Feb 26, 2006

கொத்து பரோட்டா - கொஞ்சம் காரமாய்

ஜார்ஜ் புஷ், திரும்பிப் போ!

அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் புஷ் இந்தியாவிற்கு வரவிருக்கிறார். சதான் உசைன் ஒரு போர்க் கைதி என்றால், புஷ்ஷும் இன்னொரு வகையில் போரினை தூண்டிய குற்றத்திற்காக கிரிமினல் வழக்கிற்கு உள்ளாகும் அளவிற்கு தகுதியுள்ளவர். இதை விட மிக கொடிய விஷயம், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் ஊடகங்களையும், இணைய பக்கங்களையும் நிரப்பியவர். அமெரிக்க அடிப்படைவாத கிறிஸ்துவவாதத்தின் பேரரசராக தன்னை அறிவித்துக் கொண்டு, அதற்காக, பல்வேறு ஆப்ரிக்க பழங்குடி மக்களையும், மொழிகளையும், அடையாளங்களையும் சிதைத்தவர். இவையெல்லாம் தாண்டி, அவரின் மதவெறி முகம் அவருடைய இந்திய ப்ரோகராமில் தெரிகிறது. வழக்கமாக இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள், மரியாதை நிமித்தம் காந்தி சமாதிக்கு செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை புஷ் போகப் போவதில்லை
"When asked -- by reporters on a recent trip aboard Air Force One -- if he will be breaking a decades long tradition of foreign dignitaries visiting India paying respect to the Father of India, Mr Bush, as is his wont, was caught off guard and mumbled something about how the Gospel of Jesus Christ views cremation as a pagan practice."
[பார்க்க ரிடிப் செய்தி] இதை விட பெரியதாய் இந்தியாவினை அவமானப்படுத்த முடியாது. இது தாண்டி, புஷ் இங்கே வந்தால் என்ன பேசுவார் என்பது ஒரளவிற்கு உலக வர்த்தகத்தினையும், அமெரிக்க எதிர்ப்பலைகளையும் உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்கு தெரியும். இந்த வார தெஹல்காவில் நிருபர் அமித் சென்குப்தா எழுதியிருப்பது மிக முக்கியமானது.
"This is because Bush is evil, he represents the new, most rapacious, greedy, perverse and schizophrenic invaders of the postmodern era, sometimes even worse then Adolf, worse because these born again crusaders are driven by a double crusade of capitalist profit and religious supremacy."
இது தாண்டி, புஷ்ஷினை திரும்பி போக சொல்லும் வலைப்பதிவும் முக்கியமாய் குறிப்பிடவேண்டியது. ஈரான், தஜகிஸ்தான், பாகிஸ்தான் பற்றிய பேச்சுக்களும், அணுக்கூடங்களைப் பற்றியும் பேசுவார். போகிற போக்கில் நாய்க்கு இடப்படும் பொறையாக நமது H1-B விசாக்களைப் பெருக்குவதினை சொல்லிவிட்டு போவார். நாமும், வாலாட்டிக் கொண்டு டாலர்களையும், அமெரிக்க செளக்கியங்களையும் பெற்று சகல சம்பத்துக்களுடன் இஷ்டமித்ர பந்துகளுடன் சுகமாக வாழ வழி பிறக்கும்.

படிக்க - ரிடிப் செய்தி | தெஹல்கா | புஷ் ஒரு உலக தீவிரவாதி வலைப்பதிவு

பின்குறிப்பு: புஷ் இன்று [2.3.2006] காலை பத்து மணியளவில் ராஜ் காட்டிற்கு [காந்தி சமாதி] சென்றிருக்கிறார்.

ஒரு படமும் அதன் செய்தியும்

கல்யுக் படத்திற்கான எனது விமர்சினத்தில் எல்லோரும் கேட்டது ஏன் ரங் தே பசந்தி படத்திற்கு விமர்சனமெழுதவில்லை?. உண்மையில் சொல்லப் போனால், ரங் தே பசந்தி ஒரு well made film. அவ்வளவே, மற்றபடி அந்த படத்தின் உள்ளடக்கத்திற்கும் எனக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இன்றைய இளைய சமுகம் இந்தியாவினைப் பற்றிய கவலை கொள்ளவில்லை என்றும், அதற்கு ஒரே வழி ஆயுதம் எடுப்பதும்,லஞ்சம் வாங்குபவர்களை கொன்று குவித்தால் நாடு சுபிட்சமாகிவிடும் என்றும் சொல்லும் இன்னொரு படம் [ அன்னியன் இன்னொரு எகா]. இதுதாண்டி, மணிரத்னம் சொல்லும் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் நாடு மாறிவிடும் என்கிற இன்னொரு ஜல்லி [ஆயுத எழுத்து]. கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஜ ஐ எம் - அஹமதாபாத்திலிருந்து சில பேராசிரியர்களும், மாணவர்களும் சேர்ந்து பீகார் தேர்தலுக்கு முன் எல்லா வேட்பாளர்கள் பற்றிய செய்திகளை திரட்டி, மக்களுக்கு கூட்டம் கூட்டி சொன்னார்கள். அவர்கள் சொன்னதில், கிரிமினல் வழக்குகள், கொலைக் குற்றங்கள், சொத்து குவிப்பு விவரங்கள் என எல்லாம் திரட்டி, ஒவ்வொரு வேட்பாளர்கள் பற்றியும், மக்களுக்கு எடுத்து சொன்னார்கள். பதினைந்து வருட லாலுவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. சமீபத்தில் சில ஐஐஎம் மாணவர்கள் ஒரு அரசியல் கட்சியினை ஆரம்பித்திருக்கிறார்கள் என்ற செய்தியினை படித்தேன். மாணவர்கள் புரட்சியினாலும், அரசியல் பங்கீட்டினாலும் தான் மாணவர்களின் தலைவராக இருந்த பிரபுல்ல குமார் மஹந்தா அஸ்ஸாமிற்கு முதலமைச்சராக முடிந்தது. இதையெல்லாம், ஒரங்கட்டிவிட்டு, வெறுமனே நான்கு பேரை கொலை செய்வதன் மூலம், pseudo தேசப்பற்றினை ரங் தே பசந்தியில் விதைத்திருக்கிறார்கள். ஐபின் லைவின் முதன்மை நிருபரும், ராஜ்தீப் சர்தேசாயின் மனைவியுமான சகாரிகா கோஸ் கிழித்து எடுத்திருக்கிறார் இந்த படத்தினை. உண்மையிலேயே, இது ஒரு முக்கியமான பதிவு. பாக்ஸ் ஆபிஸிலும், பிற பத்திரிக்கைகளிலும் மிக முக்கியமான படமாக இது முன்னிறுத்தப்படும் இந்த கால கட்டத்தில் இந்த விமர்சனம் மிக முக்கியமானது.

