May 31, 2006

26 விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து.....

'வெற்றி கொடி கட்டு' என்கிற படத்தில் துபாயில் இருந்த இடத்தின் முகவரியினை வடிவேலு பார்த்திபனிடம் கேட்கும் போது ஆரம்பிக்கும் வாசகம் தான் மேற்கண்டது. நெ.26 விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு, துபாய் என்று சொல்லும் வசனத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தமென்று பார்க்காதீர்கள். சிலுக்கு லுங்கி, ஜிப்பா, மைனர் செயின் போன்ற விஷயங்களில்லாமல் ஒரு சாதாரண ஜீன்ஸ் டி சர்ட்டில் துபாயில் இறங்குகிறேன்.

உடனே வளைகுடா நாடுகளில் இருக்கக்கூடிய என் ரசிகர் மன்ற கண்மணிகள் பதட்டப்படாதீர்கள். சனிக்கிழமையன்று தான் தரையிரறங்குகிறான் உங்கள் தலைவன் ;) கண்டிப்பாக கெளரவ முனைவர் பட்டம் தேவையில்லை. வெறுமனே சமோசா இரானி டீ கொடுத்து தமிழ் சங்க கூட்டத்தில் ஒரங்கட்டி மேட்டர் வாங்கும் [சிநேகாவிற்கும் சரவண ஸ்டோர்ஸுக்கும் மேட்டரமாமே உண்மையா, நீங்க தி.நகர்ல தானே இருக்கீங்க] வேலை நடக்காது நைனா, நாங்க ஒரு மார்க்கமான ஆளுங்க. வணிக விஷயமாக ஒரு இரண்டு வாரங்கள், சென்னை வெயில் போக, இருக்கக் கூடிய பொன்நிற மேனியினை [டேய் ஒவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வரா இது!] வளைகுடா வெயிலில் கருக்குவதாக உத்தேசம். ஜூன் மூன்று தொடங்கி, பதினொன்றம் தேதி வரையில் துபாயில் இருக்கப் போகிறேன். துபாயில் வலைப்பதிவர்கள் இருப்பின் ஒரமாய் ஒரு மடல் போடுங்கள், நல்ல 'மால்' லாக பார்த்து வம்படிக்கலாம். இது தாண்டி, ஒரு மூன்று நாள் மஸ்கட்டிலும் வேலையிருக்கிறது. ஊர் உலகம் சுற்றி ஒரு வழியாக என் இனிய கூவமனமகிழும் சென்னைக்கு பதினாறாம் தேதி வருவதாக இருக்கிறது திட்டம்.

பார்க்க நினைப்பவர்கள், மடல் அனுப்புவர்கள் யோசித்து கொள்ளுங்கள். நான் கொஞ்சம் தொணதொணப்பு கேஸ், கொஞ்சம் ஆர்வக் கோளாறு பார்ட்டி, ஆகவே, அராபிய பாடல்கள், படங்கள், நம்மாட்களின் நிலைமைகள், வாணிகம், அமெரிக்க - இஸ்லாமிய சண்டைகள், தமிழ் படங்கள், வாளமீனுக்கும் வஜ்ரமீனுக்கும் கல்யாணம், புதுப்பேட்டை [யாருப்பா அது, விசா விஷயங்களில் அலைந்து கொண்டிருப்பதால் இன்னும் பார்க்கவில்லை. நான் ரெடி நீங்க ரெடியா ]ஷேக்குகளில் 36 வது சம்சாரத்தின் தூரத்து மச்சினனின் மூன்றாவது பையனின் மனைவியின் ஒன்று விட்ட சித்தப்பா பையனின் குழந்தை பேதியாவதன் காரணம் வரை பேச நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஒரங்கட்டி ஒரு ஒன் டே மேட்சு ஆடலாம்.

இப்போதைக்கு அபீட்டு, உங்க ஊருக்கு வந்தா குதா ஃபஸ்!

