Jan 9, 2006

அறிவு ஜீவிகளும், ஆணாதிக்க மனப்பான்மையும்

சனிக்கிழமையன்று (7.1.06) 'புக் பாயிண்ட்' அரங்கில் உயிர்மை பதிப்பகத்தின் சார்ப்பில் "10 நவீன எழுத்தாளர்களின் 10 நூல்கள்" என்ற தலைப்பில் 10 நூல்கள் வெளியிடப்பட்டன. இதில் எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய தொகுப்பான "விழித்திருப்பவனின் இரவு" என்னும் நூலும் அடங்கும். எஸ்.ரா சமீபத்தில் எழுதி வெளியான சண்டக் கோழி படத்தில் ஒரு கதாபாத்திரம் "குட்டி ரேவதி" என்கிற பெயரினை இகழுமாறு ஒரு வசனம் வருகிறது. மீரா ஜாஸ்மின் கல்லூரிக்கு கட் அடித்துவிட்டு ரஜினி படம் பார்க்க போய் கலாட்டா செய்வதை அவரின் அண்ணன் பார்த்து அவரை வீட்டில் திட்டும் போது வரும் வசனமிது.

"குட்டி ரேவதியா? அவ எல்லாம் உனக்கு ஒரு ப்ரண்டு? அவ மூஞ்சியும் அவ ஆளூம்? கையில் துப்பட்டாவ எடுத்து சுத்திக்கிட்டு இருக்கா... கொஞ்சம் கூட வெக்கமில்லாம?"

ஒரு பெண்ணியவாதியாய் பார்த்தால், குட்டி ரேவதியில்லாமல் எந்த பெயர் இங்கே இருந்தாலும் இது ஒரு ஆணாதிக்கவாதியின் பார்வை. ஆனால், வணிக தமிழ் சினிமாவில் இது மிக சகஜம். சிவகாசியில் விஜய் அசினை ஜட்டி,பிரா என்று பேசுவதை விட, முத்து, படையப்பா உள்ளிட்ட ச.முக்கு முன்பான ரஜினி படங்களில் பெண்களை அடங்கிப் போகும் ஒரு ஜீவனாக பார்த்ததை விட பெரிய விஷயமில்லை. ஆனால், பிரச்சனை எழுந்தது எஸ்.ரா இந்தப் படத்திற்கு வசனமெழுதியதுதான். எழுதியவர் அதை நான் தான் எழுதினேன் என்று துணிந்து சொல்லியிருந்தால் பிரச்சனையில்லை. ஆனால், இதை நான் எழுதவில்லை என்று அந்தர் பல்டி அடித்ததில் தொடங்கியது. இதில் அவர் சொன்ன இன்னொரு தர்க்கம் "குட்டி ரேவதி என்ற பெயர் ஒரு பொதுப் பெயர்" என்பது. ஒத்துக் கொள்கிறேன், பெயர் ரேவதியாக இருக்கும் பட்சத்தில் ஆனால், தெளிவாக 'குட்டி ரேவதி' என்று சொல்லுவதின் உள்ளர்த்தம் என்ன ? தமிழ் சினிமாவின் இயக்குநர்களும், தமிழ் இலக்கியத்திற்கும் உள்ள தூரம் எல்லோரும் தெரிந்ததே. இதில் ஒரு சினிமா இயக்குநர் 'குட்டி ரேவதி' என்கிற குறிப்பிட்ட பெயரினை உபயோகிக்கிறார் என்று சொன்னால் அதன் பின்புலம் என்ன? 'ராமகிருஷ்ணன் ஒரு மடையன்' என்று சொன்னால் அது பொதுப் பெயர், ஆனால் தெளிவாக எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு முட்டாள் என்று சொல்கிறேன் என்று வைத்துக் கொள்வோம், நமது கூட்டு எண்ணம் முதலில் யாரை நினைக்க தோன்றும்?

