Aug 15, 2006

சொதந்திரம்

அறை கலைந்து கிடைக்கிறது. டாம் பீட்டர்ஸ், மெக்ன்சி வே, அவுட்லுக் பிஸினஸ், காலச்சுவடு, குமுதம், ஏர்டெல் பில்கள் என கலவரமாய் இருக்கிறது. எதையும் முழுவதுமாய் படிக்க இயலவில்லை. செல்பேசியில் happy independence day என குறுஞ்செய்திகள் இந்தியனாய் இருப்பதின் பெறுமையினை சொல்லுகின்றன. மனம் இன்னமும் கொல்லப்பட்ட 61 மாணவிகளிடத்திலிருந்து வெளிவரவில்லை. கனவுகளை தாங்கிய அந்த 61 பெண்களின் பெயர்கள் கூட எனக்கு தெரியாது. அவர்களின் புத்தகங்களில் சிறகுகளும், இலைகளும், மயிற்தோகைகளும் இருந்திருக்கக்கூடும். புதியாய் யாராவது சைக்கிள் ஒட்ட கற்றுக் கொண்டிருக்கலாம். மாலை போய் சைக்கிள் பழக யோசித்திருக்கலாம். தம்பியோ, தங்கையோ, அக்காவோ, அண்ணணோ யாரோ ஒருவரோடு பாண்டி விளையாடும் ஆசைகள் கொண்டிருக்கலாம். எழுதிக் கொண்டே போகலாம், ஒரு சின்ன பெண்ணின் மனதில் தோன்றும் கனவுகளையும், ஆசைகளையும் பற்றி. ஒரு விமான தாக்குதலில் மொத்தமாய் புரட்டியெடுத்து, சவக்கிடங்கில் நம்பர்கள் குத்தி, "அது"வாக மாற்றி வைத்திருக்கிறார்கள். காரணங்கள் பலவாக இருக்கலாம். நீங்கள் யார் சார்பில் வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள். இறப்பினை எதிர்கொள்ளுதல் என்பது மனித வாழ்வின் அடிப்படைதான். ஆனால், கொலைகளை தாங்கிக் கொள்ள வேண்டும் என்கிற கட்டாயங்களுக்கிடையே வாழும்போது கோவத்தினை விட இயலாமைதான் மிஞ்சுகிறது.

யாஹூ! தூதுவனில் ஜெர்மனியில் இருக்கும் நண்பணோடு மிக நீளமான வாக்குவாதம் இலங்கை நிலவரம் பற்றி. பிரபாகரன் ஒரு குற்றவாளி என்று நீட்டி முழக்கி வாதாடி, ஐபிகேப்பின் கொலைகள் பற்றி பேசி எல்லாம் பேசி முடித்துவிட்டு ஃபாஸ்தா சாப்பிட போய்விட்டான். நாமும் இன்றைக்கு பேசி விட்டு சன் டிவியில் "தீப்பிடிக்க, தீப்பிடிக்க" அறிந்தும் அறியாமலும் பார்க்க போய்விடுவோம். இந்தியாவின் இறையாண்மையினை முன்வைத்து இலங்கைப் பற்றிய விவாதங்களை போகுமிடமெல்லாம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன். தமிழக முதல்வரோ இலங்கை போலிஸுக்கு தமிழகத்தில் பயிற்சியளிப்பதை மத்திய அரசின் முடிவென்று ஜல்லியடிக்கிறார். தமிழின காவலர் அல்லவா! ஜக்குபாய் என்று ரஜினி நடிப்பதாக சொல்லப்பட்ட ஒரு படத்தின் விளம்பரத்தில் ஒரு வாக்கியம் வரும். "இறைவா! நண்பர்களிடமிருந்து என்னை காபாற்று! விரோதிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்" அந்த கதை தான் இதுவும். நண்பர்கள் என்று இலங்கை தமிழர்களுக்கு சொல்லுபவர்களால் தானோ என்னவோ நிறைய பிரச்சனைகள் வரும் போல இருக்கிறது.

இந்தியா இதில் தலையிடக் கூடாது என்று ஒரு கூச்சல் எழுந்திருக்கிறது. உண்மைதான், அணி சேரா நாடுகளின் தலைமையிடம் அல்லவா. நேபாளத்தில் ஒரு பிரச்சனை, உடனே மத்திய அரசு ஒரு 'தூதுவரை" அனுப்பி அவர்களை அமைதியாய் இருக்க சொல்லுகிறது. காங்கோவில் இனப்பிரச்சனை, ஐ.நா சபையின் மூலமாக இந்திய ராணுவத்தினர் அங்கே போய் அமைதி நிலைநாட்டுகிறார்கள். சீன பிரதமர் வந்தால் அவர்களோடு Trade Treaty கையெழுத்திட திபெத்தினை கை கழுவிய நாடிது. வடகிழக்கில் பெண்கள் நிர்வாணமாய் நின்று "Indian army rape me!" என்று கூச்சலிடும் அளவிற்கு "அமைதியினை" வடகிழக்கு மாநிலங்களில் நிலைநாட்டியிருக்கிறோம். மேற்கு வங்கத்தில் இன்று நேற்றல்ல, பங்களாதேஷ் சுதந்திரம் அடைந்ததிலிருந்து பங்களாதேஷி அகதிகள் உள்ளே வருகிறார்கள், போன தேர்தலில் தனி தொகுதி கேட்கும் அளவிற்கு ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களை அனுமதிப்பதனால் இந்தியா பெருந்தன்மை கொண்ட நாடு. ஆனால், தெற்கே, ஒரு நாளைக்கு குறைந்தது 100 பேர்களுக்கு மேலே தமிழ்நாட்டில் அகதிகளாக வருபவர்கள் எல்லோரையும், மனிதர்களாக கூட மதிக்காமல், அவர்களை தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் பயமுறுத்துவதில் K. நாராயணன் போன்ற மத்திய அரசு அதிகாரிகளுக்கு என்ன லாபம் என்று மட்டும் தெரிவதில்லை. ஒருவேளை இந்திய அரசின் சட்டகத்தில் நீங்கள் அகதிகளாக இருப்பின் தமிழ் தவிர வேறு ஏதாவது மொழி பேசினால் அனுமதி கிடைக்குமாறு மாற்றியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. தமிழகத்தில் இந்தி கற்றுக் கொள்ள 30 வருடங்களுக்கு முன்பு நிர்பந்தித்தது போல, பேசாமல் அவர்களையும் ஹிந்தி கற்றுக் கொள்ள சொல்ல வேண்டுமோ என்னவோ?

