Jul 6, 2007

Remix: எலக்கியசம் (அ) என் பெயர் கோவாலு

இந்த பதிவு இதற்கு முன் பிரகாஷ் கேட்டுக் கொண்டதற்காக, கில்லிக்காக டிசம்பர் மாதம் எழுதியது.

முதலில் டிஸ்கெள்யமர்: இந்த கட்டுரையில் வரும் மனிதர்கள், விஷயங்கள் எல்லாமே கற்பனையே. யாரையும் தனிப்பட்டு குறிப்பிடுவன அல்ல


தேசாங்கி தெரியுமா உங்களுக்கு ? தெரியாதா. அப்போது நீங்கள் தமிழில் வரும் எந்த பத்திரிக்கையும் படிக்கவில்லை என்று தெரிகிறது. காலச்சுவடிலிருந்து குமுதம் வரை தமிழில் வரும் எல்லா இதழ்களிலும் தேசாங்கியின் கதை, கட்டுரை, கவிதைகள் இடம்பெறும். தமிழின் முண்ணணி எழுத்தாளர்களில் ஒருவர். சூரிச்சில் நடந்த 37வது உலக தமிழ் மாநாட்டில் தமிழகத்தில் இருக்கும் 10 தமிழ் ஐகான்களில் விஷாலுக்கு பிறகு தேசாங்கிக்குதான் இரண்டாம் இடம்.

தேசாங்கியின் கட்டுரைகளில் பொறி பறக்கும். கவிதைகளில் காதலும், காமமும் மயக்கும். கதைகளில் நையாண்டி தெறிக்கும். எல்லாரையும் படிக்க சொல்லும் மனிதநேயம் மிதக்கும். தமிழ் சினிமாவில் இளங்கோவிற்கு பிறகு நறுக்கென வசனங்கள் எழுதியது தேசாங்கி மட்டுமே. தேசாங்கியின் “பிஞ்சமட்ட” நாவல் முன்னொரு காலத்தில் வைரமுத்து என்கிற கவிஞன் எழுதி, பில்ட்-அப் கொடுத்து கவியரசு வாங்கியதை விட, செம பில்ட்-அப்பான கவி-கதை-கட்டுரை. புலிட்சர் விருதினை தவிர வேறெந்த விருதையும் வாங்க மாட்டேன் [யாரும் தரமாட்டார்கள் ] என்கிற வைராக்கியதோடு இருக்கும் தன்மான தமிழ்சிங்கம் தேசாங்கி. தமிழ்நாட்டில் எங்கே கூட்டம் நடந்தாலும், தேசாங்கியின் பாதச்சுவடுகள் இன்றி எதுவும் நடக்காது. தமிழகத்தின் அரசியல்வாதிகள், சினிமா, இலக்கியம், நவீனம், வகையறா, வகையறா எல்லாவற்றிலும் தேசாங்கி இருக்கிறார். கொஞ்ச நாட்களுக்கு முன் கலைஞர் டிவியின் சமையல் சமையல் நிகழ்ச்சியில் கூட தேசாங்கியின் வலைப்பதிவிலிருந்து எடுக்கப்பட்ட சமையல் குறிப்புகள் நேயர்களுக்கு ஸ்பெஷல் போனாஸாக அறிவிக்கப்பட்டன. தேசாங்கியினை பற்றிய பாடங்கள் வருங்கால தமிழ் வரலாற்றில் இருக்கவேண்டும் என்று கலாச்சார துறை அமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார். இவ்வளவு சொன்னாலும், இந்த கட்டுரை தேசாங்கியினை பற்றியது அல்ல.

கோவாலு.
நாயே.
டவுசரு.
குமாங்கி.
தவுடு பார்ட்டி.
ஜூமாகா.
பண்டலு.
பொறை மச்சான்.
தேங்காநாய்.
சிலுக்கான்.
விலாயி.

