Oct 26, 2007

[ஆப்ரிக்கா] படம் > கபடம் > பாடம்

ஆப்ரிக்காவினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மூன்று படங்கள், படங்களை எப்போதோ பார்த்து விட்டேன். இருந்தாலும், இன்றைக்கு மேயும் போது சி.என்.எனின் தளத்தில் போட்டிருந்த இந்த சிறப்பு நிகழ்ச்சியினை பார்க்கும் போது பொறி தட்டியது [எங்க வீட்டு கூரையில இன்னமும் டிஷ் சொருகல, ஆக சி.என்.என் இணையத்துலதான் பார்த்துட்டு ஒடிட்டு இருக்கு வாழ்க்கை]. மேலும் நவோமி கிளேயினின் The Shock Doctrine பற்றி படித்துக் கொண்டிருந்த போது, ஏன் ஆப்ரிக்கா இன்னமும், அதை நிலையிலேயே இருக்கிறது என்பது பற்றிய பல கருத்துகள், மில்டன் ப்ரீடுமேனின் free market economy என்று சொல்லப்படும் அமெரிக்க முதலாளித்துவம் உலகமெங்கும் நிகழவேண்டுமெனில் ஏழைகள், நோய்கள், தீவிரவாதிகள், வெடிகுண்டுகள், அச்சுறுத்தல்கள் என பலவும் இருக்க வேண்டும். இதற்கும் அழகாக Disaster capitalism என்று பெயர் வைக்க அமெரிக்கர்களால் மட்டும் தான் முடியும். இதையும், இதற்கு முன்னால் நவோமி எழுதிய No Logo-வைப் பற்றியும் வேறொரு நாளில் விரிவாக எழுதும் எண்ணமிருக்கிறது.

Disaster Capitalism பற்றி புத்தகத்தினை ஒட்டி எடுக்கப்பட்ட குறும்படம் கீழேThe Constant Gardener

கென்யாவினை மையமாக வைத்து சொன்ன படம். எப்படி மேற்கத்திய நாடுகளில் இருக்கும் மருந்து கம்பெனிகள், ஆப்ரிக்க குடிமக்களை ஆராய்ச்சிகாக பயன்படுத்துகிறது என்பதையும், aid என்று சொல்லப்படும் உதவி என்கிற போர்வையில் உள்ளீடாக நடத்தப்படும் மருத்துவ ஆராய்ச்சிகள், மருந்துகளை சோதிக்கும் களமாக இருக்க வைக்க, கிருமிகளை அவர்களை பரப்பும் அயோக்கியத்தனம், இவற்றினை எப்படி நமது ஹீரோ எதிர்கொள்கிறார் என்பது தான் படம். City of God என்கிற உலகப்புகழ் பெற்ற படத்தினை இயக்கிய பெர்னாண்டோ மெரிலிஸ் தான் இதையும் இயக்கி இருக்கிறார். இந்த படத்தினைப் பார்த்து விட்டு கொஞ்சம் கூகிளில் மேய்ந்தால் எய்ட்ஸ் கூட அமெரிக்க பரப்பிய வைரஸ் போன்ற பல தில்லாங்கடிகளோடு கொஞ்சம் உண்மைகளையும் படிக்கலாம்.

Last King of Scotland

உகாண்டா, மத்திய கிழக்கு ஆப்ரிக்காவில் இருக்கும் ஒரு நாடு. அந்த நாடு உலகின் வெளிச்சதிற்கு வந்தற்கான ஒரே காரணப்பெயர் - இடி அமீன். இந்த பெயர் கேட்டாலே உலகம் நடுங்கும். அப்பேர்பட்ட இடி அமீனின் வளர்ச்சி, சடாலென பாதை மாறியது, அமெரிக்கா / ஜரோப்பா நாடுகளுக்காக மக்களை கொன்று குவித்தது என நீளும் கதையினை இடி அமீனின் ஆஸ்தான மருத்துவராய் இருக்கும் ஒரு ஸ்காட்லாந்திய மருத்துவரிடமிருந்து சொல்லப்பட்டிருக்கும் கதை. மருத்துவரின் பார்வையில் போகும் கதை தான் என்றாலும் இடி அமீன் என்கிற ஒரு சாதாரணன் எப்படி கொடுங்கோலனாக மாறினான் என்பதை தெள்ளத்தெளிவாக விளக்கும் படம். கருப்பின மக்களை எப்படியெப்படியெல்லாம் அடிமையாய் நடத்த முடியும் என்பதற்கும், அதிகாரமும், ஆட்சியும் கையில் இருப்பின் என்னவெல்லாம் நடக்க சாத்தியங்கள் இருக்கின்றன என்பது பற்றியும் தெளிவாக விளக்குமிந்த படம்.

