May 28, 2008

தலைப்பில்லாத 17254 ட்ராப்ட்களில் இதுவும்

பேசும் கண்கள். புரியாத மொழி படங்கள்

வால்ட் டிஸ்னியின் வெப் வீடியோ முதல் தடவையாக 50 எபிசோடுகள் வரப்போகிறது. ராபின் குக் எழுதியதினை அடிப்படையாக கொண்டது. நான் பார்த்தது, பாரின் பாடி என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்நெடுந்தொடரின் முதல் பகுதி Boundaries of Desire. ராபின் குக் மெடிக்கல் டூரிஸம் என்று அப்போலோவும், போர்டிஸும் கல்லா கட்டுவதின் பிண்ணணியில் ஒரு காதல், காமம், துரோகம், நயவஞ்சகம், எட்செஸ்ட்ரா எல்லாம் சேர்த்து எழுதிய கதை தான் பாரின் பாடி. மூன்று நிமிடங்கள் மட்டுமே வரும் இதில் வீணா என்கிற கதாபாத்திரத்தில் ஒரு நம்மூர் பெண் நடித்திருக்கிறார். பிரணதி வர்ஷினி என்று பெயர் போட்டார்கள். அந்த கண்கள் ஒன்று போதும், இந்த பெண் பல இடங்களுக்கு செல்ல. ராஜ பார்வையில் பார்த்த மாதவியின் கண்களுக்கு பிறகு இப்போது தான் இவ்வளவு அழகான கண்களையும், அதனூடே தெளிவாக தென்படும் வில்லத்தனத்தையும் பார்க்க முடிகிறது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இந்த பெண் ஒரு ஹாலிவுட், க்ராஸ் ஒவர் பட கதாநாயகி. This girl will go places.

மற்றபடி, சென்னையில் SCV புண்ணியத்தில் (அல்லது அரசு கேபிள் டெலிவிஷனா???) யுடிவியின் வேர்ல்ட் மூவிஸ் என்கிற சானல் வருகிறது. மகா அற்புதமான எல்லா மொழி படங்களையும் போடுகிறார்கள். என்னை மாதிரி கம்யுட்டர் ஆசாமிகளுக்கு வரப்பிரசாதம். தினமும் இரவு பதினொரு மணிக்கு புரியாத பாஷையில் ஏதேனும் அற்புதமான படங்கள் போடுகிறார்கள். நேற்று Frida. ரெண்டு நாட்களுக்கு முன்பு பெயர் தெரியாத ஒரு ஜப்பானிய படம். உலக சினிமா பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த சேனல் ஒரு வரப்பிரசாதம். வேர்ல்ட் மூவிஸ் வரவில்லையெனில், இக்கணமே, உங்கள் அருகிலுள்ள கேபிள் ஆபரேட்டரை அணுகுங்கள்.

பார்க்க: Foreignbody

பைக். கார். சில ஒற்றை செருப்புகள்.

பைக் ஒட்டுவதில் பல செளகரியங்களும், அசெளகரியங்களும் இருக்கின்றன. கார் வாங்கும் அளவிற்கு காசிருந்தாலும், இன்னமும் மனது வரவில்லை. ஏனோ சென்னை ஒரு டூவிலர் நகரமாக தான் தெரிகிறது. மற்றபடி, மாருதி 800, சான்ட்ரோ, மேடீஸ் என்கிற நான்கு சக்கர தீப்பெட்டி டப்பாக்களை என்னால் காராக நினைத்து பார்க்க முடியவில்லை. [டாடா நேநோ வேண்டாம்பா சாமி] ஆனாலும், ஒவ்வொரு முறையும் பைக் ஏதாவது ஒரு குழந்தையின் ஒற்றை செருப்பின் மேல் பைக் ஏறி இறங்குவதினை போன்ற வன்கொடுமை எங்கும் இருக்க முடியாது. அது குழந்தையின் பிஞ்சு பாதங்களிலேயே ஏற்றி இறக்குவது போன்ற ஒரு மிகப் பெரிய மன உளைச்சலிலும், நிம்மதியின்மையிலும் கொண்டு போய் முடியும். தூக்க கலக்கத்தில், அந்த குழந்தை அம்மாவின் மடியிலோ அல்லது பில்லியனிலோ இருந்து கொண்டு செருப்பினை தவற விட்டிருக்கும். அச்செருப்பினை தவற விட்டதற்கு வீட்டில் செம மாத்து மாத்தியிருக்கலாம்/இருப்பார்கள். [காசோட அருமை தெரியுதா பாரு, விட்டுட்டு வந்துருக்கு. யார் அப்பன் வீட்டு காசு கொள்ளை போகுது - இது எங்க வீட்டு டயலாக்]. இது போல பல வீரவசனங்களை நீங்கள் கேட்டிருக்கக் கூடும். சிக்னலில் நிற்கும்போதெல்லாம், முதலில் பார்ப்பது கீழே தான், குழந்தைகளின் செருப்பிருப்பின் ஒரமாய் ஒதுங்கி கன மான மனதோடு போக வேண்டிதான். இந்த கொடுமை கண்ணால் தெரிய வேண்டாமே என்கிற நல்லெண்ணத்திலேயே காருக்கு மாறி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், சென்னையில் பார்கிங் பிரச்சனை அதிகம். என் அலுவலகமானாலும், வீடானாலும் சாலையில் தான் வண்டியை நிறுத்த வேண்டும். அது பொது மக்களுக்கு செய்யும் மாபெரும் கொடுமை, கால்வாசி சாலையினை அடைத்துக் கொண்டு காலையிலிருந்து மாலை வரை கார் இருப்பது. இதெல்லாம் விட முக்கியம், பெட்ரோல் விலை. சுற்றுச்சூழல் நலன் கருதியும் நான் பெட்ரோல்/டீசல் வகையறாக்களை புறந்தள்ளிக் கொண்டிருக்கிறேன். யாராவது புண்ணியவான்கள் டொயட்டா பிரயஸ் போன்ற ஹைபிரிட் கார்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் வரை பைக்கோற்சவம்தான்  போலிருக்கிறது.

