Jun 29, 2007

கொத்து பரோட்டா

ஜீவா

ஜீவா. ரஷ்யாவில் ஒரு படப்பிடிப்பின்போது மாரடைப்பால் மரணமடைந்தார் என்று குறுஞ்செய்தி நேற்று வந்தபோது இது வதந்தியாக தான் இருக்கும் என்று நம்பினேன். ஆனால், உண்மையாகிப் போனது. ஜீவா, இதுவரை மூன்று படங்களை தந்த இயக்குநர். தமிழ்சினிமாவின் சாபக்கேடுகளில் ஒன்று இடைநிலை இயக்குநர்களை மறந்துப் போவது அல்லது பேசாமல் இருப்பது. ஒரு பக்கம், மணிரத்னம், ஷங்கர், பாலசந்தர் எனவும் இன்னொரு புறம் சேரன், பாலா, கெளதம் மேனன், அமீர் என வகைப்படுத்தினாலும், ஜீவா மாதிரியான இயக்குநர்களுக்கு என்ன இடம் என்று தெரியவில்லை. 12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே என மூன்று படங்கள். உள்ளம் கேட்குமே என்கிற படத்தினை வெளியிட ஜீவா பட்ட கஷ்டங்கள் ஒரு சினிமா விநியோகஸ்தர் மூலமாக தெரியும். பெப்சி என்று முதலில் பெயரிட்டு பல பிரச்சனைக்கு உள்ளாகி பின்பு ஒரு வருடம் கழித்து வெளியாகி, வெற்றியினை குவித்த படம். முக்காபுலா, சிக்கு புக்கு ரயிலே போன்ற ஜனரஞ்சக பாடல்களை ஒரு ம்யுசிக் வீடியோ தரத்திற்கு கொண்டு சென்ற ஒளிப்பதிவாளன். நிறைய பேருக்கு நினைவிருக்காது. ஜென்டில்மெனின் சிக்கு புக்கு ரயிலே பாடல் தான் மெட்ரோவில் [சன் டிவி அப்போது கிடையாது] வந்த முதல் தமிழ் பாடல். மும்பையே பிரபு தேவா பின்னால் பைத்தியம் பிடிக்கச்செய்து அலைய வைத்த பாடலுக்கு ஜீவா தான் ஜீவன்.ஜீவாவின் எந்தப்படமும் 'அறிவுரை' சொல்லியதில்லை. இந்தியா விவசாயிகள் கையிலும், பாகிஸ்தானுக்கு அந்தப்புறம் இருப்பவர்கள் எல்லாரும் வில்லன்களாகவும், ஒரு ஹீரோவினால் இந்தியாவில் லஞ்சம், ஊழல், கருப்புப்பணம், அடிமைத்தனம் ஒழிந்துவிடும் என்றெல்லாம் ஜல்லியடிக்காத, நகரத்து வாழ்வினை மையமாக கொண்ட படங்கள். எவ்விதமான பாசாங்குகளும் இல்லாத கொஞ்சம் தமிழ்சினிமா மசாலாவோடு அமைந்த படங்கள். ஒரு கலைஞனாக ஜீவா செய்தது ஏராளம், ஆனாலும், இன்னும் ஒரு வாரத்திற்கு பிறகு "பீமா" ஜுரத்தில் எல்லாம் மாறி, 'சிவாஜி'க்கு சில்வர் ஜுப்ளி எடுக்கும்போது நினைவுக்கு வந்தாலும் வரலாம்.