May 21, 2006

சிரியானா

கியாஸ் தியரி பற்றி ஒரு காலத்தில் நான் ஜல்லியடித்திருக்கிறேன். ஆனால், அதை பின்பற்றி ஒரு முழுநீள மிக முக்கியமான திரைக்கதையையும், படத்தினையும் நேற்றுதான் பார்த்தேன். "சிரியானா" - ஜார்ஜ் கூளூனி, மேட் டெமான், ஜெர்மி ரைட், அலெக்சாண்டர் சித்திக் என்று பிரபலங்கள் நடித்திருந்தாலும், படத்தின் மையக்கரு, 'எல்லாம் ஒன்றுக்கொன்று ஏதேனும் ஒரு வகையில் தொடர்புள்ளவை' என்பது தான்.படம் ஒரு அரேபிய நகரத்தில் ஆரம்பிக்கிறது. அமெரிக்காவிற்கு தாவுகிறது. சுவிட்சர்லாந்திற்குள் பயணிக்கிறது. பாகிஸ்தான் அகதிகளைப் பற்றி பேசுகிறது. ஜெனிவாவுக்குள் போகிறது. வாஷிங்டன் வழித்தடங்கள் தெரிகிறது. டெஹ்ரானுக்குள் போகிறது. பாரிஸில் பயணிக்கிறது. ஸ்பெயினுள் நுழைகிறது. முதல் 20 நிமிடங்கள் ஒன்றும் புரியாது. ஆனால், போக போக எல்லா காட்சிகளும் விளங்குகின்றன. படம் ஆரம்பித்த 40 நிமிடத்தில் தான் படத்தின் முக்கியத்துவம் புரிகிறது. உலகில் எரிபொருள் தேவைக்கான அவசியங்களையும், அதை கைப்பற்ற முயலும், அமெரிக்க, அரேபிய, சீன அரசுகளின் எண்ணங்களையும், அதன் பின் நிர்கதியாய் நிற்கும் அகதிகளையும், அவர்கள் எப்படி தீவிரவாதிகளாக மூளைச்சலவைச் செய்யப்பட்டு மாற்றப்படுகிறார்கள் என்கிற அபாயத்தையும், அமெரிக்கா 'லாபிகள்' 'அரசு இயந்திரம்' ஒரு வளத்தினைக் கைப்பற்ற என்னவெல்லாம் செய்யும் என்பது பற்றிய அச்சத்தினையும், கார்ப்பரேட் அமெரிக்கா என்பது வணிகம் மட்டுமல்ல, அசாதாரணமான வெறி பிடித்த power play கும்பல் என்பது பற்றியும், சி.ஐ.ஏ க்கு அரபு நாட்டு அதிபர்களும், தெருநாயும் ஒன்றுதான் என்பது பற்றிய தெளிவும், மொத்தத்தில் எரிபொருள் என்பது எப்படி உலகின் வரைப்படத்தினை மாற்றப்போகிறது என்பது பற்றிய கவனத்தினையும் ஒரு சேர உங்கள் கண் முன்னால் உலர வைப்பது தான் 'சிரியானா'

சில படங்களை வெறுமனே பார்த்து வந்து விட முடியும். சிரியானா போன்ற படங்கள் பார்க்க ஹோம் வொர்க் செய்தல் அவசியம். உலக சந்தை, எரிபொருள் பற்றிய பின்விவரங்கள், அமெரிக்காவின் அதிகார துஷ்பிரயோகங்கள், இஸ்லாமிய தேசங்களில் நடக்கும் Palace wars, ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான், தர்கிஸ்தான் பற்றிய செய்திகள், அப்பாவி இளைஞர்களும் அந்திய நாட்டு வேலை திட்டங்களும் என கொஞ்சம் விவரம் தெரியாமல் இந்த படத்தினைப் பார்த்தால், சத்தியமாய் தலைகால் புரியாது. துண்டுதுண்டாக காட்டப்படும் காட்சிகளில் 'தொடர்பற்று இருக்கும் தொடர்ப்பினை' இயக்குநர் அருமையாக வெளிப்படுத்தியுள்ளார். தனித்தனியாக தெரியும் மனிதர்கள், அவர்களின் வேலைகள் அனைத்தும் எப்படி மிக சரியாக ஒரே நோக்கத்திற்காக கொண்டு செல்கிறது என்பது பற்றிய புரிதல் படத்தின் இடைவேளைக்குப்பிறகு வருகிறது.

