Sep 25, 2007

கொத்து பரோட்டா + தூக்கலான சால்னா

Damn It! It's going to blow, Maybe you should it know

தமிழில் ராப் பாடல்கள் என்றால் பேட்டை ராப் தான் [காதலன் - ஷங்கர்] முதலில் நினைவுக்கு வரும். அதன்பிறகு யுவன்சங்கர் ராஜாவின் in-between ராப் பாடல்கள் கொஞ்சமாய் நினைவுக்கு வரும். அவையும் ஆங்கிலத்தில் அமைந்த பாடல்கள். தமிழில் முற்றுமுதலாக ஒரு ஹிப்-ஹாப், ராப் பாடல்கள் வந்ததில்லை. சமீபத்தில் டெல்லியில் இருந்தபோது [The city is corrupt to the core, அது வேற மேட்டர்!] வெட்டியாய் ஹோட்டலில் சானல் மாற்றும்போது எஸ்.எஸ் மியுசிகில் இந்த பாடலை கேட்க நினைத்தது. இளையராஜாவின் "மடை திறந்து பாயும் நதியலை நான்" [நிழல்கள் - பாரதிராஜா] ஒரு மாதிரியான செமத்தியான ஹிப்-ஹாப் ஸ்டெயில் ரிமிக்ஸ் [Damn It! It's going to blow, Maybe you should it know]. மலேசியாவிலிருந்து வந்த டீம், யோகி & டீம் என்று படித்தேன். உண்மையிலேயே கலக்கி, பின்னி,பெடலெடுத்து இருக்கிறார்கள். தமிழ் சொற்கள் [நடுவில் MC Hammer பற்றிய ஒரு வரியும் வரும், 10-15 வருடங்களுக்கு முன்பு, MC Hammer பார்த்திருந்தீர்களேயானால், பிரபு தேவாவுக்கான நடன அடையாளங்கள் எங்கிருந்து வந்தன என்று தெரியும் ;)] லூசான கருப்பின ஆடைகள், விரல் சொடுக்கல்கள் என உண்மையிலேயே VHR-இல் கருப்பின அக்மார்க் ஹிப்-ஹாப் பாடல் போலவே தோன்றும் இந்த பாடல், 'வல்லவன்' என்கிற ஒரு ஆல்பத்தில் இடம்பெற்று இருக்கிறது. மொழி புரியாமல் குறுந்தகட்டின் பின்புறத்தில் பாடல்வரிகள் தேடி, அப்பாச்சி இந்தியனின் ராப் பாடலை கல்லூரியில் டப்பா அடித்தது ஏனோ நினைவுக்கு வந்தது. இந்தியில் வந்த Bluffmaster - அபிஷேக்பச்சன் படம், படமுடிவில் ஒரு செமத்தியான ஹிப்-ஹாப் பாடல் [Right here, Right now - ம்ஹூம், பிரியங்கா சோப்ராவுக்காக யூட்ப்யுன் பேண்ட்வித்தினை வீணடித்தது ஒரு காலம்!!] வரும், அதை தூக்கி சாப்பிட்டு விட்டது இந்த பாடல். ஆங்கில பாடல்களில் வரும் கெட்ட வார்த்தைகள் [fuck என்கிற வார்த்தை இல்லாத ஒரு ஆங்கில ஹிப்-ஹாப் பாடல் காட்டுங்கள் பார்ப்போம்] எதுவும் இல்லாமல், பாடலின் நடுவில், நக்கலாக "சொல்றோம்ல" என மதுரை பாணியில் ஒரு இடைச்செருகல் என, தமிழ், செமத்தியாக ஹிப்-ஹாப்பிற்கு பொருந்துகிறது. பட்டைய கிளப்பிட்டாங்கப்பா!ராஞ்சி, மேகாலயா, டார்ஜ்லிங், அஸ்ஸாம், சிக்கிம்

