Jan 16, 2008

[தமிழ்நாடு] திராவிடத்தின் எதிர்காலம் - என் பார்வை

மாலனின் "திராவிடத்தின் எதிர்காலம்" பதிவில் எழுதிய பின்னூட்டம்.

அன்புள்ள மாலன்,

நேர்மையாக எழுதியிருக்கிறீர்கள். உலகமயமாக்கலும் அதன் பின்புலங்கள் சார்ந்த விஷயங்களிலும் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. திராவிட அரசியல் பற்றி எழுத வேண்டுமானால், ஒட்டு மொத்த இந்திய அரசியலை அணுகியே திராவிட அரசியலையும் அணுக வேண்டும் என்பது என்னுடைய சின்ன அபிப்ராயம். நீங்கள், கொள்கையிலிருந்து நீர்த்துப் போன, பாப்பாத்தியினை தலைவியாக கொண்ட திராவிட கட்சி, தன் மகன்/மகள்/குடும்பத்திற்கு அதிகாரம் விநியோகம் பண்ணும் தலைவர் என்று வரிசையாக பல்வேறு பிரச்சனைகளை நேரடியாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்திய அரசியலினை என்னை விட நீங்கள் கடந்த 20 - 30 ஆண்டுகளாக அருகிலிருந்து கவனித்து வருகிறீர்கள். அஸ்ஸாமில் மத்திய அரசுக்கு எதிரான மாணவர் புரட்சி நடத்தி முதல்வரான பிரபுல்லகுமார் மகந்தாவின் நிலையென்ன ? அவர்களின் கட்சி என்னவாயிருகிறது ? மாயாவதி ஆட்சிக்கு வந்ததின் பின்னிருக்கும் அரசியல் சூழல்கள் என்ன ? தெஹல்கா தொடங்கி தெருமுனை வரை காறி துப்பிய பிறகும் மோடி ஆட்சிக்கு வந்ததின் காரணங்கள் என்ன ? பிஜேபியின் மீது சவாரி செய்து கொண்டு, பின் பிஜேபி பதவிக்கு வரவேண்டும் என்கிற நிலையில் காலை வாரிய ஜேடிஎஸ்ஸும், தேவ கவுடாவும் / குமாரசாமியின் இன்றைய நிலையென்ன ? சந்திரபாபு நாயுடு ஹைதராபாத் மட்டுமே முன்னேற்றினார் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த காங்கிரஸும் ராஜசேகர் ரெட்டியும் இந்த வருட தேர்தலில் தேறுவது கஷ்டப்படுவது ஏன் ? மக்களுக்கான இயக்கம் என்றறியப்பட்ட கம்யுனிஸ்ட் கட்சி கேரளாவில் CPI(M) Pvt. Ltd என்கிற அளவில் இருப்பதற்க்கான காரண காரியங்கள் என்ன ?

உண்மையில் இரண்டு விதமான பொருளாதாரங்கள் இருக்கின்றன. அரசியல் பொருளாதாரம் (Political Economics) மற்றும் சித்தாந்த ரீதியான பொருளாதாரம் (Idealist Economics) தண்டவாளங்கள் போல இவையிரண்டும் எந்த கால கட்டத்திலும் ஒன்று சேராது. [அரசியல் பொருளாதாரம் Vs. சித்தாந்த ரீதியான பொருளாதாரம், அதன் பின் விளைவுகளைப் பற்றி ஆராய தான் இந்தியாவின் சமச்சீரின்மை பற்றி தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பி வருகிறேன்] திராவிட அரசியல் என்பது சித்தாந்த ரீதியான பொருளாதாரத்திலிருந்து அரசியல் பொருளாதாரத்திற்கு மாறியதன் பரிணாம வளர்ச்சி தான் இலவச டிவி. உண்மையில் சென்ற தேர்தலில் இலவச டிவி, அரிசி எனக் கொடுத்தும், கூட்டணி ஆட்சியால் தான் திமுகவால் பதவியில் அமர முடிந்திருக்கின்றது. ஜெயா டிவி சொல்லுவது போல இன்றைக்கும் இது மைனாரிட்டி திமுக அரசு தான்.

ஆனால் திராவிட அரசியல் தமிழ்நாட்டிற்கு பங்களித்தவை எவ்வளவோ இருக்கின்றன. இந்தியாவே இட ஒதுக்கீடு என்கிற பேச்செடுத்தாலே அலறும்போது ஒரு சிறு சலனம் கூட தமிழ்நாட்டில் இருக்காது. ஊரே அரசு தான் பள்ளிகளை / கல்லூரிகளை நடத்த வேண்டும் என்கிற நிலையில் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து நாம் தொடங்கிய தனியார் பொறியியல் கல்லூரிகள் தான் இன்றைக்கு இந்தியாவெங்கும் வியாபித்திருக்கிற தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் தமிழர்களை முன்னெடுத்து சென்றிருக்கிறது.

