Feb 7, 2006

கல்யுக் (ப்ளூ பிலிம்) - அந்தரங்கம் விற்பனைக்குஃபோர்னோகிராபி என்பது உலகின் மிக முக்கியமான தொழில். சுமார் $56 பில்லியன் பணம் புரளும் இடம். இணையத்தில் மிக அதிகமாக தேடப்படும் தேடு சொல் செக்ஸாகதான் இருக்கும். பாலுறவு சுதந்திரத்தினை தொடர்ச்சியாக வற்புறுத்தினாலும், இன்னொரு தளத்தில் அத்தகைய சுதந்திரம் என்ன மாதிரியான பின்விளைவுகளைக் கொண்டிருக்கிறது என்பதை பார்த்தால் பதைபதைப்பாக இருக்கிறது. செக்ஸ் வாயூரிசம் என்பது உலகின் பொதுமறையான தொழில். ப்ளூ பிலிம் பார்த்திருக்கிறார்களா? குறைந்த பட்சம் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்த்திருப்பீர்கள். "ராமனாக" தங்களை நிலைநிறுத்திக் கொள்பவர்கள் கண்டிப்பாக இல்லையென்று சொல்வார்கள். நான் பார்த்திருக்கிறேன். என்றைக்காவது அந்த ப்ளூ பிலிமில் வரும் பெண்ணையோ, ஆணையோ பற்றி யோசித்திருக்கிறீர்களா?

இந்தி சினிமாக்களின் மீதான் என்னுடைய எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. கலாபூர்வமான திரைப்படங்களை இந்தியாவில் மலையாளத்திலும், வங்காளத்திலும் பார்க்கலாம் என்றால், contemporary cinema வினை இந்தி சினிமாக்களில் தேடலாம் என்று தோன்றுகிறது. பேஜ் 3 பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். எல்லாரும் எழுதி விட்டதால் 'ரங் தே பசந்தி' பற்றி எழுதத் தோன்றவில்லை. ஆனாலும், 'ரங் தே பசந்தி' contemporary cinemaவின் எல்லைக்குள் வரும். மிக மெதுவாக ஆனால் அழுத்தமாக சமூக மாற்றங்களை கேள்விக்குட்படுத்தும் படங்கள் தொடர்ச்சியாக இந்தியில் வந்துக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இன்னுமொரு படம் "கல்யுக்"

முதலில் புளூ பிலிம் என்றே பெயரிடப்பட்டிருந்த இந்த படம், ரிலிஸாகும் போது பெயர் மாற்றப்பட்டு (எல்லா டிவி சேனல்களும் 'புளு பிலிம்' என்று டிரைய்லர் காட்ட மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள்) கல்யுக் என்று திரையிடப்பட்டு போன வருட ஹிட் படங்களில் ஒன்றாகிப் போனது. யாராவது எழுதுவார்கள் என்று பார்த்து கடைசியில் டிவிடியில் பார்த்து தான் எழுதுகிறேன். வழக்கமாக மஹேஷ் பட் படங்கள் என்றாலே சர்ச்சையினை கிளப்பும் விஷயமிருக்கும் என்று விஷயமறிந்தவர்கள் சொல்லுவார்கள். இந்த படமும் அப்படித்தான்.

முதலில் இந்த கதை ஆரம்பத்தில் உண்மைக் கதை அல்ல என்று போடப்பட்டாலும், இது பல உண்மை சம்பங்களினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது என்பதினை மஹேஷ் பட்டும், மோஹித் சூரியும் (இயக்குநர்) சொல்கிறார்கள். ஒரு வரியில் சொல்லுவதென்றால், தன் மனைவியினைக் கொன்றவர்களை தேடி பழி தீர்க்கிறான் கணவன் என்று simplify செய்துவிடலாம். ஆனால் கதையதுவல்ல.

குணால் (குணால் கெமூ) ஒரு காஷ்மீரி பண்டிட்டின் மகன். காஷ்மீரில் விரட்டியடிக்கப்பட்டு மும்பையில் வளரும் சராசரி இளைஞன். வேலைக்காக ஒரு ஜிம்மில் இருக்கிறான். குணாலின் தந்தை ஒரு ரயில் விபத்தில் மரணமடைகிறார். குணாலின் தந்தையால் வளர்க்கப்பட்ட ரேணுகா(ஸ்மைலி) என்கிற மும்பை வருகிறாள். வழக்கமான கிளிஷே சீன்களுக்குப் பிறகு, குணாலும் ரேணுகாவும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். குணாலின் ஜிம் முதலாளி, அவனுக்கு ஒரு ஹாலிடே ரிசார்ட்டில் தங்குவதற்கான ஏற்பாட்டினை செய்கிறார். ஹோட்டல் முதலாளி ஜானி (அஷ்தோஷ் ரானா) அவர்களுக்கு ஹனிமூன் சூட் தர சொல்லுகிறார்.