இதனால், தமிழ்நாட்டில் உள்ள எத்தனை பேருக்கு 'குட்டி ரேவதி' என்கிற பெண் கவிஞர் இருக்கிறார் என்று தெரியும்? பிரச்சனை அதுவல்ல. ஆஸ்திரேலியாவிலோ, இங்கிலாந்திலோ கிருஷ்ணர் படமிட்ட காலணிகள் வெளியிடப்பட்டன. உடனே நாம் அதை போராடி தடுத்தாட்கொண்டோம். வெள்ளையனைப் பொருத்தவரை பிள்ளையார் elephant god ஒரு நல்ல graphic symbol, style icon அவ்வளவுதான். ஒரு ஐகானுக்கே நமக்கு இவ்வளவு கோவம் வருகிறதே, இத்தனைக்கும் தமிழ் இலக்கிய வீதியில் இருக்கும் வீடுகள் மிகவும் நெருக்கமானவை. சுற்றி சுற்றி வந்தாலும் 100 பேருக்கு மேல் பெயர்கள் தேறாது. ஆக இந்த உள்ளடி வேலையினை 'தெரிந்து/ தெரியாமல்' ஒருவர் செய்கிறார் என்றால் இது ஆணாதிக்க சிந்தனையில்லாமல் வேறென்ன. இது தாண்டி, ஏற்கனவே பெண் படைப்பாளிகள் மீது தமிழ் பாடலாசிரியர்களுக்கு ஏகப்பட்ட காழ்ப்புணர்ச்சி இருப்பது தெரிந்ததே. சிநேகன் என்றொரு பாடலாசிரியர், ஆபாசமாக எழுதும் பெண் படைப்பாளிகளை பெட்ரோல் ஊற்றி எரிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். பொங்கி எழுந்திருக்க வேண்டாமா நாம். வெட்கமில்லாமல், தன்னுடைய திரை ஆளுமையினை முன்னிறுத்தி, தன்னாளுமை பயிற்சி தருகிறேன் என்கிற பெயரில் பணம் கறக்கும் ஒரு மூன்றாந்தர புரோக்கராக தான் எனக்கு சிநேகனை தெரியும். ஆண்டாள் எழுதியதை விட இன்னமும் உடல் விழைவுகளோடு முழுமையாய் எந்த பெண்படைப்பாளியும் எழுதவில்லை என்கிற நிலையிலேயே, கொப்பளித்து ஆடுகிறது தொடைகளுக்கு இடையே தொக்கி இருக்கும் குறிகள். இன்னமும் முழுமையாய் எழுதியிருந்தால் இவர்களே கொன்றாலும் கொல்லுவார்கள் போலும். பர்தா போட்ட ஃபத்வா போடும் நாட்டிலா இருக்கிறோம் நாம்? ஆக தெளிவாக இதில் எஸ்.ரா எஸ்கேப்பிஸ்டாக தெரிகிறார். இது தாண்டி, தமிழ்நாடே குஷ்பு-கற்பு பிரச்சனையில் இரு அணியாக பிரிந்து விவாதித்துக் கொண்டிருந்தபோது அதை பற்றி எங்குமே எஸ்.ரா எழுதி நான் படிக்கவில்லை. இதில் ஜெயமோகனும் அடங்கும். இதற்கு நடுவில், இந்த மாத உயிர்மையில் ஜெயமோகனின் பத்தியில் எஸ்.ராவின் இந்த புத்தகத்தினை தமிழின் மிகச்சிறந்த புத்தகமாக சொல்லிவருகிறார். 1+1 = 2. இது தீராநதியில் அ.மார்க்ஸ் சொன்ன மாதிரி "எதற்கு கருத்துக்களை பதிவு செய்து, வரும் சினிமாவாய்ப்பினை கெடுத்துக் கொள்ளவேண்டும்" என்ற நிலைப்பாடு தான். சிலேட்டில் லக்ஷ்மி மணிவண்ணன் எஸ்.ரா பற்றி எழுதியிருந்தது தான் நினைவுக்கு வருகிறது "எஸ்.ரா ஒரு எழுத்து வியாபாரி, கடைத்தெருவில் தன்னுடைய நினைவுகளை விற்றுக் கொண்டிருக்கிறான்"

பிரச்சனை அத்தோடு நிற்கவில்லை. (பிரேம்) ரமேஷ் எழுந்து " என் மாலதி மைத்ரியினை யாராவது சொல்லியிருந்தால் மூன்று தலைகள் உருண்டிருக்கும்" என்று எச்சரிக்கை விடுத்ததாக படித்தேன். இது இன்னொரு விதமான ஆணாதிக்க சிந்தனை. குடும்பம், கல்யாணம் போன்ற நிறுவனமயமாக்கப்பட்ட விஷயங்களை தொடர்ந்து எதிர்த்து எழுதியிருக்கும் ரமேஷ் இன்று தன் இல்லாளாக அறியப்படும் மாலதி மைத்ரியினை முன்னிறுத்தி தன் தந்தை வழி சிந்தனையினை நிறுவுகிறார். ஆக மாலதி மைத்ரி இல்லாமல் வேறு யாராவது இருந்தால் தலைகள் உருளாது, மாலதி மைத்ரியாயின் தலைகள் உருளும். தமிழகத்தின் அறிவு ஜீவிகளின் தர்க்கங்களை நினைத்தால் புல்லரிக்கிறது. கொண்ட கொள்கையினை அடிப்படையாக வைத்து பிரச்சனைகளைப் பேசாமல், எனக்கென்றால் ஒன்று, மற்றவர்களுக்கு என்றால் ஒன்று என்று இனம் பிரிக்கும் மக்களை நினைத்தால் வாய் விட்டு சிரிக்க முடிகிறது. தமிழ்நாட்டில் அரசியல் குடுமிபிடி சண்டைகள் தான் மிகப் பெரிய பொழுதுப் போக்காக இருந்திருந்தது. இப்போது அதை தமிழ் அறிவுஜீவிகள் தீர்த்து வைக்கிறார்கள்.

இதனை இவ்வளவு தீவிரமாக எழுதுவதால் இன்னொன்றையும் இங்கே சொல்ல வேண்டியதிருக்கிறது. குட்டி ரேவதியின் மீது எனக்கு பெரிய அபிப்ராயங்கள் இல்லை. அவரின் 'முலைகள்' கவிதை தொகுப்போ, அவரின் எழுத்தோ என்னை என்றைக்கும் கவர்ந்ததில்லை. ஊடகங்கள் அவரை வைத்து பரபரப்பு தீனி போட்டுக் கொண்டு வாழ்ந்து வருகின்றன. இதேப் போல நிறைய பெண் படைப்பாளிகளை சொல்லலாம். ஆனால், இவையெல்லாம் கண்டிப்பாக படைப்பு ரீதியிலான, கருத்து ரீதியிலான பிரச்சனைகள். இன்றளவும், யாரும், எவரும் தத்தம் கருத்துகளை சுதந்திரமாகவும், சார்பில்லாமலும் வைக்கலாம் என்கிற ஆழமான சிந்தனையினையும், அளவற்ற சுதந்திர எல்லைகளையும் நிர்ணயித்துக் கொண்டிருப்பவன் நான்.இந்த பிரச்சனையினை கை நீட்டி கேட்ட மாலதி மைத்ரி தான் சில மாதங்களுக்கு முன்பு பெண் படைப்பாளிகளின் களமெது என்கிற பிரச்சனையும், சுகிர்த ராணி, வெண்ணிலா இன்ன பிற படைப்பாளிகள் எழுதுவதினை விமர்சித்தும் மூன்று மாதங்களுக்கு தீராநதியில் நேர் /எதிர் வினைகளாக தீனிப் போட்டுக் கொண்டிருந்தார். மாலதி மைத்ரியினை மதிக்கிறேன் என்பது இதற்கு சம்பந்தமில்லாத ஒன்று, ஆனாலும், அவரின் "போலீஸ்" கார மனப்பான்மையினை (யார் எதை எழுத வேண்டுமென்பது) எதிர்க்கிறேன். ஆக பெண் படைப்பாளிகள் என்று குறிப்பிட்டு சொல்லாமல் எல்லா படைப்பாளிகளிடமும் சில பிரச்சனைகள் இருக்கிறது.