பார்க்க - சகாரிகா கோஸின் வலைப்பதிவு

ஜெஸிக்கா பேருக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

ஜெஸிக்கா லாலின் கொலை வழக்கில் சாட்சிகள் கலைக்கப்பட்டிருக்கிறார்கள். காவல்துறை தெரிந்தே சாட்சிகளை குலைத்திருக்கிறது. இந்தியாவே பொங்கி எழுந்து, இந்த கொலைக்கான குற்றவாளிகளை தண்டிக்க காத்திருக்கிறது. இன்னபிற செய்திகள் எல்லா ஊடகங்களிலும். என்.டி.டிவி ஒரு படி மேலே போய் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை ஒயமாட்டேன் என்கிறது. சசி இதைப் பற்றி அழகாக எழுதியிருக்கிறார். வீரப்பன் தேடுதல் வேட்டையில் சிக்கி இன்னமும் சிறையிலிருக்கும் 160 சொச்ச மனிதர்களுக்காக ஒரு பத்திரிக்கையும், டிவியும் முழுமையாக பேசவில்லை. கோயமுத்தூர் குண்டு வெடிப்பு கலவரத்திற்காக தடாவில் சிறையிலிருக்கும் அப்பாவி இஸ்லாமியர்களைப் பற்றி ஒரு தொலைக்காட்சியும் படம் பிடிக்க போகவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் இந்திய ராணுவத்தினரின் அத்துமீறல்களில் பாதிக்கப்பட்ட பழங்குடி மண்ணின் மைந்தர்களைப் பற்றி ஒரு செய்தித்தாளும் எழுத துணியவில்லை. ஊடகங்களுக்கு தேவை கிளாமரும், நெக்குருகும் மனிதர்களும். இதே பத்திரிக்கைகள் தான் டெல்லியில் குடிசைகளும், பிற கட்டிடங்களும் இடிக்கப்பட்டப்போது "சட்டம் தன் கடமையை செய்யும்" என்று சிவாஜி பாணியில் சொல்லிவிட்டு, இரண்டு பேஷன் டிசைனர்களின் பெருங்கட்டடங்கள் இடிக்கப்பட்ட போது அவர்களை பேட்டியெடுத்து போட்டன. ஐபிஎன் லைவ் ஆரம்பித்தப்போது அது ஒளிபரப்பிய ப்ரமொ விளம்பரங்களில் ராஜ்தீப் ஒன்று சொல்வார் "ஏன் மும்பை மரைன் டிரைவில் நடக்கும் ஒரு சிறு சம்பவம் செய்தியாகிறது. இந்தியாவின் ஒரு மூலையில் ஒரு கிராமத்தில் நடக்கும் நிலப்பிரபுதன்மையும், அதன்மூலம் நிகழ்த்தப்படும் வன்புணர்வும் செய்திகளாக்கப்படுவதில்லை" ஜெஸிக்கா லால் ஒரு மாடல், இது ஒரு துயரமான சம்பவம் என்பதை தாண்டி இதை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதில் ஊடக கயவாணித்தனமும், வணிக நோக்கும் தான் எஞ்சுகிறது. உண்மையாக, ஜனநாயகத்தின் ஐந்தாவது தூணான கருதப்படும் பத்திரிக்கைகள் செய்ய வேண்டியது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மனிதர்களுக்கும், குடிமக்களுக்கும் விசுவாசமாய் நடப்பது - சர்க்குலேஷனும், டிஆர்பி ரேட்டிங்கினை மட்டும் முன்னிறுத்தாமல். இன்றைய நிலையில் ஜெஸிக்கா பேருக்கு எல்லா ஊடகங்களும் ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