ஜார்ஜ் கூளூனி [பாப் பேர்ன்ஸ்], ஒரு சி.ஐ.ஏ வின் உளவாளி, அரபி கற்றுக் கொண்டு, வியாபாரியாக அரபு தேசத்தில் வாழ்ந்து, அமெரிக்காவிற்கு தகவல் தருவதும், உள்நாட்டு தீவிரவாத கும்பல்களுக்கு ஆயுதங்கள் கடத்துவதும், அதிபரை கொல்ல முயற்சித்து அத்திட்டம் முறியடிக்கப்பட்டதால் அமெரிக்கா போய், அங்கே, சி.ஐ.ஏ அவரை கறிவேப்பிலை போல தூக்கியெறிவதால் மனமுடைந்து, அதிபரின் மகனை கொல்ல முயற்சிக்கும் அமெரிக்க திட்டத்தினை தடுக்கப்போய் சாகிறார்.

மேட் டெமான் [பிரையன் வுட்மேன்] சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒரு எனர்ஜி கம்பெனியின் இளைய தலைமுறை அதிகாரி. டெஹ்ரானில் தங்கி அரேபிய அரசரின் மகனிடம் எரிபொருள் விற்பனைக்கான மார்க்கெட்டிங்க் ஸ்ட்ரைடிஜி சொல்லி மனதில் இடம்பிடித்து , மகனை இழந்து, மரியாதைக்காகவும், பெரிய எரிபொருள் சந்தையின் கன்சல்டிங்கிறாகவும் இறங்கி, தோற்றுபோய் உயிரோடு வீடு திரும்புகிறார்.

கிறிஸ் கூப்பர் [ஜிம்மி போப்], கிளீன் எரிபொருள் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி. கஜகஸ்தானில் இருக்கும் ஒரு எண்ணெய் பேசினை வளைத்துப் போட, அதை விட பெரிய எரிபொருள் நிறுவனமான கனெக்ஸ் இவர்களோடு கூட்டு சேர தயாராகிறது. இதற்கு அமெரிக்காவின் நீதித்துறை ஒப்புதல் தர மறுத்து, இதில் ஏதேனும் ஊழல்கள் நடந்திருக்கிறதா என்று விசாரிக்க ஒரு தனியார் அட்டர்னி நிறுவனத்தினை நிறுவுகிறது. ஜெப்பரி ரைட் [பென்னட் ஹாலிடே] இந்த நிர்வாக இணைப்பினை சரிப்பார்க்க வரும் due dilligence அதிகாரி. அவர் இதனை ஆராய்கிறார்.

இதற்கிடையில் அரேபிய அரசரின் மகன்களுகிடையே படும் பிளவில் மூத்த சகோதரன் அலெக்ஸாந்தர் சித்திக் [இளவரசன் நசீர்], அமெரிக்கர்களின் பிடியிலிருந்து மண்ணை விடுவித்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஐரோப்பாவிற்கும், சீனாவிற்கும் நேரடியாக அமெரிக்கர்களின் தலையீடு இல்லாமல் எண்ணெய் வர்த்தகத்தினை உருவாக்க திட்டம் போடுகிறார். அவருடைய தந்தைக்கு இதில் உடன்பாடு இல்லாமலும், சி.ஐ.ஏ மற்றும் தேர்ந்த அமெரிக்க வர்த்தகர்களின் மாற்றத்தாலும், இளைய மகனை அடுத்த அரசராக நியமிக்க இருக்கிறார். அவருக்கு துணையாக சி.ஐ.ஏ நசீரை கொல்ல திட்டம் போடுகிறது. நசிருக்கு துணையாக தான் பிரையன் இருக்கிறார். நசிரை கொல்ல தான் பாப் பரைய்ன்ஸை சி.ஐ.ஏ நாடுகிறது.