ஒணான்

என் அடுக்ககத்திற்கு பக்கத்தில் ஒரு பெரிய அடுக்ககம் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. பால்கனியில் இருந்து பல்துலக்கி வரும்போது ஒரு ஓணான் தென்பட்டது. ரொம்ப நாள் கழித்து ஒணான் என்கிற ஒரு ஜீவராசியினை அப்போதுதான் பார்த்தேன். பள்ளிக்கூட மைதானத்தில் பார்த்ததிற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து ஓணானை இப்போதுதான் பார்க்கிறேன். என் தங்கையின் 8 வயது மகளுக்கு அது என்னவென்றே தெரியவில்லை. நகரத்தில் மறந்து போவது எவையெவையெல்லாம் என்று திடீரென ஒரு பொறி தட்டியது. கார்ன் ப்ளேக்ஸ் வந்த பிறகு வறுத்த சோளம் தெரியவில்லை. நெல்லிக்காய் ஊறுகாய் தான் பார்க்கிறேன், அறுத்து உப்பு போட்டு விற்கிறார்களா என்று தெரியவில்லை. கிச்சிலிக்காய், பேரிக்காய்,விளாம்பழம் இருக்கிறதா தெரியவில்லை. நகரத்தில் வாழ்வதிலும், அதிலும் அடுக்ககத்தில் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருப்பதிலும் இழப்பவை இன்னும் நிறைய இருக்கின்றன என்று தோன்றுகிறது. இன்னமும் ஜிகிர்தண்டா குடிக்கவில்லை, சென்னையில் கிடைக்கிறதா ?. ஒணானுக்கு ஆங்கிலத்தில் என்ன ?

ஊர் மேய்தல்

ரொம்ப நாள்களுக்கு பிறகு கொஞ்சம் வலைப்பதிவுகள் படித்தேன். சுகுணாதிவாகரின் (மிதக்கும் வெளி) சு.ரா பற்றிய பதிவு சமீபத்தில் நான் படித்த மிக முக்கியமான பதிவாக நினைக்கிறேன். சினிமா ஆளுமைகளுக்கு இணையாக, இலக்கிய ஆளுமைகளை தூக்கி நிறுத்திக் கொண்டு அதன்பின் அலையும் மக்களுக்கு முன், இந்த பதிவு முக்கியமானதாகிறது. சமீபத்தில் ஒருநாள் நண்பர்களோடு ஒரு டாஸ்மாகில் இருந்துவிட்டு, உணவு உண்டபோது, என்னுடைய கருணாநிதிக்கான கடிதம் பற்றிய சிறுவிவாதம் வந்தது. அதில் நண்பர் சொன்ன முக்கியமான கருத்து, கருணாநிதிக்காவது ஸ்டாலின் 20 வருடங்கள் கட்சியில் இருந்து அதன்மூலம் அவரை முன்னிறுத்தல் ஒரு பிள்ளைப்பாச வெளிப்பாட இருக்கிறது. ஆனால் தன் மகனை ஒரு இலக்கிய பத்திரிக்கையின் ஆசிரியராக கொண்டு வந்த சு.ரா கருணாநிதியினை விட மிக மோசமான வம்சாவளி மிராசுதார் நிலையினை கொண்டிருக்கிறார். ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் இதைவிட மிகமோசமான ஒரு நிலை தமிழ் இலக்கிய பரப்பில் நடக்காது என்று தோன்றுகிறது. இதைத் தாண்டி, உலகமயமானால் நாமெல்லாம் உருப்பட்டு விடலாம் என்றும், விவசாயிகள் பணப்பயிர்களை உற்பத்தி செய்தால் அவர்கள் எல்லாம் நன்றாகிவிடுவார்கள் என்று பல தலையில் அடித்து, சாமியாடி பிரச்சாரம் செய்துக் கொண்டிருக்கும்போது நவோம் சோம்ஸ்கியின் இந்த கட்டுரை முக்கியமானதாகிறது. கட்டுரையினை படித்துப் பார்த்தாலோயொழிய அதன் வீரியமும், முக்கியத்துவமும் புரியாது.

கொறிக்க

சென்னையில் இருக்கும் 'குடி'யிடங்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். வெர்ஜின் மேரி குடிப்பவனுக்கு இது வேண்டாதவேலை என்று நீங்கள் நினைக்கலாம், ஆனாலும், இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பதிவாகவும், முன்னூறு, நானூறு ஆண்டுகளுக்கு பிறகு வருபவர்களுக்கு ஒரு ஆய்வு குறியீடாகவும் இருக்கும் என்கிற நம்பிக்கை இருப்பதால், சென்னையில் என்னோடு குடித்தவர்கள், குடிக்காதவர்கள் என பலரும் விஷயதானம் பண்ணீர்களேயானால் எழுதுகிறேன். மற்றபடி, எல்லோரும் முந்தாநாள் ராயர் மெஸ்ஸில் போண்டா சாப்பிட்டேன், இதாலோ கால்வினோ இந்தியாவிற்கு வந்தபோது இட்லி சாப்பிட்ட இடம் இதுதான் என்று இலக்கிய சேவை / தோசை / உப்புமா படைக்குமாறுக் கேட்டுக் கொள்கிறேன்.