இந்த பிரச்சனையின் இன்னொரு முகம் மனுஷ்ய புத்திரனது. ஒரு படைப்பாளர், பதிப்பகத்தார் என்ற முறையில் இந்த விழாவினை நடத்தியவர் மனுஷ். அவருடைய விழாவில் இந்த பிரச்சனையினைக் கேட்டார்கள் என்றதும் பொங்கி எழுந்து, திரைப்படமிடும் தியேட்டர்களில் மறியல் செய்ய வேண்டியது தானே என்றும், வன்முறையின் வழியில் விழாவினை தடுத்து நிறுத்தியவர்கள், ஊடகப் பரபரப்பில் உயிர் வாழும் ஒட்டுண்ணிகள் என்றும் சினந்து பேசியிருக்கிறார்கள். உங்கள் விழாவினை தடுத்து நிறுத்தியதன் கோவம் எங்களுக்கு புரிகிறது. தமிழ்நாட்டில் எத்தனை பேர்களுக்கு இந்த பிரச்சனை புரியும். இதில் திரையரங்குகளின் வாசலில் மறியல் செய்தால் என்ன சொல்வார்கள். "யார் எழுதினானோ அவனைப் போய் கேட்காம இங்க உட்கார்ந்திருந்தா இன்னா பிரயோசனம்"? என மறியலின் குறிக்கோள் எளிமையாய் சமன் படுத்தப்பட்டு விடும். எஸ்.ராவினை கேள்வி கேட்பது என்பது தான் குறிக்கோள். முதல் நிகழ்வாய் உங்கள் நிகழ்ச்சி அமைந்துவிட்டது அவ்வளவுதான். இதுவே புத்தக்காட்சியினுள் இருந்திருந்தால் வேறொரு பதிப்பகத்தார் இதை கேள்விக் கேட்டிருப்பார். குஷ்பு பிரச்சனையில் தலையங்கம் எழுதிய நீங்களும், இதை ஆதரித்து எழுதி இருப்பீர்கள். 'ஊடகப் பரபரப்பில் உயிர் வாழும் ஒட்டுண்ணிகள்' என்று விமர்சிக்கும் மனுஷ்யபுத்திரன், ஏன் சுஜாதாவின் புத்தக வெளியீட்டு விழாவினை பிலிம் சேம்பர் அரங்கிலும் (இருக்கைகள் அதிகமாக அரங்கு அது) நவீன படைப்பாளிகளின் வெளியீட்டினை புக்பாயிண்டிலும் வைக்கிறீர்கள்? சுஜாதா நிகழ்வுக்கு இயக்குநர் சங்கர் முதற்கொண்டு தமிழ் சினிமாவின் பெருந்தலைகள் வருவார்கள், ஊடகங்களில் செய்திகள் வரும் ஆனால், புக் பாயிண்டில் வெளியிடுவது சிற்றிதழ்களிலும், இணையப் பத்திரிக்கைகளிலும் தான் வரும். ஆக உங்களுக்கும் ஊடகங்கள் தேவை. ஊடகத்தினை உபயோகப்படுத்திக் கொள்வதில் மறுப்பேதுமில்லை. ஆனால், நீங்கள் உபயோகப்படுத்தினால் அது தமிழை வளர்க்கும், ஆனால் ஒரு பெண் படைப்பாளியானால் அது ஒட்டுண்ணி என்று சொல்வதை எவ்வித சிந்தனை என்று சொல்வது? ஆணாதிக்கமும், குழு மனப்பான்மையும் அல்லவா.

இதற்கு இணையாக எஸ்.ராவும், சுகிர்த ராணியும் செய்தியில் இணைகிறார்கள். சுகிர்த ராணி தன் துப்பட்டாவினை தூக்கி எறிந்து .................. க் காட்டி, அடுத்த படத்தில் "சுகிர்த ராணி ............க் காட்டி விட்டார்" என்று எழுதும் படியும் சொன்னார் என்று எஸ்ராவும், தான் துப்பட்டாவினை தூக்கி எறிந்தது உண்மையென்றும், ஆனால் வேறெந்த ஆபாச சைகைகளும் காட்டவில்லை என்று சுகிர்த ராணியும் சொல்கிறார்கள். ஆக அடுத்த மூன்று மாதங்களுக்கான சிறுபத்திரிக்கை content கைவசமிருக்கிறது. இந்நிகழ்வு மிகத் தெளிவாக சொல்வது இதுதான். எழுத்தில் எல்லோரும் புலிகள், பிரச்சனைகளை சந்திப்பதிலும், எதிர் கொள்வதிலும் அவர்கள் தமிழ்நாட்டில் கூலிவேலைக்கு போய் ஒரு நாளைக்கு ரூ 30 சம்பாதித்து வாழ்வினை எதிர்கொள்ளும் மனிதர்களை விட கீழானவர்கள். எழுத்து என்பது சத்தியம். உண்மை. சும்மா கால்வினோ, மார்க்கஸ், புயூகோ என்று படித்து ஜல்லியடித்தால் போதாது. அடிப்படை மனித நேயமில்லாத, பெண்களை சம ஜீவன்களாக மதிக்கத்தெரியாத, எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் இல்லாதவர்களாக தான் இவர்களின் தோற்றமுள்ளது. ரோசாவசந்த் மொழியில் சொல்லுவதனால் இவர்கள் அறிவுஜீவி பூர்ஷ்வாக்கள், அவ்வளவே. இவர்களை பின்தொடர்ந்து போவது வேலையற்றது. நாம் நம் வேலையை பார்ப்போம். இதுதாண்டி, இந்த மாத உயிர்மையில் நாஞ்சில்நாடனின் கட்டுரையினை படியுங்கள். மனிதர் வெளுத்து வாங்கியிருக்கிறார், தமிழ் சினிமாவையும், பிம்பங்களையும்.