பார்க்க - என்.டி.டிவியின் போராட்டம் | சசியின் பதிவு

மறக்கடிக்கப்பட்ட மனிதர்கள்

ஐபின் லைவில் State of Mumbai என்றொரு நிகழ்ச்சியில் காட்டப்பட்ட ஒரு புள்ளிவிவரம் முக்கியமானதாகிறது. மும்பையில் இருக்கும் குடிசைகளையும், சேரிகளையும் என்ன செய்ய வேண்டும் என்று பொதுமக்களிடத்தில் கேட்டதற்கு 70% பேர்கள் அவர்களை நகரினை விட்டு வேறு இடத்தில் குடியேற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். என்ன நினைப்பில் அவ்வாறு சொன்னார்கள் என்று தெரியவில்லை. மும்பையின் சேரிகளால் தான் மும்பை வாழ்கிறது. மணியன், சுதாகர் போன்ற மும்பையிலிருக்கும் வலைப்பதிவாளர்கள் இதைப் பற்றி எழுத வேண்டும். இதில் புரிந்து கொள்ள வேண்டியது மக்களின் மாறிவரும் மனப்பான்மை. ஏற்கனவே சினிமா, வணிகம், தாதா கும்பல் என்று பல விசயங்களுக்கு கவர்ச்சிகரமான நகராய் விளங்குகிறது மும்பை. இப்போது நடுத்தர வர்க்கத்திற்கும், மும்பை சேரிவாசிகள் ஒதுக்கப்பட்ட, தீண்டதகாத மனிதர்களாக மாறிவிட்டார்கள். மும்பையின் அடையாளமாக விளங்கும் "டப்பாவாலாக்களில்" பாதி பேர்கள் குடிசைகளிலும், சேரிகளிலும் தான் வாழ்கிறார்கள். மும்பையில் புதிய சாலை போடுதல், கேபிள் பதித்தல், பேப்பர் போடுதல் என்று பல்வேறு தொழில் புரிந்து மும்பையின் அடையாளத்தினை மாற்றிக் கொண்டிருக்கும் 90% மனிதர்கள் சேரிகளிலும், குடிசைகளிலும், ஒரமாய் கிடக்கும் பெருங்குழாய்களிலும் தான் வாழ்வினை கழிக்கின்றார்கள். உலகமயமாக்கலின் தாக்கம் அதிகாலை சூரியன் போல மெதுவாய் உரைக்க தொடங்கியிருக்கிறது. சென்ற முறை வெங்கட் இந்தியா வந்திருந்தபோது, நாங்கள் டிரைவ் இன்னில் பேசிய பல்வேறு விஷயங்களுக்கு நடுவே மிக முக்கியமானதாக இடம்பெற்றது இந்த digital divide. போன முறை நான் பெங்களூரில் பயணித்த போது, கன்னடியர்களுக்கு வேலை கொடு என்கிற அட்டையுடன் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரே கொஞ்சமாய் சில பேர் கத்திக் கொண்டிருந்ததை பார்த்தேன்.இந்தியா வளர வளர மெதுவாக, ஆனால் உறுதியாக மனிதர்கள் இடையே கசப்புத்தன்மையும், கொலைவெறியும் வளர்ந்து இது ஒரு haves & have nots என்கிற பிளவில் கொண்டு போய்விடும். அரசும், நிறுவனங்களும் முழித்துக் கொள்வது நல்லது.

Feb 25, 2006

பெண் / பெண் குழந்தைகளின் நிலை

இந்தியாவின் மிக வளமான மாநிலங்களில் ஒன்று பஞ்சாப். பெண் சிசுக் கொலைகள் மிக அதிகமாக நடக்கும் மாநிலமாக அது தெரிகிறது. மிகக் குறைவாக 1000 ஆண்களுக்கு 700 பெண்கள் மட்டுமே இருக்கும் மாநிலம். வேலைகள் இருப்பதால், அப்படியே ஆங்கிலத்தில் பதிகிறேன். ஆழமாக யாராவது இதைப் பற்றி எழுதலாம்.

Kulwinder Kaur Housewife:
"I have two daughters and my mother-in-law is threatening to get another wife for her son if I don’t have a boy.
I got an abortion done last year when the scan showed it was a female foetus. This time I have been lucky."

Simran College Lecturer:
I have one girl and cannot afford to have another daughter. It’s so difficult to marry them off as boys demand hefty dowries. I have undergone five abortions at a private nursing home as all of them were female foetuses. I may not be able to conceive again."

Kashmiri Devi Housewife:
"I’ve two daughters, after which I had four abortions because the foetuses were female. Now, I want to have a son of my own so that he can take care of us in our old age."

Satinder Kaur Wife of a landed farmer:
"I have one daughter, and I know that if I don’t have a son soon my status in the family will come down.

விரிவாக படிக்க - Death becomes her

Feb 17, 2006

கொஞ்சம் சுயதம்பட்டம்

இது முழுக்க, முழுக்க சுய விளம்பரமும், ஒரு புதிய இணைய சேவையின் அறிமுகத்துக்கான பதிவு. ஆகவே, வழமையான பதிவினை எதிர்ப்பார்ப்பவர்கள் இங்கேயே கட்டாகி, வேறு வேலை பார்க்க போகலாம்.