முடிவில் பாப் பரையன்ஸ் கொல்லப்படுகிறார். கனெக்ஸ், கீளின் நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. பிரையன் தன் பழைய தொழிலுக்கு போகிறார். வாழ்வின் அபத்தநிலையினை மிக தெளிவாக சொல்லி முடிகிறது படம். தனிமனிதர்கள், கார்ப்பரேஷன்களாலும், அரசாலும் பந்தாடப்படுகிறார்கள். இடையூடாக, பாகிஸ்தானிலிருந்து வந்த ஒரு அகதி, மூளைச்சலவை செய்யப்பட்டு, கனெக்ஸ் கப்பலின் மீது மோதி சாகிறான். அடிப்படைவாத மதராஸாக்களில் எப்படி மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்கள், கொஞ்சம் அமெரிக்க பார்வை இருந்தாலும் கூட. கனெக்ஸின் முதலாளி "we are doing this for our customers and to make the world has cheaper oil and americans will be paying less for their gas" என்று கைத்தட்டல்களுடன் சொல்லி முடிகிறார். அமெரிக்க அரசும் ஒத்துப் போகிறது. நீதித்துறை கழண்டுக் கொள்கிறது. சி.ஐ.ஏ பாப் பரைய்ன்ஸ் பற்றிய ஃபைலை மூடிவிடுகிறது. தன்னாட்டின் நன்மைக்காக பேசியவர்கள் அனைவரும் செத்து போகிறார்கள். அரசும், நிறுவனங்களும் கை குலுக்கி நடைப்போட ஆரம்பிகின்றன. Absurdity rules all over.

இந்த படத்தில் வரும் ஒரு முக்கியமான வசனம், படத்தினையும், அமெரிக்க தரப்பு நியாயத்தினையும் சமன் செய்கிறது.


"Corruption charges... corruption? Corruption is government intrusion into market efficiencies in the form of regulation. That's Milton Friedman. He got a goddamn Nobel Prize. We have laws against it precisely so we can get away with it. Corruption is our protection. Corruption keeps us safe and warm. Corruption is why you and i ar prancing around in here instead of fighting over scraps of meat out in the street. Corruption...... is why we win"
ஜார்ஜ் கூளூனி அருமையாக அரபி பேசுகிறார். இயக்குநர் பல்வேறு விதமான விஷயங்களை ஒரே படத்தில் சட்டகப்படுத்தியிருக்கிறார். சென்னையிலிருப்பின் சத்யம் 6 டிகிரிஸில் பாருங்கள். மறக்கமுடியாத படம்.

கொசுறு: இந்த படம் பார்க்குமுன் மேய்ந்தபோது மாட்டியது இது. அரசும், நிறுவனங்களும் இணையும் போதெல்லாம், எங்கேயோ பிரச்சனைகள் கிளம்பப்போகிறது என்பது நிஜம் :)
The fact is that India is currently standing on a precipice. Our institutions of governance — particularly our political institutions — have been so weakened that we are ready for the same ‘corporate takeover’. If you don’t believe me, visit the official homepage of the Indian Planning Commission, click on the report of the innocuously termed Indo- us ceo forum. Its members included the most respected from India — from Ratan Tata to Nandan Nilekani. Read the report and its action agenda for the Indian government on everything — agriculture, food processing, intellectual property rights, real estate, education. No surprises there, you will say. After all, all industry — Indian or foreign — has a wish list.

But wishes are commands when lobbies, not goverment, rule. For instance, the report directs that Indian government must “eliminate policies like the discriminatory special excise duty on carbonated drinks”. In the same budget, the duty was reduced. The group included the head of soft drink major, us multinational Pepsico. No surprises there.
சுனிதா நாரயண் எழுதிய பத்தி இது. இதற்கும் சிரியானாவிற்கும் கருத்தளவில் ஒற்றுமையே தவிர வேறொன்றுமில்லை.

பார்க்க: சிரியானா (2005) | சிரியானா டிவிடி தளம்May 19, 2006

வரலாறு மறக்கடிப்படுகிறதா ?

