Feb 2, 2009

[ஈழம்] தீயினால சுட்டபுண் உள்ளாறும், ஆறாது.....

முதலில் நண்பர்கள் அரவிந்தன், சுகுணா திவாகர், லக்கிலுக், இன்னபிற முகமரியா, வலைப்பதிவறியாத நண்பர்களுக்கு நன்றிகள். வேலை பளுவின் காரணமாக முத்துக்குமாரின் இறுதிஊர்வலத்திற்கு செல்ல முடியாமல் போனது. ஆனாலும், தொடர்ச்சியாக செய்திகள் எனக்கு செல்பேசியில் வந்தவண்ணமிருந்தன. குறைந்த பட்சம் 25000 பேர்கள் கலந்து கொண்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது.

ஜனவரி 31 இரவு 12.00 மணி வாக்கில் முத்துக்குமாருக்கு மொத்தமாக விடைகொடுத்தாகி விட்டது. முத்துக்குமாரின் மரணம் என்னமாதிரியான சலசலப்புகளையும், தீர்மானங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பது நீங்கள் படிக்க கூடிய பத்திரிக்கையினை பொறுத்து அல்லது பார்க்கக்கூடிய சானலை பொறுத்து மாறலாம். ஆனால் மாற்ற முடியாதது என்னவெனில், எந்த தமிழ் சேனலும் (மக்கள் தொலைக்காட்சி நீங்கலாக) இந்த மாபெரும் ஊர்வலத்தினை பற்றி எவ்விதமான மூச்சும் விடவில்லை.

ஊடகங்கள் இது ஒரு விஷயமே இல்லை என்பது போல,இருட்டடிப்பு செய்கின்றன. மக்கள் தொலைக்காட்சி மட்டுமே அரை மணி நேரம் தொகுத்து வழங்கினார்கள். மற்ற எல்லா சானல்களும் ஏதோ நெடுஞ்சாலையில் "லாரி மோதி இரண்டு பேர் மரணம்" என்கிற அளவிலேயே இந்த நிகழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். ஜெயா டிவி பற்றி சொல்ல தேவையில்லை, அது தமிழன மக்களுக்கும், ஈழத்தமிழர் நலனுக்குமே எதிரான சானல், அதில் செய்தி வருமென்று எதிர் பார்த்தல் முட்டாள்தனம். ஆனால், வைகோ, விஜயகாந்த், ஜெயலலிதா என போட்டி போட்டுக் கொண்டு நேரடி ஓளிபரப்பிய நடுநிலை சேனலான சன் டிவிக்கு என்ன வந்தது? ஒரு வேளை “கண்கள் பனித்தன.இதயம் இனித்தது” போன்றவற்றின் after effects-ஒ என்னமோ, சம்பிரதாயத்திற்கு கூட இதை ஒரு முழுமையான செய்தியாக கூட காட்டவில்லை அல்லது உலகச்செய்திகளில் அண்டார்டிகாவில் இருக்கும் பனிக்கரடிகளின் இனப்பெருக்கத்திற்கு இணையான முக்கியம் நம்மூரில் ஒரு மனிதன் தன்னை பற்ற வைத்துக் கொண்டு செத்து போவதில் இல்லையோ, என்னவோ. பனிக்கரடியும், ஈழப்பிரச்சனையும் ஒன்றா என்ன? ஊர்வலத்தில் பங்குபெற்றோர் சொன்னதிலிருந்து ஒரு தமிழ் சேனலும் அங்கே தலை காட்ட துணியவில்லை, துணிந்தவர்களும், ஏதோ ரெண்டு கிளிப்பிங் கிடைக்குமா, 20 செகண்ட் காட்ட முடியுமா போதும் என்கிற அளவிலேயே இருந்திருக்கின்றனர். தமிழகம் முழுவதும் ஒரு கொதிநிலை இருக்கிறது. ஆனால் முதல்வர் இதை ஒரு மேட்டராகவே பார்க்கவில்லை.