குணாலும், ரேணுகாவும் தங்களின் முதலிரவை அங்கு கழிக்கின்றனர். கொஞ்ச நாளில் அவர்களின் வீட்டுக்கு போலிஸ் வருகிறது. குணாலையும், ரேணுகாவினையும் அழைத்துச் செல்கிறார்கள். அங்கே தான் முதல் அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர்களின் அந்தரங்கம் இந்தியாபேஷன்.காமில் முழுமையாக காண்பிக்கப்படுகிறது. குணால் தான் அந்த புளூ பிலிமினை எடுத்தான் என்றும், ரேணுகா அந்த மாதிரியான புளு பிலிமில் நடிக்கும் பெண் என்றும் போலிஸ் அவர்களை சித்ரவதைக்குள்ளாக்கிறது. நைச்சியமாக பேசி பெண் போலிஸ், ரேணுகாவிடமிருந்து கையெழுத்து வாங்கி விட, அழைத்துச் செல்லும் போது பார்க்கும் குணால் எதிலும் கையெழுத்துப் போடாதே என்று கத்த, கையெழுத்து போட்டு விட்டதாலும், அவமானத்தாலும், குணாலின் கண் முன்னே ரேணுகா மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொள்கிறாள்.

குணாலின் முதலாளி ஒரு வக்கிலை அமர்த்தி குணாலை வெளியே எடுக்க முயற்சிக்கிறார். உண்மையில் படம் வக்கிலும், குணாலும் உரையாடுவதிலிருந்து ஆரம்பிக்கிறது. மேலே சொன்னது ப்ளாஷ்பேக். பெயிலில் வரும் குணால், இந்தியாபேஷன்.காமின் வேர் எங்கிருக்கிறது என்று தேட ஆரம்பிக்கிறான். அப்போது தான் ஃபோர்னோகிராபி விற்கும் கடையில் ஜானியினை பார்க்கிறான். அவனை விரட்டிப் போய் ஜானி தப்ப, அவனுடைய கைப்பையிலிருந்து இதற்கெல்லாம் ஆதார வேர் சுவிட்சர்லாந்திலிருக்கும் ஜுரிட்ச்சிலிருக்கிறது என்று தெரிய, குணால் உண்மையினை கண்டறிய ஜூரிட்ச் வருகிறான்.

சூரிச்சில் சுவிட்சர்லாந்து டெலிகாம் நிறுவனத்தின் மேலதிகாரி சிமி ராய் (அம்ரிதா சிங்). தன் கணவனை யாருக்கும் அறியாமல் கொன்று விட்டு பாய் பிரண்ட்டோடு (விக்கி) உல்லாசமாக இருக்கிறாள். சிமியின் மகள் ஒரு லெஸ்பியன். சிமி ராய்யும், விக்கியும் சேர்ந்து தான் இந்தியாபேஷன்.காமினை யாருக்கும் தெரியாமல் நடத்தி வருகிறார்கள். சின் சிட்டி என்றொரு செக்ஸ் விற்பனை கூடமும் அவர்களால் நடத்தப்படுகிறது. சூரிச் வரும் குணாலுக்கு செக்ஸ்ஷாப்பில் வேலை செய்யும் அலி (இம்ரான் ஹாஸ்மி) நண்பனாகிறான். அலிக்கு பணம் தான் வாழ்க்கை. பணம் கொடுத்தால் எதையும் செய்யும் குணமுடையவன். குணாலின் அந்தரங்கத்தினை இணையத்தில் காம்பியர் செய்த ஜெனியினைத் (தீபல் ஷா) தேடி சின் சிட்டிக்கு போகிறார்கள்.

