Jun 12, 2006

திராம் தேசம் - 2

என்னுடைய விமான சந்திப்புகள் பெரும்பாலும் சொத்தையாக இருக்கும். ஒரு முறை ஒரு மாமா தன் பையன் காசில் ஜெட் ஏர்வேஸில் மும்பாயில் ஏறி பக்கத்தில் அமர்ந்துக் கொண்டு, ஜாலியன் வாலாபாக்கில் ஆரம்பித்து, வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான் சார் என்று சொல்லி கதை முடித்தவுடன், மீனம்பாக்கம் வந்ததோ, இல்லையோ, நான் தப்பித்தேன். திராபைகள் என்று செந்தமிழில் ஒரு வார்த்தையிருக்கிறது. அதற்கு அர்த்தம் மேற்சொன்ன நபர் :) இந்த முறை எக்ஸ்பிரஸ் விசா, ஜிகினா வேலைகளில், கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னால் தான் விமான டிக்கெட்டே ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. ஆக எகனாமி கிளாஸில் முன்சீட்டு பின்சீட்டு நீட்ட அகலங்கள் குறுக்கி சொதப்பலாய் விண்டோ சீட் கிடைத்தது... நாசமாய் போக.

என் பக்கத்தில் இரண்டு பேர், இருவரும் அலையனில் [Al ain] வேலை செய்யும் டிரைவர்கள் cum தோட்டக்காரர்கள் cum வீட்டு வேலை செய்பவர்கள். பெரும்பாலான பேச்சு, அரசியல், சமூகம், நிலவரம் என்று சுற்றினாலும், சாதி எந்தளவிற்கு தமிழகத்தில் ஊடுருவியிருக்கிறது என்று அப்போதுதான் கண்கூடாக பார்த்தேன். ஒருவர் "இடைசாதி" காரர், அவர் சொன்ன ஒரு விஷயம் சுருக்கென்றது ... "துபாயில கக்கூஸ் கழுவுவேன் சார், ஆனா, சொந்த ஊர்ல செய்யமாட்டேன் சார், கீழ்சாதி பசங்க நம்மள மதிக்க மாட்டங்க சார், அவனுங்க செய்ற வேலதான் நான் இங்க செய்றேன், ஆனா என் சாதி கெளரதை இன்னாவகறது இதை அங்க செய்தா....." இவர்கள் வாங்கும் சம்பளம் தான் பகீரென்றது... ஒருவர் 400 திராம், இன்னொருவர் 800 திராம் [பன்னிரண்டாம் வாய்ப்பாடு நினைவு இருந்தால் பெருக்கிக் கொள்ளூங்கள்] ஆக எப்படி கூட்டிப் பார்த்தாலும் ஊருக்கு அனுப்புவது 4000யிரமோ, 6000யிரமோ தான். இன்னொரு விஷயமும் உறுத்தியது. உங்கள் ஊரிலிருந்து நீங்கள் அடிமாட்டு சம்பளத்திற்கு துபாய்க்கு வந்தாலும், இது சொர்க்க பூமி என்று ஊரிலிருப்பவர்களுக்கு நினனப்பு. நண்பர் ஒருவரிடம் பேசிய போது "எல்லாம் முக்கால்வாசி முஸ்லிம் பசங்க நாரயண், அநியாயத்துக்கு ஏமாத்தறானுங்க, துபாயில வேலை வாங்கி தர்றேன், ஒரு லட்ச ரூவா ஆகும்னு. அவனுக்கு இந்த ஒரு லட்ச ரூவா கடனை அடைக்கிறதுக்கே, 4,5 வருஷம் ஆகும், அப்புறம் குடும்ப பிரச்சனைகள், அக்கா கல்யாணம், வீடு வாங்கறேன் அப்படின்னு ஏதாவது ஒரு காரணம் சொல்லிட்டு இங்கேயே திரும்ப திரும்ப வந்துருவாங்க. ஒவ்வொரு தடவையும் ஊருக்கு போகும் போது, இனி இந்த பக்கம் வரக்கூடாதுனு தான் போவாங்க, ஆனா முடியாது" இதற்கு ஒரு நாளைக்கு 14 மணி நேரத்திற்கு மேல் உழைக்கிறார்கள். வெயிலில் கருவாடாய் தேய்கிறார்கள். இங்கே மால்களில் கூட்டம் ரொம்பி வழிகிறது. என்ன இருக்கிறது என்று போய் பார்த்தால் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. எல்லாம் இந்தியாவில் சல்லிசாக கிடைக்கிறது, ஆனாலும் நம் மக்கள் நோக்கியா போன், டிஜிட்டல் கால்குலேட்டர், சோப்புகள், செண்டுகள் என வாங்கிக் குவிக்கிறார்கள். ஊருல போய் சொல்லியாக வேண்டிய கட்டாயம். இந்த "நம்ம பையன் துபாய்ல நல்லா இருக்கான்" அப்படிங்கற வறட்டு கெளரவம் இது. இது ஒரு vicious circle ஒரு முறை உள்வந்தால் திரும்பி போக முடியாத இக்கட்டான சூழ்நிலை. மாறி மாறி நல்லதோ, கெட்டதோ இங்கேயே இருக்கிறார்கள்.

