Jan 28, 2006

சென்னையில் குறும்பட திருவிழா

ICAF ஒருங்கிணைத்து நடத்தும் "முக்கண்ட குறும்பட திரையிடல்" (Tri continental Film Festival) சென்னையில் பிப்ரவரி 1 -3 வரை நடைபெற உள்ளது. விவரங்களுக்கு ICAP - தங்கராஜ் - 044-5516 3866 என்கிற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். அனுமதி இலவசமா அல்லது உறுப்பினர்களுக்கா என்று தெரியவில்லை.

திரையிடப்படுவதாக சொல்லியிருக்கக் கூடிய படங்கள்

The Take by Avi Lewis (Canada)
Thirst by Deborrah Kaufman and Alan Sanitow (America)
Acting Like a Thief - Kerim Friedman and Shashwati Talukdar (US/Indian)
Weapons of Mass Destruction by Danny Schechter (America)
The Concrete Revolution by Xialou Guo (China)
The House on Gulmohar Avenue by Samina Mishra (India)
Bride Kidnapping in Kyrgyzstan by Petr Lom (Kyrgyzstan)
Sisters in Law by Kim Longinotto

Jan 26, 2006

மருதநாயகம் பற்றி கமலுக்கு ஒரு கடிதம்

கொஞ்சம் தாமதமாய் எழுதும் பதிவு. பொங்கலுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் மதனின் நிகழ்ச்சியில் கமல். வழக்கம் போல, கமலினைப் போற்றி, புகழ்ந்து முடித்தவுடன் இப்போது கிளிஷேவான, அந்த கேள்வி முன்வைக்கப்பட்டது. மருதநாயகம் எப்போது வரும்? வழமையாக கமலும், மருதநாயகம் தொடங்கும்போது மொத்த செலவு 15-20 கோடியாகவும், இப்போது 30-40 கோடி தேவைப்படுவதாகவும் கூறி, அதனால் பணத்திற்கு காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். கமல் என்கிற கலைஞன் மீது எனக்கு பெரிய அளவில் மரியாதை இருக்கிறது, ஆனாலும், இப்படி சொல்வதன் மூலம் கமலின் ஜல்லியடித்தல்களின் மீது எனக்கு நம்பிக்கையில்லை. வெறுமனே பணம் தேவை என்று சொல்வதை விட வேறு முயற்சிகள் என்ன எடுத்தார் என்று சொல்ல வேண்டிய கட்டாயமிருக்கிறது. என்னளவில் இன்னமும் பொறுப்பற்று இருக்கிறார் என்று கவலையுடன் சொல்ல வேண்டியதிருக்கிறது.

உண்மையிலேயே கமலுக்கு இந்த படத்தின் மீது அவ்வளவு மதிப்பும் அக்கறையும் இருந்தால், இன்றைய நிலையில் 50 கோடி ரூபாய்கள் ஒன்றுமில்லை. உதாரணத்திற்கு சஞ்சய் லீலா பன்சாலியினை எடுத்துக் கொள்வோம். இதுவரை மொத்தமே 4 படங்கள் தான் வந்திருக்கிறது. அதிலும் தேவதாஸ் படத்திற்கு (குப்பையாயிருந்தாலும் கூட) மொத்த செலவு 50 கோடி. அமீர்கானின் மங்கள் பாண்டே - தி ரைசிங்கின் மொத்த செலவு 30 கோடிக்கும் மேல். ஆக, இந்தியாவில் 30 கோடி ரூபாய்கள் ஒரு படத்திற்கு செலவு செய்வது என்பது ஒரு பெரிய விஷயமில்லை. இங்கே இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டியதிருக்கிறது. மேலே சொன்ன ஹிந்தி படங்களுக்கு உலகளாவிய மார்க்கெட் இருக்கிறது என்கிற ஜல்லி. உண்மையில் ஹிந்தி படங்களுக்கு பிறகு தமிழ் படங்களுக்கு உலகளாவிய சந்தை இருக்கிறது. விஜய் படங்கள் கனடாவிலும், லண்டனிலும், இலங்கையிலும், தென்னாப்பிரிகாவிலும் திரையிடப்பட்டு ஒடுகின்றன. தமிழ்நாட்டில் டூபாக்கூரான மாதவன், சதா நடித்த "பிரியசகி" தென்னாப்பிரிகாவில் நூறு நாட்கள் தாண்டி ஒடியிருக்கிறது. ஆக தமிழ்படங்களுக்கு உலகளாவிய சந்தை இருக்கிறது. சும்மா யாரும் பணம் முதலீடு செய்வது இல்லை என்பது வெற்று கதை. அந்நியன் படத்திற்கு ஐடிபிஐ முதலீடு செய்திருக்கிறது. நிறைய தெலுங்குப் படங்கள், ஹிந்தி படங்கள் இப்போது வங்கிகளிடமிருந்து கடன் பெற்று படங்கள் தயாரிக்கின்றன. கமலுக்கு இருக்கும் brand powerக்கும் market acceptatnce ற்கும் கண்டிப்பாக வங்கிகள் கடன் கொடுக்கும். நான் போனாலாவது மதிக்க மாட்டார்கள். கமல் போனால் கண்டிப்பாக கொடுப்பார்கள். ஒரு வாதத்திற்கு வங்கிகள் வெறுமனே 10 கோடி கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

கமலினை வைத்து படமெடுப்பவர்கள் குறைந்தது 8-10 கோடியினை கையில் வைத்துக் கொண்டு தான் எடுக்கிறார்கள். ஆக தமிழ் சினிமா சந்தையிலேயே கமலுக்காக குறைந்தது 10-12 கோடிகள் முதலீடு செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். ராஜ்கமல் நிறுவனத்திலிருந்து எடுக்கவேண்டும் என்கிற பிடிவாதத்தோடு இருப்பதால், வெளியாட்கள் குறைவாக தான் முதலீடு செய்வார்கள் என்றொரு வாதத்தினை வைத்தாலும், 6 கோடிகள் கமலினை நம்பி முதலீடு செய்ய முன்வருவார்கள். இங்கும் ஒரு 5 கோடி வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