பார்க்க: தமிழ் முரசு செய்தி

நேற்று (ஞாயிறு) விஜய் தொலைக்காட்சியில் மதன் - கமல் இடையே நடந்த நேர்காணலில், வழமையாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, 'மருத நாயகத்தினை' தொட்டார். வழக்கமான பல்லவிதான், நிதியில்லை என்று. முதலில் எழுத நினைத்தது கமல் நினைத்தால் 50 இல்லை 100 கோடி ரூபாய்களை இந்த படத்திற்காக எப்படி புரட்ட முடியும் என்பது பற்றி. அதற்குள் பெண் படைப்பாளிகள் பிரச்சனை வந்ததால், வேறொரு காலக்கட்டத்தில் எழுதுகிறேன்.

Comments:
insightful... thx
 
// என் மாலதி மைத்ரியினை யாராவது சொல்லியிருந்தால் மூன்று தலைகள் உருண்டிருக்கும்" என்று எச்சரிக்கை விடுத்ததாக படித்தேன். ஆக மாலதி மைத்ரி இல்லாமல் வேறு யாராவது இருந்தால் தலைகள் உருளாது, மாலதி மைத்ரியாயின் தலைகள் உருளும். //

முதன் முதலில் கேள்விப்பட்ட போது எனக்கு தோன்றியதும் இதுதான்.. மற்றொரு அரைவேக்காட்டுத்தனம் பிரபஞ்சனுடையது. கு.அழகிரிசாமியின் கடிதங்கள் வெளியிட வந்தவர் வேறு ஒரு படைப்பாளியின் ப்ரச்னை காரணமாக வெளியேறுகிறேன் என்று வெளிநடப்பு செய்தால் அப்புறம் இந்த படைப்பாளிக்கு என்ன மதிப்பு.

// பிரச்சனைகளை சந்திப்பதிலும், எதிர் கொள்வதிலும் அவர்கள் தமிழ்நாட்டில் கூலிவேலைக்கு போய் ஒரு நாளைக்கு ரூ 30 சம்பாதித்து வாழ்வினை எதிர்கொள்ளும் மனிதர்களை விட கீழானவர்கள். //

இது இங்கே அபஸ்வரமாக தெரிகிறது. உண்மையில் தினக்கூலிகள் ப்ரச்னைகளை சந்திப்பதில் மத்திய/மேல் வர்க்கத்தை விட ஒன்றும் குறைந்தவர்கள் அல்ல.
 
ரமேஷ் பிரேமை நான் ஒரு கவிஞனாகவே ஏற்றுக் கொண்டதில்லை! அவன் வாயில் இருந்து வரும் கவிதைகள் எல்லாம் செக்சாகவே இருக்கும். அவன் ஒரு லூசுப்பையன்.

இந்த எஸ்ரா விஷயத்தில் அனைவரும் தவறாகப் புரிந்து கொண்ட்டார்காளோ என்னவோ..
 
புத்தக விழாவிலே இவ்வளவு பக்கநிகழ்வுகளா?
:O
 
நான் எழுதிய முதல் பின்னூட்டம் என் mugamoodicomments பதிவில் நகலாக இருக்கும் ;)
 
அசிங்கமா இருக்கு. இந்த மாதிரி 'வசனங்கள்' - இத எதிர்க்கிறத just 'விளம்பரம்' எண்டிற 'புரிதல்' - எல்லாமே.
//தமிழ் சினிமாவின் இயக்குநர்களும், தமிழ் இலக்கியத்திற்கும் உள்ள தூரம் எல்லோரும் தெரிந்ததே. //
குட்டி ரேவதி என்கிற பெயரைப் பற்றி லிங்குசாமிக்கு (இயக்குநர்) வேணா தெரியாம இருக்கலாம். எஸ்.ரா. அது யஸ்ட் இன்னொரு பெயர் எண்டிறது நம்பவே முடியாததே. அவரே எழுதாட்டிலும் அதற்கான பொறுப்பு அவரோடதே.
இந்த மாதிரி வசனங்கள் கு.ரேவதி மாதிரி பெண்ணிற்கு 'விளம்பரம்' ஆக இருக்குமானால் - அது நல்லதே.
ஆனால்பெண்கள் தலைமுடியிலிருந்து கால்நகம் வரை அழகு என வளர்க்கப்பட்ட/படுகிற சூழிலிருந்து இந்தப் பெண்கள் எழுத வருகிறார்கள். அவர்கள்மீது, அவங்கட 'மூஞ்சி', அவங்க வைத்த தலைப்பிற்கும் அவங்கட உறுப்பிற்கும் உள்ள போதாமைகள் - எனத் திரும்பவும் திரும்பவும் 'முகம்' 'உடல்' எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றிய (தங்களது) மரபையே எழுத்தாளர்கள் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். படைப்புக் குறித்த உருப்படியான ஒரு உரையாடலை விவாதத்தை அதன் 'சரியான தரம் குறித்த' விமர்சனத்தை தருகிற நோக்கமில்லை.

