் அதிர்ச்சி. அரவாணிகளின் வீட்டில் சேலை, நகைகளுடன் மீசை இல்லாத சித்தப்பாவினைப் பார்த்து அதிர்கிறாள். இதற்கிடையில் சுவேதாவின் பெற்றோர்கள் கும்பகோணத்திற்கு ஒரு கல்யாணத்திற்கு செல்கிறார்கள். இப்போது வீட்டில் ஆணாகவும், மனதில் பெண்ணாகவும் இருக்கும் சித்தப்பாவும், அது தெரிந்த குட்டிப் பெண்ணும். கேள்வி கேட்கும் சுவேதாவிடம், கெளதம்(மி) அரவானின் கதையை சொல்லத் தொடங்குகிறாள்.

மஹாபாரத போரில் வெற்றி பெற ஒரு உயரிய ஆண்மகனை பலி கொடுக்க வேண்டும். அந்த உயரிய ஆண்மகன் லிஸ்டில் வருபவர்கள், பகவான் கிருஷ்ணர், அர்ஜூனன் மற்றும் அர்ஜூனனுக்கும் (அல்லது கிருஷ்ணனுக்கும்) நாககன்னிக்கும் மகனாக பிறந்த அரவான். கிருஷ்ணரும் அர்ஜுனனும் போரினை நடத்த வேண்டுமென்பதால், பலியாக சம்மதிக்கிறார் அரவான். ஆனால், பிரம்மசாரியான அவர் இல்லற சுகத்தினை அனுபவித்து இறக்க ஆசைப்படுகிறார். கட்டியவுடனே விதவையாக எந்த பெண்ணும் சம்மதிக்க மாட்டார் என்பதால், கிருஷ்ணரே மோகினி உருவமாக அவதாரமெடுத்து அரவானை மணக்கிறார். முதல் இரவு முடிகிறது. அரவான் பலி கொடுக்கப்படுகிறார். மோகினி விதவையாகி, தன் வளையல்களை உடைத்து அழுகிறாள். அரவாணிகள் தங்களை மோகினியாக உருவகிக்கிறார்கள். கூவாக திருவிழாவில் முதல் நாள் அரவானை எண்ணிக் கொண்டு தாலி கட்டிக் கொள்கிறார்கள். மறுநாள், தாலி அறுத்து விதவையாகிறார்கள். மோகினியான கிருஷ்ணன் ஆணிலிருந்து பெண்ணாகி வாழ்வினை தொலைத்தவன்(ள்), அரவாணிகளின் இன்றைய வாழ்வியல் குறீயிடு இது.

இவையெல்லாம் அந்த குட்டிப் பெண்ணுக்கு புரியவில்லை. பெண்ணாய் எப்படி ஒரு ஆண் உணர முடியும் என்று எதிர்க்கேள்வி கேட்கிறாள். மறுநாள் காலை கெளதமி அவளை விட்டு விட்டு கூவாகத்திற்கு கிளம்புகிறாள். தன் சித்தப்பாவினை தேடி தன்னந்தனியாக சுவேதா கூவாகத்திற்கு பயணப்படுகிறாள். வழியில் பாபி டார்லிங் என்றொரு வடக்கத்திய அரவாணியின் துணை கிடைக்கிறது. கூவாகத்திற்கு முன் நடக்கும் விழுப்புரம் அரவாணிகள் அழகிப் போட்டியையும், கூவாகத் திருவிழாவையும் முழு முச்சாக காட்டி, கடைசியில் தன் சித்தப்பாவினை கண்டு பிடிக்கிறாள். இருவரும் சென்னை வருகிறார்கள். வீட்டில் குழப்பம் வெடிக்கிறது. படம் கெளதமி வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், சுவேதாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல தொலைபேசியில் அழைப்பதாகவும் முடிகிறது. ஒரு குடும்பத்தில் அரவாணிகள் இருந்தால், அந்த குடும்பம் எப்படி அதனை அணுகுகிறது என்பதையும், அரவாணிகள் எப்படி சமூகத்தால் பார்க்கப்படுகிறார்கள் என்பதையும் படு யதார்த்தமாய் ஆங்காங்கே கொஞ்சம் பிரச்சார நெடியுடன் சொல்லியிருக்கிறார்கள்.