பிபிசி செய்திதளத்தில் சீனாவில் மா-சே-துங்கின் 40-ஆம் வருட கலாச்சாரப் புரட்சி நாள் கொண்டாடப்படுகிறது. 40 வருடங்களுக்கு முன்னர், மா-சே-துங் துவங்கிய கிராமங்களை நோக்கி செல்லுங்கள் என்கிற கோஷம், கலவரமாகி பல்லாயிரக்கணக்கானவர்கள் இடதுசாரி சிகப்பு படையினரால் கொல்லப்பட்டார்கள். இன்றைய பெய்ஜிங்கில் எடுத்த பேட்டியில் மாணவர்கள் இதைப் பற்றிய எவ்விதமான கவலையுமின்றி உலகமயமாக்கல் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்ச நாளைக்கு முன்னர், என் நண்பரின் நண்பர் ஒருவர் கனடாவிலிருந்து வந்திருந்தார். இலங்கை தமிழர். அவருடைய மகனுக்கு 16 வயதிருக்கும். ஒட்ட வெட்டிய கறுப்பின கிராப்போடு, காதில் கடுக்கன், மோவாய் கட்டைக்கு கீழே கொஞ்சமாய் ஆட்டுதாடி என்று ஒரு மார்க்கமாய் இருந்தான். ஒரு உணவகத்தில் அவனோடு பேசிக் கொண்டிருந்த போது அவன் போராட்டத்தினை பற்றி சொன்ன வார்த்தை "that's fuckin' crab. let's move on". தந்தையோ, இவர்களால் போராட்டத்தின் அடிப்படைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டார். போன வாரம் மும்பையில் வணிக சந்திப்புகள். அதில் ஒருவர் லண்டனிலிருந்து இப்போது துபாயில் குடியேறிருக்கும் இஸ்லாமிய தனவந்தர். அவரின் குழந்தைகள் [16,13,8] ஒருவருக்கும் இலண்டனில் நடந்த இஸ்லாமியர்கள் மீதான வன்முறைகள் பற்றிய கவலைகள் இல்லை. அவர்கள் இன்னமும் பெக்ஹாம், உலகக் கோப்பை கால்பந்து, வோடாஃபோன், கரன் ஜோஹர் படம் என்றுதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகில் நடந்துக் கொண்டிருக்கும் பெரும்பாலான போராட்டங்களுக்கு 30 வயதிற்கும் மேல் - பாலஸ்தீன/இஸ்ரேல், இலங்கை அரசு/விடுதலைப்புலிகள், அரபு நாடுகளுக்கான பிரச்சனைகள், அமெரிக்கா/ஈராக் [15+ வருடங்கள்], இந்திய/பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனைகள் என நீளுகிறது பட்டியல். 30 வருடங்கள் என்பது ஒரு தலைமுறை. அதன் பிந்திய தலைமுறை ஏதாவது ஒரு நாட்டில் பிறக்கிறது, தஞ்சமடைகிறது, அவர்களுக்கு அவர்களின் வாழ்வியல் கவலைகள் முக்கியமானதாக போய்விடுகிறது. தங்கள் சொந்த மண்ணைப் பற்றிய அடிப்படை கவலைகளற்று போய்விடுகிறது. மண்,மொழி, இனம், கலாச்சாரம் என்று பேசினால், உலகமயமான சமுதாயத்தில் நீங்கள் ஒரு கற்கால கம்யுனிஸ்டுகள் போல பார்க்கப் படுவீர்கள். இங்கே தமிழ் சமுகம் என்று டைடல் பார்க்கில் பேசினால் உங்களை ஒரு மார்க்கமாய் பார்ப்பார்கள், அடிப்படைவாதிகள், ஏன் சில சமயம் போன தலைமுறை எச்சங்களாய் நீங்கள் இருப்பதாக நினைப்பார்கள். என்னுடைய அலுவலகத்திலேயே, நர்மதா பிரச்சனைப் பற்றி பேசினால் "நீ குளோபலைஷேனுக்கு எதிராக பேசுகிறாய். கம்யுனிஸ்ட் போல எப்போதும் பிரச்சனைகளை மட்டுமே பேசுகிறாய், உன்னால் ஒரு முடிவுக்கு வர முடியாது " என்று வாதிடுபவர்கள் உண்டு. ஆக, பிரச்சனை செய்திகளில் இல்லை, செய்திகளினை அறிந்துக் கொள்வதிலும், அதன் பின்புலத்தினை தெரிந்து கொண்டு அதற்கான அடிப்படை பிரச்சனைகளிடமிருந்து அச்செய்தியின் பல/பலவீனங்களை ஆராய்வதிலும் இருக்கிறது.