இதில எஸ்.ரா. இப்படியொரு வக்கிரமான, மிகவும் வன்மமா ஒரு வசனத்தை எழுத முடிந்திருக்குமெண்டிறதே மிகவும் கஸ்ரமா இருக்கு. ('பாபா' எஸ்ரா என எல்லாம் எஸ்.ரா விமர்சிக்கப்பட்டாலும் -எழுத்து வியாபாரி!-தான் என்றாலும்; கட்சியையோ கொள்கையையோ சாராத சுயாதீனமான படைப்பாளிகள் சினிமாவிற்கு போவது தொடங்கி, செய்யக் கூடிய 'சினிமா' தொடர்பான சமரசங்கள் குறித்தெல்லாம் எஸ்.ரா. முதல் ஜெ.மோ. வரை எனக்கு அதில ஒரு பிரச்சினை இருப்பதாய் தெரியவில்லை, அது அவங்கட தேர்வு, உரிமை, சுதந்திரம்). ஆனா அவசியமில்லாத -சினிமா பார்வையாளர்கள் பெரும்பாலும் அறிந்தேயிராத- இது 'தற்செயலா' எப்பிடி இருக்க முடீயும் என்று புத்தி தேடுகிறது. என்னடாப்பா, தமிழ் சினிமாவில சமரசம் செய்யவே எத்தனை விசய்ஙக்ள இருக்கு! :-(


அவரோட எழுத்து உருவாக்கிற சுதந்திர உணர்வையே பாதிக்குது.

அப்புறம்
மனுஸ்யபுத்தரன், இன்னொண்டும் சொல்லி இருக்கிறார், "இப்படியான ஆக்களுக்க அறிவுலகத்தில இடமில்ல" - யாருக்கு வேணும் அறிவுலகத்தில இடம்? மனிசரா முதல்ல மதிக்கோணும். ஒரு பெண், -பெண்ணிலைவாதி கவிஞர் என்கிற புனைவுகளுக்கு அப்பால- அவள் படைப்பில பேசி இராத, வாதாடாத, அவளோட தோற்றம் பற்றிய காமெண்ட்
(இதைதான் சின்ன வயதிலிருந்து ஆண்கள்/குடும்ப அங்கத்தவர்கள் கணவன் /காதல்ன என எல்லோரும் குறிப்பிட்டு வருவதும்),அது, அவளை அணுக எவ்வளவு கேவலமான தந்திரம்?
இதை
ஒரு பெரிய ஊடகத்தில காட்டறபோது அது 'சாதாரண விசயம்' எண்டு என்னெண்டுதான் எழுதிறாங்களோ.
தங்கர் கேட்டதுக்குச் குஷ்பு மன்னிப்புக்கேட்டதும் சரியாப்போச்சு விசயம் முடிஞ்சுது ரெண்டும் சமமாயிட்டு என்ற ரீதியில 'புரிந்து' கொள்வதால வாற கஸ்ரம்தான்.

மற்றப்படி, மாலதி மைத்ரி மற்றும் பெண் எழுத்தாளர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்வது (உமா மகேஸ்வரியின் எழுத்தை மா.மைத்ரி பூஞ்சைத்தனமானது என்றெழுதினாலும் :-( )
எழுத்தில் வைக்கப்படுகிற இவையை ஒரு positive-ஆன அம்சமாகவே பார்க்கிறேன். மாலதி மைத்ரியோட பொலிஸ் தன்மை அல்ல, இதுவரையில் விமர்சகன்கள் கொண்டிராத எந்த பொலிஸ்தனமும் அவரிட்ட 'புதுசா' இல்ல. பெண்கள் என்றால் கூட்டிணைந்து, ஒற்றுமையாய், சகோதரத்துவத்தை கட்டிக் காக்க வேண்டும் என நினைப்பதில் உடன்பாடில்லை. அவங்களுக்குள்ள விமர்சகர்களும் சுயமுரண்பாடுகளும் வேணும். அதனால, (பெண்களை மட்டும்) ஒரே மாதிரி ஒலித்துக்கொண்டிருக்கக் கேட்பதாவே பார்க்க முடியுது.

மொத்தத்தில, மாலனோட பதிவில படித்தபோது (சண்டைக்கோழி பாத்தில்லாததால) இந்தக் கவிஞர்களோட அணுகுமுறை, மரபான மனதில கொஞ்சம் ரவுடித்தனம்போலவே பட்டிருந்தது, ஆனா இந்த வசனத்தைப் பார்த்தும் என்ன சொல்லுறதெண்டே தெரியேல்ல. தனிப்பட்ட கோபம் தான் ஏதும் இருந்தாலுங் "கூட" எஸ்.ரா போன்ற எழுத்தாளர் இப்படி அதைக் காட்டி முடியுமா என்றெல்லாம் தோணுகிறது.

அணுகுமுறைகளே(தடாலடித்தன்மைகள்!) தங்கிப்போகிற யதார்த்தத்திற்கு, எஸ்.ரா இதில் எதும் புரிந்துகொள்வாரே தெரியாது. ஆனா அனா அகமத்தோவா ஆன் செக்ஸ்டன் என உலகளாவிய (இறந்து போன) பெண் கவிஞர்கள் பற்றி அவர்களோட வாழ்வியல் சிக்கல் பற்றி எழுதுகிற ஒருவர் தடாலடித்தன்மைகளிற்கு அப்பால் பதிந்திருக்கக்கூடிய காயத்தைப் புரிந்துகொள்ள முடிந்தால் நல்லது.

அது நடக்குதோ நடக்க இல்லியோ ஆட்கள் மட்டும் -இந்த வன்முறை சார்ந்த பேச்சை/புரிதலை விட, உயிர்மை மேடையைத் தேர்நதெடுத்தது, இப்பிடி மறிப்பு செய்தது (hot topic: சுகிர்தா ராணி துப்பட்டா) - போன்ற விசயங்களையே சரியா பிழையா எனப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
 
அய்யர் பசங்க இப்டியே ஒர்த்தனை ஒருத்தன் அடிச்சிண்டு செத்தாதான் உண்டு.
 
பல கோணங்களிலிருந்து பார்த்து ஆழ்ந்து எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

அத்தனை பேரில் பிரபஞ்சனின் செயல்தான் எனக்கு அபத்தத்தின் உச்சகட்டமாகப் படுகிறது.

