Mar 24, 2009

கோவாலு ஏன் ஐபிஎல் பார்ப்பதில்லை?

கோவாலுவினை நேற்றைக்கு பார்த்த போதும், கவிஞனாக தான் இருந்தான். இந்த வாக்கியம் ரொம்ப முக்கியம். ஏனெனில், கடந்த மூன்று மாதங்களாக கோடம்பாக்கத்தில் கோவாலுவினை காணவில்லை. தமிழ்நாட்டின் தன்னிரகற்ற கவிஞன் காணாமல் போனது, கோடம்பாக்கத்தினை உலுக்கியது, லெமென் ப்ரதர்ஸின் உலுக்கலை விட அதிகம். கடந்து 3 மாதங்களாக ஏன் பெரியாட்களின் படங்கள் எதுவும் வரவில்லை - காரணம் கோவாலு பாட்டெழுதவில்லை. கோவாலு ஏன் காணாமல் போனான்? அதற்கு பின் என்ன நடந்தது என்பது தான் இவ்வறிப்பின் நோக்கம்.

இனி கோவாலு பேசுவார். முன்னதாக 36ஆம் வட்டத்தின் சார்ப்பாக இந்த ஒரு கொய்யா பழத்தினையே, பழத்தோட்டமாக நினைத்து கோவாலுவிற்கு பரிசளிக்கிறோம்.

கோவாலுவிற்கு தமிழ்நாட்டின் பெரும் கவிஞர் என்கிற பட்டம் மட்டும் போதவில்லை. கோவாலு யாரென்று தெரியாதவர்கள் முழுவிவரத்தையும் இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள். படித்தாலும் உங்களால் கோவாலுவினை புரிந்து கொள்ள முடியாமல் போனால், சீக்கிரமாய் H1B விசாவிற்கு அப்ளை செய்து அயல்நாடு போய் சேருங்கள், தமிழ்நாட்டில் உங்களால் கோவாலுவினை தெரியாமல் வாழ இயலாது.அப்போது தான் நண்பர் ஒருவர் வீட்டில் கிரிக்கெட் பார்த்தான். கோவாலு அதற்குமுன் பார்த்த கிரிக்கெட்டெல்லாம் பட்டோடி காலத்தியது. அந்த கிரிக்கெட் கலைப்படங்களையே ஸ்லோ மோஷனில் பார்ப்பதுபோல இருக்கும். ஆனால், ஐபிஎல் கிரிக்கெட் கோவாலுவினை அசத்தியது. கிரிக்கெட்டினை விட சியர்லீடர்ஸ் முதல் சில ஆட்டங்களில் “தாராளமாக” ஆடியது, கோவாலுவின் ரசனைக்கு உகந்ததாக இருந்தது. அதற்குள்ளாகவே கலாச்சார காவலர்கள் முரண்டு பண்ணியதால், முழு சட்டையும், ஸ்கர்ட்டும் அணிந்தபோது, கோவாலு சியர்லீடர்ஸின் சுதந்திரம் பறிபோனது பற்றி, பிப்ரவரி 29ம் தேதி மட்டுமே வரும் 16 பக்க ஆங்கில சிற்றிதழில் அட்டை தவிர்த்து 12 பக்கத்தில் “Cheerleaders Vs Poor Leaders" என்கிற பெயரில் ஒரு முழு நீளக் கட்டுரை எழுதியிருந்தான்.

ப்ரீத்தி ஜிந்தா வீரர்களை கட்டிப்பிடித்து உற்சாகப்படுத்தியபோது கோவாலுவிற்கு ஜில்லிட்டது. கிரிக்கெட் மயிராய் போனால் போச்சு, ஆனால் ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி போன்ற பாலிவுட் தேவதைகளோடு எப்படியாவது தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளலாம் என்கிற எண்ணமே கோவாலுவிற்கு உற்சாகம் தந்தது.

இன்னமும் எத்தனை நாள் தான் தெலுகு, மலையாள தமிழ் கதாநாயகிகளை வர்ணித்து பாட்டெழுதிக் கொண்டு, ஆடியோ ரிலிஸ் விழாக்களிலும், பட்டிமன்றத்திலும் தலைக் காட்டிக் கொண்டிருப்பது. அது தவிர என்ன பேசினாலும், கோவாலுவின் நிஜமான புகழ் சென்னை 600 024 தாண்டி போகவில்லை. ஆனாலும், கோவாலு பேச்சினை கேட்டு காசு போட கரும்பு விற்ற காசோடு, மஞ்சள் பையினை கக்கத்தில் அடுக்கிக் கொண்டு, கோவாலுவையும் ஒரு யுகப்புருஷனாக நம்பும் ஒரு கூட்டமும் இருக்கதான் செய்தது. கோவாலு முடிவு செய்தான். கிரிக் இன்போ தளத்தினையும், கிரிக்கெட் நிர்வாணா தளத்தையும் தலைகீழாக நெட்ரூ பண்ணினான்.