tag: , , , , ,

Labels: , , , , , ,


Jun 4, 2007

முகமது பின் துக்ளக் - வெர்ஷன் 2.0

அன்புள்ள திரு. கருணாநிதிக்கு,

வணக்கம். என்னைப் போன்றவர்களை நீங்கள் மறந்திருக்கக்கூடும். என் பெயர் ரேஷன் அட்டையில் குடும்ப தலைவன் என்கிற முறையிலும், திமுக அரசு வரவேண்டும் என்கிற ஆதங்கத்தோடு உங்கள் தலைமைக்கு ஒட்டுப் போட்டவன் என்கிற முறையிலும் சில விஷயங்களை உங்களுக்கு சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். என்னைப் போன்றவர்களுக்கான ஊடகங்கள் அனைத்தும் முற்றுப்பெற்றமையால் [ஒன்று உங்களுக்கு ஜால்ரா அடிக்கின்றன அல்லது வாய் மூடி இருக்கின்றன] இங்கே எழுத வேண்டிய கட்டாயாமாகிறது.

நீங்கள் வெற்றி பெற்ற உடனேயே உங்களுக்கு ஒரு மடல் எழுதி அதை பதியாமல் வைத்திருந்தேன். அதில் முக்கியமாய் எழுதியது உங்கள் பேரன்களை கொஞ்சம் கவனமாய் பார்த்துக் கொள்ளுங்கள் என்று. ஆனால், நீங்களோ, உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் பேரன்களையே ஒரங்கட்டி, உங்கள் வாய்மையால் ஊர் வாயினை அடைக்க முயற்சித்து, கொண்டிருக்கிறீர்கள். பாவம், உங்களுக்கு இன்னமும் பழைய நிலை, முரசொலியில் உங்களுக்கு பிடிக்காதவர்களை ஒரங்கட்டி, கட்டம் கட்டினால், உலகத்திற்க்கே பிடிக்காமல் போனது அந்தக் காலம். காலம் மாறிவிட்டது ஐயா.

காவிரி விஷயத்தில் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம், நடுவண் அரசினை நிர்பந்திக்க முடியாது என்று காரணம் கூறிவிட்டு, உங்களுக்கு மாற்றாக ஒரு மேலாண்மை மையம் உருவாகிடப்போகிறது என்கிற பயத்தில் ஒரே நாளில் இந்தியாவில் மேன்மையான அமைச்சர்களுள் ஒருவராக விளங்கிய உங்கள் பேரனை நீக்கச் சொல்லி வற்புறுத்தி, இப்போது உங்கள் மகளை எம்.பியாக்கி இருக்கிறீர்கள். தயாநிதி மாறனை அமைச்சராக்கும்போது நீங்கள் சொன்னதாக சொன்ன வாக்கியம் இன்னமும் நினைவில் இருக்கிறது. அவருக்கு நன்றாக ஹிந்தி பேச தெரியும், அதனால், அவர் நல்ல தொடர்பினை மாநில-மத்திய அரசினிடையில் ஏற்படுத்துவார் என்று. டி.ஆர். பாலு போன்ற மூத்த அமைச்சர்கள் இருக்கும்போது, எல்லா தகவல்களும், தயாநிதி வழியாக வரட்டும் என்று சொன்னீர்கள். இன்றைக்கு தயாநிதிக்கு ஹிந்தி செலக்டிவ் அம்னீஷியாவில் மறந்துப் போய் விட்டதா ? உங்களுக்காக தேவைப்பட்ட போது, தயாநிதி திமுகவின் முகமூடி, இப்போது அதிகாரத்தினை கையிலெடுத்துக் கொண்டு ஆட்டமாடும் அகம்பாவம் கொண்டவர். கனநேரத்தில் காற்றோடு போய்விட்டது உங்களுடைய தாத்தா-பேரன் உறவுகள், உங்கள் குடும்பத்தினர் முன்பு. சன் டிவி செய்தி பிரிவில் இருந்த ஒரு நண்பர், உங்களைப் பற்றிய ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், உங்களை ஜெயலலிதா ஆட்சியில் சிறையிலடைத்தப் போது, சன் டிவி பட்ட கஷ்டங்களையும், அதையும் தாண்டி மன உறுதியோடு கலாநிதி மாறன் உங்களுக்காகவும், ஒட்டு மொத்த திமுகவிற்குமாய் துணிந்து செயல் பட்டதையும் விரிவாக விளக்கினார். உங்களுக்கு தெரிந்திருக்கக்கூடும், வெறும் மேரி பிஸ்கெட்டும் தண்ணீரோடும், உங்களுக்காக, தமிழகத்தையே உங்கள் மீது திரும்ப வைத்தவர்கள் அவர்கள். போகட்டும் விடுங்கள். கனிமொழி நன்றாக பேசுவார் என்கிறீர்கள். உங்கள் கட்சியில் வெற்றிகொண்டான் என்றொரு பேச்சாளன் முப்பது வருடங்களாக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று சகட்டுமேனிக்கு பேசியவர் இருக்கிறார். ஓவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போதும், வெற்றிகொண்டான் வெளியில் இருந்ததை விட ஜெயிலில் இருந்தது அதிகம். அவருக்கென்ன செய்யப் போகிறீர்கள் - பேசுவது மட்டுமே எம்.பியாவதற்கான தகுதியென்றால் ? விடுங்கள். அது உங்கள் குடும்ப பிரச்சனை.

