Dec 17, 2007

[அமெரிக்கா] சாம் மாமாவின்(Uncle Sam) வீழ்ச்சி

சிட்டி வங்கியின் தலைமை பொறுப்பினை விக்ரம் பண்டிட் ஏற்றுள்ளார். பிறப்பால் இந்தியாரான இவரின் தலையில் சுமத்தப்பட்டிருப்பது பட்டமல்ல, முள் கீரிடம். சப் ப்ரைம் பிரச்சனைகளில் மொத்தமாக சொல்லியும்/சொல்லாமலும் $20 பில்லியன் டாலர்கள் இழந்துள்ள சிட்டி வங்கியினை தூக்கி நிறுத்தும் பொறுப்பு ஒரு இந்தியருக்கு, தன்னுடைய நிறுவனத்தில் குறைந்த பட்ச stake-னை அபுதாபி அரசு பணத்தில் திளைக்கும் ஒரு ஷேக்கிடம் விற்று சுமார் $6 பில்லியன் டாலர்கள் சிட்டி வங்கி தேற்றியிருக்கிறது. ஆக ஒரு வெள்ளை வங்கியின் comebackஇல் இடம்பெற்று இருப்பது கறுப்பர்கள் [இந்தியர்கள், அரேபியர்கள்]

போன வாரம் தாஜ் ஹோட்டல் குழுமத்திற்கு [டாடா குழுமம்] நேரம் தொடங்கிவிட்டது. அமெரிக்காவின் luxury ஹோட்டலான ஒரியண்டல் ஹோட்டலின் நிர்வாக தலைவர் தாஜ் ஹோட்டலின் நிர்வாக தலைவருக்கு மடல் அனுப்ப அது இந்தியாவில் பெரும் பிரச்சனையாக போனது. உண்மையில் ஒரியண்டல் ஹோட்டலை விட இப்பொது தாஜ் குழுமம் பல மடங்கு பெரியது. டாடா குழுமம் நினைத்தால் open offerஇல் ஒரியண்டல் ஹோட்டல் நிறுவனத்தின் பங்கினை வாங்கி அவர்களை ஒரங்கட்டி விடலாம். ஆனால் hostile takeover செய்ய மாட்டோம் என்று ரத்தன் டாடா சொல்லியிருப்பதால் சும்மா இருக்கிறார்கள். வெள்ளை நிறவெறி என்று எகனாமிக் டைம்ஸ் வேறு எரிகிற எண்ணெயில் நெய் வார்த்திருக்கிறது.

ஐபிஎம் இந்தியாவில் அவர்களது நிறுவனத்தின் மொத்த பணியாளர்களை 75000 மாக உயர்த்த முடிவெடுத்திருக்கிறது. அமெரிக்கா தாண்டி மிக அதிக பணியாளர்கள் பணியாற்றும் இடம் ஐபிஎம்பிற்கு இந்தியா தான்.  ஆரகிள், சன் மைக்ரோ சிஸ்டம்ஸ், என மென்/வன் பொருள் நிறுவனங்கள், மெதுவாக அமெரிக்காவிலிருந்து கடையினை கொஞ்சமாக கொஞ்சமாக காலி செய்து கொண்டு பெங்களூரிலோ, சென்னையிலோ, மும்பையிலோ டேரா போடப் போகிறார்கள். அமெரிக்கா இப்போது இல்லாவிடினும் இன்னும் 30-40 ஆண்டுகளில் காலி பெருங்காய டப்பாவின் நிலைக்கு உள்ளாகும். உலகமே குறைந்த பட்சம் 4 -5% GDP வேகத்தில் முன்னேறி கொண்டிருக்கும்போது [இந்தியா சராசரி 8.5% , சீனா சராசரி 10%, பிரேசில் சராசரி 7.5%] அமெரிக்காவின் 2008-09 கணிப்புகள் 2 - 2.5% என்று சொல்கின்றன. 