வரலாறு என்பதன் அடிப்படை என்ன ? பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் வாழ்க்கையல்லவா. மிகச் சாதாரணமாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதின் மூலம் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா ? வரலாற்றினை அறிந்துக் கொள்வதின் பயன் என்ன ? என் நண்பர் இப்போது பள்ளி படிக்கும் குழந்தைகளின் சார்ப்பாக வேலை செய்பவர். அவர் குழந்தைகளிடம் சுபாஷ் சந்திர போஸ் பற்றி கேட்டதற்கு வந்த பதில் "அவர் ஒரு தீவிரவாதி, காந்திக்கு எதிராக வேலை செய்தவர்". வரலாறு என்பது வாழ்வின் பதிவு. இந்தியாவில் வரலாறு என்பது காங்கிரஸ், பி.ஜே.பி, சங் பரிவார் கும்பல்களின் சுய சரிதையாக மாறிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் பதவிக்கு வந்தால், வரலாறு ராஜீவ்காந்தியின் மகோனதமான பங்களிப்பையும், பிஜேபி இருப்பின், சாவர்க்கார், இந்து சாம்ராஜ்யம், சிவாஜி, திலகர் பற்றியும் விரிவாக குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும். கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தால், வரலாற்று புத்தகங்கள் நமக்கு தேவையில்லை, ஏனெனில் History repeats itself and we will never learn from other's mistakes.

காசி அனந்தனின் (?!!!) கவிதை வரி ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது "வரலாறு எம்மை விடுதலை செய்யும்" ஆனால், வரலாற்றினை யார் விடுதலை செய்வது?

May 8, 2006

கொத்து பரோட்டா - வெயிலாய் இருந்தாலும்

இன்று என் வாக்கினை பதிய என் வாக்குச்சாவடிக்கு சென்றேன். அங்கேயிருந்த அதிகாரியோடு 15 நிமிட சண்டை. 49 0 போடுவதற்கான வழிமுறைகளை கேட்டால் அவருக்கு தெரியவில்லை. அவரின் மேலதிகாரிக்கும் தெரியவில்லை. இந்த இலட்சணத்தில் ஓ போடு எப்படி ஒரு தீர்வாக இருக்கும் என்று புரியவில்லை. என்னுடைய தொகுதியில் முன்னாள் புரசை தொகுதி எம்.எல்.ஏ ப.ரங்கநாதனும், அ.தி.மு.க சார்பாக காளனும் நிற்கிறார்கள். இரண்டு பேருடைய பூர்வாதாரங்கள் என்ன என்பது நன்றாக தெரியும். ஆக, இது devil and deap sea கதை. இறுதியாக அவர்கள் எவருக்கும் ஒரு வழியும் தெரியாததால், போய் மிண்ணணு கருவியில் என் வாக்கினை செலுத்தி விட்டு வந்தேன். இப்படியாக ஒ போடு, ஒரம்போடு ஆகி போனது இந்த தேர்தலிலும்!

பிற்படுத்தப்பட்டோர்கள் (OBC-க்கு தமிழில் என்ன?!!) பற்றிய கணக்கெடுப்பு மீண்டும் தொடங்கிவிட்டது. தேசிய மாதிரி கணக்காய்வு நிறுவனம் இந்தியாவின் மக்கள் தொகையில் 36% மக்கள் OBC கீழ் வருவார்கள் என்று சொல்கிறது. இதில் இஸ்லாமியர்கள் தவிர்த்த கணக்கெடுப்பு என்று பார்த்தால், 32% மக்கள் வருவார்கள் என்று சொல்கிறார்கள். டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பிரச்சனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இங்கேயும் நான் பேசும் இடங்களில் எல்லாம், அடிப்படையறிவு இல்லாமல், "அதான், 50 வருஷமா குடுத்தாங்க இல்ல, இன்னும் எதுக்கு கொடுக்கணும்" என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆக இன்னுமொரு பெருங்கலவரம் காத்திருக்கிறது. ரிடிப் செய்திகளில் முழு விவரங்கள். இதே பிரச்சனையை தெஹல்கா மற்றுமொரு கோணத்தில் முன்வைக்கிறது.