தான் பெற்ற அறிவை அடிப்படையாய்க் கொண்டு ஜீவிப்பவர்கள்தான் என் பார்வையில் அறிவுஜீவிகள். தம் அறிவைப் பேச்சில் வெளிப்படுத்தினால் மட்டும் போதாது. வாழும் முறையிலது வெளிப்படவேண்டும். அப்படிப் பார்த்தால் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட எவருமே அறிவுஜீவிகளல்ல என்றுதான் என் சிற்றறிவுக்குப் படுகிறது.
 
பல கோணங்களிலிருந்து விரிவாக அலசியிருக்கிறீர்கள், நன்றி.

உண்மையில் எஸ்.ரா இதை எழுதி, தான் எழுதவில்லை என்று பொய் சொல்லியிருக்கிறார் என்றால், அதை விட கீழ்த்தரமான கேவலம் இல்லை - மனிதரிடம் நாகரீகமும் இல்லை, யோக்கியமும் இல்லை என்றாகும்.

ஆயினும், இதன் மூலம் குட்டி ரேவதியும் சுகிர்தராணியும் யாரென்று தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறியத் தந்ததற்கு எஸ்.ராவிற்கு அவர்கள் எதிர்காலத்தில் விழா எடுக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். :-)
 
நல்லகண்ணு அவர்களை அழைத்து அவமானப்படுத்திய செயலை வன்மையாய் கண்டிக்கிறேன்.

எஸ்.ரா, தனக்கு தெரியாமல் நடந்து என்று சொல்வதை உண்மை என்றுக் கொண்டாலும், படம் வெளியான பிறகு அவருக்கு விஷயம் தெரியாமாலா
போயிருக்கும்? ஒரு தவறு நடந்தால், அதை ஒத்துக் கொள்ளும் மனபக்குவம் வேண்டும். அந்த நேர்மை அறிவு பெருக, பெருக
குறைந்துப் போய் கயமையே அதிகரிக்கிறது. அடுத்து, அந்த சொல் "ரேவதிக்குட்டி" என்று இருந்தால் சாதாரணமாய் புழக்கத்தில்
இருக்கும் பெயர் என்று சொல்லலாம். ஆனால் குட்டி ரேவதி என்பது அபூர்வமான பெயர், ஆக எங்கோ இடிக்கிறது :-)
இத்தனை பிரச்சனையில் ஒரு வார்த்தை மன்னியுங்கள் என்று சொல்லிவிட்டால் பிரச்சனை ஆகியிருக்காது. ஆனால் பிரச்சனை
பெரியதாக வேண்டும் என்று சம்மந்த பட்ட இரண்டு பார்ட்டிகளும் நினைத்தால் :-)))
 
படத்தை இன்னும் பார்க்கவில்லை. இருப்பினும்கூட, குட்டி ரேவதி என்னும் பெயர் அவ்வளவு "பொதுவான" நாமகரணம் என்பது அபத்தம். தான் எழுதவில்லை என்று கூறும் எஸ்.ரா, அது உண்மையெனில் குறைந்தபட்சம் படம் வந்தபிறகாவது தெளிவுபடுத்தியிருக்கலாமே? நல்ல படைப்பாளிகள் திரைக்கு வருவது வரவேற்கப்படவேண்டிய விஷயமென்று நினைக்கையில் இந்த மாதிரி மலிவான விஷயங்களால் தங்களைத் தானே தாழ்த்திக்கொள்வதுதான் நடக்கிறதென்பது வருந்தவைக்கும் விஷயம். சே. அட்சரம் வலைப்பதிவிலிருந்து 'ஆய்த எழுத்து' விமர்சனம் காணாமற்போனபோதே ஏதோ உறுத்தியது.

உபரியாக கொறிக்கக் கிடைக்கும் வேர்க்கடலை: இவ்வளவு டயலாக் உட்டாங்க, இவங்க என்ன பெரிய 'இவ...ங்களா?', சினிமாவுக்கு வந்ததும் என்னாச்சு பார்த்தியா? சினிமாவுக்குப் போன புதுமைப்பித்தன், வார்னர் பிரதர்ஸ் வறுத்தெடுத்த வில்லியம் ஃபாக்னர் என்று எழுதிக்கொண்டே போகலாம்.

தொடர்புள்ள ஒரு படத்தைப் போட்டுவிடுகிறேன், எங்கே பொருந்துகிறதென்று நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் ;-)

Guy Pene Du Bois (1884-1958)
Country Wedding (1929)
American artist and critic Guy Pene Du Bois made this picture after attending a wedding in the French countryside. He described the affair as a provincial event, where the guests stared at the bride as if she were nude. He therefore depicted the scene in such a manner, poking fun at the guests by giving them ghoulish, clownlike appearances. In so doing, Du Bois also puts the viewer in the very position he ridicules.
 
நல்ல பதிவு நாராயணன்.

//அப்புறம் மனுஸ்யபுத்தரன், இன்னொண்டும் சொல்லி இருக்கிறார், "இப்படியான ஆக்களுக்க அறிவுலகத்தில இடமில்ல" - யாருக்கு வேணும் அறிவுலகத்தில இடம்? மனிசரா முதல்ல மதிக்கோணும். //
இது தவறான பார்வை. அறிவுலகத்தில் யாருக்கு இடம் யாருக்கு இடமில்லை என்பதை யாரும் மனுஸ்ய பித்துளறன் சொல்லமுடியாது. :-) அவரவரின் இடமும் , வெளிப்பாடுகளும் இயல்பாய் நடப்பது.


சன்னாசி படம் யோசிக்க வைக்கிறது.
 