மேலே சொன்னவை ஒரு அட்டெண்டஸ் ரிஜிஸ்டர் எழுதுமளவுக்கு இருந்ததிலிருந்து பொறுக்கியெடுத்த கோவாலுவின் பெயர்கள். உங்களுக்கு இஷ்டப்பட்ட பெயரில் நீங்கள் கோவாலுவினை அழைக்கலாம், நான் கோவாலு என்று தான் கூப்பிடப்போகிறேன்.

கோவாலு ஒரு “விலாயி”. விலாயிக்கு விவரம் தெரியவேண்டுமென்றால் நீங்கள் கொஞ்சம் எண்ணூர் தாண்டி, புது மணலி நியு டவுன் தொட்டு, பொன்னேரி வரை கடலோரம் போனீர்களேயானால் கண்டுபிடித்துவிடலாம். வானவில்லில் எப்படி நிறங்கள் இருக்குமோ, அது எவ்வளவு தற்காலிகமோ அந்த மாதிரி எதிலும் முழுமையாக இல்லாமல் எண்ணங்களிலும், செயல்களிலும் ஹை ஜம்ப் செய்பவர்களின் பெயர் தான் விலாயி. கொஞ்சம் யோசித்து பார்த்தால் கோவாலுவின் எல்லா பெயர்களுக்கும் இதே அர்த்தம் தான் வரும்.

கோவாலுவிற்கு தான் உலகப்புகழ் பெற்று எல்லோரும் தன்னை புகழ வேண்டும் என்பதில் அளவில்லாத ஆசை.

மாலையானால் ஓல்டு மாங்கும், ஒலகம் மங்கும்

ஒரு நாள் பேசாமல் நக்சலைட்டில் சேர்ந்து தானொரு புரட்சியாளன் ஆகிவிடலாம் என்று கோவாலு திட்டமிட்டான். தனக்கு தானே ‘புரட்சியாளன் கோவாலு’ என்று சொல்லி பார்த்துக் கொண்டான். கொஞ்ச நாள் புரட்சி வரும், வந்தே தீரும் என்று யேசு வந்து விடுவார், யேசு ரட்சிக்க போகிறார் லெவலில் தனக்கு தானே பிணாத்திக் கொண்டான். அப்புறம் தினந்தந்தி பேப்பரில் என்கவுண்டரில் புரட்சியாளர்களை போலிஸும் ராணுவமும் போட்டு தள்ளுவதை பார்த்ததிலிருந்து பயம் வந்துவிட்டது. ஜிந்தாபாத் சொல்லாம் என்று நினைத்த வாய், பேசாமல், மாமி மெஸ்ஸில் பிஸிபேளாபாத் சாப்பிட்டு, இரவு குவார்ட்டர் அடித்து கமலா தியேட்டரில் இரண்டாம் ஆட்டம் தேய்ந்த ரீல் “நாடோடி மன்னன்” புத்தம் புதிய காப்பி பார்க்கும் போது, புரட்சியாளன் ஆவதைவிட, புரட்சி தலைவர் வழி நடக்கலாம் என்று கோவாலு முடிவு செய்தான் தானொரு நடிகனாக போகிறேன் என்று. உடனடியாக, எம்.ஜி.ஆர் நடித்த எல்லா படத்தினையும் பார்க்க ஆரம்பித்தான். எம்.ஜி.ஆர் மாதிரியே நடக்க ஆரம்பித்தான். அங்கே தான் ஆரம்பித்தது பிரச்சனை. எம்.ஜி.ஆரோ, குடிப்பதில்லை. அம்மா, அக்கா, பிச்சைக்காரி, கிழவி என்று வயது வித்தியாசம் பார்க்காமல் கட்டி அணைக்கிறார், கண்ணீர் விடுகிறார். புகைப்பதில்லை. என்ன செய்யலாம், சரி இந்த பிரச்சனையெல்லாம் இல்லாத சிம்பு படம் பார்த்து ப்ளேபாய் ஹீரோவாக வேண்டியது தான் என்று நினைத்து மன்மதன் பார்த்தான்.