வை. கோ போன்ற முக்கியமான திராவிட தலைவர்கள் அரசியல் ரீதியாக பல்வேறு கூட்டணி சூழ்நிலையில் இருந்தாலும், இலங்கை தமிழர்களுக்கான குரல் இன்னமும் ஒலிக்கின்றது. திராவிடம் நேரடியாக சாராத, ஆனால் திராவிட இயக்கத்தினால் உந்தப்பட்டதால் தான் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் என அரசியல் இயக்கங்கள் உருவாகி இருக்கின்றன. எப்படி பாரதீய ஜனதா கட்சியின் மூலங்களை தேடினால், அவை ஜன சங், வி.எச்.பி. சங் பரிவார் ஆரம்பத்தில் கொண்டு போய் விடுமோ, அதை போல, திராவிட அரசியலின் பரிணாம வளர்ச்சி என்பது நேரடியாக திமுக, அதிமுக, மதிமுக வால் மட்டும் தனியாக இருக்காது, அவை பெரியாரின் கொள்கைகள், அண்ணாவின் நேர்மை, காமராஜின் எளிமை என மொத்தமாக உணரப்பட்டு பல்வேறு கட்சிகளால், சாராம்சத்தினை ஏற்றுக் கொண்டு, தலைவர்களை புறந்தள்ளி வேறுவிதமாக வேர் விட்டு வளரும் என்பது என்னுடைய பார்வை. மற்றபடி, திராவிட அரசியலினை திமுக Vs. அதிமுக என்று பார்ப்பதில் உடன்பாடில்லை.

மற்றபடி தமிழ், தமிழர், திராவிடம் என்று extrapolate செய்வதில் நம்பிக்கையில்லை. திராவிட கட்சிகளாக பரிணமித்து அரசியலுக்கு வருவதற்கு முன்பும், தமிழும், தமிழரும் வாழ்ந்தார்கள். கிட்டத்திட்ட 45 ஆண்டுகளாக தேசிய கட்சிகள், புதிய கட்சிகள், சாதி கட்சிகள் மத்தியிலும், திராவிட அரசியலும், தமிழும், தமிழர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். இனிமேலும் வாழத்தான் போகிறார்கள். உண்மையில் இந்தியாவிலேயே, அரசியல் கலப்பில்லாத பெரும்பான்மை முன்னேற்றம் தமிழ்நாட்டில் தான் நடந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. அரசியல் நேர்மையாய் இருந்திருப்பின் இன்னமும் முன்னேறியிருப்போம் என்பது ஒரு பார்வை. கருணாநிதி Vs. ஜெயலலிதாவினை ஒரு சாதாரணணாய் between devil and deep sea என்று ஒரு குறுகிய பார்வை பார்த்து பேசினாலும், ஒட்டுப் போட்ட மறுகணமே மறந்துவிட்டு, தத்தம் வேலைகளை பார்க்க போய் விடுகின்ற கூட்டம் தான் பெரும்பாலானவர்கள். அவர்களின் உழைப்பு, வியர்வை, மற்றும் உலகமயமாக்கலின் பங்கு இவை தான் தமிழகத்தையும், தமிழினத்தையும் முன்னேற்றிக் கொண்டிருக்கிறதேயொழிய, தமிழ் தான் உயிர் என்று மேடைப் பேச்சு பேசும் எவராலும், இனத்தையோ, மொழியையோ, நம் வரலாறையோ முன்னெடுத்து செல்ல முடியாது.

நன்றி.

Labels: , , , , ,


Comments:
ஒரு நல்ல அலசலுக்கான முன்னுரை. இன்னும் விரிவாக எழுத வேண்டும்.


பொங்கலோ பொங்கல்!
------------------
தறுதலை
தெனாவெட்டுக் குறிப்புகள்-08)
 
நல்ல அலசல் நாராயணன்.

//தமிழ் தான் உயிர் என்று மேடைப் பேச்சு பேசும் எவராலும், இனத்தையோ, மொழியையோ, நம் வரலாறையோ முன்னெடுத்து செல்ல முடியாது.// 100% உண்மை.

அதே நேரத்தில், இட ஒதுக்கீட்டினால் தமிழ்நாட்டில் பாதிக்கப்படுபவர்களைவிட பலனடைபவர்கள் அதிகம் என்பதும் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்க்குரல் எழாததற்கு காரணம் - என நான் நினைக்கிறேன். (எந்த ஸ்டாடிஸ்டிக்ஸ் சார்ந்தும் அல்ல, பொதுவான எண்ணமே - இல்லை என ஆதாரபூர்வமாக மறுத்தால் ஏற்கத் தயார்)

இப்படி ஒரு நிலைமை இருந்தால் - அதற்குக் காரணம் இட ஒதுக்கீட்டில் பயன்படும் பட்டியலை இட்ட திராவிடத்துக்கு முக்கிய பங்குண்டு :-) எனவே திராவிடத்தால் எதிர்ப்பில்லை என்பது ஏற்கக்கூடியதே!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]