Feb 26, 2006

கொத்து பரோட்டா - கொஞ்சம் காரமாய்

ஜார்ஜ் புஷ், திரும்பிப் போ!

அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் புஷ் இந்தியாவிற்கு வரவிருக்கிறார். சதான் உசைன் ஒரு போர்க் கைதி என்றால், புஷ்ஷும் இன்னொரு வகையில் போரினை தூண்டிய குற்றத்திற்காக கிரிமினல் வழக்கிற்கு உள்ளாகும் அளவிற்கு தகுதியுள்ளவர். இதை விட மிக கொடிய விஷயம், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் ஊடகங்களையும், இணைய பக்கங்களையும் நிரப்பியவர். அமெரிக்க அடிப்படைவாத கிறிஸ்துவவாதத்தின் பேரரசராக தன்னை அறிவித்துக் கொண்டு, அதற்காக, பல்வேறு ஆப்ரிக்க பழங்குடி மக்களையும், மொழிகளையும், அடையாளங்களையும் சிதைத்தவர். இவையெல்லாம் தாண்டி, அவரின் மதவெறி முகம் அவருடைய இந்திய ப்ரோகராமில் தெரிகிறது. வழக்கமாக இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள், மரியாதை நிமித்தம் காந்தி சமாதிக்கு செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை புஷ் போகப் போவதில்லை
"When asked -- by reporters on a recent trip aboard Air Force One -- if he will be breaking a decades long tradition of foreign dignitaries visiting India paying respect to the Father of India, Mr Bush, as is his wont, was caught off guard and mumbled something about how the Gospel of Jesus Christ views cremation as a pagan practice."
[பார்க்க ரிடிப் செய்தி] இதை விட பெரியதாய் இந்தியாவினை அவமானப்படுத்த முடியாது. இது தாண்டி, புஷ் இங்கே வந்தால் என்ன பேசுவார் என்பது ஒரளவிற்கு உலக வர்த்தகத்தினையும், அமெரிக்க எதிர்ப்பலைகளையும் உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்கு தெரியும். இந்த வார தெஹல்காவில் நிருபர் அமித் சென்குப்தா எழுதியிருப்பது மிக முக்கியமானது.
"This is because Bush is evil, he represents the new, most rapacious, greedy, perverse and schizophrenic invaders of the postmodern era, sometimes even worse then Adolf, worse because these born again crusaders are driven by a double crusade of capitalist profit and religious supremacy."
இது தாண்டி, புஷ்ஷினை திரும்பி போக சொல்லும் வலைப்பதிவும் முக்கியமாய் குறிப்பிடவேண்டியது. ஈரான், தஜகிஸ்தான், பாகிஸ்தான் பற்றிய பேச்சுக்களும், அணுக்கூடங்களைப் பற்றியும் பேசுவார். போகிற போக்கில் நாய்க்கு இடப்படும் பொறையாக நமது H1-B விசாக்களைப் பெருக்குவதினை சொல்லிவிட்டு போவார். நாமும், வாலாட்டிக் கொண்டு டாலர்களையும், அமெரிக்க செளக்கியங்களையும் பெற்று சகல சம்பத்துக்களுடன் இஷ்டமித்ர பந்துகளுடன் சுகமாக வாழ வழி பிறக்கும்.

படிக்க - ரிடிப் செய்தி | தெஹல்கா | புஷ் ஒரு உலக தீவிரவாதி வலைப்பதிவு

பின்குறிப்பு: புஷ் இன்று [2.3.2006] காலை பத்து மணியளவில் ராஜ் காட்டிற்கு [காந்தி சமாதி] சென்றிருக்கிறார்.

