Feb 14, 2009

கொத்து பரோட்டா

மரண தண்டனை - ஒரு பார்வை

டிவிட்டரில் என்னை ஒரு குழப்பவாதியாக பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். நிதாரி தொடர் கொலைகள் சம்பந்தமாக மொஹிந்தர் சிங் பாந்தேருக்கும், அவருடைய வேலைக்காரர் சுரீந்தர் கோஹ்லிக்கும் நேற்று மரண தண்டனை வழங்கப்பட்டது. மரண தண்டனை வழக்கத்தினை ஒழிக்க வேண்டும் என்கிற சிந்தனையை தொடர்ச்சியாக எழுதியிருக்கிறேன். ஆனாலும், இந்த மரண தண்டனையை ஆட்சேபிக்கவில்லை. வழக்கமாக மரண தண்டனை வழங்கப்படும் குற்றங்கள் எல்லாமே தெரிந்து, புரிந்து செய்யப்படும் குற்றங்கள் - தீவிரவாத செயல்கள்,குடும்பத்தினை கொன்றழிப்பது போன்றவை. இதில் பாதிக்கப்படுபவரும், பாதிப்பினை உள்ளாகுபவருக்கும் தெரிந்தே நடக்கும். ஆனால், நிதாரியில் நடந்தது அதுவல்ல. பாந்தேரும்,கோஹ்லியும் நன்றாக திட்டமிட்டு, சிறுமிகளை/இளங்கன்னியர்களை ஆசைக்காட்டி பங்களாவிற்கு வரவைத்து, மயக்கத்திற்கு உள்ளாக்கி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, அவர்களை கொன்றிருக்கிறார்கள். கொன்றதோடு மட்டுமல்லாமல், அவர்கள் அங்க பாகங்களை வெட்டி, குரூரமாய் செயல்பட்டிருக்கிறார்கள். ப்ராங்கென்ஸ்டின் மான்ஸ்டர் கூட இவ்வளவு கொடூரமாக வேலை செய்யுமா என்று தெரியவில்லை. இந்த மாதிரியான மனிதர்களை எந்த முறையாலும் மாற்ற முடியும் என்று தோன்றவில்லை. இங்கே இந்த தண்டனை சரிதான். எந்தளவிற்கு இது கொடூரம் என்றால், அந்த தெருவினையே மக்கள் புறக்கணித்து வேறு பாதை வழியாக செய்கிறார்கள். காரியங்கள் நடந்த D-5 பங்களா இருக்கும் தெருக்கு போகவே மக்கள் அஞ்சுகிறார்கள். இந்த மாதிரியான ஒரு பொது பயத்தினையும், கவலையையும் பெற்றோர்கள் மத்தியுல் உண்டாக்கியிருக்கும் அசாதாரணமான பயத்தையும் எப்படி போக்க முடியும்? 7 -15 வரையிலான சிறுமியர்களுக்கு,அவர்களின் வாழ்நாள் முழுவதும் இந்த கொடூரம் தொடர்ச்சியாக அலைக்கழிக்கும், அதை எப்படி போக்க போகிறோம்?

பார்க்க: ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி

வேலை என்றொரு சாத்தான்

இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்திருக்கும் ஒரு குட்டி செய்தி. சென்னை ஆவடியில், வேலை போன காரணத்தினால் ஒரு 24வயது யுவதி தூக்கு மாட்டிக் கொண்டு இறந்திருக்கிறார். இன்னொரு செய்தியில் ஒரு இளைஞரும் வேலை போன காரணத்தினால் தற்கொலை செய்திருக்கிறார். மிக முக்கியமான ஒரு சமூக பிரச்சனை இது. இதை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், இதன் பாதிப்புகள் அதி பயங்கரமாக இருக்கும். இன்றைக்கு இருக்கக்கூடிய போட்டி உலகத்தில், உங்களின் வேலை தான் உங்களின் ஐடெண்டிடி கார்டு. கடந்த ஐந்து வருடஙகளாக ஏற்பட்ட குமிழியில் எல்லோரும் ’சொர்கலோகம் மண்ணில் வந்ததே” என்கிற தொனியில் ஆட்டமாடி கொண்டிருந்தோம். நான்கு இலக்க சம்பளங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படவில்லை.எல்லோரும் கணினி, டெலிகாம்,ரீடெய்ல் சம்பந்தப்பட்டதுறைகளேயே நம் அடுத்த தலைமுறைக்கு சொல்லி கொடுத்தோம். 90களுக்கு பிற்பாடு பிறந்த ஒரு தலைமுறைக்கு மேற்சொன்னவை மட்டுமே வேலை செய்யும் தொழில்களாக தெரிந்தன. இப்போது குமிழி வெடித்து, உலகளாவிய பொருளாதார தேக்க/மந்த நிலை ஆரம்பித்து நிலவி வருகிறது. இதன் தாக்கங்கள் உலகெங்கிலும் எழுச்சி பெற்று வரும் வேலையில்லா திண்டாட்டத்தினை அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் கடந்த காலாண்டில் (அக் - டிச 2008) 500,000 நபர்களுக்கு வேலை பறிபோய் இருக்கிறது. இது வெறுமனே சம்பள பிரச்சனையில்லை. மிக முக்கியமான சமூக பிரச்சனை. வேலையில்லாத இளைஞர்களை விட மோசமான ஒரு தீவிரவாத கும்பலை வேறெங்கும் நாம் பார்க்க முடியாது. இதை எப்படி சரி செய்யப் போகிறோம்?