சின் சிட்டியில் நடக்கும் சில பிரச்சனைகளும், வேறு சில பிரச்சனைகளாலும், ஜெனியினை குணால் காபாற்ற நேரிடுகிறது. ஜெனியினை அடித்து கேள்வி கேட்கும்போது தான் ஜெனியின் பரிதாப நிலை தெரிய வருகிறது. ஜெனி குஜராத் பூகம்பத்தில் வீடு வாசல் இழந்து தன் மாமா வீட்டில் வாழும் ஒரு சாதாரண குஜராத்தி பெண். கஷ்டத்தினால் அவளின் மாமா, ஜானியிடம் அவளை விற்று விட, போதை ஊசிப் போட்டு ஜானி அவளை வைத்து புளு பிலிம் எடுக்கிறான். பின் அவளை ஜூரிட்ச்சிற்கு சின் சிட்டியில் நடனமாட வைத்து விடுகிறான்.

நடுவில் அலி, சிமி ராயோடு சேர்ந்து குணாலினை காட்டிக் கொடுக்க முயற்சி செய்து பின் மனம் மாறி ஜானியினைக் கொன்று தியாகியாகிறான். யாருமே எதிர்பார்க்காத கிளைமாக்சில் சிமி ராயினை குணால் எதுவுமே செய்யாமல் அவள் கொல்லப்படுகிறாள். அற்புதமான யாரும் எதிர்பார்க்காத இறுதிக்காட்சி, சொன்னால் படம் பார்க்கும் சுவராஸ்யம் போய்விடும். ஆகவே அது உங்களின் டிவிடி திரையில்ஜெனியும், குணாலும் தத்தம் வாழ்வினை தொடர இந்தியா போகிறார்கள் என்று முடிகிறது. ஒரு மனிதனின் வலி என்பது, பல மனிதர்களின் சந்தோஷம் என்பது தான் ஆதாரம்.

இந்த படத்தில் முக்கியமான மூன்று விஷயங்கள். அம்ரிதா சிங்கின் நடிப்பு. பிஸினஸ் வுமன் ஆனாலும் அவருக்கு இருக்கும் இருண்ட முகத்தினையும் காண்பித்துக் கொண்டு பின்னி எடுத்து இருக்கிறார். தீபல் ஷா அடுத்து வருவது. ஜெனியாக வந்து முதலில் கவர்ச்சி காண்பிப்பதிலும், ப்ளாஷ் பேக், மை அடர்ந்த கண்களில் அப்பாவி குஜ்ராத்தியாகவும், குணாலோடு இருக்கும்போது காட்டும் அமைதியும், கண்டிப்பாக நல்ல ரோல்கள் கிடைப்பின் ஒரு ரவுண்டு வருவார் என்று தோன்றுகிறது. இந்த படம் ஆரம்பிக்கும் போது ஒரு "டாப்லெஸ்" காட்சியில் நடிக்கிறேன் என்று முதலில் தைரியமாக சொன்னது இவர்தான். ஆனாலும் அப்படியான காட்சிகள் எதுவும் இல்லை. பின் இம்ரான் ஹாஸ்மி, இம்ரான் ஹிந்தி பாப் வீடியோ, ரிமிக்ஸ் ம்யுசிக் வீடியோகளில் படு பிரபலம்.அவர் பாடும் "ஜூதாவு கயி" [ யூட்யூப் வீடியோ இங்கே] படு அட்டகாசம். வெறுமனே ஆங்கில சப் டைட்டில்களிலேயே உருக்கிய பாட்டு. இந்தி நன்றாக தெரிந்தவர்கள் நன்றாக ரசிக்கலாம்.

இந்த படம் எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை. டெல்லி உயர்நிலைப்பள்ளியின் MMS கிளிப் பிரச்சனையும், இங்கே தமிழ்நாட்டில் டாக்டர். பிரகாஷ் செய்த செக்ஸ் வீடியோ விஷயங்களும், இன்றைக்கும் மிகச் சுலபமாக கிடைக்கும் இந்திய ஃபோர்னோகிராபி வீடியோக்களும், பள்ளி/கல்லூரி பெண்கள்/ஆண்கள் பார்ட்-டைம் தொழிலாக செய்ய முற்பட்டிருக்கும் செக்ஸ் கேளிக்கைகளும் [கொஞ்ச நாள் முன்பு ஆஜ்தக்கிலும், அதற்கு முன்பு ஸ்டார் ப்ளஸிலும், சமீபத்தில் சன் டிவியில் வந்த ஆண் விபசாரிகள் (ஜிகளூக்கள்) பற்றி பார்த்திருப்பீர்கள்] இந்த விஷயத்தினை மிகச் சாதாரணமாக அணுக முடியாமல் செய்திருக்கிறது. இந்த படத்தில் குழந்தை பாலியல் வன்முறையும் ஒரு ஒரமாய் பேசப்படுகிறது. இதனை தமிழில் ஒரளவுக்கு அணுகிய இயக்குநர் என்று சொன்னால் செல்வராகவனை [காதல் கொண்டேன்] தான் சொல்ல முடியும்.