ஒரு படமும் அதன் செய்தியும்

கல்யுக் படத்திற்கான எனது விமர்சினத்தில் எல்லோரும் கேட்டது ஏன் ரங் தே பசந்தி படத்திற்கு விமர்சனமெழுதவில்லை?. உண்மையில் சொல்லப் போனால், ரங் தே பசந்தி ஒரு well made film. அவ்வளவே, மற்றபடி அந்த படத்தின் உள்ளடக்கத்திற்கும் எனக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இன்றைய இளைய சமுகம் இந்தியாவினைப் பற்றிய கவலை கொள்ளவில்லை என்றும், அதற்கு ஒரே வழி ஆயுதம் எடுப்பதும்,லஞ்சம் வாங்குபவர்களை கொன்று குவித்தால் நாடு சுபிட்சமாகிவிடும் என்றும் சொல்லும் இன்னொரு படம் [ அன்னியன் இன்னொரு எகா]. இதுதாண்டி, மணிரத்னம் சொல்லும் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் நாடு மாறிவிடும் என்கிற இன்னொரு ஜல்லி [ஆயுத எழுத்து]. கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஜ ஐ எம் - அஹமதாபாத்திலிருந்து சில பேராசிரியர்களும், மாணவர்களும் சேர்ந்து பீகார் தேர்தலுக்கு முன் எல்லா வேட்பாளர்கள் பற்றிய செய்திகளை திரட்டி, மக்களுக்கு கூட்டம் கூட்டி சொன்னார்கள். அவர்கள் சொன்னதில், கிரிமினல் வழக்குகள், கொலைக் குற்றங்கள், சொத்து குவிப்பு விவரங்கள் என எல்லாம் திரட்டி, ஒவ்வொரு வேட்பாளர்கள் பற்றியும், மக்களுக்கு எடுத்து சொன்னார்கள். பதினைந்து வருட லாலுவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. சமீபத்தில் சில ஐஐஎம் மாணவர்கள் ஒரு அரசியல் கட்சியினை ஆரம்பித்திருக்கிறார்கள் என்ற செய்தியினை படித்தேன். மாணவர்கள் புரட்சியினாலும், அரசியல் பங்கீட்டினாலும் தான் மாணவர்களின் தலைவராக இருந்த பிரபுல்ல குமார் மஹந்தா அஸ்ஸாமிற்கு முதலமைச்சராக முடிந்தது. இதையெல்லாம், ஒரங்கட்டிவிட்டு, வெறுமனே நான்கு பேரை கொலை செய்வதன் மூலம், pseudo தேசப்பற்றினை ரங் தே பசந்தியில் விதைத்திருக்கிறார்கள். ஐபின் லைவின் முதன்மை நிருபரும், ராஜ்தீப் சர்தேசாயின் மனைவியுமான சகாரிகா கோஸ் கிழித்து எடுத்திருக்கிறார் இந்த படத்தினை. உண்மையிலேயே, இது ஒரு முக்கியமான பதிவு. பாக்ஸ் ஆபிஸிலும், பிற பத்திரிக்கைகளிலும் மிக முக்கியமான படமாக இது முன்னிறுத்தப்படும் இந்த கால கட்டத்தில் இந்த விமர்சனம் மிக முக்கியமானது.

பார்க்க - சகாரிகா கோஸின் வலைப்பதிவு

ஜெஸிக்கா பேருக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

ஜெஸிக்கா லாலின் கொலை வழக்கில் சாட்சிகள் கலைக்கப்பட்டிருக்கிறார்கள். காவல்துறை தெரிந்தே சாட்சிகளை குலைத்திருக்கிறது. இந்தியாவே பொங்கி எழுந்து, இந்த கொலைக்கான குற்றவாளிகளை தண்டிக்க காத்திருக்கிறது. இன்னபிற செய்திகள் எல்லா ஊடகங்களிலும். என்.டி.டிவி ஒரு படி மேலே போய் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை ஒயமாட்டேன் என்கிறது. சசி இதைப் பற்றி அழகாக எழுதியிருக்கிறார். வீரப்பன் தேடுதல் வேட்டையில் சிக்கி இன்னமும் சிறையிலிருக்கும் 160 சொச்ச மனிதர்களுக்காக ஒரு பத்திரிக்கையும், டிவியும் முழுமையாக பேசவில்லை. கோயமுத்தூர் குண்டு வெடிப்பு கலவரத்திற்காக தடாவில் சிறையிலிருக்கும் அப்பாவி இஸ்லாமியர்களைப் பற்றி ஒரு தொலைக்காட்சியும் படம் பிடிக்க போகவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் இந்திய ராணுவத்தினரின் அத்துமீறல்களில் பாதிக்கப்பட்ட பழங்குடி மண்ணின் மைந்தர்களைப் பற்றி ஒரு செய்தித்தாளும் எழுத துணியவில்லை. ஊடகங்களுக்கு தேவை கிளாமரும், நெக்குருகும் மனிதர்களும். இதே பத்திரிக்கைகள் தான் டெல்லியில் குடிசைகளும், பிற கட்டிடங்களும் இடிக்கப்பட்டப்போது "சட்டம் தன் கடமையை செய்யும்" என்று சிவாஜி பாணியில் சொல்லிவிட்டு, இரண்டு பேஷன் டிசைனர்களின் பெருங்கட்டடங்கள் இடிக்கப்பட்ட போது அவர்களை பேட்டியெடுத்து போட்டன. ஐபிஎன் லைவ் ஆரம்பித்தப்போது அது ஒளிபரப்பிய ப்ரமொ விளம்பரங்களில் ராஜ்தீப் ஒன்று சொல்வார் "ஏன் மும்பை மரைன் டிரைவில் நடக்கும் ஒரு சிறு சம்பவம் செய்தியாகிறது. இந்தியாவின் ஒரு மூலையில் ஒரு கிராமத்தில் நடக்கும் நிலப்பிரபுதன்மையும், அதன்மூலம் நிகழ்த்தப்படும் வன்புணர்வும் செய்திகளாக்கப்படுவதில்லை" ஜெஸிக்கா லால் ஒரு மாடல், இது ஒரு துயரமான சம்பவம் என்பதை தாண்டி இதை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதில் ஊடக கயவாணித்தனமும், வணிக நோக்கும் தான் எஞ்சுகிறது. உண்மையாக, ஜனநாயகத்தின் ஐந்தாவது தூணான கருதப்படும் பத்திரிக்கைகள் செய்ய வேண்டியது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மனிதர்களுக்கும், குடிமக்களுக்கும் விசுவாசமாய் நடப்பது - சர்க்குலேஷனும், டிஆர்பி ரேட்டிங்கினை மட்டும் முன்னிறுத்தாமல். இன்றைய நிலையில் ஜெஸிக்கா பேருக்கு எல்லா ஊடகங்களும் ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