இனி கவிதை விட்டு நாம் கிரிக்கெட்டினுள் புகுவோம் என்று யோசித்தான். முதல் T-20 உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு வெற்றி தேடிக் கொடுத்த ஸ்ரீசாந்த் கேட்ச் பிடித்தப் போது போட்டிருந்த ப்ரென்சி பனியன் சைஸ் வரைக்கும் கோவாலுவால் சொல்ல முடிந்தது. கேட்பவர்கள் அரண்டார்கள். படித்தவர்கள் மிரண்டார்கள். ராமசந்திர குஹா, திலிப் பரமேஸ்வரன் போன்றவர்கள் கோவாலு இருக்கும் வரை கிரிக்கெட் பற்றி பேசுவதில்லை என்று முடிவெடுத்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

கவிதைன்னா எதுகை மோனை, கிரிக்கெட்னா பேட்டிங், போலிங். சிக்ஸ் அடிக்கிறவன் சிங்கம். போர் அடிக்கிறவன் புலி. விக்கெட் எடுக்கிறவன் வீரன். டைவ் அடிக்கிறவன் தலைவன். தப்பு பண்றவனை தெய்வன் தண்டிக்காம போகலாம், ஆனா கண்டிப்பா தேர்டு அம்பயர் தண்டிப்பான். சினிமாவும் 21/2 மணி நேரம், அதை போலதான் ஐபிஎல்லும், 4 மணி நேரத்துல ஆக்‌ஷன், சென்டிமெண்ட், நட்பு, கோவம், பாசம்ன்னு லைவ்வா பார்க்கறோம். இப்படியெல்லாம் பேசி, சுற்றிலும் இருப்பவர்களை ஐபிஎல் கிரிக்கெட் சினிமாவை விட சூப்பரான விஷயம் என்று மொத்தமாக தானும், தன்னை சுற்றியுள்ளவர்களையும் நம்ப வைத்தான்.

விஜய் தான் சென்னை சூப்பர் கிங்ஸின் அம்பாசிடர் என்பதால், விஜய் வழியாக இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனோடு பேசி, எப்படியாவது அடுத்தவன் காசினை சென்னை சூப்பர் கிங்ஸில் போட்டு, தானும், ஷில்பா ஷெட்டி மாதிரியான ஸ்டேக்ஹோல்டர் ஆகும் கனவும் கோவாலுவிற்கு இருந்தது. அன்றைக்கு பார்த்து வந்த கனவில் ஒரு பக்கம் ஷில்பா ஷெட்டி, இன்னொரு பக்கம் ப்ரீத்தி ஜிந்தா மற்றும் சியர்லீடர்ஸ் என ’மகளிர் மட்டும்’ நாசராய், காளை மாடு ஒண்ணு, கறவை மாடு பத்து என உளற ஆரம்பித்தான். பக்கத்தில் படுத்திருந்த அடிவருடிகள், அண்ணன் தூங்கும்போது கூட கவிதை பாடுகிறார் என குதூகலமடைந்தனர். கம்பன் வீட்டு கட்டுத்தறிதான் கவிபாடும், ஆனால், தலைவரின் கனவே கவி பாடுகிறதே, ஆக இனி முதல் தமிழ் கவி கோவாலுவாக தான் பூர்வஜென்ம வாசனைகளோடு இருக்க வேண்டும் என்று 2x2 கக்கூஸின் வெளியிலிருந்து தீர்மானம் போட்டார்கள். தீர்மானம் போட்ட கையோடு டீ குடிக்க போய் தீர்மானம் எழுதிய தாளில் பஜ்ஜி கசக்கினார்கள்.

இப்படியாக லலித் மோடிக்கு பிறகு தான் தான் ஐபிஎல்லின் ஏகபோக சக்ரவர்த்தியாக கண்ணாடியின் முன் நின்று உருவேற்றிக் கொண்டிருந்தபோது தான் அந்த செய்தி தாக்கியது. இந்தியாவில் தேர்தலும், ஐபிஎல்லும் ஒரே வேளையில் வருவதால், தேர்தலுக்காக ஐபிஎல்லின் தேதிகளை தள்ளி வைக்கச் சொன்னார்கள்.