போன வாரத்து முந்திய வாரத்து பத்திரிக்கை செய்திகளை ஆக்ரமித்தவை கச்சா எண்ணெய் பேரல் $100யினை தொட்டு திரும்பியதுதான். அதில் அவர்கள் முக்கியமாக சொன்னது, இனி வருமாண்டுகளில் இந்தியா மற்றும் சீனா என்ற இரண்டு நாடுகளும் எடுக்கப்படும் கச்சா எண்ணெயில் 50% தனை பயன்படுத்துவார்கள். மெதுவாக ஆனால் உறுதியாக, இரண்டாம் உலகப்போர் தொடங்கி மெள்ள மெள்ள விஸ்தரித்த அமெரிக்க சாம்ராஜ்யத்தின் ஒரங்களை இந்திய யானையும் சீன ட்ராகனும் சாவகாசமாக சாப்பிட தொடங்கியிருக்கின்றன. Soverign Wealth Funds  என்று அழைக்கப்படும் அரசின் வெளிநாட்டு பணச்சூழல் நன்றாக இருக்கும் அரசாங்கங்களின் நிதி நிர்ணயங்கள், பெரும் அமெரிக்கா நிறுவனங்களின் பங்குகளை வாங்க தொடங்கியிருக்கின்றன. அபுதாபியின் $7.5 பில்லியன் சிட்டி வங்கி முதலீடு, ப்ளாக்ஸ்டோன் இன்வெஸ்ட்மெண்ட் குழுமத்தில் சீன அரசின் SWF கொடுத்த $4 பில்லியன் டாலர்கள், என நீளும் பட்டியலில் இருக்கும் நாடுகளின் கையில் இருக்கும் பணத்தின் மொத்த மதிப்பு $10 டிரில்லியன் டாலர்களாக [ பத்தாயிரம் பில்லியன் டாலர்கள்] 2012-இல் இருக்கும்.

நேற்று நடந்து முடிந்த பாலி சுற்றுச்சூழல் மற்றும் மாசு குறைவு மாநாட்டில் பெரியண்ணன் அமெரிக்கா மூக்குடைப்பட்டு கடைசியில் வளரும் நாடுகளின் கூட்டமைப்பின் முடிவுக்கு பணிந்திருக்கிறது. உண்மையில் ஒரு கட்டத்தில் அமெரிக்காவினை இந்தியா, சீனா, ரஷ்யா, குட்டி நாடுகள், ஐரொப்பிய யூனியன் என மொத்தமாய் சேர்ந்து ஒரங்கட்டி விட்டன. bali roadmap என்று எடுத்திருக்கும் முடிவின் இறுதிக்கட்ட முடிவு 2009 ஆம் ஆண்டில் எடுக்கப்படும். ஜனவரி 2008 தொடங்கி உலகமுழுவதும் தொடர் மாநாடுகள், அரசுகளோடு உடன்பாடுகள் என பல முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. அமெரிக்காவின் உண்மையான நிலைமை நவம்பர் 2008 அதிபர் தேர்தல் நடந்து வரும் புதிய புண்ணியவானின் கையில் தான் இருக்கிறது.

அர்த்த சாஸ்திரத்தில் சொன்னதாக ஒரு கதை வரும். சந்திர குப்த மெளரியன் போரில் தோல்வியுற்று பதுங்கியிருக்கும்போது ஒரு வீட்டில் பாட்டிக்கும் பேரனுக்கும் நடக்கும் ஒரு உரையாடல். பாட்டி தோசையோ/சப்பாத்தியோ சுட்டு பேரனுக்கு கொடுப்பாள். பேரன் அதை நடுவில் தொட்டு சுட்டுக் கொள்வான். அப்போது அந்த பாட்டி சொல்லும் வாசகம்

"நீயும் சந்திர குப்த மெளரியன் போல முட்டாளாக இருக்கிறாய். முதலில் சூடாக இருப்பின் ஒரங்களை எடுத்து சாப்பிடு. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக நடுப்பகுதிக்கு வா. நீ நடுப்பகுதிக்கு வரும்போது நடுப்பகுதி ஆறியிருக்கும்."

இந்த கதை இப்போது அமெரிக்காவுக்கும் பொருந்தும். அமெரிக்கர்களும், அமெரிக்க அரசும் ஒன்றினை புரிந்து கொள்ள வேண்டும். முதலில் The World is Flat, Super Capitalism, Making Globalisation Work போன்ற புத்தகங்களை படியுங்கள். Globalisation  என்பது ஒருவழிப்பாதையல்ல. இருவழிப்பாதை. மலிவான தொழிலாளிகள் இங்கே கிடைப்பதன் மூலம் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்று நீங்கள் நினைத்த யுக்தி, அபூர்வ சகோதரர்கள் அப்பு துப்பாக்கி போல பின்னாடியும் வெடிக்கிறது. முன்னாடியும் வெடிக்கிறது. உங்களுடைய வெள்ளையினத்து supremacyயின் காலகட்டம் முடிந்து விட்டது. சூரியன் அஸ்தமனமாகாத சாம்ராஜ்யம் அணைந்தது 400 வருட வாழ்விற்கு பிறகு. அமெரிக்க அஸ்தமனம் கொஞ்சம் குறைவாக 60 -100 ஆண்டுகள் மட்டுமே இருக்கக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.

பார்க்க / படிக்க

Blogged with Flock


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]