நேரடியாக விசா வாங்கி வந்தவர்களும், விசிட் விசாவில் வந்து இங்கேயே தங்கி விட்டவர்களும் என கதைகள் ஏராளமாய் இருக்கிறது. என்னுடைய GPRS இயக்கத்தில் கொஞ்சம் பிரச்சனைகள் இருந்ததால், சைபர் கபேகளில் காலம் தள்ள வேண்டிய கட்டாயம். வெள்ளிக்கிழமை சைபர் கபேகள் ஹவுஸ் புல்லாய் இருக்கிறது. எல்லாரும் Pal Talk-இல் இந்தியாவிற்கு போன் அடிக்கிறார்கள். ஸ்கூல் பேக் வாங்கியாச்சா, செருப்பு அறுந்து போச்சுன்னு சொன்னியே தைச்சாச்சா என்கிற வரையில் பேச்சுகள் ஒடுகின்றன. பரிதாபமாக இருக்கிறது. இங்கே கிடைக்கும் கொஞ்ச/நிறைய காசிற்காக சொந்த பந்தங்களை விட்டு விட்டு, போனிலும் சாட்டிலும் வாழ்க்கை ஒடுகிறது. ஏனோ, 'வெற்றிக் கொடி கட்டு' நினைவுக்கு வந்தது. எல்லாருடைய கண்களிலும், ஊருக்கு போக மாட்டோமோ என்கிற ஏக்கமும், போனால் அதற்கான செலவினை ஈடுகட்ட மேலும் உழைத்தாக வேண்டிய கட்டாயமிருக்கிறது என்கிற கவலையும் தெரிகிறது. யாரையும் விட்டு வைக்காமல், மதனிட்ட கொடு, பொண்ணுட்ட கொடு என்று ஹெட்போன்களில் உறவுகளை பலப்படுத்தும் கட்டாயங்கள் தெரிகிறது. அதிலும், இந்தியாவிலிருந்து, நம்ம பையன் ஒருத்தன் இருக்கான், ஏதாவது வேலை இருந்தா பாரேன் என்று இன்னும் நிறைய பேரினை இங்கே தள்ளும் கனகாரியங்கள் முக்கியமாக இருக்கின்றன. ஓருத்தரிடம் பேச்சுக் கொடுத்தால், நாம தான் சார் கஷ்டப்படறோம், அவங்க, நாம நல்லா இருக்கேண்ணு நினைச்சுட்டு இருக்காங்க, அவங்க சந்தோஷம் தான் முக்கியம், குடும்பம் இருக்கு சார், விட்டு போயிட முடியாது என்று சொன்னார். என்னால், சில விஷயங்களை ஒத்துக் கொள்ள முடியாமல் போனாலும், அவரவர்களின் சமாதானங்கள் அவரவர்களுக்கு.

