Dec 2, 2005

உலகின் தலைசிறந்த தேநீர்

சென்னையில் மழை பெய்துக் கொண்டிருக்கிறது. பெய்துக் கொண்டிருக்கிறது என்பது மிக சாதாரணமான வாக்கியம். ஒரே சீராக, தான் பெய்யாமல் இருந்த காலக்கட்டங்களுக்கும் சேர்த்து வைத்து வட்டியும் முதலுமாய் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. காலையில் மழை அதிகமாக இருந்ததால் என்னுடைய வண்டியை ஒரம் ஒதுக்கிவிட்டு மக்களோடு மழைக்கு ஒதுங்கினேன். மழை தண்ணீர் வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது. வாகனங்கள் வெள்ளத்தை கிழித்துக் கொண்டு முன்னேறிச் செல்கின்றன.

கட்டிட வேலைகள் பெரும்பாலானவை இங்கே அப்படியே நிற்கின்றன. தினக் கூலிகள் பலருக்கும் வேலையில்லை. எல்லோரும் பிளாஸ்டிக் பைகளை தலைக் கவசமாக்கி ஒரமாய் நின்றுக் கொண்டிருந்தார்கள். இங்கே மழை பெய்தால் நிறைய பேருடைய வேலை நின்றுவிடும். அவர்களின் வாழ்க்கை என்பது மிகப் பெரிய கேள்விக் குறி. என்னோடு மூன்று துப்புரவுத் தொழிலாளர்கள் நின்று கொண்டிருந்தார்கள். இரண்டு ஆண்கள். ஒரு பெண். அந்த பெண் ஒரு தொழிலாளியின் மனைவி. எல்லோரும் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள். வேலை செய்தால் தான் சம்பளம். வேலை செய்யாவிட்டால், வேலை இல்லாவிட்டால் அன்றைக்கான கூலி கிடையாது.

அவர்களில் ஒருவர் தன் முதலாளியோ, சூப்பர்வைசருக்கோ போன் செய்தார். அவரால் தானியங்கி ஒரு ரூபாய் போட்டு இயக்கப்படும் தொலைப்பேசியில் பேசத் தெரியவில்லை. அருகே சென்று அவருக்குத் தேவையான எண்ணினைப் போட்டு பேசக் கொடுத்தேன். பேசியவுடன் முகத்தில் இருள் சூழ்ந்தது. திங்கள் வரை அவர்கள் மூவருக்கும் வேலை கிடையாது. அந்த பெண்மணியின் கண்கள் கலங்கியதை அருகிலிருந்துப் பார்க்க முடிந்தது. அவர்களின் பேச்சிலிருந்து அவர்களிடத்தில் இருக்கும் பணம் நாளை வரை தான் தாங்குமென்று தெரிந்தது. காலை உணவுக் கூட இன்னமும் அவர்கள் உட்கொள்ளவில்லை. அவர்களில் கொஞ்சம் இளையவராக தெரிந்தவரோடு பேச்சுக் கொடுத்தேன். என் கேமரா செல்லில் கொஞ்சம் புகைப்படங்கள் எடுத்து அவர்களுக்கு காட்டி கொஞ்சமாய் மகிழ்வித்தேன். அருகிலிருக்கும் டீக்கடைக்கு சென்றோம். என்னுடைய மடிக்கணினி நனையக்கூடாது என்பதற்காக ஒருவர் தன்னுடைய பாலீதின் கவரினை அதன்மீது வைத்து பிடித்துக் கொண்டார். நெகிழ்வில் வார்த்தைகள் வரவில்லை.

சூடாக, புகையோடும் டீயினோடு அவர்களின் முகங்களைப் பார்த்தேன். அந்த கண்களில் தெரிந்த நன்றியுணர்வும், நெகிழ்வும் உலகின் தலைசிறந்த இயக்குநர்களின் படங்களில் கூடப் பார்த்ததில்லை. நால்வரும் டீ குடித்தோம். என் வாழ்நாளில் நான் குடித்த மிக சிறந்த தேநீர் அதுவாக தான் இருக்கும்.பெரும்பாலான நாட்களில் அவர்களின் காலை உணவு டீ தான் என்று தெரிந்தது. ஆண்கள் இருவரும் பீடி பிடிக்க ஆரம்பித்தார்கள். எனக்கு புகை குமட்டியது என்று தெரிந்தவுடன் அந்த பெண் அவர்களை அதட்டினாள். அவர்கள் பீடியினை தரையில் தேய்த்து அணைத்து காதுகளில் செருகிக் கொண்டார்கள். நான் என்ன செய்கிறேன், கல்யாணமாகிவிட்டதா, வீடு எங்கிருக்கிறது போன்ற லோகதாய விஷயங்களைக் கேட்டுக் கொண்டார்கள். ஆனாலும், அவர்களின் வாழ்வினைப் பற்றிய கேள்விகள் தான் அதிகமாகக் கேட்டேன்.

அவர்கள் தாங்கள் தங்களின் பொருளாதார சூழல் பற்றி பெரியதாய் புலம்பவில்லை. எல்லாம் விதி விட்ட வழி என்றும், கடவுள் கண் திறப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்கள். ஏழ்மை என்பது சாபக்கேடு என்றும் அடுத்த முறை கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் நல்லது நடக்குமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்கள். குழந்தைகள் பிறந்தால் படிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணமிருக்கிறது. சொந்த ஊரின் மலரும் நினைவுகள் தான் பெரும்பாலானவை. இதனூடே என்னுடைய அலுவலகத்திலிருந்து தொடர்ச்சியாக தொலைபேசிகள். என்னுடைய வண்டியினை அங்கேயே விட்டுவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து அலுவலகம் சென்றேன்.