பார்க்க - என்.டி.டிவியின் போராட்டம் | சசியின் பதிவு

மறக்கடிக்கப்பட்ட மனிதர்கள்

ஐபின் லைவில் State of Mumbai என்றொரு நிகழ்ச்சியில் காட்டப்பட்ட ஒரு புள்ளிவிவரம் முக்கியமானதாகிறது. மும்பையில் இருக்கும் குடிசைகளையும், சேரிகளையும் என்ன செய்ய வேண்டும் என்று பொதுமக்களிடத்தில் கேட்டதற்கு 70% பேர்கள் அவர்களை நகரினை விட்டு வேறு இடத்தில் குடியேற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். என்ன நினைப்பில் அவ்வாறு சொன்னார்கள் என்று தெரியவில்லை. மும்பையின் சேரிகளால் தான் மும்பை வாழ்கிறது. மணியன், சுதாகர் போன்ற மும்பையிலிருக்கும் வலைப்பதிவாளர்கள் இதைப் பற்றி எழுத வேண்டும். இதில் புரிந்து கொள்ள வேண்டியது மக்களின் மாறிவரும் மனப்பான்மை. ஏற்கனவே சினிமா, வணிகம், தாதா கும்பல் என்று பல விசயங்களுக்கு கவர்ச்சிகரமான நகராய் விளங்குகிறது மும்பை. இப்போது நடுத்தர வர்க்கத்திற்கும், மும்பை சேரிவாசிகள் ஒதுக்கப்பட்ட, தீண்டதகாத மனிதர்களாக மாறிவிட்டார்கள். மும்பையின் அடையாளமாக விளங்கும் "டப்பாவாலாக்களில்" பாதி பேர்கள் குடிசைகளிலும், சேரிகளிலும் தான் வாழ்கிறார்கள். மும்பையில் புதிய சாலை போடுதல், கேபிள் பதித்தல், பேப்பர் போடுதல் என்று பல்வேறு தொழில் புரிந்து மும்பையின் அடையாளத்தினை மாற்றிக் கொண்டிருக்கும் 90% மனிதர்கள் சேரிகளிலும், குடிசைகளிலும், ஒரமாய் கிடக்கும் பெருங்குழாய்களிலும் தான் வாழ்வினை கழிக்கின்றார்கள். உலகமயமாக்கலின் தாக்கம் அதிகாலை சூரியன் போல மெதுவாய் உரைக்க தொடங்கியிருக்கிறது. சென்ற முறை வெங்கட் இந்தியா வந்திருந்தபோது, நாங்கள் டிரைவ் இன்னில் பேசிய பல்வேறு விஷயங்களுக்கு நடுவே மிக முக்கியமானதாக இடம்பெற்றது இந்த digital divide. போன முறை நான் பெங்களூரில் பயணித்த போது, கன்னடியர்களுக்கு வேலை கொடு என்கிற அட்டையுடன் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரே கொஞ்சமாய் சில பேர் கத்திக் கொண்டிருந்ததை பார்த்தேன்.இந்தியா வளர வளர மெதுவாக, ஆனால் உறுதியாக மனிதர்கள் இடையே கசப்புத்தன்மையும், கொலைவெறியும் வளர்ந்து இது ஒரு haves & have nots என்கிற பிளவில் கொண்டு போய்விடும். அரசும், நிறுவனங்களும் முழித்துக் கொள்வது நல்லது.