இது ஒரு பக்கமென்றால், நான் சந்தித்த சிந்தி குடும்பங்கள் வேறொருவிதம். "நேத்து தான் ஃபிரபுல் படேலோட பேசினேன், ஒரு புது ஏர்லைன்ஸ் பண்ணலாம்னு ஒரு யோசனை என்.ஆர்.ஐ ஃபண்டிங் இருக்கு , போன வாரம் ஷாருக்கான் என் பொண்ணு பொறந்த நாளுக்காக லண்டன்ல இருந்து போன் பண்ணார், நீ சொலுயுசன் கொடு, ரிடெய்லுக்கு, நான் பேன்டலூன் கிஷோர் பியானியோட பேசறேன், இல்லை டி எல் எப் பிரியா சிங்கோட பேசறேன், டினா அம்பானி லாஸ்ட் டைம் வந்த போது என்னோட தான் லஞ்ச் சாப்பிட்டா, டே 22னு ஒரு நைட் கிளப்புல, வோட்கா வித் பொம்கிரைனைடு ஷேடுல ஒரு காக்டேயில் இருக்கு தடஸ் ஹெவன்லி ஷிட்..." என்று name drop செய்யும் இன்னொரு முகம் துபாயிலிருக்கிறது. துபாயிலிருக்கும் பெரும்பாலான சிந்தி, குஜராத்திகள் பெரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பணக்காரர்கள். ஐக்கிய அரபு எமிரேடுகளிலேயே இருக்ககூடிய ஒரு பணக்கார சிந்தி ஹவுஸ் வைப் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு பெண்மணியினை சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். ஒரு தெருவளவிற்கு இருக்கிறது அம்மணி இருக்கும் வில்லா. கொஞ்சம் வணிகம், இந்தியா, தொழில்நுட்பம் என்று பேசிக் கொண்டே வந்த போது தான் அந்த அதியற்புதமான கேள்வி வந்தது... பெங்களூர் சென்னையில் தானேயிருக்கிறது என்று. தென்னிந்தியாவில் நான்கு மாநிலங்கள் இருக்கின்றன என்று கூட தெரியாமல் இந்தியாவிலிருந்து கிளம்பி வந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா அவர்களைப் பொறுத்தவரை டெல்லி, ,மும்பாய், காஷ்மீர், பீகார், சென்னை, பெங்களூர், முக்கியமாய் கேரளா. அரபு நாடுகள் எல்லாம் "மல்லுகளின்" ராஜ்யத்தில் உய்யலாலா. மலையாளம் தேசிய மொழியாக கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. தென்னிந்தியாவில் இருந்து வந்தால் நீங்கள் ம்ல்லுவதாகதான் இருக்க வேண்டும் என்கிற தீர்மானத்தில் இருக்கிறார்கள். முக்கால் மணி நேரம் சண்டை போட்டு, நான் மலையாளியல்ல, தமிழன் என்று நிலைநிறுத்துவதற்குள் மண்டை காய்ந்து போய்விட்டது. தென்னிந்தியர்களைப் பற்றி சில உண்மையான உயர்வான அபிப்ராயங்கள் இருக்கின்றன. முக்கியமாய் பெண்களை ஏறெடுத்து பார்க்காதவர்கள் என்று. இது எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. ஒரு வேளை நான் வந்து போனபின் மாறக்கூடிய சாத்தியங்கள் இருக்கலாம். you guys are hardworking, sincere, committed, devoted guys. but u guys dont know how to enjoy life, and we know it and thats why we rule in the market என்று தெனாவட்டாக பதில் வருகிறது. அது உண்மை என்பது தான் பெரும் சோகம். கொச்சையாய் அம்மணி கிளம்பும் போது சொன்னது work hard. party harder. f*** hardest. இங்கே பார்ட்டி சீன்கள் கொஞ்சம் மாறியிருக்கிறது இப்போது. "கீக்குகள் [geeks]" தான் தற்போதைய போஸ்டர் பாய்கள் இங்கே. தொழில் நுட்பம் தெரிந்திருப்பதால், ஜல்லியடித்தல் சர்வ சாதாரணமாய் வரும். ஆகையால், ஒரமாய் உள்ளே உட்கார்ந்திருந்த அரக்கன், குவார்ட்டர் அடித்து கிளம்புவதற்குள், இடத்தை விட்டு நான் ஜூட்டானேன் :) இங்கே வந்த காரணம் சொல்லாமல் எழுதி குவித்தால் நன்றாக இருக்காது. நாங்கள் எங்கள் நிறுவனத்தில் "வெப் 2.0" விஷயத்தினை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறோம். அந்த தொழில்நுட்பம் இன்னமும், அரபு நாடுகளில் வந்து சேரவில்லை என்று கேள்விப்பட்டு மூட்டையினை கட்டி சார்ஜாவில் தரையிரங்கி விட்டேன். சார்ஜா அரசின் புண்ணியத்தில் ஏர்போர்ட் ப்ரீ சோனில் இடம் கிடைத்திருக்கிறது. இங்கே ஒரு JV போட்டு வேலைகள் ஜூலையில் ஆரம்பிக்கும். ஆகவே ஆகஸ்ட்/செப். பரில் இங்கே சார்ஜாவில் நான் ரெசிடெண்ட் விசா வாங்கும் சாத்தியங்கள் கொஞ்சம் அதிகமாய் இருக்கிறது.