கொஞ்ச நாளாய், என் பதிவுகள் சீராய் வராமல் போனது, அதற்கு காரணம் வேலை. சாதாரண வேலையல்ல கொஞ்சம் கலக்குவதுப் போன்ற வேலை. இரண்டு நாட்களாய் இந்த பதிவுக்கு வருபவர்கள் வலப்பக்கம் புதிதாய் TracBac என்கிற ஜந்துவினை பார்த்திருக்கலாம். அதனை உருவாக்குவதில் மும்முரமாக இருந்ததுதான் குறைவான பதிவுகளுக்கு காரணம். TracBac -இன் வருகை தளம் இங்கே, வலைப்பதிவு இங்கே.

ஒரே வார்த்தையில் சொல்லுவதானால், TracBac ஒரு இணைய ப்ரெளசரில் இருந்து கொண்டு, மற்றவர்களுடன் ஊடாடும் [interact], இணைந்து செயலாற்றும் [collaborate] ஒரு தளம். சாமானியர்களுக்கு இந்த தளத்தில் பெரியதாய் வேலைகள் இல்லை. ஆனால், நீங்கள், இணையத்திலோ, விளம்பரத் துறையிலோ, டிசைனிங்கிலோ, அச்சு துறையிலோ, செய்தித்தாள் துறையிலோ, மார்க்கெட்டிங்கிலோ அல்லது ஒரு சிறு/பெரு நிறுவனத்தில் உங்களின் டிசைன்கள், விளம்பரங்கள் போன்றவற்றினை மேற்பார்வையிடும் துறையிலோ இருந்தால், கைக் கொடுங்கள். இனி மேல் உங்களுக்கு பிரச்சனைகள் இல்லை. இங்கே நான் சொல்வது முழுக்க உண்மை, சும்மா தெருவோரம் லேகியம் விற்கும் நபர் போன்ற ஒவர் பில்ட்-அப்கள் இங்கில்லை ;)

TracBac னைக் கொண்டு உங்களின் டிசைன்களையும், அச்சு விளம்பரங்களையும், அழைப்பிதழ்களையும்,விளம்பரங்களையும் மிக எளிதாக சரி பார்க்கலாம். சுழிக்கலாம். டிசைனரை ஆடியோ நோட்ஸ் கொண்டு திட்டலாம். பென்சில் கொண்டு நுணுக்கமாக சுழித்து வார்த்தைகளையோ, வாக்கியங்களையோ, புகைப்படங்களையோ இடமாற்றம் செய்ய சொல்லலாம் [அந்த லோகோவை கீழே கொண்டுவாம்மா, மூணாவது பேராவுல, with our service க்கு அப்புறம் இதை சேர்த்துருங்க ;)] கொஞ்சம் காசு அதிகமாக கொடுத்தீர்களேயானால், பல இடங்களில் பல் குத்திக் கொண்டிருக்கும் உங்கள் சகாக்களை ஒன்றிணைத்து நிறுவனம் சார்ந்த முடிவுகளை எடுக்கலாம். முக்கியமாய் விளம்பரத்துறை, அச்சுத்துறை, நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்றாற் போல வடிவைக்கப்பட்ட [அல்லது வடிவைக்கப்பட்டதாக நம்பியிருக்கும்] சேவையிது.

மார்ச் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் வெளிவரும். நீங்களோ, அல்லது உங்களின் நண்பர்களோ, தெரிந்தவர்களோ, வணிக சந்திப்புகளோ, மேற்கூரிய துறைகளில் இருந்தால், தமிழ் வலைப்பதிவுகள் படிக்கும் நேரத்தில் TracBac இன் லிங்கினை அனுப்பி சேவையினைப் பார்க்க சொல்லுங்கள். நீங்கள் அவருக்கு [அல்லது முக்கியமாய் எனக்கும், என் நிறுவனத்திற்கும் ;)] செய்யும் நல்ல காரியமிது ;)

ஆஹா, நாராயணன், தன் வலைப்பதிவினை வைத்துக் கொண்டு வியாபாரம் பண்ண ஆரம்பித்தான் என்று ஆரம்பித்து, வலைப்பதிவுகளில் வணிகம் வேண்டுமா, வேண்டாமா என்று ஆர்பரித்து, கத்தி அடித்துக் கொள்வீர்களேயானால், அந்த RSS feed மட்டும் அனுப்புங்கள். வெட்டியாய் இருக்கும் ஒரு நாளில் படிக்கிறேன் ;)

"இந்த அருமையான சேவையினை உங்களுக்கு வழங்குபவர்கள், சென்னை தி.நகரிலிருக்கும் 360 degree interactive நிறுவனத்தினர்..... எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை" [இது ரேடியோவுக்கு, அல்லது ரேடியோ விளம்பரங்கள் போல படிப்பதற்கு ]

இதுவரை இந்த சேவையினை எழுதியவர்கள் கீழே:

1 | 2 | 3 | 4 | 5 | 6 |

Feb 12, 2006

ஈகோ டிரிப் (அ) முதுகு சொறிதல்

சில வாரங்களுக்கு முன்பு தினகரன் நாளிதழோடு வரும் வசந்தம் என்கிற துணேயேடு என்னுடைய புதுப்பேட்டை-நிழலுலகம் பற்றிய பதிவினை வெளியிட்டிருந்தது. போனவாரம் நான் கமலின் மருதநாயகம் குறித்து எழுதிய பதிவும் 4 பக்கங்களுக்கு பதிவாயிருக்கிறது. ஒரு வலைபதிவாளனாய் இவை என்னுள்ளே ஒரமாய் குவார்ட்டர் அடிந்து குந்தியிருக்கும் ஈகோவுக்கு ராவாய் மானிட்டர் வாங்கி தரும் வேலைகள் செய்தாலும், இரண்டொரு நாட்களுக்கு முன்பு வசந்தம் வெளியீட்டின் ஆசிரியரோடு மதிய உணவு உண்ணும் போது அவர் சொன்ன சில தகவல்கள் கீழே:

1. புதுப்பேட்டை பற்றிய பதிவிற்கு வரவேற்பு ஏராளம். முக்கியமாய் தமிழகத்தின் மிக முக்கியமான ஜனரஞ்சக பத்திரிக்கையிலிருந்து சொன்னது "இது நாங்க போட்டிருக்க வேண்டிய மேட்டர்" இதுதாண்டி புதுப்பேட்டை படத்திற்கு வசமெழுதும் இன்றைய "எழுத்து சித்தர்" அலுவலகத்திற்கு ஆள் அனுப்பி புத்தகத்தினை வாங்கி வர சொல்லியது.

2. அதிரடியாய் என் கவுண்டர் [என்கவுண்டர் என்று சேர்த்து படித்தால் நான் பொறுப்பில்லை] ஏறியிருக்கிறது. இன்னமும் என் மின்னஞ்சலில் புதுப்பேட்டை படித்து மக்கள் எழுதும் கடிதங்கள் அவ்வப்போது ஒரிரண்டு வரச் செய்கிறது.

3. மருதநாயகம் எழுதி வெளியான அன்று சில விஷயங்கள் தினகரன் அலுவலகத்தில் நடந்திருக்கின்றன. மரியாதையும், கவனமும் கருதி சில விஷயங்களை சொல்ல முடியாது. ஆனாலும், மருதநாயகம் படத்திற்கான விவாதத்தினை மறுபடியும் ஆரம்பித்துவிட்டார் என்று குமுதமும், தினமலரும் சொல்லுகின்றன.

நல்லது நடந்தால் சரி. நாராயண! நாராயண!

Feb 8, 2006

குறி அறுத்தல்

சில சமயங்களில் சில விஷயங்களைக் கேள்விப்படும்போதும், பார்க்கும்போதும், கோவம் பொங்கி வரும். அந்நேரங்களில் நான் பேசுவதில்லை, எதையாவது படிக்கப் போய்விடுவேன். இந்தியாவின் சென்செக்ஸ் 10000யிரத்தை தாண்டியதுப் பற்றி எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது இதைப் படிக்க நேர்ந்தது. சில சமயங்களில் கொடுங்கோலனாக இருப்பதுக் கூட தவறில்லை என்று தோன்றுகிறது. இவர்களுக்கெல்லாம் மேற்சொன்ன தண்டனைக் கூட போறாது.

அந்த கொடுமையினைப் படிக்க

Feb 7, 2006

கல்யுக் (ப்ளூ பிலிம்) - அந்தரங்கம் விற்பனைக்குஃபோர்னோகிராபி என்பது உலகின் மிக முக்கியமான தொழில். சுமார் $56 பில்லியன் பணம் புரளும் இடம். இணையத்தில் மிக அதிகமாக தேடப்படும் தேடு சொல் செக்ஸாகதான் இருக்கும். பாலுறவு சுதந்திரத்தினை தொடர்ச்சியாக வற்புறுத்தினாலும், இன்னொரு தளத்தில் அத்தகைய சுதந்திரம் என்ன மாதிரியான பின்விளைவுகளைக் கொண்டிருக்கிறது என்பதை பார்த்தால் பதைபதைப்பாக இருக்கிறது. செக்ஸ் வாயூரிசம் என்பது உலகின் பொதுமறையான தொழில். ப்ளூ பிலிம் பார்த்திருக்கிறார்களா? குறைந்த பட்சம் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்த்திருப்பீர்கள். "ராமனாக" தங்களை நிலைநிறுத்திக் கொள்பவர்கள் கண்டிப்பாக இல்லையென்று சொல்வார்கள். நான் பார்த்திருக்கிறேன். என்றைக்காவது அந்த ப்ளூ பிலிமில் வரும் பெண்ணையோ, ஆணையோ பற்றி யோசித்திருக்கிறீர்களா?

இந்தி சினிமாக்களின் மீதான் என்னுடைய எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. கலாபூர்வமான திரைப்படங்களை இந்தியாவில் மலையாளத்திலும், வங்காளத்திலும் பார்க்கலாம் என்றால், contemporary cinema வினை இந்தி சினிமாக்களில் தேடலாம் என்று தோன்றுகிறது. பேஜ் 3 பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். எல்லாரும் எழுதி விட்டதால் 'ரங் தே பசந்தி' பற்றி எழுதத் தோன்றவில்லை. ஆனாலும், 'ரங் தே பசந்தி' contemporary cinemaவின் எல்லைக்குள் வரும். மிக மெதுவாக ஆனால் அழுத்தமாக சமூக மாற்றங்களை கேள்விக்குட்படுத்தும் படங்கள் தொடர்ச்சியாக இந்தியில் வந்துக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இன்னுமொரு படம் "கல்யுக்"

