Nov 10, 2007

[இலங்கை] குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த நேர்காணல்

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, ‘மேலக மக்கள் முன்னணிக் கட்சி’யின் தலைவரும், சிவில் மானிட்டரிங் கமிட்டியின் உறுப்பினருமான கொழும்பு எம்.பி. மனோ.கணேசனிடம் பேசினோம்.

இந்தத் தாக்குதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தமிழ்ச்செல்வனுடனான உங்கள் சந்திப்பு பற்றிச் சொல்லுங்கள்...

‘‘புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனைக் கொலை செய்ததன் மூலம் இலங்கை அரசாங்கம் சமாதானத்திற்கான சாத்தியக்கூறுகளைக் கொன்று, குழி தோண்டிப் புதைத்து விட்டது. போர் நிறுத்தக் காலகட்டத்தில் எங்கள் கட்சியின் தூதுக்குழுவின் சார்பில் கிளிநொச்சிக்குச் சென்று, அவரைச் சந்தித்து உரையாடி இருக்கின்றேன். தனிப்பட்ட முறையிலும், ஒருமுறை சந்திக்கும் எவரையும் வசீகரிக்கும் ஆளுமை கொண்டவர் அவர். வடகிழக்கில், தமிழர் தாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு அரசியல் முகவரியாக தமிழ்ச்செல்வனின் புன்முறுவல் பூத்த முகமே இருந்து வந்தது என்பதனை நான் நன்கு அறிவேன். தனது தரப்பின் தர்க்க நியாயங்களை மிகச் சிறந்த முறையிலே சர்வதேச சமூகத்திடம் எடுத்து வைப்பதில் சளைக்காதவராக அவர் திகழ்ந்தார்.’’

இனப்பிரச்னைக்குத் தீர்வு எந்தளவில் இருக்கிறது?

‘‘தமிழ்ச்செல்வன் கொலை உள்ளிட்ட எந்தப் பிரச்னைக்கும் ஆதியோடந்தமான பிரச்னை இலங்கை இனப்பிரச்னை. அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் அனைத்து வழிகளையும் இலங்கை அரசாங்கம் அடியோடு மூடி விட்டது. வாரத்துக்கு மூன்று நாட்கள் கொழும்பில் நடத்தப்பட்டு வந்த அனைத்துக் கட்சி கூட்டத்தையும் இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் காலவரையின்றி ஒத்தி வைத்துவிட்டது. அதை அடுத்துத்தான் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. இனி அடுத்த ஜனவரிக்குப் பின்னர்தான் அடுத்த கூட்டம் பற்றிய தேதியைப் பேசுவது என்றும் முடிவு செய்திருக்கிறது. இது எதைக் காட்டுகிறதென்றால், அரசியல் தீர்வு காணும் நிலை எதுவும் இலங்கை அரசிடம் இல்லை. முழுக்க முழுக்க யுத்தம் நடத்தவே சிந்திக்கிறார்கள். விடுதலைப்புலிகளுடன் யுத்தம் நடத்துவது ஒரு வழியென்றாலுங்கூட, அதற்காக அரசியல் ரீதியான தீர்வுக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கத் தேவையில்லை. ஆகவே, இதை இந்திய அரசாங்கமும் கவனத்தில் கொள்ள வேண்டும்.’’

இலங்கைப் பிரச்னையில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

‘‘தமிழ்நாட்டில் நடப்பது என்ன? தமிழ்ச்செல்வனின் மறைவிற்கு இரங்கல் கவிதை எழுதிய தமிழக முதல்வர் கருணாநிதியை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடுமையாகக் கண்டித்துள்ளார். இது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இலங்கைத் தமிழர்களின் விவகாரத்தில் ஒரு தீர்க்கமான முடிவைக் கொண்டுவரும் சக்தி தமிழக தலைவர்களிடமும், அவர்கள் மூலமாக சர்வதேச சமூகத்திடமும் மட்டுமே இருப்பதாகப் பார்க்கிறோம். அமெரிக்காவும், ஐரோப்பாவும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒத்தாசை புரியலாமே தவிர, தீர்க்கமான முடிவெடுக்கும் தகுதியும் தாத்பரியமும் இந்தியாவில்தான் இருக்கிறது. ஆனால், இந்திய அரசியல் தலைவர்கள் விடுதலைப்புலிகளை மையமாக வைத்து இன்னமும் இலங்கைப் பிரச்னையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று, விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறார்கள் அல்லது விடுதலைப்புலிகளை எதிர்க்கிறார்கள். ஆனால் உண்மையான பிரச்னை என்பது இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கும் இடையில் இருக்கிறது. அந்த இடைவெளியில்தான் வட இலங்கையிலே வாழும் யாழ்ப்பாணத் தமிழர்களும், தென்னிலங்கையிலே வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.’’

விடுதலைப்புலிகளின் அடுத்த நடவடிக்கை அல்லது நிலைப்பாடு எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

‘‘உடனடியாக கடும் பதிலடி தரப்படும் என்று விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் போராட்டம் இன்னும் வலுவாக முன்னெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் கூடியிருக்கிறது. வருடாவருடம் நவம்பர் மாதம் 27_ம் தேதி நடக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ‘மாவீரர் உரை’ இம்முறை கடும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கிறது. இத்தகைய தாக்குதல் காரணமாக தொடர் தாக்குதல்கள் நடைபெறுமானால், இவற்றில் சிக்கித் திணறப் போவது, ஏற்கெனவே அதலபாதாளத்தில் விழுந்து பரிதாப வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கக் கூடிய அப்பாவித் தமிழ் மக்கள்தான். இவர்களைக் காப்பாற்றும் தார்மீகப் பொறுப்பு தமிழக அரசியல் தலைவர்களுக்கும், அவர்கள் மூலமாக இந்திய அரசாங்கத்துக்கும் இருக்கின்றதென்பதை இந்தச் சமயத்தில் நான் மிகவும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.’’