சில மாதங்களுக்கு முன்பு வண்டலூர் தாண்டி துணை நகரம் அமைக்கப்படும் என்றொரு அறிவிப்பினை வெளியிட்டீர்கள் ? வெளியிட்ட உடனேயே உங்கள் கூட்டணியில் இருக்கக்கூடிய பா.ம.க பிரச்சனை செய்ய, இரண்டாவது நாளே அதை கை கழுவி விட்டீர்கள். ஒரு அரசு எடுக்கக் கூடிய முடிவு என்பது, பல்வேறு காரணங்களைப் பார்த்து, வகைப்படுத்தி, பிறகே ஒரு உத்தரவினையோ, முடிவினையோ எடுக்க முடியும். எடுக்க வேண்டும். எடுத்தேன், கவிழ்தேன் என்று ஆள்வதற்கு பெயர் அரசாட்சியல்ல. மன்னராட்சி. ஆனால், நீங்களோ, உங்களின் கூட்டணி கட்சியில் குரலுக்காக சென்னை போன்ற ஒரு மாநகரத்தின் மிக முக்கியமான ஒரு தேவையினை சர்வசாதாரணமாக ஒரங்கட்டிவிட்டீர்கள். இந்த மாநகரத்தில் பிறந்ததிலிருந்து வசித்துவரும் என்னைப் போன்றவர்களுக்கு, அது ஒரு பேரிடி. சரி என்னைப் போன்ற மடையர்கள் 6 கோடி மக்கள் தொகையில் கொஞ்ச பேர் தான், இதை விடுங்கள்.