முதலில் இந்த கதைக்களனை எடுத்து, இத்தனை நிஜ அரவாணிகளை வைத்து, நிஜ கூவாகத்தினை படம்பிடித்ததற்கு சந்தோஷ் சிவனைப் பாராட்டலாம். யாரும் தொடாத, தொட்டாலும், ஆழமாக சிந்திக்காத களமிது. ஆனால், நிறைய நவீன நாடகங்களை பார்த்திருப்பார் போல இருக்கிறது. ஒவ்வொரு முறையும் கெளதமி "நான் யார்? யார் நான்?" என்றெல்லாம் வெறித்த பார்வை பார்த்தபடி சுவரினைப் பார்த்து கேள்வி கேட்பது சப்-டைட்டில் படித்து படம் பார்க்கும் நிறைய பேருக்கு புரியவில்லை. ஆனால் படமுழுக்க நடைமுறை சிக்கல்கள் மிக லாவகமாக கையாளப்பட்டிருக்கின்றன. தன் சித்தப்பாவினைத் தேடி, விழுப்புரம் சாலையில் நடக்கும்போது, பின்னால் இரண்டு அரவாணிகள், அதில் ஒருத்தி அழுதுக் கொண்டே போவாள். பிண்ணனியில் இன்னொரு அரவாணியின் குரல் "இது என்னடி புதுசா! இதுக்குப் போய் இவ்வளவு அழறே" என்று கேட்கும். இந்த ஒரு வசனத்தில் அரவாணிகளின் சமூக நிலை வெளிப்படும். 90% அரவாணிகள் தமிழ்நாட்டில் பாலியல் தொழிலாளிகளாய் தான் பிழைப்பை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதில் சமூகத்தின் சீண்டல் வேறு. கொஞ்சம் நீளம் அதிகமாக இருந்தாலும், விழுப்புரம் அரவாணிகள் அழகிப் போட்டியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒரு அரவாணி சொல்லும் பதில் படு யதார்த்தம்.

நடைமுறை வாழ்க்கையில் ஒவ்வொரு அரவாணியும் சந்திக்கும் எல்லா சிக்கல்களையும் திணிக்காமல் போகிற போக்கில் சொல்லியிருப்பார். ஒரு காட்சியில் இரண்டு பேர்கள், ஒரு அரவாணியை "நீ தான் மிஸ்.கூவாகமாச்சே, இங்கே ஆடூறீ!" என்று மிரட்டுவதையும், தங்கள் வாழ்வியல் சங்கடங்களைத் தாண்டி, கூட்டமாய் இருக்கும்போது ஒவ்வொரு அரவாணியும் அவரவர்களை செல்லமாய் சீண்டுதலும் என்று லேசாக ஆங்காங்கே பிரச்சார தொனி இருந்தாலும், தெளிவாக சொல்லியிருக்கிறார். தமிழ்நாடு அரவாணிகள் சங்க தலைவி திருமதி. ஆஷா பாரதி, ஆஷா பாரதியாகவே படத்திலும் வந்திருப்பார். பீகாரில் ஒரு அரவாணி இறந்தால், அந்த பிணத்தினை செருப்பாலேயே அடித்து சொல்வார்களாம் "அடுத்த ஜென்மத்தில் இப்படி பிறப்பாயா! பிறப்பாயா!" என்று நன்றாக அடித்து எரிப்பார்களாம். ஆஷா பாரதி இதை சொல்லும் போது பகீரென்றது. எந்த மாதிரி சமூகத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை முகத்தில் அறைந்தால்போல் சொல்லும் காட்சியது.

பலவிதமான ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தாலும், சுவேதா என்கிற அந்த குட்டிப்பெண்ணின் பாத்திரத்தில் நிறைய காட்சியியல் ரீதியான பிழைகள். சென்னையில் படிக்கும், மீல்ஸ் & பூன்ஸிற்கு பதில் சொல்லும் பெண், எப்படி ஆங்கிலத்தில் பேசாமல் பாபி டார்லிங்கோடு தமிழில் மட்டும் பேசுவாள் ? மாட்ரிமோனியலில் விளம்பரம் தருவேன் என்று ஜோக்கடிக்கும் அப்பாவிற்கும், லேடிஸ் கிளப் செல்லும் அம்மாவிற்கும் எப்படி பெண் பாவாடை தாவணியில் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்தது ? இப்படி படமுழுக்க நிறைய இடங்களில் சுவேதாவின் பாத்திர அமைப்பு இடர வைக்கிறது. ஆனாலும், துறுதுறுவென இருக்கும் ஆரம்பக்காட்சிகளில் சுவேதா சபாஷ் பெறுகிறாள்.

இந்த படத்தில் நடித்தவர்கள் எல்லோருமே நிஜ அரவாணிகள். சுவேதாவின் சித்தப்பாவாக வருபவர் குஷ்பு என்கிற அரவாணி. படம் முடிந்துப் போடும் டைட்டில் கார்டில் படத்தில் நடித்த அரவாணிகள் இப்போது என்ன செய்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். குஷ்பு மும்பையில் ஒரு தன்னார்வ நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். பாபி டார்லிங் ஒரு டான்ஸ் பாரில் நடனமாடுகிறாள். ஆஷா பாரதி சென்னையில் அரவாணிகள் சங்க தலைவராக அவர்களின் உரிமைக்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