Blood Diamond

சியாரா லியோன் என்பது மேற்கு ஆப்ரிக்காவில் இருக்கும் ஒரு குட்டி நாடு. வெறுமனே 31% பேர் தான் படித்தவர்கள். வைரம் அமோகமாக கிடைக்குமிடம். உலகின் நிறைய இடங்களில் கிடைக்கும் conflict diamonds க்கு சியாரா லியோனும் ஒரு காரணம். அப்படிப்பட்ட நியதிகள், நிபந்தனைகள் இல்லாமல் எடுக்கப்படும் வைரத்திற்கு விலையதிகம். சாக்லெட் பாய் லியனார்டோ டி காப்ரியோ ஜிம்பாப்வேயிலிருந்து ஒடிவந்து சியாரா லியோனில் இத்தகைய வைரங்களுக்கான ஒரு இடைத்தரகன். அந்நாட்டில் ஏற்படும் உள்நாடு கலவரத்தில் மகனை இழக்கும் டேல் வெர்டியும் காப்ரியாவும் சேர்ந்து எப்படி அத்தகைய ஒரு வைரத்தினை எடுக்கிறார்கள் என்பதும், அங்கே வரும் ஒரு பெண் ரிபோர்ட்டர் இவர்களின் கதையினை உலகத்திற்கு எப்படி எடுத்து செல்கிறார் என்பதும் தான் கதை. கதையினை விட காட்டப்படும் ஆப்ரிக்காவும், மக்களும், குழந்தைகளும் அதிர வைப்பார்கள்.

இந்த மூன்று படங்களுக்கான ஒரே ஒற்றுமை, ஆப்ரிக்காவில் எடுக்கப்பட்ட படங்கள். இயற்கை வளங்கள், உழைக்க தயாராக இருக்கும் மக்கள், ஏகப்பட்ட பழங்குடி இனங்கள், இனச்சண்டைகள், கல்வியறிவின்மை, அழகாக இருக்கும் புவியியல் அமைப்பு, குரூரமாக நடத்தப்படும் காலனிகள் என என்னுடைய லிஸ்ட் நீண்டு கொண்டே இருக்கும். ஆனால், மிகக் குரூரமாய் உலகின் தேவைகளுக்காகவும், சுரண்டலுக்காகவும் தன்னை கொடுத்திருக்கும் கண்டமிது. இந்த படங்கள் அதை உறுதி செய்வதோடு, மேற்கு/வளர்ந்த நாடுகளின் வணிக / சமூக / அரசியல் தேவைகளுக்காக தொடர்ந்து பந்தாடப்படும் நாடுகள் கொண்ட கண்டம் என்கிற கண்ணோத்ததோடு பார்த்தால், நிறைய விஷயங்கள் புரியும். நம் தேவைகளுக்காக அடுத்தவரை அடிமையாக்கும் பழக்கம் இன்னமும் முழுமையாக ஒழியவில்லை என்பதுதான் அதிர வைக்கும் உண்மை.

Labels: , , , ,


Comments:
நாராயண், முகமூடியின் பதிவில் இரண்டு வரிகள் கான்ஸ்டன்ட் கார்டனர் பற்றி எழுதிய ஞாபகம். ப்ளட் டைமண்ட் பத்தி தனிப்பதிவே எழுதினே. சுயசொறிதலுக்கு மன்னிக்கவும். இரண்டுமே அருமையான படங்கள்.

சிலருக்கு இந்தப்படங்கள் இன்னமும் அழுத்தமாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. நிச்சயமாய் எல்லோரும் ஒரு முறை பார்க்க வேண்டிய படங்கள்.
 
நல்ல பதிவு.. :)
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]