Jan 6, 2007

வெயில் - நிராசைகளின் கனவுகள்

தமிழ்சினிமாவில் வரும் போலீஸ்காரர்கள் போல, ஏற்கனவே வலையுலகம் பிரித்து மேய்ந்து விட்டபிறகும், இந்த படத்தினைப் பற்றி எழுதுதல் அவசியமாகிறது. இந்த படத்தின் கதைப் பற்றி எழுதப் போவதில்லை. ஏற்கனவே எழுதி முடித்தாகிவிட்டது. கதையின் களமும், கதையின் மூலமுமே தான் இங்கே அலசப்படப் போகும் பாடுபொருள்.

ஒரு வரியில் சொல்வதனால், தமிழ்சினிமாவில் முதல் முறையாக தோற்று போதல், தோல்வியுறுதல், வீணாய் போதல் பற்றி முழுமையாக சொல்லியிருக்கும் படம். இதற்கு முன் ஒரளவிற்கு கமலின் 'மகாநதி' அந்த வலியினை வெளிக் கொண்டு வந்திருக்கும். சாதி பிரச்சனைகள், ஆளுமைகள் தவிர்த்துப் பார்த்தால், 'தேவர் மகன்' கூட ஒரு விதத்தில் தோற்றுப் போனவனின் கதைதான். ஆனால், 'வெயில்' அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுகிறது. வெயிலில் தோற்று போனவர்கள் படமுழுக்க உலா வருகிறார்கள். 'புதுப்பேட்டையை' தமிழின் சப்பால்டர்ன் படம், இந்திய கருப்பர்களின் படமென்றெல்லாம் ஜல்லியடிக்கும் அறிவுஜீவிகள் வெயிலுக்கு என்ன புது பெயர் தருவார்கள் என்று தெரியவில்லை. ரத்தமும் சதையுமாக, நிஜமான மனிதர்களையும், அவர்களின் நிராசைகளையும் கண்முன் நிறுத்துவதுதான் வெயில்.

படம் பார்க்கும் எல்லோர்க்கும் கதை நாயகன் பசுபதிதான் என்றாலும், தோற்று போனவன் முருகேசன் மட்டுமல்ல. நான் படித்த எல்லா பதிவுகளும், விமர்சனங்களும், பசுபதியினை உயர்த்தி பிடிக்கின்றன. அதில் தவறில்லை. ஆனாலும், படமுழுக்க இயக்குநர் பல்வேறு விதமான தோல்விகளையும், தோல்வியோடு வாழும் மனிதர்களையும் மிகவும் அழுத்தாமல் சொல்லியிருக்கிறார். இது பரத் படமல்ல. பசுபதியின் படம். பசுபதி 'சுள்ளான்' மாதிரியான படங்களில் நடித்த போது, ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு மொத்தமாய் சேர்த்து ஈடுகட்டிவிட்டார். 'நான் திருடலப்பா' என கெஞ்சும் போதும், 'எங்கம்மா மடியில படுக்கணும் போல இருக்கு பாண்டி' என ஏங்கும்போதும், 'இந்த தியேட்டர் என் உசுரு மாதிரி, அந்த நட்டத்தை பணத்தைக் கொண்டு ஈடுகட்ட முடியாது' என மறுகும் போதும், 'என் உயிரை கொன்னுடிட்டியேடா' என அலறும் போதும், 'நான் அண்ண்ண்ண்ண்ண்ண்ண்டா என பரத்திடம் திக்கி திக்கி பேசும் போதும், மனிதர் புகுந்து விளையாடியிருக்கிறார். 'தல' ரசிகர்கள் கள்ள ஒட்டுப் போட்டு, 'வரலாறு'வில் தல தான் சூப்பரு என சொல்லாமல் இருந்தால், இந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான பரிசு, கொஞ்சம் போட்டிகளுடன் [ஜீவா - ஈ, டிஸ்யும் வடிவேலு - இம்சை அரசன், விஷால் - திமிரு, சிவப்பதிகாரம் ] தட்டிச் செல்லும் வாய்ப்பிருக்கிறது. தமிழில் 'அடக்கி வாசித்து' நடிக்க தெரிந்த ஒரு சில நடிகர்களின் பட்டியலில் பசுபதிக்கும் இடமுண்டு.