Comments:
நரேண்,

நுனிப்புல் மேய மேயக்கூடாது.
நீங்க குறிப்பிட்ட ரீடிஃ கட்டுரையின் இரண்டாம் பத்தியை படித்தீர்களோ?

//Before some of those mentioned above lather themselves into a frisson of fury over the latest slight from the US hegemon, they should stop and substitute Abdullah bin Abdulaziz al-Saud, ruler of the Kingdom of Saudi Arabia for George W Bush, 43rd President of the United States.

The absolutist Saudi monarch not only broke a hallowed tradition of paying homage at Raj Ghat observed by every foreign leader but offered an outrageously preposterous reason for doing so.

Saudi king's gift to a Kerala family
The king is reported to have indicated that a visit to the Mahatma's memorial would violate the principles of his faith. By inference, India's current head of State President A P J Abdul Kalam should be guilty of sacrilege for his many visits to the Samadhi.

The government may have had its (mistaken) reasons for fawning over the Saudi ruler but the near complete lack of commentary particularly in the normally strident Leftist papers such as The Hindu boggles the mind.

Should President Bush or Prime Minister Blair or even the Pope have dared to commit such an egregious folly, headlines would have blared in those Leftist organs about India's sovereignty and ancient history being trampled upon by ugly colonialists who still seek to subjugate India economically and culturally, if not militarily//
 
நாராயண்,

புஷ்ஷைப் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் பல கருத்துக்கள் சரியானவையே; இருப்பினும், காந்தி சமாதிக்கு அவர் செல்ல மறுப்பது அவரது சொந்த நம்பிக்கைகளைச் சார்ந்தது. அந்த சொந்த நம்பிக்கைகள் நமது பார்வையில் அடிப்படைவாதமாகவும், முட்டாள்தனமாகவும் இருக்கலாம், இருப்பினும் அந்த நம்பிக்கையை அனுமதிப்பதே பண்பாடு. இதை இந்தியாவிற்கு நிகழ்த்தப்பட்ட அவமரியாதை என்றெல்லாம் கருதுவது, நமது insecurityயையே காட்டுகிறது.

அவர் மரியாதை செய்யாவிட்டால், காந்தியோ இந்தியாவோ தகுதி குறைந்து போய் விட மாட்டா.
 
நாரயணன்,

அநீதி இழைக்கப்பட்டாலும் நீங்கள் கவர்ச்சிகரமான அநீதி இழைக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும். அதிரடிப்படையால் தேய்த்து நசுக்கப்பட்டவகளுக்கும், மணிப்பூர், அஸ்ஸாம் வாசிகளுக்கும், போலிஸினால் வெறித்தனமாக தாக்கப்பட்ட கேரள வனவாசிகளாகவோ இருக்கையில் உங்களிடம் கவர்ச்சி இல்லை. எனவே அநீதி எடுப்பாய் தெரிவதில்லை.


மும்பைவாசிகள்- நகரமயமாக்கப்படும், உலகமயமாக்கப் படும் போது ஏழைகளின் இடம் மேட்டுக்குடிகளுக்கு தேவைப்படும் வரை உழைப்பை நல்குதலும், பிறகு ஒதுங்கி அழிவதுதான். அமெரிக்கா அதைத்தான் கண்டுபிடித்து, மூன்றாம் உலக நாடுகளில் இருந்து செய்துவருகிறது. இந்தியா இன்னொரு அமெரிக்காவாக வேண்டாமா? வல்லரசுக்கனவை நீங்கள் கேலி செய்கிறீர்களா?
 