துபாயில் நல்ல விஷயங்கள் இல்லாமலில்லை. நிறைய விஷயங்கள் இருக்கின்றன. மக்கள் கேராஃபோரில் குவிகிறார்கள். மால்கள் டிஸ்கவுண்ட் சேல் போட்டு தள்ளுகிறார்கள். பியரி கார்டின் சட்டைகள் 75% தள்ளுபடியில் சல்லிசாக கிடைக்கின்றன.ஆனால். எல்லாம் போன தலைமுறை டிசைன்கள் ;) புர்ஜுமான் என்று ஒரு மால் இருக்கிறது. உள்ளே எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் கடை பரப்பி இருக்கின்றன. வெர்சஸ் பக்கம் போய் பார்த்தால் மண்டை சுத்துகிறது. துபாய் is expensive என்றொரு கருத்து இருக்கிறது. இதை இரண்டுவிதமாகவும் பார்க்க முடியும்.தண்ணீர் 0.75 திராமுக்கு கிடைக்கிறது. 300ml, சென்னையிலேயே, 5 ருபாய்க்கு கிடைக்கும் போது, இது ஒரு பெரிய விலையில்லை என்று தோன்றுகிறது. தண்ணீர் இல்லாத தேசத்தில் தண்ணீர் இவ்வளவு சல்லிசாக கிடைக்கிறது என்பது ஆச்சர்யம். "லெபனப்"[அல்லது லெபான்] என்றொரு உப்பு துளியாக கரிக்கும் லஸ்ஸி கிடைக்கிறது. இங்கே சாப்பிட்ட பிறகு தினமும் லெபனப் இல்லாமல் வாழ்க்கையில்லை :) இந்த வெயிலுக்கு இது ஒரு அருமையான பானம். தேவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட தேவபானம் போல தோன்றுகிறது. வாழ்க்கை தரம் வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு விதமாய் இருக்கிறது. 3 திராமுக்கு சாப்பாட்டுக்கு போகும் மலையாளிகளும், 15 திராமுக்கு தோசை சாப்பிடும் மனிதர்களும் நிறைந்திருக்கிறார்கள். இந்தியாவில் வலக்கை டிரைவிங்கு பழகி, வந்த முதல் நான்கு நாட்கள், சாலை கடக்க திண்டாடினேன். ஒவ்வொரு முறையும் சொல்லி வைத்தார் போல, கார்கள் வரும் எதிர்திசையில் பார்த்தேன். மனிதர்கள் மரியாதையாய் இருக்கிறார்கள். லாம்சே மாலில் "ராஜஸ்தானி தாலி" என்று ஒரு விஷயம் கிடைக்கும். சாப்பிடாதீர்கள். சப்பாத்தி கல்லு போல இருக்கிறது. சாதா தோசையினை கொத்து பரோட்டா போல போட்டு தருகிறார்கள். ஆனால், பானங்கள் மிக மலிவு. எல்லா இடங்களிலும் சூப்பர் மார்க்கெட்டுகள் நீக்கமற நிறைந்து இருக்கிறது. ஒரு பேச்சு இல்லை. போய் கொண்டு வந்து பில் போட்டு கொண்டு போக வேண்டிதான். எல்லாவிதமான தேசிய இனங்களையும் பார்க்க முடிகிறது. குற்றங்கள் குறைவு என்று தோன்றுகிறது. நடு இரவில் சர்வ சாதாரணமாக தொப்பை பெருத்த அரபிகள் வாக்கிங் போகிறார்கள், துணைவிகளோடு. தினமும் ஏதாவது ஒரு சாலையில் விபத்துகள் நடந்துக் கொண்டே இருக்கின்றன. அரபி பெண்கள், வாங்ங்ஙங்ங்ங்ங்ங்ங்ங்கி குவித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் பசங்கள் தின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னு தீர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். சாப்பாடே வாழ்க்கையாக இருக்கும் நிலை பணக்கார அரபிகளிடம் இருக்குமோ என்னவோ ?