கிரிக்கெட் என்றாலே டெஸ்ட், ஒரு நாள் ஆட்டம் என்று பேசிக் கொண்டிருந்த போது, தமிழ் கதாநாயகிகள் உடைக் குறைப்பு செய்வது போல, இப்போது முடிந்த ட்வென்டி20, நம்ம பாஷையில் 'பிகினி கிரிக்கெட்". ராஞ்சியிலிருந்து வந்த தோனி, ஹரியானாவின் ஜோகின்ந்தர் சர்மா, பஞ்சாபின் யுவராஜ், டெல்லியின் கம்பீர் என ஒரே 24-வயசு காலேஜ் பசங்க கூட்டம் உலக்ககோப்பையினை வென்றிருக்கிறார்கள். எந்த மெட்ரோ கூட்டமும் இல்லாமல், இந்திய கிரிக்கெட்டின் மும்மூர்த்திகள் இல்லாமல், ஒரு இந்தியா - 24 டீம் பீச் கிரிக்கெட்டின் பார்மெட்டினில் டென்ஷ்ன் இருந்தாலும், வெளிக் காட்டாமல் வென்றிருக்கிறார்கள். பிகினி கிரிக்கெட்டிற்கு போவதற்கு முன், இந்திய கிரிக்கெட் பண்டிதர்கள் பார்மெட்டில் நமக்கு பழக்கமில்லை, தோனி தலையில் தூக்கி வைத்து விட்டார்கள் என புராணம் பாடிக் கொண்டிருந்தபோது, மெளனமாக, செயலில் சாதித்து, வாயடைக்க வைத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் இது ஒரு அனுபவில்லாத 20 சம்திங் அணி. இதற்கு ஒரு நாளைக்கு முன்னால்தான் Indian Idol என்கிற இந்தியாவின் மிகப் பெரிய talent show-வில் பிரசாந்த் தமாங் [நம்ம பிரசாந்த் நீதிமன்றம் போறதுக்கே நேரம் சரியாக இருக்கிறது] வென்றிருக்கிறார். டார்ஜிலிங் மற்றும் சப்பை மூக்கு நேபாளிகள் என நாம் சொல்லும் ஒரு இனமே இப்போதுதான் மெயின்ஸ்ட்ரீம்க்கு வந்திருக்கிறது. இதில் இரண்டாவதாக வந்த அமித் பால் மேகாலயாவிலிருந்து வந்தவர். மொத்த வடகிழக்கு மாநிலங்களும் அமித்துக்காக பிரார்த்திருக்கிறது. எனக்கென்னமோ, இதற்காகவே, நியுஸ் சேனல்கள் முதன்முதலாய் வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. 60 வருடங்கள் கழித்து, நமக்கான ஹீரோக்கள் ராஞ்சி, டார்ஜிலிங், மேகாலயா என நாம் நினைத்துக் கூட பார்க்காத இடங்களிலிருந்து வருகிறார்கள். பெங்களூர் மற்றும் மும்பையின் கால் சென்டர்களில் மணிப்பூர், சிக்கிம் சப்பை மூக்கு குள்ள பெண்கள், சாம்சங் / நோக்கியா போன்களில் 'காபி டே'களில் நண்பர்களோடு இழைந்து கொண்டிருக்கிறார்கள் என்னுடைய அலுவலகத்தில் ப்ரோக்ராமர்கள் வேலைக்காக வரும் பாதி resume-கள் அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வருகிறது. இது ஒரு மிக முக்கியமான மாற்றமாக தெரிகிறது. கொஞ்சம் Freaknomics மற்றும் Tipping Point படித்திருந்தால், இந்த விஷயத்தினை தீவிரமாக அலசலாம். கண்களுக்கு தெரியாமல், நம் தரைக்கு கீழே சில விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

காம் ஹோஜாயேகா!

சலாம்ஸ் [வணக்கம்]
மாலிக்கும் சலாம்ஸ் [வணக்கம்]
கியா கஃபர் ஹே! ? [என்ன செய்தி]
குச் ஹோனா சாஹியே [ஓரு காரியம் ஆகணும்]
கிதர் ? [எங்கே?]
டெல்லி / உத்தர பிரதேஷ்
கித்னா தாம் ? [எவ்வளவு துட்டு]
பாஞ்ச் க்ரோர் [ஐந்து கோடி]
பஹுத் கம் ஹே, வோ பரோஜ்கட் பச்சாஸ் கரோர்-கெ கரோ. [ரொம்ப கம்மி. அந்த வேலையினை 50 கோடியாக மாற்றிக் கொள்ளுங்க]
ஜி. கியா மினிஸ்ட்ரி ? [சரி. எந்த மினிஸ்டரி]
urban development
பாஞ்ச் பர்சென்ட் லேலோ, வோ மினிஸ்டர் அமாரா ஆத்மி ஹே காம் ஹோ ஜாயேகா. [5% சொல்லுங்க. அமைச்சர் நம்ம ஆள் தான். வேலை முடிஞ்சுறும்]

