Nov 20, 2007

[இந்தியா] சமச்சீரின்மை - ட்ரைய்லர் 7

குத்து 1

தகவல் அறியும் சட்டம் (Right to Information Act)  வந்தவுடனேயே, இந்தியாவில் transparency வந்துவிடும் என தைய தக்கா என குதித்தவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முந்திய ஒரு உச்ச நீதி மன்ற தீர்ப்பு ஆப்படித்திருக்கிறது. அந்த தீர்ப்பில் குடிமகனாகிய நான் அரசின் திட்டங்களையும், திட்ட முனைவுகளையும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது என்று ஒரேயடியாக போட்டிருக்கிறது. இது ஒரு பக்கம்.

இந்தியாவில் 50 கோடிகளுக்கு மேல் நீங்கள் ஒரு தனியார் / பொது நிறுவனம் (Pvt / Public Ltd) நடத்தினீர்களேயானால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உங்களின் தணிக்கையாளர் சான்றிதழ் இல்லாத வரவு செலவு இதர இத்யாதிகளின் விஷயங்களை ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கும், இரண்டு மொழி ரீதியான பத்திரிக்கைக்கும் தரவேண்டும். ஆனால் அரசோ வருடத்துக்கு ஒருமுறை தான் பட்ஜெட் போடும், போன பட்ஜெட்டில் சொன்னவைகளூக்கும் செய்தவைகளுக்கும் ஜல்லியடித்து விட்டு, இந்த வருட பட்ஜெட்டினை தாக்கல் செய்யும். இதற்கு மேல் யாரும் அதில் கருத்து சொல்ல முடியாது. பட்ஜெட் தாக்கலாகும் நாள் மட்டும் எல்லா சேனல்களிலும் உங்களுக்கு அதிர்ஷ்டமிருப்பின், உங்கள் முகம் தெரிய வாய்ப்பு உண்டு. இதனை தணிக்கை செய்ய Controller of Audits / Accounts [சரியா??] என்ற ஒரு மத்திய அரசு தணிக்கை நிறுவனம் உண்டு.

என்னுடைய கேள்வி, இந்தியாவின் பட்ஜெட் என்பது மக்களின் முக்கியமான ஒரு ஆவணம். இதில் என்ன நடக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியும் உரிமை மக்களை சார்ந்தது. பொதுப்பணித்துறை நிறுவனங்களே குவார்ட்டர் மாற்றி குவார்ட்டர் பங்கு சந்தைக்காக நிதியியல் அறிக்கையினை அறிவிக்கும் போது, இதையெல்லாம் தாண்டி மேலே இருக்கும் அரசாங்கம் இதை செய்ய வேண்டுமா, வேண்டாமா ? அப்படி செய்யாத அரசினை RTI  வைத்து கேள்வி கேட்க முடியாது என்பது தான் அந்த தீர்ப்பு. ஏன் குடிமக்களாகிய நமக்கு அரசு என்ன சொல்கிறது, செய்கிறது என்பதை அறிய பல பாடுகள் பட வேண்டி இருக்கிறது.

இன்றைக்கு இணையத்தளங்களின் மூலம், ஏன் அரசு ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு திட்டத்திலும் என்ன நடக்கிறது என்பதை அப்பகுதி மக்களின் சில நபர்களோடு இணையத்தில் போட முடியாது ? அரசியல் சாசன உரிமைப்படி ஒரு குடிமகனாய் உரிமைகள் இருக்கிறது என்று சொன்ன போதிலும், ஏன் ஒரு தகவல் அறிய ரிப்பன் மாளிகை போனால் நாக்கு தள்ளி, லஞ்சம் கொடுத்தாலேயொழிய எதுவும் நடப்பதில்லை. நம்முடைய நிதியமைச்சர், 2010-ஆல் இந்தியாவின் per capita income $4,000 இருக்கும் என்று சொன்னால், நாமும் கேட்டுக் கொண்டு கைதட்டுகிறோம்.

குத்து 2

முந்தாநாள் சென்னை தி.நகர் போக் சாலையில் இருக்கும் கென்சஸ் இன்ன் என்றொரு விடுதியில் அரை நிர்வாண நடனம் நடந்ததாக, பல ஆண்-பெண்கள் எச்சரித்து விடப்பட்டனர். மாட்டிக் கொண்டு கதறி அழுத பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்பம், பிபீ.ஓ துறையினை சார்ந்தவர்கள் என்று செய்தி கூறுகிறது. கேட்டால் வரும் ஒரே பதில் வாரமுழுக்க வேலை பார்க்கறோம், ஒரே டென்ஷன்,, அது தான் ரிலாக்ஸ் பண்ணிக்க வந்தோம்.