எதிசாலட்டில் [நம்மூரு bsnl மாதிரி] திராம் திராமாக தேய்த்து மொபைலில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரிடத்திலும் மொபைல்கள் இருக்கின்றன. ஆனால், செல் பேசிகள் கட்டணங்கள் அதிகம். இங்கே எதிசாலட் தான் ஒரே ஒரு ஆபரேட்டர். நான் வந்தபோது தான் "டியு" என்றொரு இன்னொரு ஆபரேட்டரினை பிரிட்டிஷ் டெலிகாமின் ஆலோசனைகளோடு அனுமதிக்க பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன சொல்வது என்று தெரியவில்லை. மொபைல் சிஸ்டம் இந்தியா 1992களில் இருந்த மாதிரி இருக்கிறது. எல்லா நவீன சாதனங்களும் வாங்கி குவித்திருக்கிறார்கள். ஆனால், உபயோக படுத்த தெரியவில்லையா அல்லது இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. உலகக் கோப்பை கால்பந்திற்காக MMS செய்யலாம் என்று ஊர் முழுக்க போஸ்டர் அடித்திருக்கிறார்கள். இன்னும் ஒரு இரண்டாண்டுகள் கழித்து தான் சொல்ல முடியும். சார்ஜா-துபாய் 20 நிமிடங்கள் என்று சொல்லுகிறார்கள். இங்கிருந்து, என் அலுவலகம், பிற அலுவல்கள் என மாறி மாறி பேசியதில், கிளம்பும் போது பத்தாயிரம் ரூபாய் ஒரு வாரத்துக்கு டெலிபோன் பில்லாய் கட்டினேன் ;) ஆனால், நிஜத்தில் கல்ப் நியுஸில் power nap என்று டிராபிக்கில் தூங்கும் எக்ஸிக்யுடிவ்களின் படங்களைப் போட்டு காட்டுகிறார்கள். என்னுடைய புது அலுவலகம் சார்ஜா ஏர்போர்ட் ஃப்ரீ சோனில் வருகிறது. அங்கிருந்து எமிரேட்ஸ் சாலை பிடித்து துபாய்க்குள் வந்தால், நெரிசல் இல்லாமல் இருக்கிறது. ஆனாலும், எமிரேட்ஸ் சாலையின் ஒரங்களில் பார்க்கும் லேபர் கேம்புகள் பரிதாபமாய் இருக்கின்றன. நம்மூர் சாலையில் இரண்டுக்கு போக உட்காருவது போல, பாகிஸ்தானிய, பங்காளதேசிய டிரைவர்கள் உட்கார்ந்து கொண்டு வெயிலில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாலைவனத்தின் தாக்கம் கான்கீரிட் கட்டிடங்களை மீறி, சாலையின் ஒரத்தில் நிறைந்திருக்கும் மணலில் தெரிகிறது. புர்ஜ் அல் அரப் [சரியா?!] ஹோட்டலினை எல்லா இடங்களிலும் படங்களில் பார்க்க முடிகிறது. ஒரு வளைவான ஹோட்டல், கடற்கரையின் ஒரத்தில் அமைந்திருக்கிறது, துபாயின் லேண்ட் மார்க் அது. நீக்கமற நம்மவர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறார்கள். ஹிந்தி தெரிந்தால் போதும். என்னுடைய ஹிந்தி பராகிரமம் ஊரறிந்தது. செளகார் பேட்டையில், ஹிந்து தியாலயிகல் பள்ளிக்கு முன்னாடி இருக்கும் ஒரு மார்வாடி கடையில், பானி பூரி சாப்பிட்டால், "தோடா ஆலு ஜ்யாதா" என்றளவுக்கு தான் பரிச்சயம். அப்படியிப்படி கொஞ்சம் ஹிந்தி படங்கள் புரியும் ஆனால் பேச முடியாது. எனக்கு அமெரிக்க படங்கள் பார்த்து அமெரிக்கர்களோடு பேசி F வார்த்தையில்லாமலும், Shit சேர்க்காமலும் பேச தெரியாது. 'ரோலா' என்கிற இடம் போக நான் ஒரு டாக்சி பிடித்து ஒரு அரபி டிரைவர் ஒட்ட, நான் தேர்ந்தெடுத்து அவனோடு ஹிந்தியில் உரையாடியதை அப்படியே மாற்ற முடிந்தால், ஒரு முழுநீள ஹிந்தி காமெடி படத்திற்கு உத்தரவாதம்.

