Dec 29, 2006

போர்க்கும் கொஞ்சம் பாயாசமும்

டிஸ்க்ளெய்மர்: எனக்கு திருமணம் ஆகவில்லை. இந்த பதிவில் எழுதியது அனைத்தும் அடுத்தவரின் அனுபவங்களும், படித்தவைகளும், பார்த்தவைகளும் தான். இதுதாண்டி, இது ஒரு இணைய பத்திரிக்கைக்காக எழுதியது, பிரசுரமாகததால், இங்கே மறுபதியப்படுகிறது. இதுதாண்டி, Domestic Violence Act என்பதே, பெண்களின் கையில் அதிகாரத்தினை ஒட்டுமொத்தமாக தாரை வார்த்துக் கொடுத்துவிட்டதாக சொல்வதின் பின்னிருக்கும் உள்ளீடான அரசியலை கட்டுடைப்பதற்கும் இந்த பதிவு உதவலாம்

குடும்பம் என்பது ஒரு கட்டமைப்பு. குடும்பங்கள் திருமணம் என்கிற ஒரு வாயிலை முன்வைத்து நிறுவப்படுகின்றன. குடும்பம் என்கிற அமைப்பினை முன்வைத்த நம்பிக்கைகளும், நியதிகளும், கட்டமைப்புகளும்தான் பெரும்பாலான அளவில் ஒரு சமூகத்தினை நிர்ணயிக்கின்றன. ஒரு சமூகம் என்பது அதன் மக்களை சார்ந்தது. மாற்றங்கள் காணாத, காணப்படாத சமூகங்கள் வழக்கொழிந்து போயிருக்கின்றன. எது நியாயம் என்பதும், எது கலாச்சாரம் என்பதுமே காலவெளிகள் தான் தீர்மாணிக்கின்றன. மத்திய ஐரோப்பாவில் லூயி மன்னர்கள் காலத்தில் தாடி வைத்தால் அதற்கும் வரி போட்ட வரலாறு இருக்கிறது. தமிழகத்தில் பெண்கள் மேலாடை அணியவேண்டும் என்பதே போராட்டங்களுக்கு பின்தான் நிலைக்கு வந்தது. ஒரு ஐநூறு வருட கால அளவில் பல்வேறு பரிமாணங்களில் சமூகத்தின் பார்வையும், நோக்கமும் மாறியிருக்கிறது. இன்றைய சமூகத்தில் திருமணம், குடும்பம், லயம், சமரசங்கள், மாற்று அமைப்புகள் என பல்வேறு பார்வைகள் எழ ஆரம்பித்திருக்கின்றன.

இந்திய குடும்ப அமைப்பு ஆண்களை முன்வைத்த அமைப்பாக தான் இருந்து வந்திருக்கிறது. பரம்பரை பரம்பரையான தொழில்கள் கூட குடும்பத்திலிருக்கும் ஆண்களுக்குதான் கைமாற்றப்பட்டிருக்கின்றன. இந்திய குடும்ப அமைப்பினைப் பற்றி பேசும் ஒரு நண்பர் வழக்கறிஞர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது 5% of all marriages are great. 5% of all marriages are worst. The balance is in various stages of compromises. சமரசங்களோடு தான் வாழ்க்கையென்பதில் சந்தேகங்களில்லை. கொள்கைகளும், கோஷங்களும் பலவாறாக இருந்தாலும், இன்னமும் திருமணம் என்கிற ஒரு அமைப்புக்கு மாற்றாக சொல்லக்கூடிய அளவில், சமூக அங்கீகாரம் பெற்ற இன்னொரு அமைப்பு தோன்றவில்லை என்பது தான் நிதர்சனம். லிவிங்க் இன், கம்யூன் போன்றவைகள் இன்னமும் சித்தாந்த அளவிலும், மிக மிக சொற்ப அளவிலுமே பேசப்படுகின்றன. இதுதாணடி, பெரியார் போன்ற ஒரு ஆளுமை உருவாக்கிய சுய மரியாதை திருமணம் என்கிற வடிவம் தேசிய அளவில் இப்போதுதான் பேசப்படவே செல்கிறது. ஆக, திருமணம் தவிர்த்த பிற அமைப்பு ரீதியான முறைமைகளை தற்போதைக்கு மறக்கலாம்.