முருகேசன் போட்டு தள்ளும் போஸ் ஒரு தோற்று போனவன். [யார் அந்த நடிகர்? அந்த மீசையும், குரலும் ஒஹோ!] முருகேசனை உண்மையாக 'நேசிக்கும்' பாண்டியம்மாள் தோற்று போனவள். கிளைமாக்ஸில் ஒரு ஃபேன் ஷாட்டில் பாண்டியம்மாள் (ஸ்ரெயா ரெட்டி) அழும்போது அவளுக்கு பொட்டு இருக்காது. இயக்குநர் சொல்ல வந்த செய்தி, நச்சென்று மண்டையில் அடிக்கிறது. தான் வாழாவெட்டியாக இருக்கும்போது கூட பொட்டு வைத்திருந்த பாண்டியம்மாள், தான் மிகவும் நேசித்த முருகேசன் மரணத்திற்கு வெறும் நெற்றியோடு இருக்கிறாள். வாழ போன வீட்டில் கணவனால் ஏமாற்றப்பட்டு, சொந்த ஊரில் அவளை நேசித்த ஒருவனின் இறப்போடு அவளும் பல தோல்விகளை வாழ்வில் சந்தித்தவள்.

இரும்படிக்கும் இடத்தில், தன் மனைவியின் நகையினை திருடிக் கொண்ட போன மகனையும், அதற்கு பின்பு அவர் எப்படி கெஞ்சி, கால்பிடித்து தன் தொழிலை நடத்தினார் என்று புலம்பி தள்ளும் முருகேசனின் அப்பா, முருகேசனின் இறப்புவரை மதிக்காமல், பின் புலம்பி தள்ளி பின் 'தன் குடும்பத்தை காக்க வந்த சாமி' என்று என் கால்பிடித்து கதறும் அவர், வாழ்வில் தோற்றுப் போனவர். தோல்விகளையும், துரோகங்களையும், துக்கங்களையும் ஒருசேரக் கொண்டே எல்லோருடைய வாழ்வும் ஒடிக் கொண்டிருக்கிறது. முருகேசனை காதலித்து, கழுத்தறுத்துக் கொண்டு சாகும் தங்கம் [பிரியங்கா - அம்சமான பெண் முகம், இன்னமும் ஒரு பத்து படங்களில் பார்க்கலாம். அப்புறம் தொழிலதிபரோடு கல்யாணமாகி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் செட்டிலாகிவிடுவார்] தன் வாழ்வில் தோற்றுப் போனவள்.

பாவனா படம் முழுக்க வருவது போல பாவனை காட்டப்பட்டு ஒரங்கட்டப் படுகிறார். பரத் வழக்கம் போல. சில இடங்களில் 'காதல்' படத்தின் சாயல்கள் தெரிகின்றன. முக்கியமாக, முருகேசனை தூக்கிலேற்ற தங்கத்தின் தந்தை முயலும் போது, வரும் காட்சியமைப்புகளும், வசனங்களும் 'காதல்' கிளைமாக்ஸினை நினைவுறுத்துக்கின்றது. மேக்கப் பல இடங்களில் இடறுகிறது. தியேட்டரினை விட்டு கிளம்பி பஸ்ஸிலிருந்து தன் சொந்த ஊரில் காலெடுத்து வைக்கும் போது இருக்கும் பசுபதியின் கருமையான முகம், அடுத்த டீ குடிக்கும் காட்சியில் பளிரெனவாகி விட்டது.continuity missing. 3 பாடல்கள் தேறும். முக்கியமாக, 'செத்தவடம்' என வரும் குறும்பாடலில் பசுபதியினை முன்வைத்து எடுக்கப்பட்ட மாண்டேஜ் ஷாட்டுகள், உலகின் சில சிறந்த படங்களில் வரும் abstract visuals ஐ தமிழ் மண்ணிலிருந்து தருகின்றன.

நேசம், காதல், உறவு, பணம், நட்பு,தொழில் என எல்லோரும் பல இடங்களில் இடரப் பட்டிருப்போம். படமுழுக்க நம் மனதின் உள்ளூற தகிக்கும் ஒருவிதமான இயலாமை கலந்த கோவம் தான் வெயில். நிராசைகளோடும், கானல் கனவுகளோடும் விருது நகரில் வளைய வந்திருக்கிறது வெயில். தமிழில் சமீப காலமாக சில உண்மையிலேயே உலகத்தரம் வாய்ந்த படங்கள் வருகின்றன. அதில் கொஞ்சம் சமரசங்களோடு வெயிலையும் பட்டியிலிடலாம்.

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]