அங்கேயும் வந்தது ஆப்பு. பிட்டு படம் பார்க்கலாம் என்று ப்ரெளசிங் சென்டர் கூட்டிவிட்டு போன சொந்தகார பையன் சும்மா இல்லாமல் ரோசாவசந்த் பதிவினை காண்பிக்க, அங்கே சிம்புவின் குறிக்கே ஒரு கூட்டம் குறியாக இருப்பது பார்த்து பகிரென போனது கோவாலுவிற்கு. குவார்ட்டர் கடையினை பார்த்தாலே “ங்கொமள” என நல்ல வார்த்தையில்லாமல் கோவாலுவினால் பேச முடியாது. பின்னர் கிடைக்கக் கூடிய ஒசி காஜி ஒல்டு மங்கும் கிடைக்காமல் போய்விடும். ஒல்டு மாங்க் போனால், பீடி பிடிக்க முடியாது. பீடி கூட பிடிக்காதவன் எப்படி ஹீரோவாக முடியும். அப்படியே ஹீரோவானலும், ஆண்குறி தப்பாது. குறி இழந்த நடிகனானபின் என்னத்த அனுபவிக்க முடியும். ம்ஹூம், நடிகனாவது சரிப்பட்டு வராது, ஆனாலும் புகழ் பெற வேண்டும் என்று கொல்லைக்கு போகும் போது எல்லா இடத்திலும் உட்கார்ந்த ஈ, வாயினுள் உட்காருவது கூட கவனிக்காமல் யோசித்த போது தான் பஜ்ஜிக்கடை பீதாம்பரம் நினைவுக்கு வந்தார்.

ஜிங்குச்சா, ஜிங்குச்சா கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு!

பீதாம்பரம், சுருக்கமாக பீதா கொஞ்சம் படித்தவர். எட்டாம்பு படித்தாலும், குமுதம் ஆவி ரேஞ்சில் தானும் கைக்காசினை போட்டு 25 பிரதியடித்து, தானே பஜ்ஜி மடிக்க உதவும் காகிதமாக உபயோகித்துக் கொள்ள ஒரு சிற்றிதழினை கொண்டு வந்திருந்தார். தினந்தந்தியினை விட கொஞ்சம் காத்திரமான தாளானதால் எண்ணெய் நிறைய எடுக்கும். கோவாலு பீதாம்பரத்தினை போய் பார்த்தான். அவர் அவனை பெரியார் படிக்க சொன்னார். சொன்னவர் சும்மா இல்லாமல், டவுனில் வாங்கின இரண்டு புத்தகங்களையும் கொடுத்தார். அரைகுறையாய் பரீட்சைக்கு படிப்பது போல படித்த அன்றே கோவாலு கருப்பு சட்டை போட்டான். தானே பெரியாரிஸ்ட்யான தானை தலைவன், கடவுள் மறுப்பு பற்றி பேச ஆரம்பித்தான். கடவுளே இல்லை இல்லவே இல்லை, இதெல்லாம் வெறும் கல், கட்டிடம் கட்டக் கூட உதவாது என்று கத்த ஆரம்பித்தான். மடப்பள்ளியில் காட்டப்படும் பிரசாதத்தினை மோர்ந்து பார்த்து வேறு எதுவும் வேலையில்லாமல் தேமேயென்று உட்கார்ந்திருந்த கடவுள் இவன் கத்துவதை கேட்டு கேட்டு தலைவலி வந்து அனாசினுக்காக காத்திருந்தார். அதுவும் மடப்பள்ளியில் தராமல் போனதால் கடுப்பானார் கடவுள். இதற்கிடையில், கோவாலுவின் அலட்டல்கள் வேறு. கடுப்பான கடவுள் அவருடைய வாய்ப்புக்காக காத்திருந்தார். கொஞ்ச நாள் போனது, கடவுளுக்கு உதவி செய்தான் சாத்தான்.