6 மாதங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் போகும் எல்லோரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற ஒரு உத்தரவினை நீதிமன்றம் வழியாக சொன்னீர்கள். 6 மாதம் போய், அரக்க பரக்க, மே 29/30/31 தேதிகளில் தங்கள் குடும்பத்தினையே இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லும் நடுத்தர வர்க்கத்தினர்கள் குடும்பத்திற்கு மூன்று, நான்கு ஹெல்மெட்கள் வாங்கினார்கள். பண வாசனை தெரிந்த முதலாளிகள், ரூ.300 ஹெல்மெட்டினை ரூ.500-கும் ரூ-800க்கும் விற்றார்கள்.ஜூன் 1 அன்றைக்கு சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஜூன் 2-ஆம் தேதி நீங்கள் ஒரு அறிக்கை வெளியிடுகிறீர்கள், ஹெல்மெட் அணிவதினை நிர்பந்திக்கக்கூடாது என்று. என்ன நடக்கிறது இங்கே. நேர்மையாய் சட்டத்தினை மதித்து ஹெல்மெட் வாங்கிய அனைவரையும் முட்டாள்ளாக்கி விட்டீர்கள். ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தினனுக்கு ரூ.1500 - 2000 என்பது பெரிய தொகை, அவனுடைய சம்பளத்தில் அது 20% மேல். இப்போது ஹெல்மெட் இல்லாமலும் வண்டியோட்டலாம் என்று சாதாரணமாய் சொல்கிறீர்கள். இது முழு நம்பிக்கை துரோகம். முதலாளிகள் வாடிக்கையாளர்களை பல்வேறு வார்த்தைகள் பேசி ஏமாற்றுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு அரசாங்கமே, குடிமக்களை ஏமாற்றுவதை இப்பொதுதான் பார்க்கிறோம். எவ்வளவு பெரிய இழப்பு இது. இரட்டை நாக்கு என்று சமயம் கிடைக்கும் போதெல்லாம், எதிர் கட்சிகளையும், எதிரி கட்சிகளையும் முரசொலியில் கட்டம் கட்டிய தாங்கள் செய்வது என்ன ? நேர்மையாய் இருப்பதின் பலன், ஏமாளியாய், இளிச்சவாயனாய் இருப்பதா? ஹெல்மெட் என்ன தங்கநகையா, இல்லாமல் போனால், அடகு வைத்து குடும்பம் நடத்துவதற்கு. உங்களை நம்பி ஒட்டுப்போட்ட மக்களுக்கு உங்களாலான பலன் ரூ.2000 நஷ்டம். சரி இதையும் விட்டு விடுமோம்.

மூன்று அப்பாவி உயிர்கள் உங்கள் மகனின் ஆதரவாளர்களால், கொல்லப்பட்டதற்கு, நான் என்ன ரெளடியின் அப்பனா என்று சீறுகிறீர்கள். சிபிஐக்கு உத்தரவிட்டேன் என்று கூறி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறீர்கள். உங்களது பவளவிழாவிற்கு ராஜ் தொலைக்காட்சியினை வரவழைத்து, அவர்களுக்கு நேரடியான தொலைதொடர்பு வசதிகள் இல்லாத காரணத்தினால், தூர்தர்ஷனின் வேனினை வாங்கி வைத்துக் கொண்டு வர்ணஜாலம் காட்டிய உங்களுக்கு, சிபிஜக்கு உத்தரவிடுவதா பெரிய விஷயம்.

சன் தொலைக்காட்சி இல்லையென்றானதும், திமுக அரசும், ராஜ் தொலைக்காட்சியும் சேர்ந்து 'கலைஞர் டிவி' நடத்தும் என்று அறிக்கை வெளியிடுகிறீர்கள். நீங்கள் தேர்தல் கமிஷனில் கொடுத்த கட்சியின் நிதி அறிக்கையினையும், இப்போது ஒரு தனியார் தொலைக்காட்சிக்காக முதலீடு செய்யப்போகும் தொகையினையும் உங்களால் ஈடு கட்ட முடியுமா ? விவரமறிந்த ஊடகங்களில் இருக்கும் என் நண்பர்கள் 50 -100 கோடி ரூபாய்கள் வேண்டும் என்று சொல்கிறார்கள். இது திமுக அரசியல் கட்சியின் டிவியா ? அப்படியென்றால், 50 கோடி ரூபாய்கள் திமுகழகத்திற்கு எங்கிருந்து வந்தது ? இல்லை இது உங்கள் குடும்ப நபர்களின் முதலீட்டில் வெளியிடப்படும் தொலைக்காட்சியா ? அப்படியேயென்றாலும், 100 கோடி ரூபாய்களுக்கு சொந்தமானவர்கள் யார் யார் ? அப்பாவி தமிழனுக்கு 'சிவாஜி' உரிமையினை 4 கோடி ரூபாய்க்கு வாங்கிவிட்டீர்கள் என்று சொல்கிறீர்கள். 4 கோடி ரூபாய்கள் என்பது மென்பொருள் புத்தியில் ஊறிப் போன என்னைப் போன்ற மரமண்டையர்களுக்கு ஒரு மில்லியன் டாலர்கள். ஒரு படமே ஒரு மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கினால், அத்தொலைக்காட்சியினை நிர்வகிக்க எங்கிருந்து வந்தது பணம் ? இதில் கல்லா கட்டியவர்கள் ராஜ் உரிமையாளர்கள். நல்லது அதுவும் போகட்டும்.

விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்ட மீனவர்கள் என்கிற ஒற்றை சொல்லாடலிலும், அவர்கள் திரும்பி வந்த பின் ஒரு ஊடகத்திற்கும் அவர்களின் பேட்டியினை தராமல், அவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கும் என்று ஒரம்கட்டி நடுவண் காங்கிரஸ் அரசிற்கு உங்களின் விசுவாசத்தினை நிரூபித்து விட்டீர்கள். மனதினை தொட்டு சொல்லுங்கள், இன்றளவும், என்றைக்காவது புலிகள் உங்களையோ, இல்லை தமிழகத்தில் ஆளுபவர்களையோ பகைத்துக் கொண்டார்களா ? தமிழீழம் கிடைத்தால் சந்தோசமடைவேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், தொடர்ச்சியாக புலிகளை ஒரங்கட்டி வைத்திருக்கிறீர்கள். உலகில் இலங்கை பிரச்சனையினை கவனித்து வரும் குழந்தைக்குக் கூட தெரியும், புலிகள் இல்லாத ஈழம் சாத்தியமற்றது என்று. உங்களின் அரசியல் லாபத்திற்காக, ஏன் தமிழ், தமிழன் என்று ஜல்லியடிக்கிறீர்கள். நாளை ஈழம் மலர்ந்தவுடன் நீங்கள் ராஜ் டிவி நிறுவனர்களுக்கு சொன்னது போல, நாங்கள் வெகு காலமாக களவியல் காதலில் முழ்கி இருந்தோம் என்று உங்களை முன்னிறுத்திக் கொள்வீர்களா ?

திடீரென அதிமுக கட்டிடம் இடிக்கப்படும் என்று உங்கள் மகன் மேற்பார்வையில் இருக்கும் CMDAவிலிருந்து ஒரு அரசாணை வருகிறது. இதற்கு ஜெயலலிதா அம்மையார் சபதம் போட்டது, அறிக்கை விட்டது எல்லாம் வேறு விவாதம். 1972-இல் கட்டப்பட்டு, கிட்டத்திட்ட 35 வருடங்களாக இருக்கும் ஒரு கட்சியின் அலுவலகம் எப்படி திடீரென விதிகளை மீறியதாகும். அப்படியே விதிகளை மீறி கட்டப்பட்டது என்றே வைத்துக் கொள்வோம், கொஞ்சம், என்னுடைய அலுவலகத்திற்கு பின்னாடி இருக்கும் வடக்கு உஸ்மான் சாலைக்கு வாருங்கள். போத்தீஸ், நல்லீஸ், சரவணா, ஜெயசந்திரன், ஜி.ஆர்.டி, ஆரெம்கேவி என வரிசையாய் கட்டிடங்கள். வண்டி நிறுத்த கொஞ்சமும் இடமில்லாத வகையில் தொடர்ச்சியாய் நெரிசலை உண்டாக்கக் கூடிய கட்டிடங்கள். இவையெல்லாம் விதிமுறைகளை மீறவில்லையா ? ஏன் வருடக்கணக்கில் எதுவும் மாறவில்லை. கேட்டால், நீங்கள் புள்ளிவிவரப்புலியாய் மாறி 'சென்ற ஆட்சியிலே...... கழக ஆட்சியிலே' என வாய்ப்பந்தல் போடுவீர்கள். நீங்கள் சொல்லும் புள்ளிவிவரங்களில் பெரும்பாலானவை மக்களின் பார்வைக்கு இல்லை. ஆகவே நீங்கள் தப்பித்து விடுவீர்கள். இதைத் தாண்டி, கழகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி என்று வசைப்பாடிய நீங்கள், எப்படி இப்படியொரு விஷயத்தினை கையிலெடுத்து பேச முடியும்.

