Sep 1, 2006

மத்திய சிறைச்சாலை

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் மத்திய சிறைச்சாலையின் [ம.சி.சா] சன்னல் திறந்து வெளிவந்தவுடன் சுதந்திர காற்றினை சுவாசிப்பார்கள். கடந்த மூன்று நாட்களாக மத்திய சிறைச்சாலையில் தான் வாசம். என் உறவினர் ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கிற்காக "உள்ளே உட்கார" வைக்கப்பட்டார். கல்லூரி படித்த காலத்தில் நைட் ஷோ பார்த்து டிரிபிள்ஸ் அடித்த காரணத்திற்காக போலீஸ் ஸ்டேஷன்களில் இரவு "உட்கார்ந்திருக்கிறேன்". லாக்-அப்பில் போடும் அளவிற்கு புண்ணியம் செய்யாத காரணத்தினால், லாக்-அப் பார்த்திருக்கிறேனேயொழிய அனுபவித்ததில்லை. மூன்று நாட்கள் போய் வந்தது மிகப் பெரிய அனுபவம். சிறைச்சாலையென்பது எவ்வளவு ரணகளமான விஷயமென்பது உள்ளேக் கூட போகாமல், தெரிந்தவர்களை உள்ளே போய் பார்த்தாலே தெரிந்து விடும். வடசென்னை, நிழலுலகம் போல சிறைச்சாலை தனி உலகம். குற்றம் செய்தவர்களும், குற்றத்தினை கண்டறிபவர்களும் ஒன்றாய் சங்கோஜமில்லாமல் உலவக்கூடிய இடம். அக்யுஸ்டின் கையோடு தன் கை சேர்த்து விலங்கு மாட்டி, ஒரே பில்டர் வில்ஸினை புகைக்கக்கூடிய அந்நியோன்யம் வேறெங்கும் காண முடியாது.

முதலில் நீங்கள் சென்ட்ரலுக்கு எதிரே இருக்கக்கூடிய பாலத்தில் ஏறி சுற்றி வந்தால், மத்திய சிறைச்சாலையின் வாசலுக்கு வரூவிர்கள். முதலில் நீங்கள் வாகனத்தில் வந்திருப்பின் செல்லும் [Cell], ப்ளாக்கும் [Block] தெரிந்திருந்தால், உள்ளே அனுமதிக்கப்படுவீர்கள். கொஞ்சம் கேணத்தனமாய் நின்றாய் துரத்தி விடுவார்கள். பிற நண்பர்களுக்காக வெளியே காத்திருந்தபோதுதான், சென்னையின் ஒரு முரண்பாடு உறைத்தது. சிறைச்சாலைக்கும், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் 100 மீட்டர்கள் கூட இருக்காது. சென்ட்ரல் நிலையம் hyper motion ல் இயங்கக்கூடிய இடம். சிறைச்சாலையோ slowmotion க்கும் motionlessக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கின்ற இயங்குதளம். கீழே கூவம், அந்த பக்கம் பார்க் ஸ்டேஷன், இந்த பக்கம் சிறைச்சாலை, சுற்றிலும் பெருகியிருக்கும் சென்னை நகரம் என்று அங்கேயிருந்து பராக்கு பார்த்தால் சென்னைக்கு ஒரு புதுவித டைமென்ஷன் தெரிகிறது. ஐந்து நிமிடத்திற்கு 'காவல்' என்று எழுதிய மெட்டாட்டர் வண்டிகள் போகின்றன, வருகின்றன. குற்றவாளிகள் கம்பிகளுக்கு வெளியே பொல்யுசன் காற்றினையும், ஒடும் வாகனங்களையும் ஒரு மாதிரி வியப்பாக பார்க்கிறார்கள். நிறைய நபர்களை காவலுக்கு இருக்கும் நபர்களுக்கு பெயர் வரை தெரிந்திருக்கிறது. சிகரெட் பரிமாற்றங்கள் நடக்கின்றன. உள்ளிருக்கும் காவலாளிகள், இடைவெளி விட்டு வெளியே வந்து கொஞ்சம் அதிகார தோரணை காட்டி ["ஏய்ய், அங்க நிக்காத", "ஆட்டோ எடு, எடு, எடு", "ஒரமா வண்டி விடுங்க சார்" ] சிகரெட் புகைக்கிறார்கள். ஜூனியர் விகடன், நக்கீரன் கையில் வைத்து காத்திருக்கும் கும்பலில், Ten Eternal Questions என்று இங்கிலிஷ் புக் படித்திருந்த என்னை ஒரு மாதிரியாக தான் பார்த்தார்கள். காத்திருந்த வேளையில் சில விஷயங்கள் சர்வ சாதாரணமாக் தெரிந்தாலும், உள்ளூர உறுத்தியது.

