Dec 21, 2005

கொத்து பரோட்டா

போன வாரம் முழுக்க மும்பை வாசம். இந்தியாவின் வணிக தலைநகரம். பேருதான் பெத்த பேரு. ஆனால், நிலை படுமோசம். எல்லா சாலைகளையும் தோண்டி வைத்திருக்கிறார்கள். பீஹார் தொழிலாளிகள், அவர்களின் மொழியில் ஏலேலோ ஐலேசா, தூக்கிப் பிடி ஐலேசா என்று பாடி ரிலையன்ஸ் கேபிள்களை தூக்கிக் கொண்டு போகிறார்கள். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போகும் போது வாழ்நாளில் சில நாட்கள் கண்டிப்பாக குறையும் வாய்ப்புகளதிகம். வானுயர்ந்து நிற்கும் வணிக கட்டிடங்களின் சிக்னல்களில் சின்ன குழந்தைகள் பிச்சை எடுக்கிறார்கள். சென்செக்ஸ் 9300 தாண்டினாலும், ட்ராபிக் குறைவது போல தெரியவில்லை. எல்லா நேரத்திலும் ஹாரன் சத்தம். இரவு 12.15 மணிக்கு அந்தேரி-குர்லா சாலையில் சிக்னல் வேலை செய்கிறது, எல்லோரும் வண்டியினை நிறுத்தி அடுத்த சிக்னலுக்காக காத்திருக்கிறார்கள். விமான நிலையம் செல்லும் சாலை மிக மோசம். கழிவு கால்வாய்கள் சர்வசாதாரணமாக தென்படுகின்றன. இட்லிக்கு தரும் சாம்பார் உடுப்பி ஸ்டைலில் கொஞ்சமாய் தித்திக்கிறது. எல்லா இடங்களிலும் "மாலோற்சவம்" (Shopping Malls). பேம் ஆட் லேப்ஸில் இரவு டிக்கெட் 'அபஹாரன்' 250 ரூபாய். போங்கடா என்று வெளியே வந்து விட்டேன். மால்கள் மிக பிரமாண்டமாக இருக்கின்றன. நான் பார்த்த இனார்பிட் மாலின் கார்கள் நிறுத்துமிடத்தில் ஸ்பென்சர்ஸின் இரண்டு கட்டிடங்களை நிறுவி விடலாம். எல்லா ஒட்டுநர்களும் மராட்டி பேசுகிறார்கள். டிராபிக் போலிஸ்காரர்கள் என்கிற வகையறா இருக்கிறார்களா? நான் பார்க்கவில்லை. நகரெங்கும் ரிலையன்ஸின் விளம்பரங்கள். மும்பை மாநகராட்சி 'இன்பர்மேஷன் கியாஸ்க்' என்ற ஒன்றை பெரும் சாலைகளில் வைத்திருக்கிறார்கள். நான்கு பக்கமும் மூடியிருக்கும் கியாஸிக்கில் இணைய இணைப்பு, மும்பை சாலைகள் பற்றிய தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால், கியாஸ்க்கின் உள்ளே எப்படிப் போவது என்று யாராவது எழுதினால் நன்றாக இருக்கும். இந்தியாவில் நகர புணரமைப்புக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் செலவு செய்யப் போகிறார்கள் என்று அரசு அறிவிப்பு ஒன்று சொல்கிறது. ஆனால், 30% இந்தியர்கள் இன்னும் பத்து வருடங்களில் நகரங்களில் இருப்பார்கள் என்கிற புள்ளிவிவரத்தினை வைத்துக் கொண்டுப் பார்த்தால், நிறையவே மந்தமாக இருக்கிறோமா என்கிற சந்தேகம் எழுகிறது. இது போக, எல்லா சேனல்களிலும் பாப் பாடல்கள். எல்லா ஹிந்திப் பாடல்களிலும் குறைந்தது 30 பேர் ஆடுகிறார்கள். நாயகியின் உடைகளில் இந்தியாவின் 25% வறுமைக் கோட்டு மக்களின் உடை நிலவரம் தெரிகிறது. கூட்டம் கூட்டமாக ஆடுகிறார்கள். மும்பையில் டான்ஸ் பார்கள் கிடையாதாமே ? ஆனால் எல்லா படங்களிலும், நாயகனை வசிகரிக்க, சந்தோஷப்படுத்த என்று ஏதேனும் ஒரு காரணத்தினைச் சொல்லிக் கொண்டு ஆடிக் கொண்டே இருக்கிறார்கள். என்னத்த சொல்ல. சென்னையினை நினைத்தால் வயிறெரிகிறது. இன்னமும் குப்பையான அதே சானல்கள். சானல் உலகம் மாறி விட்டது. ம்ஹூம் எப்ப டிடிஎச் வந்து.........

