Feb 11, 2008

[சமூகம்] ராஜ் தாக்கரே Vs. பேரக் ஒபாமா

ராஜ் தாக்கரே மாமாவின் வழியில் வட இந்தியர்களுக்கு எதிரான போராட்டத்தினை அறிவித்து போன வாரம் முழுக்க மும்பையின் பெரும்பகுதியினை பதட்டத்திற்கு உள்ளாகி இருக்கிறார். அறுவது, எழுபதுகளில் "லுங்கிவாலா" என விளிக்கப்பட்ட தென்னிந்தியர்கள் (தமிழர்கள், மலையாளிகள்) பால் தாக்கரேவின் சிவசேனாவால் "எதிரிகள்" என இனங்கானப்பட்டு கொலைவெறியோடு தாக்கப்பட்டார்கள். மும்பை மஹாராஷ்டியர்களுக்கே (Mee Mumbaikar) என்கிற குறுகிய மனநிலையோடு மும்பையினை கூறுப் போட நினைத்த சிறுபிள்ளைத்தனமான கற்பனையில் விளைந்த நாசங்கள் கணக்கில் அடங்காதவை. எண்பது, தொண்ணூறுகளிலும் அவவப்போது கிளர்ச்சிகள் நடந்த வண்ணமிருந்தன. பின் தென்னிந்தியர்களை விட்டு இந்துத்துவாவிற்கு சிவசேனா தாவி, இஸ்லாமியர்களை "எதிரிகள்" என இனங்கண்டு பிரச்சனைகள் செய்ய ஆரம்பித்தார்கள். அதுவும் மும்பை தொடர் வெடிகுண்டு (1991) அசம்பாவிதத்திற்கு பிறகு இஸ்லாமியர்கள் Vs சிவசேனா என்கிற அளவில் பிரச்சனை பெரிதாகியது. இது இல்லாமல், "கலாச்சார காவலர்களாக" வரப் போகும் வேலன்டைன்ஸ் நாளை குறி வைத்து கடைகளை அடித்து உதைத்து வேறு "பெருமை" தேடிக் கொண்டவர்கள். [சரி அப்போது காதலிக்காமல், காமம் கொள்ளாமல், மஹாராஷ்ட்ரிய மண்ணின் மைந்தர்களை எப்படி உருவாக்குவதாம் ? ]

இடையில் கடந்த 17 ஆண்டுகளாக இந்தியாவில் பொருளாதார சூழல் மாற தொடங்கியது. மும்பை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இந்தியாவின் financial hub என்கிற அளவில் பேசப் பட்டது; Global Financial Hub-ஆக மும்பை இன்னும் இருபதே ஆண்டுகளில் மாற வேண்டும் என்று சூட் போட்ட கணவான்கள், எக்ஸல் ஷீட்டுகளோடு போர்டு ரூம்களிலும், நிதியமைச்சர் டெல்லியிலும், பில்லியன் டாலர்களில் கனவு கொண்டு இருக்கிறார்கள். தாராவி என்கிற மத்திய மும்பையின், ஆசியாவின் மிகப் பெரிய குப்பத்தினை, கார்ப்பரெட்டஸ் செய்ய ரியாலிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. செபி, பிஎஸ்ஈ என நிதி கட்டுமான நிறுவனங்கள் இன்னமும் எப்படி தொழிலினை பெருக்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கின்றன. அம்பானிகள், டாடாக்கள், மிட்டல்கள் என கலவையாக மும்பையினை பங்கு போட்டு முன்னேற்றிக் கொண்டிருக்கிறார்கள். தாதர் ஸ்டேஷனில் தலை தூக்காமல் ஷூ பாலிஷு போடும் சிறுவர்கள் கூட ஒரு நாளைக்கு 300 - 400 ரூ. சம்பாதித்து SIP கட்ட யோசித்து கொண்டிருக்கிறார்கள். வெறுமனை வியாபாரிகள் மட்டுமே இருந்த ஒரு நகரம் இன்றைக்கு இந்தியாவின் மிக முக்கியமான decision making நகரமாக மாறியிருக்கிறது. எல்லா பரஸ்பர நிதி நிர்வாகிகளும் BKC-யில் இடம் கிடைக்குமா என்று பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சிவசேனாவிலிருந்து ராஜ் தாக்கரே போன வருட ஆரம்பத்தில் பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்தார்.