வட இந்தியாவில் பெரிய நிறுவனங்கள் corporatise ஆகிவிட்டன. யாஷ் ராஜ் பிலிம்ஸ், பிரிட்டிஷ் நந்தி பிலிம்ஸ், ஐட்ரிம் ப்ரொடக்ஷன்ஸ், ராம் கோபால் வர்மா பிலிம்ஸ் என்று தொடர்ச்சியாக நிறுவனங்களை பட்டியிலிடலாம். இதுதாண்டி, விது வினோத் சோப்ரா, கரன் ஜோகர், சஞ்சய் லீலா பன்சாலி, ராம் கோபால் வர்மா போன்ற இயக்குநர்களே 25 கோடி ருபாய் வரையிலான முதலீட்டினை கொண்டு வரும் திறன் படைத்தவர்கள். இன்றைக்கு ஆட்லாப்ஸினை அனில் அம்பானி நிறுவனம் கையகப்படுத்தி விட்டது. அவர்கள் இந்தியாவெங்கும் திரையரங்குகளை கையகப் படுத்தும் திட்டத்தில் சுமார் 1500 கோடி ரூபாய்களை செலவழிக்கப் போகிறார்கள். தென்னிந்தியா முழுவதும் மிகவும் தெரிந்த முகம் கமல். ஏற்கனவே 'விருமாண்டி'யினை ரிலையன்ஸ் இன்போகாம் மூலம் விளம்பர படுத்தியிருந்தார்கள். அந்த நட்பில், கண்டிப்பாக அட்லாப்ஸினை இன்னொரு தயாரிப்பாளாராக கொண்டு வரலாம். அப்படிக் கொண்டு வந்தால், ஒரே கல்லில் நிறைய மாங்காய்களை அடிக்கலாம். இந்தியா முழுவதும் சப்-டைட்டில் வைத்து படத்தினை ரிலிஸ் செய்யலாம். கிராஸ் ஒவர் படங்கள் இந்தியா முழுக்க பார்க்கப்படும்போது, கமலின் முகத்திற்காக கண்டிப்பாக மல்டி-ப்ளக்ஸுகளில் குறைந்தது ஒரு வாரம் ஒடும். ஹிந்தி சினிமாக்களின் தற்போதைய அடிப்படை மிக சுலபம். ரிலிஸ் செய்யும் போது நிறைய திரையரங்குகளில் ரிலிஸ் செய்வது. போனமாதம் மும்பையில் இருக்கும்போது தான் Bluffmaster ரிலிஸ்ஸானது. குறைந்தது ஒரே நாளில் 500க்கும் மேலான காட்சிகள் இருக்கும். ஆக, வெள்ளி,சனி, ஞாயிறு மூன்று நாட்களில் 1500 காட்சிகள் (ஒரு காட்சிக்கு 300 பேர்கள் என்று வைத்துக் கொள்வோம்) - குறைந்தது 100 ரூபாய் டிக்கெட் என்று வைத்தாலும் (அங்கே 300 ரூபாய்க்கெல்லாம் டிக்கெட்கள் இருக்கிறது) ஆக மும்பையில் மட்டும் வீக் எண்ட் கல்லா 6 கோடி. இந்தியா முழுக்க வென்றால் கணக்குப் போட்டு பார்த்துக் கொள்ளுங்கள். இதுதாண்டி, அம்பானியோடு இருந்தால், ரிலையன்ஸ் செல்பேசியில் விளம்பரம் வரும். ரிங் டோன்கள் விற்கலாம். கேம் (Marudhanayagam Game) ஆடச் சொல்லலாம். இதிலெல்லாம் வருமானமிருக்கிறது. ஆக அட்லாப்ஸ் மட்டுமே குறைந்தது 25 கோடி கொண்டு வரும். ஆக இப்போதே 40 கோடி ரூபாய்கள் கையில் இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்த பிஸினஸ் வேர்ல்டு பார்த்தால், ஹிந்தி ஸ்டுடியோக்கள் 1000 கோடி ரூபாய்களை குறி வைத்து நகர்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புரியும். இங்கே நாம் 50 கோடி ரூபாய்க்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் அது சோம்பேறித்தனம். பொறுபில்லாத தன்மை.

கமல் ஒரு வேளை வட இந்திய நிறுவனங்கள் இதை புரிந்துக் கொள்ளாது என்று நினைத்துக் கொண்டால், சோனி, ட்வெண்டியத் சென்சூரி பாக்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களோடு பேசலாம். இந்திய படங்களில் முதலீடு செய்வது என்பது இப்போதைக்கு பன்னாட்டு நிறுவனங்களின் மிக முக்கியமான காரியம். காரணம் சந்தை. இது ஒன்றும் புதிதல்ல. 'ஆளவந்தானின்' ஆடியோ உரிமை யூனிவர்சல் என்கிற பன்னாட்டு நிறுவனத்திற்கு தான் போனது. ஆக, வழிகள் இருக்கின்றன. பன்னாட்டு நிறுனங்களின் இன்னொரு லாபம், உலகளாவிய தொழில்நுட்ப கலைஞர்கள் கிடைப்பார்கள். நினைத்துப் பாருங்கள், கமலால், ரான் ஹாவர்டையோ, ரிட்லி ஸ்காட்டினையோ, ராபர்ட் ஸெமிக்ஸையோ convince பண்ண முடிந்தால், உலகளாவிய சந்தையினை குறிவைத்து படத்தினைப் பார்க்கலாம். கண்டிப்பாக இந்த இயக்குநர்களின் சம்பளமே பல மில்லியன் டாலர்கள் இருக்கும். ஆனால், அதற்கான சந்தை இருக்கும். மெல் கிப்சனின் Passion of the Christ [அரமிக் மொழி] ஆங்கில சப்-டைட்டில்களோடு தான் உலகமெங்கும் வெளியாகி சக்கைப்போடு போட்டது. ஆக ஒரு தமிழ் படமோ, இல்லை, இதை பிரெஞ்சில் எடுத்து, பிரெஞ்சு படமாகவோ இருந்தாலும், உலக சந்தை கிடைக்கும். ஆக, இது நடக்காது என்பது இல்லை. இப்போதே அமெரிக்க ஸ்டுடியோக்கள் சீன திரைப்படங்களை குறிபார்க்க தொடங்கிவிட்டன. ஆக, இந்திய படங்கள் வெகு தொலைவில் இல்லை. இத்தனைக்கும் காரணம், உலகமெங்கும் வேகமாக பரவிவரும் ஆசிய வந்தேறிகளின் கூட்டம். ஆக, ஆசிய மக்களுக்கு பொழுதுபோக்கு என்பது மிகப் பெரிய சந்தை. ஏற்கனவே, இந்திய நிறுவனங்கள் ஹிந்தி செல்பேசி ரிங் டோன்களை லண்டனிலிருக்கும் வோடாஃபோனுக்கு விற்று காசு பார்க்கின்றன. ஆக இதற்கு உலக சந்தையிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளே வந்தால் பணம் ஒரு பிரச்சனையே இல்லை. சந்தையும் பெருகும்.

இது தாண்டி, ஸ்டீபன் சோடன்பர்க் Bubble செய்வது போல செய்யமுடியுமா என்று பாருங்கள். படம் திரைக்கு வந்த நான்காவது வாரத்தில் டிவிடி கொண்டு வாருங்கள். படத்தினை மூன்று மொழிகளில் தயாரியுங்கள். மூன்று மொழி சேனல்களுக்கு விற்று விடுங்கள். தமிழக அரசோடு பேசுங்கள். கான் சாகிபு உலாவிய இடங்களை தேடி கண்டறிந்து, அதை வரலாற்று சுற்றுலா தளமாக அறிவிக்கச் சொல்லுங்கள். 2006-இல் இருந்துக் கொண்டு வெறுமனே ஜல்லியடிக்காதீர்கள். ஹிந்தியில் தம்மாத்தூண்டு பசங்கள் எல்லாம், நியுயார்க் மேயரோடு பேசி funding வாங்குகிறார்கள். உங்களின் மரியாதைக்கு கண்டிப்பாக நிறைய விஷயங்களை செய்ய முடியும், நீங்கள் நினைத்தால்.

இதெல்லாம் கமலுக்கு தெரியுமா, தெரியாதா என்கிற விவாதத்தில் நான் இறங்க விரும்பவில்லை. இவ்வளவு வழிவகைகள் இருக்கின்றன என்பது தான் விசயம். இதற்கு சில விஷயங்களை கமலும் செய்யவேண்டியதிருக்கும். கமல் செய்ய வேண்டியதெல்லாம், முதலில் ராஜ்கமல் பட நிறுவனத்தினை corporatise பண்ணுவதுதான். சும்மா எதற்கும் சந்திர ஹாசனையும், தன்னையும் முன்னிறுத்தாமல், professional ஆட்களை கொண்டு வரவேண்டும். ராஜ்கமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தயாரிக்கலாம். கமலுக்கு மிகவும் ஜுனியரான ராதிகாவால் ராடன் நிறுவனத்தினை 100 கோடி ரூபாய்கள் மதிப்புள்ள நிறுவனமாக உயர்த்த முடிந்த போது, கமலால் கண்டிப்பாக முடியும். இவையனைத்தும் சொல்லுவதற்கு காரணம், கமலின் மிகத் தீவிரமான ரசிகர்களில் ஒருவன் என்கிற முறையிலும், ஒரு தமிழனின் (கான் சாகிபு) கதை [இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட பல்வேறு இனக்குழுக்களின் வரலாற்றில் இதுவும் ஒன்று] இப்படி வெறுமனே காகிதங்களுக்குள் சிறைப்பட்டிருக்கக் கூடாது என்கிற அக்கறையும் தான் காரணம். இதையும் தாண்டி, தமிழ் சினிமா என்பது கோடம்பாக்கத்தில் தொடங்கி அங்கேயே முடிந்து போவதல்ல. நம்மை விட சின்ன தேசங்கள் எல்லாம் ஆஸ்கார் பரிசுகள் வாங்கும்போது நாம் இன்னமும் தகுதி சுற்றுக்குள்ளே நுழைவதையே கொண்டாடிக் கொண்டிருக்கும் அவலம் மாற வேண்டுமானால், நாம் முதலில் நம் கட்டுப்பெட்டித் தனங்களிலிருந்து வெளியே வரவேண்டும். அதற்கு மேற்சொன்ன வழிகளில் எதையாவது பற்றிக் கொண்டு மேலே வந்து தான் ஆகவேண்டும். உலகளாவில் முன்னேற வேண்டுமானால், காரியம் முக்கியம், சும்மா காரணங்களை அடுக்குவதை விட.