கருப்பு சட்டை போட்டதிலிருந்து கோவாலுவினால் எந்த கோயிலுக்கும் போக முடியவில்லை. வெட்டியாய் நாலிருந்து இரவு எட்டு மணி வரை கோவாலுவின் முக்கிய வேலையே, கோவிலுக்கு வரும் பெண்களை சைட் அடிப்பதிலும், கோயிலில் கொடுக்கும் பிரசாதத்தில் ஒரு ஆஃப் டின்னர் முடிப்பதிலும் தானிருந்தது. பெரியாரிஸ்டானதிலிருந்து அதற்கும் வந்தது வெட்டு. இதற்கிடையில் சும்மா போகாமல் இருந்த கோவாலுவின் நண்பன், மல்லிகா அவனை ஒருவாரமாய் எல்லை காத்த காளியம்மன் கோவிலில் தேடுவதாக சொல்லிவிட்டு இல்லாத சங்கினை ஒருசேர கோவாலுவின் காதில் ஊதிவிட்டு போனான். கேட்டவுடனேயே 'அடி ஆத்தாடி' என இளையராஜா கோவாலுவிற்காகவே எழுதியாதாக தோன்றியது. ஹீரோவாய்[?!!!] சுற்றிய போது கூட கிடைக்காத பெண்துணை, இப்போது கிடைக்கிறதே என்று புளகாகிதமடைந்தான். உடனே, கருப்பு சட்டை கலர் மாறியது. பெரியார் தனக்கு பிடிக்கும், ஆனாலும் நம்மை படைத்தவன் ஒருவன் என்று பிரச்சாரம் செய்யாத குறையாய், விழுந்தடித்துக் கொண்டு கோயிலுக்கு போன பிறகு தான் தெரிந்தது. ஒரு வாரமாய் மல்லிகா அவனை தேடியதற்கு காரணம். அதுநாள் வரை அவன் இருந்தபோது எல்லா செருப்புகளும் சரியாக இருந்தன. கோவிலுக்கு போகாத ஒரு வார இடைவெளியில் எவனோ ஒரு கில்லாடி சில பல ஜோடிகளை லவட்டிக் கொண்டு எஸ்ஸானதுதான். இது கேட்டவுடன் கோவாலுவிற்கு இளையராஜா உச்சஸ்தாயில் வயலின்களில் கதற, இறைவனிடம் போய் சேர்ந்து அவன் பாதத்தில் விழ்ந்து, சாமியாராகி விடலாம் என்று தோன்றியது. அது மட்டுமில்லாமல், இப்போது தான் ஏகப்பட்ட கார்ப்பரேட் சாமியார்கள் பல பெரும்புள்ளிகளுடன் சுற்றுகின்றார்களே என யோசித்து, புரட்சியாளனாகவோ, நடிகனாகவோ, பெரியாரிஸ்டாகவோ சாதிக்க முடியாதை, துறவியாகி சாதிக்கலாம் என்று எண்ணி காசிக்கு போனான். கடவுளுக்கு அப்போதும் கோவாலுவின் மேலிருந்த காழ்ப்புணர்ச்சிப் போகவில்லை. உடனடியாக காழ்ப்புணர்ச்சிப் போக கடவுள் என்ன கலைஞரா!

