May 8, 2006

கொத்து பரோட்டா - வெயிலாய் இருந்தாலும்

இன்று என் வாக்கினை பதிய என் வாக்குச்சாவடிக்கு சென்றேன். அங்கேயிருந்த அதிகாரியோடு 15 நிமிட சண்டை. 49 0 போடுவதற்கான வழிமுறைகளை கேட்டால் அவருக்கு தெரியவில்லை. அவரின் மேலதிகாரிக்கும் தெரியவில்லை. இந்த இலட்சணத்தில் ஓ போடு எப்படி ஒரு தீர்வாக இருக்கும் என்று புரியவில்லை. என்னுடைய தொகுதியில் முன்னாள் புரசை தொகுதி எம்.எல்.ஏ ப.ரங்கநாதனும், அ.தி.மு.க சார்பாக காளனும் நிற்கிறார்கள். இரண்டு பேருடைய பூர்வாதாரங்கள் என்ன என்பது நன்றாக தெரியும். ஆக, இது devil and deap sea கதை. இறுதியாக அவர்கள் எவருக்கும் ஒரு வழியும் தெரியாததால், போய் மிண்ணணு கருவியில் என் வாக்கினை செலுத்தி விட்டு வந்தேன். இப்படியாக ஒ போடு, ஒரம்போடு ஆகி போனது இந்த தேர்தலிலும்!

பிற்படுத்தப்பட்டோர்கள் (OBC-க்கு தமிழில் என்ன?!!) பற்றிய கணக்கெடுப்பு மீண்டும் தொடங்கிவிட்டது. தேசிய மாதிரி கணக்காய்வு நிறுவனம் இந்தியாவின் மக்கள் தொகையில் 36% மக்கள் OBC கீழ் வருவார்கள் என்று சொல்கிறது. இதில் இஸ்லாமியர்கள் தவிர்த்த கணக்கெடுப்பு என்று பார்த்தால், 32% மக்கள் வருவார்கள் என்று சொல்கிறார்கள். டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பிரச்சனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இங்கேயும் நான் பேசும் இடங்களில் எல்லாம், அடிப்படையறிவு இல்லாமல், "அதான், 50 வருஷமா குடுத்தாங்க இல்ல, இன்னும் எதுக்கு கொடுக்கணும்" என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆக இன்னுமொரு பெருங்கலவரம் காத்திருக்கிறது. ரிடிப் செய்திகளில் முழு விவரங்கள். இதே பிரச்சனையை தெஹல்கா மற்றுமொரு கோணத்தில் முன்வைக்கிறது.


தேசிய பாட புத்தகங்களில் முதன் முறையாக 'ஷோலே' படம் பற்றிய பாடம் வந்திருக்கிறது. பாட புத்தகங்களில் திரைப்படங்கள் பற்றி பேசுவது நல்ல விஷயம், ஆனால் பாலிவுட் ப்ளாக்பஸ்டர்களை நல்ல சினிமாவாக முன்னிறுத்துவது ஆரோக்கியமான விஷயமல்ல. டாக்டர், என்ஜினியர்கள், இப்போது சாப்ட்வேர் என்கிற மனப்பாங்கில் சினிமா இயக்குநர் ஆகுதல், கதாசிரியர் ஆகுதல் போன்றவை ஒன்றும் குறைவானவையல்ல. இந்தியாவில் சினிமா வெறும் பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல. நிறைய மாநிலங்களில் அது ஒரு முக்கியமான அரசியல் ரீதியான சாதனம். ஆக, நேர்மையான வழியில் சினிமா என்கிற ஊடகத்தினை கற்றுக் கொடுக்காமல், 'ஷோலே' போன்ற படங்களை 'நல்ல படங்களாக' 'இந்திய படங்களாக' முன்னிறுத்துவது அபாயகரமான விஷயம். பாட புத்தகங்களில் சினிமா பேசுவது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் இது போன்ற கமர்ஷியல் குதிரைகளை முன்னிறுத்தாமல் இருப்பது.