பார்க்க: டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி

அஹம் ப்ரம்மாஸ்மி

”நான் கடவுள்” இன்னமும் பார்க்கவில்லை. ஆனால் பார்த்தவர்கள் எழுதிய விமர்சனங்களையெல்லாம் படித்துவிட்டேன். இது என்னமாதிரியான படம் என்பது பற்றிய கனவெல்லாம் எனக்கில்லை. பாலாவின் ஜீனிய்ஸ்னெஸ், நந்தா வோடு போயிற்று என்பது என்னுடைய தனிப்பட்ட அபிப்ராயம். பிதாமகன் - சூர்யா, விக்ரம் நடிப்பினை தாண்டி, இரண்டு வரி கதை. அதற்கு இரண்டே முக்கால் மணிநேரம் கொஞ்சம் கொடுமைதான். ஆனாலும், கண்டிப்பாக படத்தினை பார்ப்பேன். பாலா என்கிற கலைஞன் மீதான மதிப்பு என்றைக்குமே குறையவில்லை. இந்தியாவில் dark films என்கிற வகையறா படங்கள் மிக மிக குறைவு. அந்த வகையறா படங்களை இயக்கும் மிக சொற்பமான இயக்குநர்களில் பாலாவும் ஒருவர். எவ்விதமான கமர்ஷியல் கட்டாயங்களுக்கும் உட்படாமல் வெகுவாக சமரசங்கள் செய்து கொள்ளாமல் தமிழில் படம் செய்பவர்கள் மிக குறைவு. அதில் பாலாவும் ஒருவர்.

Labels: , , , , ,


Comments:
//மரண தண்டனை//

அப்படியென்றால் நீங்கள் மரணதண்டனை என்ற குற்றவியல் தண்டனை முறையை எதிர்க்கவில்லை என்று தான் பொருள். எத்தகைய குற்றங்களுக்கு கொடுக்கப்படலாம், எப்படி செயல்படுத்தப்பட வேண்டும் போன்ற விஷயங்கள் செயல்முறை (implementation) ரீதியானவை. தத்துவரீதியானவை அல்ல. ஒரு குற்றத்திற்கு மரணதண்டனை சரி என்று நீங்கள் கருதினால் கூட தத்துவரீதியாக அந்த தண்டனை முறை உங்களுக்கு ஏற்புடையது என்று தான் பொருள் கொள்ள முடியும்.

நல்லது. மரணதண்டனையை தத்துவரீதியாக நானும் ஏற்றுக் கொள்கிறேன். :-) Political philosophy (power of the state to take a human's life), Moral philosophy (fear of death as an instrument for instilling morality in society), Religious philosophy (enuf said) - எல்லாவற்றிலும்.
 
Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
 
//டிவிட்டரில் என்னை ஒரு குழப்பவாதியாக பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.//

ட்விட்டரில் மட்டுமா? :-))

மரண தண்டனை இருக்க வேண்டுமா வேண்டாமா என்ற விவாதத்திற்கான ஆதாரமே ‘ஈடு செய்யப்படாத இழப்பான மரணத்தை தண்டனையாக ஒரு நிறுவனம் (அரசாங்கம், கோர்ட்) வழங்கக் கூடாது’ என்பதுதானே. :-)

//எவ்விதமான கமர்ஷியல் கட்டாயங்களுக்கும் உட்படாமல் வெகுவாக சமரசங்கள் செய்து கொள்ளாமல் தமிழில் படம் செய்பவர்கள் மிக குறைவு. அதில் பாலாவும் ஒருவர்.//

மன்னிக்கவும். பாலாவின் படங்கள் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையைக் கொண்டு ஆக்கப்பட்டிருந்தாலும், கமர்ஷியல் மசாலாத்தனங்கள் இல்லாமல் இல்லை. யாரும் சொல்லாத விஷயத்தை சொல்வது மட்டுமல்ல, அதை எப்படி சொல்கிறார் என்பதும் முக்கியம்தானே. படம் பார்க்கும் நமக்கு காட்சிகளிலிருந்து வேறு எந்த கற்பனையும் கிடைக்காத தட்டையானதொரு பாணிதான் பாலாவுடையது. இதுவே அவர் படங்கள் வெகுஜனங்களை சென்றடைய உதவுகின்றது.

தமிழில் சமரசம் செய்யாமல் சினிமா செய்தவர்கள் மிகவும் சிலரே. ருத்ரய்யா அதில் மிகவும் முக்கியமானவர்.
 
உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]