இதற்கிடையில் போன தேர்தலில் சிவசேனா 'செம உதை' வாங்கியது. பால் தாக்கரே பல் பிடுங்கப்பட்ட பொட்டி பாம்பாய் வீட்டுக்குள் முடங்கி கொண்டார். எப்போதாவது பத்திரிக்கையில் அறிக்கை விடுவதோடு சரி. ராம் கோபால் வர்மா இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொண்டு "சர்க்கார்" செய்தார் [கடந்த இரண்டு வருடம் இரண்டு மாதங்களில் ராம் கோபால் வர்மா இயக்கி/தயாரித்த படங்களி ஒடிய ஒரே படம்] இப்போது சர்க்கார் 2 பண்ணிக் கொண்டு இருக்கிறார். மும்பை 15 வருடங்களில் மாறி விட்டது. லுங்கிவாலாக்கள் குறைந்து, பீகாரி வடக்கிந்திய புது முகங்கள் மும்பைக்குள் காலெடுத்து, ஆட்டோவெடுத்து, டாக்ஸியெடுத்து, கேபிள் ஒயர் தோண்ட சாலையில் மணலெடுத்து, ஹீராநந்தானிகள் கட்டிடம் கட்ட கல்,சிமெண்ட் எடுத்து, இன்னமும் "ஆஜா நச்சுலே"க்கு முதல்நாள் டிக்கெட் எடுத்து மாதுரி தீக்ஷித் பார்த்து கூவி, கை தட்டி, விசிலடித்து, ட்ரெயினில் பேப்பர் விற்று மும்பையின் ஜனத்திரளுக்குள் ஒன்றாக கலந்து விட்டனர்.

வெட்டியாக இருக்கும் மஹாராஷ்டிரா இளைஞர்களை [நம்மூர் விஜய்/அஜீத்/பரத்/வினய்/ஷாம் ரசிக மன்ற கண்மணிகள் போல ;) ] ராஜ் தாக்கரே கவர சொன்ன விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக விபரீதமாக போய் விட்டது. ஆங்காங்கே வடக்கிந்திய டாக்சி ஒட்டுநர்கள் அடித்து உதைத்து மும்பையின் ஆதாரமான "mumbainess" என்பதை கேள்விக்குறியாக்கி இருக்கிறார்கள். நான் ஒவ்வொரு முறையும் மும்பையிலிருக்கும் போதும், வேடிக்கையாக சொல்லும் ஒரு வாக்கியம் " மும்பைக்கு புதிதாக யார் வந்திருக்கிறார்கள் என்பது அவர்கள் நடக்கும் நடையிலேயே தெரியும். மும்பைய்கர்கள் வேகமாக நடப்பவர்கள், அவர்களுக்கு எல்லாம் வேகமாக நடக்க வேண்டும், மந்த கூடாரமாக மெதுவாக நடப்பவர்கள் எல்லாரும் வியாபாரத்திற்காக வெளியூரிலிருந்து வந்தவர்கள்"

ராஜ் தாக்கரே பேசும் மஹாராஷ்டிரிய பாரம்பரியம், பாலிவுட்டின் extravagant செட்டுகளில் காணாமல் போய்விட்டது. மல்லிகா ஷெராவதுவும், நேஹா துபியாவும் இன்ன பிற ஒய்வோக்களும் (OiWo - One Item Wonder girls) காப்பாற்றாத கலாச்சாரம், நைட் கிளப்புகளில் "one shot boss" என்று கேட்கும் இளசுகள் காப்பாற்றாத கலாச்சாரம், ஏறிக் கொண்டிருக்கும் மக்களுக்கு நடுவே நாறி கொண்டிருக்கும் கட்டுமானங்கள் பற்றி கவலையில்லாமல் இருக்கும் பி எம் சி (Bombay Municipal Corporation) காப்பாற்ற வக்கில்லாத இடத்தினை, எப்படி இருக்கும் கொஞ்ச நஞ்சம் பீகாரி டிரைவர்களை அடித்து துரத்துவதின் மூலம் மாற்ற முடியும். ராஜ் தாக்கரே இப்போது செய்திருப்பது சும்மா இல்லாமல் சொந்த செலவில் தனக்கு தானே சூனியம் வைத்துக் கொள்வது. ராஜ்தீப் சர்தேசாயின் பதிவில் தாக்கரேகளின் வரலாற்றினை எழுதியிருக்கிறார்.


அமெரிக்கா இப்போது தேர்தல் ஜுரத்தில் இருக்கிறது. ஹிலாரி கிளிண்டன், பேரக் ஒபாமா, இன்னும் பிறர் என "வாக்காள பெருமக்களே" கூக்குரல்கள் இணையம், தொலைக்காட்சி, செல்பேசிகள் என எல்லா இடங்களிலும் ஒலிக்க தொடங்கியிருக்கின்றன. இதில் இருவர் முக்கியமானவர்கள். ஹிலாரி கிளிண்டன் மற்றும் பேரக் ஒபாமா. சும்மா இல்லாமல் இரண்டு வாரங்களுக்கு முன்பு பேச போன இடத்தில் பில் கிளிண்டன், என்னால் சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்க முடியவில்லை, அரசியல் சட்டத்தை அப்புறம் பார்த்து கொள்வோம், நானும் போட்டியிடலாமா என்று யோசிக்கிறேன், என்று பொண்டாட்டியின் மானத்தினை வாங்கி, மக்களை கலவரப்படுத்தியிருக்கிறார்.