//படத்தை இன்னும் பார்க்கவில்லை. இருப்பினும்கூட, குட்டி ரேவதி என்னும் பெயர் அவ்வளவு "பொதுவான" நாமகரணம் என்பது அபத்தம். தான் எழுதவில்லை என்று கூறும் எஸ்.ரா, அது உண்மையெனில் குறைந்தபட்சம் படம் வந்தபிறகாவது தெளிவுபடுத்தியிருக்கலாமே? நல்ல படைப்பாளிகள் திரைக்கு வருவது வரவேற்கப்படவேண்டிய விஷயமென்று நினைக்கையில்...//
மேலே சன்னாசி கூறிய கருத்துக்களைத்தான் நானும் யோசித்திருந்தேன். பொடிச்சி கூறியதுமாதிரி, எஸ்.ராவின் எழுத்துக்களில் பெண்களை அவமானப்படுத்தாத விதமாயும், அவர்களின் காயங்களையும் புரிந்துகொண்ட வித்மாய் எழுதிய ஒருவரா - நான் மிகவும் மதிக்கின்ற நவீன கதைசொல்லி- இப்படி எல்லாம் செய்துகொண்டிருக்கின்றார் என்றபோது அலுப்பே மிஞ்சுகிறது. சன்னாசி குறிப்பிட்டமாதிரி, படம் வெளிவந்தபின் அந்த வசனத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றாவது வெளிப்படையாகக் கூறாமல், எதிர்ப்பு வரும்போது நான் எழுதவில்லை என்று கூறுவது அபத்தமாயிருக்கிறது.

விகடனில் எஸ்.ரா, தமிழ்ச் சிறுகதைகளை அறிமுகஞ்செயத பத்தி முடிந்தபின் (அவை குறித்து எனக்கு வேறுவிதமான விமர்சனங்கள் இருந்தாலும்), கடைசி இதழில் ஒரு நாயகத்தன்மையுடன் படங்கள் எடுத்து ஏதோ ஒரு கட்டுரை எஸ்.ரா எழுதியிருந்தது ஏதோ மனதை உறுத்தியிருந்தது.//எஸ்.ரா ஒரு எழுத்து வியாபாரி, கடைத்தெருவில் தன்னுடைய நினைவுகளை விற்றுக் கொண்டிருக்கிறான்"// என்று ல்க்ஸ்மி மணிவண்ணன் கூறியிருந்ததற்கு அண்மையாய் இருநதது. கிட்டத்தட்ட அதையே அனிச்ச இதழில் அ.மார்க்ஸும், எஸ்.ரா பற்றி ஒரு கட்டுரையில் எழுதியிருக்கின்றார்.
......
(ரமேஷ்)-பிரேமின் மேடையில் பேசிய கருத்தில் ஆணாதிக்க கருத்தை அடையாளங்கண்டாலும், அது அந்தக்கணத்தில் எழுந்த உணர்ச்சியின் நிமிர்த்தம் என்றுதான் (எனக்குப்) படுகின்றது. தீராநதியில் மாலதி மைத்ரிகும், லக்ஸ்மி மணிவண்ணனுக்கும்- பெண் கவிஞர்கள் தொடர்பாக- நடந்த தீவிர விவாதங்களைப் பார்த்தால் பிரேமின் intention அதுவல்லவெனப் புரியும். குட்டி ரேவதிக்கு துணைக்கு ஒருவருமில்லை என்ற காரணத்துக்காய்தானே இப்படியெல்லாம் எழுதுகின்றீர்கள் என்ற அர்த்தத்தில் அவர் கூறியிருக்கலாம் (ஒரு பெண்ணுக்கு ஆண் துணைதான் தேவை என்றரீதியில் நான் இதைக் குறிப்பிடவில்லை. What i meant is moral support).
.....
மற்றும்படி எஸ்.ரா இப்படி இருப்பதால் அவர் எழுதியவை எல்லாம் குப்பைகள் என்று எப்படிச் சொல்லமுடியாதோ அப்படியே, ரமேஷ்-பிரேமின் எழுத்துக்கள் குப்பைகள் - முகமூடி சொல்கின்றமாதிரி- என்றேல்லாம் கூறமுடியாது. பிரமீளுக்கு அடுத்து என்னைக் கவர்கின்ற/பாதிக்கின்ற எழுத்துக்கள்-முக்கியமாய் கவிதைகள்-அவர்களுடையது. அதுகுறித்து விரிவாக இன்னொருதளத்தில் )உரையாடமுடியும்.
 
This comment has been removed by a blog administrator.
 
Sorry, I just have found out that the second comment of Mugamoodi was not the original Mugamoodi. I'm saying sorry to 'real' mugamoodi for mentioing his name in my first comment.
 
எஸ்.ராவின் ஒத்தை வரி டயலாக்கை வைத்து தமிழ் சினிமாவில் பெண்களுக்கு 'எதிரான' போக்கை வழக்கம் போலவே அலசி காயப்போட்டுட்டீங்க! எத்தனை நாளைக்கு இப்படியொரு ரிப்பீட்டு ஸாரே?! பிள்ளையார் படம் போட்ட காலணியால் நமக்கு கோவம் வருகிறதேன்னு சொல்றதை பார்த்தா கோவத்தை நியாயப்படுத்துற மாதிரி இருக்குதே! ஜாக்கிரதை... காவி கட்டிவிட இங்கே ஆட்கள் அதிகம்.

எஸ்.ராவும் ஜெயமோகனும் எல்லா விஷயத்துக்கும் கருத்து சொல்லியே ஆகவேண்டும் என்கிற அவசியமில்லையே! இன்று வீதிக்கு வந்து போராடும் எல்லா கவிதாயினிகளுமே அன்று குஷ்பு விவாகரத்திற்கு கருத்து சொல்லியிருக்கிறார்களா? ஆக மொத்தம் சினிமாவுக்கு போன சித்தாளாக இதுவரை சுஜாதாவை மட்டும்தான் சுரண்டிக்கொண்டிருந்தார்கள். இப்போது எஸ்.ராவும் லிஸ்டில் இணைந்திருக்கிறார். பிரபஞ்சனை பத்தி எதுவும் சொல்ல வேண்டாம் என்று நீங்கள் முடிவு செய்ததும் சரிதான். அவர் காமெடியனாகி ரொம்ப காலமாகிறது!
 
நன்றிகள்.