முத்துக்குமாரின் மரணத்திற்கு பின்னான காரண காரியங்களை அலசுதல் என்னுடைய நோக்கமல்ல. நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். புலி ஆதரவாளர்/எதிர்ப்பாளர், திமுக ஆதரவாளர்/எதிர்ப்பாளர், ஈழ்த்தை பற்றி துளியூணாடாவது கவலைப்படுபவர், எவன் எக்கேடு கேட்டால் எனக்கென்ன என்று நினைப்பவர், பிரபாகரன் தேவதூதர்/பயங்கரவாதி/சாத்தான் என யாராக வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள். ஒரு மனிதன் ஒரு நோக்கத்திற்காக செத்திருக்கிறான். அவனுடைய சடலத்தினை பார்க்க ஒரு மக்கள் கூட்டமே வருகிறது.அம்மரணம் எழுப்பியுள்ள கேள்விகள், மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல்சாரா அமைப்புகள் இம்மரணத்தினை முன்வைத்து போராட்டங்களையும், வினாக்களையும் எழுப்பியுள்ளார்கள். இத்தகைய ஒரு மரணத்தினை இருட்டடிப்பு செய்வதின் மூலம், என்னவிதமான செய்தியினை ஊடகங்கள் மக்களுக்கு தருகின்றன?

முத்துக்குமார் ஒரு மேட்டரேயில்லை. ஏதோ செத்தான் லூசுத்தனமாய், அவனுக்கு பின்னால் கொஞ்ச லூசுகள் ஆர்ப்பரித்தார்கள் என்பதுதான் ஊடகங்களின் பார்வையா? சென்னையில் இருப்பதாலும் நண்பர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டதாலும் எனக்கு உண்மையில் அங்கே என்ன நடந்தது என்பது ஒரளவுக்கு தெரியும். தமிழ் உணர்வோடு செங்கல்பட்டு தாண்டி இருப்பவனுக்கு என்னவிதமான செய்திகளை இந்த ஊடகங்கள் தாங்கி சென்றன? ஆக ஒரு செய்தியினை அது உங்களுக்கு சாதகமான விஷயங்கள் இல்லையென்றால் வெளியிட மாட்டேன் என்கிறீர்களேயானால், நீங்கள் நான்காவது தூணாயிருங்கள். நாற்பாதாயிரமாவது தூணாக இருங்கள் என்ன பிரயோசனம். இது திட்டமிடப்பட்டு, அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டு நடத்தப்பட்ட இருட்டடிப்பு. பச்சையாக சொல்வதென்றால் அயோக்கியத்தனம். ஊடக பயங்கரவாதம். தனியார் ஊடகங்கள் தன்னிலை தவறி அரசுக்கு சார்பாக இருக்கிறார்கள் - அதற்கு தான் தூர்தர்ஷன் இருக்கிறதே, நீங்களுமா? ஹிட்லரின் காலத்தில் பொய்யை பரப்போ பரப்பென்று பரப்பி அதனை உண்மையென்று நிருபணமாக்கக்கூடிய வேலையினை ஒரு கோயபல்ஸ் செய்தான் என்றால், தமிழகத்தில் இப்போது இருப்பது கோயபல்ஸ் ஊடகங்கள். ஒரு உண்மையினை மறைப்பதும் குற்றமே. உண்மையினை மறைத்து மக்களுக்கு நேர்மையான செய்தியினை தராமல் இருப்பதற்கு பெயர் தான் ஊடக தர்மமெனில், உங்களுக்கும் சோ மாதிரியான ஆட்களுக்கும் என்ன வித்தியாசம். சோ உண்மையினை அவருக்கு ஏற்றாற் போல் திருத்தி, வளைத்துக் கொள்வார். நீங்களும் அதையே செய்தால், நீங்கள் யார் - நீங்களும் அவாளாக முகமூடி தரித்து கொள்கிறீர்களா ?