இந்தியாவின் எல்லா ப்ரெளசிங் இடங்களிலும் கொஞ்சம் ஆராய்ந்துப் பார்த்தால், உங்களுக்கு முன் அமர்ந்திருந்தவர் ஏதாவது செக்ஸ் தளத்திற்கு கண்டிப்பாக போயிருப்பார். புளூ பிலிம் விலையொன்றும் பெரிதில்லை. சென்னை பார்க் டவுன் பஜாரில் யாரையாவது ஒரமாக தள்ளிக் கொண்டுப் போனால் வகை வகையான மாற்றுகளோடு (நேபாளி பெண்கள், சீன/சப்பானிய சப்பை மூக்கு பெண்கள், தென்னிந்திய பெண்கள், ஹவுஸ் வைப், பள்ளி சிறுமிகள்) வெறுமனே நூறு ரூபாய்க்கு கிடைக்கும். இணையத்தில் 'மைசூர் மல்லிகே' என்று தேடினீர்களேயானால் மேலே சொன்னமாதிரியான கணவன் - மனைவி உறவுக் காட்சிகள் கிடைக்கும். செக்ஸ் வாயூரிசம் என்பது மிகப் பெரிய நோய். இது இந்திய திரைப்பாடல்களிலிருந்து ஆரம்பிக்கிறது. அதனால் தான் எல்லாரும், இந்திய நடிகைகளின் திறந்தமேனி படங்களுக்காக கூகிளில் மேய்ந்துக் கொண்டிருக்கிறார்கள். மேக்சிம், ப்ளேபாய் மாதிரியான பத்திரிக்கைகள், நிர்வாணத்தினை ரசிக்கிறோம் என்று மேம்பூச்சுப் பூசிக் கொண்டு, sophisticated ஃபோர்னோகிராபியினை முன்வைக்கின்றன. இதற்கு ஒரு படி மேலே போய் காஸ்மோபாலிடன், பெமினா போன்ற பெண்களுக்கான பத்திரிக்கைகள் என்று சொல்லிக் கொள்ளுபவை, பெண்ணினை ஒரு போகப் பொருளாக்கக்கூடிய எல்லா விஷயங்களையும் [மார்புகளை அழகாக்குவது எப்படி, படுக்கையறையில் பேசக்கூடிய 10 விஷயங்கள்] அருமையாக சொல்லிக் கொடுக்கின்றன. இந்நிலையில் ஃபோர்னோகிராபி வளராமல் என்ன செய்யும்?

உங்களின் முதலிரவு என்பது பல பேருக்கான இன்ப வழித் தேடல் என்பது மாதிரியான உலுக்கும் விஷயம் வேறெதும் இருக்கமுடியாது. மோஹித் சூரி ஒரு திறமையான இயக்குநராக வெளிப்படுகிறார். ஃபோர்னோகிராபி மாதிரியான களம் கிடைத்தால் கவர்ச்சியில் புகுந்து விளையாடி இதனை chick flick க்காக மாற்றி விடாமல், அழகாய் அதன் வலியையும், பின்னுள்ள அபாயகரமான மனிதர்களையும், பணத்திற்காக மனிதர்கள் எந்தளவிற்கு போவார்கள் என்பதையும் நிறைவாக சொல்லியிருக்கிறார். வழக்கமான இந்தி சினிமா காட்சிகள் ஆங்காங்கே தலைக்காட்டினாலும், தைரியமாக ஒரு முக்கியமான பிரச்சனையினை கையிலெடுத்து சொல்லியிருப்பதை பாராட்டலாம். கண்டிப்பாக இந்தி சினிமாக்கள் வேறு தளங்களுக்கு போகத் தொடங்கிவிட்டன. ஆனால் தமிழ்ப்படங்கள்?