இதற்கு பின்னாலும், இன்னுமொரு பேட்டியில் கமல் மருத நாயகத்தினைப் பற்றி கவலைப்படுவாரானால், அக்கவலையில் என்னளவில் popularity, image building தான் இருக்கிறது, உண்மையான அக்கறை இல்லை என்றுதான் சொல்வேன். கொஞ்சம் அதிகப்படியாய் இருந்தாலும், All i can show is my middle finger.

Jan 23, 2006

நிழலுலகம் ஒரு update

என்னுடைய நிழலுலகம் பற்றிய பதிவினை (1,2) தினகரன் செய்திதாளோடு வரும் வசந்தம் என்கிற ஞாயிறு மலரில் cover story யாக போட்டிருக்கிறார்கள். இது உங்களின் தகவலுக்கு : ) செல்வராகவன் என் செல்லில் அடித்து கிழிக்காத வரைக்கும் என்சாய் :) பிரகாஷ் சொல்லும் வதந்திகளை நம்பாதீர்கள் ;)))))))

Jan 16, 2006

ஜல்லியடித்தல்: "மே இட் ப்ளீஸ் யுவர் ஹானர்"

திண்ணையில் மலர்மன்னன் மோகன்தாஸின் (காந்தி)யின் கொலையினையும், அதனை செய்த நாதுராம் (கோட்சே)யின் தரப்பின் நியாயங்களையும் நெடுக நிறுவி காந்தி ஹிந்துகளுக்கோ, இந்தியாவுக்கோ எதுவும் பெரியதாக செய்யவில்லை என்றும், அவரின் இஸ்லாமிய அரவணைப்பு என்பது அரசியல் நிலைப்பாடே என்றெல்லாம் நீளமாய் எழுதி உரையினை முடிக்குமுன் அவர் நாதுராமின் சகோதரரை பார்த்ததும், பத்தாயிரத்திற்கும் மேலாக செலவழித்ததையும் எழுதி ஒரு முழு நீள பேதாஸுக்கான வழிவகைகளை எழுதியிருக்கிறார். நல்லது. காந்தி படுகொலையின் உண்மையினையும், இதுவரை பேசப்படாத சில விஷயங்களையும் இங்கே எழுதுவது வரலாற்று கட்டாயமாகிறது.

முதலில் நாதுராம் கோட்சேயின் பின்புலம் பற்றி தெரியாமல், ஆர்.எஸ்.எஸ்ஸின் வெறித்தனமான பாசிச அடையாளங்களை உணராமல் இந்த கட்டுரையினைப் படித்தால் இது நூதுராமினை நியாயப்படுத்தலில் கொண்டு போய் முடியும்.

ஆர்.எஸ்.எஸ் [ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்] என்கிற அமைப்பு இந்தியாவில் 1925 விஜயதசமி அன்று உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியவர் கேசவ பலராம் ஹெட்கேவார் என்கிற மராட்டிய சித்பவன பிராமணர். மராட்டிய பிராமணர்களுக்குள்ளேயே தங்களை உயர்ந்தவர்களாக கருதிக் கொள்பவர்கள் சித்பவனப் பிராமணர்கள். (அய்யங்கார்கள் அய்யர்களை விட உயர்ந்தவர்கள் என்று சொல்லுவதுப் போல) ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு, பிராமணர்களின் சமுக, அரசியல் மேலாண்மை குறைந்தது. ஆங்கிலேயனைப் பொறுத்தவரை எல்லோருமே அடிமைகள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வில் முதல்முறையாய் கல்வியறிவு பெறத் தொடங்கினார்கள். அரசன், ராஜகுரு, மந்திரிகள், மக்கள் என்கிற கோபுரம் சரியத் தொடங்கியது. பிரித்தானிய அரசின் கீழ் அனைவரும் சமம், அடிமைகள் என்கிற காலனியாதிக்க மனோபாவத்தில் அவர்கள் பெரும்பாலும் எல்லாரையும் சமமாக மதித்தார்கள். அப்போது, கீழ் சாதி, மேல் சாதி இல்லாமல் இல்லை. ஆனால், இது வரை குற்றேவல் புரிவதையே வாழ்க்கையாகக் கொண்ட மக்கள் மெதுவாய் ஒரு தளத்தில் வர ஆரம்பித்தார்கள். பிராமணரல்லாதாரின் வருகை ஆஸ்திக பிராமணர்களின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது. இந்தியாவெங்கும் பல்வேறு இடங்களில் சமூக மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருந்தன ( தெற்கே நாராயண குரு, வடக்கே மஹாராஷ்டிரத்தில் புலே). சமூக விழிப்புணர்வு வெளிப்பட்டு, கோயில் நுழைவு, இட ஒதுக்கீடு போன்றவைகள் பற்றிய தெளிவு வந்தது. அக்காலத்தில், உடன்கட்டை ஏறுதல் போன்றவைகள் சமூக இழிவுகள் என்று தெளியத் தொடங்கி விட்ட காலம். ஆக மாறிக் கொண்டிருந்த இந்திய சமூகம் உயர்சாதி பிராமணர்களின் மேலாண்மையினை ஒட்டு மொத்தமாக அசைக்க ஆரம்பித்தது. அவ்வாறான பிராமணர்கள் ஒன்று கூடி உருவாக்கியதுதான் ஆர்.எஸ்.எஸ்.

இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆயிரம் வருடப் போர் என்றும், கிறிஸ்துவர்களுக்கும், வந்தேறிகளுக்குமான போர் என்று ஆரம்பித்து, அவர்களுக்கு எதிராக இந்துக்களை ஒன்று படுத்துவது என்கிற முகமூடியில் வாகாக அமர்ந்திருக்கும் சாத்தான்களின் கூட்டமே ஆர்.எஸ்.எஸ். இந்து விரோதம் என்கிற அடிப்படையில் பாகிஸ்தான் பிரிந்தது. இஸ்லாமியர்களே பிரிவினைக்குக் காரணமென்று இன்று வரை பொய் பிரச்சாரம் செய்து வரும் ஆர்.எஸ்.எஸ்ஸின் பிதாமகரான சாவர்க்கார் தான் முதலில் இந்துகளுக்கு தனி நாடு வேண்டும் என்று ஊரறிய சொன்னவர்

"இந்துஸ்தானத்தில் இந்துக்களே ஒரு தேசமாக இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் சிறுபான்மையினரே. ஒரே மண்ணில் வாழ்வதனாலேயே அவர்கள் அந்த தேசத்தவர்கள் ஆகிவிட மாட்டார்கள். முகம்மதியர்கள் அல்லது கிறிஸ்துவர்கள் இந்தியாவை தங்களின் புனித பூமியாக கருதுவதில்லை. அவர்களது புனிதபூமி அரேபியா, பாலஸ்தீனம் என்று தொலைதூரத்தில் உள்ளது... அவர்களது பெயர்களும் கண்ணோட்டமும் அந்நிய மூலத்தினைக் கொண்டுள்ளது.... இந்த சூரிய மண்டலத்தில் இந்துக்களாகிய நாம் நமக்கென்று ஒரு நாட்டைக் கொண்டிருக்க வேண்டும்"

இதனை எழுதும்போது வழமையான ஒரு பல்லவி, சாவர்க்கார் ஆர்.எஸ்.எஸ். காரர் அல்ல என்று. உண்மை. சாவர்கார் இந்து மகாசபையின் தலைவர். ஆனால், ஹெட்கேவார் அவரின் "இந்துத்வா" நூலை படித்து உத்வேகம் அடைந்து, அவரின் ஆலோசனைப் படிதான் ஆர்.எஸ்.எஸ்ஸினை வடிவமைத்தார். இது தாண்டி, சாவர்க்கார், 1942-இல் "இந்து ராஷ்ட்டிரதள்" என்றொரு ரகசிய அமைப்பினை உருவாக்கினார். இவ்வாறாக, வெறித்தனமான ஹிந்து மேலாண்மையினை முன்னிறுத்திய சாவர்க்காரின் அத்யந்த சீடர் தான் நாதுராம் கோட்சே.