எல்லா ஊடகங்களும் போட்டி போட்டுக் கொண்டு மும்பையின் வெடி விபத்தினை காட்டின. அதில் ஒரு சதவிகிதமாவது தென்னிந்திய தொலைக்காட்சிகள் இந்த விஷயத்தினை காட்டுமா என்று எதிர்பார்த்தேன். எல்லோருக்கும், " .......... டிவியில் நிகழ்ச்சிகளை பார்த்து சுதந்திரத் திருநாளைக் கொண்டாடுகள்" என்று தான் காட்டுகிறார்களைத் தவிர, தன் சொந்த மக்களின் இழப்பு பெரியதாக தெரியவில்லை. அவரவர்கள் கல்லாப் பெட்டியின் கனம் அவர்களுக்கு. உலகில் இரண்டே விஷயங்கள் தான் இன்று பிரச்சனையாய் இருக்கின்றன 1. அரசு, கடவுகளின் பெயரால் சண்டையிடுவது 2. நடுநிலைவாதிகள் என்று சொல்லப்படுவர்களால் மாற்றத்திற்கான பலமில்லாமல் இருப்பது. இந்தியாவில் இது இரண்டுமே இலங்கைக்கான பிரச்சனையில் இல்லாமலிருப்பது. இதனால், உடனே என்னை தமிழ் தேசியம், தனித்தமிழ்நாடு என்று முத்திரை குத்தும் அபாயங்களிருக்கின்றன. உண்மையில் நான் இவ்விஷயத்தினை அப்படிப் பார்க்கவில்லை. இந்தியன் என்கிற பெருமை எனக்கு வேறு பல விஷயங்களில் இருக்கிறது. இன்னமும் அமெரிக்கா அளவிற்கு இந்திய அரசமைப்பு மூர்க்கத்தனமாய் மாறவில்லை.

இறையாண்மை பற்றி பேசுவதற்கு முன்னர், விவரங்கள் தெரியாமல் 'இந்தியன்' என்று பெருமிதப்படுவதில் என்னவிருக்கிறது. முதலில் மனிதம் என்கிற அடிப்படையில்லாமல் எந்த தேசிய அடையாளத்தையும், கொடியாய் மார்பில் குத்திக் கொள்வதில் என்னவிருக்கிறது ? ரத்த சகதியில் சுதந்திரம் கொண்டாடும் அளவிற்கு மரத்துப் போய் விடவில்லை நான். This will also go என்று தத்துவார்த்தமாய் ஒதுங்கியும் போக முடியவில்லை. கோவம் பெருகினாலும், இயலாமையும், கையாலகத்தனமும் தான் ஒங்கி நிற்கிறது. டாஸ்மாக்கில் நண்பர் ஒருவரோடு நின்று கொண்டிருந்த போது [நண்பர் ஒரு வலைப்பதிவர், இலக்கிய, உலக விஷயங்களில் ஆழ்ந்த அறிவுள்ளவர்] பாதி பியரில் அவர் சொன்ன வார்த்தை "எல்லாம் கரெக்டு நாராயண், ஆனா State is much more powerful". ஆனால், Truth is powerful than State இல்லையா? காந்தி ஒரு வேளை இருந்திருந்தால், வயதாகி பலவீனமாக சொல்லியிருப்பார் சுதந்திரதினத்துக்காக ஒரு பலவீனமான, ஆனால் வீம்பான "ஜெய்ஹிந்த்!"Comments:
சரியாகச் சொன்னீர்கள்!
 
சரியாகச் சொன்னீர்கள்!
 
இயலாமையில், சுயவெறுப்பில் புழுங்கிக்கொண்டிருக்கும் அதே மூச்சடைக்கும் மனோபாவம்... நேர்மையான பதிவு.
 
நரைன்,
இப்படியான ஆற்றாமைப் பதிவுகள் இடுவதைத் தவிர நாம் வேறு என்ன செய்ய முடியும்? எனக்கு சுதந்திர விழா பற்றிய பிரச்சினை எதுவும் இல்லை ஆனால் அதே சுதந்திரம் அருகிலிருப்பவனுக்கும் தேவை என்பதை உணராது அல்லது உணராதது போல் நடிப்பவர்களின் சுதந்திரம் எப்படி போலியில்லாததாய் இருக்கமுடியும்? எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சுதந்திரம் ஒருநாள் வேண்டுவோருக்கு கிட்டும்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]