//எஸ்.ராவும் ஜெயமோகனும் எல்லா விஷயத்துக்கும் கருத்து சொல்லியே ஆகவேண்டும் என்கிற அவசியமில்லையே! இன்று வீதிக்கு வந்து போராடும் எல்லா கவிதாயினிகளுமே அன்று குஷ்பு விவாகரத்திற்கு கருத்து சொல்லியிருக்கிறார்களா?//

ராம்கி,
எஸ்.ராவும், ஜெயமோகனும் கருத்து சொல்லவில்லை என்பது உண்மை. இன்று போராடும் எல்லா கவிதாயினிகளும் தங்களின் குறைந்த பட்ச எதிர்ப்பினையாவது பதிவு செய்திருக்கிறார்கள். புக்லேண்ட்ஸில் பழைய சிற்றிதழ்களை தேடிப் பார்த்து படித்துக் கொள்ளுங்கள். இது தாண்டி, இந்த மறியலில் கலந்து கொள்ளாத, கனிமொழி போன்றவர்கள் முதலில் பேசியிருக்கிறார்கள்.

பிரபஞ்சனைப் பற்றி நான் எதுவும் எழுதவில்லை, காரணம் அவரின் முடிவோடு ஒத்துப் போகிறேன். அவரை காமெடியன் என்று தரம்தாழ்த்துவதில் எனக்கு விருப்பமில்லை. வேண்டுமானால் கொஞ்சம் வழவழாவாக இருக்கலாம். ஆனால் "ரஜினி சார்" என்கிற அளவிற்கு இறங்கவில்லை. அந்தளவில் பிரபஞ்சனை விட எஸ்.ரா பெரிய காமெடியனாகவும், சந்தர்ப்பவாதியாகவும் தெரிகிறார். இதனால் உடனே நீங்கள் சினிமாவிற்கு போன சித்தாளு கதையினை எடுக்காதீர்கள். "பாய்ஸ்"க்கு எதிரான போதும், சுஜாதா என்றைக்கும் "சங்கர் சார்" என்று சொன்னதாக நான் அறியவில்லை,

தமிழ் சினிமாவில் பெண்களுக்கு எதிரான போக்கினை தொடங்கி வைத்தவர்கள் என்று பார்த்தால் எம்.ஜி.ஆரிலிருந்து ஆரம்பிக்கலாம். நான் ரஜினி என்று குறிப்பிட்டவுடன் நீங்கள் உடனே "அலசி காயப் போட்டு, ரிபீட்டுக் கொடுத்ததாக" ஆதங்கப்படுகிறீர்கள். நல்லது, உங்களின் ரசிக மனோபாவம் உங்களது. என்னுடைய கவலை என்னுடையது. இது மட்டுமல்லாமல், எப்ப்போது நேரம் கிடைக்கிறதோ, பிரச்சனைகள் வருகிறதோ, தமிழ் சினிமா / பெண்கள் / சுதந்திரம் என்கிற வட்டத்திற்குள்ளேயே தொடர்ந்து செயலாற்றுவதில் எனக்கு பிரச்சனையில்லை. மிகச் சுலபமாக குஷ்பு விவகாரத்தினை நீங்கள் மறந்து விடுவீர்கள், ஆனால் என்னால் முடியாது. சுதந்திரத்தின் குரல்வளையை கவ்வும் ஒரு பாசிஸ செயலாக தான் இன்றைக்கும் அதனை பார்க்கிறேன். அதனை எந்த காலத்திலும் ஒப்புக் கொள்ளவோ, மறக்கவோ இயலாது. தொடர்ச்சியாக, பெண்கள் கருத்து சொன்னதிற்காகவும், கருத்துகளை எடுத்து இயம்புவதற்காகவுமே இங்கே 'அர்ச்சிக்கப்படுகிறார்கள்' என்பது ஒரு சாதாரண விஷயமாக உங்கள் கண்களுக்கு தெரிந்தால் நானொன்றும் செய்யமுடியாது, தொடர்ந்து ஊடகங்களில் எழுதுவதையும், செயலாற்றுவதையும் தவிர.

பிள்ளையார் படம் போட்ட காலணி என்று சொன்னது ஒரு ஒப்புமைக்கு. கடவுள் இல்லை என்கிற கருத்தியலில் தீவிரமாக இருக்கிற என்னைப் போன்றவர்களுக்கு பிள்ளையாரும், காலணியும் ஒன்றுதான். ஆனாலும், அங்கே குறிப்பிட்டது பொதுவான ஒப்புமைக்கே.
 
//எஸ்.ராவும் ஜெயமோகனும் எல்லா விஷயத்துக்கும் கருத்து சொல்லியே ஆகவேண்டும் என்கிற அவசியமில்லையே//

ராம்கி இது புத்திசாலித்தனமா தெரியுது....நேர்மையா தெரியல..எழுத்தில ஒரு நேர்மை..
உள்ளுணர்வு , வெங்காயம் என்றெல்லாம் பாண்டவம் படிச்சுட்டு இப்படி பண்றது தவறு..
 
அடேங்கப்பா! 'அடக்கி வாசிக்கறது' என்பது இதுதானோ?!

ரமேஷ் தன் மனைவி குறித்து இப்படி எழுதியிருந்தால் நாகரீக எதிர்ப்பையும் மீறி வன்முறையில் கூட இறங்கியிருப்பேன் - என்பது இங்கே 'பெரியவர்களுக்கு' முற்போக்கு பூதக்கண்ணாடியில் பெரிசாக கீறல் விழுந்து தெரியுது!

குஷ்பூ- சுகாசினி விவகாரத்தில் வரிந்து கட்டிக் கொண்டு குதித்தவர்கள், அவர்களோடு சேர்ந்து சேர்ந்திசை பாடிய பெண்கள் எல்லோரும் இப்போது ஒரு கனமான தொண்டையடைப்புக்குள்ளாகி இருப்பது தெரியுது!

வாழ்க! :)
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]