1944 மார்ச்சில், கோட்சே "அக்ரானி" என்கிற பத்திரிக்கையினை தொடங்குவதற்கு நிதி வழங்கியதே சாவார்கார் தான். காந்தியினை கொல்வதற்காக கோட்சேயும், திண்ணையில் மலர்மன்னனும் சொல்லும் காரணங்கள் முழுக்க முழுக்க பொய்யானவை. பாகிஸ்தானுக்கு இந்தியா அளிக்க வேண்டிய பணம் 55 கோடி. உண்மையில் காந்தியினை ஒரு முயற்சியில் கொன்றுவிடவில்லை. அவரை கொல்ல 1943-லிருந்து முயற்சிகள் நடந்தன. பாகிஸ்தான் படம் எல்லாம் 1947க்கு பிறகு. இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் இணக்கமாக இருக்கும் காந்தியின் மீதிருந்த குரோதமும், இஸ்லாமியர்களின் மீதான வன்மமும் தான் கோட்சேயினைத் தூண்டி காந்தியினைக் கொல்ல வைத்திருக்கிறது.

ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி "இதுவரை கொலை முயற்சியிலிருந்து எனது உயிர் ஏழு முறை காபாற்றப்பட்டுவிட்டது. நான் நூற்று இருபந்தைந்து ஆண்டுகள் வரை உயிரோடு வாழ்வேன்" என்று கூறியிருக்கிறார். இதற்கு "அக்ரானி"யில் கோட்சே "அதுவரை உங்களை யார் உயிரோடு விட்டு வைக்கப் போகிறார்கள் என்பதையும் பார்த்து விடுவோம்" என்று எழுதியிருக்கிறார். ஆக, இது திண்ணையில் சொல்வதுப் போல எவ்விதமான குற்ற மனப்பான்மையும் இல்லாமல் செய்தது இல்லை. முழுக்க முழுக்க ஹிந்துத்துவ கொள்கையினை பரப்பவும், காந்தியினை கொல்வதின் மூலம், ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையினைக் குலைத்து அதன் மூலம் ஏற்படும் வன்முறையில், ஹிந்துக்களை காப்பாற்ற தாங்கள் இருக்கிறோம் என்று நிலைநிறுத்தி அதன் மூலம் ஹிந்து சாம்ராஜ்யத்தினை நிறுவிடும் "அகண்ட பாரத வர்ஷம்" கனவிலும் தான் இப்படுகொலை நிகழ்த்தப்படுத்தப் பட்டிருக்கிறது.

காந்தி மற்றும் அக்காலத்திய காங்கிரஸின் "முஸ்லீம்களை உள்ளடக்கிய தேசியத்திற்கு" (Inclusive Nationalism) மாறாக, இந்துத்துவா சொல்லும் தேசியம், ஹிந்துக்களை முன்னிறுத்தும், சிறுபான்மையினரை சேர்த்துக் கொள்ளாத, அப்படியே சேர்த்தாலும் அவர்களை "இரண்டாந்தர குடிகளாக" நடத்தும் உரிமையினை கையிலெடுக்கும் தேசியமாக (Exclusive Nationalism) உள்ளது. இந்த அடிப்படை மனிதநேய வேறுபாட்டில் தான் இன்றளவும் ஆர்.எஸ்.எஸ் ஒரு பாசிச இயக்கமாக உள்ளது. இன்றளவும், கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளை ஆர்.எஸ்.எஸ் வீர வணக்க நாளாக கொண்டாடி வருகிறது. கோட்சேயின் இறுதி ஆசையான, சிந்து நதியில் (பாகிஸ்தானில் தற்போது ஒடும் நதி) தன் அஸ்தியினை கரைக்கும் ஆசை நிறைவேறாததால், இன்றைக்கும் அவரின் அஸ்தி பாதுக்காக்கப் படுகிறது.

இவ்வளவு விவரங்களை தாண்டி, காந்தியினை சுடுவதற்கு முன் தன் கையில் "இஸ்மாயில்" என்று பச்சைக் குத்திக் கொண்டார். இதன் மூலம் கொன்றவுடன் தானும் கொல்லப்படுவோம், ஒரு முஸ்லீம் தான் கொன்றான் என்றதும் கலவரம் வெடிக்கும் என்று திட்டம் போட்டார். ஆனால், உயிரோடு பிடிக்கப்பட்டதால் அவரின் திட்டம் நிறைவேறவில்லை. (ஆதாரம்: கே.இ.என் மற்றும் கே.எஸ் ஹரிஹரன் எழுதிய "இந்துத்துவாவின் அரசியல் பரிணாம வளர்ச்சி" ) இறுதியாக மலர்மன்னன் சொல்லும் கோபால் கோட்சே ஊடகங்களுக்கு கடந்த பத்து வருடங்களில் தந்த நேர்காணல்களில் அவரின் செய்தி தெளிவாக இருக்கிறது.

கே: நாதுராம் ஆர்.எஸ்.எஸ்ஸில் தான் இருந்தாரா? அல்லது விலகி விட்டாரா?
ப: நாதுராம் ஆர்.எஸ்.எஸ்ஸில் அறிவுஜீவி ஊழியராக உயர்ந்திருந்தார். காந்தியின் கொலைக்குப் பிறகு கோவால்க்கர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸூக்கு ஏற்பட்டிருந்த பிரச்சனைக்களைக் கருதி அதிலிருந்து அவர் விலகிச் சென்று விட்டதாக கூறினார். ஆனால் விலகி செல்லவில்லை.

(ஆதாரம்: ப்ரண்ட்லைன் - ஜனவரி 1994)

ரிடிப்.காம் அவரிடம் "காந்தி கொல்லப்பட்டதற்க்காக நீங்கள் வருந்தியது உண்டா"? என்று கேட்டதற்கு "இல்லை. கவலைப்படவே இல்லை. இந்தியாவின் பிரிவினை எனது சவத்தின் மீதுதான் நடக்கும் என்று காந்தி சொன்னார். ஆனால் தேசப்பிரிவினை நடந்துவிட்ட பிறகும் அவர் உயிரோடுதான் இருந்தார். எனவே நாங்கள் அவரை சாகடித்தோம்... காந்தி முஸ்லீம்களைத் திருப்திப் படுத்தவே ஆர்வம் காட்டினார். அதனால்தான் அவரைக் கொலை செய்தோம்"

ஆக, முழுக்க முழுக்க ஒரு ஹிந்து சாம்ராஜ்யத்தினையும், குறுகிய இனமனப்பான்மையும், பாசிச அடிப்படைகளுடன் இயங்கிய ஒரு தளத்திலிருந்து தான் கோட்சே இதனை செய்திருக்கிறார். இதனை எக்காலக்கட்டத்திலும், எந்த நிலையிலும் நியாயப்படுத்த முடியாது. கோட்சேயினை நியாயப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துக் கொண்டே தான் இருக்கின்றன. ஆனாலும், அடிப்படை மனிதநேயமும், சகிப்பு தன்மையும், பரஸ்பர நம்பிக்கையும், நேசமும் கொண்ட எவரும் அவற்றினை தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே இருப்பார்கள்.

