Sep 21, 2008

[சுயம்] எழுத்தெனப்படுவது.....

மஹூம். இனிமேல் எனக்கு எழுத வராது. எப்படி போட்டாலும் குயுக்தி உள்ளே நுழைந்து விடுகிறது. என்ன செய்யலாம். சரி போரடிக்கிறதே என்று சாருவினை பார்க்க போனேன்.

அஷ்விதா காபி ஷாப்பினை அறிமுகப்படுத்தியவன் நான்தான். ஆனாலும், அதற்கு பிறகு யாராவது போனடித்து, "தள்ளிட்டு வந்த பொண்ணோட 'கொஞ்சம் நேரம்' செலவழிக்கணும், எதாவது சிக்கலில்லாத ஹோட்டல் சொல்லேன்" என ஆரம்பித்தால், தொழில் மாறும் பிரச்சனைகள் அதிகம். பெரியதாய் ஒன்றும் பிரச்சனையில்லை. இந்தியாவில் செபா மாதிரியான ஹை-ஸ்ட்ரீட் எஸ்கார்ட்ஸ் ஏஜென்சி நடத்தும் யோகங்கள் அடிக்கலாம். மற்றபடி சாருவினை பார்த்தால், கோவாலு உள்ளிருந்து எஸ்.எம்.எஸ் கதைகள் எழுத சொல்வான். சாருவின் எஸ்.எம்.எஸ் கதைகள் சுத்த சைவம்.போர்னோவே இல்லை என்று சாருவே கிழக்கு மொட்டை மாடி கூட்டத்தில் சொல்லிவிட்டார். ஜே.பி. சாணக்யா எழுதும் எதுவும் போர்னோ இல்லை அது ஒரு கிளுகிளு எழுத்து. சும்மா உசுப்பு ஏத்துவது. சூடேத்துவது. மருதம், மையல் இன்னபிற வடபழனி ரோட்டோர நடுப்பக்க திறந்தமேனி மங்கைகளும், கொச்சை தமிழ் எழுத்தும் செய்யும் வேலைகள். இதனால் நான் சாருவோடு பேசுவது எல்லாமே மேட்டரான விஷயங்கள் என்கிற சந்தேகங்கள் உங்களுக்கு வரலாம். வருவதில் தப்பில்லை. அதில் கொஞ்சமில்லாமல், நிறையவே உண்மை இருக்கிறது.

சாருவினை விட்டு ஜெயமோகன் படிக்கலாம் என்றால் அவர் சரியான டூர் பிசியில் இருக்கிறார். கூகிள் மேப் மேக்கர், என்கிற ஒரு விஷயம் வந்திருக்கிறது. பேசாமல் ஜெ.மோ லோகரட்ஷகம் செய்ய கூகிள் மேப் மேக்கரில் எழுதுவதை எல்லாம் பின்கோடு முதல் கொண்டு அதில் சேகரித்து வைக்கலாம். ஊருக்கு பயன்படும். யாருக்கு தெரியும், நாளைக்கு கிளப் மஹிந்த்ராவின் ஆஸ்தான லொகேஷன் அட்வைஸ்ராக, பி எஸ் என் எல் வேலையினை விட்டு சேர உத்தரவு வரலாம்.நான் ஊர் சுற்றியதெல்லாம் ரொம்ப சொற்பம். பன்னிரண்டாவது படிக்கும்போது ஆளுக்கு 100ரூ வீதம் எடுத்து கொண்டு விஜிபி கோல்டன் பீச் போய் வந்தது தான் என் புழக்கடையில் இருக்கும் வரலாறு. மற்றபடி எனக்கு இன்னமும் ஊர் சுற்றுதல் செட்டாகவில்லை. எது சாப்பிட்டாலும் கழிவறைக்கு போகும் அல்லது கழிவறைக்கு போகவேண்டிய ஒரு சென்சேஷனோடே இருக்கும் ஒரு மாதிரியான "போபியா"விலிருந்து இன்னமும் என்னால் வெளிவரமுடியவில்லை. இதை ஏன் முன்னாடியே சொல்லவில்லை என்று நீங்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது. சோபியா-வாக இருந்தால் சொல்லலாம். சோபியா என்றொரு எம் டி.வி வி.ஜே இருந்தாள். செப்டம்பர் மாதம் பாடலுக்கு கர்சீப் துணியோடு ஆடியிருப்பார். எதற்கு காஸ்ட்யூமருக்கு சிரமம் கர்சீப் துணியினை சரியாக பொறுத்த. சோபியா நண்பியானால் 'எஸ் 'ஸாகி மோக்காவோ / அவிஷ்டாவோ போய், ஜொள் விட்டதை பெருமையாக சொல்லி கொள்ளலாம். எனக்கு ஆவது எல்லாம் "மானாட மயிலாட"வில் ஆடும் ஜெயஸ்ரீ மாதிரியான பெண்கள். என்னத்த சொல்வது! போபியாகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது? ஜெமோ இல்லாமல், அடுத்தது வாகாக கூகிள் டாக்கினில் அடிக்கடி மாட்டுபவர் பா.ராகவன்.