பேரக் ஒபாமா - கறுப்பின பின்புலம் உடையவர். ஜெயித்து வந்தால், அமெரிக்காவின் முதல் கறுப்பின பிரசிடெண்ட் ஆகும் வரலாற்று பெருமை கிடைக்கும். பேரக் ஒபாமா எல்லா இடங்களிலும் பேசும் ஒரு விஷயம். அமெரிக்கர்களுக்கு பெரும்பான்மையான வேலை வாய்ப்புகள் மற்றும் outsourcing குறைத்தல் / அல்லது முற்றிலும் காலப் போக்கில் ஒழித்தல் என்றொரு கோஷம். முட்டாள், கடைக்கோடி அமெரிக்கர்கள் அதற்கு கூட்டம் கூட்டமாக வந்து கைத்தட்டுகிறார்கள். நான் பார்த்த ஒரு பிபிசி செய்தி குறிப்பில் ஒரு தேவாலயத்தில் கையில் ஒபாமாவின் புகைப்படத்தினை வைத்துக் கொண்டு ஒரு கறுப்பின பெண்மணி கண்ணீர் மல்க தேவனை வேண்டுகிறார்.

இதற்கு ஆப்பு வைக்க, இந்தியாவின் NASSCOM ஹிலாரி கிளிண்டனுக்கு செலவு செய்கிறது. Outsourcing-னை தடை செய்யக் கூடாது என்று லாபி செய்கிறது. ஒபாமா தடுப்பேன் என்று பேசி வருகிறார். மார்க்கன் ஸ்டான்லி, சிட்டி குழுமம, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கிகள் மொத்தமாக $50 பில்லியன் டாலர்களுக்கு குனிந்திருக்கின்றன. சப் பிரைம் பிரச்சனைகள் பூதாகாரமாக வளர்ந்து, கொஞ்ச நாளில் கிரெடிட் கார்டு கடன்கள், தனி நபர் கடன்களுக்கு விரியும் என்று பொருளாதார வல்லுநர்கள் அடித்துக் கொள்ளுகிறார்கள்.

அமெரிக்கா இன்னமும் உயிரோடு இருக்க வேண்டுமெனில் அதற்கு immigrant மக்கள் தேவை. அவுட்சோர்சிங் தேவை. சமீபத்தில் படித்த ஒரு நிதிநிலை அறிக்கையில் வளரும் சந்தைகளில் (Emerging Markets) பரஸ்பர நிதி நிறுவனங்கள் சராசரியாக 18% லாபம் கொடுத்து இருக்கின்றன. அமெரிக்காவினை மட்டுமே சந்தையாக கொண்டுள்ள நிறுவனங்கள் வெறுமனே 5-8% லாபமாக கொடுத்து இருக்கின்றன. அமெரிக்க நிறுவனங்கள் லாபகரமாக இயங்க வேண்டுமெனில், சகாய விலையில் பொருட்கள் தர வேண்டுமெனில், வால் மார்ட் போன்ற நிறுவனங்கள் இயங்க வேண்டுமெனில் அது outsourcing இல்லாமல் முடியாது. கோக கோலாவையும், நைக்கியையும், ஜன்ங் புட் ஐட்டங்களையும் வளரும் நாடுகளில் திணித்த போது அமெரிக்கா பேசிய உலக சந்தையில் இவையெல்லாம் சமம் என்றொரு பாணம், இப்போது ரிவர்ஸ் வாங்கி அவர்களையே தாக்குகிறது. இதற்கு முன்பே சாம் மாமாவின் வீழ்ச்சி என்கிற பெயரில் அமெரிக்கா சரிந்து கொண்டிருக்கிறது பற்றி எழுதியிருக்கிறேன்.

வெட்டியாக புஷ் சொல்லும், பெர்னாக் சொல்லும் நிதி சலுகைகள் வேலைக்கு உதவாது. மேலும் விவரங்களுக்கு இந்த கூட்டுப்பதிவினை படிக்கவும்.