மலர்மன்னனின் மொத்த கட்டுரையில் இரண்டே இடங்களில் மட்டுமே அவரோடு உடன் படும் தருணங்கள் இருக்கின்றது. பகத்சிங் மற்றும் சுபாஷ் சந்திர போஸினைப் பற்றி அவர் எழுதிய இடங்கள் மட்டுமே. சுபாஷ் சாவர்காரிடம் விடைப்பெற்று போன செய்தி எனக்கு புதிது. ஆனாலும், சுபாஷின் கொள்கைகளை காந்தி செவிமடுக்கவில்லை என்பது ஒரு தீராத சறுக்கல்.காந்தியினை பற்றிய என்னுடைய கருத்துகள் வேறானவை, அவரின் கருத்தாக்கங்களோடு பல்வேறு இடங்களில் நான் முரண்படுகிறேன். முக்கியமாக, காந்தியும், அம்பேத்காரும் இலண்டனிலும், இந்தியாவிலும் செய்த தர்க்கங்களும், பெரியார் காந்தியோடு முரண்பட்ட காரணங்களும் வரலாற்று ரீதியிலும், சமூக வெளியிலும் காந்தி சறுக்கிய தருணங்கள்.

தலைப்பு விளக்கம்:
நாதுராம் கோட்சே கொடுத்த வாக்குமூலம் தான் "மே இட் ப்ளீஸ் யுவர் ஹானர்" என்று அழைக்கப்படுகிறது. விவரங்கள் இங்கே

தகவல் உதவி:
காந்தி படுகொலை: பேசப்படவேண்டிய உண்மைகள்
பேரா. கே. ராஜூ
வாசல் பதிப்பகம்வெளியீடு

Jan 11, 2006

சனவரி 26 - சில கேள்விகள்

காஷ்மீரில் டால் ஏரி உறைந்து போய் கிடக்கிறது. மக்கள் ஏரியில் நீந்துவதை விட்டு ஏரியின் மீது நடந்து செல்கிறார்கள். டெல்லி கம்பளிப் போர்வைக்குள் கமுக்கமாய் சுருண்டு கிடக்கிறது. வட மாநிலங்கள் எங்கும் பனியின் பொழிவு அதிகமாக இருக்கிறது. சீரோ டிகிரிக்கு மிக அருகில் பல வட மாநிலங்களில் வெப்பநிலை இருக்கிறது. டெல்லியில் போன ஞாயிற்றுக் கிழ்மையின் வெப்பநிலை 0.2 டிகிரி செல்சியஸ். இந்த நிலையில் தான் சில விஷயங்களை பார்க்க நேர்ந்தது.

சனவரி 26 ஆம் நாள் இந்தியாவின் குடியரசு தின நாள். அன்றைக்கு டெல்லியில் ராஜ்பத்தில் ராணுவ அணிவகுப்பு நடக்கும். ஒவ்வொரு மாநிலமும் தத்தம் பெயர் அடங்கிய ஊர்திகளோடு உலா போவார்கள். பிரதமர், குடியரசு தலைவர் போன்றவர்கள் குண்டு துளைக்காத கண்ணாடிப் பேழையில் நின்று, இந்தியா எப்படி நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது என்று உரக்கச் சொல்லுவார்கள். ரோஜாப்பூவும், சாமந்தியும், பச்சை நிற பிற பூக்களும் சூட்டப்பட்ட சிறுவர் சிறுமியர்கள் "வந்தே மாதரம்" பாடிக் கொண்டே பிரதமர் இருக்கும் திசை நோக்கி வணக்கமிட்டு அவ்விடத்தினை கடப்பார்கள். அந்த வருடம் ராணுவத்திற்காக தயாரிக்கப்பட்ட அக்னியோ, பிருத்வியோ கம்பீரமாக ராணுவ லாரியில் ஏற்றப்பட்டு உலா வரும். மக்கள் இருமருங்கிலும் நின்று இதை கண்டு களிப்பார்கள். என் பள்ளி நாட்களில், சாரண இயக்கத்தில் இருந்த போது, டெல்லி செல்வது என்பது மிகப் பெரிய மரியாதை, கெளரவம், இலட்சியம் என்கிற எண்ணங்களும், கருத்தாக்கமும் தொடர்ச்சியாக ஊட்டப்பட்டன. பின் கல்லூரியில் தேசிய சமூக சேவையமைப்பில் இருந்த போதும், டெல்லி போவது, குடியரசு தினத்தன்று அணிவகுப்பில் இருப்பது என்பது மிகப் பெரிய கனவு. அப்படி ஒரு நாளும் டெல்லி போனதில்லை. முதன்முறையாக ஒரு வணிக சந்திப்பிற்காக டெல்லி விமானநிலையலத்திலிருந்து வெளிவந்து, டாக்சி பிடித்தால், இந்தியாவின் தலைநகரம் அழுக்காக, மிக அழுக்காக இருந்தது. மனதிற்குள் சொல்லிக் கொண்டேன், பெரியதாக ஒன்றும் இழக்கவில்லை என்று. ஆனால்,சர்வ வல்லமை பொருத்திய, ஆசியாவின் தலையாய் இன்று விளங்கும் இரு நாடுகளில் ஒன்றாக இருந்து, தன் ராணுவ வலிமையினை ஒவ்வொரு சுதந்திர/குடியரசு தினத்தன்றும், ராணுவத்திற்கான செலவீனத்தினை ஒவ்வொரு பட்ஜெட் அறிவிப்பிலும் வெளிப்படுத்தும் இந்திய மைய அரசின் கருத்தியல்களில் என்றைக்குமே எனக்கு கருத்து வேறுபாடு உண்டு.

முதல் பிரச்சனை, டெல்லியில் தற்போது உறைய வைத்துக் கொண்டிருக்கும் குளிரில், இந்தியாவெங்கிலுமிருந்து அழைத்து வரப்பட்ட 11- 16 வரையிலான குழந்தைகள், இந்த குடியரசு அணிவகுப்பிற்காக விடியற்காலை 5.30 மணிக்கு எழுப்பப்பட்டு ஒத்திகை பார்க்க கட்டாயப்படுத்தப் பட்டுள்ளார்கள். இத்தனைக்கும், டெல்லியிலிருக்கும் அத்தனை பள்ளிகளும், குளிரின் காரணமாக சனவரி 15 வரை மூடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவின் எல்லா பாகங்களிலிருந்து வந்திருக்கும் குழந்தைகள் உறைய வைக்கும் குளிரில் ஒத்திகை பார்க்கப்பட்டு, மூன்றாம்தர முகாம்களில் போதிய கம்பளிகள், தலை குல்லாய்கள், காலுறைகள் இன்றி தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இதை விட அராஜகம் வேறேதும் இருக்கமுடியாது. இந்தியாவின் நாளைய செல்வங்கள், இன்றைக்கு வெறுமனே ஆடலுக்கும், பாடலுக்கும் அணிவகுப்பின் monotony-யை குறைப்பதற்கும் பயன்படுத்தப் படுகிறார்கள். இவ்வளவும் செய்தாலும் எஞ்சப்போவது என்னவோ ஒரு சான்றிதழும், ஒரு வெண்கல பதக்கமும் தான். சுதந்திர இந்தியாவினைக் கொண்டாடும் நிகழ்வில் தான் குழந்தைகளின் ஒட்டு மொத்த சுதந்திரம் அடகு வைக்கப்படுகிறது. இந்தியாவின் பெருமையை உலகெங்கும் பறைசாற்ற 25 நாட்கள் பிஞ்சு தளிர்கள் ஒழுக்கம், தேச பக்தி என்கிற பெயரில் ராணுவ ஒழுங்கோடு தயார் படுத்தப் படுகிறார்கள். கூட்டத்தினர்களை மகிழ்விப்பது, பிரதம்ர் முதற்கொண்டு ஒரங்கட்டி, ஒய்யாரமாய் நிழலில் உட்கார்ந்து இருக்கும் பெருந்தலைகளை வணங்குவது, கிட்டத்திட்ட ஒரு கி.மீருக்கு மேல் நீளும் அணிவகுப்பில் ஆடிக் கொண்டிருப்பது என குழந்தைகளை டிரில் எடுப்பதில் தேசபக்தி எப்படி வளரும். எப்போது வீட்டுக்கு போகப் போகிறோம் என்கிற எண்ணம் தான் மிகும். அஹிம்சையால் சுதந்திரம் பெற்ற நாட்டின் குடியரசு தினத்தில் தான் இத்தனை ஹிம்சைகளும். இது தாண்டி, வாழ்த்தி, வணங்கி வாழ்வதற்கு நாம் என்ன முடியாட்சியிலா இருக்கிறோம்? எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று சொன்னானே ஒரு முண்டாசு கவிஞன், எந்த இளவரசன் இன்னொரு மன்னன் முன்னால் சலாம் போட்டு நடனமாடுவான் ? என்ன எழவுக்கு வேண்டுமிது ? இதன்மூலம் நாம் சாதிக்கப் போவது என்ன ? நடுங்கும் குளிரில், குழந்தைகளின் ஆட்டம் இல்லாமல் போனால் என்ன கெட்டழிந்துவிடும். இந்தியாவின் மானமென்ன ஆடும் குழந்தைகளிடத்திலா இருக்கிறது? பின் எதற்காக இந்த idiotic ritual.
பார்க்க - ஐபிஎன் செய்தி


