May 19, 2006

வரலாறு மறக்கடிப்படுகிறதா ?

பிபிசி செய்திதளத்தில் சீனாவில் மா-சே-துங்கின் 40-ஆம் வருட கலாச்சாரப் புரட்சி நாள் கொண்டாடப்படுகிறது. 40 வருடங்களுக்கு முன்னர், மா-சே-துங் துவங்கிய கிராமங்களை நோக்கி செல்லுங்கள் என்கிற கோஷம், கலவரமாகி பல்லாயிரக்கணக்கானவர்கள் இடதுசாரி சிகப்பு படையினரால் கொல்லப்பட்டார்கள். இன்றைய பெய்ஜிங்கில் எடுத்த பேட்டியில் மாணவர்கள் இதைப் பற்றிய எவ்விதமான கவலையுமின்றி உலகமயமாக்கல் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்ச நாளைக்கு முன்னர், என் நண்பரின் நண்பர் ஒருவர் கனடாவிலிருந்து வந்திருந்தார். இலங்கை தமிழர். அவருடைய மகனுக்கு 16 வயதிருக்கும். ஒட்ட வெட்டிய கறுப்பின கிராப்போடு, காதில் கடுக்கன், மோவாய் கட்டைக்கு கீழே கொஞ்சமாய் ஆட்டுதாடி என்று ஒரு மார்க்கமாய் இருந்தான். ஒரு உணவகத்தில் அவனோடு பேசிக் கொண்டிருந்த போது அவன் போராட்டத்தினை பற்றி சொன்ன வார்த்தை "that's fuckin' crab. let's move on". தந்தையோ, இவர்களால் போராட்டத்தின் அடிப்படைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டார். போன வாரம் மும்பையில் வணிக சந்திப்புகள். அதில் ஒருவர் லண்டனிலிருந்து இப்போது துபாயில் குடியேறிருக்கும் இஸ்லாமிய தனவந்தர். அவரின் குழந்தைகள் [16,13,8] ஒருவருக்கும் இலண்டனில் நடந்த இஸ்லாமியர்கள் மீதான வன்முறைகள் பற்றிய கவலைகள் இல்லை. அவர்கள் இன்னமும் பெக்ஹாம், உலகக் கோப்பை கால்பந்து, வோடாஃபோன், கரன் ஜோஹர் படம் என்றுதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகில் நடந்துக் கொண்டிருக்கும் பெரும்பாலான போராட்டங்களுக்கு 30 வயதிற்கும் மேல் - பாலஸ்தீன/இஸ்ரேல், இலங்கை அரசு/விடுதலைப்புலிகள், அரபு நாடுகளுக்கான பிரச்சனைகள், அமெரிக்கா/ஈராக் [15+ வருடங்கள்], இந்திய/பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனைகள் என நீளுகிறது பட்டியல். 30 வருடங்கள் என்பது ஒரு தலைமுறை. அதன் பிந்திய தலைமுறை ஏதாவது ஒரு நாட்டில் பிறக்கிறது, தஞ்சமடைகிறது, அவர்களுக்கு அவர்களின் வாழ்வியல் கவலைகள் முக்கியமானதாக போய்விடுகிறது. தங்கள் சொந்த மண்ணைப் பற்றிய அடிப்படை கவலைகளற்று போய்விடுகிறது. மண்,மொழி, இனம், கலாச்சாரம் என்று பேசினால், உலகமயமான சமுதாயத்தில் நீங்கள் ஒரு கற்கால கம்யுனிஸ்டுகள் போல பார்க்கப் படுவீர்கள். இங்கே தமிழ் சமுகம் என்று டைடல் பார்க்கில் பேசினால் உங்களை ஒரு மார்க்கமாய் பார்ப்பார்கள், அடிப்படைவாதிகள், ஏன் சில சமயம் போன தலைமுறை எச்சங்களாய் நீங்கள் இருப்பதாக நினைப்பார்கள். என்னுடைய அலுவலகத்திலேயே, நர்மதா பிரச்சனைப் பற்றி பேசினால் "நீ குளோபலைஷேனுக்கு எதிராக பேசுகிறாய். கம்யுனிஸ்ட் போல எப்போதும் பிரச்சனைகளை மட்டுமே பேசுகிறாய், உன்னால் ஒரு முடிவுக்கு வர முடியாது " என்று வாதிடுபவர்கள் உண்டு. ஆக, பிரச்சனை செய்திகளில் இல்லை, செய்திகளினை அறிந்துக் கொள்வதிலும், அதன் பின்புலத்தினை தெரிந்து கொண்டு அதற்கான அடிப்படை பிரச்சனைகளிடமிருந்து அச்செய்தியின் பல/பலவீனங்களை ஆராய்வதிலும் இருக்கிறது.

வரலாறு என்பதன் அடிப்படை என்ன ? பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் வாழ்க்கையல்லவா. மிகச் சாதாரணமாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதின் மூலம் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா ? வரலாற்றினை அறிந்துக் கொள்வதின் பயன் என்ன ? என் நண்பர் இப்போது பள்ளி படிக்கும் குழந்தைகளின் சார்ப்பாக வேலை செய்பவர். அவர் குழந்தைகளிடம் சுபாஷ் சந்திர போஸ் பற்றி கேட்டதற்கு வந்த பதில் "அவர் ஒரு தீவிரவாதி, காந்திக்கு எதிராக வேலை செய்தவர்". வரலாறு என்பது வாழ்வின் பதிவு. இந்தியாவில் வரலாறு என்பது காங்கிரஸ், பி.ஜே.பி, சங் பரிவார் கும்பல்களின் சுய சரிதையாக மாறிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் பதவிக்கு வந்தால், வரலாறு ராஜீவ்காந்தியின் மகோனதமான பங்களிப்பையும், பிஜேபி இருப்பின், சாவர்க்கார், இந்து சாம்ராஜ்யம், சிவாஜி, திலகர் பற்றியும் விரிவாக குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும். கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தால், வரலாற்று புத்தகங்கள் நமக்கு தேவையில்லை, ஏனெனில் History repeats itself and we will never learn from other's mistakes.

காசி அனந்தனின் (?!!!) கவிதை வரி ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது "வரலாறு எம்மை விடுதலை செய்யும்" ஆனால், வரலாற்றினை யார் விடுதலை செய்வது?

Comments:
அண்ணை அது காசி அனந்தன் இல்லை காசி.ஆனந்தன்.
உலகமயமாக்கலுக்கு எதிராகப் பேசுகிறோம் உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது நாங்கள் குறை பிடிப்பதிலேயே குறையாக இருக்கிறோம் இப்படியான புளிப்பு ஏப்பங்களை சகித்துக்கொள்ளப் பழகியாச்சு இப்போதென்றால் யாருடன் எதைப் பேசுவதென்று கவனமாயிருக்கவேண்டியிருக்கிறது தோனி பற்றிப் பேசுபவனுடன் முரளி பற்றிப் பேசலாம்,I Pod mini பற்றிப் பேசுபவனுடன் Play Station III பற்றிப் பேசலாம்.MI 3பற்றிப் பேசுபவனுடன் Davinci Codeபற்றிப் பேசலாம் அவ்வளவுதான்
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]