படம்: கல்யுக்
இயக்குநர்: மோஹித் சூரி
நடிகர்கள்: அம்ரிதா சிங், தீபல் ஷா, குணால் கெமூ, ஸ்மெலி, அஷ்தோஷ் ரானா இசை: அனு மலிக்
தயாரிப்பு: மஹேஷ் பட்
வெளியான ஆண்டு: 2005

Comments:
thanks for the intro narayan.

//யாராவது எழுதுவார்கள் என்று பார்த்து கடைசியில் டிவிடியில் பார்த்து தான் எழுதுகிறேன்//

ippadi ellaam kaathirukkaamal, neengal paarkalaam endru ninaikkum padangalaippattri ezuthungal.

ur reviews are very helpful to me and some of my friends.

-Mathy
 
நராயண், நன்றி.

பாலியல் சுதந்திரமா அல்லது பாலியல் வறட்சியா எது போர்னோவின் ஆதாரமாக இருக்கிறது? இந்தக்கேள்விக்கான பதிலில் புரிதலின் திசை முற்றிலும் வேறாக இருக்கும். மேலைநாடுகளில் பாலியல் சுதந்திரம் இருக்கிறதே என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். விரிவாக பிறகு பேசலாம்.
 
நாராயணன்,
எனக்கு என்னவே நீங்கள் கூறிய அளவிற்கு இந்த படம் தகுதி உடையதாக இருப்பதாக எனக்கு படவில்லை. படத்தில் லாஜிக் என்பதே சுத்தமாக கிடையாது ஒரு ஜீம்மில்(gym) வேலை செய்பவன் ஜீரிச்(switzerland) போயி பழிவாங்குவது எல்லாம் நடக்காத வேலை அதுவும் sin cityயில் காட்டப்படும் சண்டை மற்றும் துப்பாக்கி எந்தி தெருவில் ஓடுவது மற்றும் எல்லாம் முடிந்தபிறகு போலிஸ் வருவது எல்லாம் சுத்த அபத்தம். எங்கேயோ படித்தது. இந்த படத்தின் மூலம் அவர்கள் கூறிய இணையதளத்தின் hits அதிகரித்தது தான் மிச்சம் என்று கூறுகின்றனர். முதல் பாதி நன்றாக உள்ளது swissஇல் நடைபெறுவதாக கூறப்படும் காட்சிகளுக்கும் ஆதி,பரமசிவம் படங்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை எனக்கு. Rang dhe basanthi பாருங்கள் அருமையான படம் முடிந்தால் அதற்கு விமர்சனம் எழுதுங்கள்.
 
Good review Narain.

(Except சீன/சப்பானிய "சப்பை மூக்கு" பெண்கள்)

.:dYNo:.
 
மிக நல்ல விமர்சனம் நாராயணன்.

/*இந்த படத்தில் குழந்தை பாலியல் வன்முறையும் ஒரு ஒரமாய் பேசப்படுகிறது. இதனை தமிழில் ஒரளவுக்கு அணுகிய இயக்குநர் என்று சொன்னால் செல்வராகவனை [காதல் கொண்டேன்] தான் சொல்ல முடியும்.*/


மகாநதியில் கமல் அழுத்தமாகவே சொல்லி இருந்தார்.
 
நல்ல பதிவு நரேன்,
Hindi சினிமா நிச்சயம் வேறு பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டதை
"பிளாக்" படமும் "லாகனும்" பார்த்த பொழுதே தோன்ற ஆரம்பித்து விட்டது.
பார்த்த ரசித்த படங்களை மறக்காமல் எழுதுங்கள்!
நன்றி
மயிலாடுதுறை சிவா...
 
நல்ல பதிவு நரேன்,
Hindi சினிமா நிச்சயம் வேறு பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டதை
"பிளாக்" படமும் "லாகனும்" பார்த்த பொழுதே தோன்ற ஆரம்பித்து விட்டது.
பார்த்த ரசித்த படங்களை மறக்காமல் எழுதுங்கள்!
நன்றி
மயிலாடுதுறை சிவா...
 
நாராய்ன்

உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத கேள்வி எல்லாம்? இந்தி படம் இப்படி எடுத்தார்கள் என்றால் அதற்கு காரணம் அங்கே தமிழ் நாட்டில் இருப்பது போல 'கற்பு' மற்றும் 'கலாச்சார' காவலர்கள் இல்லை. இங்கே என்ன அப்படியா இருக்கிறது நிலமை?

ஒரு புதிய முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்!

ஷங்கர்.
 
thanks for the intro.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]