இந்த நேரத்தில் இங்கிலாந்தில் வைத்து கருணா கைது செய்யப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

‘‘கருணா இலங்கையில் இருந்து மாற்றுப் பெயரில் சட்டவிரோதக் கடவுச்சீட்டில் (பாஸ்போர்ட்) ஐரோப்பாவுக்குப் பயணமாகி இங்கிலாந்துக்குச் சென்றிருந்த வேளையில், குடியேற்ற (இமிகிரேஷன்) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் குடியேற்றச் சட்டங்களை மீறிவிட்டார் என்பதும், கைது செய்யப்பட்ட நேரத்தில் ஆயுதம் வைத்திருந்தார் என்பதும்தான் உடனடிக் குற்றச்சாட்டாகக் கூறப்படுகிறது. இதற்கப்பால் இலங்கையில் அவர் மீது கடத்தல், படுகொலைகள், கப்பம் பெற்றுக் கொள்ளுதல் ஆகியவை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இங்கிலாந்து அரசாங்கம் முயலுமா அல்லது அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.’’

இலங்கை அரசாங்கத்துக்குச் செல்லப்பிள்ளையான கருணா ஏன் போலியான கடவுச்சீட்டில் பயணிக்க வேண்டும்?

‘‘அவர் மீது ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவர் இப்போது இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டாலுங்கூட ஏற்கெனவே இங்கிலாந்து அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்துவிட்ட நிலையில், அங்கே அவர் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட குற்றவாளி. ஆனால், அவர் இலங்கை அரசாங்கத்தின் உதவியும் ஒத்தாசையும் இல்லாமல் மாற்றுப் பெயரில் கடவுச் சீட்டு பெற்றுச் சென்றிருக்க முடியாது. அவர் மீது கடவுச் சீட்டு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுமானால், அதில் இலங்கை அரசாங்கமும் கூட்டுக்குற்றவாளியாகக் கருதப்படும் நிலையே இருக்கிறது.’’

விடுதலைப்புலிகள், தாங்கள் போர் தர்மங்களைக் கடைப்பிடிப்பதாகவும் இலங்கை அரசிடம் அத்தகைய போக்கு இல்லையென்றும் குற்றம் சாட்டியுள்ளது பற்றி...

‘‘கடந்த காலங்களிலே எப்படி இருந்திருந்தாலுங் கூட அமைதி உடன்படிக்கைக்குப் பிறகு, இலங்கை ராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விடுதலைப்புலிகள், ராணுவத் தொடர்பிலான தளங்களையும் இலக்குகளையும் மட்டுமே தாக்கி அழித்துள்ளார்கள். ஆனால், இலங்கை அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக வடகிழக்கின் மீது விமானத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் அப்பாவிப் பொதுமக்கள்தான் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். எறிகணை (மிஸைல்) தாக்குதலையும் நடத்துகிறார்கள். இவற்றையெல்லாம் கண்டுங்காணாதது போலவே இந்தியா உள்பட சர்வதேச சமூகம் இருக்கிறது. இப்படி ராணுவ இலக்கு அல்லாத ஒரு தாக்குதல்தான் தமிழ்ச்செல்வன் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். இப்படி அரசியல்துறை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களிலும் இதுவே இறுதியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளும் கடமை இந்திய அரசாங்கத்துக்கு இருக்கிறது என, இந்தச் சந்தர்ப்பத்திலே நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்’’ என்றார் அவர்.

சில இழப்புகள் அயர்ச்சியைத் தரும்; சில இழப்புகள் ஆத்திரத்தையும் வேகத்தையும் தரும். புலிகளைப் பொறுத்தவரை தமிழ்ச்செல்வனின் இழப்பு இரண்டாவது வகை. ஏற்கெனவே இலங்கையின் அதிஉயர் பாதுகாப்பு வளையத்தில் (ஹை செக்யூரிட்டி ஸோன்) இருக்கும் கொழும்பு ராணுவ விமான தளத்தின் மீது தங்கள் விமானப் படைகளின் மூலம் தாக்குதல் நடத்தியது முதல், தற்போது அனுராதபுரம் படைத்தளத்தைத் தாக்கியது வரை இலங்கையின் எந்தப் பகுதியையும் தாக்கும் வல்லமையும், போர் விமானங்களும் தங்களிடம் இருப்பதை விடுதலைப்புலிகள் ஏற்கெனவே நிரூபித்துள்ளனர். போர் தர்மங்களை மீறி இலங்கையின் தலைநகரான கொழும்பின் எந்தப் பகுதியையும் தாக்க அவர்களுக்கு வெகுநேரம் பிடிக்காது என்பதும், இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்லாது சிங்களவர்களுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கிறது.

அப்படி அவர்கள் தாக்கத் தொடங்கினால், கொழும்பு நிர்மூலமாகிவிடும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று என்பதால், இலங்கையில் பதற்றம் கூடிக் கொண்டேதான் வருகிறது.


நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Blogged with Flock

Labels: , , , , , , ,


Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]