இந்த அயோக்கியத்தனத்தினை செய்துவிட்டு முதல்வர் சாமர்த்தியமாக இதனை அரசியலாக்காதீர்கள் என்று அறிக்கை விடுகிறார். யார் இதனை அரசியலாக்குகிறார்கள்? ஊர்வலத்தில் கலந்து கொண்ட எந்த கட்சியும் முத்துக்குமாரினை சொந்தம் கொண்டாவில்லை. முத்துக்குமாரின் சாதி சார்ந்த ஒரு பேனரையே கிழித்து போட்டுவிட்டுதான் ஊர்வலம் நடந்தத்.ஆக எந்த சாதி கட்சியும் முத்துக்குமாரை சொந்தம் கொண்டாடவில்லை. பழ.நெடுமாறன் தலைமேயேற்ற இரங்கல் கூட்டத்திலும் மிகத் தெளிவாக முத்துக்குமார் இலங்கை தமிழர்களுக்காக, கொள்கைக்காக உயிர் நீத்தார், ஆகவே வெறுமனே கருப்பு கொடியினை மட்டுமே குத்திக் கொண்டும், குடிக்காமலும் இறுதி ஊர்வலத்துக்கு வரவேண்டும் என்று சொல்லியிருந்தார். ஆக பங்கு கொண்ட யாருமே இதனை அரசியலாக்க முயலவில்லை.திமுக அரசு தான் இதனை அரசியலாக்கி அதன் மூலம் லாபம் தேடப் பார்க்கிறது.

ஆனால் முதல்வருக்கு என்ன பயமோ தெரியவில்லை இதனை அரசியலாக்காதீர்கள், அரசியலாக்காதீர்கள் என்று ஆரஞ்சு பழச்சாறு குடித்துக் கொண்டு அறிக்கை விடுகிறார். எதற்கு கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை தருகிறீர்கள்? நீங்கள் தான் இது ஒரு மேட்டரேயில்லை என்று சொல்லிவிட்டீர்களே, அப்புறமென்ன பயம்? மைனாரிட்டி திமுக அரசு என்று சொல்வதில் தப்பேயில்லை. அந்த மைனாரிட்டி பயம் அறிக்கையில் தெரிகிறது. முதல்வர் எதற்காக பயப்படுகிறார் என்று புரியவில்லை - ”தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை” என வசனமெழுதியவர் இன்னமும் 2 மாதங்கள் கூட தாங்காத மத்திய அரசுக்கு சாமரம் வீசி என்ன சாதிக்க போகிறார்? அது சரி, பாவம் அவருக்கும் தான் எவ்வளவு பிரச்சனை. ஈழப்பிரச்சனை தலை போகிற பிரச்சனையா, என்ன நடக்கும் இன்னமும் 2-3 இலட்சம் தமிழர்கள் செத்து போவார்கள். போனால் போகட்டும். சாவதற்கென்றே பிறந்த ஜாதியது. ஆனால், தயாளு அம்மாள் ஈன்றெடுத்த “அண்ணன் அண்ணல்” கோவித்து கொண்டு போய்விட்டால் நீங்களா வந்து சமாதான படுத்துவீர்கள். உங்களுக்கென்ன ஐ.நா இருக்கிறது, நார்வே இருக்கிறது. பாவம், பரிதாபத்திற்குரிய முதல்வர் வீட்டு பிரச்சனையினை தீர்க்க யார் முன்வருவார்கள். நீங்கள் நடத்துங்கள் ஐயா, ஏனெனில் இது உங்கள் அரசாங்கம். கேட்பார் யாருமில்லை.