க்க்ஷ்யாம், பஷ்யாம், ஹிஜ்பிஷியாம்!1

காசிக்கு போனவுடன் கொஞ்சம் சாமியார்களின் பழக்கம் கிடைத்தது, பழக்கத்தினால் தாராளமாய் கஞ்சா கிடைத்தது. சும்மா இல்லாத மற்ற சாமியார்கள் சமஸ்கிருதத்தையும், கொஞ்சம் இங்கிலிஷையும் சொல்லிக் கொடுத்தார்கள். ஜிப்ஷியாம், பக்ஹியாம், ப்ராகிருதப்ருஷம் என வாயில் நுழைந்தாலும், மண்டையில் நுழையாத விஷயங்களையெல்லாம், பத்தாம் வகுப்பு பரிட்சையினை பத்து நாளில் படித்து முடிப்பது போல, கபாலென உள் வாங்கி வாந்தியெடுக்க ஆரம்பித்தான். காவியுடை, நீண்ட தாடி, மப்பு பார்வை, சிவப்பு கண்கள் என கோவாலு கொஞ்சமாய் மாற ஆரம்பித்திருந்தான். இந்தியாவில் கொஞ்சம் தாடியும், ஒரு மாதிரி பார்வையும், சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளரலாகவும் இருந்தீர்களேயானால், நீங்கள் சாமியாராக மதிக்கப்படுவீர்கள். கஞ்சா,ஹசிஷ், பாங்கு துணையோடு கோவாலு உளர ஆரம்பித்தான். சும்மா இல்லாமல், வருபவர்கள் போவர்கள் எல்லாம், போகிற போக்கில் கோவாலுவின் கால்களிலும் விழுந்து, கும்பிட்டு கேட்டார்கள். கேணைபய கோவாலு, கோபால்ஜி ஆனந்த்ஜியாக உலா வர ஆரம்பித்தான். அப்படியே இருந்திருந்தால் கோபால்ஜி ஸ்ரீலஸ்ரீலஸ்ரீ மஹானுபாவ கோபால்ஜியாக மாறி ப்ரைவெட் ஜெட்டுகளில் அம்பானி காசில் பறந்திருக்கலாம். காழ்ப்புணர்ச்சிப் போகாத, அனாசின் கூட வாங்க முடியாத கடவுள், இன்னமும் பழி தீர்ப்பதற்காக, காசியாற்றின் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு காரணத்துகாக காத்திருந்தார். கடவுளுக்கான வாய்ப்பு பெண்ணுருவில் வந்தது. துறவியானாலும், எப்போதும் ஒரு பாக்கெட் வில்ஸும், குட்டி பாக்கெட்டு டுயுரெக்ஸூம் எப்போதும் கோபால்ஜி சாமியின் இடுப்பில் தவறாமல் இருக்கும். பழக்கதோஷம். கோபாலுவின் பலவீனம் பெண்கள், அதிலும், காசியில் குளித்து எழுந்து சொட்ட சொட்ட நனைந்து மந்தாகினி ஸ்டையிலில் கரையேறும் பெண்கள். குளித்து எழும் பெண்களையே பாதி நேரம் பார்த்துக் கொண்டிருந்ததால், பக்த கோடிகள், கோவாலுவினை கேடியாக பார்க்க ஆரம்பித்தார்கள். இதுதாண்டி, ஹசிஷ் மப்பில் சும்மா போன ஒரு பெண்ணின் பின்புறத்தினை ஆசிர்வதிப்பதாக 'காட்டப்" போய் பொது மக்களும், சாமியார்களும் 'செம காட்டு' தட்டினார்கள். ஆக, சாமியாரவதும் புகழடைவதற்கு சரிப்பட்டு வராது என்கிற நினைப்போடு காசிக்கு போனவன், தாடியோடு பம்பாய்க்கு ஒடினான்.

சிவாஜி
வாயிலே
ஜிலேபி

பார்க்க ஒரு மாதிரியாக இருந்த கோவாலுவிற்கு இருந்த ஒரே துணை, ஊரிலிருந்து ஒடிவந்து உதவி இயக்குநராக இருப்பதாக சொல்லிக்கொண்டு அள்ளக்கையாக இருக்கும் ஜோசப் தான். ஏற்கனவே கொஞ்சம் ஹிந்தியும், சமஸ்கிருதமும் தெரிந்ததால், கோவாலு பொழுது போகாமல், ஒசி ரொட்டியும், சப்ஜியுமாக மராட்டி கற்க ஆரம்பித்தான். ஜோசபின் அறையில் தான் கோவாலு நவீன நாடகங்கள், கவிதைகள் என மீண்டும் உருப்படாமல் போவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் பார்க்க ஆரம்பித்தான். ஜோசபிற்கே அவன் அறையில் இதற்குமுன் இம்மாதிரியான மறை கழண்ட பார்ட்டிகள் அவன் அறையில் இருந்து விட்டுப் போனவை அவை. மராட்டி நாடகங்களை மொழி புரியாமல் பார்த்தாலும், அதற்கு வரும் கூட்டம் மீண்டும் கோவாலுவினை தூண்டி விட்டது. தாடி, நீண்ட கூந்தல், ஜீன்ஸ் பேண்ட், ஜிப்பா என ஞானியாக தோற்றமளித்த கோவாலுவிற்கு தனக்கு நவீன நாடகங்கள், கவிதைகள் எழுதக் கூடிய ஆற்றல் வந்து விட்டது என்று நினைத்துக் கொண்டான். தானொரு நவீன போராளியாக, உலக பிரசித்திப் பெற இந்த பாதை சரியாக இருக்குமென்று நினைத்துக் கொண்டு, தனக்கான பாணியாக தொழில்நுட்பத்தையும், காதலையும் எடுத்துக் கொண்டான். Vadapav lotion என்கிற மராத்தியாங்கில குழுவில் சேர்ந்தான். ஏற்கனவே ப்ரெளசிங் சென்டர் அனுபவம் இருந்ததால் தொழில்நுட்ப காதல் ஹைகூவினை “ஈ-கூ” என்று பெயரிட்டு எழுத ஆரம்பித்தான்.