கோவாலுவிற்கு எரிச்சலாய் வந்தது. என்ன சனநாயக நாடிது. ஒட்டையே 150ரூபாய்க்கும், ஒரு புல் ப்ளேட் பிரியாணிக்கும் விலைக்கு விற்கும் நாடு. டெம்ப்ளேட் போட்டுக் கொடுத்தது போல எல்லா கட்சிக்கும் ஒரே கட்சி அறிக்கை. அதன் தலைவர்கள் வாழ்நாளில் கிராமங்களுக்கு வரும்போதுதான் ஆளும் கட்சியாக இருந்தால் ரோடு போடுவதும், எதிர் கட்சியாக இருந்தால் பாட்டில் அடிப்பதுமாக இருப்பது தான் இந்திய தேசிய அரசியல் பண்பாடு. ஒட்டு போட்டாலும், போடா விட்டாலும் பெரியதாய் ஒன்றும் சந்தோஷம் நடு ரோட்டில் திறந்து கிடைக்கும் பாதாள சாக்கடைப்போல பொங்கி வரப் போவதில்லை. என்ன மயித்துக்கு ஒட்டு போடணும்? மக்கள் ஐபிஎல்லில் சந்தோசமடைகிறார்கள். ஐபிஎல் ஒரு சரணாகதி. ஐபிஎல் கடவுளுக்கு நிகரான விஷயம். ஐபிஎல்லினை தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்களுக்கு சொர்க்கம் இறப்புக்கு பின்னில்லை, அவர்கள் வாழும் இடமே சொர்க்கமாக மாறி போகும்.

4 மணி நேரம் வாயில் அனகோண்டா போவது கூட தெரியாமல் டிவி பார்க்கிறார்கள். தப்பான அறிவிப்பாக தெரியும் தேர்டு அம்பய்ரினை வாங்கு வாங்கென்று வாங்குகிறார்கள். 22 அடி விஷயத்தினை எல்லாரிடத்திலும் அலசுகிறார்கள். காற்றில் கணக்கு போட்டு ரன் ரேட் சொல்கிறார்கள். எட்ஜ் எடுக்கணும் என்று ஜாகீர் கான் போடும்போதெல்லாம் ப்ரார்த்திக்கிறார்கள். சேவாகின் சுண்டுவிரல் வாஸ்து படி, நிற்கும் போது எங்கிருக்க வேண்டும் என்பது வரைக்கும் எல்லா பத்திரிக்கைகளும் நிபுணர்களிடம் ஆலோசித்து வெளியிடுகிறார்கள். இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகள், வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், தீவிரவாதம் என எல்லாவற்றையும் மறந்து கண்களையே சாடிலைட்டாக மாறி பாலுக்கு பால் கமெண்ட்ரி கொடுக்கிறார்கள். இதுவல்லவா மார்க்ஸ், காந்தி கண்ட சமதர்ம சமூகம். பெரும்புள்ளிகளும், சேரி மக்களும் ஒரே விஷயத்தினை பேசுவது வரலாற்றில் எந்த காலத்தில் நடந்திருக்கிறது. ஐபிஎல் ஒரு மாபெரும் சமூக புரட்சி. அண்ணா கண்ட புரட்சி. அண்ணாவின் தம்பிகள் கண்ட புரட்சி. புரட்சி கலைஞரே கண்ட புரட்சி. புரட்சி. புரட்சி. மக்களின் சந்தோஷம்தான் எங்களுக்கு முக்கியம் என பிரகடனப் படுத்தும் எல்லா அரசியல் கட்சிகளுக்கும், ஏன் இது தெரியவில்லை?