நான் இருந்த இடத்திற்கு எதிரே ஒரு அம்மணி மோர் விற்கிறார். பாலத்தின் இந்த பக்கம் இருக்கிற நடைபயணிகள் நடக்கிற இடத்தில் கடை விரிக்கப்பட்டிருக்கிறது. பிஸ்கட், ப்ரெட், கடலை, சிப்ஸ், மார்ட்டின் கொசுவர்த்தி சுருள், வாழைப்பழம், ஒடோமாஸ், மேரி பிஸ்கட், சீப்பு, வெள்ளரிக்காய், வாட்டர் பாக்கெட்டுகள், பாட்டில்கள் என்று தனியாய் ஒரு சூப்பர் மார்க்கெட் இருக்கிறது. ஒடோமாஸ் முக்கியம், உள்ளே கொசுக்கடி தாங்க முடியாது. பக்கத்தில் கூவம், அதில் இல்லாத பொருட்கள் இல்லை. மார்ட்டின் கொசுவர்த்தி சுருள் வாங்கினால், உள்ளே கண்காணிக்கிறார்கள். அச்சுருள் வைக்க உதவும், தகரத்தில் செய்த ஒரு ஸ்டாண்ட்டினை எடுத்து தூக்கியெறிந்துவிட்டு தான் உள்ளே கொடுத்து அனுப்ப முடியும். அதை வைத்து கைதி தற்கொலை செய்து கொண்டால் என்கிற முன்னெச்சரிக்கை தான். Insight. சொல்லி வைத்தாற் போல் எல்லாரும் இங்கே தான் பொருட்கள் வாங்குகிறார்கள். கொளுத்துகிற வெய்யிலில் தலையினை முக்காடிட்டு கொண்டு ஜரூராய் வியாபாரத்தினை கவனிக்கிறார்கள். வெளியில் வாங்குவதற்கும்,இங்கே வாங்குவதற்கு 100% அதிகம். user demand leads to price inflation; ஏனோ அரியர்ஸ் இல்லாமல் படித்த ஆடம் ஸ்மித் நினைவுக்கு வந்தார்.