பேரக் ஒபாமா, ராஜ் தாக்கரே போன்றவர்களுக்கு இன்னமும் உலகமயமாக்கல் என்றொரு விஷயம் புரியவில்லை. [உலகமயமாக்கலின் வேறுவிதமான பிரச்சனைகள் இருக்கின்றன] இன்னமும் குண்டு சட்டியில் குதிரை ஒட்டிக் கொள்ள நினைக்கிறார்கள். உலகம் 1960களில் இருந்த ஒரினம், ஒரு அலைவரிசை என்கிற நிலையில் இல்லை. நகரமயமாக்கத்தில் வேறுவிதமான பிரச்சனைகள் இருக்கின்றன. எல்லா நகரங்களும் முகமற்ற, பொருள், போகம், உயர்நிலை, அங்கீகாரம் போன்ற காரணிகளால் மக்களை இயங்க வைக்கின்றன. இங்கே நீங்கள் சொல்லும் எவ்விதமான உள்ளின பிரச்சனைகளும் கவைக்குதவாது. குறுகியவாத மனப்பான்மைகள், என் இனம், என் ஜாதி, என் சொந்தக்காரன் என்று பேசுவது திறமூல உலகின் மிக முக்கியமான சமூக பேத்தல். அவரவர்கள் இனங்கள், மொழிகள், பண்பாடுகள், கலாச்சாரங்கள் பாதுகாக்கப்படுவது முக்கியமென்று நினைக்கிறேன், ஆனால் வந்தேறிகளால் அழியும் அல்லது அழிக்கப்படும் என்று சொன்னால் மிகவும் feeble-ஆன காரணிகளாகவே அவை தெரியும்.

சமூகங்களின் மிக முக்கியமான, அசைக்க முடியாத பலம் அதன் diversity. அதை ஒருமுகமாக பார்த்தால், ராஜ் தாக்கரே / ஒபாமா போன்ற அரைவேக்காடு சிந்தனைகள் தான் பிறக்கும். வேடிக்கையாய் இருந்தாலும், மொகலாயர்கள் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந்தால் நமக்கு பிரியாணி கிடைத்திருக்காது. அது தான் கலப்பின சமூகங்களின் பலம். இந்திய/சீன/இஸ்பானிய வந்தேறிகளும் அவர்களின் நாடுகளும் அமெரிக்காவினை பன்முகத்தில் பலமடைய வைத்திருக்கிறது. சீனா இல்லாமல் அமெரிக்கர்கள் பைத்தியம் பிடித்து அலையும் ஐபாடும், ஐபோனும் அத்தகைய விலைக்கு கிடைக்காது. உலகமயமாக்கலின் பிரச்சனைகள் வேறானவை. பீகாரிகளை அடித்து உதைப்பதாலும், இந்தியாவுக்கு மென்பொருள் சேவைகளை அனுப்பாததாலும் பாதிக்கப்படப் போவது அவர்கள் இருவரும் அல்ல, தாங்கள் தான் என்பதை புரிந்து கொள்ளாதவரை இவ்விதமான குறுச்சிந்தனையுள்ள தலைவர்களை ஒன்றும் செய்யமுடியாது.

வந்தேறிகள் தான் எல்லா சமூகங்களிலும் அதிகமாக உழைப்பவர்கள், அவர்களின் ஓரே கனவு வசதியான வாழ்க்கை, தன் சொந்த ஊரில் நிம்மதியான வாழ்க்கை. நகரங்களில் இருக்கக்கூடிய இரண்டே ஜாதி - பணமுடையவர்கள் மற்றும் பணமில்லாதவர்கள். இது ஒரு over simplification-ஆக மாறும் அபாயங்கள் இருந்தாலும், வாதத்திற்கு ஏற்புடையதாக இருக்கும். முன்னேற துடித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகம் / நாடு / நகரம் / முதலாளிகள் / தனி நபர்கள் அனைவருக்கும் இந்த கடைசி வரி தான் உயிர் மூச்சு.

Wall Street [Subline: Greed is Good] என்கிற படத்தில் மைக்கேல் டக்ளஸ் சொல்லும் வசனம் " Money never sleeps"

tag: , , , , , , , ,

Labels: , , , , , ,


Comments:
//வேடிக்கையாய் இருந்தாலும், மொகலாயர்கள் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந்தால் நமக்கு பிரியாணி கிடைத்திருக்காது. அது தான் கலப்பின சமூகங்களின் பலம்//

:)-

இருப்பினும் நாராயண்,வந்தேறிகளால்,உள்ளூர் சமூகம் பாதிப்படும்போதும் அது கண்டிக்கப்படவேண்டியதல்லவா.

வந்தேறிகளால் வளம் வந்தால் பரவாயில்லை.ஆனால் சுரண்டல்களை அனுமதிக்க முடியுமா

ஆங்கிலேய வந்தேறிகளைகூட நீங்கள் வரவேற்ப்பீர்கள் போலிருக்கே.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]