பெத்தராயுடு,

முழு கட்டுரையினை படித்ததினால் தான் சுட்டியினை தைரியமாக கொடுக்க முடிகிறது. என்னுடைய கேள்வி, புஷ்ஷின் அடிப்படை மதவாதம் மட்டுமே, அது அவருடைய நம்பிக்கை என்பதில் எனக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை.ஸ்ரீகாந்த் சொன்னதுப் போல, இது insecurity யோ, காந்தியின் புகழ் மங்குமோ என்ற கவலைகள் கூட கிடையாது. இதில் அடிநாதமாக இருப்பது அவரின் ஆழமான மதநம்பிக்கை. இந்தியாவிற்கு வந்த சவுதி அரசர் கதை வேறு. சவுதியோ, பிற மத்திய கிழக்கு நாடுகளோ முழுமையான இஸ்லாமிய நாடுகளாக அங்கீகரிக்கப்பட்ட நாடுகள், அவர்களின் மத நம்பிக்கைகளில் தலையிடுதல் என்பது வேறு. சுதந்திர தேசமாகவும், சுதந்திரத்திற்கு இலக்கணமாகவும் தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளும் அமெரிக்காவிற்கும் வித்தியாசங்கள் நிறைய. இதற்கு முன் இந்தியாவிற்கு வந்த எந்த அமெரிக்க அதிபர்களும் [அரசர்களும்] இப்படி மதநம்பிக்கைக் கொண்டு இருந்ததில்லை என்பது தான் வாதம் இங்கே, அதுவுமில்லாமல், அமெரிக்காவின் அதிபர் மதவெறியனாக இருப்பதில் எவ்வளவு அபாயங்கள் இருக்கிறது என்பதை உலகம் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறது. இது ஒன்றும், கருணாநிதி போல, இந்து கடவுள்களை இல்லையென்று சொல்லிவிட்டு, ரம்ஜான் அன்று நோம்பு கஞ்சி குடிப்பது போன்ற ஜிகினா அரசியல் கிடையாது.
 
தங்கமணி,

நேற்றைய விவாதத்தில் இன்னொரு புள்ளிவிவரமும் ஷாக்கடித்தது. 60% மக்கள் வெறும் 7% பரப்பளவு உள்ள இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மும்பையில். ஆதி கோத்ரேஜ் போன்ற பெருவணிகர்கள் விவாதத்தில் மிகச் சுலபமாக சேரிகளே இருக்கக் கூடாது என்றும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தவேண்டும் என்றும் ஜல்லியடித்தார்கள். இந்த வாழ்க்கைத்தரமுயர்த்தல் என்கிற ஜல்லி, இந்தியாவின் எல்லா பட்ஜெட்களிலும் ஊடுருவிய ஒரு சிந்தனை. முழுமையான திட்டங்கள் எதுவுமில்லாமல், வெறுமனே வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களை மேலே ஏற்றுகிறோம் என்று சொல்லிக் கொண்டு, ஊழல் மலிந்ததுதான் மிச்சம். Accountablity என்கிற அடிப்படை இல்லாத தேசமிது. எந்த நிதியமைச்சரும், அமைச்சகமும் எந்த காலத்திலும் தங்களுடைய ஒரு வருட பாலன்ஸ்ஷீட்டினை சமர்ப்பித்ததாக சரித்திரமில்லை. அப்படியிருக்கும்போது தரித்திரம் எப்படி போகும்?
 
// போலிஸினால் வெறித்தனமாக தாக்கப்பட்ட கேரள வனவாசிகளாகவோ//

அன்புள்ள தங்கமணி, உங்கள் கருத்தை நான் சிறிதும் முரண்படாமல் ஏற்றுகொள்கிறேன் என்பதை விளக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். ஆனால் வனவாசி என்ற சொற்பிரயோகம் ஆர்.எஸ்.எஸினுடையது. இந்தியாவின் பூர்வீக குடிமக்கள் என்கிற பார்வையுடன், ஆதிவாசிகள் என்று அழைக்கப்படும் சொல்லாடலை மறுக்கும் முகமாக, இங்கு ஆரிய குடியேற்றம் முதலாக வந்தேரிகள் என்று யாரும் இல்லை என்பதை மருக்கும் சமஸ்கிருத மைய வறலாற்று கருத்தாக்கத்தின் சார்பில் வரும் வார்த்தை இது. அதை நீங்களும் (கவனக் குறைவின் காரணமாக கூட) பாவிப்பது குறித்த அரசியல் பிரச்ச்னையை சுட்டி காட்ட மட்டுமே இந்த பின்னூட்டம்.

உண்மையில் யார் இங்கே பூர்வீகம், யார் வந்தேறினார்கள், அதனால் இபோது என்ன என்பதெல்லாம் வேறு விவாதத்திற்குரிய விஷயம். ஆனால் 'அரசியல ரீதியாக சரியான' வார்த்தைகளை பாவிக்கும் முகமாக (மேல்ஜாதி என்பதற்கு பதில் ஆதிக்க ஜாதி என்பது, தாழ்த்தப்படவர்கள் என்பதற்கு பதில் தலித் என்ப்துபோல) ஆதிவாசி என்ற வார்த்தையே பொருத்தமானதாக இப்போதைகு தெரிகிறது. மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும்.
 