தேசிய பாட புத்தகங்களில் முதன் முறையாக 'ஷோலே' படம் பற்றிய பாடம் வந்திருக்கிறது. பாட புத்தகங்களில் திரைப்படங்கள் பற்றி பேசுவது நல்ல விஷயம், ஆனால் பாலிவுட் ப்ளாக்பஸ்டர்களை நல்ல சினிமாவாக முன்னிறுத்துவது ஆரோக்கியமான விஷயமல்ல. டாக்டர், என்ஜினியர்கள், இப்போது சாப்ட்வேர் என்கிற மனப்பாங்கில் சினிமா இயக்குநர் ஆகுதல், கதாசிரியர் ஆகுதல் போன்றவை ஒன்றும் குறைவானவையல்ல. இந்தியாவில் சினிமா வெறும் பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல. நிறைய மாநிலங்களில் அது ஒரு முக்கியமான அரசியல் ரீதியான சாதனம். ஆக, நேர்மையான வழியில் சினிமா என்கிற ஊடகத்தினை கற்றுக் கொடுக்காமல், 'ஷோலே' போன்ற படங்களை 'நல்ல படங்களாக' 'இந்திய படங்களாக' முன்னிறுத்துவது அபாயகரமான விஷயம். பாட புத்தகங்களில் சினிமா பேசுவது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் இது போன்ற கமர்ஷியல் குதிரைகளை முன்னிறுத்தாமல் இருப்பது.


அவுட்லுக் இதழில் மது பூர்ணிமா கிஷ்வர் என்றொரு நிருபர், மேதா பட்கர் மற்றும் நர்மதா பச்சாவ் அந்தோலனின் செய்கைகள் குறித்து சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அவர் சொல்லும் முக்கியமான காரணம் இது:
NBA defines itself mainly through negative agendas – anti-dam, anti-liberalisation, anti-globalisation, anti-WTO, anti this, anti that. The alternative development paradigm Medha Patkar claims to represent has not yet offered any practical and positive worldview or agenda for action.
கொஞ்சம் அவர் NBA வின் கோரிக்கைகளையும், செய்கைகளையும் பார்க்கட்டும். கொஞ்ச நாள் முன்னர், இதை விஷயம் சம்பந்தமாக "Drowned" என்றொரு நீள்குறும்படத்தினை பார்க்க முடிந்தது. ஆதிவாசிகளும், பழங்குடி மக்களும், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, மும்பை போன்ற பெருநகரங்களில், சேரிகளில் ஒரு நாளைக்கு $1 குறைவான சம்பளத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். சிறுவர்கள் பிச்சையெடுக்கிறார்கள். பலபேருக்கு நகரம் ஒத்து வரவில்லை. நோய்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகமயமாக்கல் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒற்றை சிந்தனையில் எல்லாவற்றையும் நிறுவனப்படுத்த இயலாது. தாமிரபருணி ஆற்று நீரினை கோகோ கோலா உறிஞ்சி, பாட்டிலில் அடைத்து, மக்களுக்கு திருப்பி 10 ரூபாய்க்கு விற்பதற்கு பெயர் உலகமயமாக்கம் இல்லை. அது சுரண்டல். நீரும், நதியும், ஆறுகளும் எந்தளவிற்கு அரசிற்கு சொந்தம் என்று அரசு நினைக்கிறதோ, அதை விட அது அவற்றினை பாதுக்காத்து, தொழுது, ஆற்றினை கடவுளாக நம்பியிருக்கும் மக்களுக்கு சொந்தம். உலகில் கட்டப்பட்டு வந்துள்ள மிகப்பெரிய அணைகள் எல்லாமே அபாயகரமானவையல்ல. இது வெறுமனே கோடிகளின் பிரச்சனையல்ல. மக்களின் வாழ்வாதாரத்தின் மீது முன் வைக்கப்படும் அத்துமீறல். அதிகார துஷ்பிரயோகம். இது தான் மிக முக்கியமான பிரச்சனையாக முன் வைக்கப்பட்டிருக்கிறது. உலகமயமாக்கம் என்பதினை தவறாக புரிந்து கொண்டால், அதற்காக அடி மடியில் கைவைக்க எந்த அரசு துணிந்தாலும், மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள். மற்றபடி, இந்த நாட்டில் யாரும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் இல்லை என்பதை மது பூர்ணிமாக்கள் புரிந்து கொண்டால் நலம்.