ஒரு பத்திரிக்கைப் பேட்டியில் "எம்ஜிஆரை நம்பினேன், கவுத்தான். வைகோவை நம்பினேன் கவுத்தான். சரி உள்ளுக்குள்ளேயே இருக்கட்டுமேன்னு பேரனுக்கு குடுத்தேன், அதுவும் சரியில்லை, நான் யாரைதான் கட்சியை பாதுக்காக்க நம்பறது, அதுதான் குடும்பத்திலிருந்தே பார்க்கறேன்" என்கிற ரீதியில் நீங்கள் சொன்னதாய் படித்தேன். இதை நம்பினேனா இல்லையா என்பது ஒரு புறமிருக்க, இவ்வாறு பேசக் கூடிய நபர்தான் நீங்கள் என்பதும் [நினைவிருக்கிறதா, நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக! - எமர்ஜென்சிக்கு பிறகு] தெரிந்ததே.இதில் புரியாதது, எப்படி ஒரு ஜனநாயக கட்சியில் கட்சியினை நிர்வகிக்கும் பொறுப்பும், பாதுகாவலும், உங்கள் குடும்பத்திற்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கிறீர்கள். டெல்லியில் அழகிரியினை ப் பற்றி பேச்சு வருகையில், "அவன்தான் கொன்னான்னு நீ பாத்தியா ? " என்று சீறி இருக்கிறீர்கள். நீங்கள் பார்த்தீர்களா, மூன்று மாணவிகளை பக்கத்திலிருந்து எரித்தததை ? மதுரை முழுக்க தெரியும் அழகிரி அவர்களது ஆளுமை. அந்த மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டதன் காரணமும், ஒரு அலுவலகம் சீரழிக்கப்பட்ட காரணமும். பாசம் கண்களை மறைக்கிறதா ஐயா ? இந்த வார குமுதம் பேட்டியில் வைரமுத்துவின் கேள்வி பதிலில் நீங்கள் "தசரதனுக்கு கீரிடம் வந்த போது தானே, கேடு வந்தது" என்று சொன்னதாக மனமுருகியிருக்கிறார் கவிஞர். பிரச்சனை கீரிடத்தில் மட்டுமல்ல, கட்டிக் கொண்டவர்களின் தொணதொணப்பும் தான். அவுட்லுக் எக்ஸ்பிரஸில் உங்களுடைய குடும்ப கிளை படம் போட்டிருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னார். உண்மையில் பிரச்சனை அங்கேயிருந்து தான் தொடங்கியிருக்கிறது. கொஞ்சம் திமுகவின் வரலாற்றினை திரும்பி பாருங்கள். பெரியார் மணம் செய்து கொண்டது தெரிந்து, அண்ணா முதற்கொண்ட ஐம்பெரும்குழுவினர் ஒரு இயக்கும் ஒரு குடும்பத்தின் பிண்ணணியில் போய்விடக் கூடாது என்கிற தார்மீக அடிப்படையில் வெளியில் வந்து தொடங்கியது தான் திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால் இன்றோ உங்கள் குடும்பத்தினருக்காகவும், அவர்களின் செட்டில்மென்டிற்காகவும் திமுகவினை திருக்குவளை கருணாநிதி குடும்பத்தினர் முன்னேற்றக் கழகமாக மாற்ற துடிப்பது 20 வருடங்களாக, திராவிட பாரம்பரியத்தோடும், உங்களின் தலைமையோடும் இருந்து வந்த என்னைப் போன்றவர்களுக்கு வருத்தத்தையும், வெறுமையையும், வெறுப்பினையும் உண்டாக்கியிருக்கிறது.

84 வயதில் இன்னமும் உங்களை கர்வத்தோடும், பிரம்ம்பிப்பொடும் பார்க்கிறேன். ஆனால், செயல்கள் உயராத போது, சொற்பேச்சு உயர்ந்து என்ன பயன். என்னை போன்றவர்கள் உங்களின் அரசியல் அனுபவத்தில் 50 விழுக்காடுக் கூட வாழாதவர்கள். ஆனாலும், செயல்களைக் கொண்டே ஒருவரின் நிலையினை எடையிட இயலும் என்கிற நிலையில் உங்களின் செயல்களுக்கும் வயதிற்கும் சம்பந்தமில்லை. முகமது பின் துக்ளக்கினையொட்டிய வகையில் உங்கள் முடிவுகளும், நிலைப்பாடுகளும் மாறிக் கொண்டே இருக்கின்றன.உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை. குறளோவியம் கண்டவர் நீங்கள், அதிலிருந்து ஒரு குறள்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பதி ழுக்கு.

இன்னமும் திராவிட இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவன்.

tag: , , , , , ,

Labels: , , , , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]