அவுட்லுக் இதழில் மது பூர்ணிமா கிஷ்வர் என்றொரு நிருபர், மேதா பட்கர் மற்றும் நர்மதா பச்சாவ் அந்தோலனின் செய்கைகள் குறித்து சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அவர் சொல்லும் முக்கியமான காரணம் இது:
NBA defines itself mainly through negative agendas – anti-dam, anti-liberalisation, anti-globalisation, anti-WTO, anti this, anti that. The alternative development paradigm Medha Patkar claims to represent has not yet offered any practical and positive worldview or agenda for action.
கொஞ்சம் அவர் NBA வின் கோரிக்கைகளையும், செய்கைகளையும் பார்க்கட்டும். கொஞ்ச நாள் முன்னர், இதை விஷயம் சம்பந்தமாக "Drowned" என்றொரு நீள்குறும்படத்தினை பார்க்க முடிந்தது. ஆதிவாசிகளும், பழங்குடி மக்களும், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, மும்பை போன்ற பெருநகரங்களில், சேரிகளில் ஒரு நாளைக்கு $1 குறைவான சம்பளத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். சிறுவர்கள் பிச்சையெடுக்கிறார்கள். பலபேருக்கு நகரம் ஒத்து வரவில்லை. நோய்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகமயமாக்கல் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒற்றை சிந்தனையில் எல்லாவற்றையும் நிறுவனப்படுத்த இயலாது. தாமிரபருணி ஆற்று நீரினை கோகோ கோலா உறிஞ்சி, பாட்டிலில் அடைத்து, மக்களுக்கு திருப்பி 10 ரூபாய்க்கு விற்பதற்கு பெயர் உலகமயமாக்கம் இல்லை. அது சுரண்டல். நீரும், நதியும், ஆறுகளும் எந்தளவிற்கு அரசிற்கு சொந்தம் என்று அரசு நினைக்கிறதோ, அதை விட அது அவற்றினை பாதுக்காத்து, தொழுது, ஆற்றினை கடவுளாக நம்பியிருக்கும் மக்களுக்கு சொந்தம். உலகில் கட்டப்பட்டு வந்துள்ள மிகப்பெரிய அணைகள் எல்லாமே அபாயகரமானவையல்ல. இது வெறுமனே கோடிகளின் பிரச்சனையல்ல. மக்களின் வாழ்வாதாரத்தின் மீது முன் வைக்கப்படும் அத்துமீறல். அதிகார துஷ்பிரயோகம். இது தான் மிக முக்கியமான பிரச்சனையாக முன் வைக்கப்பட்டிருக்கிறது. உலகமயமாக்கம் என்பதினை தவறாக புரிந்து கொண்டால், அதற்காக அடி மடியில் கைவைக்க எந்த அரசு துணிந்தாலும், மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள். மற்றபடி, இந்த நாட்டில் யாரும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் இல்லை என்பதை மது பூர்ணிமாக்கள் புரிந்து கொண்டால் நலம்.

'உலக ரட்சகர்' புஷ் மஹாராஜா அரசாட்சியில், சித்ரவதைகள் செய்யவில்லை. நாங்கள் உலக போர் நெறிமுறைகளை பின்பற்றி போர் கைதிகளை கையாளுகின்றோம் என்றெல்லாம், காண்டலிசா ரைஸ், ரம்ஸ்பீல்டு, பொளல் சொல்லிக் கொண்டு உலகினை ஏமாற்றிக் கொண்டு வந்தது பழங்கதை. ஒரு வாரத்துக்கு முன்பு அமெனஸ்டி இன்டர்நேஷ்னல் வெளியிட்டிருக்கிற அறிக்கை, வடிவேலு சொல்லுவது போல, "முழுசா பிரிச்சி மேஞ்சிட்டான்ய்ய்யா" வகையறா. அமெரிக்கா உட்பட 7 நாடுகள், வரப் போகிற ஜெனிவா மாநாட்டில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். 75 பக்கங்களுக்கு மேலாக விவரிக்கிற இந்த அறிக்கையில் அமெரிக்காவினை கட்டம் கட்டி விளையாடியிருக்கிறார்கள். ஆக, இந்த முறை புஷ் மஹாராஜா என்ன ஜல்லியடிக்கிறார் என்று பார்க்கலாம். இது தாண்டி, தி நேஷனில், புஷ் மஹாராஜாவின் 'அறிவுதிறமை' வெளிப்பட்டிருக்கிறது. பிரேசிலில் கருப்பினத்தவர்கள் இருக்கிறார்களா, என்றொரு "தங்க வேட்டையில்" ரம்யா கிருஷ்ணன் கேட்கும் அபத்தமான கேள்விக்கு இணையாக ஒரு கேள்வியினை கேட்டிருக்கிறார். அமெரிக்கர்கள் புஷ் மஹாராஜாவின் ஆட்சியில், சுபலோக ப்ராப்ர்தி ரஸ்து!
Comments:
//தாமிரபருணி ஆற்று நீரினை கோகோ கோலா உறிஞ்சி, பாட்டிலில் அடைத்து, மக்களுக்கு திருப்பி 10 ரூபாய்க்கு விற்பதற்கு பெயர் உலகமயமாக்கம் இல்லை. அது சுரண்டல்//

:-))

இந்த 49 ஓ வை (O தான உங்க பதிவில 0 சைபர் மாதிரி தெரியுது ) பொட்டியிலேயே ஒரு பொத்தானாக வைக்க வேண்டும்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]