தமிழ் சினிமாவில் நினைப்பது போல நாம் பார்க்க வேண்டியவர்களை பார்க்க முடியாது. பாலத்தின் மேலிருக்கும் முதல் வாசலை தாண்டினால் ஒரு குட்டி அறை இருக்கும். அந்த அறையில் நீங்கள் பார்க்க வேண்டிய நபர், செல் எண், ப்ளாக் எண் எழுதி திவசத்திற்கு உங்களின் 4 தலைமுறை முன்னோர்களின் பெயர்களை சொல்வது போல, உங்கள் கொள்ளு தாத்தா வரை டேட்டா கொடுத்தால் "அக்கா" எழுதி கொடுத்து ["இன்னா பளாக்குன்னு சொல்லு", "மூணு பேரு யாரு, புள்ளையா, சொந்தகாரங்களா, ப்ரெண்ட்ஸா", "ஏரியா சொல்லு", "ஆனந்துன்னு சொன்னா தெரியுமா"] உங்களை கையெழுத்திட சொல்லுவார். முஸ்லீமாய் இருந்தால் கஷ்டம். ஒன்றுக்கு, மூன்று தடவை விசாரிக்கிறார்கள். என்ன வழக்கில் சிக்கி ஆள் இருக்கிறார் என்பதின் அடிப்படையில் தான் நீங்கள் ஆர்டினரியா, ஸ்பெஷலா என்று தீர்மானிக்கிறார்கள். நிறைய இஸ்லாமிய பெண்மணிகளை பார்க்க முடிகிறது. வடக்கில்தான் மத துவேஷம், தெற்கில் இல்லை என்று நெஞ்சு நிமிர்த்தி நடந்துக் கொண்டிருந்த எனக்கு, இது ஒரு culture shock. நாமும் ஒரு வேளை கோயமுத்தூர் குண்டு வெடிப்புக்கு பிறகு, மனம் மாறிவிட்டோமோ என்று தோன்றுகிறது. அக்காக்களை ம.சி.சா.யில் நிறைய பார்க்க முடிகிறது. ரிமாண்டா, செக்யுரிட்டியா, ஜட்ஜ்மெண்டு தந்தவரா என்கிற விவரம் சொல்ல வேண்டும். இல்லாவிடில் கண்டுபிடிப்பது கஷ்டம்.லேடி கான்ஸ்டபிள்கள் தான் "அக்காக்கள்". போலிஸ்காரர்கள் "மாமா" என்றால், லேடி போலிஸ் "அக்கா"வாக தானே இருக்க முடியும். தமிழர்களின் உறவுமுறை நுண்ணர்வு வியக்க வைக்கிறது ;) அங்கே எழுதிக் கொடுத்து விட்டால், அந்த மனு மேலிருந்து சிறையினுள்ளே போகும். உங்கள் உணவுப்பொருட்கள், இன்ன பிறவைகளோடு, அக்குட்டி அறையினுள்ளேயிலிருந்து விரியும் ஒரு சுற்றுவட்ட படிக்கட்டில் கீழிறங்க வேண்டும்.

கீழிறங்கினால் சென்ட்ரல் நிலைய unreserved compartment வந்த தொனி. உள்ளே இறங்கி வந்தால் ஒரு தடுப்பு இருக்கிறது. தடுப்புக்கு அந்த புறம்தான் உணவுப் பொருட்களை சோதனையிடும் காவலர்கள் இருக்கிறார்கள். நீங்கள் கொடுத்த மனு சிறையினுள் போய், சம்பந்தப்பட்டவர்கள் வருவதற்கு தயாராக இருந்தால் மட்டுமே, அம்மனு இங்கே வரும். அம்மனு சொல்லப்படாமல் இங்கிருந்து உள்ளே போக முடியாது. ஒரு நீளமான வராண்டா அளவிற்கு தான் இருக்கிறது. இங்கே நிற்பது தான் நரகம். சுற்றிலும் மக்கள். இருபுறமும், மெட்ரோ ட்ரெயின்களின் தண்டவாளங்கள். மேலெ பாலம். நீங்கள் நிற்குமிடமும் உயர்த்தப்பட்ட பாலம். இருமருங்கிலும் கூவம். அதன் நாற்றம். இங்கேயிருந்து இது தாங்க முடியாமல் மேலே போனால், மீண்டும் மனுப் போட்டாலேயொழிய உள்ளேப் போக முடியாது. இஸ்லாமிய பெண்மணிகள், கைக்குழந்தையோடு பெண்கள், கட்சிக்காரர்கள், இளவட்டங்கள், பெரிய மனிதர்கள் எல்லாருமான கலவையில் இருக்கிறது அவ்விடம். அதை முதலில் பார்த்தப் போது குமட்டிக் கொண்டு வந்தது உண்மை. இதில் சுவாரசியமான முகைநரண், அங்கே மூன்று பெண்மணிகள் கடைப் போட்டு, கடலை, டீ விற்றுக் கொண்டிருப்பது. கைக் குழந்தையொன்று மலங்கழிக்க, பக்கத்திலேயே, லுங்கி கட்டிக் கொண்டு "கட்டிங்" விடும் பார்ட்டிகள் சர்வசாதாரணமாய் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தது தான் survival of the fittest தியரியினை உறுதி செய்தது. இங்கேயும் கில்லாடிகள் இருக்கிறார்கள். உறவினர்களுக்கு எடுத்து செல்லும் உணவுப்பொட்டலங்கள், பிஸ்கட்கள், மார்ட்டின் சுருள்கள் போன்றவை அவர்கள் எடுத்துக் கொள்ளாவிட்டால், அதை எடுத்து வந்து, பங்கிட்டு, மீண்டும், சிறைக்கு வெளியே இருக்கும் பெண்மணிகளுக்கு recycle செய்து அதில் கட்டிங் விடும் ஆசாமிகள் இருக்கிறார்கள். சிறையின்னுள்ளேயே திருடும் கும்பலிது. ஆனாலும் எவரும் கண்டு கொள்வதில்லை. மொத்தத்தில் அந்த வராண்டாவில்தான் எல்லா மக்களும், நானும் நின்று கொண்டிருந்தோம். நியோசர்லியலிச ஜல்லியடித்தலில், கடவுள் மீது ஒன்றுக்கு அடித்தார் என்பது போன்ற வார்த்தைகள் வரும். நான் கடவுள், ஆத்மா போன்ற விஷயங்களை கூவமணக்க படித்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் கடவுள்கள்களும் டெட்டால் போட்டு குளிக்கட்டும்.