இந்திய திருமணங்கள் non negotiable social agreement என்கிற அளவில் தான் ஆண்களால் பார்க்கப்படுகின்றன. இந்திய ஆண்களால், இந்திய பெண்களின் உலகத்தினை முழுமையாக பார்க்க தெரியாமல், திணறுவதால் சுலபமாக சிலுவைகளை ஏற்றி விடுகிறார்கள்.ஆணாதிக்கம் குடும்ப பொறுப்பு, பெண், தெய்வம், பத்தினி,சுமங்கலி வகையறாக்களில் சிலுவைகளை அழகாக சுற்றி பரிசளித்திருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. இந்திய திருமணங்களில் பெண் தான் எல்லாவிதமான பொறுப்புகளையும் ஏற்று கொள்ளல் வேண்டும். ஆண் வெறுமனே, இவளின் மனம் கோணாமல் பார்த்துக் கொள்வேன் என்று தாலி கட்டினால் போதும். மனைவியாய், தோழியாய், தாதியாய்,தாசியாய் என இந்திய ஜனத்தொகையினை விட நீளமான பெறுமிதம் தரமிக்க சிலுவைகளின் குவியல் ஒரு தாலி சரடிலிருந்து உண்டாக்கப்படுகிறது. பெண்கள் தான், பெரும்பாலான நிகழ்வுகளில் இங்கே பலிகடாக்கள் ஆக்கப்படுகிறார்கள்.

மூன்று மாதங்களுக்கு முன்பு தினந்தந்தியினை ஆக்ரமித்தவைகள் இரண்டு செய்திகள் - மேரி தன் காதலுனுடன் தன் கணவனை கொன்றது, தேனிலவு போன இடத்தில் பத்மினி தன் கணவனை கொன்றது. இதற்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவத்தில் தெரியும், இந்திய ஆணாதிக்க சிந்தனையும், அதன் குடும்பம் பற்றிய பார்வைகளும். எல்லா ஊடகங்களும் கொதித்தெழுந்து பத்தினி தெய்வங்கள் சூலிகளாக மாறி விட்டார்களோ என்கிற பயத்தில், நடுநிசியில் வேப்ப மரத்தில் ஊடக ஆணிகளை அடித்து விரட்ட வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு பதிவாகும் வழக்குகளில் மனைவியினை மிரட்டியது, மனைவியல்லாமல் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொள்வது என நீளும் வழக்குகளில் ஒரு வழக்கினைக் கூட ஊடகங்கள் பேசியதில்லை.

குடும்பத்தின் நெறி என்பது பெண்களுக்கானது. பெண்கள் மட்டுமே பார்க்கவேண்டிய, பாதுகாக்க வேண்டிய கட்டாயம். இந்த சூழ்நிலையிலிருந்துதான் இந்திய திருமண பந்தங்களை பார்வையிட வேண்டியிருக்கிறது. ஒரு மகா மோசமான உளவியல் சிந்தனையை, அடக்குமுறையை, ஆண் அதிகார நிலைநிறுத்துதலையும் நம் செவ்வியல் பண்பாடாகவும், கலாச்சாரமாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். மிக சுமூகமான சமரசங்கள் உள்ளடக்கிய ஈருயிர் ஒருடல் திருமண பந்தங்கள் இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது. ஒரு கட்டமைப்பு என்று வரும் போது பெரும்பாலான நிகழ்வுகள் அந்த கட்டமைப்புக்குள் எவ்வாறு நிகழ்கின்றன என்பதைப் பொறுத்தே கட்டமைப்பின் மீதான நம்பிக்கைகளையும், அவநம்பிக்கைகளையும் பேச இயலும்.