சார்ஜா சரவண பவனில் கூட்டம் தள்ளூகிறது. நம் மக்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தாலும், எனக்கு சாம்பார், தயிர் சாதம் சாப்பிடாமல் சாப்பிட்டது போலவே இருக்காது. ஆக ஒரு வாரம் பர்கர், தோசை, லெபனிஸ் உப்பு சப்பு இல்லாத பண்டங்கள், சப்-வே ஸிங்கர்களில் காலந்தள்ளி எதுவும் முடியாமல், போய் ஒரு புல் மீல்ஸ் கட்டியவுடன் தான் வயிறு நிறைந்தது :) ஆக சரவண பவன் அண்ணாச்சியின் தொலை நோக்கு பார்வையினால், என் ஜென்ம சாபல்யத்தினை அடைய முடிந்தது. ஜீவஜோதி வாழ்க! ;) ஒரு வாரமாய் இணையம் அவ்வப்போது பார்த்து வருவதால், தமிழக அரசியல், சினிமாவினை பார்க்க முடியவில்லை. நான் இல்லாத தமிழகம் நன்றாக இருக்கிறது என்று மட்டும் கேள்விப்பட்டேன்.

சார்ஜா நிலவரங்கள், டிரியோ மொபெல் தேடல், தங்க நிலவரம், அபுதாபி பிரவேசம் அடுத்த பதிவில்

Comments:
நல்ல ஒழுக்கு (flow), கலக்குங்க...

இந்த 400 திராம்க்கும்,சிந்தி பார்டிகளுக்கும் இடையில் ஒரு பெரிய கூட்டம் இருக்கு தெரியாதா?

மஸ்கட் எப்ப?
 
ஐய்யா, நீங்கள் சொல்லும் "அந்த பெரிய கூட்டத்தோடு" பழகும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அடுத்த முறை வரும் போது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இப்போது மலையும், மலையை சார்ந்த சாலையுமாய், மஸ்கட்டில் தானனிருக்கிறேன் ;)
 
நாராயனா,மனசு சொன்ன flow சூப்பர். அவர் சொன்ன அதே வரிகள், நாலாயிரம் அளவில் வாங்கும் கீழ் மத்திய வர்க்கம், பத்தாயிரம் அளவில் வாங்கும் மத்திய மத்திய வர்க்கம், இருபதாயிரம் அளவில் சம்பளம் வாங்கும் உயர் மத்திய வர்க்க
கதைகள் காதில் விழவில்லையா?
 
மஸ்கட் பத்தி எதாவது எடக்கு மடக்கா எழுதினா ஆட்டோ இல்ல லாரி தான் வரும்...நினைவில் இருக்கட்டும்.
 
//என் பக்கத்தில் இரண்டு பேர், இருவரும் அலையனில் [Al ain] வேலை செய்யும் டிரைவர்கள் cum தோட்டக்காரர்கள் cum வீட்டு வேலை செய்பவர்கள். பெரும்பாலான பேச்சு, அரசியல், சமூகம், நிலவரம் என்று சுற்றினாலும், சாதி எந்தளவிற்கு தமிழகத்தில் ஊடுருவியிருக்கிறது என்று அப்போதுதான் கண்கூடாக பார்த்தேன். ஒருவர் "இடைசாதி" காரர், அவர் சொன்ன ஒரு விஷயம் சுருக்கென்றது ... "துபாயில கக்கூஸ் கழுவுவேன் சார், ஆனா, சொந்த ஊர்ல செய்யமாட்டேன் சார், கீழ்சாதி பசங்க நம்மள மதிக்க மாட்டங்க சார், அவனுங்க செய்ற வேலதான் நான் இங்க செய்றேன், ஆனா என் சாதி கெளரதை இன்னாவகறது இதை அங்க செய்தா....." இவர்கள் வாங்கும் சம்பளம் தான் பகீரென்றது... //


நாரயண்,

இதுதான் என் கண்ணில் பட்டது.

புர்ஜ் அல் அராபும் சிடி சென்டரும் என் கண்ணில் படவில்லை.

திருமதி உஷா அவர்களே, மத்திய வர்க்கங்களின் அவலங்கள் இன்னும் மோசமானவை. என்னுடைய தொடரில் இந்திய மக்களின் வாழ்க்கைப் பற்றி பேச போவதில்லை. பேசினால் நட்பையும் உறவுகளையும் இழக்க வேண்டியிருக்கும்
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]