முதலில் புளூ பிலிம் என்றே பெயரிடப்பட்டிருந்த இந்த படம், ரிலிஸாகும் போது பெயர் மாற்றப்பட்டு (எல்லா டிவி சேனல்களும் 'புளு பிலிம்' என்று டிரைய்லர் காட்ட மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள்) கல்யுக் என்று திரையிடப்பட்டு போன வருட ஹிட் படங்களில் ஒன்றாகிப் போனது. யாராவது எழுதுவார்கள் என்று பார்த்து கடைசியில் டிவிடியில் பார்த்து தான் எழுதுகிறேன். வழக்கமாக மஹேஷ் பட் படங்கள் என்றாலே சர்ச்சையினை கிளப்பும் விஷயமிருக்கும் என்று விஷயமறிந்தவர்கள் சொல்லுவார்கள். இந்த படமும் அப்படித்தான்.

முதலில் இந்த கதை ஆரம்பத்தில் உண்மைக் கதை அல்ல என்று போடப்பட்டாலும், இது பல உண்மை சம்பங்களினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது என்பதினை மஹேஷ் பட்டும், மோஹித் சூரியும் (இயக்குநர்) சொல்கிறார்கள். ஒரு வரியில் சொல்லுவதென்றால், தன் மனைவியினைக் கொன்றவர்களை தேடி பழி தீர்க்கிறான் கணவன் என்று simplify செய்துவிடலாம். ஆனால் கதையதுவல்ல.

குணால் (குணால் கெமூ) ஒரு காஷ்மீரி பண்டிட்டின் மகன். காஷ்மீரில் விரட்டியடிக்கப்பட்டு மும்பையில் வளரும் சராசரி இளைஞன். வேலைக்காக ஒரு ஜிம்மில் இருக்கிறான். குணாலின் தந்தை ஒரு ரயில் விபத்தில் மரணமடைகிறார். குணாலின் தந்தையால் வளர்க்கப்பட்ட ரேணுகா(ஸ்மைலி) என்கிற மும்பை வருகிறாள். வழக்கமான கிளிஷே சீன்களுக்குப் பிறகு, குணாலும் ரேணுகாவும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். குணாலின் ஜிம் முதலாளி, அவனுக்கு ஒரு ஹாலிடே ரிசார்ட்டில் தங்குவதற்கான ஏற்பாட்டினை செய்கிறார். ஹோட்டல் முதலாளி ஜானி (அஷ்தோஷ் ரானா) அவர்களுக்கு ஹனிமூன் சூட் தர சொல்லுகிறார்.

குணாலும், ரேணுகாவும் தங்களின் முதலிரவை அங்கு கழிக்கின்றனர். கொஞ்ச நாளில் அவர்களின் வீட்டுக்கு போலிஸ் வருகிறது. குணாலையும், ரேணுகாவினையும் அழைத்துச் செல்கிறார்கள். அங்கே தான் முதல் அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர்களின் அந்தரங்கம் இந்தியாபேஷன்.காமில் முழுமையாக காண்பிக்கப்படுகிறது. குணால் தான் அந்த புளூ பிலிமினை எடுத்தான் என்றும், ரேணுகா அந்த மாதிரியான புளு பிலிமில் நடிக்கும் பெண் என்றும் போலிஸ் அவர்களை சித்ரவதைக்குள்ளாக்கிறது. நைச்சியமாக பேசி பெண் போலிஸ், ரேணுகாவிடமிருந்து கையெழுத்து வாங்கி விட, அழைத்துச் செல்லும் போது பார்க்கும் குணால் எதிலும் கையெழுத்துப் போடாதே என்று கத்த, கையெழுத்து போட்டு விட்டதாலும், அவமானத்தாலும், குணாலின் கண் முன்னே ரேணுகா மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொள்கிறாள்.

குணாலின் முதலாளி ஒரு வக்கிலை அமர்த்தி குணாலை வெளியே எடுக்க முயற்சிக்கிறார். உண்மையில் படம் வக்கிலும், குணாலும் உரையாடுவதிலிருந்து ஆரம்பிக்கிறது. மேலே சொன்னது ப்ளாஷ்பேக். பெயிலில் வரும் குணால், இந்தியாபேஷன்.காமின் வேர் எங்கிருக்கிறது என்று தேட ஆரம்பிக்கிறான். அப்போது தான் ஃபோர்னோகிராபி விற்கும் கடையில் ஜானியினை பார்க்கிறான். அவனை விரட்டிப் போய் ஜானி தப்ப, அவனுடைய கைப்பையிலிருந்து இதற்கெல்லாம் ஆதார வேர் சுவிட்சர்லாந்திலிருக்கும் ஜுரிட்ச்சிலிருக்கிறது என்று தெரிய, குணால் உண்மையினை கண்டறிய ஜூரிட்ச் வருகிறான்.