ஜயா, உங்களுடைய வேலை எத்தகைய கடினமானது. காவல்துறை மேற்பார்வையாளர்கள், 20 மாடியிலிருந்து கொண்டு பெயிண்ட் அடிக்கும் கட்டிட தொழிலாளிகள், பெண் கல்லூரியின் முதல்வர்கள், இதய/சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள், அவ்வளவு ஏன் மாநிலங்களின் முதலைமைச்சர்கள், கவர்னர்கள், ஏன் மன்மோகன் சிங் செய்யும் வேலையினை விடவா கடினம் ? என்ன வேலை செய்து விட்டீர்கள் என்று களைத்து போய் ஆட்டம் போடுகிறீர்கள் ? தனிநபர் சுதந்திரம் மிக முக்கியம் என வாதிடுபவன் நான், ஆனாலும், இத்தகையோர் அழும் முதலை கண்ணீர் தனிநபர் சுதந்திரக்கானதா என்பது கேள்விக்குரியது.

தகவல் தொழில்நுட்ப துறையினை கரம் கட்டி, ஒரம் கட்டி, மூத்திர சந்தில் நிற்க வைத்து, நையப் புடைத்து, அவர்களும் நாங்க ரொம்ப நல்லவங்க என்று கண்ணாமூச்சி விளையாட்டு விளையாட எனக்கு இஷ்டமில்லை.

குத்து 3

இந்தியாவின் GDP என்பது காலாண்டிற்கு 8.5% வளருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின மொத்த உற்பத்தியில் போன நிதியாண்டில் விவசாயத்தின் பங்கு 2% மட்டுமே.  ஊடகங்கள் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் சீரிஸ் என்னவாகும், கர்நாடகாவில் பி.ஜே.பி, ஜேடிஏஸ்ஸினை பழிவாங்குமா, நந்திகிராம் விவகாரம் வந்தது நல்லது, இந்தியாவிற்கு அமெரிக்க அணுசக்தி கிடைக்க, கம்யுனிஸ்டுகள் தடை சொல்ல மாட்டார்கள் என்று பார்த்து கொண்டிருந்தாலும், யாரும் எவரும் ஒரு மாதத்துக்கு முன்பு மத்திய ப்ரதேசத்திலிருந்து டெல்லிக்கு 18 மாநிலங்களிலிருந்து 25000 நிலமற்ற, நிலம் பிடுங்கப்பட்ட விவசாயிகள் நடத்திய பேரணி[ஜனதேஷ் யாத்ரா] நினைவிருக்காது. SEZ மோகத்திலும், மேற்கத்திய / சீன புலிகளை பார்த்து சூடுப் போட்டு கொள்ளும் இந்திய அரசு பூனைக்கு உண்மையில் கீழே அடித்தளத்தில் என்ன நடக்கிறது என்று தெரிய வாய்ப்பில்லை. 

எனக்கென்னமோ இந்த 25000 பேரின் நடை பயணம் ஒரு முன்னெச்சரிக்கை என்று தோன்றுகிறது. இந்திய அரசே இருக்கக்கூடிய 28 மாநிலங்களில் 18க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சிகப்பு படையென அறியப்படும் நக்சலைட்டுகள், மாவோஸ்டுகள், ஆயுதம் தாங்கிய போராளி குழுக்கள் இருக்கின்றன என்று ஒத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் சமச்சீரின்மை என்பது வெறுமனே நகரங்களில் லெவி ஜீன்ஸ் போடுபவனுக்கும், போடதவனுக்குமான பிரச்சனை என்று over-simplify பண்ண முடியாது. அமெரிக்கா மாதிரியான மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சிப்பாதையோ, சீனா மாதிரியான அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளடங்கிய [சீனா நாறி கொண்டிருக்கிறது என்பது வேறு விஷயம். அமெரிக்கா டால்ர கீழே போக,போக, இந்தியாவினை விட பெரிய பாதிப்பு சீனாவிற்கு தான் என்பதும், 50% சீன ஏற்றுமதி அமெரிக்காவிற்கு தான் என்பதும் உலகறிந்தது - செய்தி 1, செய்தி 2] வளர்ச்சிப்பாதைக்கும், நமக்கான வளர்ச்சிப்பாதைக்கும் பெருமளவு வேறுபாடுகள் உள்ளன. நமக்கான வளர்ச்சிப்பாதை என்பது உள்ளடக்கியதாக இருக்க வேண்டிய மிகப்பெரிய வரலாற்று சீரமைப்பின் விளிம்பில் நின்று கொண்டு நாம் புகையிலை குதப்பி கொண்டிருக்கிறோம். விவசாயமும், விவசாயிகளையும் ஒரங்கட்ட, ஒரங்கட்ட நாம் ஒரு புகைந்து கொண்டிருக்கும் எரிமலையின் மீது அமர்ந்திருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் இருப்பது ஆச்சர்யத்தினையும், கவலையினையும் அளிக்கிறது.

Labels: , , , , ,


Comments:
Comptroller and Auditor General of India

cag.nic.in
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]