யாரும் கையிலெடுக்காத பிரச்சனையினை துணிந்து எடுத்து குறும்படத்திற்கும், கமர்ஷியல் சினிமாவிற்கும் இடையில் யோசித்து சொதப்பியிருந்தாலும், படம் மனதினை கனக்க வைக்கிறது. சென்னையிலிருப்பவர்களுக்கு - சத்யம் காம்பெக்ளசில் ஸ்டுடியோ-5-இல 7 மணி காட்சியாக நடைபெறுகிறது. தவறாமல் இந்த வார வெள்ளிக்கிழமைக்குள் பார்த்து விடுங்கள். அப்புறம் படத்தினை தூக்கிவிடுவார்கள். நேற்று என்னோடு இயக்குநர் சந்தான பாரதியும் படம் பார்த்தார். "அடுத்து எப்ப சார், குணா மாதிரி ஒரு கமல் படம் பண்ண போறிங்க" என்று கேட்கலாம் என்று நினைத்து அப்பாவாக நடித்துக் கொண்டிருக்கும் அவர் பிழைப்பில் மண் அள்ளிப் போடுவானேன் என்று கேட்காமல் விட்டேன் ;)

படம்: நவரசா
நடிகர்கள்: சுவேதா, குஷ்பு, ஆஷா பாரதி
இயக்குநர்: சந்தோஷ் சிவன்
தயாரிப்பு: சந்தோஷ் சிவன் பிலிம்ஸ் & ஹாண்ட்மேஃட் பிக்சர்ஸ்

Comments:
இணையத்தில் எங்காவது பார்க்கமுடியுமா?
 
Thanks for the review, Naryan. Kudos indeed to Sivan for his effort.

More on the people of the third sex - Tritiya Prakriti - from the Hindu view point, here:

http://www.galva108.org/Tritiya_prakriti.html

Thanks.
 
தங்கள் விவரிப்பே படம் பார்த்த உணர்வு தந்தது. இங்கே மும்பையில் அவர்களை ஒவ்வொரு ட்ராஃபிக் ஜாமிலும் காணலாம். பெரும்பாலும் தமிழர்கள் தான். வணிகப் படங்களில் எப்போதுதான் அவர்களை நக்கலடிக்காமல் காட்டப் போகிறார்களோ ?
 
ஒரு இறுக்கமான 'சிக்'கென்ற ஒரு பதிவு. நன்றி. நவரசா-வுக்கு சந்தோஷ் சிவனுக்கு ப் பாராட்டுக்கள். அவர் படங்களை இதுவரை பார்க்க இயலாமல், இணையத்தில் பலர் சிலாகிப்பதையே கேட்கவேண்டியிருக்கிறது:(

நன்றி.
 
இந்தப்படம் அரவாணிகளின் வாழ்வியல் பிரச்சினைகளை ஆழமான கண்ணோட்டத்தில் அணுகாமல் மேலோட்டமாக அணுகியிருப்பதாக ஒரு பத்திரிகை விமர்சித்திருந்தது. தமிழில் நவீன இலக்கியத்திலும் அரவாணிகளைப் பற்றி வந்த படைப்புகள் மிக குறைவே. (சு.சமுத்திரத்தின் வாடா மல்லி) என்றாலும் இது போன்ற இன்னொரு தளத்தில் இயங்கும் படங்கள் பார்வையாளர்களால் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பமும்.
 
சுரேஷ், அது ஒரளவுக்கு உண்மை. சந்தோஷ் சிவன் அவர்களின் வாழ்வியல், சமூகவியல் பிரச்சனைகளை கொஞ்சம் மேலோட்டமாக தான் சொல்லியிருப்பார். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இம்மாதிரியான படங்கள் வந்தாலேயொழிய, அத்தகைய படங்களை ஆதரித்தாலேயொழிய சமூகம் அரவாணிகளை கேலி கண்ணோட்டத்துடன் தான் பார்க்கும்.
அனைவருக்கும் நன்றிகள்.
 
கார்த்திக், இணையத்தில் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. மணியன் எனக்கொரு தனி அஞ்சல் அனுப்புங்கள். பேசுவோம்.
 
நேர்மையான விமர்சனம்
நன்றி நாராயணன்

பாராட்டுகள் சந்தோஷ்சிவனுக்கு.

ஒரு அரவாணி பல போராட்டங்களுக்குப் பிறகு பரதநாட்டியத்தில்
முத்திரை பதித்த பெண்ணாக உள்ளார்.

அரசுபணிகளுக்கான இடஒதுக்கீடுக்கு அரவாணிகள் சங்கத்திலிருந்து போராட்டம் நடத்தினர்.

அரசியல் பதவிக்கு ஒருவர் வெற்றி பெற்றார் என்று நினைவு.
 
குஸ்பு ஒரு அரவாணி என்று தெரிந்ததும் மனசுக்குள் சிரிப்போ சிரிப்பு. பேசாமல் தங்கர் பச்சான் இப்படத்தை இயக்கி இருக்கலாம்.
 
நாராயணன், நல்ல பதிவு. படத்தை பார்த்துவிட்டு இன்னும் எழுதலாம் என்று நினைக்கிறேன். 10 வருடங்கள் முன்னால் கூவாகம் சென்ற என் அனுபவத்தையும்.

கூவாகம் போயிருக்கிறீர்களா? இந்த முறை போக விருப்பமா?
 
if time permits plz visit my blogspot http://livingsmile.blogspot.com
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]