தலைப்பாத்திரி

ஒவ்வொரு மொழிக்கும் ஒரு அழகிருக்கிறது. அதுவும் தமிழ் மொழியின் பரிமாணங்கள் சில சமயங்களில் பிரமிக்க வைக்கின்றன. நான் ஒரு மெட்ராஸ் வாசி. அதனால் நல்ல தமிழ் கேட்டு நாண்டு கொண்டு சாகும் பாக்கியம் பெறாத ஆள். ஆனாலும் சென்னை தமிழுக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது. வடசென்னை வாசமோ என்னவோ, தொடர்ச்சியாக மொழியின் மீதான் improvisation கள் நடந்து கொண்டே இருக்கின்றன. நான் பள்ளி படித்து கொண்டிருந்த போது, அட்ல பாஷை என்பது மிக பிரபலம். 'ஜெயம்' படத்தில் சதாவின் தங்கை எழுதும் பேசும் மொழியின் எக்ஸ்டென்ஷன் தான் அது. இப்போது நடந்து கொண்டிருப்பது "த்திரி" பாஷை. அதாவது, வழக்கமாக புழங்குகிற ஆங்கில வார்தையின் பின் த்திரி சேர்த்து முடிக்க வேண்டும். ஒரு நபர் உங்களிடம் தொடர்ச்சியாக பிரச்சனை பண்ணுகிறார். இதை தமிழில் எப்படி சொல்வீர்கள் ? "அந்தாளு ஒரு திராபை. எப்ப பார்த்தாலும் எதாவது ரப்சர் குடுத்துகினே கீறான்" இது போன தலைமுறை சுருளிராஜன் காலத்திய சென்னை தமிழ். இப்போதைய தமிழ் "அவன் ஒரு சரியான ட்ராபிளாத்திரி பா". த்திரி சேர்ப்பதின் பயன் ஒரு வாக்கியத்தினை முழுவதுமாக முடிக்க தேவையில்லை. த்திரி சேர்த்தால் அதன் அர்த்தம் முழுவதுமாக சென்றடையும் சாத்தியங்கள் கொஞ்சமதிகம். இப்படியாக சென்னை தமிழ் எஸ்.எம்.எஸ் தமிழுக்கு இணையாக மாறி கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு சில த்திரி வாக்கியங்கள்.

"பார்ட்டி தெளிவா தான் இருக்கான், ஆனா போங்காத்திரி" - ஆள் தெளிவாக இருக்கிறான். ஆனால் தன் சக்திக்கு மீறி ஆசைப்படுகிறான். அதிகமாக தனக்கு வரவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறான்.
"சரியான டைட்டாத்திரியா அவன், சரக்கடிச்சா" - ஆள் நிறைய குடித்தால், நிலையாக இருக்க மாட்டார். உச்ச நிலைக்கு போய் படுத்து விடுவார். அதனால் அவருக்கு பாடிகார்டாக இன்னொருவர் வேண்டும்.

ஒரு சந்தேகம். புதுப்பேட்டை மார்க்கெட்டில் நண்பரின் வண்டியில் ஒரு பகுதி மாற்ற வேண்டியிருந்தது. அப்போது நான் கேட்ட வார்த்தை, ஒருவர் கோவமாக "அப்ப நான் இன்னா பர்போகியா" என்றார். பர்போகி என்றால் என்ன ?Blogged with the Flock Browser

Labels: , , , , ,


Comments:
---பர்போகி என்றால் என்ன ?----

தெரியலியே...
ஏம்போக்கி? ஹிந்தி? bar ho gaya?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]