மெயிலாய் நான் காத்திருக்க்
டயல்-அப்பில் தரவிறங்கும்
பெரும்கோப்பாய் நீ

இந்த கவிதை மராட்டி மற்றும் 37 மொழிகளில் மொழி பெயர்க்கப்படவில்லை என்றாலும் கோவாலுவிற்கு கொஞ்சம் அறிவு ஜீவி அந்தஸ்து கிடைக்க ஆரம்பித்தது. சும்மா இருக்காமல்,ஹை டெக் அறிவுஜீவியாக தன்னை நினைத்துக் கொண்டு எல்லாரையும் பற்றி கிண்டல் அடிக்க ஆரம்பித்தான். சாதாரணமாகவே மராட்டியர்கள் கொஞ்சம் சுரணையுள்ளவர்கள். இங்கிருந்து போய் சும்மா இல்லாமல், சத்ரபதி சிவாஜி பற்றி கொஞ்சம் உளறப் போக, அது ஒரு பெரும் பிரச்சனையாக போனது. சத்ரபதி சிவாஜி என்ன, ஏ.வி.எம் தயாரிப்பா, யார் வேண்டுமானாலும் குறை சொல்ல! வெள்ளைக்காரன் சிவாஜி பற்றி பேசினாலே, மராட்டியர்கள் அவனுக்கே பத்வா வைக்கும்போது, கோவாலு எம்மாத்திரம். வி.எச்.பி, சிவசேனா வழி ஆட்கள், சத்ரபதிக்கு நடந்த அவமானம், தங்கள் குடும்ப அவமானமாக பார்த்து, அதைப் போக்க, கோவாலுவினை ‘காவு குடுக்க’ முடிவு செய்தார்கள். தூக்கிக் கொண்டு போய் மிரட்டியவுடன் கோவாலுவிற்கு கையும், காலும் ஒடவில்லை. படித்த அரைகுறை மராத்தியில், பாயியோ அவுர் பைஹனோ என கையில் காலில் விழுந்து ஊரை விட்டு ஒடி விடுகிறேன் என கால் பிடித்து விண்ணப்பித்து, லோக்கல் சரக்கு வாங்கிக் குடுத்து, தாராவி தாண்டி, திருட்டு ரெயிலேறினான் சென்னைக்கு. இப்படியாக அறிவுஜீவி கோவாலு, ஆஃப் டவுசரோடும், தாராவியின் பிளாஸ்டிக் மனத்தோடும் தாதர் எக்ஸ்பிரஸில் கக்கூஸுக்கு பக்கத்தில் அமர்ந்து எப்படி வேறு வழியில் பிரபலமாவது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

