Feb 27, 2009

வாத்தியார் ஒராண்டுக்கு பிறகு....

நேற்று நடந்தது போல் இருக்கிறது. எனக்கு வந்த முதல் எஸ்.எம்.எஸ் துபாய் ஆசாத் பாயிடமிருந்து வந்தது. உடனடியாக சன் செய்திகள் பார்த்தால் கீழே ஸ்கொர்ல் ஒடிக் கொண்டிருந்தது. ஒரு நிமிடத்திற்கு ஒரு கனத்த பாரமான சோகம் நெஞ்சை நிரப்பியது. உடனடியாக இணையத்தில் போனால், மாட்டியது சுரேஷ். இந்திய நேரப்படி ஒரு 10.00 மணிக்கு ஆரம்பத்திருப்போம் இருவரும். நான் தூங்கப் போகும் போது மணி 2.00. சுரேஷும் நானும் புலம்பி தள்ளியதாலேயே மனசு கொஞ்சம் அமைதியானது. மறுநாள் பேப்பர் செய்திகள், நினைவு கூட்டங்கள், வலைப்பதிவுகள் என ஒன்றும் ஒட்டவில்லை. இறுதி ஊர்வலத்திற்கு நான் சென்னையில் இல்லை. என் குடும்ப உறவுகளின் இழப்பினை போல உணர வைத்த இழப்பு. ஆயிற்று ஒரு வருடம். ஒரு வேளை வாத்தியார் இருந்திருந்தால், லேமென் ப்ரதர்ஸில் ஆரம்பித்து ஏ.ஆர்.ஆர் ஆஸ்கர் வாங்கியவரை எல்லாவற்றையும் எழுத்தில் கொண்டு வந்திருப்பார்.எந்திரன் பற்றிய துணுக்கு செய்திகள், மணிரத்ன புராணமும் வந்திருக்கும். நான் கடவுள், அஹோரிகள் பற்றி முழுமையாக சொல்லி கொடுத்திருப்பார்.

வாத்தியாருக்கும் எனக்கும் நேரடி சம்பந்தம் ஒன்றும் கிடையாது. வாத்தியாரினை ஒரே ஒரு முறை நானும் என் நண்பனும் அவருடைய கதிட்ரல் கார்டன் அலுவலகத்தில் பார்த்தோம். அப்போது நாங்கள் டிஜிட்டல் சினிமாவினை தமிழ் சினிமாவுக்குள் புகுத்த பகீரத பிரயத்தனத்தோடு போராடிக் கொண்டிருந்தோம். நான் லீனியர் எடிட்டிங்கினை ஒரு மடிக்கணினியில் அடக்கியது எங்களுடைய முதல் சாதனை. எங்களுடைய என்பதில் என்னுடைய பங்கு வெறும் பத்து சதவிகிதமே. காத்திருந்தோம். வாத்தியார் வந்தார். கான்ப்ரன்ஸ் ரூமுக்குள் போனோம். நான் தான் டெமோ கொடுத்தேன். அது ப்ரி விஷ்யுவலைய்சேஷன்(Pre vizualisation) என்கிற தொழில்நுட்பம், சுருக்கமாக ப்ரீவி. ஹாலிவுட்டில் ஒரு படமெடுப்பதற்கு முன்பு இயக்குநரோ, கதாசிரியரோ எங்களுடைய தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி முப்பரிமாண உருவங்கள், அசைவுகள், காமிரா கோணங்கள் என எல்லாவற்றையும் காட்சிப்படுத்தலாம். எச்.டி.எம்.எல் எழுதுவது எவ்வளவு எளிதோ, அதே மாதிரியான எளிமையது. தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தியது நாங்கள்.தொழில்நுட்பம் பிரிட்டிஷ் தொழில்நுட்பம். சமீபத்திய ஜேம்ஸ்பாண்டு படங்கள் அனைத்திலும் ப்ரீவி உண்டு. டெமோ முடிந்தது. நாங்கள் பிட்ச் பண்ணியது சண்டை காட்சிகளுக்கு எப்படி இதை பயன்படுத்தலாமென்பது தான். வாத்தியார் பார்த்தார். வழக்கமாக சொல்லும் வார்த்தை “குட். நானும் கேள்விப்பட்டிருக்கேன். நல்ல விஷயம். ஆனா, தமிழ் சினிமாவுல ப்ரொடுயுசர் கட்டாயத்துல வேலைப்பார்க்கறதுல இது எந்தளவுக்கு பாசிபள்ன்னு தெரியல. You do onething. Talk to Senthil of Real Image.I will connect you" என்று சொல்லி செந்திலுக்கு போனடித்தார். அப்போதே எங்களுடைய விவரங்களை சொன்னார். காலையில் ஒரு பத்து மணிக்கு வாத்தியாரை பார்த்திருப்போம், 12 மணிக்கு செந்திலோடு சந்திப்பு. இதில் வேடிக்கை என்னவென்றால் ரியல் இமேஜ் என் நண்பனின் நிறுவனத்தின் பார்ட்னர்கள். அதை நாங்கள் வெளிக் காட்டி கொள்ளவில்லை. ஆனால், ஒரு தொழில்நுட்பம் பார்த்தவுடன் அதை யார் பயன்படுத்துவார் என்று தெரிந்து கொண்டு, அதற்கு வழி காட்டியதில் நிற்கிறது வாத்தியாரின் வேகம், எதுவுமே உருப்படியாக நடக்கவில்லையெனினும்.