பா.ராகவன் ஒரு டைட்டில் மாஸ்டர். தலைப்பினை வைக்க இன்னொரு ஆள் பிறந்து வரவேண்டும், இல்லை ஏற்கனவே பிறந்து நான் பாலோ செய்யாமல் டிவிட்டரில் எழுதி கொண்டிருக்கிறாரோ என்னவோ. கனகவேல் காக்க கதையினை இன்னமும் சொல்லாமல் "அபூர்வ சகோதரர்கள்" குள்ள அப்பு ரகசியமாய் பொத்தி வைத்திருக்கிறார். பாரா வோடு சுதேசமித்திரன் உயிரோசையில் எழுதிய தமிழ்சினிமா பற்றிய கதையினையும், என்னுடைய டிவிட்டர் எதிர்ப்புகளையும் சொன்னேன். நச்சென்று பாரா சொன்ன மேட்டர் ஒன்று, அதை அவர் அனுமதியில்லாமல் சொல்லி எதற்கு சாபங்களை வாங்கி கொள்வானேன். ஆயில் ரேகை முடித்து அடுத்து என்ன என்று தெரியவில்லை. மனிதரோடு பேசி கொண்டிருந்தால் non-fictionதான் எழுத வரும். புனைவு ம்ஹூம். பேசாமல் அ-புனைவினை புனைவு போல அவதானிக்கலாம், சேச்சே என்ன மொழி இது, அவதானம், அ-புனைவு. இதற்காகவே கடந்த இரண்டு வருடங்களாக காலச்சுவடு, உயிர்மை சந்தா கட்டாமல் நிறுத்தி வைத்திருக்கிறேன். தமிழிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் பண்ணுவதற்கே போராட வேண்டி இருக்கிறது.[இதில் சாரு தமிழிலிருந்து நல்ல ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்ய வேண்டும் என்கிறார்] இந்த ஜிகினா வேலைகள் இல்லாததனாலேயே, பாரா தோளில் கைப்போட்டு உரையாடும் நண்பர். மற்றவர்கள் பயமுறுத்துகிறார்கள். திரிஷா-விஜய்-நயன்தாரா மோதல்களின் பின்புலத்தினை கொஞ்ச நாள் முன்பு டிவிட்டரில் எழுதியிருந்தேன். டிவிட்டர் பரம வசதியாக இருக்கிறது, குட்டை பாவாடை ஆங்கிலோ-இந்திய செகரட்டரி போல. என்னவேண்டுமானாலும் பண்ணிக் கொள்ளலாம். எதிர் கேள்வி கேட்காமல். ரொம்ப பெரிய பொறுப்புகள் இல்லாமல். [இந்த வரிக்கு பின்னால் பெண்ணுரிமை கழகங்கள்/சங்கங்கள் எல்லாம் கை கோர்த்து என்னை ஒரு MCP என அழுத்தம் திருத்தமாக கட்டம் கட்ட முடியும். அவர்களுக்கு இந்த வார குமுதம் கவர் ஸ்டோரியினை பரிசளிக்கிறேன்] பா.ராகவன், சாரு, ஜெமோ இவர்களின் உழைப்பு அளப்பரியது. நான் மகா சோம்பேறி எழுத்து விஷயத்தில். சக்கையாக உறிஞ்சப்பட்டு உதறி, உதறி எழுதப்படும் பால்பாயிண்ட் பேனா அளவுக்கு தான் என்னுடைய எழுதும் முயற்சியும். விட்டு விட்டு எழுதுகிறேன், ஆனால் விடாமல் எழுதுகிறேன் என்கிற நம்பிக்கை மட்டும் இருக்கிறது.