பிரணாப் முகர்ஜியினை இலங்கை அனுப்பியதையே கிராண்ட் ஸ்லாம் சாதனை போல, ’இனமான காவலர்’ அன்பழகன் அறிவிக்க, அதையும் மேஜை தட்டி வரவேற்றார்கள் திராவிட குஞ்சுகள். போன பிரணாப் முகர்ஜி அங்கே போய் தான் சொல்கிறார், தான் இலங்கை அரசின் அழைப்பினை ஏற்று போன விருந்தாளி என்று. கிராமப்புறங்களில் “விருந்தாளிக்கு பொறந்த பய” என செல்லமாக விளிப்பார்கள். இப்போது விருந்தாளி யார் - பிரணாப் முகர்ஜியா, அன்பழகனா அல்லது தமிழின காவலரா? அப்படியே போய் பிரணாப் முகர்ஜி சாதித்தது என்ன? அவுட்சோர்ஸ் பண்ணிய இந்திய ரேடார்களுக்கும், என்ஜினியர்களுக்குமான இதுவரைக்குமான பில்-லினை செட்டில் செய்து கணக்கு நேர் செய்யபோனாரா? (மார்ச் வருகிறதே, கணக்கு வழக்குகளை இந்தியாவில் முடித்தாகவேண்டும் அல்லவா?) என்ன காரணம் சொல்லி நீங்கள் அனுப்பினீர்கள், என்ன நடந்தது ? உண்மையில் எதுவும் நடக்கவில்லை என்பது தான் கடைந்தெடுத்த உண்மை.

தெஹல்காவில் வந்திருக்கும் இந்த செய்தியினை படியுங்கள். இலங்கையில் இருக்கும் சிங்கள பேரினவாத அரசு எந்தளவிற்கு தமிழ்மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது என்பது தெரியும். இந்நிலையில்,உலக நாடுகளின் காதுகளில் பூச்சுற்ற 48 மணிநேரம் போர்நிறுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று புரூடா விடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் ஈழத்தமிழர்களின் நலனை காக்காதவர்களும், உயிர் துறத்தலை முட்டாள்தனம் என்று சொல்பவர்களும் தான் தமிழ்நாட்டில் இனமான காவலர்கள்.

சரி ஒரு வாதத்துக்கு உயிர் துறத்தல் முட்டாள்தனம் என்றே வைத்துக் கொள்வோம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தானை தலைவர் தண்டவாளத்தில் தலை வைத்தது படுத்தது முட்டாள்தனத்தில் வருமா? எந்த இனத்தினை காக்க நீங்கள் அடைமொழிகள் வைத்து கொண்டு சுற்றுகிறீர்கள்? அல்லது அரசாணையில் அறிவித்து விடுங்கள் முத்துக்குமார் ஒரு கன்னடிகா அல்லது மலையாளி அல்லது தெலுங்கர் என்று. நாங்களும் எங்கள் வேலையை பார்த்து கொண்டு போய்விடுகிறோம்.

25000 மக்கள் ஒரு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார்கள். ஒரு லட்சம் மக்கள் லண்டன் வீதிகளில் அணி திரள்கிறார்கள். சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதமிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் உணர்வுரீதியாகவும், மனித உரிமை ரீதியாகவும் குரல்கள் எழுப்பப்படுகின்றன. செஞ்சிலுவை சங்கம் இலங்கையில் நடப்பது தவறென சொல்கிறார்கள். ஐநாவில் இலங்கை அரசு மீது மனித உரிமை மீறல் கவலைகள் எழுப்பப்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் இது ஒரு பிரச்சனையே இல்லை என்று அரசு நினைக்கிறது. முதல்வரும் ஈழம் கிடைத்தால் சந்தோஷமடைவேன், ஆனால் என்னலான எந்த வேலையையும் நான் செய்யமாட்டேன் என்று தெளிவாக உணர்த்தியிருக்கிறார். இன்னமும் தமிழின தலைவர் என்கிற அடைமொழிக்கு தகுதியானவர்தானா என்பதை உங்களின் யூகத்திற்கு விட்டுவிடுகிறேன்.