'உலக ரட்சகர்' புஷ் மஹாராஜா அரசாட்சியில், சித்ரவதைகள் செய்யவில்லை. நாங்கள் உலக போர் நெறிமுறைகளை பின்பற்றி போர் கைதிகளை கையாளுகின்றோம் என்றெல்லாம், காண்டலிசா ரைஸ், ரம்ஸ்பீல்டு, பொளல் சொல்லிக் கொண்டு உலகினை ஏமாற்றிக் கொண்டு வந்தது பழங்கதை. ஒரு வாரத்துக்கு முன்பு அமெனஸ்டி இன்டர்நேஷ்னல் வெளியிட்டிருக்கிற அறிக்கை, வடிவேலு சொல்லுவது போல, "முழுசா பிரிச்சி மேஞ்சிட்டான்ய்ய்யா" வகையறா. அமெரிக்கா உட்பட 7 நாடுகள், வரப் போகிற ஜெனிவா மாநாட்டில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். 75 பக்கங்களுக்கு மேலாக விவரிக்கிற இந்த அறிக்கையில் அமெரிக்காவினை கட்டம் கட்டி விளையாடியிருக்கிறார்கள். ஆக, இந்த முறை புஷ் மஹாராஜா என்ன ஜல்லியடிக்கிறார் என்று பார்க்கலாம். இது தாண்டி, தி நேஷனில், புஷ் மஹாராஜாவின் 'அறிவுதிறமை' வெளிப்பட்டிருக்கிறது. பிரேசிலில் கருப்பினத்தவர்கள் இருக்கிறார்களா, என்றொரு "தங்க வேட்டையில்" ரம்யா கிருஷ்ணன் கேட்கும் அபத்தமான கேள்விக்கு இணையாக ஒரு கேள்வியினை கேட்டிருக்கிறார். அமெரிக்கர்கள் புஷ் மஹாராஜாவின் ஆட்சியில், சுபலோக ப்ராப்ர்தி ரஸ்து!
May 5, 2006

தேர்தல் 2006 பதிவும், சி.என்.என் - ஐ.பி.என் பார்வையும்

நேற்று மாலை நானும் பத்ரியும், தேர்தல் 2006 பற்றிய ஒரு சிறப்பு செய்தியினை சி.என்.என் - ஐ.பி.என் தொலைக்காட்சியின் நிருபர் விவியன் மேத்யுவிற்கு அளித்தோம். காலையிலிருந்து (ஏப்ரல் 5) அது ஓளிபரப்படுகிறது. காலையில் நான் பார்த்தேன். "தமிழ்நாடு ப்ளாக்பஸ்டர்ஸ்" என்கிற தலைப்பில் காலை 8.30 மற்றும் மாலை 7 & 9 நேரங்களிலும், மற்றபடி நாள் முழுக்க பல்வேறு செய்திகளிடையே துணுக்குப் பதிவாகவும் இது ஓளிபரப்பாகி இருக்கிறது. நான் தேர்தல் 2006 பதிவு உருவானவிதம், எழுதும் பதிவர்கள், அதனுடைய பார்வை பற்றி பேசியிருக்கிறேன். பத்ரி, வலைப்பதிவுகள் எவ்வாறு அரசியல் பார்வைகளை மாற்றி வருகின்றன, பத்திரிக்கை, தொலைக்காட்சி தாண்டிய ஒரு மாற்று ஊடகமாக இன்னும் 5 வருடங்களில் எப்படி மாறும் என்று பேசியிருக்கிறார். காலையில் நான் பார்த்ததில் வெட்டி போட்டிருந்தார்கள். தேர்தல் 2006, இட்லிவடை, ஹாட் மச்சி ஹாட் போன்ற வலைப்பதிவுகள் காண்பிக்கப்படுகின்றன. இந்தியாவில் இருந்தால் பாருங்கள்.

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]