மனு கொடுத்தால் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும். அதுவும் செல் எண், ப்ளாக்கு எண் கொடுக்கப்படாவிடில் நீங்கள் காலி. நிறைய நேரம் காத்திருக்க வேண்டியது வரும். அங்கே நின்று பார்த்தால் நேரெதிரே சென்ட்ரல் தெரிகிறது. தாம்பரம் செல்லும் தடத்தில், இரண்டு சிறுவர்கள் காற்றாடி விட்டுக் கொண்டிருக்கிறார்கள், பாலத்தின் மேலே. இந்த பக்கம் MRTS தண்டவாளத்தில் 10 நிமிடங்களுக்கு சரேலென ட்ரெயின்கள் போய் கவனத்தினை கலைக்கின்றன. வலதுப்புறம் பாலத்துக்கு கீழே இருக்கும் கிறிஸ்துவ மயானத்தில் நடுவே இருக்கும் ஸ்தூபியில் யேசு வெயிலில் கை நீட்டி ஆகாயம் பார்க்கிறார்."இஸ்த்துக்குனு வந்தவர்கள்" தண்டவாளங்களை தாண்டி, கைக்கோர்த்து உடல் இறுக்க, ஆடையோடு உறவு கொள்ளாத குறையோடு நடக்கிறார்கள். நான் நின்ற தடுப்பின் மேலே "பல பேரோடு உறவிருப்பின் கவனமாய் இருங்கள்" என்கிற அரசு எய்ட்ஸ் கண்ட்ரோல் போர்டின் சுவரொட்டி. வெளியே தெரிந்த Known secret ம.சி.சா.யும், சாந்தோம் பீச்சும் தன்பால் புணர்ச்சியாளர்களின் சொர்க்கம். அதுவும் ம.சி.சா.வில் இளம் வயதில் உள்ளே போனீர்களேயானால், வன்புணரப்படாமல் வெளியே வருவது கடினம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை நிரூபித்தது சுவரொட்டிகள். அவ்வராண்டாவிற்கும், பார்க் ரெயில் நிலையத்திற்கும் இடையில் கழிவறை என்கிற பெயரில் ஒரு தடுப்பு இருக்கிறது. அக்கழிவறை கூவத்தினை விட மோசமாய் இருக்கிறது. பக்கத்தில் போனாலே பாக்டீரியா இல்லாமல் வரமுடியாது என்று தோன்றுகிறது. இங்கேயிருந்து கைதிகள் தப்பித்தால் நரகத்திற்கு தான் போவார்கள் என்பது போல இருக்கிறது சுற்றுப்புறம். ஒரு அக்கா, இவ்வளவு நாற்றங்களையும் தாண்டி உணவு தடுப்புக்கு அந்தப்பக்கம் அமர்ந்து, வந்திருந்த உணவிலிருந்து ஒரு அப்பளத்தினை எடுத்து சாதாரணமாய் கடித்து சாப்பிட்டு கொண்டிருந்தார். விந்தையான உலகம்.