Labels: , , , ,


Comments:
திமுக அழியவேண்டும், திமுக எதிர்ப்பை வைத்து உயிர்த்து இருக்கும் அதிமுக அழியவும் இது வழிவகுக்கலாம் என்பதால் இன்னமும் நல்லது. இது ஆலமரம் வீழ்ந்தால்தான் நடக்கும் என்றால் விழுந்து தொலைக்கட்டும்.
 
//இன்னமும் தமிழின தலைவர் என்கிற அடைமொழிக்கு தகுதியானவர்தானா என்பதை உங்களின் யூகத்திற்கு விட்டுவிடுகிறேன்//

தலைவர் என்பதெல்லாம் இருக்கட்டும்.முதலில் அவர் தமிழன் என்று சொல்லிக்கொள்ள அருகதை இருக்கிறதா என்பதே என் கேள்வி
 
அழகிரிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல நேரமிருக்கு. முத்துகுமாருக்கு இரங்கற்பா எழுத நேரமில்லையா?
 
ரோசாவசந்த்,

திமுக/அதிமுக இரண்டுக்கும் இருக்கிற வித்தியாசத்தில் திமுக தான். ஆனாலும், இன்றைக்கு உள்ள நிலையில் திராவிட கட்சிகள் என்று ஆட்டம் போட்டு கொண்டிருக்கும் எல்லோருக்குமே அழிவு காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இதன் மூலாதார பிரச்சனை, திராவிட கட்சிகள் இல்லாமல் போனால், கேடு கெட்ட காங்கிரஸும், குடி கெடுக்கும் பிஜேபியும் இன்னமும் சீரழித்துவிடும் என்பதாலேயே திராவிட கட்சிகளை திட்டித் தீர்த்தாலும் அவைகள் வேண்டியவைகளாகின்றன.

அரவிந்தன்,

இரங்கற்பா யாருக்கு தேவை? முடிவெடுக்க சொல்லுங்கள் கலைஞரை.
 
திராவிடக் கட்சிகளின் Use Before தேதி முடிந்துவிட்டது. பொதுமக்களின் உணர்வுகளுக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கும் உள்ள தொலைவு நீண்டுகொண்டே போகிறது. அரசியல் கட்சிகள், ஊடகங்கள், அறிவுஜீவிகள் என்று வெகுஜனத்தைப் பிரதிபலிக்க வேண்டிய, வழிநடத்த வேண்டிய அனைத்து கருவிகளுமே தமிழகத்தில் செயலிழந்து கிடக்கும் அவலத்திற்கு எங்கே போய் முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை.

ஒட்டகத்தின் முதுகில் எட்டுமடங்கு பொதியை ஏற்றிவிட்டார் ராஜபக்ஷே; கடைசி ஒற்றை வைக்கோலிழைதான் மீதம், அகந்தையால் அதையும் சுமத்தும்பொழுது உலகம் விழித்தெழும்.
 
//தமிழின தலைவர் என்கிற அடைமொழிக்கு தகுதியானவர்தானா//

தமிழின துரோகி என்ற அடைமொழியை பரிசீலிக்க வேண்டிய தருணம் இது.

தமிழக அரசியல் திராவிடக் கட்சிகளைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது.
 
தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், அரசியல் ரீதியான கருத்துப் போர்களுக்குமிடையேயான இடைவெளி பொருத்தமுடியாத அளவிற்கு பெருத்துவிட்டது.

தமிழக கட்சிகள் தாங்கள் சிந்திப்பதுதான் மக்களும் சிந்திக்கிறார்கள் என்று குண்டுச்சட்டியில் குதிரை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலை நீடிக்குமாயின், திமுக/அதிமுகவின் ஒட்டுக்களை விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு காலக்கட்டம் ஒரு தசாம்சத்தில் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
 
Karunanidhi nai... is trying to downplay this whole thing with his usual tactics. Where did all te great writers of Tamilnadu has gone now ?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]