ஒரினச்சேர்க்கையாளர்களின் 52 வருட போராட்டம் இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் போன வருடம் நவம்பர் மாதம் இயற்றப்பட்ட Civil Partnership Act இப்போது தான் அமுலுக்கு வந்திருக்கிறது. ஒரின திருமணங்கள் இதன் மூலம் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளன. 52 வருட போராட்டத்தினை பிபிசி தளத்தில் டைம்லைன் வழியாக சொல்லியிருக்கிறார்கள். எல்டன் ஜான் இனிமேல் தனியாளாய் இருக்க வேண்டியதில்லை. இந்திய நிலை எப்படி என்பது கீழே எழுதியிருக்கிறேன்.
படிக்க - பிபிசி செய்தி

ராஜ்தீப் சர்தேஸாய் நினைவிருக்கிறதா ? என்.டி.டி.வியின் தீப்பொறி பறக்கும் நிருபர், பேட்டியாளர். என்.டி.டி.வியினை விட்டு வெளியேறி சொந்தமாக ஒரு சேனலினை ஆரம்பிக்கிறார் என்று சொல்லியிருந்தேன். புலி வருது, புலி வருது கதையாக அப்படியும் இப்படியுமாக இழுத்து ஒரு வழியாக சி.என்.பி.சி டிவி 18, டைம் வார்னர் இணைந்து சி.என்.என் ஐபிஎன் (CNN Indian Broadcasting News) என்று நாமகரணம் சூட்டி வந்து விட்டது. அமெரிக்க ஜெயா டிவியாக தான் இன்றைக்கும் சி.என்.என் தெரிகிறது. போனவாரம் இராக் தேர்தலை அவர்கள் காண்பித்த முறையிலேயே, அமெரிக்க பாசம் பொங்கி வழிகிறது. அமெரிக்க-இந்திய முகமாய் இருந்தாலும், அதிகமாய் இந்தியா தெரியுமென்றும், அமெரிக்க வர்ணம் பூசிப் பார்க்க தேவையில்லை என்றும் ஏதோ ஒரு பேட்டியில் படிக்க நேரிட்டது. பார்க்கலாம். Question Everything என்று ராஜ்தீப் கர்ஜிக்கிறார். அவ்வபோது இந்தியாவின் ஒரே உண்மையான இன் ட்ராக்டிவ் தொலைக்காட்சி என்று அவர்களின் இணையதளத்தையும் citizen journalism என்று சொல்லக்கூடிய பார்வையாளர்களின் பங்கீட்டினையும் சொல்கிறார்கள். கொஞ்சம் சுவாரசியமாக தான் இருக்கிறது. என்.டி.டி.வியில் பார்த்த பல முகங்கள் இதிலேயும் பார்க்க முடிகிறது. group resignation போலும். என்.டி.டி.வி சாயல் லேசாக அடிக்கிறது. பழைய என்.டி.டி.வியின் X Factor , இங்கே Face the Nation என்று மாறியிருக்கிறது. நேற்று பிரிட்டன் ஒரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தினை ஒப்புக் கொண்டதை வழிமொழிந்து, இந்தியாவில் என்ன நிலை என்று ஒரு பாதிரியார், ஒரு எழுத்தாளர், வழக்கறிஞர் சகிதம் விவாதித்தார்கள். பாதிரியார்கள் எந்த காலக்கட்டத்திலும் மாறமாட்டார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது : ) எங்கள் கே.கே.நகர் கேபிள் புண்ணியவானின் ஆசீர்வாதத்தில் பார்க்க முடிகிறது. ஒரு மாதம் கழித்து தான் சொல்ல முடியும். சென்னை நிருபரான ரோஷினி(ஹினி!?) மோகன் நன்றாக இருக்கிறார் ;) மோகன் அப்பா பெயராக இருக்க இன்னும் ஒரு வாரம் கழித்து பிறந்த நாள் கொண்டாடும் கர்த்தர் ரட்சிப்பாராக. பார்க்க - சி.என்.என் - ஐ.பி.என் தளம்