தாடியும் மீசையும் கிளம்பும்போது ஒரு பெங்காலி கடையில் திருட்டு ரெயில் படுக்க உதவும் என்று திருடிக் கொண்டு வந்த தடிமனான ஆங்கில புத்தகங்களையும் பார்த்த சக திருட்டு பயணிகள் கோவாலுவினை ஏதோ அறிவுஜீவியாக நினைத்தார்கள். ப்ரி பெய்டில் வாங்கிய மொபலைலில் ஊரில் இருக்கும் எல்லோருக்கும் தான் சென்னை போவதாக சொல்லி, வாங்கிய கடனை திருப்பி அடைக்க போவதில்லை என்பதை சிம்பாலிக்காக உணர்த்தினான். ஆந்திரா பார்டர் தாண்டியதும், அவசரசத்திற்கு பாத்ரும் போய் வருவதற்குள், மொபலை யாரோ ஆட்டைய போட்டு விட்டார்கள். சென்ட்ரலில் இறங்கி டிக்கெட் இல்லாமல் மாட்டியதால், எதிரே இருக்கின்ற ஜெயிலில் கொண்டு போய் காவலில் வைத்து விட்டார்கள். ஏதோ பேரணி, ஊர்வலம் நடத்தி வெள்ளிக்கிழமை உள்ளே போய் திங்கள் கிழமை ஜாமீனில் வெளிவரக் கூடிய கறுப்பு துண்டு போட்ட ஒரு அரசியல் தலைவர் கோவாலு இருந்த அதே செல்லில் இருந்தார். பெரியார் பற்றியும், சமஸ்கிருதம் பற்றியும், எம்.ஜி.ஆர் பற்றியும் பேசியதை பார்த்த அவர் கோவாலுவிற்கு மூலதனம் நூலை கொடுக்க, பொழுது போகாமல் அப்படியே படித்து முடித்த கோவாலு, கொஞ்ச நாள் கழித்து துரத்தியடிக்கப்படும் போது, புதிதாக வகுப்பு வாத பிரதிநிதித்துவ நிர்மூலம், இனப்பண்பாட்டு முடக்கு இயல் வாதம் என ஜல்லியடிக்க ஆரம்பித்திருந்தான். வெளியே வந்தவுடன் தங்களைப் போலவே உளறியதை பார்த்த தகரம் கண்டுபிடித்த கம்யுனிஸ்டுகள், கோவாலுவினை அறிவுஜீவியாக கண்டறிந்தார்கள். ஏற்கனவே வாயில் நுழையாத மந்திரங்களை உளறும் கோவாலு, கம்யுனிஸ்டுகள் கொடுத்த தெம்பில், சிகப்பு புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தான். ஏற்கனவே நக்சலைட்டாக வேண்டுமென்ற ஆசையில் படித்து, யோசித்த, காப்பியடித்த விஷயங்கள் வேறு இங்கே உதவியது வேறு விஷயம். இவ்வாறாக, கோவாலு தாமரை இதழிலில் ‘நிர்பந்தங்களுட்பட்ட சுற்றுசூழலியலில் முடக்குவாதமும், அமெரிக்க முதலாளித்துவ வல்லரசின் எதிர்மறை தொடர் திணிப்பும் மற்றும் இரண்டு செட்டு இட்லி போண்டாவும்’ [இணையத்தில் இந்தக் கட்டுரை கிடைக்காது] என்கிற பெயரில் தனக்கும் புரியாமல், அடுத்தவர்களுக்கும் புரியாமல் எழுதிய கட்டுரை Emperor without Clothes மாதிரி சொன்னால் தப்பாக போய்விடுமே என்கிற நினைப்பிலேயே, எல்லாராலும் பாராட்டட பெற்று, கோவாலு எல்லாராலும் வாசிக்க படக்கூடியவனாக மாறி போனான்.

சும்மா இல்லாமல் தன் பெயரினை மாற்றிக் கொண்டான். சந்திரமுகியின் 2500வது நாள் விழா சாந்தி தியேட்டரில் கொண்டாடப்பட்ட போது கோவாலு போனபோது பெரும் வரவேற்பு கிடைத்தது. இதோடு கோவாலுவின் கதை முடிகிறது.

முக்கியமான டிஸ்கெள்யமர்: மேலே சொன்ன டிஸ்கெள்யமர் பொய்.

முக்கியமான பின்குறிப்பு: தேசாங்கியின் பூர்வாசிரம பெயர் கோவாலு.


tag: , , , , ,

Labels: , , , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]