இரண்டாவதாக, கடந்த பத்தாண்டுகளில் இந்தியா பெற்றுள்ள வளர்ச்சி அதன் பொருளாதாரம் சார்ந்ததே. வருடாவருடம் மென்பொருள், உற்பத்தி, விவசாயம் இன்னபிற அறிவு/உடல் சார் துறைகளில் நாம் சம்பாதிப்பதை, பட்ஜெட்டின் போது மொத்தமாய் ராணுவத்திற்கு தாரை வார்க்கிறோம் அல்லது வார்க்க சொல்லி கட்டாயப் படுத்தப் படுகிறோம். இந்தியாவின் பட்ஜெட்டில் ராணுவத்திற்கான செல்வு சென்ற நிதியாண்டில் 80,000 கோடி ரூபாய்களுக்கு மேல் (17.77 பில்லியன் டாலர்கள்) இவ்வளவு செலவழித்து வந்து கடந்த ஜம்பத்தி சொச்சம் ஆண்டுகளில் என்ன விஷயத்தினை சாதித்தோம்? கடந்த பத்தாண்டுகளில் இந்தியா பெற்றுள்ள வளர்ச்சிகான காரணம் இந்தியாவின் பலமான பொருளாதாரம். இதற்கு காரணம் நமது தொழில், அறிவு ரீதியிலான பங்களிப்பு, அக்னியும், பிருத்வியும் அல்ல. இந்திய ராணுவத்தினை மதிக்கிறேன் என்பதும், கடமைப்பட்டிருக்கிறேன் என்பதும் தனி விஷயம். அப்படி மரியாதை செய்யவேண்டுமெனில் மூப்படைகளுக்கும் ராணுவதினத்தில் வணக்கஞ்செய்கிறேன். குடியரசு தினமென்பது ஒரு நாட்டின் அரசியலமைப்பு சட்டமும் பூரணமாக நடைமுறைக்குள்ளாகியிருக்கிறது என்பதை சொல்லும் தினம். ராணுவம் எங்கே வந்தது இங்கே? பாதுகாப்பின் பரிபூரணத்தில் இருப்பதாக சொல்லும் அரசு தான் குண்டு துளைக்காத காரிலும், மேடையிலும் தங்கள் தைரிய அறிக்கைகளை உணர்ச்சி பொங்க உரைக்கிறார்கள். இதில் என்ன பெருமை இருக்கப் போகிறது. மேலும் ராணுவத்தினைக் கொண்டு ஒரு நாட்டின் மரியாதையினை உரக்கச் சொல்வது காலனியாதிக்கத்தின் பாதிப்பு. போர் என்கிற ஒன்று மிக அவசியமேற்பட்டாலேயொழிய தேவையில்லை என்பதும், உலக அமைதியும், சமத்துவமும், சகிப்புதன்மையும், சமாதானமும் பீரங்கிகளின் அகலமான வாய்களை திறப்பதனால் ஏற்படாது என்பது ஈராக்கும், பாலஸ்தீனமும், இலங்கையும் உதாரணங்கள். இந்தியா ஏன் இனி பொருளாதார வலிமையினையும், மக்கள் சக்தியையும் முன்வைத்து தேசிய தினங்களை கொண்டாட முன் வரக் கூடாது. உலகம் இந்தியாவினை ஒரு வலிமை மிக்க பொருளாதார சக்தியாக பார்க்கும் போது, இன்னமும் நாம் எத்தனை நாள் காலனியாதிக்க மனோபாவத்திலேயே தேசிய நிகழ்ச்சிகளை சடங்குகளாக்கி, சன் டிவியில் "குடியரசு தினத்தினை குதூகலமாய் கொண்டாடப் போகிறோம்"?

Jan 9, 2006

அறிவு ஜீவிகளும், ஆணாதிக்க மனப்பான்மையும்

சனிக்கிழமையன்று (7.1.06) 'புக் பாயிண்ட்' அரங்கில் உயிர்மை பதிப்பகத்தின் சார்ப்பில் "10 நவீன எழுத்தாளர்களின் 10 நூல்கள்" என்ற தலைப்பில் 10 நூல்கள் வெளியிடப்பட்டன. இதில் எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய தொகுப்பான "விழித்திருப்பவனின் இரவு" என்னும் நூலும் அடங்கும். எஸ்.ரா சமீபத்தில் எழுதி வெளியான சண்டக் கோழி படத்தில் ஒரு கதாபாத்திரம் "குட்டி ரேவதி" என்கிற பெயரினை இகழுமாறு ஒரு வசனம் வருகிறது. மீரா ஜாஸ்மின் கல்லூரிக்கு கட் அடித்துவிட்டு ரஜினி படம் பார்க்க போய் கலாட்டா செய்வதை அவரின் அண்ணன் பார்த்து அவரை வீட்டில் திட்டும் போது வரும் வசனமிது.

"குட்டி ரேவதியா? அவ எல்லாம் உனக்கு ஒரு ப்ரண்டு? அவ மூஞ்சியும் அவ ஆளூம்? கையில் துப்பட்டாவ எடுத்து சுத்திக்கிட்டு இருக்கா... கொஞ்சம் கூட வெக்கமில்லாம?"

ஒரு பெண்ணியவாதியாய் பார்த்தால், குட்டி ரேவதியில்லாமல் எந்த பெயர் இங்கே இருந்தாலும் இது ஒரு ஆணாதிக்கவாதியின் பார்வை. ஆனால், வணிக தமிழ் சினிமாவில் இது மிக சகஜம். சிவகாசியில் விஜய் அசினை ஜட்டி,பிரா என்று பேசுவதை விட, முத்து, படையப்பா உள்ளிட்ட ச.முக்கு முன்பான ரஜினி படங்களில் பெண்களை அடங்கிப் போகும் ஒரு ஜீவனாக பார்த்ததை விட பெரிய விஷயமில்லை. ஆனால், பிரச்சனை எழுந்தது எஸ்.ரா இந்தப் படத்திற்கு வசனமெழுதியதுதான். எழுதியவர் அதை நான் தான் எழுதினேன் என்று துணிந்து சொல்லியிருந்தால் பிரச்சனையில்லை. ஆனால், இதை நான் எழுதவில்லை என்று அந்தர் பல்டி அடித்ததில் தொடங்கியது. இதில் அவர் சொன்ன இன்னொரு தர்க்கம் "குட்டி ரேவதி என்ற பெயர் ஒரு பொதுப் பெயர்" என்பது. ஒத்துக் கொள்கிறேன், பெயர் ரேவதியாக இருக்கும் பட்சத்தில் ஆனால், தெளிவாக 'குட்டி ரேவதி' என்று சொல்லுவதின் உள்ளர்த்தம் என்ன ? தமிழ் சினிமாவின் இயக்குநர்களும், தமிழ் இலக்கியத்திற்கும் உள்ள தூரம் எல்லோரும் தெரிந்ததே. இதில் ஒரு சினிமா இயக்குநர் 'குட்டி ரேவதி' என்கிற குறிப்பிட்ட பெயரினை உபயோகிக்கிறார் என்று சொன்னால் அதன் பின்புலம் என்ன? 'ராமகிருஷ்ணன் ஒரு மடையன்' என்று சொன்னால் அது பொதுப் பெயர், ஆனால் தெளிவாக எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு முட்டாள் என்று சொல்கிறேன் என்று வைத்துக் கொள்வோம், நமது கூட்டு எண்ணம் முதலில் யாரை நினைக்க தோன்றும்?