கோயமுத்தூரில் இருக்கும் நண்பர் மூலமாக எப்படியாவது R.P. ராஜநாயஹத்தினை பார்க்க வேண்டும். மனிதருக்கு தொழில்நுட்பம் தெரியுமா, தெரியாதா என்று தெரியாது. ஆனால் வலைப்பதிவின் பார்மெட்டினை பக்காவாக புரிந்து வைத்து கொண்டு, நான்-லீனியராக, பிரபலங்கள் பற்றி எழுதும் அந்த நடை பிடித்திருக்கிறது. கண்டிப்பாக பார்க்க, படிக்க வேண்டிய பதிவுகளில் அதுவும் ஒன்று.

கலாப்ரியாவும் வலைபதிப்புக்கு வந்து விட்டார். சொன்னவர் இரா.முருகன்.

இரா.முருகனோடு முதல் சந்திப்பு. சுஜாதா பார்ட் 2. நம்பூத்ரிகள் பற்றி அவர் சொன்ன விஷயம் அட்ல்ட்ஸ் ஒன்லி மட்டுமல்ல, ட்ரிபிள் x சமாச்சாரம். கொஞ்சநாளைக்கு மெக்சிகன் சலவைக்காரி ஜோக்கு போல, யோசித்து கொண்டிருங்கள். மனிதர் சரளமாக பேசுகிறார். சரளம் என்றால் அப்படி ஒரு சரளம், சிற்றிதழ், அவருடைய தளம், சுகுமாரன், லே மென் ப்ரதர்ஸ், சுஜாதா, கிரேசி மோகன், கமலஹாசன், மென்பொருள் நிறுவனங்களின் ஆட்குறைப்பு, மூன்று விரல் சுதர்சன், விஸ்வரூபம் என சகட்டு மேனிக்கு 11/2 மணி நேரம் பேசி தள்ளினோம். என் பங்குக்கு நான் ஏற்கனவே எழுதிய Disaster Capitalism படியுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன். வழக்கமாக பேசினால் மைக்ரேன் வந்துவிடும். இரா.மு விஷயத்தில் அது தலைகீழ். இரா.முருகனுக்கு தலைவலி என்றால் அனாசினுக்கு பதிலாக இனி இரண்டு எஸ்.எம்.எஸ்கள் அனுப்புவார் என்பது நிச்சயம். அந்த விஷயத்தில் நானும், பிரகாஷும் நல்ல/வல்ல வர்கள்.இப்படிதான் சீரிகாந்த் சென்னை வந்த புதிதில் போட்ட மொக்கையினை பற்றி பிரகாஷ் விரிவாக எழுதியிருப்பார். அடுத்தமுறை பார்க்கும்போது அடுத்த படத்தில் ஏதாவது ஒரு வேஷத்திற்கு "பிட்டு" போட வேண்டியது தான். நானும் எவ்வளவு நாள் தான் பொட்டி தட்டுவது.

மற்றபடி, வாரமொருமுறை ஒரு பெரும் நிதி சார் நிறுவனம் அமெரிக்காவில் திவாலாகிறது. அள்ள அள்ள குறையாத அமுதசுரபி போல, பெடரல் ரிசர்வும் வாரி வழங்கி கொண்டிருக்கிறது. கலைஞர் டிவியில் அண்ணா பிறந்த நாளை ஆய்த எழுத்தோடு கொண்டாடினோம். காசாபிளாங்கா பார்த்து இன்க்ரீட் பெர்க்மென் மேல் மையல் கொண்டு ஒரு 60 ஆண்டுகள் முன்னாடி பிறக்கவில்லையே என்று துக்கிஸ்டாகி, நடு இரவில் கூகிளாத்ரி துணையோடு அவர் படங்களை பார்த்து கொண்டிருந்தேன். பெரியதாக எதுவுமில்லை, வெயிலுமில்லாமல், மழையுமில்லாமல், நமுத்து போன ரஸ்க்கு போல சென்னை போரடிக்கிறது. வேறென்ன சொல்ல.

Labels: , , , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]