சிலேட்டின் நான்காவது இதழினை இப்போதுதான் படித்தேன். லக்ஷ்மி மணிவண்ணனை ஆசிரியராக கொண்டு வெளிவந்துக் கொண்டிருக்கும் பெரிய சைஸ் இதழ். லக்ஷ்மி மணிவண்ணனோடு பெரியதான அறிமுகங்கள் இல்லை. பாலா பிள்ளையின் tamil.com அலுவலகம் சென்னையிலிருக்கும் போது அதில் பணியாற்றினார். அப்போது அறிமுகம். எள்ளல், நக்கல், கட்டமைப்புகளின் மீதான கூக்குரல் என்று ரகளையான மனிதர். அடுத்த பதிவில் அவரது தலையங்கத்தில் ஜெயமோகன், எஸ்.ரா, மனுஷ்யபுத்திரன் பற்றி எழுதியவைகளை பதிகிறேன். முழுமையாக ஒப்புமை இல்லாவிட்டாலும் நச்சென்று எழுதியிருப்பதாக எனக்குப் படுகிறது.
படிக்க: சிலேட்

Comments:
//மோகன் அப்பா பெயராக இருக்க இன்னும் ஒரு வாரம் கழித்து பிறந்த நாள் கொண்டாடும் கர்த்தர் ரட்சிப்பாராக. //
;-)

சிலேட்டிற்கு சுட்டி இருந்தால் தந்துதவுக. நன்றி.
 
வறுமையின் கொடுமைய பார்த்தவன் நான்
உன் உடையில வறுமையும் வேணாமா...

ஐபிஎன் குறித்த தகவலுக்கும் நன்றி.
 
அன்பின் நாராயணன்,
மும்பைக்கு நீங்கள் மறுபடி வந்திருந்தும் சந்திக்க முடியாமல் போய்விட்டது.
மும்பை சாலைகள் இப்போது சீரமைக்கப்பட்டிருக்கின்றன. ( முன்னே எப்படியிருந்திருக்குமென சிந்திக்க தேவையேயில்லை). அந்த அழகே இப்படி.
போக்குவரத்து ஒழுங்கு என்பது கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
// அனேகமாக எல்லா ஓட்டுநர்களும் மராட்டி பேசுகிறார்கள்//
இல்லை நாராயணன். பெரும்பாலும் உ.பி, பீஹார் தான். ரயில்வே நிர்வாகம் போல , மும்பை டாக்ஸி,ஆட்டோ என்பது உ.பி பீஹாருக்கு குத்தகை விடப்பட்டிருக்கிறது.

சாலைப்பணியில் பெரும்பாலும் ஈடுபட்டிருப்பது ஆந்திரா, தமிழ்க் காரர்கள்தான். மும்பையை விட்டு கொஞ்சம் கிராமப்புறமாக, காட்டுப்புறமாக அமைக்கப்படும் சாலைகளில் சிறுவர்கள், சிறுமியர் அதிகம்.

சிலேட்டு சுட்டி கிடைக்குமா?
அடுத்தமுறை சொல்லாமலே வாங்கள். அப்போதாவது நாம் மீண்டும் சந்திக்க முடியுமென நினைக்கிறேன்!
அன்புடன்
க.சுதாகர்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]