போகும் வழியில் ஆட்டோ ஒட்டுநர் சொன்னது "த்தா, சனியன் புடிச்ச மழை சார். ஒன் டே மேட்சு தான் காலினா, டெஸ்ட் மேட்சும் நடக்காதுன்னு நினைக்கிறேன் சார்." நின்றுக் கொண்டிருக்கும் போது அருகிலிருக்கும் ஒருவர் செல்லில் தன் நண்பரை அழைத்து எம்.ஜி.எம் வோட்காவும், வி.எஸ்.ஓ.பியும் அறையில் வாங்கி வைக்கச் சொன்னார். சிக்னலில் இருக்கும் கார்காரர்கள், சைக்கிள்காரர்களின் மீது தண்ணீரை அள்ளி தெளித்து தடுமாற வைக்கிறார்கள், ஹாரன் அடிக்கிறார்கள். சாலையில் வெள்ளமாய் ஒடுகிறது தண்ணீர். வாகனங்கள் வெள்ளத்தை கிழித்துக் கொண்டு முன்னேறிச் செல்கின்றன. கிழிந்துப் போய் கிடக்கிறது நிறைய பேரின் மனங்கள்.

Comments:
கேக்கவே ரொம்ம கஷ்டமா இருக்குங்க.. யாரை நோவதுன்னே தெரியலை
இந்த அவலத்துக்கு நானும் ( நாமும்) ஒரு காரணம்னு நினைக்கும் போது இன்னும் கஷ்டமா இருக்கு.
 
நாராயணன்
அடுத்தவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கும் போது எதிர்பார்ப்பு எதுவுமின்றி செய்யும் சில காரியங்கள் தரும் மகிழ்ச்சி எத்தனை பொருள் வந்தாலும் கிடைக்காது.
 
:-( எனக்கு மார்க்ஸை மறு வாசிப்பு செய்யவேண்டும் போல தோன்றுகிறது.
அருமையான பதிவு!
 
//அடுத்தவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கும் போது எதிர்பார்ப்பு எதுவுமின்றி செய்யும் சில காரியங்கள் தரும் மகிழ்ச்சி எத்தனை பொருள் வந்தாலும் கிடைக்காது.//

பத்மா சொன்னதுதான் என் கருத்தும்..

//கிழிந்துப் போய் கிடக்கிறது நிறைய பேரின் மனங்கள்.//

இப்படி முடித்திருக்க வேண்டாம். க்ளீஷேவாக இருக்கிறது. பதிவின் முதற்பகுதியிலேயே இந்த எண்ணம் எங்கள் மனதில் தோன்றிவிட்டதே...

-மதி
 
அவர்கள் எங்கே, இவர்கள் எங்கே?! மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி. வித்தியாசமானதொரு அனுபவத்தை மழை வழங்கியுள்ளது.
 
தல, அருமையா எழுதியிருக்கீங்க. மதி சொல்றது போல கடைசி வரி கிளிஷேவா இருக்கு.
 
'இன்னிக்கு போகட்டும், நாளையாவது நமக்கு விடியாதா?'ன்னு இருக்கற மக்களைக் காப்பத்தப்போறது யார்?

எதிர்பாராத இடத்துலே எதிர்பார்க்காமச் செஞ்ச உதவிக்கு நன்றி.
 
"என் வாழ்நாளில் நான் குடித்த மிக சிறந்த தேநீர் அதுவாக தான் இருக்கும்."

மனம் நெகிழ வைத்த வாக்கியம். மூவேந்தர்களின் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட பாரியின் இரு மகளிரும் தாங்கள் இருக்கும் கஷ்ட நிலையிலும் தங்கள் குடிசைக்கு வந்த ஔவையாருக்கு வழங்கிய கூழ்தான் தான் உண்ட கூழிலேயே சிறந்தது என்று அவர் நினைத்தார். அதை அவர் பாடலில் வெளிபடுத்தினார். பாடல் சரியாக நினைவுக்கு வரவில்லை. ஆனால் பொருள் அதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 
Nehizha Vaiththa Pathivu..NanRi
 
மனங்களை இணைப்பதற்கு தூரம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளீர்கள். "உலகின் தலை சிறந்த தேனீரை" என்னையும் பருக வைத்ததற்கு நன்றி. இம்மனம் கொண்ட இளைஞர்கள் வருங்கால இந்தியாவை நிச்சயம் நல்ல முறையில் வடிவமைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

- அன்புடன் இறை நேசன்
 
நன்றி நாராயணன்.
 
Nice one
 
"சூடாக, புகையோடும் டீயினோடு அவர்களின் முகங்களைப் பார்த்தேன். அந்த கண்களில் தெரிந்த நன்றியுணர்வும், நெகிழ்வும் உலகின் தலைசிறந்த இயக்குநர்களின் படங்களில் கூடப் பார்த்ததில்லை. நால்வரும் டீ குடித்தோம். என் வாழ்நாளில் நான் குடித்த மிக சிறந்த தேநீர் அதுவாக தான் இருக்கும்.பெரும்பாலான நாட்களில் அவர்களின் காலை உணவு டீ தான் என்று தெரிந்தது.."

மனம் பாரமாக உள்ளது நாரயணன். நடந்த சம்பவங்களை மிக அழகாக மனதில் பதியும்படி சொல்லி உள்ளீர்கள்.
இயற்கையின் சீற்றத்திற்கு முன்னால் நம் வாழ்வில் உண்மையான அர்த்தம் பல சமயம் புரியவில்லை.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]