இது தான் சந்தோஷம். இதைவிட சந்தோஷம் வேறென்ன. ஐபிஎல்லுக்கு வரும் விளம்பரமே இதற்கு சாட்சி. நூறு கோடி மக்கள், ஒன்றாக ஒரே விஷயத்தினை செய்து பார்த்திருக்கிறீர்களா ? எவ்வளவு முக்கியமான விஷயமிது. நூறு கோடி இந்தியர்கள், அதுவும் உலகமே தலையில் இடிந்து விழுந்தாலும் சச்சின் - சவுரவ் பிரச்சனையினை பேசி கொண்டிருப்பவர்கள். அவர்களின் சந்தோஷத்தில் மண் அள்ளி போடுதல், எவ்வளவு பெரிய அடக்குமுறை. ஹிட்லர் இந்தியாவினை ஆண்டிருந்தாலும் கூட, அவர் பினாமி ஸ்பான்சர் பண்ணியிருக்கும் குழு ஜெயிக்க வைத்து ஆட வைத்திருப்பாரே தவிர, மொத்த ஜபிஎல்லையும் கேன்சல் செய்திருக்க மாட்டார். என்ன அநியாயம். இந்திய அரசு ஹிட்லரை விட மோசமானதா? நாட்டின் தேர்தல் முக்கியமா? அல்லது நாட்டு மக்களின் சந்தோஷம் முக்கியமா? சந்தோஷமில்லாத, துயரத்திலும், நிராகரிப்பிலும் நிகழும் மக்கள் தற்கொலை படைக்கு ஈடானவர்கள் அல்லவா? இதை விட முக்கியம், சென்னையில் மாலையில் மேட்ச் நடந்தால், பார்த்தசாரதி பெருமாளே மாலை உற்சவத்தினை தள்ளி வைத்து விட்டு, சேப்பாக்கம் பக்கம் பார்த்தமாதிரி இருக்கிறார். கடவுளே பார்க்கும் ஒரு விஷயத்தினை என்னதான் பகுத்தறிவு அரசாய் இருந்தாலும், தடை செய்ய முடியுமா என்ன? வேறென்ன வேண்டும் அரசாங்கத்துக்கு. முட்டாள் அரசாங்கம்.

பொங்கோ பொங்கென்று ஆளில்லா வீட்டில், திறந்து விடப்பட்ட கேஸ் சிலிண்டர் போல் பொங்கினான் கோவாலு. வலைப்பதிவுகள், எஸ்.எம்.எஸ்கள், டிவிட்டர், கருத்தரங்கம், நாளிதழ்கள் என எல்லாவற்றிலும் எழுதோ எழுதென்று எழுதினான். இறுதியாக அரசு தன் பிரம்மாஸ்திரத்தினை எடுத்தது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பாதுகாப்பு தரமுடியாது என்று சொன்னது. லலித் மோடி பாவம். சுவிசேஷ்கரின் பிரசகங்கள் போல அவரும் எத்தனை நாள் தான் இந்தியாவில் நடத்துவோம் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியும். கடைசியில் இந்தியாவிலிருந்து ஐபிஎல்லினை தூக்கியாகி விட்டது. அது இங்கிலாந்தோ, தென்னாப்பிரிக்காவோ, இல்லை வேறு எதாவது ஒரு நாட்டில்.

கோவாலு இந்த ஏமாற்றத்தினை தாங்க முடியாமல் தவிர்த்தான். ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால், என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்து வைத்திருந்த அத்தனையும், மார்ச மாத கோன் ஐஸ் போல மொத்தமாக வெளியில் வழிந்து ஒடியது. ஒல்ட் மாங்கும், ஒல்ட் காஸ்க்கும் கோன் ஐஸ்ஸினை விட தாராளமாக கோவாலுவின் உள்ளே ஒடியது. இறுதியில் காலம் வென்றது. காலம் என்று சொன்னது லலித் மோடி ஹிந்துஸ்தான் டைம்ஸில் எழுதிய column. ஐபிஎல் சுதேசிகளுக்கு இல்லாமல் விதேசிகளுக்கு போனது. அன்றைக்கு எடுத்தான் பாரதி மாதிரி கோவாலுவும் ஒரு சபதம் எடுத்தான்.அது இனிமேல் சுதேசி விஷயங்களில் மட்டுமே தான் பங்கு கொள்வது என்பது.

பின் குத்தாத பின்குறிப்பு:
இன்றைக்கும் நீங்கள் கோவாலுவினை சில சமயங்களில் வடக்கு உஸ்மான் சாலை விவேக், வசந்த் & கோ வாசலில் பார்க்கலாம். நீங்கள் தவறாக நினைக்கக்கூடாது. இந்திய மக்களுக்கு என்னவெல்லாம் பொருட்கள் அயல்நாட்டு, உள்நாட்டு, உள்ளூர் நாட்டு, கைநாட்டு நிறுவனங்கள் தருகின்றன என்று பார்ப்பதற்காகவே விளம்பரங்களுக்கு இடையில் கொஞ்சமாய் ஐபிஎல்லையும் பார்க்கிறான் கோவாலு.

Labels: , , ,


Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]