சூரிச்சில் சுவிட்சர்லாந்து டெலிகாம் நிறுவனத்தின் மேலதிகாரி சிமி ராய் (அம்ரிதா சிங்). தன் கணவனை யாருக்கும் அறியாமல் கொன்று விட்டு பாய் பிரண்ட்டோடு (விக்கி) உல்லாசமாக இருக்கிறாள். சிமியின் மகள் ஒரு லெஸ்பியன். சிமி ராய்யும், விக்கியும் சேர்ந்து தான் இந்தியாபேஷன்.காமினை யாருக்கும் தெரியாமல் நடத்தி வருகிறார்கள். சின் சிட்டி என்றொரு செக்ஸ் விற்பனை கூடமும் அவர்களால் நடத்தப்படுகிறது. சூரிச் வரும் குணாலுக்கு செக்ஸ்ஷாப்பில் வேலை செய்யும் அலி (இம்ரான் ஹாஸ்மி) நண்பனாகிறான். அலிக்கு பணம் தான் வாழ்க்கை. பணம் கொடுத்தால் எதையும் செய்யும் குணமுடையவன். குணாலின் அந்தரங்கத்தினை இணையத்தில் காம்பியர் செய்த ஜெனியினைத் (தீபல் ஷா) தேடி சின் சிட்டிக்கு போகிறார்கள்.

சின் சிட்டியில் நடக்கும் சில பிரச்சனைகளும், வேறு சில பிரச்சனைகளாலும், ஜெனியினை குணால் காபாற்ற நேரிடுகிறது. ஜெனியினை அடித்து கேள்வி கேட்கும்போது தான் ஜெனியின் பரிதாப நிலை தெரிய வருகிறது. ஜெனி குஜராத் பூகம்பத்தில் வீடு வாசல் இழந்து தன் மாமா வீட்டில் வாழும் ஒரு சாதாரண குஜராத்தி பெண். கஷ்டத்தினால் அவளின் மாமா, ஜானியிடம் அவளை விற்று விட, போதை ஊசிப் போட்டு ஜானி அவளை வைத்து புளு பிலிம் எடுக்கிறான். பின் அவளை ஜூரிட்ச்சிற்கு சின் சிட்டியில் நடனமாட வைத்து விடுகிறான்.

நடுவில் அலி, சிமி ராயோடு சேர்ந்து குணாலினை காட்டிக் கொடுக்க முயற்சி செய்து பின் மனம் மாறி ஜானியினைக் கொன்று தியாகியாகிறான். யாருமே எதிர்பார்க்காத கிளைமாக்சில் சிமி ராயினை குணால் எதுவுமே செய்யாமல் அவள் கொல்லப்படுகிறாள். அற்புதமான யாரும் எதிர்பார்க்காத இறுதிக்காட்சி, சொன்னால் படம் பார்க்கும் சுவராஸ்யம் போய்விடும். ஆகவே அது உங்களின் டிவிடி திரையில்ஜெனியும், குணாலும் தத்தம் வாழ்வினை தொடர இந்தியா போகிறார்கள் என்று முடிகிறது. ஒரு மனிதனின் வலி என்பது, பல மனிதர்களின் சந்தோஷம் என்பது தான் ஆதாரம்.

இந்த படத்தில் முக்கியமான மூன்று விஷயங்கள். அம்ரிதா சிங்கின் நடிப்பு. பிஸினஸ் வுமன் ஆனாலும் அவருக்கு இருக்கும் இருண்ட முகத்தினையும் காண்பித்துக் கொண்டு பின்னி எடுத்து இருக்கிறார். தீபல் ஷா அடுத்து வருவது. ஜெனியாக வந்து முதலில் கவர்ச்சி காண்பிப்பதிலும், ப்ளாஷ் பேக், மை அடர்ந்த கண்களில் அப்பாவி குஜ்ராத்தியாகவும், குணாலோடு இருக்கும்போது காட்டும் அமைதியும், கண்டிப்பாக நல்ல ரோல்கள் கிடைப்பின் ஒரு ரவுண்டு வருவார் என்று தோன்றுகிறது. இந்த படம் ஆரம்பிக்கும் போது ஒரு "டாப்லெஸ்" காட்சியில் நடிக்கிறேன் என்று முதலில் தைரியமாக சொன்னது இவர்தான். ஆனாலும் அப்படியான காட்சிகள் எதுவும் இல்லை. பின் இம்ரான் ஹாஸ்மி, இம்ரான் ஹிந்தி பாப் வீடியோ, ரிமிக்ஸ் ம்யுசிக் வீடியோகளில் படு பிரபலம்.அவர் பாடும் "ஜூதாவு கயி" [ யூட்யூப் வீடியோ இங்கே] படு அட்டகாசம். வெறுமனே ஆங்கில சப் டைட்டில்களிலேயே உருக்கிய பாட்டு. இந்தி நன்றாக தெரிந்தவர்கள் நன்றாக ரசிக்கலாம்.

இந்த படம் எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை. டெல்லி உயர்நிலைப்பள்ளியின் MMS கிளிப் பிரச்சனையும், இங்கே தமிழ்நாட்டில் டாக்டர். பிரகாஷ் செய்த செக்ஸ் வீடியோ விஷயங்களும், இன்றைக்கும் மிகச் சுலபமாக கிடைக்கும் இந்திய ஃபோர்னோகிராபி வீடியோக்களும், பள்ளி/கல்லூரி பெண்கள்/ஆண்கள் பார்ட்-டைம் தொழிலாக செய்ய முற்பட்டிருக்கும் செக்ஸ் கேளிக்கைகளும் [கொஞ்ச நாள் முன்பு ஆஜ்தக்கிலும், அதற்கு முன்பு ஸ்டார் ப்ளஸிலும், சமீபத்தில் சன் டிவியில் வந்த ஆண் விபசாரிகள் (ஜிகளூக்கள்) பற்றி பார்த்திருப்பீர்கள்] இந்த விஷயத்தினை மிகச் சாதாரணமாக அணுக முடியாமல் செய்திருக்கிறது. இந்த படத்தில் குழந்தை பாலியல் வன்முறையும் ஒரு ஒரமாய் பேசப்படுகிறது. இதனை தமிழில் ஒரளவுக்கு அணுகிய இயக்குநர் என்று சொன்னால் செல்வராகவனை [காதல் கொண்டேன்] தான் சொல்ல முடியும்.