வாத்தியார் பிள்ளை மக்கு என்றில்லாமல், வாத்தியாரின் பிள்ளைகள் சாமர்த்தியர்கள். இருவரில் ஒருவரோடு பேசக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஏதாவது செய்யலாமா என்று மூன்று மாதங்கள் பேசியிருக்கிறோம். நான் இன்றைக்கு ஏதாவது உருப்படியாக (?!!) எழுதுகிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் வாத்தியார். வாத்தியார் அறிமுகப்படுத்தாமல் காலச்சுவடு தெரிந்திருக்காது. காலச்சுவடு தான் என்னுடைய தமிழ் இலக்கிய ஆரம்பம் அறிமுகம்.காலச்சுவடு அங்கேயே நின்று கொண்டிருப்பது காலத்தின் அபத்தம். அது வேறு கதை.

வாத்தியார் பாஷையில் பயாலாஜிகல் பாடியினை துறந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. வாத்தியாருக்காக என்ன செய்யலாம் என்று நினைத்து பார்த்திருக்கிறேன். ஒரு விஷயம் தெளிவாக உரைத்தது. வாத்தியார் என்று ஏன் சொல்கிறேன் என்றால், கற்று கொள்கிறோம் என்கிற அவஸ்தையே தெரியாமல், போகிற போக்கில் நிறைய விஷயங்களை நம் குட்டி மண்டைக்குள் புகுத்தியவர். வாசகனுக்காக என்கிற அடைப்புக்குள் இருந்து கொண்டு ரமணி சந்திரன் மாதிரியான மிடில் கிளாஸ் விஷயஙகளை பெருமைப்படுத்தாமல், வாசகனின் ரசனையை மேலே கொண்டு போக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர். தான் ரசித்தத்தை, பல உள்குத்து அரசியல்கள் இருந்தாலும், தொடர்ச்சியாக கொண்டு வந்தவர். மனுஷ்யபுத்திரன் எந்தளவிற்கு வாத்தியாருக்கு கடமைப்பட்டிருக்கிறாரோ அதே அளவிற்கு வாத்தியாரின் குட்டு வாங்காமல் நானும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இப்போதைக்கு வாத்தியார் சொன்ன எல்லாவற்றையும் என்னால் செய்ய இயலாது. ஆனால் ஒன்றினை செய்ய முடியும். வாத்தியாருக்கு பிறகு பல பேர்கள் கற்றது பெற்றதும் மாதிரியான ஒரு பத்தியினை தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். வாத்தியார் அறிவியல், தமிழ் இலக்கியம், சினிமா, கவிதைகள் என பல கிரவுண்டுகளில் ஆடியவர். நான் ரொம்ப ரொம்ப ஜுனியர். என்னுடைய கிரவுண்டு சின்னது. ஆனாலும், படிக்கின்ற வாசகனுக்கு கற்று கொள்கிறோம் என்கிற அவஸ்தையில்லாமலும், எளிதான ஒரு பார்மெட்டில் உலக விஷயங்களை உள்ளூர் வாசனையோடு கொடுப்பதிலும் வாத்தியாருக்கு நிகர் வேறில்லை. ஆக வாத்தியாரின் வழியினை பின்பற்றி ஒரு பத்தி எழுதலாம் என்று இருக்கிறேன்.

சனிமூலை என்று ஆரம்பிக்கிறேன்.