இந்திய திருமணங்களின் அடிநாதமாக சொல்லப்படும் ஆயிரங்காலத்து பயிர், உறவுகள் போன்றவைகள் இன்றைக்கு கேள்விக்குள்ளாக்கப்படலாம். இரண்டாயிரம் வருட பாரம்பரியத்தில், தொழில் நிகழ்வுகளில், வாழ்வியல் முறைகளில், கேளிக்கைகளில் இவ்வழக்காறு அன்றைக்கு சரியாக இருந்திருக்கலாம். கிருஷ்ண ஜெயந்திக்கும், விநாயகர் சதுர்த்திக்கும் பலகாரங்கள் சமைக்க முடியாமல் / தெரியாமல் / இயலாமல், கிருஷ்ணா சுவிட்ஸ்லிருந்து டப்பாக்கள் வாங்கி விநியோக்கிக்கூடிய அளவில் தான் இன்றைக்கு வாழ்க்கையிருக்கிறது. ஒரு வேகமான சக்கரம் கட்டிய உலகில், எல்லோருக்குமான நேரமும், அவரவர்களுக்கான நேரமும் குறுகிக்கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்னமும் பெரும்பாலான இந்திய ஆண்கள் இரண்டாயிர வருட கலாச்சார உப்புமூட்டையினை தூக்காமல் வாழ்வதில்லை. இந்நிலையில் மனமுறிவுகளும், ஏக்கங்களும், ஆதங்ககளும், மன அழுத்தங்களும், எரிச்சலும், கோவமும், இயலாமையும், எதிர்பார்ப்புகள் பொசுக்கி போவதின் வலிகளுமாய் தான் வாழ்க்கை நீண்டு கொண்டிருக்கிறது. திருமண உறவுகள் ஏன் சரியாக இருப்பதில்லை என்கிற காரணங்களை வெளியே ஆராயாமல், கொஞ்சம் உள்ளே போய் ஆராய்ந்தால், பெரும்பாலான காரணங்கள் ஆண்களை சார்ந்தே இருக்கும். கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் மனமுறிவுகள் அதிகமாகி விட்டன என்பது ஒரு மேம்போக்கான பார்வை. உள்ளளவில் பத்தாண்டுகளாக ஏன் அதிகமாகி விட்டன என்பதை பற்றிய தெரிதல்களும், தேடல்களும் மிக குறைவாகவே இருக்கின்றன. இன்னமும், தாம்பரம் தாண்டி விரிகின்ற தமிழகத்தில் இருக்கும் பெண்கள் திருமணம் என்பது ஒரு கட்டாய நிகழ்வாகவும், கணவன் என்பவன் ஒரு சமூக அடையாளமாகவும், பாதுகாப்பு ஷீல்டாகவும் ஏற்றுக் கொள்ளும் அளவில் தான் இருக்கிறார்கள். என்னால், இதை ஒரு கழுகுப்பார்வையாக தான் சொல்ல முடியுமே தவிர, ஆராய்ச்சி புள்ளிவிவரங்கள் கிடையாது.

இன்னமும் இந்திய படுக்கையறைகள் ஆண்களின் வெளிகளாகவும், சல்மாவின் கவிதையில் வரும் கொஞ்சம் சுதந்திரம், கொஞ்சம் அவகாசம் என்பது போன்ற சின்ன சின்ன சலுகைகளை எடுத்துக் கொள்ள விரிகிற யோனிகளும், பத்து நிமிட உறவு கொள்ளல்களில் திருப்தியாகி குரட்டை விட்டு தூங்கும் ஆண்களாகவும்தான் இருக்கிறது. marital rape என்பது பற்றிய தெரிதல்கள் கூட இல்லாமல், 'அவரு ஆம்பள, இது எல்லாம் சகஜம்' என்கிற அளவில் தான் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதுதான் சோகத்தின் உச்சம். பாலியல் உறவுகள் இருக்கும் போலித்தன்மைகளும் அதன் அடிப்படையில் மனதில் உருவாகும் கோட்டு சித்திரங்களுக்குமான வெளியில் உறவுகள் ஊசலாடுகின்றன. திருமண உறவுகளின் கொள்கைரீதியிலான விளக்கங்களில் நல்லவை இருந்தாலும், இயங்குதளத்தில் அவற்றின் interpretation வேறானவகையாக இருக்கிறது. ஆக, பெரும்பாலானவர்களுக்கு மேலோட்டமான அளவில் இது ஒரு அமைப்புரீதியான முறைமையாக தெரிந்தாலும், உண்மையில் பரவலான விரிசல்கள் உள்ளடக்கிய வகையில் தான் உண்மையான அமைப்பு இருக்கிறது. பல்வேறான காரணங்களில் விரியும் நம் சிந்தனைகள், இறுதியில் நிலைப்பது இங்கே தான். நாம் புரிந்தோ புரியாமலோ, இன்னமும் பாயசத்தினை ஃபோர்க்குகளில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். ஃபோர்க்குக்கான உபயோகத்தின் புரிதலையும், பாயசத்தினை வேறாக பருகுவதின் அருமையும் தெரியாதவரை திருமண உறவுகளும், குடும்ப அமைப்புகளும், கையில் ஃபோர்க்கோடு பாயசத்திற்காக காத்திருக்கின்றன.

சமூகம், குடும்பம், பெண்கள், ஆணாதிக்கம், அரசியல், வாழ்க்கை

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]