முக்கியமாய் கவனிக்க வேண்டியது, இங்கே சத்தமே இல்லை. எல்லாம் ஏதோ எழவு வீட்டிற்கு வந்தது போல குசுகுசுவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். பத்து நிமிடத்திற்கு ஒரு முறை உள்ளிருந்து மனுத்தாள்கள் வரும். உங்கள் பெயர் அதிலிருப்பின் நீங்கள் தடுப்பினை தாண்டி, தமிழ் சினிமா காட்டும், சிறைவாசலுக்கு இடப்புறம் இருக்கும் பார்வையாளர்கள் அறைக்கு போகலாம். நாங்கள் செல் எண் தெரியாததால் இரண்டு மணி நேரங்கள் காத்திருந்தோம். எங்கள் முறை வந்தது. உள்ளே போனால் தான் விரிகிறது உலகம். ம.சி.சா.யில் குறைந்தது 10 ப்ளாக்குகள் இருக்கலாம். எல்லாருமாய் சேர்த்து தோராயமாய் 1300 -1500 கைதிகளை உள்வைக்கலாம். பார்வையாளர் அறை என்பது ஒரு பெரிய கூடம் அவ்வளவே. அங்கே கேட்கும் பேரிரைச்சலை நீங்கள் கேட்க வேண்டுமெனில் ரஜினி பட முதல் நாள், முதல் ஷோ, ரஜினி வரும் முதல் காட்சிக்கு ஈடாக சொல்லலாம். பக்கத்தில் பேசுவதைக் கூட 5000 மெகா வாட்ஸில் சொன்னால் தான் கேட்கப்படும் சாத்தியங்கள் இருக்கின்றன. கவலைகள், குடும்ப விஷயங்கள், திட்டல்கள், அழகை, கோவம், இரக்கம், சுயபச்சாதாபம் என கலவையாய் குரல்கள் உங்களை சுற்றி ஒலிக்கும். உள்ளே பேசி, பொருட்களைக் கொடுத்து விட்டு வெளி வந்தால், சடாலென ஒரு மயான அமைதி நிலவும். எல்லாம் மெதுவாய் இயங்குவது போல தெரியும். ஒருவிதமான விரக்தி மனப்பான்மை பரவும்.

எல்லாம் முடித்து மேலே வந்தால், வாகனங்களின் சத்தம் மீண்டும் நம்மை உலகிற்கு திரும்ப சொல்லும். இனி வாழ்நாள் முழுவ்தும் எப்போது அப்பாலம் ஏறினாலும், இந்நினைவுகள் இல்லாமல் கடக்க முடியாது. வெளியே மக்கள் ஒடிக் கொண்டிருக்கிறார்கள். சிறைக்கதவுகள் மூடப்பட்டு விட்டன. மீண்டும் மறுநாள் காலை 8 மணியிலிருந்து 2 மணி வரை யோசிக்க நினைப்பவர்களுக்கு ம.சி.சா என்கிற போதிமரம் திறக்கும். கூவநாற்றத்தினோடு கொஞ்சம் சுத்தமாயிருக்கிறது மனதும், ஒரு குட்டி பூர்ஷ்வா வாழ்க்கையும்.


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]