மேலே சொன்னது ஒரு கூட்டமான ரெஸ்டரென்டில் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் MTV / VHR / V Channel மற்றும் செல்போன்களுக்கு இடையே கேட்டது. டெல்லி முழுக்க லஞ்சம் கொடிக் கட்டி பறக்கிறது. சென்னையில்தான் ஆட்டோக்கள் மீட்டர் போட மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். டெல்லியில் ஆட்டோகள்/டாக்சிகள் என எல்லாவற்றிலும் பேரம் பேசிதான் போக வேண்டி இருக்கிறது. இரண்டு டிஜிட்டுகளில் பேசவே கூச்சப்படுகிறார்கள். NH8-இல் விமானநிலையத்திலிருந்து 10 நிமிஷ தூரம் இருந்த என் ஹோட்டலுக்கு வைத்த பச்சா 200 ரூபாய். குர்காவ் (Gurgaon) இந்தியாவின் ஜொலிக்கும் சாடிலெட் சிடி. விமான நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இருக்கும் நகரம். ஒட்டு மொத்த நகரத்தினையும் DLF குத்தகை எடுத்திருப்பார்கள் போல, எல்லா இடங்களிலும் ஷாப்பிங் மால்கள், மெக்டோனல்ட்ஸ், ஆனால் சாலைகள் படுமோசம். சில ரியாலிடி நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் மொத்த நகரமும் இருக்கிறது. நானே 10 மால்கள், DLFபேர் போட்டு பார்த்தேன். நகரத்தின் முகவரிகளே DLF Phase I, II, III, IV என இருந்தால் பார்த்துக் கொள்ளுங்கள். டெல்லி மெட்ரோவுக்கு வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. சத்தியமாக மால்களுக்கு உள்ளே போனால், நீங்கள் இந்தியாவில் இருப்பீர்கள் என்று சத்தியம் பண்ணி, கிள்ளி பார்த்தாலும் நம்ப மாட்டீர்கள். ஆனால் இந்த பகட்டு எல்லாம் சும்மா ஜிகினா. நான் போன வாரம் அங்கே இருந்த போது எல்லா மகளிர் கல்லூரிகளும் ஒரு நாள் ஸ்ட்ரெக்கில் இருந்தார்கள். காரணம், டெல்லி காவலர்கள் சில பெண்களை மானபங்க படுத்தியது தான். தென்ஆப்ரிக்காவில் முக்கியமாய் ஜொஹேன்ஸ்பர்க்கில் நடமாட முடியாது. வெறும் நைக்கி ஷூவிற்காகவும், பெல்ட்டிற்காகவும் சுட்டு கொன்று விடுவார்கள் என்று என்னுடைய ஆப்பிரிக்க நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதைவிட மோசமாகிவிடும் போலிருக்கிறது, உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தின் தலைநகரம். டெல்லி இந்தியாவின் crime capital. பெண்கள் 8 மணிக்கு மேல் நடமாட முடியாது. எல்லா பெண்களின் கண்களிலும் ஒரு இனம்புரியாத பயமும், விளக்கமுடியாத நடுக்கமும் இருக்கிறது, இப்போது தான் சி.என்.என் ஐ.பி.என்னில் பார்த்த இந்த செய்தி உட்பட. எல்லோருக்கும் அரசில் எவரையாவது தெரிந்திருக்கிறது. காவலர்கள் சும்மா நின்று கொண்டிருக்கிறார்கள். பக்கத்து ஹரியானா டர்பன் இளசுகள் அப்பா காசில் வாங்கிய இன்னோவாவினை ஹை-வேகளில் விரட்டியடிக்கிறார்கள். விபத்துகள் சர்வ சாதாரணமாக இருக்கின்றன. யாரும் எதைப் பற்றியும் கவலைப் படுவதில்லை. டெல்லி டெவலப்மென்ட் அதாரிட்டி பல ஊழல்களில் சிக்கி மாட்டிக் கொண்டிருக்கிறது. விரிவான சாலைகள், சுத்தமான மால்கள், ஹை-டெக் கவனிப்பு, எல்லா மட்டங்களிலும் அதிகாரம், உள்ளுக்குள் என்னமோ இனம்புரியாத குழப்பமான பயம் இருந்துக் கொண்டே இருக்கிறது. எனக்கென்னமோ கூவம், சினிமா போஸ்டர், எரிச்சலூட்டும் ட்ராபிக், தினமும் சொல்லும் "ங்கோத்தா', கட்சி ஊர்வலங்கள், புரட்சி நடிகர் ரித்திஷ் ரசிகர் மன்றம், கையேந்தி பவன் இட்லிகள், சால்னா, என சென்னை சொர்க்கமாக இருக்கிறது. என்ன சொல்ல ?