ஆத்திகர்கள் திருநள்ளாறு சனி என்று கொள்ளலாம். நாத்திகள் இதை பேரண்ட மூலையிலிருந்து உலகினை பார்ப்பது என்று கொள்ளலாம். வயோதிகர்கள் வாஸ்து பார்க்கலாம். யுவதிகள் மட்டும் தனியாக மடல் அனுப்பலாம் :)

வாத்தியார் அறிவியலை தமிழில் பரவலாக்கியவர். அவருக்கு பின் நண்பர் இரா.முருகன் [டிஜிட்டல் நாக்கு] அருமையாக அறிவியலை எழுதுகிறார். இன்னமும் நிறைய பேர்கள் எழுதுகிறார்கள். தொழில்நுட்ப துறையில் இருப்பதனால் இது எனக்கு பெரிய பிரச்சனையில்லை. ஆனால், நான் அறிவியலை பெரிதாக தொடப்போவதில்லை. தமிழில் பொருளாதாரம், நிதி, பங்குச்சந்தை, நிறுவனங்கள் பற்றிய எழுத்து குறைவாக இருப்பதாக ஒரு அபிப்ராயம். அள்ள அள்ள பணம் மாதிரியான நூல்கள் இருந்தாலும், பத்தி வடிவில் பெரியதாக இல்லை. என்னுடைய முக்கியமான களம் அதுவாக இருக்கலாம். வடசென்னையிலிருந்து வாஷிங்டன் அரசியல் வரை, உள்ளூர் கிசுகிசுவிலிருந்து உலக சினிமா வரை, பொட்டி கடை சங்கதிகளிலிருந்து பொருளாதார தியரிகள் வரை எல்லா விஷயங்களும் இதில் இருக்கும். வாரந்தோறும் பெரும்பாலான சனிக்கிழமைக்களில் இது வரும். முக்கியமாக பிற்காலத்தில், யாராவது ஏமாந்த பதிப்பகத்தார்கள் இதை புத்தகமாக போடுவார்கள் என்கிற நம்பிக்கையினை கொண்டு, இதில் ஹைபர் லிங்குகள் இருக்காது :) சுவாரசியமான செய்திகள், துணுக்குகள், உண்மை சம்பவங்கள், மனிதர்கள் என எல்லாம் வரலாம். கற்றதும் பெற்றதும் மாதிரியான என்பதை விட, கொத்து பரோட்டாவின் ஒரு விரிவான பார்மெட்டில் இதை எழுதுவேன் என்று தோன்றுகிறது. அரசியல் கண்டிப்பாக எழுத மாட்டேன். மற்றபடி மார்ச்சிலிருந்து வாசகனுக்கு அஷ்டமத்தில் சனி [இதில் வாசகன் வாசகன் என்று சொல்வது கடைசியில் நான் மட்டுமே வாசகனாக படிக்கக் கூடியதாக இருக்கக்கூடிய சாத்தியங்களும் உண்டு]

சுஜாதா என்கிற ஒரு மனிதனுக்கு இதைவிட வேறெப்படியும் என்னால் அஞ்சலி செலுத்த முடியாது. மற்றபடி, Rangarajan, I miss you : (

Labels: , ,


Comments:
//நேற்று நடந்தது போல் இருக்கிறது.//

செய்தி வந்தபோது நான் ஒரு வகுப்பறையில் இருந்தேன். வெளியில் வந்து பிகேஎஸ்ஸிற்கு ஃபோன் செய்து பேசியபோது அடக்க முடியாமல் அழுதேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

//நான் கடவுள், அஹோரிகள் பற்றி முழுமையாக சொல்லி கொடுத்திருப்பார்.//

அழகாக, சரியாகச் சொன்னீர்கள்! 'சொல்லிக் கொடுப்பது' என்பதில் அவருக்கு இருந்த ஆர்வமும் முனைப்பும் அபாரமானது.

//சனிமூலை//

வாழ்த்துக்கள்!

//Rangarajan, I miss you : ( //

Amen.
 
A solumn requiem for வாத்தியார்.

//Rangarajan, I miss you : ( //

Amen.

சனிமூலை பல எதிர்பார்ப்புகளை என்னுள் கிளப்பியுள்ளது. சிறப்பாக நடந்தேற வாழ்த்துகள் !
 
நாராயணா, சனிமூலை காப்பிரைட் பிரச்சனை வர போவுது :-) ராகவன் தம்பி என்பவர் இந்த
பெயருல எழுதிக்கிட்டு வராரு.

Rangarajan, I miss you : ( (
 
எத்தனை முறை படித்தாலும் சலிக்காத எழுத்து நடை - உங்களுடையது !
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]