இந்தியாவின் எல்லா ப்ரெளசிங் இடங்களிலும் கொஞ்சம் ஆராய்ந்துப் பார்த்தால், உங்களுக்கு முன் அமர்ந்திருந்தவர் ஏதாவது செக்ஸ் தளத்திற்கு கண்டிப்பாக போயிருப்பார். புளூ பிலிம் விலையொன்றும் பெரிதில்லை. சென்னை பார்க் டவுன் பஜாரில் யாரையாவது ஒரமாக தள்ளிக் கொண்டுப் போனால் வகை வகையான மாற்றுகளோடு (நேபாளி பெண்கள், சீன/சப்பானிய சப்பை மூக்கு பெண்கள், தென்னிந்திய பெண்கள், ஹவுஸ் வைப், பள்ளி சிறுமிகள்) வெறுமனே நூறு ரூபாய்க்கு கிடைக்கும். இணையத்தில் 'மைசூர் மல்லிகே' என்று தேடினீர்களேயானால் மேலே சொன்னமாதிரியான கணவன் - மனைவி உறவுக் காட்சிகள் கிடைக்கும். செக்ஸ் வாயூரிசம் என்பது மிகப் பெரிய நோய். இது இந்திய திரைப்பாடல்களிலிருந்து ஆரம்பிக்கிறது. அதனால் தான் எல்லாரும், இந்திய நடிகைகளின் திறந்தமேனி படங்களுக்காக கூகிளில் மேய்ந்துக் கொண்டிருக்கிறார்கள். மேக்சிம், ப்ளேபாய் மாதிரியான பத்திரிக்கைகள், நிர்வாணத்தினை ரசிக்கிறோம் என்று மேம்பூச்சுப் பூசிக் கொண்டு, sophisticated ஃபோர்னோகிராபியினை முன்வைக்கின்றன. இதற்கு ஒரு படி மேலே போய் காஸ்மோபாலிடன், பெமினா போன்ற பெண்களுக்கான பத்திரிக்கைகள் என்று சொல்லிக் கொள்ளுபவை, பெண்ணினை ஒரு போகப் பொருளாக்கக்கூடிய எல்லா விஷயங்களையும் [மார்புகளை அழகாக்குவது எப்படி, படுக்கையறையில் பேசக்கூடிய 10 விஷயங்கள்] அருமையாக சொல்லிக் கொடுக்கின்றன. இந்நிலையில் ஃபோர்னோகிராபி வளராமல் என்ன செய்யும்?

உங்களின் முதலிரவு என்பது பல பேருக்கான இன்ப வழித் தேடல் என்பது மாதிரியான உலுக்கும் விஷயம் வேறெதும் இருக்கமுடியாது. மோஹித் சூரி ஒரு திறமையான இயக்குநராக வெளிப்படுகிறார். ஃபோர்னோகிராபி மாதிரியான களம் கிடைத்தால் கவர்ச்சியில் புகுந்து விளையாடி இதனை chick flick க்காக மாற்றி விடாமல், அழகாய் அதன் வலியையும், பின்னுள்ள அபாயகரமான மனிதர்களையும், பணத்திற்காக மனிதர்கள் எந்தளவிற்கு போவார்கள் என்பதையும் நிறைவாக சொல்லியிருக்கிறார். வழக்கமான இந்தி சினிமா காட்சிகள் ஆங்காங்கே தலைக்காட்டினாலும், தைரியமாக ஒரு முக்கியமான பிரச்சனையினை கையிலெடுத்து சொல்லியிருப்பதை பாராட்டலாம். கண்டிப்பாக இந்தி சினிமாக்கள் வேறு தளங்களுக்கு போகத் தொடங்கிவிட்டன. ஆனால் தமிழ்ப்படங்கள்?

படம்: கல்யுக்
இயக்குநர்: மோஹித் சூரி
நடிகர்கள்: அம்ரிதா சிங், தீபல் ஷா, குணால் கெமூ, ஸ்மெலி, அஷ்தோஷ் ரானா இசை: அனு மலிக்
தயாரிப்பு: மஹேஷ் பட்
வெளியான ஆண்டு: 2005

Feb 4, 2006

கொறிக்க

பல்வேறு விதமான வேலைகள் மிக வேகமாக என் அலுவலகத்தில் நடந்துக் கொண்டிருப்பதால் பதிவெழுதும் நேரம் குறைந்து போனது. ஆனாலும் பழக்க தோஷத்திற்காக, சில உரல்கள்

தேடல் பொறிகள் பாதுகாப்பானவையா?
ஆபரேஷன் நீரெலி
இனவெறி கார்ட்டூன்களும், பின்விளைவுகளும்
பத்திரிக்கையாளர்கள் பார்வையாளர்களா? மனிதர்களா?
புது டிவி சேனல்

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]