நிழலுலகம் revisit

எனக்கு என்றைக்குமே இந்த sequel-களில் நம்பிக்கையில்லை. ஆனாலும், கடந்த இரண்டு மாதமாக ஜாகையும், சந்திப்புகளும் வடசென்னையில் நடந்து வருகின்றன. இரண்டு வருடங்களுக்கு முந்தி எழுதிய புதுப்பேட்டை நிழலுலகத்திற்கான தொடர்ச்சி எழுதும் அளவிற்கு விஷயங்கள் கையில் இருக்கின்றது. கொஞ்ச நாளைக்கு முந்திய என்கவுண்டரில் தூக்கியதாக சொல்லப்பட்ட வெள்ளை ரவி பற்றிய உண்மையான நிலவரங்கள், சென்னை நிழலுலகத்தின் புது தொழில்கள், சின்னத்திரை நடிகைகளும் சென்னை காவலர்களுக்கும் உள்ள தொடர்புகள் [மிக பிரபலமான சின்னத்திரை நடிகையினை சமீபத்தில் ஒரு ஐபிஎஸ் ஆபிசருக்காக, கடலுக்கு தூக்கிய நிகழ்வுகள்], எப்படி போர்ட் ட்ரஸ்டில் சரக்குகள் கைமாறுகின்றன, தமிழ்நாட்டில் அமையப்படப் போவதாக இருக்கும் SEZ-களுக்கு பின்பு இருக்கும் நபர்கள், கட்டிங்குகள் என பரவலாக செய்திகள் குவிந்திருக்கின்றன. அதுவும் பேசினால் கிடைக்கும் insights சத்தியமாய் எந்த தளத்திலும் முழுவதுமாக எழுத முடியாது. உதாரணத்திற்கு, செப்டம்பர் - அக்டோபரில் செயின் அறுப்புகள், வெட்டு குத்து, திருட்டு கொஞ்சம் அதிகமாக இருக்கும், புரட்டாசி மாதம் என்பதால், நிறைய பேர்கள் நான் - வெஜ் சாப்பிடாமல் இருப்பார்கள். ஆகவே மீன்பிடி தொழில் டல்லடிக்கும், அதனால மக்கள் மற்ற வேலைகளில் இறங்கி விடுவார்கள். வக்கீல்களை விட அவர்களுக்கு சட்டம் தெரிந்திருக்கிறது. செக்க்ஷன்கள் தெரிகிறது. ஒட்டைகள் தெரிகிறது. உதாரணத்திற்கு, டூ-வீலர் ஓட்டும் உங்களை பிடிக்காத ஒருவரை 'முடிக்க' ஆகும் மொத்த செலவு 70000 ரூபாய்கள். 40000 ரூபாய்கள் anticipatory bail எடுக்க போய்விடும். மிச்ச ரூபாய்களில் 10,000 - 15,000 ரூபாய்கள் எந்த சரகத்தில் 'விபத்து' நடக்க இருக்கிறதோ அந்த போலிஸ் ஸ்டேஷனுக்கு போய்விடும். மீத ரூபாய்கள் வாய்தாவுக்கும், 'தண்ணீர் லாரிக்கும்' போய்விடும். 5000 ரூபாய் கட்டினால், தண்ணீர் லாரி ப்ரேக் வயர் ஒட்டும்போது அறுந்துவிட்டதாக break inspector சான்றிதழ் தருவார். எல்லாவற்றுக்கும் ஒரு ரேட் கார்டு இருக்கிறது. இதே வேலை மும்பையாய் இருப்பின் இன்னமும் சுலபம். வெறுமனே 8 - 10000 ரூபாய்களில் நகரம் தாண்டிய சிக்னல்களில் சுட்டு விட்டு போய்விடுவார்கள், அல்லது, நீங்கள் வழக்கமாக ட்ரெயினில் போனால், சூட்சுமமாக வெளியே தள்ளி கொன்று விடுவார்கள். மொழி தெரியாத ஜார்கண்ட், பீகார், உத்தரகாண்ட், வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வருபவர்கள் வேலை முடித்துவிட்டு ட்ரெயின், பஸ், ஆட்டோ மாறி சொந்த ஊருக்கு போனால், அமெரிக்க சி.ஐ.ஏவினால் கூட ஒரு 'ம.......யும்' புடுங்க முடியாது. Insider news, இன்னும் இரண்டு மாதங்களுக்குள் சென்னையின்னுள்ளே ஒரு முக்கியமான பகுதியில் ஒரு பெரிய என்கவுண்டர் நடக்க இருக்கிறது.எங்கே,யார், எப்படி என்பது off the record. சென்னை, மும்பை, டெல்லி போன்ற மெட்ரோகளில் இனிமேல் வாழ்வது என்பது சாதாரண விஷயம் இல்லை. நான் பேசிய எல்லோரும் மென்பொருள் / கால் சென்டர் / மற்றும் நியு எகானமி தொழில் செய்பவர்களின் மீது செம கடுப்பில் இருக்கிறார்கள். அவர்களால் தான் நில மதிப்பு முதல் கத்திரிக்காய் விலை வரை உயர்ந்து விட்டதாக நம்புகிறார்கள் [அதில் உண்மையும் இருக்கிறது] income divide என்பது மிக தீவிரமாக நடந்துக் கொண்டிருக்கிறது. எங்கோ போகிறோம், ஆனால், சரியாக எங்கே என்றுதான் தெரியவில்லை.

Labels: , , , , , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]