இதனால், தமிழ்நாட்டில் உள்ள எத்தனை பேருக்கு 'குட்டி ரேவதி' என்கிற பெண் கவிஞர் இருக்கிறார் என்று தெரியும்? பிரச்சனை அதுவல்ல. ஆஸ்திரேலியாவிலோ, இங்கிலாந்திலோ கிருஷ்ணர் படமிட்ட காலணிகள் வெளியிடப்பட்டன. உடனே நாம் அதை போராடி தடுத்தாட்கொண்டோம். வெள்ளையனைப் பொருத்தவரை பிள்ளையார் elephant god ஒரு நல்ல graphic symbol, style icon அவ்வளவுதான். ஒரு ஐகானுக்கே நமக்கு இவ்வளவு கோவம் வருகிறதே, இத்தனைக்கும் தமிழ் இலக்கிய வீதியில் இருக்கும் வீடுகள் மிகவும் நெருக்கமானவை. சுற்றி சுற்றி வந்தாலும் 100 பேருக்கு மேல் பெயர்கள் தேறாது. ஆக இந்த உள்ளடி வேலையினை 'தெரிந்து/ தெரியாமல்' ஒருவர் செய்கிறார் என்றால் இது ஆணாதிக்க சிந்தனையில்லாமல் வேறென்ன. இது தாண்டி, ஏற்கனவே பெண் படைப்பாளிகள் மீது தமிழ் பாடலாசிரியர்களுக்கு ஏகப்பட்ட காழ்ப்புணர்ச்சி இருப்பது தெரிந்ததே. சிநேகன் என்றொரு பாடலாசிரியர், ஆபாசமாக எழுதும் பெண் படைப்பாளிகளை பெட்ரோல் ஊற்றி எரிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். பொங்கி எழுந்திருக்க வேண்டாமா நாம். வெட்கமில்லாமல், தன்னுடைய திரை ஆளுமையினை முன்னிறுத்தி, தன்னாளுமை பயிற்சி தருகிறேன் என்கிற பெயரில் பணம் கறக்கும் ஒரு மூன்றாந்தர புரோக்கராக தான் எனக்கு சிநேகனை தெரியும். ஆண்டாள் எழுதியதை விட இன்னமும் உடல் விழைவுகளோடு முழுமையாய் எந்த பெண்படைப்பாளியும் எழுதவில்லை என்கிற நிலையிலேயே, கொப்பளித்து ஆடுகிறது தொடைகளுக்கு இடையே தொக்கி இருக்கும் குறிகள். இன்னமும் முழுமையாய் எழுதியிருந்தால் இவர்களே கொன்றாலும் கொல்லுவார்கள் போலும். பர்தா போட்ட ஃபத்வா போடும் நாட்டிலா இருக்கிறோம் நாம்? ஆக தெளிவாக இதில் எஸ்.ரா எஸ்கேப்பிஸ்டாக தெரிகிறார். இது தாண்டி, தமிழ்நாடே குஷ்பு-கற்பு பிரச்சனையில் இரு அணியாக பிரிந்து விவாதித்துக் கொண்டிருந்தபோது அதை பற்றி எங்குமே எஸ்.ரா எழுதி நான் படிக்கவில்லை. இதில் ஜெயமோகனும் அடங்கும். இதற்கு நடுவில், இந்த மாத உயிர்மையில் ஜெயமோகனின் பத்தியில் எஸ்.ராவின் இந்த புத்தகத்தினை தமிழின் மிகச்சிறந்த புத்தகமாக சொல்லிவருகிறார். 1+1 = 2. இது தீராநதியில் அ.மார்க்ஸ் சொன்ன மாதிரி "எதற்கு கருத்துக்களை பதிவு செய்து, வரும் சினிமாவாய்ப்பினை கெடுத்துக் கொள்ளவேண்டும்" என்ற நிலைப்பாடு தான். சிலேட்டில் லக்ஷ்மி மணிவண்ணன் எஸ்.ரா பற்றி எழுதியிருந்தது தான் நினைவுக்கு வருகிறது "எஸ்.ரா ஒரு எழுத்து வியாபாரி, கடைத்தெருவில் தன்னுடைய நினைவுகளை விற்றுக் கொண்டிருக்கிறான்"

பிரச்சனை அத்தோடு நிற்கவில்லை. (பிரேம்) ரமேஷ் எழுந்து " என் மாலதி மைத்ரியினை யாராவது சொல்லியிருந்தால் மூன்று தலைகள் உருண்டிருக்கும்" என்று எச்சரிக்கை விடுத்ததாக படித்தேன். இது இன்னொரு விதமான ஆணாதிக்க சிந்தனை. குடும்பம், கல்யாணம் போன்ற நிறுவனமயமாக்கப்பட்ட விஷயங்களை தொடர்ந்து எதிர்த்து எழுதியிருக்கும் ரமேஷ் இன்று தன் இல்லாளாக அறியப்படும் மாலதி மைத்ரியினை முன்னிறுத்தி தன் தந்தை வழி சிந்தனையினை நிறுவுகிறார். ஆக மாலதி மைத்ரி இல்லாமல் வேறு யாராவது இருந்தால் தலைகள் உருளாது, மாலதி மைத்ரியாயின் தலைகள் உருளும். தமிழகத்தின் அறிவு ஜீவிகளின் தர்க்கங்களை நினைத்தால் புல்லரிக்கிறது. கொண்ட கொள்கையினை அடிப்படையாக வைத்து பிரச்சனைகளைப் பேசாமல், எனக்கென்றால் ஒன்று, மற்றவர்களுக்கு என்றால் ஒன்று என்று இனம் பிரிக்கும் மக்களை நினைத்தால் வாய் விட்டு சிரிக்க முடிகிறது. தமிழ்நாட்டில் அரசியல் குடுமிபிடி சண்டைகள் தான் மிகப் பெரிய பொழுதுப் போக்காக இருந்திருந்தது. இப்போது அதை தமிழ் அறிவுஜீவிகள் தீர்த்து வைக்கிறார்கள்.

இதனை இவ்வளவு தீவிரமாக எழுதுவதால் இன்னொன்றையும் இங்கே சொல்ல வேண்டியதிருக்கிறது. குட்டி ரேவதியின் மீது எனக்கு பெரிய அபிப்ராயங்கள் இல்லை. அவரின் 'முலைகள்' கவிதை தொகுப்போ, அவரின் எழுத்தோ என்னை என்றைக்கும் கவர்ந்ததில்லை. ஊடகங்கள் அவரை வைத்து பரபரப்பு தீனி போட்டுக் கொண்டு வாழ்ந்து வருகின்றன. இதேப் போல நிறைய பெண் படைப்பாளிகளை சொல்லலாம். ஆனால், இவையெல்லாம் கண்டிப்பாக படைப்பு ரீதியிலான, கருத்து ரீதியிலான பிரச்சனைகள். இன்றளவும், யாரும், எவரும் தத்தம் கருத்துகளை சுதந்திரமாகவும், சார்பில்லாமலும் வைக்கலாம் என்கிற ஆழமான சிந்தனையினையும், அளவற்ற சுதந்திர எல்லைகளையும் நிர்ணயித்துக் கொண்டிருப்பவன் நான்.இந்த பிரச்சனையினை கை நீட்டி கேட்ட மாலதி மைத்ரி தான் சில மாதங்களுக்கு முன்பு பெண் படைப்பாளிகளின் களமெது என்கிற பிரச்சனையும், சுகிர்த ராணி, வெண்ணிலா இன்ன பிற படைப்பாளிகள் எழுதுவதினை விமர்சித்தும் மூன்று மாதங்களுக்கு தீராநதியில் நேர் /எதிர் வினைகளாக தீனிப் போட்டுக் கொண்டிருந்தார். மாலதி மைத்ரியினை மதிக்கிறேன் என்பது இதற்கு சம்பந்தமில்லாத ஒன்று, ஆனாலும், அவரின் "போலீஸ்" கார மனப்பான்மையினை (யார் எதை எழுத வேண்டுமென்பது) எதிர்க்கிறேன். ஆக பெண் படைப்பாளிகள் என்று குறிப்பிட்டு சொல்லாமல் எல்லா படைப்பாளிகளிடமும் சில பிரச்சனைகள் இருக்கிறது.