தெபியன் தரும் கரேமூரே தமிழெழுத்துக் குழப்பத்தில் சுரதாவில் தட்டியதில் வந்த எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும். (நாராயணன், உங்களின் பழைய பதிவில் பஞ்சாப் பற்றி எழுதியிருப்பதை பார்த்தேன்.)
 
ஆமாம், வசந்த், 'வனவாசி' என்ற சொல் பயன்பாடு ஆர்.எஸ்.எஸ் இயக்கப் பயன்பாடுதான். நீங்கள் குறிப்பிடுகிற அரசியல் பின்னணியும் அறிந்ததே. தவறாக பயன்படுத்தி உள்ளேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!
 
Narain,

Still can't get on same page with you on this...

புஷ்ஷின் மத அடிப்படைவாதம் பல ராஜாங்க ரீதியான விஷயங்களில் வெளிப்படுகிறது - stem cell research, intelligent design, anti-abortion - என்று. இவையெல்லாம் கண்டிக்கப் பட வேண்டியவையே. ஆனால், காந்தி சமாதிக்குச் செல்ல மறுப்பது அத்தகைய ஒன்று இல்லை. இது ஒரு state visit என்றாலும், அமெரிக்க மக்களின் பிரதிநிதியாக வருகிறார் என்றாலும், at some important level, it is a personal act. வேண்டா வெறுப்பாகப் போய்விட்டு, பின்னர் புனித நீர் தெளித்துக் கொள்வதை விட போகாமலிருப்பது மேல்.
 
நாராயணன்,
//மணியன், சுதாகர் போன்ற மும்பையிலிருக்கும் வலைப்பதிவாளர்கள் இதைப் பற்றி எழுத வேண்டும்//
இதையொட்டி எனது பதிவு இங்கே
 
நாராயணன்,
மும்பைச் சேரிகள் குறித்து நீங்கள் எழுதியது நன்று. சில விளக்கங்கள் தேவையென நினைக்கிறேன். ஒரு தொடர் இதுகுறித்து எழுதுகிறேன்.நீண்டுகொண்டு போவதால் என் வலைப்பதிவில் இட்டிருக்கிறேன்.
அன்புடன்
க.சுதாகர்
 
//ராஜ்தீப் ஒன்று சொல்வார் "ஏன் மும்பை மரைன் டிரைவில் நடக்கும் ஒரு சிறு சம்பவம் செய்தியாகிறது. இந்தியாவின் ஒரு மூலையில் ஒரு கிராமத்தில் நடக்கும் நிலப்பிரபுதன்மையும், அதன்மூலம் நிகழ்த்தப்படும் வன்புணர்வும் செய்திகளாக்கப்படுவதில்லை"//
நாராயணன்,
ராஜ்தீப்பின் இந்த வாக்கியங்களை நான் முன்புகேட்டதில்ல. அதிர்ச்சிக்கும் கண்டனத்திற்கும் உரியது. மும்பை மெரின் டிரைவ்-வில் நடந்த வன்புணர்வு சிறு சம்பவமா? வேலியே பயிரை மேய்ந்த கொடுமை அது. இதனை அவர் வேலைசெய்த என்.டி.டி.வி முதல் அனைத்து ஊடகங்களூம் வலுவாகக் கண்டித்தன. மக்கள் கொதித்துப்போனார்கள். மும்பை போலிஸ் தலைகுனிந்த வேதனைமிகுந்த செய்திஅது.
பிற இடங்களில் நடக்கும் வன்முறைகள் செய்தியாவதில்லை என்பதை மறுக்கவில்லை. மற்றதை பெரிதாகக் காட்டுவதற்காக மும்பைபோன்ற நகரத்தில் நடந்தது என்ற ஒரே காரணத்திற்காக இதனை சிறு செய்தியாகக் காட்டிக்கவேண்டாம். இதுவும் பத்திரிகையாளர்களின் கேவலமான விளம்பரம்தானே. ராஜ்தீப் சர்தேசாயும் அதற்கு விலக்கல்ல.
நீங்கள் இதனை மேற்கோள் காட்டியிருக்கவேண்டாம்.
அன்புடன்
க.சுதாகர்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]