இந்த பிரச்சனையின் இன்னொரு முகம் மனுஷ்ய புத்திரனது. ஒரு படைப்பாளர், பதிப்பகத்தார் என்ற முறையில் இந்த விழாவினை நடத்தியவர் மனுஷ். அவருடைய விழாவில் இந்த பிரச்சனையினைக் கேட்டார்கள் என்றதும் பொங்கி எழுந்து, திரைப்படமிடும் தியேட்டர்களில் மறியல் செய்ய வேண்டியது தானே என்றும், வன்முறையின் வழியில் விழாவினை தடுத்து நிறுத்தியவர்கள், ஊடகப் பரபரப்பில் உயிர் வாழும் ஒட்டுண்ணிகள் என்றும் சினந்து பேசியிருக்கிறார்கள். உங்கள் விழாவினை தடுத்து நிறுத்தியதன் கோவம் எங்களுக்கு புரிகிறது. தமிழ்நாட்டில் எத்தனை பேர்களுக்கு இந்த பிரச்சனை புரியும். இதில் திரையரங்குகளின் வாசலில் மறியல் செய்தால் என்ன சொல்வார்கள். "யார் எழுதினானோ அவனைப் போய் கேட்காம இங்க உட்கார்ந்திருந்தா இன்னா பிரயோசனம்"? என மறியலின் குறிக்கோள் எளிமையாய் சமன் படுத்தப்பட்டு விடும். எஸ்.ராவினை கேள்வி கேட்பது என்பது தான் குறிக்கோள். முதல் நிகழ்வாய் உங்கள் நிகழ்ச்சி அமைந்துவிட்டது அவ்வளவுதான். இதுவே புத்தக்காட்சியினுள் இருந்திருந்தால் வேறொரு பதிப்பகத்தார் இதை கேள்விக் கேட்டிருப்பார். குஷ்பு பிரச்சனையில் தலையங்கம் எழுதிய நீங்களும், இதை ஆதரித்து எழுதி இருப்பீர்கள். 'ஊடகப் பரபரப்பில் உயிர் வாழும் ஒட்டுண்ணிகள்' என்று விமர்சிக்கும் மனுஷ்யபுத்திரன், ஏன் சுஜாதாவின் புத்தக வெளியீட்டு விழாவினை பிலிம் சேம்பர் அரங்கிலும் (இருக்கைகள் அதிகமாக அரங்கு அது) நவீன படைப்பாளிகளின் வெளியீட்டினை புக்பாயிண்டிலும் வைக்கிறீர்கள்? சுஜாதா நிகழ்வுக்கு இயக்குநர் சங்கர் முதற்கொண்டு தமிழ் சினிமாவின் பெருந்தலைகள் வருவார்கள், ஊடகங்களில் செய்திகள் வரும் ஆனால், புக் பாயிண்டில் வெளியிடுவது சிற்றிதழ்களிலும், இணையப் பத்திரிக்கைகளிலும் தான் வரும். ஆக உங்களுக்கும் ஊடகங்கள் தேவை. ஊடகத்தினை உபயோகப்படுத்திக் கொள்வதில் மறுப்பேதுமில்லை. ஆனால், நீங்கள் உபயோகப்படுத்தினால் அது தமிழை வளர்க்கும், ஆனால் ஒரு பெண் படைப்பாளியானால் அது ஒட்டுண்ணி என்று சொல்வதை எவ்வித சிந்தனை என்று சொல்வது? ஆணாதிக்கமும், குழு மனப்பான்மையும் அல்லவா.

இதற்கு இணையாக எஸ்.ராவும், சுகிர்த ராணியும் செய்தியில் இணைகிறார்கள். சுகிர்த ராணி தன் துப்பட்டாவினை தூக்கி எறிந்து .................. க் காட்டி, அடுத்த படத்தில் "சுகிர்த ராணி ............க் காட்டி விட்டார்" என்று எழுதும் படியும் சொன்னார் என்று எஸ்ராவும், தான் துப்பட்டாவினை தூக்கி எறிந்தது உண்மையென்றும், ஆனால் வேறெந்த ஆபாச சைகைகளும் காட்டவில்லை என்று சுகிர்த ராணியும் சொல்கிறார்கள். ஆக அடுத்த மூன்று மாதங்களுக்கான சிறுபத்திரிக்கை content கைவசமிருக்கிறது. இந்நிகழ்வு மிகத் தெளிவாக சொல்வது இதுதான். எழுத்தில் எல்லோரும் புலிகள், பிரச்சனைகளை சந்திப்பதிலும், எதிர் கொள்வதிலும் அவர்கள் தமிழ்நாட்டில் கூலிவேலைக்கு போய் ஒரு நாளைக்கு ரூ 30 சம்பாதித்து வாழ்வினை எதிர்கொள்ளும் மனிதர்களை விட கீழானவர்கள். எழுத்து என்பது சத்தியம். உண்மை. சும்மா கால்வினோ, மார்க்கஸ், புயூகோ என்று படித்து ஜல்லியடித்தால் போதாது. அடிப்படை மனித நேயமில்லாத, பெண்களை சம ஜீவன்களாக மதிக்கத்தெரியாத, எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் இல்லாதவர்களாக தான் இவர்களின் தோற்றமுள்ளது. ரோசாவசந்த் மொழியில் சொல்லுவதனால் இவர்கள் அறிவுஜீவி பூர்ஷ்வாக்கள், அவ்வளவே. இவர்களை பின்தொடர்ந்து போவது வேலையற்றது. நாம் நம் வேலையை பார்ப்போம். இதுதாண்டி, இந்த மாத உயிர்மையில் நாஞ்சில்நாடனின் கட்டுரையினை படியுங்கள். மனிதர் வெளுத்து வாங்கியிருக்கிறார், தமிழ் சினிமாவையும், பிம்பங்களையும்.

பார்க்க: தமிழ் முரசு செய்தி

நேற்று (ஞாயிறு) விஜய் தொலைக்காட்சியில் மதன் - கமல் இடையே நடந்த நேர்காணலில், வழமையாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, 'மருத நாயகத்தினை' தொட்டார். வழக்கமான பல்லவிதான், நிதியில்லை என்று. முதலில் எழுத நினைத்தது கமல் நினைத்தால் 50 இல்லை 100 கோடி ரூபாய்களை இந்த படத்திற்காக எப்படி புரட்ட முடியும் என்பது பற்றி. அதற்குள் பெண் படைப்பாளிகள் பிரச்சனை வந்ததால், வேறொரு காலக்கட்டத்தில் எழுதுகிறேன்.

Jan 2, 2006

தேர்தல் தேதிகள்

இன்று தேர்தல் கமிஷன் கூடி தமிழக, பாண்டிச்சேரி, அஸ்ஸாம் மாநில சட்டசபைகளுக்கான தேதிகளை ஆராய்கிறார்கள். மே மாதத்தோடு அ.தி.மு.க அரசின் ஆட்சிக்காலம் முடிகிறது. தேர்தல் தேதிகளை கல்லூரி,பள்ளிகளுக்கு பாதிப்பு இல்லாத ஒரு நாளினை மே மாதத்தின் பிற்பகுதியில் தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிகிறது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் தமிழகம் சூடு பிடிக்க ஆரம்பித்து விடும்.

தேர்தல் 2006 பதிவு

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]